என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சிறுத்தை திருப்பத்தூரில் உள்ள குடியிருப்பு ஒன்றின் கார் பார்க்கிங்கில் பதுங்கியுள்ளது.
    • காரில் 4 மணி நேரத்திற்கும் மேலாக 5 பேர் சிக்கித் தவிப்பு.

    திருப்பத்தூர் நகர பகுதியில் உள்ள பள்ளிக்குள் சிறுத்தை புகுந்த நிலையில், அந்நகர பள்ளிகளுக்கு நாளை கட்டாய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், சம்பந்தப்பட்ட சிறுத்தை திருப்பத்தூரில் உள்ள குடியிருப்பு ஒன்றின் கார் பார்க்கிங்கில் பதுங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

    சிறுத்தை இருப்பதை கண்டு தப்பிக்க முயன்று கார் பார்க்கிங்கில் உள்ள காரில் 4 மணி நேரத்திற்கும் மேலாக 5 பேர் சிக்கித் தவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், காரில் சிக்கியுள்ளவர்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தெரிவித்துள்ளார்.

    மேலும், கார் பார்க்கிங்கில் பதுங்கியுள்ள சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    • ஒரு தனியார் பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று இன்று மாலை திடீரென நுழைந்தது.
    • வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று இன்றுமாலை திடீரென நுழைந்தது. இதை பார்த்ததும் மாணவ- மாணவிகள் அச்சம் அடைந்தனர். உடனே பள்ளி நிர்வாகம் மாணவிகளை உடனடியாக பள்ளியில் இருந்து பத்திரமாக வெளியேற்றினர்.

    அதற்குள் அந்த சிறுத்தை அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அப்போது ஒரு நபரை தாக்கியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அந்த சிறுத்தை மரங்கள் அடர்ந்த பகுதியில் புகுந்து மறைந்துள்ளது. சிறுத்தை மறைந்துள்ள பகுதியில் இரண்டு கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதில் ஐந்து பேர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் சிறுத்தை நடமாட்டத்தை தொடர்ந்து திருப்பத்தூர் நகர பள்ளிகளுக்கு கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

    • சனி, ஞாயிறு மற்றும் பக்ரீத் பண்டிகை என தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
    • தாம்பரம்-நாகர்கோவில் இடையே இன்று முதல் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    சென்னை:

    சனி, ஞாயிறு மற்றும் பக்ரீத் பண்டிகை என தொடர் விடுமுறையை முன்னிட்டு, தாம்பரம்-நாகர்கோவில் இடையே இன்று முதல் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    அதன்படி, தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 10.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 11 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றடைகிறது.

    மறுமாா்க்கமாக நாகர்கோவிலில் இருந்து நாளை பிற்பகல் 1.20 மணிக்கு புறப்படும் ரெயில் நாளை மறுநாள் தாம்பரம் வந்தடைகிறது.

    அதேபோல், ஞாயிற்றுக்கிழமையும் (16-ம் தேதி) தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு நாகர்கோவிலுக்கும், பின்னர் மறுமாா்க்கமாக நாகர்கோவிலில் இருந்து 17-ம் தேதி புறப்பட்டு (18-ம் தேதி) தாம்பரத்தையும் சிறப்பு ரெயில் வந்தடைகிறது.

    • 42 கிலோமீட்டர் தூரத்தை 10 மணிநேரம் 30 நிமிடங்களில் கடந்து வெற்றி பெற்றுள்ளார்.
    • வெற்றிக்கான சான்றிதழ் மற்றும் கேடயத்தை கோவையில் இன்று அமைச்சர் உதயநிதியிடம் காண்பித்தார்.

    கோவையைச் சேர்ந்த தடகள வீராங்கனை தங்கை நௌஷீன் பானுசந்த், 71வது டென்சிங் ஹிலாரி மவுண்ட் எவரெஸ்ட் சர்வதேச மாரத்தான் போட்டியில் பங்கேற்று 42 கிலோமீட்டர் தூரத்தை 10 மணிநேரம் 30 நிமிடங்களில் கடந்து வெற்றி பெற்றுள்ளார்.


    தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் மூலம் நிதியுதவி பெற்று இப்போட்டியில் பங்கேற்ற தங்கை நெளஷீன் பானுசந்த், வெற்றிக்கான சான்றிதழ் மற்றும் கேடயத்தை கோவையில் இன்று அமைச்சர் உதயநிதியிடம் காண்பித்தார். அவரின் இந்த சாதனையை அமைச்சர் உதயநிதி பாராட்டினார். தொடர்ந்து பல்வேறு வெற்றிகளை குவித்து, தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித்தருமாறு அவரை வாழ்த்தினார்.


    • எஸ்ஆர்எம் ஹோட்டலுக்கு நேற்றுடன் ஒப்பந்தம் முடிந்த நிலையில், காலி செய்யுமாறு தெரிவித்துள்ளனர்.
    • பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    திருச்சி காஜாமலை அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே தமிழக சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான இடத்தில் எஸ்.ஆர்.எம் (SRM) நட்சத்திர ஹோட்டல் செயல்பட்டு வந்தது.

    இந்த நட்சத்திர ஹோட்டலை இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார். இந்த ஹோட்டல் 30 ஆண்டுகளுக்கு குத்தகை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஆண்டுக்கு 75 லட்சம் ரூபாய் குத்தகை பணம் செலுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

     இந்த ஹோட்டலுக்கு நேற்றுடன் (வியாழக்கிழமை) ஒப்பந்தம் முடிந்த நிலையில், சுற்றுலாத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி ஆகியோர் ஹோட்டலுக்கு நேரில் வந்து ஹோட்டலை காலி செய்யுமாறு தெரிவித்துள்ளனர்.

    இதனால் அதிகாரிகளுக்கும், ஹோட்டல் நிர்வாகத்தினர் மற்றும் அவர்கள் தரப்பு வழக்கறிஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு வரை சென்றுள்ளது. இதனால் அப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து, ஹோட்டலை காலி செய்ய இன்று மாலை 3 மணி வரை அதிகாரிகள் கால அவகாசம் கொடுத்துள்ளனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும், பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலை அரசியல் காரணங்களுக்காக மூடக்கூடாது என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

    இந்நிலையில், திருச்சியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்குச் சொந்தமான குத்தகை நிலத்தில் கட்டப்பட்டுள்ள எஸ்.ஆர்.எம். ஹோட்டல் விவகாரம் குறித்த தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு கிராமத்தில் 4.70 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான பலகோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் எஸ்.ஆர்.எம் ஓட்டல் நிறுவனத்திற்கு, கடந்த 1994-ஆம் ஆண்டில் 30 வருட காலத்திற்கு குத்தகை விடப்பட்டது. மேற்படி இடம் குத்தகைதாரருக்கு 14.06.1994 அன்று ஒப்படைக்கப்பட்டது.

    இது தொடர்பாக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் எஸ்.ஆர்.எம். ஓட்டல் நிறுவனம் ஆகிய இரு தரப்பினரும் சம்மதித்து கையெழுத்திடப்பட்ட இந்த குத்தகை ஒப்பந்தமானது கடந்த 13-6-2024 அன்றுடன் முடிவடைந்து விட்டது.

