என் மலர்
உள்ளூர் செய்திகள்
- உங்கள் மண்ணின் மைந்தர் அவர். மக்களோடு மக்களாக, மக்கள் பணி யாற்றும் மக்கள் தொண்டர் தான் அன்னியூர் சிவா.
- கடந்த மூன்றாண்டு காலத்தில் செய்து தரப்பட்டிருக்கும் நலத்திட்டங்களை விவரித்து சொல்ல வேண்டும் என்றால் நேரம் போதாது!
சென்னை:
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலையொட்டி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து தனது பேச்சை வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசி இருப்பதாவது:-
விக்கிரவாண்டி மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.
வரும் ஜூலை 10-ந் தேதி நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க. ஆற்றல் மிக்க வேட்பாளர் அன்னியூர் சிவா என்கிற சிவசண்முகத்துக்கு, உங்கள் உள்ளம் கவர்ந்த உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியா கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடும் அன்னியூர் சிவா என்கிற சிவசண்முகத்தை உங்களுக்கு தனியாக அறிமுகம் செய்ய வேண்டியதில்லை. உங்கள் மண்ணின் மைந்தர் அவர். மக்களோடு மக்களாக, மக்கள் பணி யாற்றும் மக்கள் தொண்டர் தான் அன்னியூர் சிவா.
1986-ம் ஆண்டு முதல், அன்னியூர் சிவாவை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தடம் மாறாத-நிறம் மாறாத கலைஞரின் உடன் பிறப்புகளில் அவரும் ஒருவர். தலைவர் கலைஞரின் பாணியில் சொல்ல வேண்டும் என்றால், "தன்னால் கழகத்துக்கு என்ன லாபம் என்பதை மட்டுமே சிந்திக்கும் ரத்த நாளங்களில் ஒருவர்".
* விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளராக-
* ஒன்றுபட்ட மாவட்டத் தலைமைப் பொதுக்குழு உறுப்பினராக-
* அன்னியூர் கூட்டுறவு விவசாய வங்கித் தலைவராக-
* மாநில விவசாய அணி துணைச் செயலாளராக என்று பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், தற்போது விவசாயத் தொழிலாளர் அணியின் மாநிலச் செயலாளராக பொறுப்பு வகித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படிப்பட்ட அன்னியூர் சிவாவை, விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பி வையுங்கள் என்று அன்போடு நான் கேட்டுக் கொள்கிறேன். அன்போடு மட்டுமல்ல; உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்.
நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், கடந்த மூன்றாண்டு காலத்தில் செய்து தரப்பட்டிருக்கும் நலத்திட்டங்களை விவரித்து சொல்ல வேண்டும் என்றால் நேரம் போதாது!
* 1 கோடியே 16 லட்சம் மகளிர் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெறுகிறார்கள். இந்த மாதத்தில் இருந்து புதிதாக 1 லட்சத்து 48 ஆயிரம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை தரப் போகிறோம்!
* மகளிருக்குக் கட்டணமில்லா பஸ் வசதி செய்து தரப்பட்டிருக்கிறது.
* 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலமாக, இளைஞர்கள் அனைத்து வேலைகளையும் பெற தகுதி உள்ளவர்களாக உயர்த்தப்பட்டு வருகிறார்கள்.
* 'புதுமைப்பெண் திட்டம்' மூலமாக, அரசுப் பள்ளியில் படித்து கல்லூரிக் கல்விக்கு வரும் மாணவியருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தரப்படுகிறது.
* இதே மாதிரி, மாணவர்களுக்கும் 'தமிழ்ப்புதல்வன்' திட்டம் மூலமாக தரப் போகிறோம்.
இப்படி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏதாவது ஒரு நேரடி பலன் கிடைக்கும் வகையில், நம்முடைய அரசு செயல்பட்டு வருகிறது.
திராவிட முன்னேற்றக் கழக அரசு என்றாலே, சமூகநீதி அரசு! இது உங்கள் எல்லோருக்கும் நன்றாக தெரியும்!
* பிற்படுத்தப்பட்டோருக்கு தனித்துறையை உருவாக்கியதே தலைவர் கலைஞர் தான்.
* வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 20 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கிய ஆட்சி, தி.மு.க. ஆட்சி!
