என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு பெற்றோர்கள் உடனடியாக பத்திரகாளி அம்மன் கோவில் அருகே வந்தனர்.
    • வாகனங்களுக்கு நீதிமன்ற உத்தரவின் படி பின்னர் அபராதம் விதிக்கப்படும் என பெற்றோர்களிடத்தில் தெரிவிக்கப்பட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே ரவுண்டானா பகுதியில் பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது 18 வயதுக்கு கீழே உள்ள சிறுவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அவர்களது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு பெற்றோர்கள் உடனடியாக பத்திரகாளி அம்மன் கோவில் அருகே வந்தனர்.

    அவர்களிடத்தில் 18 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளிடத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்ட அனுமதிக்க கூடாது எனவும், அவ்வாறு கொடுப்பதால் விபத்துக்கள் அதிகளவில் ஏற்படுவதாகவும் கூறப்பட்டு அந்த வாகனங்களை பறிமுதல் செய்து 5 வாகனத்தின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்களை அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    மேலும் அந்த வாகனங்களுக்கு நீதிமன்ற உத்தரவின் படி பின்னர் அபராதம் விதிக்கப்படும் என பெற்றோர்களிடத்தில் தெரிவிக்கப்பட்டது. அப்போது அந்தியூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கஸ்தூரி, அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனபால், மூர்த்தி உள்ளிட்ட போலீசாரும் உடன் இருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாம்பு கடித்ததால் ஆவேசமடைந்த சந்தோஷ் லோகர் உடனே அந்த பாம்பை பிடித்து கடித்தார்.
    • சத்தம் கேட்டு சக தொழிலாளர்களும் அங்கு திரண்டனர்.

    நவாடா:

    பாம்பு கடித்து இறந்தவர்களை பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கடித்த பாம்பை வாலிபர் ஒருவர் திருப்பி கடித்ததில் அந்த பாம்பு இறந்துள்ளது. இந்த வினோத சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    பீகார் மாநிலம் நவாடாவில் உள்ள ராஜவுலி வனப்பகுதியில் ரெயில்வே பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணியில் ஜார்கண்ட் மாநிலம் லதேஹர் மாவட்டத்தில் உள்ள பாண்டுகா பகுதியை சேர்ந்த சந்தோஷ் லோகர் (வயது 35) என்ற வாலிபரும், அப்பகுதியை சேர்ந்த சில தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 2-ந்தேதி இரவு சந்தோஷ் லோகர் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் வேலை முடிந்து அப்பகுதியில் உள்ள தங்களது முகாம்களுக்கு சென்று தூங்கி கொண்டிருந்தனர்.

    அப்போது ஒரு பாம்பு சந்தோஷ் லோகரை கடித்தது. இதனால் திடுக்கிட்டு எழுந்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    பாம்பு கடித்ததால் ஆவேசமடைந்த சந்தோஷ் லோகர் உடனே அந்த பாம்பை பிடித்து கடித்தார். மூன்று முறை அவர் பாம்பை தொடர்ந்து கடித்ததால் அந்த பாம்பு இறந்துபோனது.

    இதற்கிடையே சத்தம் கேட்டு சக தொழிலாளர்களும் அங்கு திரண்டனர். அவர்கள் பாம்பு கடிபட்ட சந்தோஷ் லோகரை அருகே உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர் சதீஷ் சந்திரசிங்கா சிகிச்சை அளித்தார். தீவிர சிகிச்சைக்கு பின் சந்தோஷ் லோகர் வீடு திரும்பி உள்ளார்.

    பாம்பு கடித்தால், கடித்த பாம்பை திருப்பி 3 முறை கடிக்க வேண்டும் என்று தங்களது கிராமத்தினர் கூறுவதாகவும், அதன்படியே பாம்பை கடித்ததாகவும் சந்தோஷ் லோகர் கூறி உள்ளார்.

    • ராமேசுவரத்திற்கு ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.
    • ராமநாதசுவாமி கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று நீராடினர்.

    ராமேசுவரம்:

    தென்னகத்து காசியாக போற்றப்படும் ராமேசுவரத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளூர், வெளியூர், வட மாநிலங்களில் இருந்து வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள். குறிப்பாக அமாவாசை நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும்.

    அந்த வகையில் ராமேசுவரத்திற்கு ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    இதனைதொடர்ந்து, ராமநாதசுவாமி கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று நீராடினர். இதன் பின்னர் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். அதிகளவில் பக்தர்கள் வருகையை முன்னிட்டு போலீஸ் துணை சூப்பிரண்டு உமாதேவி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மேலும் ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்ட நெரிசல் இன்றி தரிசனம் செய்திடும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்புடன் வரிசையாக சென்று தரிசனம் செய்தனர். மேலும் அவர்கள் தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று கடல் அழகை ரசித்தனர்.

