என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற பெயரிலா் பிரசாரம் மேற்கொள்கிறார்.
    • முதல் கட்ட பிரசார சுற்றுப் பயணத்தை 12ஆம் தேதி மதுரையில் தொடங்குகிறார்.

    கரூரில் விஜய் பங்கேற்ற த.வெ.க.வின் பரப்புரை பயணத்தின்போது நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் ரோடு-ஷோ, பொதுக்கூட்டம் மற்றும் பிரசார பயணங்களில் பல்வேறு நிபந்தனைகள், கட்டுப்பாடுகள், விதிமுறைகளை கடைப்பிடித்தால் மட்டுமே நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

    கரூர் சம்பவத்துக்கு பிறகு மதுரையில் வருகிற 12-ந்தேதி பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரசார பயணத்துக்கு மதுரை போலீசார் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளனர்.

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வருகிற 12-ந்தேதி தனது பிரசார பயணத்தை மதுரையில் இருந்து தொடங்க திட்டமிட்டுள்ளார். 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற பெயரில் அவர் தனது முதல் கட்ட பிரசார சுற்றுப் பயணத்தை மதுரையில் தொடங்கி 5 நாட்கள் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து 17-ந்தேதி நெல்லையில் முடிக்க திட்டமிட்டு உள்ளார்.

    இதற்காக மதுரையில் தொடக்க விழா பொதுக்கூட்டம் நடத்த பழங்காநத்தம் ரவுண்டானா, முனிச்சாலை சந்திப்பு, புதூர் பஸ் நிலையம், அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் உள்ளிட்ட இடங்களில் ஏதாவது ஒன்றை தருமாறு போலீசிடம் பா.ஜ.க.வினர் கேட்டுள்ளனர்.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதில் புதூர் பஸ் நிலையம் அல்லது பழங்காநத்தம் ரவுண்டானா பகுதி பா.ஜ.க. பிரசாரத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிகிறது. அன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் நயினார் நாகேந்திரனின் பிரசார பயணத்தை மத்திய மந்திரி ஜே.பி.நட்டா தொடங்கி வைத்து பேசுகிறார்.

    இந்த பிரசார பயணத் தொடக்க நிகழ்ச்சியில் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கூடுகிறார்கள். தொடக்க நிகழ்ச்சி முடிந்ததும் நயினார் நாகேந்திரன் சிவகங்கை மாவட்டத்திற்கு செல்கிறார்.

    • ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்படும் கால அட்டவணையும் பயணிகள் கூட்டம் இல்லாததற்கு காரணம் என்று குற்றச்சாட்டுகின்றனர்.
    • அதிக கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் ஏ.சி. ரெயிலை புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே மூலம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்பட்டது. கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இந்த ரெயில் தற்போது இயக்கப்படுகிறது.

    தினமும் 8 சேவைகள் இருந்த நிலையில் மே மாதத்தில் 10 சேவைகளாக அதிகரிக்கப்பட்டன.

    12 பெட்டிகளை கொண்ட ஏ.சி. ரெயிலில் உட்கார்ந்தும் நின்று கொண்டும் மொத்தம் 4,914 பயணிகள் பயணம் செய்ய முடியும். 8 சேவைகள் அடிப்படையில் 100 சதவீத பயன்பாட்டில் 39,312 பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். 50 சதவீத பயன்பாடாக இருந்தால் 19,656 பேர் செல்ல வேண்டும். 25 சதவீத பயன்பாட்டில் 9828 பேர் பயணிக்க வேண்டும்.

    ஆனால் 2,800 பேர் மட்டுமே தினமும் பயணம் செய்துள்ளனர். இது ரெயிலின் மொத்த பயன்பாட்டில் 10 சதவீதம் கூட எட்டவில்லை.

    ஏ.சி. மின்சார ரெயிலில் எதிர்பார்த்த கூட்டமும் இல்லை. காலியாகவே ஓடுகின்றன. இதற்கு முக்கிய காரணம் கட்டணம் அதிகமாகும். மேலும் மெட்ரோ ரெயில் சேவையின் பயன்பாடு அதிகரித்து வருவதும் ஒரு முக்கிய காரணமாகும் என்று பயணிகள் தெரிவிக்கின்றனர். இது தவிர ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்படும் கால அட்டவணையும் பயணிகள் கூட்டம் இல்லாததற்கு காரணம் என்று குற்றச்சாட்டுகின்றனர்.

