என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கைதானவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம்:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகன் வினோத் கண்ணன் (வயது 29). இவரை கடந்த 8-ந்தேதி ஒரு மர்ம கும்பல் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரையாம்புதூரில் வைத்து ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டுதப்பி சென்றது.

    முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு கொலையாளிகள் ஆக்ரோஷமாக வெட்டி சிதைத்தனர். கொலையாளிகளை பிடிக்க பல்லடம் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாத்துரை தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த கொலை குறித்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

    கொலையான வினோத் கண்ணன் மீது மானாமதுரை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை, அடிதடி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு மானாமதுரையைச் சேர்ந்த மைனர் மணி என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் சட்டக்கல்லூரி மாணவரான அக்னி ராஜ் 9-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

    இந்தநிலையில் அக்னிராஜ் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் மைனர் மணி ஆதரவாளர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து அக்னி ராஜின் நண்பர்கள் பழிக்கு பழி வாங்க துடித்தனர். அதற்கான நாளையும் எதிர்நோக்கி காத்திருந்தனர்.

    இதற்காகவே அக்னி ராஜ் என்ற வாட்ஸ்-அப் குழு ஏற்படுத்திக் கொண்டு மைனர் மணியின் நண்பர்களான பரமசிவம், ஆகாஷ், அழகு பாண்டி ஆகிய 3 பேரை ஏற்கனவே கொலை செய்தனர். அக்னி ராஜ் கொலையில் சம்பந்தப்பட்ட வினோத் கண்ணன் தப்பிவிட்டார். அவரை தீர்த்துக் கட்ட அக்னிராஜ் நண்பர்கள் நேரம் பார்த்து காத்திருந்தனர்.

    பல்லடம் கரையாம்புதூரில் உள்ள நண்பரை பார்க்க வந்தபோது, அவர் வருவதை தெரிந்து கொண்ட அக்னிராஜ் கும்பல் துரத்தி வந்து வினோத் கண்ணனை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். பழிக்குப்பழியாக நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் கோவை, ஈரோடு, திருப்பூர், சிவகங்கை ஆகிய பகுதிகளில் முகாமிட்டு குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். கொலையாளிகள் 20க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை வாங்கி இன்ஸ்டாகிராமில் குழு உருவாக்கி தகவல்களை பரிமாறிக் கொள்வதும், தொலைபேசி மூலம் இவர்கள் எந்தவித தகவல்களையும் பரிமாறி கொள்வதில்லை என்பதும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    இந்தநிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நிதீஷ் குமார், காளீஸ்வரன் மற்றும் வினோத்கண்ணன் குறித்து தகவல் கொடுத்த சாமிநாதன், பிரபுதேவா ஆகிய 4 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் சிலரை வலைவீசி தேடி வருகின்றனர். கைதானவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் இந்த கொலை சம்பவம் குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    • உயிருக்கு போராடிய 35 பேரை காப்பாற்றி உள்ளார்.
    • மா.சுப்பிரமணியன் பாராட்டி கேடயம் வழங்கினார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூரரை சேர்ந்த நர்சு சபீனா என்பவர் வயநாடு சூரல்மலை பகுதியில் கரைபுரண்டோடும் ஆற்றை கடந்து ஜிப்லைன் மூலம் அக்கரைக்கு சென்று அங்கு படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய 35 பேரை காப்பாற்றி உள்ளார். அவர் ஜிப்லைனில் ஆற்றை கடந்து செல்லும் காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாக பரவின.

    இந்தநிலையில் அரசு நிகழ்ச்சிக்காக ஊட்டிக்கு வந்திருந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வீரப்பெண்மணி சபீனாவின் செயலை பாராட்டி பொன்னாடை போர்த்தி கேடயம் வழங்கினார். மேலும் அரசு சார்பில் சபீனாவின் செயலை அங்கீகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்து உள்ளார்.

    வயநாடு நிலச்சரிவில் மருத்துவப்பணிகளில் ஈடுபட்டது குறித்து பெண் நர்சு சபீனா கூறியதாவது:-

    வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட்ட போது மீட்புக்குழுவினர் ஆண் செவிலியர்களைதான் முதலில் தேடி வந்தனர். ஆனால் யாரும் கிடைக்காத சூழ்நிலையில் நானே முன்வந்து மீட்புக்குழுவினருடன் புறப்பட்டு சென்றேன்.

