என் மலர்
உள்ளூர் செய்திகள்
- குடியிருக்கும் வீட்டின் அருகில் உள்ள பொதுமக்களிடம் நேரடியாக சென்று நிதி பெற்றனர்.
- மாணவிகளின் இந்த செயலை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பாராட்டினர்.
திருப்பூர்:
திருப்பூர் திருக்குமரன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மாணவிகள் நபிஷா, சுபிக்ஷா.இருவரும் வாவிபாளையம் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்ய முன்வந்தனர். அதற்காக 2 பேரும், தாங்கள் குடியிருக்கும் வீட்டின் அருகில் உள்ள பொதுமக்களிடம் நேரடியாக சென்று நிதி பெற்றனர். அவ்வாறு பெற்ற நிதியை இன்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் வழங்கினர். மாணவிகளின் இந்த செயலை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பாராட்டினர்.
- போதைப் பொருள் விற்பவர்களுக்கு அதிக தண்டனை வழங்கவேண்டும்.
- போதைப் பொருட்களை கட்டுப்படுத்த வேண்டியது உடனடித் தேவை ஆகும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ந்தேதி போதைப் பொருட்கள் ஒழிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கூட்டத்திலும், ஆகஸ்ட் 11-ந் தேதி நடைபெற்ற 30 லட்சம் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியிலும் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''எனது காவல் நிலைய எல்லையில் போதை மருந்து விற்பனையை முற்றிலுமாக தடை செய்துவிட்டேன் என்று ஒவ்வொரு காவல் நிலைய ஆய்வாளரும் உறுதி எடுத்துக்கொண்டாலே போதும், அதுவே முதல் வெற்றி.
போதைப் பொருள் நடமாட்டத்தை தடுத்துவிட முடியும். பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், சமூகக் கூடங்கள் போன்ற இடங்களில் போதைப் பொருள் விற்பவர்களுக்கு அதிக தண்டனை வழங்கவேண்டும்" என்று ஆணையிட்டார்.
முதலமைச்சரின் இந்த ஆணையை செயல்படுத்தி இருந்தாலே தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதைப்பொருள்கள் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால், அதை தமிழக காவல்துறை செய்யவில்லை.
தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த வேண்டியது உடனடித் தேவை ஆகும். அதை உணராமல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் மாணவர்களிடையே போதை மருந்து தடுப்பு உறுதிமொழி ஏற்றுக் கொள்வதை வெறும் சடங்காக செய்வதால் எந்த பயனும் இல்லை.
எனவே, இனியாவது தமிழக அரசு விழித்துக் கொண்டு தமிழ்நாட்டில் போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
போதைப்பொருட்கள் நடமாட்டத்தை வேருடன் ஒழிப்போம் என்று கூறி, அதற்காக 'போதைப்பொ ருட்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற புதிய இயக்கத்தை திமுக அரசு தொடங்கி இரு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், போதைப் பொருட்கள் நடமாட்டம் குறைவதற்கு மாறாக அதிகரித்திருக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்றாவது ஆண்டாக இன்றும் சென்னையில் மாணவர்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி செய்து வைத்ததுடன் தமது கடமையை முடித்துக் கொண்டார். போதைப்பொருட்களை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்காமல் கடமைக்காக தமிழக அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
- மழை வந்தவுடனே பெரிய அளவிலான பாதிப்புகளை நாம் தொடர்ந்து சந்தித்து வந்தோம்.
- பெரிய அளவிலான பாதிப்புகள் சென்னையில் இப்போது இல்லை என்கின்ற நிலையை உருவாக்கி இருப்பவர் முதலமைச்சர்.
சோழிங்கநல்லூர்:
ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட கோவளம் வடிநிலப் பகுதியில் ரூ.666.32 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து பெருங்குடி சர்ச் சாலையில் இந்த பணியின் தொடக்க விழா நடைபெற்றது. மண்டல குழு தலைவர் பெருங்குடி எஸ்.வி.ரவிச்சந்திரன் வரவேற்றார். அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசியதாவது:-
சென்னை மாநகர வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.2ஆயிரம் கோடி அளவுக்கான திட்டங்களை ஒரே நாளில் தொடங்கி வைத்தது என்பது தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இன்றைக்கு மட்டுமே இருக்கும். அந்த அளவுக்கான திட்டங்களை இன்று முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.