* பட்டியலின சமூகங்களின் இடஒதுக்கீட்டை அதிகரித்த ஆட்சி, தி.மு.க. ஆட்சி.
* அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை, 'சமத்துவ நாளாக' அறிவித்திருக்கிறோம்!
* கழகம் வளர்த்த கொள்கைக் குன்றான ஏ.கோவிந்தசாமிக்கு மணி மண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது.
* 1987-ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில், துப்பாக்கிச்சூட்டில் பலியான சமூகநீதிப் போராளிகளுக்கான நினைவகம் கட்டிக் கொண்டிருக்கிறோம்.
இது இரண்டையும் சீக்கிரமே விழுப்புரத்தில் நான் திறந்து வைக்க இருக்கிறேன்.
* கழகத் துணைப் பொதுச்செயலாளரும் உயர் கல்வித்துறை அமைச்சருமான பொன்முடியும், மறைந்த சட்டமன்ற உறுப்பினரான புகழேந்தியும் இந்த மாவட்டத்துக்கும், தொகுதிக்கும் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள்.
எல்லா மக்களுக்கும் பொதுவான மக்கள் நலத்திட்டங்கள் தொடர, உங்களின் ஆதரவை வேண்டி நிற்கிறோம்.
சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க. கூட்டணியை தோற்கடிப்பது மூலமாக, சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கழகத்தின் உண்மைத் தொண்டரான அன்னியூர் சிவா என்ற சிவசண்முகம், விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கும் உண்மையான சட்டமன்ற உறுப்பினராக இருப்பார்!
மறவாதீர், உங்கள் சின்னம் உதயசூரியன்! வாக்களிப்பீர் உதயசூரியன்!
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- பிரசார பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
- அத்துமீறல்களை முறியடித்து பாமக வெற்று பெறும் என்றார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ஜான் பாண்டியன், ஜி.கே.வாசன், பாரிவேந்தர், தேவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
பிரசார பொதுக்கூட்டத்தில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி பேசினார்.
அதிமுகவினர் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டுமென அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். பெண் வாக்காளர்களை குறிவைத்து சவுமியா அன்புமணி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
10.5 சதவீத இட ஒதுக்கீடு நிறைவேற பாமகவுக்கு வாக்களிக்குமாறு அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், அத்துமீறல்களை முறியடித்து பாமக வெற்று பெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டியில் பாமக வெற்றிபெறும். ஆட்சி எப்படி இருக்க கூடாது என்பதற்கு திமுக ஆட்சி உதாரணம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாமக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் மாற்றம் ஏற்பட இது முக்கியமான தேர்தல் என ஜான் பாண்டியன் கூறியுள்ளார்.
பாமக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். பல தேர்தலை சந்தித்துள்ளோம், மாற வேண்டியது நாம்தான் என ரவி பச்சைமுத்து தெரிவித்துள்ளார்.
- பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளில், முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கம் நடைபெறுகிறது.
- விழுப்புரம் மாவட்டம் நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
வருகிற 11 மற்றும் 15ம் தேதிகளில் மக்களுடன் முதல்வர் விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளில், முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கம் நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்டம் நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
11ம் தேதியன்று தர்மபுரியில் மக்களுடன் முதல்வர் விரிவாக்க நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறேன்.
வரும் 15ம் தேதியன்று, திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சர் காலை உணவு திட்டம் விரிவாக்க நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறேன்.
அன்றைய தினம் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் இந்த விழாவினை தொடங்கி வைப்பார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அந்தந்த பகுதி எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அனைத்துக்கட்சி எம்.பி.,க்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார்.
- சுதந்திர போராட்ட வீரர் வேலு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார்.
- ஓய்வூதிய பாக்கி தொகை வழங்கப்படாததால் அதிரடி உத்தரவு.
தமிழக பொதுத்துறை கூடுதல் செயலாளருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின்படி, 97 வயது சுதந்திர போராட்ட வீரருக்கு ஓய்வூதிய பாக்கியை வழங்காத நிலையில் பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சுதந்திர போராட்ட வீரர் வேலு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார்.
உத்தரவை அமல்படுத்த 10 நாட்கள் அவகாசம் வழங்கியும் ஓய்வூதிய பாக்கி தொகை வழங்கப்படாததால் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வாரண்டை செயல்படுத்தி, ஜூலை 8ம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, சென்னை காவல் ஆணையருக்கு நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டுள்ளார்.
