என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு சசிகலா மாலை அணிவிக்கிறார்.
- 16-ந்தேதி நாங்குநேரி தொகுதி, 17-ந்தேதி அம்பை தொகுதி, 18-ந்தேதி ராதாபுரம் தொகுதியிலும் சுற்றுப்பயணம் செல்கிறார்.
நெல்லை:
தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த சசிகலா, சமீப காலமாக மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
மாநிலம் முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. தொண்டர்களை சந்திக்கப்போவதாக அறிவித்த அவர், ஜெயலலிதா வழியில் மக்கள் பயணம் என்னும் பெயரில் கடந்த மாதம் 17-ந்தேதி தென்காசி மாவட்டத்தில் தனது பயணத்தை தொடங்கினார்.
இந்நிலையில் 2-ம் கட்டமாக இன்று முதல் நெல்லை மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக சென்று சசிகலா தொண்டர்களை சந்திக்க உள்ளார். இதற்காக நேற்று இரவு நெல்லை வந்த சசிகலாவுக்கு மாவட்ட எல்லையான கங்கைகொண்டானில் வைத்து அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் தங்கினார்.
அவர் இன்று மாலை 4 மணி அளவில் நெல்லை சட்டமன்ற தொகுதியில் சுற்றுப்பயணம் செய்கிறார். முதலாவதாக கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கும் சசிகலா அதனை தொடர்ந்து சந்திப்பு அண்ணா சிலை, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கிறார்.
அதன் பின்னர் டவுன் எஸ்.என்.ஹைரோட்டில் வ.உ.சி. மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து விட்டு டவுன் காட்சி மண்டபத்தில் தொண்டர்கள் இடையே உரையாற்றுகிறார். பின்னர் சுத்தமல்லி விலக்கு, நடுக்கல்லூர் பகுதிகளில் தொண்டர்களை அவர் சந்திக்கிறார். அங்கிருந்து பழைய பேட்டை வழியாக ராமையன்பட்டி, மானூர், கங்கைகொண்டான், தாழையூத்து, தச்சநல்லூர் கரையிருப்பு பகுதிகளில் தொண்டர்கள் இடையே பேசுகிறார்.
அப்போது கரையிருப்பு பகுதியில் அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். தொடர்ந்து அவர் இன்று இரவு ஓட்டலில் ஓய்வெடுக்கிறார். நாளை பாளை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பயணம் மேற்கொள்கிறார். அப்போது அவர் முருகன்குறிச்சி, நீதிமன்றம், பாளை பஸ் நிலையம், குல வணிகர்புரம், மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா ஆகிய இடங்களில் நாளை தொண்டர்களை சந்திக்கிறார்.
தொடர்ந்து நாளை மறுநாள்(வியாழக்கிழமை) சுதந்திர தினத்தையொட்டி அவர் எங்கும் செல்லவில்லை. பின்னர் 16-ந்தேதி நாங்குநேரி தொகுதி, 17-ந்தேதி அம்பை தொகுதி, 18-ந்தேதி ராதாபுரம் தொகுதியிலும் சுற்றுப்பயணம் செல்கிறார்.
இதனையொட்டி அவரது ஆதரவாளர்கள் வண்ணார்பேட்டை பகுதியில் அ.தி.மு.க. கொடியை கட்டியிருந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நிர்வாகிகள் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் நேற்று இரவோடு, இரவாக அ.தி.மு.க. கொடிகம்பங்கள் அனைத்தும் அந்த பகுதியில் இருந்து அகற்றப்பட்டன.
- கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- கனரக வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
ஜி.எஸ்.டி. ரோட்டையும் பழைய மகாபலிபுரம் ரோட்டையும் இணைக்கும் வகையில் வண்டலூர்-கேளம்பாக்கம் மெயின் ரோடு உள்ளது.
19 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த ரோட்டில் பள்ளி, கல்லூரிகள் நிறைய உள்ளன. எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களும் அதிக அளவில் செல்கின்றன.