மழை வந்தவுடனே பெரிய அளவிலான பாதிப்புகளை நாம் தொடர்ந்து சந்தித்து வந்தோம். தற்போது சென்னையில் 20 செ.மீட்டர் அளவுக்கு மழை பொழிந்தாலும் பெரிய அளவிலான பாதிப்புகள் தற்போது தவிர்க்கப்பட்டிருக்கிறது. பெரிய அளவிலான பாதிப்புகள் சென்னையில் இப்போது இல்லை என்கின்ற நிலையை உருவாக்கி இருப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றார்.
நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் நீலாங்கரை மதியழகன், பாலவாக்கம் சோமு, சென்னை மாநகராட்சி கல்விக்குழு தலைவர் பாலவாக்கம் விசுவநாதன் ஜே.கே.மணிகண்டன், 184-வது வட்ட செயலாளர் ஆர்.தேவராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- பணியில் இருக்கும் போது செந்தில்குமாருக்கு ஏற்பட்ட இறப்புக்கு மின்சார வாரியம் தான் பொறுப்பேற்க வேண்டும்.
- மனசாட்சியுடனும், மனிதநேயத்துடனும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகளை அரசு தட்டிக்கழிக்கக் கூடாது.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் கல்லாத்தூரைச் சேர்ந்த மின்வாரியப் பணியாளர் செந்தில்குமார் என்பவர் பணியில் இருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பணியில் இருக்கும் போது செந்தில்குமாருக்கு ஏற்பட்ட இறப்புக்கு மின்சார வாரியம் தான் பொறுப்பேற்க வேண்டும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. ஆனால், மறைந்த செந்தில்குமாரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் மட்டும் இழப்பீடு வழங்கி விட்டு தமிழக அரசு ஒதுங்கிக் கொண்டது. இது நியாயமல்ல. மனசாட்சியுடனும், மனிதநேயத்துடனும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகளை அரசு தட்டிக்கழிக்கக் கூடாது. செந்தில்குமாரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த பதிவில் கூறி உள்ளார்.
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு கப்பல் சேவை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
- அந்தமானில் இருந்து சிவகங்கை கப்பல் கடந்த வாரம் நாகை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14 -ம் தேதி காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி கப்பல் சேவையை தொடங்கி வைத்தார்.
ஆனால் புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணம் காட்டி சேவை தொடங்கிய சில நாட்களிலேயே கப்பல் சேவை நிறுத்தப்பட்டதால் இரு நாட்டு சுற்றுலா பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கப்பல் சேவை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு அந்தமானில் இருந்து சிவகங்கை கப்பல் கடந்த வாரம் நாகை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அதைத்தொடர்ந்து இலங்கைக்கு கப்பல் சோதனை ஓட்டம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் வரும் 16 -ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து தொடங்க இருப்பதாக தனியார் கப்பல் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் இன்று நள்ளிரவு முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் கப்பல் சேவை தொடங்க இருப்பதால் இருநாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- ரஜினி, கமல், திரை பிரபலங்கள் பங்கேற்கிறார்கள்.
- வருகிற 18-ந்தேதி மாலை 6.50 மணிக்கு நடைபெறுகிறது.
சென்னை:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியிடும் நிகழ்ச்சி தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) மாலை 6.50 மணிக்கு நடைபெறுகிறது.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத்சிங் பங்கேற்று கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார்.

அமைச்சர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார். விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க் கள், மேயர், துணை மேயர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்த விழாவில் கூட்டணி கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோரும் பங்கேற்க முதலமைச்சர் விரும்புகிறார்.
