என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நிலம் சம்பந்தப்பட்ட எந்த ஆவணங்களையும் ஹரிபிரசாத்திற்கு, தரணிதரன் கொடுக்கவில்லை.
    • வழக்கில் தொடர்புடைய செந்தில், ஜான்சன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    கோவை:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள ஆச்சியூரைச் சேர்ந்தவர் மகன் தரணிதரன்(வயது31). இவர்களுக்கு சொந்தமான நிலம் பழனி-தாராபுரம் ரோட்டில் உள்ளது.

    இதில் 35 ஏக்கர் நிலத்தை திருப்பூர் மாவட்டம் தாசம்பட்டியை சேர்ந்த ஹரிபிரசாத்(34) என்பவர் வாங்க முடிவு செய்தார். இதற்காக 2.5 கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதையடுத்து முதலில் 8.25 லட்சம் ரூபாயை ஹரிபிரசாத், தரணிதரனிடம் கொடுத்தார்.

    ஆனால் அதன் பிறகு மீதி பணத்தை கொடுக்கவில்லை. மேலும் இது தொடர்பாக பேச வேண்டும் என ஹரிபிரசாத், தரணிதரனை கோவைக்கு அழைத்துள்ளார்.

    அதன்படி தரணிதரன் கோவை வந்து, ரெயில்நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் வைத்து அவர்கள் சந்தித்தார்.

    அப்போது, இந்த இடம் வாங்கும் விஷயத்தில் உங்கள் உறவினர்கள் மூலம் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஹரிபிரசாத் தெரிவித்துள்ளார்.

    அப்போது அவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது. ஹரிபிரசாத் அங்கிருந்து சென்றுவிட்டார். அறையில் தரணிதரன் மட்டும் இருந்தார். அப்போது அங்கு வந்த போலீசார், தரணிதரன் தங்கியிருந்த அறையில் கஞ்சா வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்த வந்ததாக கூறி சோதனை நடத்தியு ள்ளனர்.

    ஆனால் ஒன்றும் சிக்கவில்லை. இதனால் தன்னை மாட்டிவிட ஏதோ சதி நடப்பதாக நினைத்த தரணிதரன் அங்கிருந்து சென்று விட்டார்.

    அதன்பிறகு நிலம் சம்பந்தப்பட்ட எந்த ஆவணங்களையும் ஹரிபிரசாத்திற்கு, தரணிதரன் கொடுக்கவில்லை. இந்த நிலையில், கடந்த மாதம் 16-ந் தேதி நிலம் தொடர்பாக பேச வேண்டும் என கூறி மீண்டும் தரணிதரனை கோவைக்கு அழைத்தனர். அவர் காரில் கோவைக்கு வந்து விட்டு, அவர்களை தொடர்பு கொண்டார்.

    அப்போது வ.உ.சி.மைதானத்திற்கு வருமாறு ஹரிபிரசாத்தின் நண்பர்கள் அழைத்தனர். அதன்படி தரணிதரனும் அங்கு வந்தார்.

    அப்போது அங்கு ஏற்கனவே காத்திருந்த ஹரிபிரசாத்தின் கூட்டாளிகளான பாபு, ஜான்சன் ஆகியோர் காரில் ஏறினர். பின்னர் தரணிதரனை காருடன் கடத்தி சென்றனர்.

    அவரிடம் இருந்த பணம் ரூ.30 ஆயிரம், ஏ.டி.எம். கார்டு, அவர் வைத்திருந்த ஆவணங்கள் ஆகியவற்றை பறித்து கொண்டு, அவரை பாதி வழியில் இறக்கி விட்டு காருடன் தப்பியோடி விட்டனர்.

    இதுகுறித்து தரணிதரன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஹரிபிரசாத் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தரணிதரனை கடத்தி பணம், ஆவணங்களை பறித்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ஹரிபிரசாத், கார் டிரைவரான சங்கனூரை சேர்ந்த பிரவீன்குமார்(37), சரவணம்பட்டியை சேர்ந்த பைனான்ஸ் ஊழியரான பாபு(38) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய செந்தில், ஜான்சன் ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிபிரசாத் தாராபுரம் முன்னாள் பா.ஜ.க மண்டல துணைத்தலைவராகவும், பாபு ரத்தினபுரி முன்னாள் பா.ஜ.க நெசவாளர் அணி மண்டல தலைவராகவும் இருந்துள்ளனர். இதேபோல் பிரவீன்குமார் அனுமன் சேனா அமைப்பின் கோவை வடக்கு மண்டல செயலாளராகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • புதிய சட்டங்கள் நடைமுறைக்கு கடினமானவை.
    • 3 சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்.