    மேலும் சூரல்மலை பகுதியில் படுகாயம் அடைந்தவர்களை காப்பாற்ற ஜிப்லைன் மூலம் அக்கரைக்கு செல்ல தயாராக இருப்பதாக கூறினேன். இதற்கு அக்கரையில் உள்ளவர்களும் ஒப்புக்கொள்ளவில்லை.

    பெண் செவிலியரை ஏன் அனுப்புகிறீர்கள் எனவும் தயக்கம் தெரிவித்தனர். ஆனால் அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

    ஆற்றின் இக்கரையில் இருந்து பார்க்கும்போதே அக்கரையில் படுகாயம் அடைந்து தவிப்பவர்களின் நிலை எவ்வளவு பரிதாபமாக உள்ளது என்பது தெரிந்தது. எனவே எவ்வளவு விரைவாக அங்கு செல்ல முடியுமோ, அவ்வளவு விரைவாக சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில்தான் எங்கள் கவனம் இருந்தது.

    மற்றபடி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளமோ, அங்கிருந்த சூழ்நிலையோ எனக்கு அச்சமாக தெரியவில்லை. மேலும் ஜிப்லைனில் செல்லும்போது காலுக்கு அடியில் ஓடிய வெள்ளம் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் கையில் வைத்திருக்கும் மருந்துப்பெட்டி கீழே விழுந்து விடுமோ என்று மட்டும்தான் எனக்கு பயமாக இருந்தது.

    முதலில் ஜிப்லைன் மூலமாக நானும், பிறகு மருத்துவ ஊழியர்கள் உட்பட 3 பேரும் சென்றோம். அங்கிருந்தவர்களில் பலருக்கு காயத்தின் வலிகூட தெரியாத அளவுக்கு அதிர்ச்சி இருந்தது. படுகாயம் அடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்தது மகிழ்ச்சி ஏற்படுத்தியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களும் அரசுக்கு பொதுவானவை.
    • சொந்த மாவட்டம் என்பதால் கூடுதல் அக்கறையுடன் பணி செய்வார்கள்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பத்தாயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களில் 72.32 சதவீத பணியிடங்கள் வடமாவட்டங்களில் இருப்பதாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களும் அரசுக்கு பொதுவானவை. அனைத்து மாவட்டங்களையும் அரசு சமமாக நடத்த வேண்டும். எனவே வடமாவட்டங்களை கல்வியில் பின்தங்கிய மண்டலமாக அறிவித்து, அந்த மண்டலத்திற்கான ஆசிரியர்கள் நியமனங்களில் மாவட்ட ஒதுக்கீட்டு முறையை செயல்படுத்த வேண்டும். இந்த முறையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே பள்ளி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என்பதால், அவர்கள் வேறு மாவட்டங்களுக்கு மாறுதல் பெற்றுச் செல்ல மாட்டார்கள். சொந்த மாவட்டம் என்பதால் கூடுதல் அக்கறையுடன் பணி செய்வார்கள். எனவே, வடமாவட்ட ஆசிரியர் நியமனத்தில் மாவட்ட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தனித்தனி மேடைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
    • சென்னை முழுவதும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக அரசு சார்பில் வருகிற 15-ந்தேதி 78-வது சுதந்திர தினவிழா கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    விழாவையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தினவிழா பேருரை ஆற்றுகிறார்.

    வீர-தீர செயல் புரிந்த வர்களுக்கு விருது மற்றும் பதக்கங்களையும் வழங்கு கிறார். இந்த விழாவுக்கு வருகை தரும், முக்கிய பிரமுகர்கள் அமருவதற்காக புனித ஜார்ஜ் கோட்டைக்கு எதிர்புறம் உள்ள பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    சுதந்திர தினவிழாவில் பங்கேற்கும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எல்.எல்.ஏ.க் கள், உயர் அதிகாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்வையிடுவதற்காக தனித்தனி மேடைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    இரவு-பகலாக இந்த பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தலைமை செயலக பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.