    • சுற்றுலா வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
    • சுற்றுலா வாகனங்களில் மோப்பநாய் மூலம் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப், கவியருவி, சின்னகல்லார் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

    அப்போது அந்த வாகனங்கள் ஆழியார் சோதனைச்சாவடி மற்றும் டாப்சிலிப் வழித்தடத்தில் உள்ள சேத்துமடை சோதனைச்சாவடி ஆகிய பகுதிகளில் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.

    இதற்கிடையே சுற்றுலாப் பயணிகள் போல ஒருசிலர் கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப் பொருட்களை சட்டத்துக்கு புறம்பாக வாகனங்களில் கொண்டு செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின்பேரில் வனச்சரகர் ஞானமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று ஆழியார் சோதனைச் சாவடியை கடந்து கவியருவி, வால்பாறைக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    மேலும் வனத்துறையின் பைரவா மோப்பநாய் மூலம் சுற்றுலா வாகனங்களில் ஏதேனும் போதைப் பொருட்கள் உள்ளனவா என்பது குறித்தும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஆழியார் சோதனைச்சாவடி வழியாக கவியருவி, வால்பாறை மட்டுமின்றி அட்டக்கட்டி, சின்னகல்லார், சோலையார் உள்ளிட்ட பகுதிகளுக்கும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். எனவே இந்த வழியாக செல்லும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் சோதனைக்கு பிறகே அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதற்கிடையே போதைப்பொருட்கள் மற்றும் சட்டத்துக்கு புறம்பான பொருட்கள் கொண்டு செல்வதை முற்றிலும் தவிர்க்கும் வகையில் ஆழியாறுக்கு வரும் சுற்றுலா வாகனங்களில் மோப்பநாய் மூலம் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

    மேலும் வனப் பகுதிகளுக்குள் எவரேனும் அத்துமீறி செல்கின்றனரா என்பதையும் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்து உள்ளனர்.

    • இளைஞர் ராஜ்குமாருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • 3 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கோட்டக்கரையில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றபோது இளைஞர் ராஜ்குமார் தீக்குளித்து ஓடி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜ்குமாருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கோட்டக்கரையில் இளைஞர் தீக்குளித்த விவகாரம் தொடர்பாக கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி 3 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

    கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி, எளாவூர் வருவாய் ஆய்வாளர் கோமதி, தேர்வழி வி.ஏ.ஓ. பாக்கிய ஷர்மா ஆகிய 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதிகாரிகள் 3 பேரின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட கலெக்டர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

    • தங்கம் விலை கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    • வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றமில்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.6,760-க்கும் சவரன் ரூ.54,080-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 பைசா உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 97.70-க்கும் கிலோவுக்கு 200 ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ. 97,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சுதாகரின் உறவினர்கள், உடனடியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர்.
    • ஏற்கனவே மணப்பாறை போலீசாரால் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 44). இவர் அப்பகுதியில் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு கடந்த 1-ந் தேதி சென்ற மர்ம நபர்கள் தங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் எனக் கூறி அறிமுகம் செய்து கொண்டு, உங்களது கடையில் சட்டவிரோதமாக மருத்துவம் பார்ப்பதாக புகார் வந்துள்ளதாக கூறி கடையை சோதனை இட்டுள்ளனர்.

    பின்னர் சுதாகரை விசாரணைக்கு வாருங்கள் என கூறி அழைத்து சென்றனர். தொடர்ந்து சுதாகரின் உறவினருக்கு போன் செய்த மர்ம நபர்கள், அவரை விடுவிக்க ரூ.20 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுதாகரின் உறவினர்கள், உடனடியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர்.

    இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மணப்பாறை போலீசார் பணம் கேட்டு மிரட்டிய மர்ம நபர்களை மணப்பாறை-திருச்சி பைபாஸ் சாலையில் வைத்து கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் கேரளாவை சேர்ந்த நவ்ஷாத் (45), துறையூர் அருகே உள்ள வைரி செட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த சேகர் (42), வலையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (44), மதுரையை சேர்ந்த மாரிமுத்து (53), சென்னையை சேர்ந்த வினோத் (37), தொப்பம்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன் (37) என்பது தெரியவந்தது.