    சென்னை:

    இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறைச்சட்டம், இந்திய சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷிய அதினியம் என்ற பெயரில் மூன்று புதிய சட்டங்கள் மத்திய அரசு நிறைவேற்றி, கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

    இந்த சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் வக்கீல்கள் போராட்டம் நடந்து வருகிறது. சென்னை ஐகோர்ட்டிலும் வக்கீல்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் தி.மு.க., வக்கீல்கள் இன்று காலையில் இந்த 3 புதிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

    தி.மு.க., ராஜ்ய சபா எம்.பி.யும் மூத்த வக்கீலுமான என்.ஆர்.இளங்கோ தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தி.மு.க. வக்கீல்கள் கலந்துக் கொண்டனர். அப்போது, இந்த 3 சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என்று வக்கீல்கள் கோஷம் போட்டனர்.

    அப்போது என்.ஆர்.இளங்கோ கூறுகையில், "பாராளுமன்றத்தில் எவ்வித விவாதங்களும் இல்லாமல், இந்த 3 சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

    இந்த சட்டங்கள் நடைமுறைக்கு கடினமானவை. நீதி பரிபாலனத்திற்கு இந்த சட்டம் மிகவும் எதிரான வையாக உள்ளது. எனவே, இந்த சட்டங்களை அரசு திரும்ப பெறவேண்டும். இதை வலியுறுத்தி நாளை (சனிக்கிழமை) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே தி.மு.க. சட்டத்துறை சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்'' என்று கூறினார்.

    இந்த நிலையில், இந்த போராட்டத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் இன்று காலையில் நடந்தது. இந்த கூட்டத்தில் போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

    பின்னர், இந்த 3 சட்டங்களையும் திரும்ப பெறக்கோரி வருகிற 8-ந்தேதி (திங்கட்கிழமை) ஒரு நாள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

    பின்னர், இதுகுறித்து ஜி.மோகன கிருஷ்ணன் கூறும்போது, `3 சட்டங்களும் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது. அதனால், இந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, ஒரு நாள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்'' என்றார்.

    • விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
    • சந்தேகத்திற்கு இடமான பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்தனர்.

    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த விமானங்களில் வரும் பயணிகள் மறைத்து கடத்தி வரப்பட தங்கம் பிடிபட்டது. இதுபோன்ற செய்திகள் நாளும் பத்திரிகைகளில் தவறாமல் இடம்பெறுகிறது.

    கட்டிங் பிளேயர் கம்பிகளுக்குள் மறைத்து, தலை முடிக்குள் மறைத்து வைத்து, பேஸ்ட் வடிவில், பேரிச்சம்பழக் கொட்டைகளை நீக்கிவிட்டு அதற்குப்பதில் தங்கத்தை வைத்து, ஊட்டச்சத்து பவுடருக்குள் தூளாக்கி, பிரவுன் டேப்புக்குள் பவுடர்களாக தூவி என நூதன முறையில் கடத்தல்காரர்கள் தங்கம் கடத்தி வருவது சுவாரசியம் தரக்கூடிய செய்தியாக மாறி உள்ளது.

    இப்படி தங்கம் கடத்தி வருபவர்களை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பது தொடர்கதையாகவே உள்ளது.

    இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து நேற்று ஸ்கூட் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமான பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் தனது காலில் அணிந்திருந்த மூட்டு வலி பட்டையில் ரூ. 1.16 கோடி மதிப்பிலான1605 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது கண்டறியப்பட்டது.

    இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அடிவாரம் பகுதியிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தேவஸ்தானம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.
    • நகராட்சியின் 33 கவுன்சிலர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் பக்தர்களுக்கு இடையூறாக பல்வேறு இடங்களில் கடைகள் உள்ளதாகவும் இதனால் பெரும் பாதிப்பு ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்து வந்தன.

    இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிரி வீதி பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு அதில் தடுப்புகள் ஊன்றப்பட்டு வாகனங்கள் வர முடியாத அளவுக்கு தடை ஏற்படுத்தப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து சன்னதி வீதி, அடிவாரம் பகுதியிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தேவஸ்தானம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.

    சாலையோர கடைகள் மற்றும் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் அகற்றப்பட்டதால் தங்களுக்கு வருவாய் குறைந்து விட்டது. கிரி வீதி வழியாக வரும் வாகனங்கள் தடுக்கப்பட்டதால் அதன் முலம் கிடைக்கும் வருவாயும் நின்று விட்டது என நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசாரமாக தெரிவித்தனர்.

