என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தாம்பரம் ரெயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு.
- தொலைபேசி உரையாடல் குறித்து விசாரிக்க வேண்டும் என அரசு தரப்பு வாதம்.
பாராளுமன்ற தேர்தலின்போது தாம்பரம் ரெயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் வரும் 11ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவித்துள்ளது.
தேர்தலின்போது தாம்பரம் ரெயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில், ஏற்கனவே கோவையில் விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் விசாரணை தேவையற்றது என எஸ்.ஆர்.சேகர் தரப்பில் வாதாடப்பட்டது.
விசாரணைக்கு ஆஜராவதில் என்ன தயக்கம் ? ஏற்கனவே அமைப்புச் செயலாளர் ஆஜராகி உள்ளார் என அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
தொலைபேசி உரையாடல் குறித்து விசாரிக்க வேண்டும் என அரசு தரப்பு கூறப்பட்டுள்ளது.
- வரும் 10ம் தேதி முதல் 19ம் தேதி வரை தொகுதி வாரியாக ஈபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார்.
- ஒவ்வொரு நாளும் 2 முதல் 3 தொகுதி நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார்.
பாராளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து வரும் 10ம் தேதி முதல் ஈபிஸ் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.
அதன்படி, வரும் 10ம் தேதி முதல் 19ம் தேதி வரை தொகுதி வாரியாக ஈபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார்.
10ம் தேதி காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், 11ம் தேதி சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.
ஒவ்வொரு நாளும் 2 முதல் 3 தொகுதி நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார்.
ஆலோசனை கூட்டத்தில் வேட்பாளர், மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பொறுப்பாளர்களிடம் தோல்விக்கான காரணங்களை கேட்டறியவுள்ளார்.
- புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
- 2 நாட்களாக சாப்பிடாமல் தொடர்ந்து குடித்துக் கொண்டிருந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டது.
தவறான தகவல்களையும், தேவையற்ற கண்டனங்களையும் தெரிவிப்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
திருவெண்ணெய்நல்லூரில் கள்ளச்சாராயம் அருந்தி ஒருவர் உயிரிழந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சம்பவம் குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளாமல் அவசரகதியில் வழக்கம்போல ஓர் அறிக்கையை ஈபிஎஸ் வெளியிட்டுள்ளார்.
உயிரிழந்த ஜெயராமன் அதிகளவு மதுப்பழக்கம் உள்ளவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தை கள்ளச்சாராய மரணம் என்று கூறி இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார் ஈபிஎஸ்.
ஜெயராமன் உடல்நலம் சரியில்லாமல் 2 நாட்களாக சாப்பிடாமல் தொடர்ந்து குடித்துக் கொண்டிருந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டது.
தவறான தகவல்களையும், தேவையற்ற கண்டனங்களையும் தெரிவிப்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பாமாயில், பருப்பு போன்ற பொருட்களை வழங்காமல் குடும்ப அட்டைதாரர்களை அலைக்கழிப்பது கடும் கண்டனத்திற்குரியது.
- அத்தியாவசியப் பொருட்களை அதிக விலை கொடுத்து வெளிச்சந்தையில் வாங்கும் சூழலுக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
நியாயவிலை கடைகளில் கடந்த மே மற்றும் ஜூன் ஆகிய இரு மாதங்களில் வழங்கப்பட வேண்டிய அத்தியாவசியப் பொருட்கள் முறையாக விநியோகம் செய்யப்படாத நிலையில், நடப்பு மாதத்திலும் பாமாயில், பருப்பு போன்ற பொருட்களை வழங்காமல் குடும்ப அட்டைதாரர்களை அலைக்கழிப்பது கடும் கண்டனத்திற்குரியது.
