என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஆசிய உள் கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடம் தமிழக அரசு கடனுதவி கோரியுள்ளது.
- கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் அமைய உள்ள வழித்தடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை:
சென்னை மெட்ரோ ரெயில் சேவையைத் தொடர்ந்து கோவை, மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவையைத் தொடங்க தமிழ்நாடு அரசு ஆயத்தமாகி வருகிறது.
அந்த வகையில், கோவையில் முதல்கட்டமாக அவிநாசி சாலை, சத்தி சாலை ஆகிய 2 வழித்தடங்களில் மொத்தம் 38 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.10,740 கோடியில் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
முதல் வழித்தடமாக உக்கடம் பஸ் நிலையத்திலிருந்து டவுன்ஹால், அவிநாசி சாலை வழியாக நீலாம்பூர் வரை 22 கிலோ மீட்டர் தூரத்துக்கும், இரண்டாம் கட்டமாக கோவை ரெயில் நிலையத்திலிருந்து சத்தி சாலையில் கோவில்பாளையம் அருகே உள்ள வழியாம்பாளையம் வரை 16 கிலோ மீட்டர் தூரத்துக்கும் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்துக்கான நிதியை பெறுவதற்கு, ஆசிய உள் கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடம் தமிழக அரசு கடனுதவி கோரியுள்ளது.
இதனை ஏற்று மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான நிதியை கடனாக வழங்க உள்ள பன்னாட்டு ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் தமிழகம் வந்தனர். அவர்கள் நேற்று மதுரையில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதனை தொடர்ந்து இன்று கோவை வந்தனர். கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் அமைய உள்ள வழித்தடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை உக்கடம் பகுதியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் திட்ட இயக்குனர் அர்ச்சுணன், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உயர் முதலீட்டு அலுவலர் வென்யுகு, தலைமை பொது மேலாளர் ரேகா பிரகாஷ் மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்களும் கள ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களுக்கு அதிகாரிகள் இது தொடர்பாக விளக்கி கூறினர்.
2 நாள் ஆய்வு முடிந்த பின்னர் நாளை தமிழ்நாடு நிதித்துறை செயலாளரை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
- திமுக சார்ந்த அரசியலை விஜய் முன்னெடுத்தால் பாஜகவின் அரசியல் தனித்துவமாக இருக்கும்.
- உருது பள்ளிகளை அதிகம் திறப்பது உருது திணிப்பு இல்லையா?
திருச்சி:
திருச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* திமுக சார்ந்த அரசியலை விஜய் கையிலெடுத்தாலும் பாஜகவுக்கு சந்தோஷம் தான்.
* மத்திய அரசை திமுக பாணியில் ஒன்றிய அரசு என நடிகர் விஜய் கூறுகிறார். திமுக சார்ந்த அரசியலை நடிகர் விஜய் முன்னெடுப்பது போல் உள்ளது.
* 2021க்கு முன்பு வரை மத்திய அரசு என்று தானே அனைவரும் கூறி வந்தனர்.
* திமுக சார்ந்த அரசியலை விஜய் முன்னெடுத்தால் பாஜகவின் அரசியல் தனித்துவமாக இருக்கும்.
* விஜய் திமுக ஆதரவு அரசியலை முன்னெடுப்பது பாஜகவின் வளர்ச்சிக்கு உதவும்.
* தமிழகத்தில் உருது பள்ளிகளை அதிகம் கொண்டு வர வேண்டும் என்பது மாநிலக்கல்விக்கொள்கை. உருது பள்ளிகளை அதிகம் திறப்பது உருது திணிப்பு இல்லையா?
* கடலோர பள்ளிகளில் மாணவர்களுக்கு மீனவர்கள் சார்ந்து பாடம் கற்பிப்பது குலக்கல்வி இல்லையா?
* தமிழக அரசு கற்பிப்பது குலக்கல்வி இல்லை, மத்திய அரசு கொண்டு வந்தால் குலக்கல்வியா? என்று கேள்வி எழுப்பினார்.
- திமுகவிற்கு உதவும் வகையில் விக்கிரவாண்டியில் அதிமுக போட்டியிடவில்லை.
- நீட் விவகாரத்தில் விஜய் கருத்தை கூறுவதற்கு அவருக்கு கருத்துரிமை உள்ளது.
திருச்சி:
திருச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ஆளுங்கட்சியின் அத்துமீறல்களையும் மீறி விக்கிரவாண்டி தேர்தலில் பாமக வெல்லும்.
* விக்கிரவாண்டியில் போட்டியிடும் துணிச்சல் அதிமுகவிற்கு இல்லை.