    தேவஸ்தான நிர்வாகம் நேரடியாக நகராட்சி உரிமைகளில் தலையிடுவதால் அதனை கண்டித்து போராட்டம் நடத்த வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இன்று நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் தேவஸ்தான அலுவலகத்தின் முன் போராட்டம் நடைபெற்றது. துணைத் தலைவர் கந்தசாமி, கவுன்சிலர் முருகானந்தம் முன்னிலை வகித்தனர்.

    மேலும் நகராட்சியின் 33 கவுன்சிலர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கடைகள் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரம் பற்றி கவலைப்படாமல் தேவதஸ்தானம் செயல்படுவதாகவும் இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் கோவில் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • இனிமேல் கட்சியில் வேலை செய்தால்தான் பதவி.
    • நமக்கு செல்வாக்கு இல்லாத காரணத்தினால் நம்மை மிரட்டுகிறார்கள்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வபெருந்தகை கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் 40 சதவீதம் வாக்கு வங்கி நாம் வைத்திருந்தோம். தற்போது எந்த அளவிற்கு உள்ளது என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். குறை நம்மிடம் தான் உள்ளது. நாம் மற்றவர்களை குறை சொல்லக்கூடாது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வீட்டில் உள்ளவர்களை காங்கிரஸ் கட்சியில் சேருங்கள்.

    நம்மிடம் கட்டமைப்பு உள்ளது. இனிமேல் கட்சியில் வேலை செய்தால்தான் பதவி, பதவி வாங்கி வைத்துக்கொண்டு சும்மா உட்கார்ந்து இருப்பவர்களின் பதவி பறிக்கப்படும். நாம் கட்சி பணி செய்யவில்லை என்றால் பெருந்தலைவர்கள், தியாகிகளின் ஆன்மாக்கள் நம்மை மன்னிக்காது.

    ராகுல்காந்தி என் ரத்தம் இந்த மண்ணில் உள்ளது என்று கூறியுள்ளார். அது என்னவென்று உங்கள் அனைவருக்கும் தெரியும். அவரைப்போல் அனைவரும் பாடுபட வேண்டும். நம்மிடம் செல்வாக்கு இல்லாத காரணத்தினால் தான் அண்ணாமலை இறுமாப்புடன் நம் கட்சியை பற்றி பேசி வருகிறார்.

    ஒற்றுமை இருந்தால், செல்வாக்கு இருந்தால் நம் மீது கை வைக்கும் பொழுது கிராமம், நகரம் என அனைத்து இடங்களிலும் பஸ், வேன், லாரி ஏன் விமானத்தை கூட மறித்தால் நம் பலம் அவர்களுக்கு புரியும்.

    நமக்கு செல்வாக்கு இல்லாத காரணத்தினால் நம்மை மிரட்டுகிறார்கள். சமயங்களில் கூட்டணி கட்சிகளுடன் சிறு மனக்கசப்புகள் ஏற்படுகிறது.

    2026 சட்டமன்ற தேர்தலுக்கு சரியாக 23 மாதங்கள் இருந்தாலும் 18 மாதங்களுக்குப் பிறகு தேர்தல் காய்ச்சல் வந்துவிடும். ஆகவே நமக்கு இன்னும் 18 மாதங்கள் தான் உள்ளது. அதற்குள் நாம் கட்சியை வளர்த்தாக வேண்டும்.

    பெரம்பலூர் சிறிய மாவட்டம் என்பதால் முதலில் இங்கு கட்சியை பலப்படுத்த வேண்டும். அண்ணாமலை, இந்திரா காந்தியை பற்றியும், நேருவை பற்றியும் அவதூறாக பேசி வருகிறார். ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் நாட்டை விட்டு ஓட பார்த்தார்களாம். இவரா பிடித்து அழைத்து வந்தார்.

    என்ன அப்பட்டமான பொய் சொல்கிறார், 2026 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு என்று ஓர் இடத்தை நாம் உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அனுமக்காவிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டேன். அவர் பணம் தர மறுத்ததால் எனக்கு கோபம் அதிகமானது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பலப்பநத்தம் பகுதியை சேர்ந்தவர் கோபால்.

    இவரது மனைவி அனுமக்கா (வயது 82). கோபால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மூதாட்டி அணுமக்கா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் மூதாட்டி கடந்த 27-ந் தேதி முகம் மற்றும் கழுத்து பகுதியில் தலையணை அழுத்தி வைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவரது காது மற்றும் மூக்கு பகுதியில் வெட்டு காயங்கள் இருந்தன.

