என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சீசன் கால பழங்கள் கேரளாவில் இருந்து குற்றாலத்திற்கு இறக்குமதி.
- இரவிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
செங்கோட்டை:
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் கடந்த மாதம் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அண்டை மாநில சோதனை சாவடிகளிலும் சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் சோதனை சாவடி மையம் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் பணியாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இதனால் கேரளாவில் இருந்து வரும் நபர்கள் முறையான சோதனைக்கு பின்னரே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் தற்போது அரியவகை பழங்களான ரம்பூடான், மங்குஸ்தான் உள்ளிட்ட சீசன் கால பழங்கள் கேரளாவில் இருந்து குற்றாலத்திற்கு இறக்குமதி செய்யப்படுவதால் சோதனை சாவடியில் வைத்து அவற்றை சுகாதாரத்துறையினர் சோதனைக்கு உட்படுத்துகின்றனர். அதன்பின்னரே அதனை குற்றாலத்திற்கு கொண்டு செல்ல அனுமதிக்கின்றனர்.
அந்த பழங்களில் வவ்வால்கள் கடித்து சேதமாகி இருந்தால், அதனை அப்படியே வாகனத்தில் கேரளாவுக்கு மீண்டும் திருப்பி அனுப்பும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இரவிலும் இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- போலீசார் முத்தாயி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
- கொலை சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர்:
கரூர் அருகே திண்டுக்கல்-கரூர் நெடுஞ்சாலையில் சின்னம நாயக்கன்பட்டி பிரிவு டாஸ்மாக் கடை செல்லும் வழியில் வெங்கக்கல் பட்டியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான சிறிய தகரக் கொட்டகை அமைந்துள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு வரை இதில் கறிக்கடை செயல்பட்டு வந்தது.
தற்போது இங்கு கடை இன்றி பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இன்று காலை இந்த கொட்டகையின் உள்ளே பெண் பிணம் கிடப்பதாக வெள்ளியணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு பிணமாக கிடந்த பெண் தலையில் அடிபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
யாரோ மர்ம நபர் அவரை தலையின் பின் பகுதியில் தாக்கி கொலை செய்துவிட்டு உடலை அலங்கோலமாக போட்டு விட்டு சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்ட பெண் அதே பகுதி புலியூர் வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்தாயி என்பது தெரியவந்தது. இவர் கட்டிட சித்தாள் வேலை செய்து வந்தார்.
இதையடுத்து போலீசார் முத்தாயி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
நேற்று இரவு முத்தாயியுடன் அவருடன் பணிபுரியும் நபர் வண்டி சாவி காணவில்லை என மது போதையில் சண்டையிட்டதாக தெரிகிறது.
இருவருக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக முத்தாயி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு யாரேனும் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை பதிவு செய்தார்கள்.
இந்த கொலை சம்பவம் கரூரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சாக்கடை கழிவு நீருடன் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
- 4 நாட்கள் கன மழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் கன மழை பெய்து வருகிறது.
இேதபோல் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது. சேலம் மாநகரில் இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை 9 மணி வரை கன மழையாக கொட்டியது. பின்னர் மழை தூறலாக நீடித்தது.
இதனால் மாநகரில் சில பகுதிகளில் சாலைகளில் சாக்கடை கழிவு நீருடன் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
நேற்றிரவு பெய்த கன மழையால் சேலம் புதிய பஸ் நிலையத்தில் மழை நீர் குளம் போல தேங்கி நின்றது. இதனால் பஸ் ஏற முடியாமல் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

அதே போல சேலம் 4 ரோடு, 5 ரோடு, பழைய பஸ் நிலையம், கொண்ட லாம்பட்டி, ஜங்சன், அம்மாப்பேட்டை, கொண்ட லாம்பட்டி, கிச்சிப்பாளையம் நாராயணநகர், பச்சப்பட்டி நெத்திமேடு, அன்னதானப்பட்டி, தாதகா ப்பட்டி என மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதில் பச்சப்பட்டி, அம்மாப்பேட்டை மாருதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீருடன் சாக்கடையும் கலந்து புகுந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் தூங்க முடியாமல் விடிய விடிய கடும் அவதி அடைந்தனர்.
சேலம் காந்தி விளையா ட்டு மைதானத்தில் அதிக அளவில் மழை வெள்ளம் தேங்கியது. இதனால் அங்கு நடை பயிற்சி சென்றவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி-சாந்தி என்பவரின் ஓட்டு வீடு மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்தது. தகவல் அறிந்த சேலம் டவுன் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று இடுபாடுகளை அகற்றினர். இதில் வீட்டில் உள்ளவர்கள் வேறு அறையில் படுத்து இருந்ததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.
ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு 8 மணியளவில் தொடங்கிய மழை அதிகாலை 1 மணி வரை கன மழையாக கொட்டியது. இந்த மழையால் ஏற்காட்டில் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் ஏற்காட்டில் மலைப்பாதைகளில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவது கண் கொள்ளா காட்சியாக உள்ளது. இந்த திடீர் அருவிகளில் ஏற்காடு செல்லும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.
மேலும் ஏற்காடு அடிவாரப்பகுதியில் உள்ள 3 தடுப்பணைகள் நிரம்பி உள்ளன. இந்த தண்ணீர் வாணியங்காடு வழியாக கன்னங்குறிச்சி புது ஏரிக்கு வருகிறது. இதனால் புது ஏரி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் நெல் நடவு பணிகளை தொடங்கி உள்ளதுடன் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பலத்த மழை காரணமாக ஏற்காட்டில் இரவு 8 மணி முதல் மின்தடை ஏற்பட்டது. இன்று காலை 9 மணி வரை மின் விநியோகம் செய்யப்பட வில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதே போல சேலம் புறநகர் பகுதிகளான ஆனை மடுவு, ஆத்தூர், கரியகோவில், எடப்பாடி, மேட்டூர், ஓமலூர் பகுதிகளிலும் கன மழை பெய்தது . இந்த மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல் வெளிகளில் தண்ணீர் தேங்கியது. எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளித்தது .
மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காடடில் 79 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 65.7, ஆனைமடுவு 39, ஆத்தூர் 28, கெங்கவல்லி 8, தம்மம்பட்டி 6, ஏத்தாப்பூர் 8, கரியகோவில் 72, சங்ககிரி 37, எடப்பாடி 61.4, மேட்டூர் 58.4, ஓமலூர் 46, டேனீஸ்பேட்டை 27 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 535,5 மி.மீ. மழை பெய்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, நாமக்கல் நகரம் உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு கன மழை பெய்தது. இந்த மழையால் அந்த பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் அதிக பட்சமாக திருச்செங்கோட்டில் 45 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
குமாரபாளையம் 6.8, மங்களபுரம் 17, மோகனூர் 22, நாமக்கல் 38, பரமத்தி 31, புதுச்சத்திரம் 22, ராசிபுரம் 6.6, சேந்தமங்கலம் 9, கலெக்டர் அலுவலகம் 12, கொல்லிமலை 15 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 224.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
இதற்கிடையே தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை மேலும் 4 நாட்கள் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடதக்கது.
- போலீசார் பிடிபட்ட வாலிபரை கைது செய்து அவருடன் வந்தவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொள்ளை போன பொருட்களின் மதிப்பு குறித்தும் சோதனை நடத்தி வருகின்றனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வேல்வார்கோட்டை பிரிவு அருகே தனியார் நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலையின் எதிரில் குளத்துக்கரை பிரிவில் ஏராளமான மில் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது24) என்பவரது வீட்டில் மர்மநபர்கள் சிலர் உள்ளே புகுந்தனர். அவர்கள் ஜன்னல் கம்பியை அறுத்து வீட்டுக்குள் நுழைந்து பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் நகைகளை திருடினர். சத்தம் கேட்டு கார்த்திக் எழுந்து பார்த்தபோது அதில் சுதாரித்துக்கொண்ட 2 பேர் தப்பி ஓடினர். பின்னர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ஒருவரை பிடித்து அங்கிருந்த மின் கம்பத்தில் கட்டி வைத்தனர்.
அவரிடம் விசாரித்ததில் அவர் ஒடிசா மாநிலம் ஜோன்பூர் பகுதியை சேர்ந்த அஜய் (19) என தெரிய வந்தது. இவருடன் சேர்ந்து மேலும் 2 பேர் வந்து வீட்டில் கொள்ளையடித்ததும் தெரிய வரவே அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர்கள் சித்திக் மற்றும் கிருஷ்ணவேணி தலைமையிலான போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதுடன் கொள்ளை நடந்த இடத்திலும் ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், தனியார் மில்லில் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு தங்கள் பாதுகாப்பில் இடம் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. இதனால் சாலையோரம் டெண்ட் அமைத்து தங்கி இருக்கும் அவர்கள் இரவு நேரங்களில் வீடுகளை நோட்டமிட்டு இதுபோன்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே வடமாநில தொழிலாளர்களுக்கு மில் நிர்வாகம் இடம் கொடுக்க நடவடிக்கை எடுப்பதுடன் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதனையடுத்து போலீசார் பிடிபட்ட வாலிபரை கைது செய்து அவருடன் வந்தவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளை போன பொருட்களின் மதிப்பு குறித்தும் சோதனை நடத்தி வருகின்றனர்.