* 3வது, 4வது இடத்திற்கு செல்ல நேரிடும் என்பதால்தான் அதிமுக போட்டியிடவில்லை.
* திமுகவிற்கு உதவும் வகையில் விக்கிரவாண்டியில் அதிமுக போட்டியிடவில்லை.
* பாமகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என அதிமுக கூறி உள்ளது திமுகவிற்கு உதவும்.
* விக்கிரவாண்டியில் திமுகவை வெற்றி பெற வைக்க அதிமுக மறைமுக உதவி செய்துள்ளது.
* நீட் தேர்வு தொடர்பாக திமுக அரசு ஏன் வெள்ளை அறிக்கை வழங்க தயங்குகிறது? நீட் தேர்வுக்கு முன் - பின் மருத்துவ சேர்க்கை எப்படி நடைபெற்றது என வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
* நீட் விவகாரத்தில் விஜய் கருத்தை கூறுவதற்கு அவருக்கு கருத்துரிமை உள்ளது.
* நீட் தேர்வு வந்த பிறகு அதிக அரசுப்பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
* பாஜக எதிர்ப்பு அரசியல் என்கிற ஒன்றுக்காக நீட் தேர்வை தற்போது எதிர்க்கிறார்கள் என்று கூறினார்.
- 3 புதிய குற்றவியல் சட்டங்களும் ஜூலை 1 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.
- குற்றவியல் சட்டங்கள் இந்தி, சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம் (IPC) தற்போது பாரதீய நியாய சன்ஹிதா (BNS) என்ற சட்டமாக மாற்றப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குப் பதிலாக (CrPC) பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்திய சாட்சியச் சட்டம் (IE Act) பாரதீய சாக்ஷிய அதினியம் (BSA) என்ற சட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களும் ஜூலை 1 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.
குற்றவியல் சட்டங்களுக்கு இந்தி, சமஸ்கிருதத்தில் பெயரிட்டது அரசியலமைப்புக்கு விரோதமானவை என அறிவிக்கக் கோரிய சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
ராம்குமார் தாக்கல் செய்த அந்த மனுவில், "இந்தியாவில் உள்ள 56.37% மக்களுக்கு இந்தி தாய்மொழியாக இல்லை. ஆனால் முக்கியமான சட்டங்களுக்கு சமஸ்கிருதம், இந்தியில் பெயர் வைக்கப்பட்டுள்ள்ளது. இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் 8 யூனியன் பிரதேசங்களில் 9 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் மட்டுமே இந்தி அதிகாரபூர்வமான மொழியாக உள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 348(1)(ஏ) பிரிவின்படி, உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் அனைத்து நடவடிக்கைகளும் ஆங்கிலத்தில் நடத்தப்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை இன்று, தற்காலிக தலைமை நீதிபதி ஆர் மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய டிவிஷன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகள் தெரியாத சட்ட மாணவர்கள், சட்ட ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், சட்ட அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இந்த மனுவை தாக்கல் செய்ததாக மனுதாரர் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு இந்தி மொழி தெரியாத நிலையில், இந்தி மொழியில் சட்டங்களுக்கு பெயரிடுவது தமிழகத்தில் பல நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், "3 புதிய குற்றவியல் சட்டங்களும் ஆங்கிலத்தில்தான் நிறைவேற்றப்பட்டன, 'Bharatiya Nyaya Sanhita' என சட்டங்களின் பெயர்கள் கூட இந்தி, சமஸ்கிருதத்தில் இல்லாமல் ஆங்கில எழுத்துக்களில்தான் இடம் பெற்றுள்ளன என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், "மக்கள் இந்த பெயர்களுக்கு இறுதியாக பழகிவிடுவார்கள். ஆனால் இந்த பெயர்கள் எந்தவொரு அரசியலமைப்பு உரிமைகளையும் அல்லது குடிமக்களின் அடிப்படை உரிமைகளையும் மீறவில்லை" என்று தெரிவித்தார்.
விசாரணையின் முடிவில் 3 குற்றவியல் சட்டங்களுக்கும் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்தது. இந்த மனு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
- திரளான கூட்டத்தை சேர்க்க அமைச்சர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்.
- எந்தெந்த பகுதிகளுக்கு சென்று பேசுவார் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை:
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 7 மற்றும் 8 ஆகிய இரு தேதிகளில் வேனில் சென்று தீவிர பிரசாரம் செய்ய முடிவு செய்து உள்ளார்.

தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அவர் எந்தெந்த பகுதிகளுக்கு சென்று பேசுவார் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி 7-ந்தேதி (திங்கட்கிழமை) திருவாமத்தூர், காணை பனமலைப் பேட்டை, அன்னியூர் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.
