என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆனி அமாவாசை"

    • அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    • பக்தர்கள் வருகையை முன்னிட்டு கோவில், கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    இதற்காக நாடு முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் வருகை தருகிறார்கள். அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்வது சிறப்பாக கருதப்படுகிறது. அதன்படி ஆனி அமாவாசையை முன்னிட்டு நேற்று முதலே ஏராளமானோர் வாகனங்களில் ராமேசுவரம் வந்தனர். இன்று அதிகாலை அவர்கள் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு பிண்டம் வைத்து தர்ப்பணம் கொடுத்தனர். வட மாநிலத்தில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கடற்கரை மணலில் சிவலிங்கம் செய்து பின் அதற்கு பூஜை செய்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர்.

    பின்னர் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி-பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையை முன்னிட்டு கோவில், கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ராமேசுவரத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

    • பித்ரு வழிபாட்டில் முக்கியப் பங்கு வகிப்பது கருப்பு எள்ளும் புனிதம் நிறைந்த தர்ப்பைப் புல்லும்தான்.
    • அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு தவிர்ப்பது நல்லது.

    சூரியன் மிதுன ராசியில் பிரவேசிக்கும் மாதமே ஆனி மாதம் எனப்படுகிறது. நமது வேத சாஸ்திரங்கள் ஒரு வருடத்தில் மொத்தம் 96 தர்ப்பணங்கள் இருப்பதாக கூறுகின்றன. தமிழ் வருடப்பிறப்பு, சூரிய கிரகணம், அமாவாசை, மகாளய அமாவாசை உட்பட 96 தர்ப்பணங்களையும் ஒருவர் செய்வது சிறப்பான பலன்களைத் தரும் என்றும் அந்த சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன. அந்த வகையில் நாளை (புதன்கிழமை) ஆனி மாத அமாவாசை வருகிறது.

    ஆனால் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6.56 மணிக்கு அமாவாசை தொடங்குகிறது. எனவே அமாவாசை நேர இரவு வழிபாட்டை இன்றிரவு செய்யலாம்.

    நாளை அதிகாலையில் குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் மைத்ர முகூர்த்த நேரம் எனப்படும் அதிகாலை நேரத்தில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும். வீட்டின் பூஜையறையை சுத்தம் செய்து தீபம் ஏற்ற வேண்டும். பின்பு உங்கள் வீட்டிலிருக்கும் மறைந்த முன்னோர்களின் படத்திற்கு பூக்கள் சமர்ப்பித்து, தூபங்கள் கொளுத்தி வணங்க வேண்டும்.

    சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் போன்றவற்றை தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும்.



    தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்துவிட்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடித்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யலாம். அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு தவிர்ப்பது நல்லது. தர்ப்பையில் படும் தர்ப்பணங்களை ஸ்வதா தேவி எடுத்துச் செல்வதாகப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    பித்ரு வழிபாட்டில் முக்கியப் பங்கு வகிப்பது கருப்பு எள்ளும் புனிதம் நிறைந்த தர்ப்பைப் புல்லும்தான். இந்த இரண்டுமே மிக உயர்ந்த சக்தி கொண்டவை. எள் என்பது மகாவிஷ்ணுவின் வியர்வையிலிருந்து தோன்றியதாகும். தர்ப்பணம், சிராத்தம் செய்யும்போது கருப்பு எள்ளை பயன்படுத்தும்போது பித்ருக்கள் முழு திருப்தி அடைகிறார்கள் என்பது ஐதீகம்.

    தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் நோய்களால் பாதிக்கப்பட்டு உடல்நலம் தேறுபவர்கள் ஆனி அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிகாய் அல்லது எலுமிச்சை பழம் வாங்கி, அதன் மீது கற்பூரம் கொளுத்தி உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய பூசணிக்காயை உடைத்தும், எலுமிச்சம் பழத்தை நசுக்கியும் திருஷ்டி கழித்திட வேண்டும்.

    நாளைய அமாவாசைக்கு ஒரு சிறப்பு உண்டு. இந்த நாள் ரொம்ப விசேஷமான நாள். சாபங்களையும் பாபங்களையும் துடைத்துத் தூய்மையாக்கும் நாள்.

    சில குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக கொடிய வினைகள் சூழ்ந்து நிம்மதி குறைந்து போகும். எல்லா சுப காரியங்களிலும் தடைகள் ஏற்படும் குடும்பங்களில் விபத்துக்களும் அகால மரணங்களும்கூட நிகழும் இதுபோன்ற கொடிய பாவங்கள் தீர பிதுர் தேவதைகளை வணங்க வேண்டும்.

    நாளை காலதேவனின் 3-வது ராசியில், (சகோதர ராசி) அமாவாசை நிகழ்வதால், அவசியம் நீத்தார் வழிபாடு நடத்த வேண்டும். அதன் மூலமாக குடும்பத்தில். சகோதர ஒற்றுமை பெருகும். அதற்கு காரணம், இன்று செவ்வாய்க்குரிய மிருகசீரிஷம் நட்சத்திரம். அதில் சந்திரன் பிரவேசிக்கும்பொழுதுதான் அமாவாசை நிகழ்கிறது. செவ்வாய்க்கிழமை சகோதரகாரகன் அல்லவா. எனவே நாளை செய்யும் முன்னோர் வழிபாடு குடும்ப ஒற்றுமையை ஓங்க செய்யும்.

    வசதி வாய்ப்பு இருப்பவர்கள் ஒரு பெரியவரை அழைத்து வீட்டில் சாப்பாடு போட்டு உங்களால் இயன்ற தட்சணை தாருங்கள். முன்னோர்கள் ஆசி கட்டாயம் கிடைக்கும்.