    இது குறித்து தகவல் அறிந்த ஆலங்காயம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கொலை குற்றவாளிகளை பிடிக்க வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் அனுமக்காவை கொலை செய்த, அவரது மகன் வழி பேரன் சிவராஜ் மகன் சிவகுமார் (வயது 31), அதற்கு உடனடியாக இருந்த மருமகள் மலர் (40) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட சிவக்குமார் போலீசாரிடம் கூறிய வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. எனது பாட்டி அனுமக்காவிடம் அடிக்கடி சென்று அடிக்கடி பணம் வாங்கி வருவேன். அதன்படி கடந்த 27-ந் தேதி நள்ளிரவு 12 மணி அளவில் போதையில் பாட்டி வீட்டுக்கு சென்றேன்.

    அனுமக்காவிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டேன். அவர் பணம் தர மறுத்ததால் எனக்கு கோபம் அதிகமானது.

    அப்போது அவர் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு, தலையணை வைத்து அமுக்கி பாட்டியை கொலை செய்தேன்.

    பின்னர் அவர் கழுத்தில் அணிந்த 1½ நகை மற்றும் கால் கொலுசு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டேன்.

    பாட்டியிடம் எடுத்த நகைகளை எனது தாய் மலரிடம் கொடுத்து, நடந்த விவரத்தை கூறினேன். எனது தாய் என்னை அங்கிருந்து அனுப்பி வைத்தார். பின்னர் நாங்கள் ஒன்றும் தெரியாது போல் ஊரிலேயே இருந்தோம். போலீசார் எங்களை கண்டுபிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மழை பெய்தால் நீர்வரத்து மேலும் அதிகரித்து 2 அணைகளும் விரைவில் நிரம்பும் தருவாயில் உள்ளது.
    • 2 அணைகளும் நிரம்பினால் தான் உபரி நீர் தமிழகத்துக்கு அதிகளவில் திறக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குறிப்பாக கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

    கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்துழ 686 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையின் நீர்மட்டம் 100.30 அடியை எட்டி இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 546 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதே போல் மைசூரு மாவட்டம் கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும். இன்று அணையின் நீர்மட்டம் 81.12 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 321 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. 2 அணைகளுக்கும் 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இனிவரும் நாட்களில் மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே மழை பெய்தால் நீர்வரத்து மேலும் அதிகரித்து 2 அணைகளும் விரைவில் நிரம்பும் தருவாயில் உள்ளது. இந்த 2 அணைகளும் நிரம்பினால் தான் உபரி நீர் தமிழகத்துக்கு அதிகளவில் திறக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. எனவே அடுத்த வாரம் இறுதியில் காவிரியில் நீர்வரத்து அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 1223 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று வினாடிக்கு 1281கன அடியாக அதிகரித்து காணப்பட்டது. அணையின் நீர்மட்டம் 39.70 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 11.93 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • 2 பேரும் ஸ்பிக் நகரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
    • விசாரணை என்ற பெயரில் ரூ.30 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மத்திய பாகம் காவல் சரக பகுதியில் குட்கா புகையிலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரிடம் இருந்து பணபேரம் நடைபெற்றதாக புகார் எழுந்தது.

    இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு தென் மண்டல ஐ.ஜி. உத்தரவிட்டார். அதன் பேரில் நடந்த விசாரணையின் அடிப்படையில், மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி ஐ.ஜி. கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

    தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வந்த சிவக்குமார் மற்றும் கம்ப்யூட்டர் பிரிவில் பணியாற்றி வந்த சந்தனகுமார் ஆகிய 2 பேரும் ஸ்பிக் நகரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

    அப்போது அங்கு பணி செய்து வந்த பாரதி நகரை சேர்ந்த சேகர்(வயது40) என்பவரை முறைகேடாக மதுபானம் விற்பனை செய்ததாக கூறி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் ரூ.30 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பான குற்றச்சாட்டை தொடர்ந்து சிவக்குமார் மற்றும் சந்தன குமார் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கும் மாற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சுரவணன் உத்தரவிட்டுள்ளார்.

    • 18 கிலோ மெக்னீசியம் சிலிக்கேட் சிந்தடிக் பறிமுதல் செய்யப்பட்டது.
    • மறு உத்தரவு வரும் வரை கடையை திறக்க அனுமதி கிடையாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் சில ஓட்டல்கள் மற்றும் சாலை ஓரங்களில் செயல்படும் பானிபூரி உள்ளிட்ட கடைகளில் பழைய கெட்டுப்போன உணவுகளை பயன்படுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

    இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி உத்தரவின்பேரில் தூத்துக்குடியில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது தூத்துக்குடியில் உள்ள ஒரு உணவகத்தில் பழைய உணவு எண்ணெய் தூய்மைப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது.