அதன் அடிப்படையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அவரது வீடு தேடி சென்று தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் அழைப்பிதழ் கொடுத்து உள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, நடிகர் ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் கூட்டணி கட்சித் தலைவர்களான தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத் தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பால கிருஷ்ணன், இந்திய கம்யூ னிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், தமிழக வாழ்வு ரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட கட்சி தலைவர்களுக்கு தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துறைமுகம் காஜா நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.
இந்த விழாவை மிகச் சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பல்வேறு வழக்குகளில் சுமார் 1145 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
- தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் கஞ்சா பொட்டலங்களை தீயில் போட்டு அழிக்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்:
போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டு பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பல ஆயிரம் கிலோ கஞ்சாவை அழிக்கும் நிகழ்ச்சி தமிழகத்தில் 5 மண்டலங்களில் நடைபெற்றது.
அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அடுத்த அயோத்திப்பட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கஞ்சா அழிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட திருச்சி, பெரம்பலூர், திருவாரூர், கரூர், அரியலூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 1145 கிலோ கஞ்சாவை, அந்தந்த மாவட்ட போலீசார் மூட்டைகளாக கட்டி வாகனங்கள் மூலம் தொழிற்சாலைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து, அங்குள்ள ராட்சத கொதிகலன்களில் கஞ்சாவை போட்டு போலீசார் முன்னிலையில் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தவாறு பணியாளர்கள் அழித்தனர். தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் கஞ்சா பொட்டலங்களை தீயில் போட்டு அழிக்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.இன்று முதல்கட்டமாக 1145 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது.
பின்னர் போதை பொருளுக்கு எதிரான உறுதி மொழியை காவல் உயர் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர்.
- அரசு சட்டக் கல்லூரி நூலகங்களுக்கு 3.50 கோடி ரூபாய் செலவில் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
- புதிய கட்டடமானது மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம் போன்ற பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து, நீதிமன்றக் கட்டடங்கள் மற்றும் அரசு சட்டக் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட, புதிதாக பல்வேறு இடங்களில் நீதிமன்றக் கட்டடங்கள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது; அரசு சட்டக் கல்லூரி நூலகங்களுக்கு 3.50 கோடி ரூபாய் செலவில் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன; காரைக்குடியில் 2022-23-ம் கல்வியாண்டு முதல் புதிய அரசு சட்டக் கல்லூரி துவங்கப்பட்டு, அக்கல்லூரிக்கான சொந்தக் கட்டடத்திற்கு 100.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது; உயிரிழந்த வழக்கறிஞர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் வழக்கறிஞர் நலத்திட்ட உதவி 7.50 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது; "வழக்காடுதல் கலை" பயிலரங்கம் கட்டுமானப் பணிகள் 32.25 இலட்சம் ரூபாய் செலவில் நடைபெற்று வருவது போன்ற பல்வேறு நடவ க்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரிக்கான புதிய கட்டடம் மற்றும் விடுதிக் கட்டடம் ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், குதக்கோட்டை கிராமத்தில் 1,76,549 சதுர அடி பரப்பளவில் 76 கோடியே 60 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரிக்கான புதிய கட்டடம் மற்றும் விடுதிக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இப்புதிய கட்டடமானது, 26 வகுப்பறைகள், கருத்தரங்குக்கூடம், காணொளி காட்சி அறை, உள்விளையாட்டு அரங்கம், சர்வதேச தரத்தில் மாதிரி நீதிமன்ற அரங்கம், நிர்வாகத் தொகுதிக் கட்டடங்கள், அதிவேக இணைய வசதிகளுடன் கூடிய கம்பியில்லா மண்டலம் அடங்கிய நூலகக் கட்டடங்கள், டால்பி டிஜிட்டல் ஒலிப்பெருக்கி யுடன் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கலையரங்கம், விடுதி காப்பாளர் அறை, 250 மாணவியர்கள் தங்கும் வசதி கொண்ட விடுதிக் கட்டடம், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம் போன்ற பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம், பட்டறைப் பெரும்புதூரில் உள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் விளையாட்டுத் திடல் அமைக்கப்படும் என்று மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் 1 கோடியே 57 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கால்பந்து மற்றும் மட்டைப்பந்து விளையாட்டுத் திடலை முதலமைச்சர் மாணவர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சட்டத்துறைச் செயலாளர் சி.ஜார்ஜ் அலெக்சாண்டர், சட்டக்கல்வி இயக்குநர் ஜெ.விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- கனமழையால் சில பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
- சாலையில் மிகப்பெரிய மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரும்பாறை:
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்து வந்த கனமழை பகல் நேரத்திலும் பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. நேற்று சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழையால் அண்ணாசாலை, மூஞ்சிக்கல், ஏரிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. அதன் பிறகு விட்டு விட்டு சாரல் மழையாக பெய்து வந்த நிலையில் இன்று காலை ஏரிச்சாலையில் மிகப்பெரிய மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து தடைபட்டது.
இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மழை கிராமங்களில் பெய்த கனமழையால் பல இடங்களில் மின் வினியோகம் தடைபட்டது.

கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, கே.சி.பட்டி, பாச்சலூர், பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. மேலும் பலத்த காற்றும் சுழன்று அடித்தது. இந்த நிலையில் நேற்று இரவு பெரும்பாறை பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் பெரும்பாறை-தாண்டிக்குடி மலைச்சாலையில் உள்ள மூலக்கடை-கொங்கப்பட்டி இடையே இன்று அதிகாலை சுமார் 2 மணிக்கு சாலையின் குறுக்கே மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் சாலையின் இருபுறமும் பஸ், லாரி, கார் போன்ற வாகனங்கள் செல்ல முடியாமல் அணி வகுத்து நின்றது.
இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பரத், மாவட்ட தி.மு.க. விவசாய தொழிலாளர் துணை அமைப்பாளர்கள் மகாராஜன், ஜெயராஜ் ஆகியோர் தலைமையில் 2 அறுவை எந்திரத்தின் மூலம் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். இதனால் 4 மணி நேரத்துக்கு பிறகு மலைச்சாலையில் போக்குவரத்து சீரானது. இதேபோல் நேற்று மாலை தடியன்குடிசையில் வேரோடு மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த கொடைக்கானல் நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் மாசிலாமணி மற்றும் பணியாளர்கள் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் அறுவை எந்திரத்தின் மூலம் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். இதனால் 2 மணி நேரத்துக்கு பிறகு மலைச்சாலையில் போக்குவரத்து சீரானது.
- ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
- நாளை நீலகிரி, கோவை மலை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை:
தமிழகத்தின் மேல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று முதல் 5 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழையும், பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, கோவை மலைப்பகுதி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும்.
நாளை (13-ந்தேதி) நீலகிரி, கோவை மலை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
14-ந்தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
15-ந்தேதி கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
16-ந்தேதி கோவையில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழையும் பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூட்டுறவு சங்கங்கள் மூலம் விலையில்லா வேட்டி-சேலை வழங்கப்பட்டு வருகிறது.
- நூல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஈரோடு:
தமிழக அரசு ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைகாரர்களுக்கு விலையில்லா வேட்டி சேலை வழங்கி வருகிறது. 1 கோடியே 79 லட்சம் வேட்டி-சேலை உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 238 கூட்டுறவு நெசவாளர்கள் சங்கங்கள் மூலம் நூல் வழங்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது.