இந்த சாலையில் கனரக வாகனங்களும் எப்போதும் சென்று வருவதால் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
வண்டலூர் சந்திப்பில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில்தான் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த சாலையில் தொடங்கும் நெரிசல் பஸ் நிலைய பகுதியிலும் நீடிக்கிறது.
ரத்தினமங்கலம் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டதால் சாலை பராமரிப்பும் சரி இல்லை. இதனால் மாநில நெடுஞ்சாலைத்துறை கடும் விமர்சனத்துக்குள்ளானது.
அந்த பகுதியில் குடியிருப்பவர்களும் நெரிசல் காரணமாக சாலையை கடக்க 45 நிமிடங்கள் வரை ஆவதாக கூறுகிறார்கள்.
வார இறுதி நாட்களில் கார் மற்றும் இதர வாகனங்களில் வெளியூர் செல்பவர்கள் நகர பகுதியில் நெரிசல் அதிகம் இருக்கும் என்பதால் கேளம்பாக்கம் சாலை வழியாக வண்டலூர் வருகிறார்கள். இதனால் வார இறுதி நாட்களில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியாமல் போலீசாரும் திணறுகிறார்கள்.

போக்குவரத்து நெரி சலை சமாளிக்க வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் கனரக வாகன போக்குவரத்துக்கு போலீசார் கட்டுப்பாடு விதித்து உள்ளார்கள்.
அதன்படி காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 10 மணி வரையும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த போக்குவரத்து மாற்றம் நெரிசலை குறைப்பதற்காக மட்டும் அல்ல. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் செய்யப்பட்டு உள்ளதாக தாம்பரம் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி குறிப்பிட்டார்.
இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதன் மூலம் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் ஏற்படும் நெரிசலையும் சமாளிக்க முடியும் என்று போலீசார் கூறுகிறார்கள். இந்த போக்கு வரத்து மாற்றம் அடுத்த சில மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தலைமை செயலக பகுதி சிவப்பு மண்டல பகுதியாக அறிவிப்பு.
- டிரோன்கள், சிறிய ரக விமானங்கள், பெரிய பலூன்கள் பறப்பதற்கு தடை.
சென்னை:
சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை தலைமை செயலக பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144ன் கீழ் ஆழ்வார் பேட்டையில் உள்ள முதல்-அமைச்சர் வீடு இருக்கும் பகுதியில் இருந்து தலைமை செயலகம் வரையிலும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை போலீஸ் கமிஷனர் அருண் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மேற்கண்ட பகுதிகளில் டிரோன்கள், சிறிய ரக விமானங்கள், பெரிய பலூன்கள் உள்ளிட்டவை பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களும் இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும். இதையொட்டி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். சுதந்திர தினத்தன்று ராஜாஜி சாலையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் அனைவரையும் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கவும் போலீசார் முடிவு செய் துள்ளனர்.
சென்னையில் உள்ள அனைத்து லாட்ஜூகள், தங்கும் விடுதிகளிலும் போலீசார் விடிய விடிய சோதனை நடத்தி வரு கிறார்கள். இந்த சோத னையை இன்று இரவில் இருந்து வருகிற 15-ந் தேதி வரையில் மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.
சென்னை மாநகரில் அனைத்து இடங்களிலும் போலீசார் ரோந்து சுற்றி வந்து சந்தேக நபர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலோர பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடலோர காவல் குழும போலீசார் ரோந்து பணி களை தீவிரப்படுத்தி உள்ள னர். சென்னை மாநகரம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
- பா.ஜ.க. இளைஞரணி சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த திட்டமிட்டனர்.
- பா.ஜ.க.வினர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.
திருச்சி:
சுதந்திர தின விழாவை 3 நாட்கள் நாடு முழுவதும் கொண்டாட பா.ஜ.க. திட்டமிட்டது. அதன்படி திருச்சி மாநகரில் பா.ஜ.க. இளைஞரணி சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த திட்டமிட்டனர்.