    காலை மற்றும் மாலை நெரிசல் மிகுந்த வேளையில் ஏ.சி. ரெயில் சரியான நேரத்தில் இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. நெரிசல் மிகுந்த கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு வழித்தடத்தில் அதிக பயணிகளை ஈர்க்கும் திறன் இருந்த போதிலும் மோசமான நிலையே காணப்படுகிறது. ஏ.சி. மின்சார ரெயிலில் 1-5 கி.மீ. ரூ.35-ம், 11-15 கி.மீ.க்கு ரூ.40-ம், 16-25 கி.மீ. ரூ.60-ம், 26-40 கி.மீ.க்கு ரூ.85-ம், 56-60 கி.மீ.க்கு ரூ.105-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அதிக கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் ஏ.சி. ரெயிலை புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது. கட்டணத்தை குறைக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? தற்போது உள்ள குளறுபடிகளை சரி செய்தால் தான் புறநகர் பயணிகளை கவர முடியும்.

    இனி மழைக்காலம் என்பதால் பொதுவாக ஏ.சி. ரெயில் பயணம் குறையும். அவற்றையெல்லாம் கருதி கட்டணத்தை குறைக்க பரிசீலிக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

    • நாகர்கோவில் தபால் நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமானோர் பதிவு தபால்களை அனுப்பி வந்தனர்.
    • பதிவு தபாலின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.26 ஆகும்.

    நாகர்கோவில்:

    தொலைபேசி காலத்திற்கு முன்பு மக்கள் பெரும்பாலும் தங்கள் தொடர்புகளை கடித போக்குவரத்திலேயே வைத்திருந்தனர். செல்போன் வந்த பிறகு இந்த கடித போக்குவரத்து முற்றிலும் குறைந்தே போனது. இருப்பினும் தபால் அட்டை, இன்லெண்ட் லெட்டர் போன்றவை அஞ்சலக பயன்பாட்டில் இன்றளவும் உள்ளது.

    அதேநேரம் மக்கள் முக்கியமாக தபால் அலுவலகத்தை பயன்படுத்தி வந்தது பதிவு தபால் முறைக்காக தான். முக்கிய தபால்களை இந்த முறையில் தான் அனுப்பி வந்தனர். இந்த வகை தபால்கள் பாதுகாப்பானது என்பதோடு அதற்கான ஒப்புதல் பதிவு கார்டு (அக்னாலட்ஜ்மென்ட் கார்டு) வைத்து அனுப்பும் போது தபாலை பெற்றுக் கொண்டவரின் கையொப்பத்துடன் பதிவு கார்டு தபால் அனுப்பியவருக்கு திரும்ப வரும்.

    எனவே பதிவு தபால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் தொடர்புக்கும், வங்கிகள் உள்ளிட்டவற்றுக்கு பல்வேறு முக்கிய ஆவணங்கள் அனுப்புவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. திருமண மற்றும் சுப நிகழ்ச்சிக்கான அழைப்புகளையும் பதிவு தபாலில் பலர் அனுப்பி வந்தனர். இந்த முறைக்கான கட்டணமும் குறைவு என்பதால் பலரும் இந்த பதிவு தபால் முறையில் தங்களது முக்கிய ஆவணங்கள், புகார்கள் போன்றவற்றை அனுப்பி வந்தனர்.

    இந்த நிலையில் தனியார் கூரியர் நிறுவனங்களுக்கு போட்டி அளிக்கும் வகையில் தபால் துறை விரைவு தபால் முறையை அமல்படுத்தியது. இது பதிவு தபால் முறையை போன்றது என்றாலும், இந்த முறையில் தபால் அனுப்பினால் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக தெரிகிறது. மேலும் பொருளின் எடைக்கு தகுந்தவாறும், அனுப்பப்படும் ஊருக்கு தகுந்தவாறும் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

    உள்ளூருக்குள் விரைவு தபாலை அனுப்ப வேண்டும் என்றாலும் கட்டணங்கள் அதிகம் என்பதால், விரைவு தபால் முறையை பெரும்பாலானோர் விரும்புவதில்லை. அவர்கள் பதிவு தபால் முறையை தான் தொடர்ந்து வந்தனர். இந்த நிலையில் பதிவு தபால் முறையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த மாதம் (செப்டம்பர்) முதல் வாரத்தில் இருந்தே இதனை நிறுத்தும் முடிவை மத்திய அரசு கையில் எடுத்தது.

