என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஆனி மாதத்தில் பெரிய திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம்.
    • திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை மாலை நடைபெறுகிறது.

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெ ருமாள் ஜேஷ்டா பிஷேகம் கடந்த ஜூன் மாதம் 21-ந் தேதியும், ஸ்ரீரெங்க நாச்சியார் ஜேஷ்டாபிஷேகம் கடந்த 28-ந் தேதியும் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் ஆகியோருக்கு ஜேஷ்டாபிஷேகம் இன்று நடைபெற்றது. ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி கொள்ளிடம் ஆற்றில் இருந்து 12 வெள்ளிக்குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது.

    அங்கிருந்து காலை 7.15 மணியளவில் புனித நீர் யானை மீது வைத்தும், திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் 11 வெள்ளிக்குடங்களை தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க புனித நீர் வடக்குவாசல் வழியாக சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு காலை 7.30 மணிக்கு எடுத்து வரப்பட்டது.

    பின்னர் சக்கரத்தாழ்வார் சன்னதியில் மூலவர், உற்சவர் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. பின்னர் சிறு பழுதுகள் செப்பனிட்டு, தூய்மை செய்து மெருகூட்டப்பட்டன.

    பின்னர் மூலவர், உற்சவர் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு மங்களஹாரத்தி நடைபெற்றது. திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை மாலை நடைபெறுகிறது.

    இதேபோன்று ரெங்கநாத ர் கோவிலின் உபகோ விலான திருவானைக் காவல் காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலிலும் இன்று ஜேஷ்டாபிஷேகம் நடை பெற்றது.

    ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி கொள்ளிடம் ஆற்றில் இருந்து 12 வெள்ளிக் குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது.

    அங்கிருந்து காலை 8 மணியளவில் புனித நீர் யானை மீது வைத்தும், 11 வெள்ளிக்குடங்களை திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க புனித நீர் வடக்குவாசல், சித்திரை வீதிகள், கீழவாசல் வழியாக கோவிலுக்கு காலை 9.30 மணிக்கு எடுத்து வரப்பட்டது.

    பின்னர் சிங்கப்பெருமாள் சன்னதியில் மூலவர்கள் லட்சுமிநரசிம்மன், மகாலெஷ்மி தாயார், உற்சவர் லெஷ்மிநரசிம்மர் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. பின்னர் சிறு பழுதுகள் செப்பனிட்டு, தூய்மை செய்து மெருகூட்ட ப்பட்டன.

    பின்னர் மூலவர்கள் லட்சுமி நரசிம்மன், மகாலெஷ்மி தாயார், உற்சவர் லட்சுமி நரசிம்மர் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு மங்களஹாரத்தி நடைபெற்றது. பின்னர் திருப்பாவாடை எனப்படும் பெரிய தளிகை நடைபெற்றது. 

    • சி.பி.சி.ஐ.டி. இன்று காலை 8 மணி முதல் சோதனை நடத்தினர்.
    • வீட்டில் இருந்தவர்களிடமும் துருவித் துருவி விசாரணை.

    கரூர்:

    கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருப்பவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.

    இவர் மீது கரூர் மாவட்டம் மண்மங்கலம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷ் நிலமோசடி புகார் அளித்தார்.

    நாமக்கல் மற்றும் பரமத்தி வேலூர் எலக்ட்ரிகல் கடை வைத்து நடத்தி வரும் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தன்னை ஏமாற்றி, மிரட்டி ரூ. 100 கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்துக் விட்டதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்தார்.

    பின்னர் இதுகுறித்து கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். பின்னர் இந்த நில மோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது.

    அதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இதையடுத்து விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அவரை பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் வீடுகளில் சி.பி.சி.ஐ.டி. இன்று காலை 8 மணி முதல் சோதனை நடத்தினர்.

    கரூர் வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள எம் ஆர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர் செல்வராஜ், கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ரகு ஆகியோரது வீடுகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 மணி நேரத்துக்கு மேலாக சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் தாளப்பட்டி மணல்மேடு பகுதியில் உள்ல யுவராஜ் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. இதில் நிலமோசடி தொடர்பான ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா? என சல்லடை போட்டு தேடினர். வீட்டில் இருந்தவர்களிடமும் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.