அதன்படி மேஜர் சரவணன் நினைவு சதுக்கத்தில் இருந்து வடகனேரியில் உள்ள சுதந்திர போராட்ட தியாகி வ.வே.சு. ஐயர் வீடு வரை ஊர்வலம் செல்ல ஏற்பாடுகள் நடைபெற்றன.
இதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இந்த நிலையில் தடையை மீறி பா.ஜ.க.வினர் ஊர்வலம் நடத்தினர். திருச்சி மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் இருந்து மாநில இளைஞரணி செயலாளர் ரமேஷ் சிவா, மாவட்டத் தலைவர் ராஜசேகரன், மாநில பொதுச் செயலாளர் கவுதம நாகராஜன் உள்ளிட்டோர் புறப்பட்டு அரசு மருத்துவமனை, எம்.ஜி.ஆர். சிலை வழியாக சென்று மீண்டும் கட்சி அலுவலகம் திரும்பினர்.
முன்னதாக போலீசார் மேஜர் சரவணன் நினைவு சதுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆனால் பா.ஜ.க.வினர் மாற்று வழியை தேர்வு செய்து ஊர்வலத்தை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து பா.ஜ.க.வைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டத் தலைவர் சரவணன், பீம நகர் மண்டல் செயலாளர் மணிகண்டன் ஆகிய 2 நிர்வாகிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதை அறிந்த பா.ஜ.க.வினர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.
பின்னர் நிர்வாகிகள் கைது கண்டித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்தனர். இதை தொடர்ந்து கைதான 2 பேரும் நேற்று இரவு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
- சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரன் ரூ.51,760-க்கு விற்பனையானது.
- வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை கடந்த சில வாரமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரன் ரூ.51,760-க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.52,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.6,565-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.88.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 3 மற்றும் 4-வது அணு உலைகள் நிறுவப்பட்டு வருகிறது.
- மின் உற்பத்திக்கு புதிய வகை எரிபொருட்கள் வினியோகம்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியா ரஷ்யா நாடுகளின் கூட்டு முயற்சியுடன் அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தலா 1,000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 1, 2 என மொத்தம் 2 அணு உலைகள் செயல்பட்டு வருகிறது.
மேலும் 3 மற்றும் 4-வது அணு உலைகள் நிறுவப்பட்டு வருகிறது. விரைவில் இந்த பணிகள் முடிவடைந்து அதன் மூலமும் மின் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது. தொடர்ந்து 5 மற்றும் 6-வது அணு உலைகள் அமைக்கவும் முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது வரை முதல் 2 அணு உலைகளும் தலா 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து வருகின்றன.
இந்த 2 அணு உலைகளிலும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு அணு உலைக்கு 163 எரிகோல்கள் பொருத்தப்படும். இதில் 3-ல் 1 பங்கு எரிகோல்கள் ஆண்டுக்கு ஒரு முறை மாற்றப்படும்.
இதற்காக மின் உற்பத்தி 2 மாதங்களுக்கு மேல் நிறுத்தப்படும். இதனால் எரிபொருள் மாற்றும் காலங்களில் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு வந்தது.
இந்த எரிபொருளை இந்தியா-ரஷ்யா கூட்டு ஒப்பந்தத்தின்படி ரஷ்ய நிறுவனமான ரோஸாடாம் கூடங்குளத்திற்கு வினியோகம் செய்து வருகிறது.

இந்த எரிபொருளுக்கு மாற்றாக புதிய எரிபொருளை உற்பத்தி செய்யும் பணியை ரஷ்யாவின் ரோஸாடாம் நிறுவனத்தின் ஒரு அங்கமான 'டிவிஇஎல் ஜேஎஸ்சி' என்ற நிறுவனம் தொடங்கி உள்ளது. இதற்காக இந்தியா-ரஷ்யா இடையே ரூ.10 ஆயிரத்து 500 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய எரிபொருள் கூடங்குளத்தில் தற்போது அமைக்கப்பட்டு வரும் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 3, 4 அணு உலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
3-வது அணு உலையை பொறுத்தவரை உட்புற அணு உலை அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன. நீராவி என்ஜின்கள், அணு உலை குளிர்விப்பான்கள் அமைக்கும் பணிகள் முடிந்துவிட்டது. 4-வது அணு உலையை பொறுத்தவரை உட்புற அணு உலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அணு உலை அழுத்த கலன்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.