இதில் 50 சதவீத உற்பத்தி ஈரோடு, திருச்செங்கோடு பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. வழக்கமாக ஜூன் மாதம் நூல் வழங்கப்பட்டு டிசம்பர் மாதத்துக்குள் உற்பத்தி முடிக்கப்படும். ஜனவரி முதல் வாரத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விலையில்லா வேட்டி-சேலை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வருடத்திற்கு இதுவரை நூல் வழங்கப்படவில்லை. தமிழ்நாடு அரசின் விலையில்லா வேட்டி-சேலை உற்பத்தி திட்டத்தில், இந்த ஆண்டு சேலை உற்பத்திக்கு பருத்தி நூலுக்கு பதிலாக பாலிஸ்டர் நூல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விசைத்தறியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு விசைத்தறியாளர்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று ஒரு நாள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்றும், ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம் பகுதியில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூடப்பட்டிருந்தன. இதை போல் பள்ளிபாளையம், திருச்செங்கோட்டில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இதை தொடர்ந்து இன்று காலை ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர். கே.இ.பிரகாஷ் தமிழ்நாடு விசைத்தறியாளர்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது கடந்த வருடம் இலவச வேட்டி-சேலை தயாரிக்க எந்த நடைமுறை பின்பற்றபட்டதோ அதே நடைமுறை இந்த வருடமும் பின்பற்றபடும் என உறுதியளித்தனர். இதனை ஏற்ற தமிழ்நாடு விசைத்தறியார்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் தங்களது வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இதை தொடர்ந்து விசைத்தறிகள் வழக்கம்போல் செயல்பட தொடங்கின.
- பருவமழை காலங்களில் காய்ச்சல், சளி வழக்கமானது தான்.
- மூளைக்காயச்சலை ஆரம்ப நிலையில் கண்டு பிடித்தால் குணமாக்கி விடலாம்.
சென்னை:
சென்னையில் பருவமழை அவ்வப்போது பெய்வதால் காய்ச்சல் அறிகுறியுடன் ஏராளமான குழந்தைகள் ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து செல்லப்படு கிறார்கள்.
அவ்வாறு அழைத்து செல்லபபடும் குழந்தைகளில் பல குழந்தைகள் வாந்தி, கழுத்து வலி, மாறுபட்ட மன நிலைகளுடன் காணப்பட்டன.

இந்த அறிகுறியுடன் காணப்பட்ட குழந்தைகள் சாப்பிட மறுக்கிறார்கள். தொடர்ந்து அழுகிறார்கள். இந்த மாதிரி குழந்தைகள் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதுபற்றி சூரியா மருத்துவமனையின் குழந்தைகள் நல மூத்த மருத்துவர் டாக்டர் தீபாஸ்ஹரிகரன் கூறியதாவது:-
பருவமழை காலங்களில் காய்ச்சல், சளி வழக்கமானது தான். ஆனால் காய்ச்சல் வந்ததும் மருந்து கொடுத்தும் 48 மணி நேரத்துக்கும் மேலாக காய்ச்சல் நீடித்தாலோ, குழந்தைகள் சோர்ந்து போனாலோ உடனே மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும்.
காய்ச்சல் வந்தாலும் அது 103 டிகிரி அளவுக்கு நெருப்பாக கொதிப்பது, சமாதானப்படுத்த முடியாமல் அழுது கொண்டிருப்பது, கொஞ்சம் கூட பால் குடிக்க முடியாமல் சோர்ந்து இருப்பது, 6 முறைக்கு மேல் வாந்தி, பேதி ஏற்படுவது, இருமும்போது முச்சு வாங்குவது போன்ற அறிகுறிகள் இருந்தாலும உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
மூளைக்காயச்சலை ஆரம்ப நிலையில் கண்டு பிடித்தால் குணமாக்கி விடலாம். பள்ளிகள் திறந்ததும் யாராவது ஓரு குழந்தைக்கு காய்ச்சல் காணப்பட்டாலும் மற்றவர்களுக்கு எளிதாக பரவிவிடும்.

குழந்தைகளுக்கு அனைத்து தடுப்பூசிகளையும் பொதுவாக குழந்தைகள் 4 வயதாகும் போது 4-வது பூஸ்டர் ஊசியை பலர் போடாமல் இருந்து விடுகிறார்கள். அது தவறு.
அதிமாக சளி பிடிக்கும் குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் பன்றி காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
முக்கியமாக காய்ச்சல், சளி இருக்கும் குழந்தைகள் கை, குட்டையை வைத்து இருமுவதற்கு பழக்கி கொடுக்க வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவவும் சொல்லித்தர வேண்டும் என்றார்.