    இதையொட்டி சுதந்திர தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியும் கோட்டை கொத்தளத்தில் நடத்தி பார்க்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் சுதந்திர தினத்தன்று முதலமைச்சரை மோட்டார் சைக்கிள் புடைசூழ காவல்துறை வாகன அணிவகுப்புடன் அழைத்து வருவது போன்ற ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

    வெள்ளை நிற போலீஸ் திறந்த ஜீப்பில் ஒருவரை நிறுத்தி அணிவகுப்புகளை பார்வையிடுவது போன்றும், குதிரைப்படை, கமாண்டோ படை, ஆயுதப்படை உள்ளிட்ட 7 படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை பெற்றுக்கொண்டு தேசிய கொடியை ஏற்றுவது போன்றும் ஒத்திகை நடத்தி பார்க்கப்பட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி கோட்டை கொத்தளத்தில் விருதுகள், பதக்கங்கள் வழங்குவது போன்றும் ஒத்திகை நடத்திப் பார்க்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சென்னை மாநகரம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

    • போலி ஆவணங்களை ஆள் கடத்தல் கும்பல் தயாரித்திருப்பதும் அம்பலம்.
    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை.

    சென்னை:

    இலங்கையில் இருந்து கடந்த 2021-ம் ஆண்டு 13 இலங்கை தமிழர்கள் சட்ட விரோதமாக கர்நாடக மாநிலம் மங்களூரில் புகுந்தது தெரிய வந்தது.

    இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழக பகுதிக்கு வந்து பின்னர் பஸ், ரெயில், கார், மோட்டார் சைக்கிள் மூலமாக இவர்கள் மங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டதை அம்மாநில போலீசார் கண்டு பிடித்தனர்.

    இதை தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விடுதலைப்புலிகள் அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்த சீனிஆபுல்கான் என்பவர் உள்பட சிலர் அனுப்பி வைத்திருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து மங்களூர் போலீசார் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். இவர்களில் 3 பேர் தலை மறைவானார்கள்.

    மங்களூர் போலீசார் நடத்தி வந்த இந்த வழக்கின் விசாரணை என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது.

    இதைத்தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சட்ட விரோதமாக இலங்கை தமிழர்களை கடத்திச் சென்றதாக குற்றம்சாட்டி புதிய வழக்கை பதிவு செய்திருந்தார்கள்.

    இதுபற்றி அதிகாரிகள் நடத்திய தொடர் விசாரணையில் ஆள் கடத்தலின் பின்னணி பற்றி பரபரப்பான தகவல்கள் கிடைத்தன. இலங்கையில் இருந்து 38 தமிழர்களை கனடாவில் குடியேற வைப்பதற்காக போலி ஆவணங்களை ஆள் கடத்தல் கும்பல் தயாரித்திருப்பதும் அம்பலமானது.

    இதை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக 10 பேர் மீதும் கோர்ட்டில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த 3 பேரில் சீனி ஆபுல்கான் என்கிற விடுதலைப் புலிகளின் நெருங்கிய ஆதரவாளர் ராமநாதபுரத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார்.

    அவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • தமிழக விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • வலைதளங்களில் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

    152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. பல வருடங்களாகவே முல்லைப்பெரியாறு அணை குறித்து கேரள அரசியல் வாதிகள் மற்றும் தன்னார்வலர்கள் என்ற பெயரில் உலாவும் நபர்கள் வதந்தி கிளப்பி வருகின்றனர்.

    கேரளாவில் அமைந்திருந்தாலும் அணை தமிழக நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு பலகோடி செலவில் தமிழக அரசு அணையை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    இந்த பணி முடிந்தபின்னர் 152 அடி வரை உயர்த்த முயற்சி செய்தனர். ஆனால் கேரளா அரசு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. உச்சநீதிமன்றம் அமைத்த குழுக்கள் தொடர்ந்து அணைப்பகுதியில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2006-ம் ஆண்டு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடி வரை தேக்கிக்கொள்ளலாம் என இவர்கள் பரிந்துரையின் பேரில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    ஆனால் இதனை அமல்படுத்தாமல் கேரள அரசு தொடர்ந்து தாமதப்படுத்தி வந்தது. இதனால் கடந்த 2010ம் ஆண்டு டிசம்பரில் தேனி மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடைபெற்றது.

    கடந்த 2024ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம். பேபி அணையை பலப்படுத்திய பின்னர் 152 அடியாக உயர்த்தலாம் என தெரிவித்திருந்தது.

    அதனைத் தொடர்ந்து கண்காணிப்பு குழுவினர் தொடர்ந்து அணைப்பகுதியை ஆய்வு செய்து வருகின்றனர். ஒவ்வொரு பருவமழையின்போது அணைப்பகுதியை ஆய்வு செய்து அணை பலமாக உள்ளது என்ற அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வருகின்றனர்.