    இந்த 6 பேரும் பேரும் ஒரே குழுவாக சேர்ந்து, இதுபோன்று பல்வேறு இடங்களில் தங்களை பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அதிகாரிகள் எனக்கூறி கைவரிசை காட்டியதும் தெரிய வந்தது. இவர்களிடம் மேலும் விசாரணை செய்ததில், இந்தக் குழுவில் உள்ள வினோத், நவ்ஷத், கார்த்திக், மாரிமுத்து ஆகிய நான்கு நபர்கள், மணப்பாறையை சேர்ந்த சக்திவேல் (30), திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (29) ஆகியோருடன் கூட்டு சேர்ந்து, துறையூர் சௌடாம்பிகை அம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் ஜவுளி வியாபாரியான மதுரை வீரன் (60) என்பவரின் வீட்டிற்கு கடந்த மாதம் 17-ந் தேதி சென்று, அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கூறி, அவரது வீட்டில் 5 லட்சம் பணம், தங்க நகை 5 பவுன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றதும் தெரிய வந்தது.

    மணப்பாறை வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த சக்திவேல், மணிகண்டன் ஆகிய இருவரையும் துறையூர் போலீசார் வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இருவரையும் கைது செய்த துறையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மேலும் இச்சம்பவத்தில் கொள்ளை போன நகை, பணம் மற்றும் குற்ற செயலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவை ஏற்கனவே மணப்பாறை போலீசாரால் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கள்ளக்குறிச்சி சாராய மரணங்கள் தமிழக அரசு நிர்வாகத்தின் முழுமையான செயல் இழந்துள்ளதை காட்டுகிறது.
    • கள்ளச்சாராயத்தை ஒடுக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    புதுச்சேரி:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை பாஜகவின் தமிழ்நாடு பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி சாராய மரணங்கள் தமிழக அரசு நிர்வாகத்தின் முழுமையான செயல் இழந்துள்ளதை காட்டுகிறது.

    ஒரு ஆண்டுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் இதேபோல் சம்பவம் நடந்த போதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை.

    கள்ளச்சாராயத்தை ஒடுக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு உள்துறை பொறுப்பு வகிக்கும் தமிழக முதலமைச்சர் தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும்.


    இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணை செய்ய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பலரும் கேட்டும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

    அரசு ஆதரவுடன் தமிழ்நாடு முழுதும் டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுகிறது. இதனால் குறைந்த விலை கள்ளச்சாராயத்தை மக்கள் நாடுவதால் இந்த மரணங்கள் நடந்துள்ளது.கள்ளச்சாராயம் மற்றும் போதை ஒழிப்புக்கு மத்திய அரசின் உதவியுடன் தமிழக அரசு நடவடிக்கைகளை கடுமையாக எடுக்க வேண்டும்.

    அதை விடுத்து அடுத்த மாநில அரசுகள் மீதும் அண்டை மாநிலம் மீதும் பழி கூறி தப்பிக்க கூடாது. இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவது மட்டும் போதாது. அவர்களது குடும்பத்திற்கு வேலை வாய்ப்பும் அளிக்க வேண்டும்.

    கள்ளசாராய மரணங்களுக்கு தி.மு.க.வின் கூட்டணியில் இருப்பதால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வாய் திறக்கவில்லை. நீட் விவகாரத்தை அரசியலாக்கி மாணவர்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கரூர் முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.
    • வேலாயுதம் பாளையத்தில் உள்ள செல்வராஜ் என்பவர் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி.அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இதையடுத்து, நிலமோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதனால் விஜயபாஸ்கர், கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த கரூர் முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.

    இதனை தொடர்ந்து, எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில், அவரை சி.பி.சி.ஐ.டி.போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இந்நிலையில், கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் இன்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

    எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர் வீடுகள் மற்றும் மணல்மேடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கல் ஊழியர் வீட்டிலும் சி.பி.சி.ஐ.டி போலீசார் சோதனை மேற்கொண்டனர். மேலும் வேலாயுதம் பாளையத்தில் உள்ள செல்வராஜ் என்பவர் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    • ரவுடி சீர்காழி சத்யாவை காலில் சுட்டு போலீசார் கைது செய்தனர்.
    • அலெக்சிஸ் சுதாகர் மீது மேலும் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    சென்னை:

    சீர்காழியை சேர்ந்த ரவுடி சத்யா, மாமல்லபுரம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசாரால் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார்.