- ஓர் ஆண்டில் நடராஜருக்கு 6 நாட்கள் அபிஷேகம் நடத்தப்படும்.
- இதில் மூன்று நட்சத்திர நாட்கள், மூன்று திதி நாட்கள் ஆகும்.
சிதம்பரம்:
பொதுவாக, கோவில்களில் தினமும் ஆறுகால பூஜை நடைபெறும். தேவர்களும் இதேபோல 6 கால பூஜையை நடத்துவார்கள். ஆனால், அவர்களுக்கு ஒருநாள் என்பது நமக்கு ஒரு ஆண்டு. தட்சிணாயணம், உத்தராயணம் என இருவகை காலப்பிரிவுகள் அவர்களுக்கு உண்டு.
தை முதல் ஆனி வரை (காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை) உத்தராயணம்.
ஆடி முதல் மார்கழி வரை (மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை) தட்சிணாயணம்.
அதாவது, அவர்களது அதிகாலைப் பொழுது நமக்கு மார்கழி. காலைப் பொழுது மாசி மாதம். மதியம் சித்திரை திருவோணம். மாலைப் பொழுது ஆனி. இரவு நேரம் ஆவணி. அர்த்தஜாமம் புரட்டாசி. இதன் பொருட்டே நடராஜ பெருமானுக்கு 6 அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம்.
ஓர் ஆண்டில் நடராஜருக்கு ஆறு நாட்கள் அபிஷேகம் நடத்தப்படும்.
சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் கனகசபையில் மாலையில் அபிஷேகம் நடைபெறும்.
ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் ராசசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் உதயத்திற்கு முன் 4 மணிக்கு அபிஷேகம் நடைபெறும்.
ஆவணி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனகசபையில் மாலையில் அபிஷேகம் நடைபெறும்.
புரட்டாசி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனகசபையில் மாலையில் அபிஷேகம் நடைபெறும்.
மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் ராசசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் உதயத்திற்கு முன் 4 மணிக்கு அபிஷேகம் நடைபெறும்.
மாசி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனகசபையில் மாலையில் அபிஷேகம் நடைபெறும்.
இந்தக் குறிப்பிட்ட ஆறு தினங்களிலும் அபிஷேகங்கள் நடைபெறும்போது நடராஜரை கண்டு வணங்கி வழிபடுவது மிக விசேஷம் என்பது குறிப்பிடத்தக்கது.
- அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய மேல் முறையீட்டு மனு.
- சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், வங்கி ஆவணங்களை வழங்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது வரும் ஜூலை 8ம் தேதிஉத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய மேல் முறையீட்டு மனு மற்றும் வங்கி ஆவணங்களை கோரியும் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்திருந்தார்.
மேலும், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுவின் தீர்ப்பினை தள்ளி வைக்க கோரிய, வழக்கின் விசாரணையும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
- மகளிர் உரிமைத்தொகை, மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்ட பயனாளிகளிடம் பேசினார்.
- முதல்வரின் முகவரி துறையின் நீங்கள் நலமா திட்ட பயனாளிகளுடன் வீடியோ காலில் பேசி கருத்துகளை கேட்டறிந்தார்.
சென்னை:
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தொடங்கப்பட்ட திட்டம் தான், 'மக்களைத் தேடி மருத்துவம்'. இத்திட்டத்தை, 2021 ஆகஸ்ட் 5-ந்தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியம் சாமனப்பள்ளி என்ற கிராமத்தில் தொடங்கிவைத்தார். தொற்றா நோய்களான சர்க்கரை, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று, மாதந்தோறும் மருந்து, மாத்திரைகள் வழங்குவதுதான் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
பெண்களின் சுயமரியாதையை காக்கவும், அவர்களது உழைப்பை அங்கீகரிக்கும் வகையிலும் தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. மகளிருக்கு உரிமைத் தொகையாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
அரசு திட்டங்களின் பயன்கள் குறித்து முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலர், துறைசெயலர்கள் ஆகியோர் பொதுமக்களிடம் தொலைபேசியில் நேரடியாக தொடர்பு கொண்டு கேட்டறியும் 'நீங்கள் நலமா' என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 6-ந்தேதி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து அரசு திட்ட பயனாளிகளிடம் வீடியோ காலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேசினார்.