நியாய விலைக்கடை களில் வழங்கப்படும் சர்க்கரையின் அளவு அதிகரிக்கப்படும், உளுத்தம்பருப்பு மீண்டும் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில், அத்தியாவசியப் பொருட்களை அதிக விலை கொடுத்து வெளிச்சந்தையில் வாங்கும் சூழலுக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, வழக்கம் போல இம்முறையும் ஏதாவது காரணத்தைக் கூறி காலம் தாழ்த்தாமல், தமிழகத்தில் இயங்கிவரும் நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த 2 நாட்களாக சிகிச்சை எதுவும் இன்றி காட்டுமாரி அவதி அடைந்துள்ளார்.
- சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
மதுரை:
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தென் மாவட்டத்திலேயே மிகப்பெரிய அரசு மருத்துவமனையாகும். இங்கு தினமும் 3000-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், 500-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகின்றனர். தற்போது இந்த அரசு ஆஸ்பத்திரியில் உயர்தர சிகிச்சைக்காக பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் கட்டிடங்கள் மற்றும் படுக்கை வசதிகளும் அதிகரிக்கப்பட்ட நிலையில் தலைக் காயம், விபத்து சிகிச்சை, உயிர் காக்கும் பிரிவு என்று அண்ணா பஸ் நிலைய பகுதியில் பிரமாண்ட கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது. இங்கும் தினசரி 1000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் மதுரை மாவட்டம் விளாச்சேரி பகுதியை சேர்ந்த சமையல் தொழிலாளியான காட்டுமாரி (வயது 58) என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது வாகன விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதில் அவரது மார்பு, கால் மற்றும் மணிக்கட்டுகளில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரது மகன் வெளியூரில் இருப்பதால் காட்டுமாரி தனியாக ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார். அவரை அருகில் இருந்து கவனிக்க யாரும் இல்லாத நிலையில் வலதுகாலில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அவரால் நடக்க முடியவில்லை. இதனால் ஆஸ்பத்திரியின் வராண்டா பகுதியில் காட்டுமாரி சிறுநீர் மற்றும் இயற்கை உபாதைகளை கழித்ததாக தெரிகிறது. இதனால் ஆஸ்பத்திரி பணியாளர்கள் காட்டுமாரியை அடிக்கடி வந்து எச்சரித்ததுடன், தரக்குறைவான வார்த்தைகளாலும் திட்டி உள்ளனர்.
இந்த நிலையில் காட்டுமாரி தொடர்ந்து ஆஸ்பத்திரி வளாகத்தில் சிறுநீர், இயற்கை உபாதைகளை கழித்ததால் ஆத்திரமடைந்த ஆஸ்பத்திரி பணியாளர்கள் அவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கிருந்து வெளியேற்றி அருகே உள்ள பஸ் நிலைய பிளாட் பாரத்தில் கொண்டு விட்டதாக தெரிகிறது.
இதனால் நடக்க வழி இல்லாமல் சாலை ஓரத்திலேயே காட்டுமாரி முடங்கினார். இந்த நிலையில் சாலை ஓரத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவு பணியாளர்கள் காட்டுமாரியின் முனகல் சத்தம் கேட்டு அவரிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது ஆஸ்பத்திரி ஊழியர்கள் இங்கு கொண்டு வந்து போட்டுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சாலையோர பணியாளர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் நோயாளி குறித்து தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அங்கு வந்த தொண்டு நிறுவனத்தினர் சாலையோரத்தில் அனாதையாக கிடந்த காட்டுமாரியை மீட்டு மீண்டும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அரசு ஆஸ்பத்திரி ஊழியர்களின் மனிதாபிமானமற்ற இந்த செயல் காரணமாக கடந்த 2 நாட்களாக சிகிச்சை எதுவும் இன்றி காட்டுமாரி அவதி அடைந்துள்ளார். இதனால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் தர்மராஜ் கூறியதாவது:-
முதியவர் காட்டுமாரி தொடர்பான மதுரை மருத்துவமனை ஆவணங்களில் கடந்த மாதம் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்றும், கடந்த 2 நாட்களாக ஆஸ்பத்திரியில் இருந்து தலைமறைவாகி விட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் மீண்டும் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
நோயாளியை வெளியேற்றியதாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது கூறப்பட்டுள்ள புகார் தொடர்பாக மருத்துவமனை மருத்துவ அதிகாரியிடம் விசாரணை அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அதில் தவறுகள் நடந்திருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் ரோட்டில் மீட்கப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஏழை மக்களின் எண்ணங்கள் அறிந்த எந்த ஒரு அரசும் ரேஷன் தட்டுப்பாடு நிகழ விட்டிருக்காது.