8-ந்தேதி நேமூர், ராதாபுரம், விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதிகளிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார்.
விக்கிரவாண்டியில் அவர் பேசும் 8 இடங்களிலும் திரளான கூட்டத்தை சேர்க்க அமைச்சர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்.
- 121-வது மகா சமாதி அடைந்த தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.
- இன்று காலை அன்ன பூஜை நடந்தது.
கன்னியாகுமரி:
"வீரத்துறவி" என்று அனைவராலும் அழைக்கப்படும் சுவாமி விவேகானந்தர் 1902-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-தேதி மகா சமாதி அடைந்தார். அவரது 121-வது மகா சமாதி அடைந்த தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தா சபாகிரகம் அரங்கத்தில் இன்று காலை அன்ன பூஜை நடந்தது.
இதையொட்டி காலை 10 மணிக்கு நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள பொதுமக்களிடம் இருந்து விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்றத் திட்ட தொண்டர்களால் நன்கொடையாக பெறப்பட்ட 21 டன் அரிசியை மலை போல் குவித்து வைத்து அதன் மேலே அன்னபூரணி சிலையை ஆவகாணம் செய்து வைத்து மலர்களால் அலங்கரித்து அன்ன பூஜை நடந்தது.
மேலும் சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரம ஹம்சர், அன்னை சாரதா தேவி, மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை நிறுவிய ஏக்நாத்ராணடே ஆகியோரின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. இவர்களது உருவப்படங்களுக்கு விவேகானந்த கேந்திர நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் கேந்திர பிரார்த்தனையுடன் அன்ன பூஜை நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு அகில பாரத விவேகானந்த கேந்திர தலைவர் பால கிருஷ்ணன் தலைமை தாங்கினார். தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அதைத் தொடர்ந்து குவித்து வைக்கப்பட்டிருந்த அரிசிக்கு மங்கள ஆரத்தி நடத்தப்பட்டது. இந்த அன்ன பூஜை நிகழ்ச்சியில் குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.
இந்த அன்ன பூஜைக்காக நெல்லை, குமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்து 21 டன் அரிசி சேகரிக்கப்பட்டது.
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது.
- சிறந்த தொண்டரான சண்முகத்தை இழந்திருப்பது மிகுந்த மனவேதனை தருகிறது.
சென்னை:
சேலம் கொண்டலாம்பட்டி அதிமுக பகுதி செயலாளர் சண்முகம் படுகொலை செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
* தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது.
* தினசரி கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது.
* கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை.
* சிறந்த தொண்டரான சண்முகத்தை இழந்திருப்பது மிகுந்த மனவேதனை தருகிறது.
* சண்முகத்தை இழந்துவாடும் உறவினர்கள், கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் இன்று நேரில் ஆய்வு
- புதிய திட்டங்களையும் அறிவிக்க உள்ளார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 11-ந் தேதி அன்று தருமபுரிக்கு வருகை தருகிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பாளையம் புதூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் வருகிற 11-ந் தேதி காலை தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
பாடு பணிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இன்று நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலையில் இன்று ஆய்வு செய்தார்.
ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெரும் துறைகள் சார்பில் அமைக்கப்படும் அரங்குகளையும், மேடை அமைய உள்ள இடத்தினையும், பயனாளிகளை அழைத்து வரும் வாகனங்கள் வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதிகளையும், பொதுமக்களுக்கு கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் குறித்தும் அமைச்சர், துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகளில் 3 முறை வருகை புரிந்து பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தருமபுரி மாவட்டத்திற்கு வழங்கியுள்ளார்.
குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை பதிவு செய்யும் முகாம் மற்றும் வத்தல்மலை மலை வாழ்மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையான பஸ் வசதி, சாலை வசதி மற்றும் அரசு தலைமை மருத்துவ மனையில் கூடுதல் கட்டிடங்கள் என பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் வருகிற 11-ந் தேதியன்று ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய மக்களை நாடிச் செல்லும் தமிழக அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்றான மக்களுடன் முதல்வர் திட்டத்தினை தருமபுரி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இந்த விழாவில் பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், புதிய பஸ்களை தொடங்கி வைத்தல், விவசாயிகள், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் புதிய திட்டங்களையும் அறிவிக்க உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்.
- மேயர்கள் பதவி விலகில் என்னவோ நடக்குது.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுப்பு , மதுவிலக்கு அமல்படுத்த மறுப்பு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளால் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இதனை அறிந்த தி.மு.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளது.