    இந்த சோதனையில் திருச்சி நாமக்கல் சேலம் மாவட்டங்களை சேர்ந்த சி பி சி ஐ டி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இந்த சோதனை கரூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி வடிவேல் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்து கொண்டு அங்கிருந்து சென்றனர்.

    ஓசூர்:

    ஓசூர் அருகே உள்ள ஜூஜூவாடியில் கர்நாடக உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களுக்கு பர்மிட் போடும் உள்வழி ஆர்டிஓ சோதனை சாவடி உள்ளது.

    இந்த உள்வழி சோதனை சாவடியில் இன்று காலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி வடிவேல் தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் சோதனை சாவடியில் இருந்த கணக்கில் வராத 2 லட்சத்து 25 ஆயிரத்து 950 ரூபாய் ரொக்க பணம் சிக்கியது. அப்போது அங்கு மோட்டார் வாகன ஆய்வாளர் நிர்மல் குமார் என்பவர் பணியில் இருந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்து கொண்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

    பணம் பறிமுதல் செய்யப்பட்ட நேரத்தில் பணியில் இருந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    • கள்ளச்சாராய சம்பவங்களை திட்டம் போட்டு தி.மு.க. அரசு மறைத்து வருகிறது.
    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, கள்ளச்சாராயம் பெருகிவிட்டது.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * கட்சியில் உறுப்பினராக இல்லாத சசிகலா எப்படி அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க முடியும்.

    * சசிகலா 2021-ல் பதவியில் இல்லை என அறிவித்துள்ளார்.

    * கட்சி மீது உண்மையில் அக்கறை இருந்தால் ஜானகி பாணியில் சசிகலா ஒரு அறிக்கையை தற்போது வெளியிட வேண்டும்.

    * அ.தி.மு.க. எங்கள் தலைமையில் இருப்பதை ஏற்று சசிகலா அறிக்கை வெளியிட வேண்டும்.

    * ஓ.பி.எஸ்.சை அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்க்கும் எண்ணம் ஒரு போதும் இல்லை.

    *தமிழகத்தில் கள்ளச்சாராய சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

    * கள்ளச்சாராய சம்பவங்களை திட்டம் போட்டு தி.மு.க. அரசு மறைத்து வருகிறது.

    * தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, கள்ளச்சாராயம் பெருகிவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்.
    • தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் ஏமாற்றுவது யார்?

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

    அதையே நானும் சொல்கிறேன்.... விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்.

    சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்கள் யார்? என்பதை என்பதை மக்கள் புரிந்து கொள்ள சில உண்மைகள்:

    1. தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்த பிறகும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் சமூகநீதிக்கு துரோகம் இழைப்பது யார்?

    2. தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டின் மீது கத்தி தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இட ஒதுக்கீடே போனாலும் பரவாயில்லை என்று சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாடோம் என முரண்டு பிடிப்பது யார்?

    3. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது, அந்த இட ஒதுக்கீட்டை நீக்காமல் ஓய மாட்டோம் என்று கூட்டம் நடத்தி முழக்கமிட்டது எந்த சமூகம்? அந்தக் கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மருத்துவர் ஜெய ராஜ மூர்த்தி யாருடைய மைத்துனர்?

    4. தமிழ்நாட்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பிசி/எம்.பி.சி வகுப்பினருக்கான இடங்களை பட்டியலினத்தவருக்கு ஒதுக்கலாம், ஆனால், பட்டியலினத்தவருக்கும், பழங்குடியினருக்குமான இடங்களை அவர்களில் யாரும் இல்லாத சூழலிலும் யாருக்கும் ஒதுக்கக் கூடாது என்று ஆணையிட்டிருப்பது எந்த அரசு?

    5. தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் ஏமாற்றுவது யார்?

    6. 2019-ஆம் ஆண்டில் விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற்ற போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு வழங்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த பிறகு அதை நிறைவேற்றாமல் ஏமாற்றுவது யார்?