- அனைத்து ரேஷன் பொருட்களும் மக்களை சென்றடைவதை உறுதிசெய்ய விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.
ரேஷனில் 3 மாதங்களாக துவரம் பருப்பு, பாமாயில் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் ரேஷன் பொருள் தட்டுப்பாடு குறித்து சுட்டிக்காட்டியும் இதுவரை நடவடிக்கை எடுக்காத திமுக அரசை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முழுவதும் மூன்று மாதமாக துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
சென்ற மாதமே இதுகுறித்து நான் சுட்டிக்காட்டி இருந்த நிலையில், இதுவரை ரேஷன் பொருட்கள் விநியோகத்தை சீர்செய்யத் தவறிய நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
ரேஷன் பொருட்களை முறையாக கொள்முதல் செய்து விநியோகிப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது? ஏழை மக்களின் எண்ணங்கள் அறிந்த எந்த ஒரு அரசும் ரேஷன் தட்டுப்பாடு நிகழ விட்டிருக்காது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசு, மக்கள் மீது துளியும் அக்கறையற்ற அரசு என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான ரேஷன் பொருட்களின் விநியோகத்தில் கவனம் செலுத்தி, அனைத்து ரேஷன் பொருட்களும் மக்களை சென்றடைவதை உறுதிசெய்ய விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தொகுதிக்கு உட்பட்ட அவரது துறை சம்பந்தமான கோரிக்கைகளை முன் வைத்தார்.
- சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என பாராளுமன்று உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை வைத்தார்.
கன்னியாகுமரி:
மத்திய நெடுஞ்சாலை துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தொகுதிக்கு உட்பட்ட அவரது துறை சம்பந்தமான கோரிக்கைகளை முன் வைத்தார்.
மேலும் களியக்காவிளை, கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை மற்றும் மார்த்தாண்டம், பர்வதிபுரம் மேம்பாலங்கள் பழுதடைந்து இருப்பதை விளக்கி உடனடியாக அவற்றை சீர் செய்ய ரூபாய் 21 கோடி சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என பாராளுமன்று உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை வைத்தார்.
- விபத்தில் காயமடைந்து மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் ரூபன் என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.
- விபத்தில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டம் திருராமேஸ்வரம் கிராமம், கோட்டகச்சேரி பகுதியிலுள்ள கோவில் திருவிழாவிற்கு விளம்பரப் பதாகைகள் வைப்பதற்காக கடந்த 29.6.2024 அன்று இரவு சுமார் 11.30 மணியளவில் அக்கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் மதன்ராஜ் (வயது 15) என்பவர் விளம்பரப் பதாகைகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும்போது எதிர்பாராதவிதமாக அருகிலுள்ள மின்மாற்றியில் இரும்பு கம்பியுடன் கூடிய விளம்பர பதாகையில் உராய்வு ஏற்பட்டதன் காரணமாக மின்சாரம் தாக்கியதில் பலத்த காயம் அடைந்து மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் ரூபன் (19) என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ரூ.2 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவனின் பெற்றோருக்கு ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36°-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° -28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35°-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்று முதல் 9-ந்தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
8 மற்றும் 9-ந்தேதிகளில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய மற்றும் வடமேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- இலங்கையில் உள்ள ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- 15 நாள் காவல் முடிவடைந்த நிலையில் இன்று 22 மீனவர்களும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த 22-ந்தேதி 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். 23-ந்தேதி அதிகாலை கச்சத்தீவு, நெடுந்தீவுக்குக்கு இடையே மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் ரெஸ்மன், ஜஸ்டின், கெரின் ஆகியோருக்கு சொந்தமான மூன்று விசைப்படகுகளை சுற்றி வளைத்தனர். படகில் இருந்த சகாயம் (61), சந்தியா கிரிம்ஷன் (24), ஜெகன் (29), கருப்பையா (47), சுரேஷ் பாபு (40), காளிதாஸ் (30), ரூபின் (38), கண்ணன் (30), நாகராஜ் (34), ராஜேந்திரன் (39), புரூஸ்லீன், காளீஸ்வரன், ராஜ், முருகானந்தம், முத்துக்குமார், சீமோன் உள்ளிட்ட 22 மீனவர்களை கைது செய்தனர்.
