என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமாவாசை வழிபாடு"

    • பித்ரு வழிபாட்டில் முக்கியப் பங்கு வகிப்பது கருப்பு எள்ளும் புனிதம் நிறைந்த தர்ப்பைப் புல்லும்தான்.
    • அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு தவிர்ப்பது நல்லது.

    சூரியன் மிதுன ராசியில் பிரவேசிக்கும் மாதமே ஆனி மாதம் எனப்படுகிறது. நமது வேத சாஸ்திரங்கள் ஒரு வருடத்தில் மொத்தம் 96 தர்ப்பணங்கள் இருப்பதாக கூறுகின்றன. தமிழ் வருடப்பிறப்பு, சூரிய கிரகணம், அமாவாசை, மகாளய அமாவாசை உட்பட 96 தர்ப்பணங்களையும் ஒருவர் செய்வது சிறப்பான பலன்களைத் தரும் என்றும் அந்த சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன. அந்த வகையில் நாளை (புதன்கிழமை) ஆனி மாத அமாவாசை வருகிறது.

    ஆனால் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6.56 மணிக்கு அமாவாசை தொடங்குகிறது. எனவே அமாவாசை நேர இரவு வழிபாட்டை இன்றிரவு செய்யலாம்.

    நாளை அதிகாலையில் குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் மைத்ர முகூர்த்த நேரம் எனப்படும் அதிகாலை நேரத்தில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும். வீட்டின் பூஜையறையை சுத்தம் செய்து தீபம் ஏற்ற வேண்டும். பின்பு உங்கள் வீட்டிலிருக்கும் மறைந்த முன்னோர்களின் படத்திற்கு பூக்கள் சமர்ப்பித்து, தூபங்கள் கொளுத்தி வணங்க வேண்டும்.

    சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் போன்றவற்றை தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும்.



    தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்துவிட்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடித்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யலாம். அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு தவிர்ப்பது நல்லது. தர்ப்பையில் படும் தர்ப்பணங்களை ஸ்வதா தேவி எடுத்துச் செல்வதாகப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    பித்ரு வழிபாட்டில் முக்கியப் பங்கு வகிப்பது கருப்பு எள்ளும் புனிதம் நிறைந்த தர்ப்பைப் புல்லும்தான். இந்த இரண்டுமே மிக உயர்ந்த சக்தி கொண்டவை. எள் என்பது மகாவிஷ்ணுவின் வியர்வையிலிருந்து தோன்றியதாகும். தர்ப்பணம், சிராத்தம் செய்யும்போது கருப்பு எள்ளை பயன்படுத்தும்போது பித்ருக்கள் முழு திருப்தி அடைகிறார்கள் என்பது ஐதீகம்.

    தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் நோய்களால் பாதிக்கப்பட்டு உடல்நலம் தேறுபவர்கள் ஆனி அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிகாய் அல்லது எலுமிச்சை பழம் வாங்கி, அதன் மீது கற்பூரம் கொளுத்தி உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய பூசணிக்காயை உடைத்தும், எலுமிச்சம் பழத்தை நசுக்கியும் திருஷ்டி கழித்திட வேண்டும்.

    நாளைய அமாவாசைக்கு ஒரு சிறப்பு உண்டு. இந்த நாள் ரொம்ப விசேஷமான நாள். சாபங்களையும் பாபங்களையும் துடைத்துத் தூய்மையாக்கும் நாள்.

    சில குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக கொடிய வினைகள் சூழ்ந்து நிம்மதி குறைந்து போகும். எல்லா சுப காரியங்களிலும் தடைகள் ஏற்படும் குடும்பங்களில் விபத்துக்களும் அகால மரணங்களும்கூட நிகழும் இதுபோன்ற கொடிய பாவங்கள் தீர பிதுர் தேவதைகளை வணங்க வேண்டும்.

    நாளை காலதேவனின் 3-வது ராசியில், (சகோதர ராசி) அமாவாசை நிகழ்வதால், அவசியம் நீத்தார் வழிபாடு நடத்த வேண்டும். அதன் மூலமாக குடும்பத்தில். சகோதர ஒற்றுமை பெருகும். அதற்கு காரணம், இன்று செவ்வாய்க்குரிய மிருகசீரிஷம் நட்சத்திரம். அதில் சந்திரன் பிரவேசிக்கும்பொழுதுதான் அமாவாசை நிகழ்கிறது. செவ்வாய்க்கிழமை சகோதரகாரகன் அல்லவா. எனவே நாளை செய்யும் முன்னோர் வழிபாடு குடும்ப ஒற்றுமையை ஓங்க செய்யும்.

    வசதி வாய்ப்பு இருப்பவர்கள் ஒரு பெரியவரை அழைத்து வீட்டில் சாப்பாடு போட்டு உங்களால் இயன்ற தட்சணை தாருங்கள். முன்னோர்கள் ஆசி கட்டாயம் கிடைக்கும்.