மகளிர் உரிமைத்தொகை, மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்ட பயனாளிகளிடம் பேசினார். முதல்வரின் முகவரி துறையின் நீங்கள் நலமா திட்ட பயனாளிகளுடன் வீடியோ காலில் பேசி கருத்துகளை கேட்டறிந்தார். பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற்றவர்களை தொடர்பு கொண்டு முதலமைச்சர் பேசினார்.
பயனாளிகளிடம் திட்டங்கள் குறித்த பின்னூட்டங்களை கேட்டறிந்த முதலமைச்சர், அரசு செயல்படுத்தும் திட்டங்கள் சரியான நேரத்திற்கு வந்து சேர்கிறதா, எந்த தேதியில் பணம் வருகிறது, எவ்வளவு தொகை வருகிறது, எந்த வகையாக வந்தடைகிறது, ஏதேனும் குறை உள்ளதா, அலுவலகத்தில் அதிகாரிகள் நன்றாக நடத்துகொள்கிறார்களா? என்ற விவரங்களை கேட்டறிந்தார்.
- நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை பலகை வைத்தனர்.
- வீடுகள் கட்டி வரும் பயனாளிகள் கதறி அழுதனர்.
திருவள்ளூர்:
ஆர்.கே.பேட்டை தாலுகா எஸ்.வி.ஜி.புரம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 100 பேருக்கு கடந்த 2000-ம் ஆண்டு திருத்தணி ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் மூலம் பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பட்டா வழங்கி பல ஆண்டுகளாகியும், ஒரு சிலர் மட்டுமே அப்பகுதியில் வீடு கட்டினர். இதற்கிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வருவாய்த் துறையினர் இலவச வீட்டுமனைகள் வழங்கப்பட்ட இடம் அரசுக்கு சொந்தமானது அந்த இடத்தில் யாரும் வீடுகள் கட்டக்கூடாது என்றும் மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை பலகை வைத்தனர்.
எனினும் வீட்டுமனை பட்டா பெற்றுள்ள பயனாளிகள் வீடுகள் கட்டிக்கொள்ள அனுமதி வழங்க கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு வழங்கி இருந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை ஆர்.கே.பேட்டை தாசில்தார் விஜயகுமார் தலைமையில் வருவாய் துறையினர் 6 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அனுமதியின்றி அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை இடித்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வீடுகள் கட்டி வரும் பயனாளிகள் கதறி அழுதனர்.
சுமார் 50-க்கும்மேற்பட்ட வீடுகள் இடித்து தரைமட்ட மாக்கப்பட்டது. திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் எஸ்.வி.ஜி.புரத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்புணியில் ஈடுபட்டனர்.
- யூடியூப்பர் சபீர் அலி உடந்தையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
- சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்து உள்ளது.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் ரூ.167 கோடி மதிப்பிலான 267 கிலோ தங்கம் கடத்தல் நடந்திருப்பது சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
துபாயில் உள்ள இலங்கையை சேர்ந்த ஒருவர் மூலம், சென்னையை மையமாக வைத்து இந்த தங்கம் கடத்தல் நடந்து உள்ளது. இதற்கு சென்னை விமான நிலையத்தில பரிசு பொருட்கள் விற்பனை கடை நடத்தி வந்து யூடியூப்பர் சபீர் அலி உடந்தையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சபீர் அலி, அவரது கடையில் வேலைபார்த்த 7 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடைகள் நடத்தும் உரிமம் பெற யூடியூப்பர் சபீர் அலி கொடுத்த ரூ.77 லட்சம் ஹவாலா பணம் என்பதும், அவருக்கு சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்து உள்ளது.
மேலும் சென்னை விமான நிலையத்தில் உயர் பொறுப்பு வகிக்கும் அதிகாரி ஒருவர் இந்த தங்கம் கடத்தலில் தொடர்பில் இருந்து உள்ளார். அவரது வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தினர்.
அந்த அதிகாரி விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளார். இந்த தங்கம் கடத்தலில் விமான நிலைய அதிகாரிகள் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களும் அடுத்தடுத்து சுங்கத்துறை அதிகாரிகளின் விசாரணையில் சிக்கி வருகிறார்கள்.