    சமீபத்தில் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் வீடுகள், உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் முல்லை ப்பெரியாறு அணை விவகாகரத்தை நிலச்சரிவுடன் ஒப்பிட்டு கேரள அரசியல் வாதிகள், தன்னார்வலர்கள் வலைதளங்களில் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இது தமிழக விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே தொடர்ந்து வதந்தி பரப்பி வரும் கேரளாவை கண்டித்து தமிழக-கேரள எல்லையான குமுளியில் முற்றுகை போராட்டம் நாளை நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

    கடந்த 2006 மற்றும் 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கேரளா சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எர்ணாகுளம் எம்.பி. முல்லைப்பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என பாராளுமன்றத்தில் பேசி உள்ளார்.

    எங்கு இயற்கை பேரழிவு நடந்தாலும் அதனை பெரியாறு அணையுடன் ஒப்பிட்டு பேசுகின்றனர். எனவே இதனை கண்டித்து நாளை குமுளியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களும் இணைந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

    • அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கியது.
    • கர்நாடகாவில் மழை குறைந்ததால் அணைக்கு வரும் தண்ணீரும் குறைந்து.

    சேலம்:

    கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியது. மேலும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் உபரிநீர் அதிகபட்சமாக வினாடிக்கு 2 லட்சம் கனஅடி வரை தமிழகத்துக்கு திறக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை கடந்த 30-ந் தேதி 120 அடியை எட்டியது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் மேட்டூர் அணையில் இருந்து 16 கண் பாலம் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் கர்நாடகாவில் மழை குறைந்ததால் அணைக்கு வரும் தண்ணீரும் குறைந்து காணப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது. ஆனாலும் காவிரி டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் வெளியேற்றப்பட்டு வந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் குறைய தொடங்கியது.

    இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக அங்கிருந்து திறக்கப்படும் உபரிநீரும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 5258 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் நேற்று 6548 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. இன்று காலை அது வினாடிக்கு 20 ஆயிரத்து 505 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கியது. தற்போது அணையின் நீர்மட்டம் 119.65 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • மின்சார ரெயில்கள் பகுதி நேர ரத்து செய்யப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
    • மின்சார ரெயில் ரத்து தொடர்பாக தெற்கு ரெயில்வே அறிக்கை வெளியிட்டது.

    சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் அரக்கோணம் பணிமனையில் 12 ஆம் தேதி (நாளை) மற்றும் 14 ஆம் தேதி காலை 11.10 மணி முதல் மதியம் 1.10 மணி வரையில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் சில மின்சார ரெயில்கள் பகுதி நேரத்திற்கு ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை சென்ட்ரலில் இருந்து 12 ஆம் தேதி (திங்கட்கிழமை) மற்றும் 14 ஆம் தேதி காலை 9. 10, 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில் திருவள்ளூர் - அரக்கோணம் இடையே பகுதி நேரத்திற்கு ரத்து செய்யப்படுகிறது."

    "மேலும், அரக்கோணத்தில் இருந்து 12 ஆம் தேதி மற்றும் 14 ஆம் தேதி காலை 11.15 மற்றும் மதியம் 12 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் மின்சார ரெயில் அரக்கோணம் - திருவள்ளூர் இடையே பகுதி நேரத்திற்கு ரத்து செய்யப்படுகிறது."

    "இதேபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து 12 ஆம் தேதி மற்றும் 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரெயில் திருவள்ளூர் - திருத்தணி இடையே பகுதி நேரத்திற்கு ரத்து செய்யப்படுகிறது."

    "மறுமார்க்கமாக, திருத்தணியில் இருந்து 12 ஆம் தேதி மற்றும் 14 ஆம் தேதி மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் மின்சார ரெயில் திருத்தணி - திருவள்ளூர் இடையே பகுதி நேரத்திற்கு ரத்து செய்யப்படுகிறது."

    "வேலூரில் இருந்து 12 ஆம் தேதி மற்றும் 14-ம் தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில் சித்தேரி - அரக்கோணம் இடையே பகுதி நேரத்திற்கு ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து 12 ஆம் தேதி மற்றும் 14 ஆம் தேதி காலை 9.50 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் சிறப்பு மின்சார ரெயில் சென்னை சென்ட்ரல் - திருத்தணி இடையே பகுதி நேரத்திற்கு ரத்து செய்யப்படுகிறது," என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருநெடுங்களம் கோவிலை வணங்கினால் தீரா துயர் தீரும்.
    • திருமணஞ்சேரி தலத்தில் வழிபட்டால் திருமண தோஷம் விலகும்.