    மாமல்லபுரம் பகுதியில் பண்ணை வீடு ஒன்றில் நடைபெற்ற வக்கீல் அலெக்ஸ் சுதாகரின் பிறந்த நாள் விழாவுக்காக சீர்காழியில் இருந்து வந்திருந்தபோதுதான் சத்யா போலீசில் சிக்கினார். விலை உயர்ந்த சொகுசு காரில் சென்றபோது போலீசார் மடக்கி பிடித்ததால் தப்பி ஓடிய சீர்காழி சத்யா மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

    இதில் அவரது இடது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. பிடிக்க முயன்றபோது போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றதால் துப்பாக்கியால் சுட நேரிட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    சீர்காழி சத்யா வைத்திருந்த துப்பாக்கி கள்ளத்துப்பாக்கி என்பது மாமல்லபுரம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த துப்பாக்கியை பா.ஜனதா பிரமுகரான வக்கீல் அலெக்ஸ் சுதாகர் வாங்கி கொடுத்திருப்பதாக குற்றம் சாட்டிய போலீசார் அவரையும் கைது செய்திருந்தனர். அலெக்ஸ் சுதாகரிடம் இருந்து 5 தோட்டாக்கள் மற்றும் இன்னொரு கள்ளத்துப்பாக்கி ஆகியவையும் பிடிபட்டது. இது தொடர்பான வழக்கில் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் அலெக்ஸ் சுதாகரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரனித் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று மாவட்ட கலெக்டர் அருண்குமார் அலெக்ஸ் சுதாகரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து மாமல்லபுரம் போலீசார் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இது தொடர்பான உத்தரவு சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட உள்ளது.

    ரவுடி சத்யா பிடிபட்ட போது திருவாரூர் மாரி முத்து, தஞ்சை பால்பாண்டி ஆகிய 2 பேர் தப்பி ஓடி விட்டனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்கள்.

    • அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும், கனடா, இலங்கை ஆகிய நாடுகளிலும் அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
    • காமராஜர் பிறந்தநாளான வரும் 15-ம் தேதி திருவள்ளூரில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

    சென்னை:

    அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகளில் பலர் காலை உணவை தவிர்த்து சோர்வாக தினமும் பள்ளிக்கு வருவதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கண்டார். அதனைத் தொடர்ந்து, அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், காலை உணவுத் திட்டத்தை கொண்டுவருவதாக அறிவித்தார்.

    'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' என்ற பெயரிலான இந்த திட்டத்தை கடந்த 2022-ம் ஆண்டு அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

    முதல்கட்டமாக, 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.33 கோடியே 56 லட்சம் செலவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

    காலை உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் வருகை அதிகரித்ததுடன் அவர்களின் ஊட்டச்சத்தும், கற்றல் திறனும் மேம்பட்டதாக ஆய்வுகள் தெரிவித்தன. மேலும், அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும், கனடா, இலங்கை ஆகிய நாடுகளிலும் அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    இத்திட்டம் கடல் தாண்டியும் பிரபலம் அடைந்த நிலையில், 2023-ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள 30 ஆயிரத்து 992 அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் 15 லட்சம் மாணவ-மாணவிகள் பயனடையும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து, இந்த திட்டத்தை தமிழக ஊரகப்பகுதிகளில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. சட்டசபையிலும் எம்.எல்.ஏ.க்கள் பலர் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.

    இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட 2024-2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 2 லட்சத்து 20 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் ரூ.600 கோடியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், காலை உணவு திட்ட விரிவாக்கத்தை, மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்திய காமராஜர் பிறந்த நாளான வரும் 15-ம் தேதி (திங்கட்கிழமை) திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீழச்சேரியில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் காலை 8.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டி.பிரபு சங்கர் மற்றும் அரசு அதிகாரிகள் செய்து வருகிறார்கள். திருவள்ளூர் மாவட்டம் வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க தி.மு.க.வினரும் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    • விண்ணப்பித்த ஆசிரியர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்து மாநில தேர்வு குழுவுக்கு வருகிற 25ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
    • மாவட்ட தேர்வு குழுவில் மாநில பிரதிநிதியாக ஒருவரும், மாவட்ட கலெக்டரின் பிரதிநிதியாக சிறந்த கல்வியாளர் ஒருவரும் இடம்பெற்று இருப்பார்கள்.

    சென்னை:

    2024-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு http://nationalawardstoteachers.education.gov.in என்ற இணையதளம் வாயிலாக 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை தலைவராக கொண்ட மாவட்ட குழு விண்ணப்பித்த ஆசிரியர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்து மாநில தேர்வு குழுவுக்கு வருகிற 25ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

    இந்த மாவட்ட தேர்வு குழுவில் மாநில பிரதிநிதியாக ஒருவரும், மாவட்ட கலெக்டரின் பிரதிநிதியாக சிறந்த கல்வியாளர் ஒருவரும் இடம்பெற்று இருப்பார்கள். தேசிய நல்லாசிரியர் விருதுக்கான தகுதியுள்ள ஆசிரியர்களை தேர்வு செய்யும்போது, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குனர் அளித்திருந்த வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×