    1994ஆம் ஆண்டு குத்தகை வழங்கப்பட்ட அரசாணையின்படி, மேற்படி நிலத்திற்குச் சந்தை விலையின் அடிப்படையில், 7 சதவீதம் வருடாந்திர குத்தகைத் தொகை கணக்கிட்டு, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் 30 ஆண்டு காலத்திற்கு குத்தகைத் தொகை ரூ.47,93,85,941/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஆனால், இதில், நாளது தேதி வரை குத்தகைதாரர் எஸ்.ஆர்.எம். ஓட்டல் நிறுவனம் செலுத்திய தொகை ரூ.9,08,20,104/- மட்டுமே. மீதமுள்ள நிலுவைத் தொகையான ரூ.38,85,65,837/-ஐ குத்தகைதாரர் இதுவரை செலுத்தவே இல்லை. இவ்வாறு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தில் 30 ஆண்டுகளாக முழுமையான குத்தகை தொகையைச் செலுத்தாமல் எஸ்.ஆர்.எம். நிறுவனம் தனது ஹோட்டலை தொடர்ந்து நடத்தி வந்துள்ளது.

    குத்தகை ஒப்பந்தத்தில், மேற்படி நிலமானது 14.06.1994 முதல் 13.06.2024 வரையிலான 30 வருட காலத்திற்கு மட்டும் தான் குத்தகைக்கு விடப்படுகிறது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    எக்காரணத்தை முன்னிட்டும் குத்தகைக் காலத்தை மேலும் நீட்டிக்க ஒப்பந்தக்காரர் கோரக் கூடாது என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குத்தகை முடியும் நாளில் குத்தகைதாரரால் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு எவ்வித நிபந்தனையுமின்றி நிலம் மற்றும் கட்டடங்களை எவ்வித சேதாரமுமின்றி ஒப்படைக்க வேண்டும் என்றும் ஒப்பந்தத்தின் சாராம்சத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் நிலுவைத் தொகையை செலுத்த 02.05.2024 நாளன்று (ஒரு மாத காலத்திற்கு முன்பாக) குத்தகைதாரருக்கு எழுத்துப்பூர்வமாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது மட்டுமல்லாமல், குத்தகைக் காலம் 13.06.2024 அன்றுடன் முடிவடைகிறது என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒப்பந்ததாரரால் நாளது தேதி வரை நிலுவைத் தொகை ரூ.38,85,65,837/- செலுத்தப்படாமல் இன்னும் நிலுவையாகவே உள்ளது.

    உண்மை நிலை இவ்வாறு இருக்க, சில ஊடகங்களில் எஸ்.ஆர்.எம். ஹோட்டல் சார்பாக தவறான மற்றும் உண்மைக்கு மாறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், குத்தகைக் காலம் முடிவடைந்ததாலும், குத்தகைதாரர் முறையாக, முழுமையான குத்தகைத் தொகையைச் செலுத்தாததாலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அரசாணை மற்றும் ஒப்பந்தத்தின்படிதான் முறையான நடவடிக்கையை எடுத்துள்ளது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தேர்தலில் தோல்வி ஏற்பட்டு விடக் கூடாது. தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அளவில்லா மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.

    பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் தி.மு.க. மாவட்டச் செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

    அவர்களும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். எந்த தொகுதியிலாவது வெற்றி வாய்ப்பு இழந்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று தி.மு.க. தலைவரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கட்சிக் கூட்டங்களில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    இதனால் ஒவ்வொரு அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும் பயத்துடன் தேர்தல் பணியாற்றினார்கள். ஓட்டுப்பதிவு முடிந்த பிறகும் அவர்கள் மனதில் கவலை நீங்கவில்லை. சில அமைச்சர்கள் கோவில் கோவிலாக சென்றும் வழிபட்டனர். தேர்தலில் தோல்வி ஏற்பட்டு விடக் கூடாது. தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.

     

    கடந்த 2 மாதமாக ஒரு வித அச்சத்தில்தான் சில அமைச்சர்கள் காணப்பட்டனர். இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கையில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி அமோகமாக வெற்றி பெற்ற பிறகே ஒவ்வொருவர் மனதிலும் வழக்கமான உற்சாகம் காணப்பட்டது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அளவில்லா மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். இந்திய அரசியல் அரங்கில் அவர் கம்பீரமாக சென்று வரும் வகையில் 40-க்கு 40 வெற்றி கிடைத்துள்ளதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் பெருமைப்பட்டனர்.

    இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தமிழச்சி தங்கபாண்டியன், விஜய் வசந்த், சுதா ஆகியோர், இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    • மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரியாக எல்.முருகன் பதவியேற்றார்.
    • மத்திய அரசுக்கும், தமிழகத்திற்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுவேன் என்றார்.

    சென்னை:

    மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரியாக எல்.முருகன் கடந்த 9-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இருந்து இணை மந்திரி எல்.முருகன் இன்று சென்னை திரும்பினார். தி.நகரில் உள்ள கமலாலயத்துக்கு வந்த இணை மந்திரி முருகனுக்கு வெடி வெடித்து பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின், அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழகத்தின் பிரதிநிதியாக செயல்பட எனக்கு பிரதமர் மோடி வாய்ப்பு கொடுத்துள்ளார்.

    பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா இருக்கும். அதில் பணியாற்ற எனக்கு ஒரு வாய்ப்பை மோடி அளித்துள்ளார்.

    தமிழ்நாட்டுக்கும், மத்திய அரசுக்கும் இணைப்பு பாலமாக செயல்படுவேன். தமிழகத்திற்கு பெரிய திட்டங்கள் கொண்டு வரப்படும்.

    தவறான தகவல் மற்றும் வதந்தி பரப்புபவர்கள்மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • பெண்ணை தங்களுடன் அழைத்து செல்ல பெண் வீட்டார் வந்ததால் மோதல்.

    நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார் மார்க்சிஸ்ட் அலுவலத்தை சூறையாடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு பெண் வீட்டாரை சேர்ந்த 30 பேர் நுழைந்து அடித்து நொறுக்கியுள்ளனர்.

    பட்டியலினத்தை சேர்ந்த இளைஞருக்கும், மாற்று சாதியை சேர்ந்த பெண்ணுக்கும் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.

    பின்னர், சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணை தங்களுடன் அழைத்து செல்ல பெண் வீட்டார் வந்ததால் மோதல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்த பெண் வீட்டார் அடித்து நொறுக்கியுள்ளனர்.

    • பள்ளியில் இருந்து மாணவ- மாணவிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
    • குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மறைந்துள்ளது.

    திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று இன்றுமாலை திடீரென நுழைந்தது. இதை பார்த்ததும் மாணவ- மாணவிகள் அச்சம் அடைந்தனர். உடனே பள்ளி நிர்வாகம் மாணவிகளை உடனடியாக பள்ளியில் இருந்து பத்திரமாக வெளியேற்றினர்.

    அதற்குள் அந்த சிறுத்தை அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அப்போது ஒரு நபரை தாக்கியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அந்த சிறுத்தை மரங்கள் அடர்ந்த பகுதியில் புகுந்து மறைந்துள்ளது. சிறுத்தை மறைந்துள்ள பகுதியில் இரண்டு கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதில் ஐந்து பேர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதாகி ஓராண்டு நிறைவு.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதானார். இதன்பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39வது முறையாக நீட்டிக்கப்பட்டு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற காவலை ஜூன் 19ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதாகி ஓராண்டாகியுள்ள நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ள செய்தி மிகுந்த வேதனை அளித்தது.
    • விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளை அரசிடம் இருந்து பெற்றுத் தரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

    குவைத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 49 பேர் பலியாகிய நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் உயிர் இழந்தவர்களில் 45 பேர் இந்தியர்கள் ஆவர். அதில் கேரளாவை சேர்ந்த 23 பேர், தமிழ்நாட்டை சார்ந்த 7 பேர் மற்றும் டெல்லி உள்பட மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் 14 பேர் ஆவர்.

    இந்த தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 31 பேரின் உடல்கள் இந்திய விமான படை விமானம் மூலம் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டது.