பா.ம.க. கூட்டத்திற்கு வரும் பெண்களை அடைத்து வைப்பது, உள்ளாட்சி பிரதிநிதிகளை மிரட்டுவது என தி.மு.க. அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த அத்துமீறல்களை முறியடித்து பா.ம..க வேட்பாளர் 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்.
அ.தி.மு.க.வின் நோக்கமும் பா.ம.க.வின் நோக்கமும் இத்தேர்தலில் ஒன்றாகவே உள்ளது. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தி.மு.க.வை தீய சக்தி என்று கற்றுகொடுத்தனர். அந்த தீய சக்தியை வீழ்த்தும் வலிமை பாமகவிற்கு உண்டு. எனவே பா.ம.க.வின் மாம்பழ சின்னத்தில் அ.தி.மு.க.வினர் வாக்களிக்க வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பை இல்லாத காரணங்களை காட்டி அரசு தட்டிகழிக்கும் அரசு பதவி விலகவேண்டும். விழுப்புரம் அருகே டி.குமாரமங்கலத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாராயம் குடித்து ஜெயராமன் இறந்துள்ளார். மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியிலிருந்து முருகன் வாங்கி வந்த கள்ளச்சாராயம் என தெரியவந்துள்ளது. இதிலிருந்து கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தமிழக அரசு தவறியதால் முதல்-அமைச்சர் மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். சாதிவாரி இடஒதுக்கீட்டால்தான் பலர் கல்வி கற்றுள்ளார் என்று தி.மு.க.வை சேர்ந்த ஆர்.எஸ் பாரதி கூறியிருப்பது கண்டிக்கதக்கது.
தி.மு.க. சமூகநீதிக்கு செய்த நன்மைகளைவிட தீமைகளே அதிகம். சட்டநாதன் அறிக்கையை செயல்படுத்த மறுத்தவர் கருணாநிதி. இடைத்தேர்தலுக்கு பின் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க தோல்வி அடைந்தால் மின் கட்டண உயர்வை அரசு கைவிடும்.
மாநில கல்வி கொள்கை அறிக்கையை அரசு வெளியிடவேண்டும். நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதால் இதை கைவிட வேண்டும் என பா.ம.க . தொடர்ந்து வலியுறுத்துகிறது. நீட் தேர்வை திணித்த தி.மு.க.வும், காங்கிரசும்தான்.
அப்போது நீட் தேர்வை அறிமுகம் செய்த தி.மு.க. இன்று அதற்கு எதிராக காட்டிக்கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தமிழக முதல்-அமைச்சர் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.
கல்விகண் திறந்த காமராஜர் பெயரில் உள்ள பல்கலைக்கழகம் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கக்கூட நிதி இல்லாமல் உள்ளது. இப்பல்கலை கட்டுப்பாட்டில் 121 கல்லூரிகள் உள்ளது. பிற கல்லூரிகளிடமிருந்து தலா ரூ.50 லட்சம் கேட்டுள்ளது.
தமிழக அரசு இப்பல்கலைக்கு ரூ.500 கோடி கடன் வழங்க வேண்டும். தி.மு.க தோல்வி அடைந்துவிடும் என்று தெரிந்ததால் தான் முதலமைச்சர் பிரச்சாரத்திற்கு வரவில்லை என தெரிகிறது. அப்படியே பிரச்சாரம் செய்தாலும் தி.மு.க தோல்வி அடையும். மேயர்கள் பதவி விலகில் என்னவோ நடக்குது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனையை திமுக அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை.
- உயிரிழந்த ஜெயராமனின் மருமகன் தங்கள் பகுதியில் கள்ளச்சாராயம் தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை:
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில்,
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த டி.குமாரமங்கலம் என்ற இடத்தில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்த ஜெயராமன் என்ற முதியவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த ஜெயராமனின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும். அவர்கள் இருவரும் விரைவாக நலம் பெற விழைகிறேன்.