    திருவாதிரை நட்சத்திரத்தில் வரும் ஆனி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் 12 ஆண்டுகள் தர்ப்பணம் கொடுத்த பலன் நமக்கு கிடைக்கும் என்று சொல்வார்கள். ஆனால் திருவாதிரை நட்சத்திர நேரம் நாளை (புதன் கிழமை) பகல் 11.39 மணிக்குத்தான் தொடங்குகிறது. அதிலிருந்து மாலை 5 மணி வரை நடத்தப்படும் முன்னோர் வழிபாடு சிறந்த பலன்களைத் தரும். மேலும் பித்ரு சாபம், பித்ரு தோஷம் உள்ளிட்ட அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். அதனால் இந்த நாளில் புனித நீராடுவது, மந்திர ஜபம் செய்வது, தானம் செய்வது உள்ளிட்ட அனைத்துமே பல மடங்கு அதிக பலனை தரக் கூடியதாகும்.

    சிவ பெருமானுக்குரிய திருவாதிரை நட்சத்திரத்துடன் இணைந்து அமாவாசை என்பதால் இந்த நேரத்தில் செய்யப்படும் வழிபாடு மற்றும் தானங்கள் இரண்டு மடங்கு பலனை தரக் கூடியதாகும்.

    நம் ஜாதகத்தில் கிரக கோளாறுகள், பித்ரு சாபங்கள் ஆகியவை நீங்க, சில குறிப்பிட்ட பொருட்களை தானம் வழங்குவது மிகவும் முக்கியமானதாகும். ஆஷாட அமாவாசை என்கிற இந்த ஆனி மாத அமாவாசையில் ஏழைகளுக்கு உணவு மற்றும் பணத்தை தானமாக வழங்குவது மிகவும் சிறப்பானதாகும்.

    மேலும் நாளை கோதுமை மற்றும் அரிசியை தானமாக வழங்குவது சூரியன் மற்றும் சந்திரனின் ஆசிகளை பெறுவதுடன், ஜாதகத்தில் இந்த இரண்டு கிரகங்களின் பலத்தையும் அதிகரிக்கச் செய்யும். ஆயுள், ஆரோக்கியம், அழகு, உயர் பதவி, உடல் வலிமை, தலைமை பதவி, அதிகாரம், செல்வம், மனநிறைவு ஆகியவற்றை தருவது இந்த இரண்டு கிரகங்களும் தான்.

    நாளை முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் சிக்கல்கள் விலகி சுபிட்சங்கள் பெருகும். திருமணம் காலதாமதமான நிலையில் இருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். வீண் பண விரயங்கள் ஏற்படுவது நீங்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும்.

    • அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன், அரசாயி அம்மனுக்கு சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்க ளால் அபிஷேகம் நடைபெற்றது.
    • மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன்கள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன், அரசாயி அம்மனுக்கு சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்க ளால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன்கள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மன், அரசாயி அம்மன், மாசாணி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் நன்செய் இடையாறு மகா மாரியம்மன், பரமத்திவேலூர் மகா மாரியம்மன், செல்லாண்டி அம்மன், பேட்டை பகவதி அம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மகா மாரியம்மன், சேளூர் மகா மாரியம்மன், அய்யம்பாளையம் மாரியம்மன், பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், செல்லாண்டி யம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன், பகவதி அம்மன் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • எமனேஸ்வரர் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • பக்தர்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் நீடாமங்கலம் அருகே உள்ள நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரர் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதனையொட்டி எமனேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கோவில் குளத்தில் பக்தர்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    இதேபோல் திருவோணமங்கலம் ஞானபுரியில் உள்ள சங்கடஹரமங்கலமாருதி 33 அடி உயர ஆஞ்சநேயர் கோவில், நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவில், ஆலங்குடி அபயவரதராஜப்பெருமாள் கோவில், நீடாமங்கலம் சந்தானராமர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் அமாவாசையையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • மானாமதுரை-திருப்புவனம் பகுதியில் மகாளய அமாவாசை வழிபாடு நடந்தது.
    • முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பக்தர்கள் திரண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள குறிச்சியில் பிரசித்தி பெற்ற வழிவிடு பெரிய நாச்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் காசியில் இருந்து பிரதிஷ்டை செய்ய பட்ட சிவலிங்கம் சன்னதிஉள்ளது. இங்கு தை, ஆடி மற்றும் புரட்டாசி அமாவாசை தினத்தில் காசியில் நடைபெறுவது போல் முன்னோர்கள் தர்பண பூஜை நடைபெறும்.

    இன்று மகாளய அமாவாசை முன்னிட்டு காலை 6 மணிக்கு சிறப்பு யாகபூஜையுடன் தர்பண பூஜை தொடங்கியது. அதைதொடர்ந்து மதுரை, மானாமதுரை, பரமக்குடி, இளையான்குடி, சிவகங்கை ஆகிய ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் முன்னோர்கள் தர்பண பூஜை செய்து காசி சிவலிங்கத்திற்கு கங்கை தீர்த்ததால் அபிஷேகம் செய்து தொட்டு வழிபாடு செய்தனர். இதேபோல திருப்புவனம் வைகை ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்கள் திதி பூஜை செய்து புஸ்பவனேஸ்வரை வழிபாடு செய்தனர். குறிச்சி காசிசிவன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு அன்னதானமும் நடைபெற்றது.