இலங்கையில் உள்ள ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். 15 நாள் காவல் முடிவடைந்த நிலையில் இன்று 22 மீனவர்களும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது ராமேசுவரம் மீனவர்களின் காவலை வருகிற 18-ந்தேதி வரை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது. விடுதலையாவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராமேசுவரம் மீனவர்களின் காவலை இரண்டாவது முறையாக இலங்கை கோர்ட்டு நீட்டித்து உத்தரவிட்டது மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழகத்திற்கான பங்கை தராமல், பாசனத்திற்கான தண்ணீரை பயன்படுத்திக்கொள்ள கர்நாடம் முயல்வது கண்டிக்கத்தக்கது.
- கடந்த 10 நாட்களில் மட்டும் காவிரி அணைகளுக்கு 22 டி.எம்.சி தண்ணீர் வந்திருக்கிறது.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கபினி அணை அடுத்த இரு நாட்களில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழகத்திற்கான பங்கை தராமல், பாசனத்திற்கான தண்ணீரை பயன்படுத்திக்கொள்ள கர்நாடம் முயல்வது கண்டிக்கத்தக்கது ஆகும்.
கர்நாடகத்தின் குடகு மலை மற்றும் கேரள மாநிலத்தின் வயநாடு பகுதிகளில் உள்ள காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதன் காரணமாக கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது.
கடந்த 10 நாட்களில் மட்டும் காவிரி அணைகளுக்கு 22 டி.எம்.சி தண்ணீர் வந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. மொத்தம் 19.52 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட கபினி அணை நிரம்புவதற்கு இன்னும் ஒரு டி.எம்.சி தண்ணீர் மட்டுமே தேவை.
இதே அளவில் நீர்வரத்து தொடர்ந்தால், அடுத்த இரு நாட்களில் கபினி அணை நிரம்பி விடும் வாய்ப்பு உள்ளது. இம்மாத இறுதிக்குள் நான்கு அணைகளும் நிரம்பும் வாய்ப்பு இருப்பதாக கர்நாடக நீர்வளத்துறை பொறியாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.
கர்நாடகத்தில் காவிரி அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தான் நியாயம் ஆகும். ஆனால், தமிழகத்திற்கு தண்ணீர் விடுவது எந்த அறிவிப்பையும் வெளியிடாத கர்நாடக அரசு, வரும் 8-ந் தேதி முதல் கர்நாடக பாசனத்திற்காக பாசனக் கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறக்க விருப்பதாக அறிவித்திருக்கிறது. இது உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். இதன் மூலம் காவிரி சிக்கலில் கர்நாடகம் வழக்கம் போல், அதன் உண்மை முகத்தைக் காட்டியுள்ளது.
காவிரி நீர்ப்பகிர்வு வழக்கில் 2018-ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி நடப்பாண்டின் ஜூன் மாதத்தில் 10 டி.எம்.சி, ஜூலை மாதத்தில் 34 டி.எம்.சி என இம்மாத இறுதிக்குள்ளாக 44 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும். ஆனால், இதுவரை ஒரு டி.எம்.சி தண்ணீரைக் கூட தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் வழங்கவில்லை. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்தவே முடியாது.