இதேபோல் விமான நிலையத்தில் செயல்பட்ட மேலும் 3 கடைகளுக்கும் தங்கம் கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாகவும் அதிரடி விசாரணை நடந்து வருகிறது.
எனவே வரும் நாட்களில் தங்கம் கடத்தல் விவகாரத்தில் முக்கிய நபர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரி களிடம் தகவல்களை பெற்று தமிழக போலீசாரும் தனியாக விசாரித்து வருகி றார்கள். சர்வதேச கும்பல் தொடர்பு இருப்பதால் சி.பி.ஐ. அதிகாரிகளும் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரி கூறும்போது, `சென்னை விமான நிலையத்தில் பரிசு பொருட்கள் விற்பனை கடையை மையமாக வைத்து தங்கம் கடத்தல் நடந்து உள்ளது. அதில் உள்ளவர்கள் சிக்கிய நாள் அன்றே சர்வதேச விமான நிலையத்தில் உள்ள மேலும் 2 கடைகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் அந்த 2 கடைகளிலும் சோதனை நடந்தது. தங்க கடத்தலில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் உயிரிழந்ததாக செய்திகள் வருகின்றன.
- விடியா அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழிப்பதற்குள் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோவது?
சென்னை:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் சுவடு மறைவதற்குள் மற்றுமொரு கள்ளச்சாராய மரணம்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் உயிரிழந்ததாக செய்திகள் வருகின்றன.
சம்பந்தப்பட்ட இடத்தில் கள்ளச்சாராயம் விற்கப்பட்ட காட்சிகளை ஊடகங்கள் வெளியிட்டு, அதிமுக ஐடி பிரிவு சுட்டிக்காட்டிய பிறகும், இந்த விடியா திமுக அரசு அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவாகவே இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணமும், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரமும் கண்ட பிறகும் எந்த பாடமும் நீங்கள் கற்றுக்கொள்ளவில்லையா மு.க.ஸ்டாலின் அவர்களே? உங்கள் விடியா அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழிப்பதற்குள் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோவது?
கள்ளச்சாராய மரணங்கள் தொடர்ந்து விழுப்புரம் சரகத்தில் நடைபெறுவதற்கு காரணமான நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம் என்று தெரிவித்துள்ளார்.
- கடைக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
- 182 கிலோ பிளாஸ்டிக் பைகள் பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் அறிவுரையின்படி, திருவள்ளூர் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவசங்கரன் மற்றும் திருவள்ளூர் நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் நகராட்சி ஊழியர்கள் திருவள்ளூர் பஸ் நிலையம், பஜார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள், பேக்கரி, ஸ்வீட் ஸ்டால், ஓட்டல், டீக்கடை, பூக்கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருந்த 5 கடைக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
மேலும் 3 இனிப்பகத்தில் இனிப்புகளுக்கு அதிகப்படியாக வண்ணம் சேர்க்கப்பட்டிருந்தது. அந்த 3 கடைகளில் இருந்த வண்ணம் சேர்க்கப்பட்டிருந்த 10 கிலோ இனிப்பு மற்றும் கார வகைகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் 3 பிரியாணி கடையில் சிக்கனில் அதிகப்படியான வண்ணம் சேர்க்கப்பட்டிருந்த 6 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து கடைக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

11 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை இருந்ததால் தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. 182 கிலோ பிளாஸ்டிக் பைகள் பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
2 கடைகளில் உணவுப் பொருட்களில் காலாவதியான 100 பாக்கெட் சிப்ஸ், பிஸ்கட், முறுக்கு உள்ளிட்ட பொருட்கள் 5 லிட்டர் எண்ணை பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கடைகளுக்கும் தலா ரூ.1,000 அபராதம் விதித்தனர்.
- அதிமுக நிர்வாகி சண்முகம் படுகொலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
- முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லாட்டரி சதீஷ் என்பவரிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
சேலம்:
சேலம் கொண்டலாம்பட்டி அதிமுக பகுதி செயலாளர் சண்முகம் நேற்றிரவு மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதிமுக நிர்வாகி சண்முகம் படுகொலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக நிர்வாகி கொலை தொடர்பாக 8 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லாட்டரி சதீஷ் என்பவரிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கொலை வழக்கு தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சண்முகம் கொலை தொடர்பாக 55வது வார்டு திமுக கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் லாட்டரி சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