கள்ளக்குறிச்சி நகரம் கருணாபுரத்தில் கடந்த மாதம் 19-ஆம் தேதி தான் மெத்தனால் கலக்கப்பட்ட நச்சு சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்தனர். அந்த பெரும் சோகம் நிகழ்ந்து 10 நாட்களிலேயே , ஜூன் 29-ஆம் நாள் டி.குமாரமங்கலத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தைக் குடித்து ஒருவர் உயிரிழந்திருப்பது வேதனையை அதிகரிக்கச் செய்கிறது. கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய வணிகத்தைக் கட்டுப்படுத்த தீவிர சோதனைகள் நடத்தப்பட்டதாக தமிழக அரசு மற்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கள்ளக்குறிச்சிக்கு மிக அருகிலேயே எத்தனால் கலக்கப்பட்ட கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்பதிலிருந்தே கள்ளச்சாராய விற்பனை தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
தமிழ்நாட்டில் கள்ளச்சராயம் குடித்து எவ்வளவு பேர் உயிரிழந்தாலும், கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த மாட்டோம் என்ற மனநிலையில் தமிழக அரசும், காவல்துறையும் இருப்பதையே டி.குமாரமங்கலம் கள்ளச்சாராய சாவு காட்டுகிறது. கள்ளச்சாராய வணிகத்துக்கு ஆளுங்கட்சியின் ஆதரவு இருப்பதற்கு டி.குமாரமங்கலத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டது தான் சான்று ஆகும்.
விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து முதியவர் உயிரிழந்தது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி விடும் என்பதால், இதை மூடி மறைக்க முயற்சிகள் நடக்கின்றன. டி.குமாரமங்கலத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் புதுவையிலிருந்து வாங்கி வந்த மதுவைக் குடித்ததால் தான் முதியவர் ஜெயராமன் உயிரிழந்ததாக காவல்துறை பொய்யான தகவல்களை கூறியுள்ளனர். இதை உயிரிழந்த ஜெயராமனின் மருமகன் மறுத்திருப்பதுடன், தங்கள் பகுதியில் கள்ளச்சாராயம் தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த முடியாத திமுக அரசு பதவி விலக வேண்டும்.
தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனையை திமுக அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை; கள்ளச்சாராய வணிகர்களுக்கு ஆளும் கட்சியின் ஆதரவு இருப்பதாக கூறப்படும் நிலையில், தமிழ்நாட்டு காவல்துறை விசாரணை நடத்தினால் உண்மை வெளிவராது என்பதால் தான் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். எனவே, கள்ளச்சாராய சாவுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- ஜோடி கரடிகள் அட்டகாசம் செய்து வருகிறது.
- மரங்களில் ஏறி பழங்களை சாப்பிட்டுக்கொண்டு ஹாயாக உலா வருகிறது.
நெல்லை:
பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்கு யானை, கரடி, சிறுத்தை, மிளா உள்பட பல்வேறு வகை வனவிலங்குகள் உள்ளது.
இந்த வனவிலங்குகள் அவ்வப்போது மலை அடிவாரத்தில் உள்ள கிராம பகுதியில் புகுந்து அச்சுறுத்துவதும், விளைநிலங்களை சேதப்படுத்துவதும் தொடர் கதையாக வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே பாபநாசம் அருகே உள்ள கோட்டை விளைப்பட்டி கிராமத்திற்குள் புகுந்து ஜோடி கரடிகள் அட்டகாசம் செய்து வருகிறது.
அந்த பகுதிகளில் உள்ள மரங்களில் ஏறி பழங்களை சாப்பிட்டுக்கொண்டு ஹாயாக உலா வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலையில் கோட்டை விளைப்பட்டி நடுத்தெருவில் வசித்துவரும் குமார் என்பவரின் வீட்டை சுற்றி 2 கரடிகள் ஜோடியாக சுற்றி திரிந்தது.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைத்துள்ளனர். வனத்துறை உடனடியாக கூண்டுவைத்து கரடிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அட்டை பெட்டிகளில் இருந்து திடீரென கரும்புகை எழுந்தது.
- சற்று நேரத்தில் தீ மளமளவென முதல் தளம் முழுவதும் பரவியது.
திருப்பூர்:
திருப்பூர் அனு ப்பர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் கலைவாணி தியேட்டர் அருகில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறார். 3 மாடி கொண்ட கட்டிடத்தில் செயல்பட்டு வரும் இந்த பின்னலாடை நிறுவனத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று காலை பின்னலாடை நிறு வனத்தின் முதல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த பனியன் துணிகள் மற்றும் அட்டை பெட்டிகளில் இருந்து திடீரென கரும்புகை எழுந்தது. சற்று நேரத்தில் தீ மளமளவென முதல் தளம் முழுவதும் பரவியது.
இதனைப பார்த்து அதிர்ச்சி அடைந்த பனியன் நிறுவன ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். மேலும் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
பின்னர் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் 2 வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
இருந்த போதிலும் பின்னலாடை நிறுவனத்தில் இருந்த பல லட்சம் மதிப்பி லான 3ஆயிரம் கிலோ பனியன் துணிகள், 100-க்கும் மேற்பட்ட தையல் எந்திர ங்கள் மற்றும் அட்டைப்பெட்டிகள் எரிந்து நாசமானது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