இந்த 2 அணு உலைகளுக்கும் ரஷ்யாவின் ரோஸாடாமின் டிவிஇஎல் நிறுவனம் தயாரிக்கும் புதிய எரிபொருள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக ரோஸாடாம் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய எரிபொருள் மூலம் 18 மாதங்களுக்கு ஒரு முறை 3-ல் ஒரு பங்கு எரிகோல்களை மாற்றினால் போதுமானது. இதன் மூலம் மின் உற்பத்தியில் எந்த தடங்கலும் ஏற்படாது. அப்போது கூடுதல் காலங்கள் மின் உற்பத்தி செய்ய முடியும் என நம்பப்படுகிறது.
புதிய வகை எரிபொருள் மூலம் எரிபொருள் வாங்கும் செலவு குறைவதோடு மின் உற்பத்தி தொடர்ந்து நடைபெறும்.
3 ஆண்டுகளுக்கு 3 முறை இதுவரை எரிபொருள் மாற்றம் நடந்து வந்த நிலையில், இனி 3 ஆண்டுகளுக்கு 2 முறை என குறையும். அப்போது ஒரு முறை எரிபொருள் மாற்றும் செலவு மிச்சமாகும்.
கூடங்குளத்தில் இந்த 6 அணு உலைகளும் செயல்பட தொடங்கிவிட்டால் 6 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யமுடியும். அப்போது மின்தட்டுப்பாடு என்பது இருக்கவே இருக்காது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய நிலவரப்படி இந்தியா முழுவதும் 7 ஜிகா வாட்ஸ் அணு உலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. வருகிற 2029-ம் ஆண்டுக்குள் அதனை 13 ஜிகா வாட்சாக உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் முழு வீச்சில் இந்தியா அந்த பாதையை நோக்கி பயணித்து வருகிறது.
தற்போது புதிய வகை எரிபொருள் வழங்க உள்ள இந்த டிவிஇஎல் நிறுவனம் உலகம் முழுவதும் ஆசிய மற்றும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 14 நாடுகளுக்கு இந்த எரிபொருளை வழங்கி அதன் மூலம் ஆண்டுக்கு 400 பில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- மீனவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
- அரசு கடல் பசுவை அழிவின் விளிம்பில் இருந்து மீட்க முன்னுரிமை அளிக்கிறது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள தெற்கு புதுக்குடியை சேர்ந்த கருப்பையா என்பவர் நாட்டுப் படகில் மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மீனவர்களின் வலையில் அரிய வகை உயிரினமான கடற்பசு சிக்கியது.
அதனை அறிந்த மீனவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதிகாரிகளின் அந்த கடற்பசுவை பத்திரமாக மீட்டு, அதனை மீண்டும் கடலுக்குள் விடுமாறு மீனவர்களிடம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து மீனவர்கள் அந்த கடல்ப சுவை பத்திரமாக மீண்டும் கடலுக்குள் விட்டனர். மீனவர்களின் நேர்மையான இந்த செயலை திருச்சி மண்டல தலைமை வனபாது காவலர் சதீஷ், மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம், அறந்தாங்கி வனச்சரக அலுவலர் மணிவெங்கடேஷ் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில்
தமிழக கடற்பகுதியில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை காப்பது தொடர்பாக வனத்துறை சார்பில் மீனவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி போன்ற பகுதிகளில் காணப்படும் அரிய வகை உயிரினங்களான கடற்பசு, கடல் ஆமை, கடல்அட்டை போன்றவற்றை பாதுகாக்கும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
கடல் பசு' எண்ணிக்கையில் மிகவும் குறைவாக உள்ளதால் அரசு கடல் பசுவை அழிவின் விளிம்பில் இருந்து மீட்க முன்னுரிமை அளிக்கிறது. இந்த சூழலில் தெற்கு புதுக்குடி மீனவர் கருப்பையா வலையில் சிக்கிய கடற்பசுவை மீண்டும் கடலிலேயே விட்டது மிகுந்த பாராட்டுக்கு உரியது என்றனர்.