    7.தமிழ்நாட்டில் பட்டியலின மக்களின் மக்கள்தொகை கிட்டத்தட்ட 22% ஆக அதிகரித்துள்ள நிலையில், அதற்கு இணையாக அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்காதது எந்த அரசு?

    8. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே பேராசிரியர் தனலட்சுமிக்கு துறைத்தலைவர் பதவி மறுக்கப்பட்டதை கண்டுகொள்ளாமல் வேடிக்கைப் பார்ப்பது யார்?

    9. தமிழ்நாட்டில் பட்டியலின மக்களின் நலன்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை அவர்களின் நலன்களுக்காக பயன்படுத்தாமல் வேறு திட்டங்களுக்கு திருப்பி விட்டது எந்தக் கட்சி அரசு?

    10. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நச்சுசாராயம் குடித்து உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையினர் பட்டியலின மக்கள். நச்சுசாராய உயிரிழப்புகள் குறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்காக சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட முடியாது என்று கூறி குற்றவாளிகளை பாதுகாப்பது எந்தக் கட்சி அரசு?

    மேற்கண்ட அனைத்து வினாக்களுக்கும் விடை திமுக., மு.க.ஸ்டாலின் என்பது தான்.

    ஆகவே, விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களே... சிந்திப்பீர், செயல்படுவீர், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்.!

    • நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.
    • படகுகளில் கருப்பு கொடி ஏற்றி உள்ளனர்.

    ராமேசுவரம்:

    இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள பாம்பன் மீனவர்கள் 25 பேருடன் நான்கு படகுகளை விடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி பாம்பன் பேருந்து நிறுத்தம் அருகே மீனவர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் இருந்து மீன்பிடிக்க சென்ற 25 மீனவர்கள் மற்றும் நான்கு நாட்டுப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதனை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகள் படகுடன் 25 மீனவர்களை மீட்க கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக படகுகளில் கருப்பு கொடி ஏற்றி உள்ளனர்.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி பாம்பன் பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மீனவ சங்கத்தலைவர்கள் எஸ்.பி.ராயப்பன் தலைமை தாங்கி பேசினார். நிர்வாகிகள் சின்னத்தம்பி, கருணாமூர்த்தி, முருகானந்தம், மீனவ சங்க நிர்வாகிகள் அலெக்ஸ், எட்வின்.டேவிட், முடியப்பன், இன்னாசிமுத்து ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் பாம்பன், தெற்குவாடி, சின்ன பாலம், நம்புதாளை, நாலுமனை, தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.

    • 2014ல் பெற்றதை விட 2024ல் பா.ஜ.க. கூட்டணி குறைவாகவே வாக்குகளை பெற்றுள்ளது.
    • அண்ணாமலை போன்ற தலைவர்களால் தான் மத்தியில் பா.ஜ.க. பெரும்பான்மையை இழந்தது.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்ததற்கான காரணத்தை ஏற்கனவே தெரிவித்து விட்டோம்.

    * அ.தி.மு.க. போட்டியிட்டால் 3-வது, 4-வது இடத்திற்கு வந்திருக்கும் என அண்ணாமலை கூறியிருக்கிறார். மிகப்பெரிய அரசியல் ஞானிபோல் அண்ணாமலை பேசுகிறார்.

    * அண்ணாமலை வந்த பிறகு தான் தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்துள்ளது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்.

    * மக்களவை தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் 6000 வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்று 2-வது இடத்தில் அ.தி.மு.க. உள்ளது. கோவையில் 1.18 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலை தோல்வி அடைந்தார்.

    * 2014 தேர்தலில் 18.80 சதவீத வாக்குகளை பா.ஜ.க. கூட்டணி பெற்றது. 2014ல் பெற்றதை விட 2024ல் பா.ஜ.க. கூட்டணி குறைவாகவே வாக்குகளை பெற்றுள்ளது.

    * தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் ஈரோடு தொகுதி தேர்தலில் பரிசுகள், பணம் தந்துதான் வெற்றி பெற்றது. இதனை நன்கு அறிந்த அண்ணாமலை வேண்டுமென்றே திட்டமிட்டு அ.தி.மு.க.வை பற்றி விமர்சிப்பது கண்டித்தக்கது.