    சென்னை:

    கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி. நமது ஊரில் உள்ள கோவில்களுக்குச் சென்று சாமியை தரிசனம் செய்து வரவேண்டும் என முன்னோர் வலியுறுத்தி உள்ளனர்.

    அதன்படி, எந்த ஊருக்குச் சென்று எந்த சாமியை வணங்கினால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.

    திருக்கருக்குடி கோவிலை வணங்கினால் குடும்ப கவலை நீங்கும்.

    திருக்கருவேலி கோவிலை வணங்கினால் குழந்தை பாக்கியம் பெறலாம். வறுமை நீங்கும்.

    திருவழுந்தூர் கோவிலை வணங்கினால் முன்ஜென்ம பாவம் விலகும்.

    திருப்பராய்துறை கோவிலை வழிபட்டால் கர்வத்தால் கெட்டவர்கள் நலம் பெறலாம்.

    திருநெடுங்களம் கோவிலை வணங்கினால் தீரா துயர் தீரும்.

    திருவெறும்பூர் கோவிலை வழிபட்டால் அதிகார மோகத்தால் வீழ்ந்தவர்கள் தெளிவு பெறலாம்.

    திருப்பைஞ்ஞீலி கோவிலை வணங்கினால் எம பயம் விலகும்.

    திருவையாறு கோவிலை வழிபட்டால் அக்னி தோஷம் விலகும்.

    திருவைகாவூர் கோவிலில் வில்வ அர்ச்சனை செய்தால் பாவங்கள் விலகும்.

    திருமங்கலங்குடி ஈசனை வணங்கினால் குழந்தை பாக்கியம் பெறலாம்.

    திருமணஞ்சேரி தலத்தில் வழிபட்டால் திருமண தோஷம் விலகும்.

    திருமுல்லைவாயல் ஈசனை வணங்கினால் சந்திர தோஷம் விலகும்.

    திருவெண்காடு கோவிலை வழிபட்டால் ஊழ்வினை தோஷம் நீங்கும்.

    திருநெல்வேலி நெல்லையப்பரை வணங்கினால் மகான்களுக்கு செய்த குற்றம் விலகும்.

    திருக்குற்றாலம் குற்றால நாதரை வேண்டினால் முக்தி கிடைக்கும்.

    திருவாலவாய் கோவிலை வணங்கினால் நட்சத்திர தோஷம் நீங்கும்.

    திருப்பரங்குன்றத்தை வழிபட்டால் வாழத் தெரியாது தவிப்பவர்களுக்கு வழி கிடைக்கும்.

    திருவாடானை தலத்தை வணங்கினால் தீராத பாவம் நீங்கும்.

    திருமுருகநாத சுவாமி கோவிலை வழிபட்டால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலகும்.

    திருப்பாதிரிபுலியூர் தலத்தை வணங்கினால் தாயை விட்டுப் பிரிந்திருக்கும் குழந்தைக்கு தோஷம் நீங்கும்.

    திருவேற்காடு ஈசனை வணங்கினால் வாணிப பாவம் விலகும்.

    திருமயிலாப்பூர் கபாலீஸ்வரரை வழிபட்டால் 3 தலைமுறை தோஷம் நீங்கும்.

    • நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது பழமொழி.
    • இதன்மூலம் சாப்பிடும் முறையை வலியுறுத்தியுள்ளனர்.

    சென்னை:

    உணவும் மருந்தும் ஒன்றே... படுக்கை காப்பி படுக்கையில் தள்ளும்... பசிக்காக சாப்பிடு ருசிக்காக சாப்பிடாதே... இதுபோன்ற பழமொழிகளை சும்மாவா சொன்னார்கள்...

    சத்தான உணவு உள்பட எந்த உணவாக இருந்தாலும் சாப்பிடும் முறையில் ஆரோக்கியம் உள்ளது என்பது முன்னோர் வாக்கு.

    காலையில் அரசனைப் போன்றும், நண்பகலில் சாதாரண மனிதனைப் போன்றும், இரவில் பிச்சைக்காரனைப் போன்றும் சாப்பிட வேண்டும் என பெரியோர் சொல்வது வழக்கம்.

    காலை மடக்கி மடித்து சம்மணமிட்டு (சுக ஆசனம்) சாப் பிடும்போது இரத்த ஓட்டம் வயிற்றுப்பகுதிக்குள் சீராக செல்வதால் செரிமானம் எளிதாகிறது.

    நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது பழமொழி. இதன்மூலம் சாப்பிடும் முறையை வலியுறுத்தியிருக்கிறார்கள்.

    உணவை நன்றாக மென்று சாப்பிட்டால் நோயின்றி நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழலாம்.

    சாப்பிடும் போது பேசக்கூடாது என சொல்வார்கள். சாப்பிடும்போது வெளியில் இருந்து காற்று வாய் வழியே உள்ளே செல்லும். எனவே பேசாமல் உதடுகளை மூடியபடி சாப்பிட்டால் உடல் நன்கு ஆரோக்கியம் அடையும்.

    மனதில் எந்த உணர்வும் இன்றி உணவை ரசித்து உமிழ்நீரோடு கலந்து மென்று சாப்பிட்டால் நூறு வயது வரை வாழலாம். அப்படி இல்லையெனில் ஆரோக்கியத்தோடு வாழலாம்.

    சாப்பிடுவது குறித்துசாஸ்திரம் சொல்வது என்ன?

    இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்.

    ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது.

    குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு சாப்பிடக் கூடாது.

    சாப்பிடும்போது முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு அதன்பின் நீர் அருந்தவேண்டும்.

    சாப்பிடும் வேளை தவிர மற்ற நேரங்களில் இடது கையால் தண்ணீரை அருந்தக் கூடாது.

    இருட்டில் சாப்பிடக் கூடாது.

    சாப்பிடும்போது விளக்கு அணைந்து விட்டால் சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிடவேண்டும் என தெரிவிக்கிறது.

    • சமையலுக்கு தேவையான பொருட்களை திருச்சியில் இருந்து கொண்டு வந்துள்ளனர்.
    • மற்றொரு அறையிலிருந்த நண்பர்கள் காலை வந்து எழுப்பியபோது இருவரும் இறந்து கிடந்துள்ளனர்.

    கொடைக்கானல் அருகே 'பார்பிகியூ' சிக்கன் சமைத்துவிட்டு அடுப்பை அணைக்காததால் வெளியேறிய புகையில் மூச்சுத்திணறி 2 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி மற்றும் சென்னையை சேர்ந்த 4 இளைஞர்கள் கொடைக்கானல் அருகே சின்னபள்ளம் செல்லும் சாலையில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர்.

    அப்போது, ஜெயகண்ணன், ஆனந்த் பாபு ஆகியோர் மது அருந்திக்கொண்டே பார்பிகியூ சிக்கன் சமைத்து சாப்பிட்டுள்ளார். சமையலுக்கு தேவையான பொருட்களை திருச்சியில் இருந்து இவர்கள் கொண்டு வந்துள்ளனர்.

    அப்போது அடுப்பை அணைக்காமல் இருவரும் தூங்கச் சென்றுள்ளனர். மற்றொரு அறையிலிருந்த நண்பர்கள் காலை வந்து எழுப்பியபோது இருவரும் இறந்து கிடந்துள்ளனர்.

    சிக்கன் சமைத்த அடுப்பை அணைக்காததால் எழுந்த புகை காரணமாக இருவரும் மரணம் அடைந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிந்துள்ள காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

    • திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி வரும் சாலைபணிகள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது.
    • பல கிராமங்களை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் அவலநிலை உள்ளது.

    ஆவடி:

    சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் நெடுஞ்சாலையின் குறுக்கே பட்டாபிராம் ரெயில்வே கேட் உள்ளதால் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்கு 6, வழித்தட ரெயில்வே மேம்பாலம் கட்ட கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் அடிக்கல் நாட்டினார். பணிகளை முழுமையாக முடிக்காமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி வரும் சாலைபணிகள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது.

    இதனால் சென்னையில் இருந்து திருவள்ளூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் தண்டுரை, சித்துக்காடு, அணை கட்டு சேரி, திருமணம், மீஞ்சூர்- வண்டலூர் வெளிவட்ட சாலை வழியாக சென்று கருணாகரச்சேரி, நெமிலிச்சேரி என பல கிராமங்களை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் அவலநிலை உள்ளது.

    எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணிகள் முடிவடைந்த ஒருவழிதடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும். இல்லையென்றால் விரைவில் பொதுமக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாகவும் விரைவில் இதற்கான தேதி அறிவிக்கப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது.

    ×