- சிறுத்தை கால்நடைகளை வேட்டையாடுவது தொடர் கதையாகி வருகிறது.
- சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. சமீப காலமாக சிறுத்தை கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடுவது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் தாளவாடி அருகே தொட்டகாஜனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவண்ணா என்பவர் தனது தோட்டத்தில் பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். வனப்பகுதியை ஒட்டி இவரது தோட்டம் அமைந்துள்ளது.
நேற்று இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று சிவண்ணா தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆட்டை கடித்துக் கொன்றது. காலையில் எழுந்து சிவண்ணா பார்த்த போது ஆடு கொடூரமான முறையில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கால் தடயங்களை ஆய்வு செய்தனர். அப்போது அது சிறுத்தை கால் தடம் என்பதை உறுதி செய்தனர். இதனைக் கேட்டு விவசாயிகள் பீதி அடைந்தனர்.
தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திருவிழா வருகிற 29-ந்தேதி தொடங்கி நடைபெற உள்ளது.
- சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.
தஞ்சாவூர்:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் திருவிழா வருகிற 29-ந்தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

அதன்படி, மராட்டிய மாநிலம், மும்பையில் இருந்து வருகிற 26-ந்தேதி மதியம் 1 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணி வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.01161) மறுநாள் இரவு 11.50 மணிக்கு வேளா ங்கண்ணி வந்தடையும்.
மறுமார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 28-ந்தேதி காலை 3 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும் சிறப்பு ரெயில் (01162) மறுநாள் மாலை 4.20 மணிக்கு மும்பை சென்றடையும்.
இதேபோல், மும்பையில் இருந்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி மதியம் 1 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணி வரும் சிறப்பு ரெயில் (01163) மறுநாள் இரவு 11.50 மணிக்கு வேளாங்கண்ணி வந்தடையும்.

மறுமார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி காலை 3 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும் சிறப்பு ரெயில் (01164) மறுநாள் மாலை 4.20 மணிக்கு மும்பை சென்றடையும்.
மேற்கண்ட சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (புதன்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மேட்டூர் அணை கடந்த 30-ந் தேதி 120 அடியை எட்டி நிரம்பியது.
- அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
சேலம்:
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக தமிழக காவிரி ஆற்றில் அதிகளவில் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை கடந்த 30-ந் தேதி 120 அடியை எட்டி நிரம்பியது. பின்னர் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக 16 கண் பாலம் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அதிக பட்சமாக வினாடிக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் கன அடி தண்ணீர் வரை வெளியேற்றப்பட்டதால் காவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து மழை குறைந்து நீர்வரத்து குறைந்ததால் உபரிநீர் திறப்பும் நிறுத்தப்பட்டது.
ஆனாலும் காவிரி டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதற்கிடையே கர்நாடகாவில் மீண்டும் மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து மேட்டூர் அணை நடப்பாண்டில் 2-வது முறையாக மீண்டும் நிரம்பியது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 120.41 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 45 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்து இருந்தது. அணையில் இருந்து பவர் ஹவுஸ் வழியாக 21 ஆயிரத்து 500 கனஅடியும், 16 கண் பாலம் வழியாக 14 ஆயிரம் கனஅடியும், கால்வாய் மூலம் வினாடிக்கு 500 கனஅடியும் என மொத்தம் அணையில் இருந்து 35 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- வரும் 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரையில் 7 மின்சார ரெயில் (மெமு) ரத்து செய்யப்பட்டுள்ளது.