    திருவாதிரை நட்சத்திரத்தில் வரும் ஆனி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் 12 ஆண்டுகள் தர்ப்பணம் கொடுத்த பலன் நமக்கு கிடைக்கும் என்று சொல்வார்கள். ஆனால் திருவாதிரை நட்சத்திர நேரம் நாளை (புதன் கிழமை) பகல் 11.39 மணிக்குத்தான் தொடங்குகிறது. அதிலிருந்து மாலை 5 மணி வரை நடத்தப்படும் முன்னோர் வழிபாடு சிறந்த பலன்களைத் தரும். மேலும் பித்ரு சாபம், பித்ரு தோஷம் உள்ளிட்ட அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். அதனால் இந்த நாளில் புனித நீராடுவது, மந்திர ஜபம் செய்வது, தானம் செய்வது உள்ளிட்ட அனைத்துமே பல மடங்கு அதிக பலனை தரக் கூடியதாகும்.

    சிவ பெருமானுக்குரிய திருவாதிரை நட்சத்திரத்துடன் இணைந்து அமாவாசை என்பதால் இந்த நேரத்தில் செய்யப்படும் வழிபாடு மற்றும் தானங்கள் இரண்டு மடங்கு பலனை தரக் கூடியதாகும்.

    நம் ஜாதகத்தில் கிரக கோளாறுகள், பித்ரு சாபங்கள் ஆகியவை நீங்க, சில குறிப்பிட்ட பொருட்களை தானம் வழங்குவது மிகவும் முக்கியமானதாகும். ஆஷாட அமாவாசை என்கிற இந்த ஆனி மாத அமாவாசையில் ஏழைகளுக்கு உணவு மற்றும் பணத்தை தானமாக வழங்குவது மிகவும் சிறப்பானதாகும்.

    மேலும் நாளை கோதுமை மற்றும் அரிசியை தானமாக வழங்குவது சூரியன் மற்றும் சந்திரனின் ஆசிகளை பெறுவதுடன், ஜாதகத்தில் இந்த இரண்டு கிரகங்களின் பலத்தையும் அதிகரிக்கச் செய்யும். ஆயுள், ஆரோக்கியம், அழகு, உயர் பதவி, உடல் வலிமை, தலைமை பதவி, அதிகாரம், செல்வம், மனநிறைவு ஆகியவற்றை தருவது இந்த இரண்டு கிரகங்களும் தான்.

    நாளை முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் சிக்கல்கள் விலகி சுபிட்சங்கள் பெருகும். திருமணம் காலதாமதமான நிலையில் இருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். வீண் பண விரயங்கள் ஏற்படுவது நீங்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும்.

    • ராமேசுவரத்திற்கு ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.
    • ராமநாதசுவாமி கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று நீராடினர்.

    ராமேசுவரம்:

    தென்னகத்து காசியாக போற்றப்படும் ராமேசுவரத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளூர், வெளியூர், வட மாநிலங்களில் இருந்து வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள். குறிப்பாக அமாவாசை நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும்.

    அந்த வகையில் ராமேசுவரத்திற்கு ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    இதனைதொடர்ந்து, ராமநாதசுவாமி கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று நீராடினர். இதன் பின்னர் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். அதிகளவில் பக்தர்கள் வருகையை முன்னிட்டு போலீஸ் துணை சூப்பிரண்டு உமாதேவி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மேலும் ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்ட நெரிசல் இன்றி தரிசனம் செய்திடும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்புடன் வரிசையாக சென்று தரிசனம் செய்தனர். மேலும் அவர்கள் தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று கடல் அழகை ரசித்தனர்.

    • 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி.
    • 21 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜை நடைபெற்றது.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    ஆனி மாத பிரதோஷம், அமாவாசயை முன்னிட்டு கடந்த 3-ந்தேதி முதல் நாளை (6-ந் தேதி) வரை 4 நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இன்று ஆனி மாத அமாவாசையொட்டி நள்ளிரவு முதல் சென்னை, கோவை, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.

    தொடர்ந்து கூட்டம் அதிகரித்ததையடுத்து காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறந்து விடப்பட்டு பக்தர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்னர். வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் ஆர்வத்துடன் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

    அமாவாசையை முன்னிட்டு சுந்தர மகா லிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவ லர் ராஜா என்ற பெரியசாமி செயல் அலுவலர் ராம கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து தாணிப்பாறைக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கூட்டத்திற்கு ஏற்றவாறு மருத்துவக் குழுவினர் இல்லாததால் உடல்நலம் பாதிக்கப்பட்டோர் அவதி அடைந்தனர்.

    • முத்தங்கி சேவையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீரராகவ பெருமாள் காட்சி அளித்தார்.
    • கோவிலில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஆனி அமாவாசையான இன்று சாமி தரிசனம் செய்ய திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நேற்று இரவே ஏராளமான பக்தர்கள் வந்து கோவிலை சுற்றி உள்ள பகுதியில் தங்கி இருந்தனர்.

    இன்று அதிகாலை கோவில்குளக்கரை மற்றும் காக்களூர் ஏரிக்கரையில் ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு வீரராகவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய திரண்டனர்.

    ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் கோவிலில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ஆனி அமாவாசையை முன்னிட்டு கண்ணாடி மண்டபத்தில் முத்தங்கி சேவையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீரராகவ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இதேபோல் முத்தங்கி சேவையில் வருகிற 7-ந்தேதி வரை மூலவர் வீரராகவ பெருமாள், கன கவல்லி தாயார் காட்சியளிப்பர்.

    இன்று மாலை 6 மணியளவில் உற்சவர் வீரராகவ பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் கோவில் குளத்தில் தெப்பத்தில் எழுந்தருள்கிறார். குளத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    இதேபோல் நாளையும் மற்றும் நாளை மறுநாளும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

    ×