    விமான நிலையத்திற்கு வந்த கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய மந்திரி சுரேஷ் கோபி, தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்பட உயர் அதிகாரிகள் 31 பேரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

    இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,

    குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ள செய்தி மிகுந்த வேதனை அளித்தது. அவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    விபத்து குறித்த செய்தியறிந்ததும், துரிதமாகச் செயல்பட்டு, உயிரிழந்தவர்கள் உடல்களை தாய்நாட்டுக்குக் கொண்டு வர உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்ட பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு, நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழக பாஜக சார்பில், வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவர் இசையமைப்பாளர் தீனா தலைமையில், விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளை அரசிடம் இருந்து பெற்றுத் தரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    • அடுத்த கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.
    • அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    சென்னை:

    வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக்கழகத்தின் அரசியல் பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட தொடங்கி உள்ளார்.

    புதிய உறுப்பினர் சேர்க்கை, உள்கட்டமைப்பு கட்சி வளர்ச்சி திட்டங்கள் என ஒவ்வொன்றையும் கட்சி மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார்.

    தமிழக வெற்றிக் கழகத்தில் இதுவரை புதிதாக சேர்ந்துள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியுள்ளது. அடுத்த கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து மாநாடு நடத்துவற்கு இடம் தேர்வு செய்யும் பணியில் விஜய் ஆலோசனையின் பேரில் புஸ்ஸி ஆனந்த் மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், நாமக்கல், புதுக்கோட்டை போன்ற இடங்களுக்கு சென்று பார்வையிட்டார்.

    முதல் மாநாடு என்பதால் வரலாற்று சிறப்பு மிக்க மாநாடாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.

    இதற்காக நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை செய்து வருகிறார்.


    வருகிற 22-ந் தேதி விஜய் பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இதையொட்டி தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் ஏழை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்டங்கள் வழங்கப்பட இருக்கிறது.

    இதற்காக பயனாளிகளின் பெயர் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    இதைத்தொடர்ந்து 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி வருகிற 28-ந் தேதி மற்றும் ஜூலை 3 ஆகிய தேதிகளில் சென்னையில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.

    மாநாடு, பிறந்தநாள் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகளுக்கான ஆலோசனை கூட்டம் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    விஜய் உத்தரவின் பேரில் கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கடந்த சில தினங்களாக பல்வேறு ஊர்களுக்கு சென்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    கூட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பது, மாநாடு, விஜய் பிறந்தநாள் விழா பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.

    ஆலோசனை கூட்டத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    நாமக்கல் மேற்கு மாவட்டம் சார்பில் குமார பாளையம் தொகுதி நிர்வாகிகள் ஏற்பாட்டில் ரூ.8 லட்சம் செலவில் கல்வி உதவித்தொகை தலா ரூ.3000 வீதம் 9 பேர்களுக்கும், ரூ.2000 வீதம் 6 நபர்களுக்கும் சில்வர்குடம் 70 நபர்களுக்கும், ஆட்டோ ஓட்டுநர்கள் 80 பேருக்கு சீருடை, 300 பேருக்கு அரிசி, 350 பெண்களுக்கு புடவை மற்றும் முதியோர் உதவித் தொகை, தையல் எந்திரம், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம், மருத்துவ உதவித்தொகை உள்பட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டது.

    இன்று காலை ஈரோட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாலை கரூரிலும், தொடர்ந்து சேலத்திலும், நாளை கோயம்புத்தூரிலும் ஆலோசனை கூட்டங்கள் நடைபெறுகிறது.

    நாமக்கல்லில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். இதுவரை 5 நாட்களில் 27 இடங்களில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று முடி வடைந்து

    உள்ளது. அனைத்து ஊர்களிலும் நடந்த கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

    அடுத்தடுத்து அதிரடியாக விஜய் எடுத்து வரும் பணிகள் அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெறும் தேதி, இடம் விரைவில் விஜய் வெளியிட இருக்கிறார்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் 2026-ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பயணம் புயல் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

    ×