    • தை அமாவாசை என்பது சூரியனின் முக்கிய நாள்.
    • நீத்தார் கடன் செய்வது என்பது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரின் கடமை.

    ஆடி அமாவாசையன்று மூதாதையர்களை வரவேற்கவேண்டும் எனவும், புரட்டாசி மகாளய அமாவாசையில் அவர்களை பூஜிக்கவேண்டும் என்றும், தை அமாவாசை அன்று மூதாதையர்களுக்கு விடை கொடுத்து அனுப்ப வேண்டும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    தை அமாவாசை என்பது சூரியனின் முக்கிய நாள். சூரியன் தை மாதத்தில் மகர ராசியில் சஞ்சரிக்கின்றார். சனியின் வீடான மகரத்தில் அவரது தந்தையான சூரியன் பிரவேசிக்கின்றார்.

    சூரியனை பிதுர்காரகன் என்றும் சந்திரனை மாதுர்காரகன் என்றும் முன்னோர்கள் கூறுகின்றனர். சூரியனும், சந்திரனும் சனியின் வீட்டில் சஞ்சரிப்பதால் தை அமாவாசை சிறப்புக்கு உரியதாகிறது. இதை புண்ணிய காலம் என்பார்கள்.


    உத்தராயண புண்ணிய காலமான தை அமாவாசை அன்று பித்ருக்கள் தங்களின் உலகத்துக்கு புறப்படுகிறார்கள். நம் வீடுகளுக்கு வந்து தங்கி இருந்து கிளம்பும் உறவினர்களை எப்படி நாம் நல்ல முறையில் வழி அனுப்பி வைப்போமோ, அப்படி பித்ருக்களுக்கு தை அமாவாசை நாளில் தர்ப்பணம் முதலிய வழிபாடுகளை செய்து அனுப்பி வைக்க வேண்டும்.

    அவ்வாறு செய்தால் அவர்களின் ஆசீர்வாதம் நமக்கு பூரணமாகக் கிடைக்கும். தை அமாவாசை அன்று அவர்கள் மீண்டும் தங்களின் உலகத்துக்குப் புறப்படுவதாகக் கூறப்படுகிறது.\


    நாம் இன்று அனுபவிக்கும் நற்பலன்களுக்கு காரணம் நம் முன்னோர்கள் சேர்த்து வைத்துள்ள புண்ணியம்தான். அதை நம் பிள்ளைகளும் பெற்று பயனடைய அதை தொடர வேண்டும்.

    பெற்றோர்கள் செய்யும் நற்செயல்கள் பிள்ளைகளுக்கு கட்டாயம் போய் சேரும். எனவே நீத்தார் கடன் செய்வது என்பது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை ஆகும்.

    • ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை நடைபெறும்.
    • இதுவரை 15 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் மகா கும்பமேளாவுக்கு வருகை தந்துள்ளனர்.

    உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் [திரிவேணி சங்கமம்] இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா பூரண கும்பமேளா.

    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 12 பூரண கும்பமேளாக்கள் நடந்து முடிந்ததைக் குறிக்கும் விதமாகக் கொண்டாடப்படுவது மகா கும்பமேளா. அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

    ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை நடைபெறும்.

    இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

    இதுவரை 15 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் மகா கும்பமேளாவுக்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புனித நீராடினார்.

    இந்நிலையில் இன்றுடன் முதல் அமிர்த ஸ்நானம் [புனித நீராடல்] முடிவடைந்து நாளை [ஜனவரி 29] மவுனி அமாவாசையையொட்டி 2 ஆம் கட்ட அமிர்த ஸ்நானம் தொடங்குகிறது.

    மவுனி அமாவாசை நாளில், மக்கள் புனித நதிகளில் நீராடி, தான தர்மங்கள் செய்வார்கள். இந்த நாளில் திரிகிரஹி யோகம் உருவாகிறது. முன்னோர்கள் பூமிக்கு வருவதாக நம்பப்படும் இந்த நாளின் முக்கியத்துத்தால் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    எனவே நாளை திரிவேணி சங்கமத்தில் நீராட மகா கும்பமேளாவுக்கு லட்சக்கணக்கானோர் இன்றுமுதலே படையெடுத்து வருகின்றனர். இதனால் பிரயாக்ராஜுக்கு  வரும் ரெயில்கள் நிரம்பி வழிகின்றன.

    மகா கும்பமேளாவிற்காக பிரயாக்ராஜ் நகருக்கு 48 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில் சேவை பிப்ரவரி மாத இறுதி வரை இருக்கும் என்று ரெயில்வே தெரிவித்துள்ளது.

    விமான கட்டணங்கள் 300% முதல் 600% வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக டெல்லி-பிரயாக்ராஜ் இடையே விமான டிக்கெட் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மகா கும்பமேளாவில் பிப்ரவரி 26 ஆம் தேதிக்குள் மொத்தமாக 40 கோடி பேர் வருகை தருவார்கள் என அரசு கணக்கிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    ×