    எனவே 18 கிலோ மெக்னீசியம் சிலிக்கேட் சிந்தடிக் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதை பயன்படுத்தி தூய்மைப்படுத்தப்பட்ட 45 லிட்டர் பழைய உணவு எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் முன்தயாரிப்பு செய்து 12 மணி நேரத்திற்கும் மேலாக பயன்படுத்தாமல் இருந்த 56 கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தியபோது சுகாதாரத்திற்கு கேடு விளைக்கும் வகையில் பழைய பொருட்களை பயன்படுத்திய உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் மறு உத்தரவு வரும் வரை கடையை திறக்க அனுமதி கிடையாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் உள்ள ஜவுளி கடை வளாகம் மற்றும் சாலை ஓரங்களில் உள்ள பானி பூரி கடை உள்ளிட்ட கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது பானிபூரி கடையில் செயற்கை நிறமிகள் ஏதும் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டறியப்படவில்லை. இருப்பினும் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பானிபூரி மசாலா, உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    ஆய்வறிக்கை வந்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் தெரிவித்தார்.

    • முத்தங்கி சேவையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீரராகவ பெருமாள் காட்சி அளித்தார்.
    • கோவிலில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஆனி அமாவாசையான இன்று சாமி தரிசனம் செய்ய திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நேற்று இரவே ஏராளமான பக்தர்கள் வந்து கோவிலை சுற்றி உள்ள பகுதியில் தங்கி இருந்தனர்.

    இன்று அதிகாலை கோவில்குளக்கரை மற்றும் காக்களூர் ஏரிக்கரையில் ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு வீரராகவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய திரண்டனர்.

    ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் கோவிலில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ஆனி அமாவாசையை முன்னிட்டு கண்ணாடி மண்டபத்தில் முத்தங்கி சேவையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீரராகவ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இதேபோல் முத்தங்கி சேவையில் வருகிற 7-ந்தேதி வரை மூலவர் வீரராகவ பெருமாள், கன கவல்லி தாயார் காட்சியளிப்பர்.

    இன்று மாலை 6 மணியளவில் உற்சவர் வீரராகவ பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் கோவில் குளத்தில் தெப்பத்தில் எழுந்தருள்கிறார். குளத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    இதேபோல் நாளையும் மற்றும் நாளை மறுநாளும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

    • தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணி மாற்றம் செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து குருவையாவை கைது செய்தனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்திநகர் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அவர் கணவரை இழந்த நிலையில் தன் குழந்தையுடன் காந்திநகர் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சங்கரன்கோவிலில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த குருவையா என்பவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் அவர் பழங்கோட்டை பகுதிக்கு மாற்றப்பட்டார். அங்கும் பக்கத்து வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த சம்பவத்தில் அங்கிருந்து தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணி மாற்றம் செய்யப்பட்டார்.

    இவர் ஏற்கனவே சங்கரன்கோவிலில் பணிபுரிந்து வந்ததபோது காந்திநகர் பகுதியை சேர்ந்த இளம்பெண் அறிமுகம் என்பதால் அவருக்கு தன்னுடைய செல்போன் மூலம் ஆபாச 'மெசேஜ்' அனுப்பியதாக கூறப்படுகிறது.

    மேலும் இதுகுறித்து போலீசில் கூறினால் கொன்று விடுவேன் என்று அந்த பெண்ணை மிரட்டி உள்ளார். இது குறித்து அந்த இளம்பெண் சங்கரன்கோவில் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குருவையாவை கைது செய்தனர்.

    இதேபோல் காந்திநகர் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (30), ராஜா (35), சண்முக பிரபு (36) ஆகியோர் அந்த பெண் வேலைக்கு செல்லும் போது அடிக்கடி கிண்டல் செய்து வந்ததாகவும், மேலும் அவரிடம் ஆபாச வீடியோ வெளியிட்டு விடுவோம் என கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அந்த பெண் அளித்த புகாரின் பேரில் முத்துக்குமார், ராஜா, சண்முகபிரபு ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

    • எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே, அறிவிப்பை வெளியிட வேண்டும்.
    • அனுமதியில்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது.

    எனவே இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றது. எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே, அறிவிப்பை வெளியிட வேண்டும்.

    ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே அனுமதியில்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×