தமிழ்நாட்டில் குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாததை காரணம் காட்டி, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட வில்லை. அதனால், காவிரி பாசன மாவட்டங்களில் மொத்தம் 5 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலாக குறுவை சாகுபடி செய்வ தற்கு பதிலாக ஒரு லட்சம் ஏக்கருக்கும் குறைவான பரப்பில் தான் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது.
குறுவை சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், சம்பா சாகுபடிக்கான ஆயத்த பணிகளை தொடங்கவும் மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
ஆனால், காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கான தமது கடமையை கர்நாடக அரசு உணர மறுப்பதும், காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்காமல் இருக்கும் தண்ணீர் முழுவதையும் தாங்களே பயன்படுத்திக் கொள்ளத் துடிப்பதும் நியாயமற்றதாகும். கர்நாடகத்தின் இந்த செயல்களை கண்டு கொள்ளாமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும், கர்நாடகத்திடமிருந்து காவிரியில் தண்ணீர் பெற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அமைதி காப்பதும் காவிரி பாசன மாவட்ட உழவர்களூக்கு இழைக்கப்படும் துரோகம். இதை அனுமதிக்க முடியாது.
காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை தாரை வார்த்து விட்டு, உறங்கும் போக்கை கைவிட்டு, நமது உரிமைகளை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தை அணுகி, தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி வலியுறுத்த வேண்டும். அதன் மூலம் காவிரி டெல்டா உழவர்களை அரசு காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க. பல தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளது.
- புதுப்புது காரணங்களை கண்டுபிடித்து சொல்லும் எடப்பாடி தமிழக மக்களுக்கு ஒரு பொறுப்பான எதிர்க்கட்சி தலைவராக இல்லை.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியில் பா.ம.க. வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:-
* பீகார், கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்போது தமிழக அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாதது ஏன்?
* பீகாரில் அனுமதி உள்ளபோது தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனுமதியில்லையா?
* தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தி.மு.க. அரசு தயாராக இல்லை.
* சிலரின் சுயலாபம் மற்றும் அதிகாரத்திற்காக அ.தி.மு.க.வை அழித்து கொண்டிருக்கிறார்கள்.
* கரையான் போல் சிலர் அதிமுகவை அரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
* எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. 2019 முதல் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
* நம்பிக்கை துரோகி என்ற பட்டம் எடப்பாடி பழனிசாமிக்குதான் சரியாக பொருந்தும்.
* ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என பேச சொன்னார் எடப்பாடி பழனிசாமி.
* ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க. பல தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளது.
* தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டிருப்பதால் 2026 சட்டமன்ற தேர்தலையும் எடப்பாடி பழனிசாமி புறக்கணிப்பாரா?
* 2026 சட்டமன்ற தேர்தலின் போது தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீராகி விடுமா?
* சட்டம் ஒழுங்கு கெட்டுப்போனதால் விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிக்கிறேன் என கூறிய எடப்பாடி இன்று வேறு காரணம் கூறுகிறார்.
* புதுப்புது காரணங்களை கண்டுபிடித்து சொல்லும் எடப்பாடி தமிழக மக்களுக்கு ஒரு பொறுப்பான எதிர்க்கட்சி தலைவராக இல்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, மக்களவை தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் 6000 வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்று 2-வது இடத்தில் அ.தி.மு.க. உள்ளது. கோவையில் 1.18 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலை தோல்வி அடைந்தார். மிகப்பெரிய அரசியல் ஞானிபோல் அண்ணாமலை பேசுகிறார். அண்ணாமலை வந்த பிறகு தான் தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்துள்ளது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார் என அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.