- நெய் விலையில் ரூ.10 தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
- சிறப்பு தள்ளுபடி செப்.15 வரை அமலில் இருக்கும்.
சென்னை:
ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஆவின் நிறுவனம் பொதுமக்களின் தேவைகளை பூா்த்திசெய்யும் வகையில் பால், தயிா், நெய், வெண்ணெய், பன்னீா், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பால் உபபொருள்களையும் ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லரை விற்பனையாளா்கள் மூலம் பொதுமக்களுக்கு தங்குதடையுமின்றி விற்பனை செய்துவருகிறது.
இதில் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக பால் உபபொருள்களின் விலைகளில் அவ்வப்போது சிறப்பு தள்ளுபடி செய்வது வழக்கம்.

அந்த வகையில், கிருஷ்ணஜெயந்தி (ஆக.26-ந்தேதி), விநாயகா் சதுா்த்தி (செப்.7-ந்தேதி) உள்ளிட்ட பண்டிகை களை முன்னிட்டு 100 மி.லி. நெய் விலையில் ரூ.10 தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, ரூ.85-க்கு விற்பனையான ஆவின் 100 மி.லி. நெய் விலை ரூ.75-யாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு தள்ளுபடி செப்.15 வரை அமலில் இருக்கும்.
இவ்வாறு ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
- தற்போது அணைக்கு 627 கனஅடி நீர்வரத்து உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.
கடந்த 2 நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மழை பெய்ததால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மழையின் காரணமாக குளம், குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. திருப்பூர் ஆண்டிப்பாளையம் குளம் நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது.
உடுமலை அமராவதி அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 90 அடி உயரமுள்ள அணை யில் தற்போது 88.88 அடியாக நீர்மட்டம் உயர்ந்து ள்ளது. முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.
இதனால் ஆற்றில் கூடுதலாக உபரிநீர் திறந்து விட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்போது அணைக்கு 627 கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து 790 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-
திருப்பூர் வடக்கு-35, கலெக்டர் முகாம் அலு வலகம்-74, திருப்பூர் தெற்கு -43, கலெக்டர் அலுவ லகம்-23, அவினாசி -33, ஊத்துக்குளி-50, பல்லடம்-20,தாராபுரம்-19,உப்பாறு அணை-11, காங்கயம்-14,வெள்ளகோவில் ஆர்.ஐ. அலுவலகம்-3,வட்டமலை க்கரை ஓடை அணை-3.60, உடுமலைபேட்டை-7.20, அமராவதி அணை-18, திருமூர்த்தி அணை-2, மடத்துக்குளம்-10. மாவட்டம் முழுவதும் மொத்தம் 367.80 மி.மீ., மழை பெய்துள்ளது.
- அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
- கனமழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பகலில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. தொடர்ந்து மாலையில் வானில் மேகக்கூட்டங்கள் திரண்டு பரவலாக மழை பெய்ய தொடங்கியது. மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்தது. அங்கு 2.6 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
பிரதான அணையான பாபநாசம் அணை பகுதியில் நேற்று மழை பெய்யவில்லை. அந்த அணையில் 115.20 அடி நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து கார் பாசனத்திற்காக 1154 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வினாடிக்கு 474 கனஅடி நீர் வந்த கொண்டிருக்கிறது.
மாவட்டத்தில் சேரன்மகாதேவி, முக்கூடல், மூலைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியத்திற்கு பிறகு கனமழை பெய்தது. அதிகபட்சமாக சேரன்மகா தேவியில் 21 மில்லி மீட்டரும், மூலக்கரைப்பட்டியில் 20 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
கன்னடியன் கால்வாய் பகுதியில் 8 மில்லிமீட்டரும், நாங்குநேரியில் 3 மில்லிமீட்டரும் மழை பெய்தது. நேற்று மாவட்டம் முழுவதும் பகலில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென பெய்த மழை காரணமாக பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மாநகரில் நேற்று மாலை 3 மணி அளவில் வானில் கருமேகக்கூட்டங்கள் திரண்டன.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடி வார பகுதியில் அமைந்துள்ள கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று திடீரென சாரல் மழை பெய்தது. தென்காசி நகர் பகுதியில் 1.10 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.
சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. அங்கு 13 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சிவகிரி, வாசுதேவநல்லூர் பகுதியில் நேற்று மாலை 3 மணிக்கு பிறகு திடீரென மழை பெய்தது. இரவு 8 மணி வரையிலும் பெய்த கனமழையால், மழை நீர் செல்ல முடியாத நிலையில் சாக்கடை நீருடன் கலந்து வெள்ளமாக ஓடியது. அங்குள்ள கீழரதவீதி, வலம்புரி விநாயகர் கோவில் ரோடு சந்திக்கும் தேரடி நிலையம் பகுதியில் மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பகலில் கடுமையான வெயில் அடித்த நிலையில் பிற்பகலில் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. கயத்தாறு, கடம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மாலை 4 மணிக்கு மேல் கோவில்பட்டி பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் இளையரசனேந்தல் பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. கழுகுமலை பகுதியில் 2 மணி நேரம் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு மழை நிற்கும் வரை மின்தடை ஏற்பட்டது.
- இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 123.10 அடியாக இருந்தது.
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்.
கர்நாடகாவில் பெய்து வரும் மழை காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 123.10 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 21ஆயிரத்து 60கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 37ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேபோல் கபினி அணையின் நீர்மட்டம் 82.84 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4ஆயிரத்து 782 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 5ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு 42ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்.
- கார் பந்தயம் நடத்தப்படுவதன் காரணமாக பொதுமக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.
- கார் பந்தயம் திட்டத்தை தி.மு.க. அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, வழிகாட்டி மதிப்பு உயர்வு, முத்திரைக் கட்டண உயர்வு, பதிவுக் கட்டண உயர்வு, வாகனக் கட்டண உயர்வு, கட்டிட அனுமதிக் கட்டண உயர்வு என பல்வேறு இன்னல்களுக்கு தமிழக மக்கள் ஆளாகியுள்ள நிலையில், சென்னையில் கார் பந்தயத்தை நடத்தப் போவதாக தி.மு.க. அரசு அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்."
"தமிழ்நாட்டினுடைய கடன் 8 லட்சத்து 33 ஆயிரத்து 362 கோடி ரூபாயாகவும், நிதிப் பற்றாக்குறை 1 லட்சத்து 8 ஆயிரத்து 690 கோடி ரூபாயாகவும், வருவாய்ப் பற்றாக்குறை 49,279 கோடி ரூபாயாகவும் இருக்கின்ற நிலையில், இந்தக் கார் பந்தயத்தை நடத்த வேண்டியது அவசியம் தானா என்பதை தி.மு.க. அரசு எண்ணிப் பார்க்க வேண்டும்."
"சென்னையில் கார் பந்தயம் நடத்தப்படுவதன் காரணமாக பொதுமக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. எனவே, இந்தக் கார் பந்தயம் திட்டத்தை தி.மு.க. அரசு உடனடியாக கைவிட வேண்டுமென்று அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்," என்று கூறி உள்ளார்.
- தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- தமிழ்நாட்டில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் 7 முதல் 11 செமீ அளவு வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதால், கனமழைக்கான மஞ்சள் (ஆரஞ்சு) எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், "வருகிற 14, 15 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. கிழக்கு ராஜஸ்தான், பீகார், அசாம், மேகாலயா, புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும் மாஹே ஆகிய மாநிலங்களில் இன்று கனமழை பெய்யும்."
"வடமேற்கு இந்திய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் கிழக்கு ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 17 ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது."
"அதேபோல், சண்டிகர் மற்றும் அரியானாவில் ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று கிழக்கு ராஜஸ்தான் மீது அதிக தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளது, ," என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- பொது தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
- மருத்துவக் கல்லூரி துணை இயக்குனர் சுதாலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-

மதுரையில் நடைபெற்ற மதுரை வாழ் குமரி மாவட்ட மக்கள் நலப்பேரவையின் 20 வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினேன்.
மேலும் பொது தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினேன்.
இந்த விழாவில் பேரவை பொதுச் செயலாளர் ஜான் ஸ்டீபன், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தாயுமானசாமி, பேராசிரியர் இளங்கோ, மருத்துவக் கல்லூரி துணை இயக்குனர் சுதாலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற ஆர். அழகு மீனா இ.ஆ. ப அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்தேன்.

மாலை முரசு அதிபர் அமரர் பா. ராமச்சந்திர ஆதித்தன் அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரையில் அவரது திருவுருவ படத்திற்கு மதுரை பாராளுமன்ற உறுப்பினர் தோழர் சு. வெங்கடேசன் அவர்களுடன் சேர்ந்து மரியாதை செலுத்தினோம்.

முன்னர் சு. வெங்கடேசன் அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் பரிமாறி கொண்டோம்.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் 2-வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
- காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக அங்கிருந்து திறக்கப்படும் உபரிநீரும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு வினாடிக்கு 21 ஆயிரத்து 500 கன அடியில் இருந்து 26 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் 2-வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் நீர் இருப்பு 93.47 மில்லியன் கனஅடியாக உள்ளது.
இதையடுத்து சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து அதிகளவில் நீர் வெளியேற்றப்படுவதால் ஆற்றில் இறங்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.