    * வாயில் வடை சுடுவது, பொய் செய்திகளை பரப்புவது தான் அண்ணாமலையின் வழக்கம்.

    * 100 அறிவிப்புகளை 500 நாட்களில் வெளியிடுவோம் என கோவையில் அண்ணாமலை வாக்குறுதி அளித்தார்.

    * பா.ஜ.க. ஆட்சி அமைந்துள்ள நிலையில் கோவைக்கு கொடுத்த வாக்குறுதியை அண்ணாமலை நிறைவேற்றுவாரா?

    * அண்ணாமலை போன்ற தலைவர்களால் தான் மத்தியில் பா.ஜ.க. பெரும்பான்மையை இழந்தது.

    * தமிழக பா.ஜ.க. தலைவரான பின்னர் என்ன திட்டத்தை மத்திய அரசிடம் கேட்டு தமிழகத்திற்காக பெற்றுத்தந்தார் அண்ணாமலை?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆலோசனை விதிகள் மற்றும் அட்டவணை வெளியிடவில்லை.
    • கால நீட்டிப்பு கேட்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    சென்னை:

    எம்.பி.பி.எஸ்., பல் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு மதிப்பெண் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவு வெளி வந்தும் இன்னும் நாடு முழுவதும் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட வில்லை.

    நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் மீது சி.பி.ஐ. நடவடிக்கை, சுப்ரீம் கோர்ட்டு வழக்கு என பல்வேறு பிரச்சினைகள் உருவாகி உள்ளன.

    நீட் தேர்வு குறித்து டெல்லியில் உள்ள மத்திய சுகாதார சேவை இயக்குனரகம் இன்னும் ஆலோசனை விதிகள் மற்றும் அட்டவணை வெளியிடவில்லை.

    அகில இந்திய அளவில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அட்டவணை வெளியிடுவதில் ஏற்படும் தாமதத்தால் தமிழகத்தில் மாணவர் சேர்க்கையை தொடங்க தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் எம்.பி.பி.எஸ். மட்டுமின்றி பல், இந்திய மருத்துவம், ஓமியோபதி, நர்சிங் உள்ளிட்ட மருத்துவ படிப்புகள், பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த படிப்புகளில் சேருவதற்கு இந்திய மருத்துவ கவுன்சில், ஏ.ஐ.சி.டி.இ. போன்ற மருத்துவ ஏஜென்சிகளிடம் இருந்து கால நீட்டிப்பு கேட்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    அகில இந்திய மருத்துவ இடங்களுக்கு கவுன்சிலிங் நடத்தும் மத்திய சுகாதார இயக்குனரகம் முதல் கட்ட கலந்தாய்வை முடித்ததும் தமிழகத்தில் முதல் சுற்று தொடங்கப்படும். அது 2-வது சுற்று தொடங்கும் போது நாங்கள் முதல் சுற்றை முடித்து விடுவோம். இதன் மூலம் மாணவர்கள் 2 சுற்றுகளிலும் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்று மருத்துவ கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நீட் தேர்வு முடிவு வெளி வந்து ஒரு மாதம் ஆகியும் இன்னும் கலந்தாய்வு நடைமுறையை பின்பற்ற முடியாமல் மாநில அரசு உள்ளது. இதனால் மருத்துவ படிப்பில் சேருவதற்கு தகுதியான மதிப்பெண்களை பெற்றுள்ள மாணவர்கள் விரக்தி அடைந்துள்ளனர். கலந்தாய்வு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் காத்து இருக்கின்றனர்.

    இதற்கிடையே பொறியியல் படிப்பில் சேருவதற்கான நடைமுறைகளை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தொடங்கியுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த மாதம் 13-ல் தொடங்கி 30 வரை நடந்தது. அதையடுத்து ரேண்டம் எண் வெளியிடப்பட்டது.

    வருகிற 10-ந்தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது. தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் போது கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்.

    • விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
    • கோவிலில் உள்ள மன்மதன் சிலை உடைக்கப்பட்டு இருந்த தைதை பார்த்து அதிர்ச்சி

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த மீன்சுருட்டி அருகே வீரபோகம் கிராமத்தில் ரதி மன்மதன் கோவில் உள்ளது. அதே கிராமத்தை சேர்ந்த சந்தனவேல் (வயது 40) என்பவர் இந்த கோவிலில் பூஜை செய்து வந்தார்.

    நேற்று வழக்கம் போல காலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவிலில் உள்ள மன்மதன் சிலை உடைக்கப்பட்டு இருந்த தைதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விசுவ இந்து பரிசத் மாவட்ட தலைவர் முத்துவேல் தலைமையில் அந்த அமைபினர் திரண்ட னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    கோவில் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக பாண்டுரங்கன் என்பவர் மீன்சுருட்டி போலீசில் புகார் செய்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

    கோவில் பூசாரி சந்தனவேலே கோவில் சிலையை உடைத்தது தெரியவந்தது. சந்தினவேல் பூஜை செய்யும் போல அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கிண்டல் செய்தனராம். இதனால் அந்த இளைஞர்களை தண்டிக்குமாறு சந்தினவேல் சாமியிடம் வேண்டுதல் வைத்துள்ளார்.

    தொடர்ந்து இளைஞர்கள் கிண்டல் செய்ததால் அவர்களது தொல்லை தாங்க முடியாமல். வெறுப்புடன் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்தார். பின்னர் மது போதையில் சாமி சிலையை அடித்து உடைத்துள்ளார்.

    மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து பூசாரி சந்தினவேலுவை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நான் வைத்த வேண்டுதலை சாமி நிறைவேற்றாததால் சிலையை உடைத்தேன் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

    • 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி.
    • 21 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜை நடைபெற்றது.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    ஆனி மாத பிரதோஷம், அமாவாசயை முன்னிட்டு கடந்த 3-ந்தேதி முதல் நாளை (6-ந் தேதி) வரை 4 நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இன்று ஆனி மாத அமாவாசையொட்டி நள்ளிரவு முதல் சென்னை, கோவை, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.

    தொடர்ந்து கூட்டம் அதிகரித்ததையடுத்து காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறந்து விடப்பட்டு பக்தர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்னர். வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் ஆர்வத்துடன் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

    அமாவாசையை முன்னிட்டு சுந்தர மகா லிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவ லர் ராஜா என்ற பெரியசாமி செயல் அலுவலர் ராம கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து தாணிப்பாறைக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கூட்டத்திற்கு ஏற்றவாறு மருத்துவக் குழுவினர் இல்லாததால் உடல்நலம் பாதிக்கப்பட்டோர் அவதி அடைந்தனர்.

    • மாரிசெல்வத்தின் வீட்டிற்கு சென்ற சிலர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.
    • போலீசார் மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் களஞ்சியம். இவரது மனைவி கணேஷ்வரி. இவர்களுக்கு 5 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். கடைசி மகன் மாரிசெல்வம் என்ற அசால்ட்(வயது 24). மீனவர்.

    இந்நிலையில், கடந்த 21-ந் தேதி மாரிசெல்வம் மாயமானார். இதுகுறித்து அவரது சகோதரி மாரீஸ்வரி தாளமுத்துநகர் போலீசில் புகார் செய்தார். மேலும் தனது மகனுக்கு 3 சிறுவர்களால் ஆபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று அவரது தாய் கணேஷ்வரி கலெக்டர் அலுவலத்திலும் புகார் தெரிவித்தார். இதன் அடிப்படையில் தாளமுத்துநகர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    சந்தேகத்தின் பேரில் மேட்டுப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    கடந்த 20-ந் தேதி மாரிசெல்வத்திற்கும், மேட்டுப்பட்டியை சேர்ந்த 4 சிறுவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவர் மாரிசெல்வத்தின் செல்போனை உடைத்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மாரிசெல்வம் அதில் ஒருவரது செல்போனை பறித்து அதனை கடலில் வீசி உள்ளார்.

    இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அன்று இரவு மாரிசெல்வத்தின் வீட்டிற்கு சென்ற சிலர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.