    ஆனால் அதற்கான முறையான உத்தரவை வழங்காமல் பரீட்சார்த்த முறையில் தகவல்களை மட்டும் வழங்கியது. இந்த சூழலில் தற்போது பதிவு தபால் முறையை நிறுத்துவதற்கான உத்தரவை மத்திய அரசு வெளியிட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அனைத்து தபால் நிலையங்களிலும் கடந்த 1-ந்தேதி முதல் பதிவு தபால் வசதி ரத்து செய்யப்பட்டு விட்டது. அரசின் இந்த முடிவால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    நாகர்கோவில் தபால் நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமானோர் பதிவு தபால்களை அனுப்பி வந்தனர். பதிவு தபாலின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.26 ஆகும். ஆனால் தற்போது விரைவு தபால் முறையில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.41 ஆக உள்ளது. இது தபாலின் எடை மற்றும் அனுப்பும் தூரம் ஆகியவற்றுக்கு ஏற்றாற் போல் அதிகரிக்கிறது. சாதாரண தபாலுக்கும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    விரைவு தபால்கள் அனுப்புவதற்கு கட்டணம் அதிகம் என்பதால் இந்த முறையை மாற்றி, பதிவு தபால் முறையை மீண்டும் மத்திய அரசு கொண்டுவர வேண்டம் என்று பலரும் வலியுறுத்தி உள்ளனர். மத்திய அரசின் விரைவு தபால் முடிவு, தபால் துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் செயலாக அமையும் என்றும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஏழை, எளிய மக்கள், வியாபாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள் என பல தரப்பினருக்கும் பயனுள்ள பதிவு தபால் முறையை முடக்கியது தவறு. அதனை மீண்டும் கொண்டு வந்து மக்கள் நலனை காக்க வேண்டும் என மத்திய அரசை சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

    • 2 படகுகளில் வந்த 8 இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர்.
    • படுகாயம் அடைந்த 11 மீனவர்களும் நேற்று காலை நம்பியார் நகர் துறைமுகம் வந்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மீனவர்களை தாக்கி மீன்பிடி உபகர ணங்களை பறித்த இலங்கை கடற் கொள்ளையர்கள் 8 பேர் மீது கடலோர காவல்குழும போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:-

    நாகை நம்பியார் நகரை சேர்ந்தவர் சந்திரபாபு (வயது 60) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (28), விமல் (26), சுகுமார் (31), திருமுருகன் (31), முருகானந்தம் (38), அருண் (27) ஆகிய 6 மீனவர்களும், நாகை நம்பியார் நகரை சேர்ந்த சசிகுமார் (30) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த உதயசங்கர் (28), சிவசங்கர் (25), கிருபா (29), கமலேஷ் (19) ஆகிய 4 மீனவர்களும் நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் நம்பியார் நகர் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    கோடியக்கரை தென்கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது 2 படகுகளில் வந்த 8 இலங்கை கடற்கொள்ளையர்கள் படகை சுற்றி வளைத்தனர். பின்னர், பயங்கர ஆயுதங்களால் மீனவர்களை சரமாரியாக தாக்கியதுடன் அவர்களிடம் இருந்த வெள்ளி செயின், எஞ்ஜீன், செல்போன், ஜி.பி.எஸ். கருவி, லைட் பேட்டரி, வாக்கி-டாக்கி, 500 கிலோ மீன் என மொத்தம் ரூ.4 லட்சம் மதிப்பு உபகரணங்களை பறித்து சென்றனர். படுகாயம் அடைந்த 11 மீனவர்களும் நேற்று காலை நம்பியார் நகர் துறைமுகம் வந்தனர். இதுகுறித்து பஞ்சாயத்தாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து அனைவரும் நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த சிவசங்கர் என்பவர் மட்டும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர் மீது வேதாரண்யம் கடலோர காவல்குழும போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.
    • இந்த ஒன்றுகூடல் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெற்றது.

    1980களில் தென்னிந்திய சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களாக திகழ்ந்த நடிகர், நடிகைகள் சந்தித்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    2024 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த இந்த சந்திப்பு, சென்னை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடத்தப்பட்டது.

    தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் இந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்த மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.

    இதில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பிரபு, சரத்குமார், பாக்யராஜ் உள்ளிட்ட நடிகர்களும் குஷ்பு, ராதா, நதியா, ரேவதி , சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், மீனா உள்ளிட்ட நடிகைகளும் கலந்துகொண்டனர்.