    மாரிசெல்வம் கடந்த 21-ந் தேதி திரேஸ்புரம் பகுதியில் வந்தபோது 3 சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேர் கும்பல் அவரை சுற்றி வளைத்தது. அவர்களிடம் இருந்து தப்பி ஓடி உளளார். எனினும் அந்த கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி செங்கற்களால் தாக்கி உள்ளனர்.

    இதில் மயக்கம் அடைந்த அவரை அந்த கும்பல் கை, கால்களை கட்டி அங்கேயே குழி தோண்டி உயிருடன் புதைத்துள்ளனர். இந்நிலையில் மாரிசெல்வம் புதைக்கப்பட்ட இடத்தை அந்த சிறுவன் அடையாளம் காட்டினான்.

    கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் புதைக்கப்பட்ட இடத்தில் மாரிசெல்வத்தின் உடல் இன்று தோண்டி எடுக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக போலீசார் மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.

    • உடற்கல்வி ஆசிரியர்களை குறைக்கும் நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.
    • மாணவர்களின் கவனச் சிதறலுக்கு ஆளாகும்

    சென்னை:

    அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை குறைத்து பணி நிரவல் கலந்தாய்வை பள்ளிக் கல்வி துறை நடத்துகிறது.

    பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்பு அவசியமாக உள்ளது. 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் உடற்கல்வி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

    விளையாட்டுத்திறனை ஊக்குவிக்கும் பயிற்சி களமாக பள்ளி மைதானங்கள் விளங்கி வருகின்றன.

    இந்த நிலையில் அரசு பள்ளிகளில் உடற்கல்விக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில் உடற்கல்வி ஆசிரியர்களை குறைக்கும் நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.

    250 முதல் 400 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியாற்றி வந்த நிலையில் தற்போது 700 மாணவர்களாக அரசு உயர்த்தி உள்ளது.

    1997-ம் ஆண்டு அரசாணையின்படி உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 250-ஐ தாண்டும்போது ஒரு உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப்படுவார்.

    ஒவ்வொரு கூடுதல் 300 மாணவர்களுக்கும் ஒரு உடற்கல்வி ஆசிரியர். அதிகபட்சமாக 3 பேர் வரை நியமிக்கப்படுவார்கள். மேல் நிலைப்பள்ளிகளில் 400 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி இயக்குனர் நியமிக்கப்படுகிறார்.

    அரசு பள்ளிகளில் போதிய அளவு உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் காலியாக இருந்த நிலையில் அந்த இடங்களுக்கு புதிய உத்தரவின் படி கூடுதலாக உள்ள உடற்கல்வி ஆசிரியர்களை இடமாற்றம செய்ய கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    தற்போது 700 மற்றும் அதற்கு குறைவான மாணவர்கள் கொண்ட உயர்நிலை மற்றும் மேல் நிலை பள்ளிகளுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

    700-க்கும் அதிகமாக மாணவர்கள் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் 2 உடற்கல்வி ஆசிரியர்கள், 701 முதல் 1500 வரை உள்ள மேல் நிலைப் பள்ளிகளில் ஒரு உடற்கல்வி ஆசிரியர், ஒரு உடற்கல்வி இயக்குனர் நிலை-2 என இரண்டு பேருக்கு அனுமதி.

    1500-க்கும் மேல் உள்ள மேல் நிலைப் பள்ளிகளில் 2 உடற் கல்வி ஆசிரியர்கள் ஒரு உடற்கல்வி இயக்குனர் நிலை-2 அல்லது நிலை-1 என மொத்தம் 3 பேர் அனுமதிக்கப்படுவர் என்று உத்தரவிட்டுள்ளது.

    தற்போது மாணவர்கள் இடையே போதைப்பொருள், புகையிலை பயன்பாடு இருக்கின்ற நிலையில் உடற்கல்வி ஆசிரியர்களை குறைப்பதன் மூலம் வகுப்புகள் குறையக் கூடும். இது மாணவர்களின் கவனச் சிதறலுக்கு ஆளாகும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    ×