    இந்நிலையில், இந்த ஒன்றுகூடல் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    • புதிதாக கட்டப்பட்டு உள்ள மழை நீர் கால்வாய்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் இணைப்பு கால்வாய் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • மழைநீர் வடிகால் இணைப்பு கால்வாய் பணிகளை விரைந்து முடிக்குமாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    சென்னை:

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வி.பி.ராமன் சாலையில், வருகின்ற பருவமழை காலங்களில் மழைநீர் தேங்காத வகையில், எளிதாக பக்கிங்காம் கால்வாய்க்கு தண்ணீர் செல்லும் வகையில் மழைநீர் வடிகால் கால்வாய் தூர்வாரப்பட்டு உள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து வி.பி.ராமன் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை மற்றும் மாசிலாமணி சாலைகள் சந்திப்பு பகுதியில், ராயப்பேட்டை நெடுஞ்சாலை மற்றும் மாசிலாமணி சாலைகளில் புதிதாக கட்டப்பட்டு உள்ள மழை நீர் கால்வாய்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் இணைப்பு கால்வாய் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மழைநீர் வடிகால் இணைப்பு கால்வாய் பணிகளை விரைந்து முடிக்குமாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். புதிதாக கட்டப்பட்டு வரும் மழைநீர் கால்வாய்கள் மூலமாக வி.பி.ராமன் சாலை பகுதியில் மழைநீர் எளிதாக பக்கிங்காம் கால்வாய்க்கு சென்று அங்கிருந்து கடலுக்கு சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    இந்த ஆய்வில் பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, மாமன்ற உறுப்பினர் கமலா செழியன், சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

    • சிந்துபூந்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதை கண்டித்து அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
    • தாமிரபரணி ஆற்றை காப்பாற்ற முடியாமல் போனால் அது வெட்கக்கேடு.

    நெல்லை சிந்துபூந்துறை பகுதியில் தாமிரபரணியில் கழிவுநீர் கலக்கும் பகுதியை பா.ம.க. தலைவர் அன்புமணி ஆய்வு செய்தார்.

    சிந்துபூந்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதை கண்டித்து அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மக்களுடனான கலந்துரையாடலுக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் நதிக்கரையில் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து போராட்டம் நடத்தினர்.

    அப்போது அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * தாமிரபரணி ஆற்றில் நாள்தோறும் 200 டன் திடக்கழிவுகள் கலக்கின்றன.

    * நீதிபதிகள் நேரில் வந்து ஆய்வு செய்த போதிலும் இன்னும் அதே நிலை தொடர்கிறது.

    * தாமிரபரணி ஆற்றை காப்பாற்ற முடியாமல் போனால் அது வெட்கக்கேடு.

    * தாமிரபரணியை கூவம் ஆக்கி விடாதீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • கனமழை பெய்யும் போது 40 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்மேற்கு வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, சேலம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம்.

    நாளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பதூர் மாவட்டங்களிலும், நாளை மறுநாள் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    மாவட்டங்களில் கனமழை பெய்யும் போது 40 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கரூர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கிறது.
    • கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அரசியல் செய்கின்றன.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * விஜய் மீது எங்களுக்கு எந்த வன்மமும் இல்லை.

    * விஜயை கைது செய்ய வேண்டும், சிறையிலடைக்க வேண்டும் என வலியுறுத்தவில்லை.

    * கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு விஜய் தார்மீக பொறுப்பேற்க வேண்டும்.

    * கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

    * கரூர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கிறது.

    * கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அரசியல் செய்கின்றன.

    * விஜயை கையில் எடுக்க பா.ஜ.க. முயற்சிகளை மேற்கொள்கிறது.

    * பொறுப்புடன் வந்த முதலமைச்சருக்கு விஜய் நன்றி தெரிவித்திருக்க வேண்டும்.

    * சதிகார, சூழ்ச்சிகார அரசியல் சக்திகளிடம் சிக்கினால் அவர் இதுபோன்ற பல நெருக்கடிகளை சந்திக்க நேரும்.

    * விஜய் சுதந்திரமாக சிந்தித்து செயல்பட வேண்டுமென்பது தான் என் வேண்டுகோள்.

    * உச்சநீதிமன்றத்திலும் சனாதன சக்திகளின் கொட்டம் தலைவிரித்து ஆடுகிறது என்றார். 

    • 3 ஆம் இடம் பிடித்து, நம் தேசத்துக்கு பெருமை சேர்த்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது!
    • இந்த வெற்றியின் மூலம், நம் பாரத நாடு மட்டுமன்றி, நம் தமிழ்நாட்டின் பெருமையையும் உலகறியச் செய்திருக்கிறார் அஜித் குமார் அவர்கள்!

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சர்வதேச அளவிலான கார் பந்தயங்களில் களமிறங்கி, பல வெற்றிகளை குவித்து வரும் நடிகர் அஜித் குமாரின் 'Ajith Kumar Racing Team' அணி, 2025 ஆம் ஆண்டிற்கான Creventic 24H European Endurance Championship தொடரில் ஒட்டுமொத்தமாக 3 ஆம் இடம் பிடித்து, நம் தேசத்துக்கு பெருமை சேர்த்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது!

    இந்த வெற்றியின் மூலம், நம் பாரத நாடு மட்டுமன்றி, நம் தமிழ்நாட்டின் பெருமையையும் உலகறியச் செய்திருக்கிறார் அஜித் குமார் அவர்கள்!

    மென்மேலும் அவரது அணி பல வெற்றிகளை குவிக்க எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! என கூறியுள்ளார். 


    • சென்னை ஒன் செயலி மூலம் எளிதாக கட்டணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று பயணம் செய்யலாம்.
    • சென்னை ஒன் செயலி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் மக்கள் பயன்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இந்தியாவிலேயே முதன் முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய 'சென்னை ஒன்' மொபைல் செயலியை கடந்த மாதம் 22-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்த செயலி பஸ், புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் கேப், ஆட்டோக்களை ஒரே கியூஆர் கோடு பயணச்சீட்டு மூலம் ஒருங்கிணைக்கிறது.

    இதன் மூலம் பொதுமக்கள் பஸ்கள், மெட்ரோ மற்றும் புறநகர் ரெயில்களின் நிகழ்நேர இயக்கத்தை அறிந்து கொள்ளவும், யுபிஐ அல்லது கட்டண அட்டைகள் வழியாக பயணச் சீட்டுகளை பெற்றிடவும், ஒரே பயணப் பதிவின் மூலம் அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பயணம் செய்யவும் முடியும். இச்செயலி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் மக்கள் பயன்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

    'சென்னை ஒன்' செயலி பொது போக்குவரத்து சேவையில் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும். இனி பொதுமக்கள் பயணச் சீட்டு பெற வரிசையில் காத்திருக்க தேவையில்லை. இந்த செயலி மூலம் எளிதாக கட்டணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று பயணம் செய்யலாம்.

    இந்நிலையில் சென்னையில் மாநகர போக்குவரத்து பஸ்களுக்கு மாதாந்திர பாஸ் பெறுவதுபோல, சென்னை ஒன் செயலியிலும் மாதாந்திர பாஸ் பெறும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    இதற்கான பணிகளை சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்துடன் இணைந்து சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னை ஒன் செயலி மூலமே மாதாந்திர பாஸ் பெறும் வசதியும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

    • ரூ.1,791 கோடி செலவில் 10.10 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்தின் மீதமிருந்த 95% பணிகளையும் விரைந்து முடித்துள்ளது.
    • 'அவினாசி சாலை உயர்மட்ட மேம்பால'த்தை நாளை மறுநாள் மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்க இருக்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பதிவியிட்டுள்ளதாவது:-

    2020-இல் அறிவிக்கப்பட்டு, 2021 மே மாதம் வரையில் 5% பணிகள் மட்டுமே நடைபெற்றிருந்த அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று, ரூ.1,791 கோடி செலவில் 10.10 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்தின் மீதமிருந்த 95% பணிகளையும் விரைந்து முடித்துள்ளது.

    கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான இந்த 'அவினாசி சாலை உயர்மட்ட மேம்பால'த்தை நாளை மறுநாள் மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்க இருக்கிறேன்.

    கோவை என்றாலே புதுமை என்பதற்கேற்ப, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்த இந்தியாவின் எடிசன், தந்தை பெரியாரின் உற்ற கொள்கைத் தோழர் ஜி.டி.நாயுடு அவர்களின் பெயரை இந்த மேம்பாலத்துக்குச் சூட்டி மகிழ்கிறேன் என்று கூறியுள்ளார். 



    ×