- 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் 15 மின்சார ரெயில்கள் செங்கல்பட்டு வரை இயக்கப்படும்.
சென்னை:
தாம்பரம் பணிமனையில் கடந்த 23-ம் தேதி முதல் பராமரிப்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணி வரும் 14-ம் தேதி வரை நடைபெறும் என தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது. இந்த நிலையில், பராமாிப்பு பணி வரும் 18-ம் தேதி வரையில் நீட்டிக்கப்படுவதாகவும், அதற்காக மின்சார ரெயில் சேவையில் வரும் 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை புதிய மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், புதிதாக 8 மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* வரும் 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரையில் 7 மின்சார ரெயில் (மெமு) ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம்-தாம்பரம், விழுப்புரம்-மேல்மருவத்தூர், மேல்மருவத்தூர்-சென்னை கடற்கரை, புதுச்சேரி-சென்னை எழும்பூர், சென்னை எழும்பூர்-புதுச்சேரி, சென்னை கடற்கரை-மேல்மருவத்தூர், மேல்மருவத்தூர்-விழுப்புரம் ஆகிய மின்சார ரெயில்கள் (மெமு) ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், வரும் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தாம்பரம்-விழுப்புரம் செல்லும் மின்சார ரெயில் (மெமு) ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரை-பல்லாவரம்-தாம்பரம்
* வரும் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 3.55, 4.20, 4.45, 5.10, 5.30, 5.50, 6.10, 6.30, 6.50, 7.10, 7.30, 7.50, 8.10, 8.30, 8.50, 9.10, 9.30, 9.50, 10.10, 10.30, 10.50, 11.10, 11.30, 11.50, மதியம் 12.10, 12.30, 12.50, 1.10, 1.30, 1.50, 2.10, 2.30, 2.50, மாலை 3.10, 3.30, 3.50, 4.10, 4.30, 4.50, 5.10, 5.30, 5.50, 6.10, 6.30, 6.50, இரவு 7.10, 7.30, 7.50, 8.10, 8.30, 8.50, 9.10, 9.30, 9.50, 10.10, 10.30, 10.50, 11.20, 11.59 ஆகிய நேரங்களில் புறப்படும் 59 மின்சார ரெயில்கள் பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
* மறுமார்க்கமாக, பல்லாவரத்தில் இருந்து காலை 4.25, 4.45, 5.10, 5.35, 6, 6.20, 6.40, 7, 7.20, 7.40, 8, 8.20, 8.40, 9, 9.20, 9.40, 10, 10.20, 10.40, 11, 11.20, 11.40, மதியம் 12, 12.20, 12.40, 1, 1.20, 1.40, 2, 2.20, 2.40, மாலை 3, 3.20, 3.40, 4, 4.20, 4.40, 5, 5.20, 5.40, 6, 6.20, 6.40 இரவு 7, 7.20, 7.40, 8, 8.20, 8.40, 9, 9.20, 9.40, 10, 10.20, 10.40, 11, 11.20, 11.40, 11.59 ஆகிய நேரங்களில் புறப்படும் 59 மின்சார ரெயில்கள் சென்னை கடற்கரை வரை இயக்கப்படும்.
* மேலும், 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 4.10, 5.05, 5.45, 6.25, 7.05, 7.45, 8.25, மதியம் 12.45, 1.05, 1.45, 2.25, மாலை 3.05, 3.45, 4.25, 5.05, 5.45, 6.25, இரவு 7.05, 7.45, 8.25, 9.05, 9.45 ஆகிய நேரங்களில் புறப்படும் 22 மின்சார ரெயில்கள் தாம்பரம் வரை இயக்கப்படும்.
* மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து காலை 3.55, 4.30, 5.35, 6.30, 7.10, 7.45, 8.25, 9.05, 9.45, மதியம் 2.05, 2.25, மாலை 3.05, 3.45, 4.25, 5.05, 5.45, 6.25, இரவு 7.05, 7.45, 8.25, 9.05, 9.45, 10.25, 11.05 ஆகிய நேரங்களில் புறப்படும் 24 மின்சார ரெயில்கள் சென்னை கடற்கரை வரையும் இயக்கப்படும்.
தாம்பரம்- செங்கல்பட்டு
* மேலும், 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையில் தாம்பரத்தில் இருந்து காலை 5, 5.50, 7.30, 9.10, 10.05, 10.55, 11.45 மதியம் 12.35, 1.25, 2.55, மாலை 4.35, 5.25, 6.15 இரவு 10.30, 11.20 ஆகிய நேரங்களில் புறப்படும் 15 மின்சார ரெயில்கள் செங்கல்பட்டு வரை இயக்கப்படும்.
* மறுமார்க்கமாக, செங்கல்பட்டில் இருந்து காலை 3.05, 4, 4.50, 5.40, 9.55, 11.35 மதியம் 1.15, 1.55, 2.45, மாலை 3.35, 4.25, 5.15, 6.05 இரவு 7.45, 8.35, 10.20 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரெயில் தாம்பரம் வரை இயக்கப்படும்.
* தாம்பரத்தில் இருந்து காலை 6.40, இரவு 8.45 ஆகிய நேரங்களில் புறப்படும் ரெயில் காஞ்சிபுரம் வரையும், தாம்பரத்தில் இருந்து காலை 8.20, மாலை 3.45, இரவு 9.35 ஆகிய நேரங்களில் புறப்படும் ரெயில் திருமால்பூர் வரையும், தாம்பரத்தில் இருந்து மதியம் 2.15, இரவு 7.05, 7.55 ஆகிய நேரங்களில் புறப்படும் ரெயில் அரக்கோணம் வரையிலும் இயக்கப்படும்.
* இதேபோல, காலை 4.40, 7.30 மாலை 5.15 ஆகிய நேரங்களில் அரக்கோணத்தில் இருந்து புறப்படும் ரெயிலும், காலை 7, 11, இரவு 8 ஆகிய நேரங்களில் திருமால்பூரில் இருந்து புறப்படும் ரெயிலும், காலை 6.10, 9.30 ஆகிய நேரங்களில் காஞ்சிபுரத்தில் இருந்து புறப்படும் ரெயிலும் தாம்பரம் வரை இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ரெயில்...
* வரும் 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை கடற்கரையில் இருந்து காலை 3.15 மணி முதல் காலை 11.30 மணி வரை அனைத்து மின்சார ரெயில்களும் பல்லாவரம் வரை இயக்கப்படும். மறுமார்க்கமாக, பல்லாவரத்தில் இருந்து காலை 4.05 மணி முதல் மதியம் 12.05 மணி வரை சென்னை கடற்கரை வரை இயக்கப்படும்.
* இதேபோல, கூடுவாஞ்சேரியில் இருந்து காலை 5 மணி முதல் காலை 11.15 மணி வரை இயக்கப்படும் மின்சார ரெயில் செங்கல்பட்டு வரை இயக்கப்படும். அதில் சில ரெயில்கள் அதாவது, கூடுவாஞ்சேரியில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்படும் ரெயில் காஞ்சிபுரத்திற்கும், காலை 8.50 மணிக்கு புறப்படும் ரெயில் திருமால்பூருக்கும் இயக்கப்படும்.
* மறுமார்க்கமாக, செங்கல்பட்டில் இருந்து காலை 4 மணி முதல் 11 மணி வரை இயக்கப்படும் மின்சார ரெயில்கள் கூடுவாஞ்சோி வரை இயக்கப்படும். மேலும், திருமால்பூரில் இருந்து காலை 4.40, 7, 7.30 ஆகிய நேரங்களில் புறப்படும் ரெயிலும், காஞ்சிபுரத்தில் இருந்து காலை 6.10, 9.30 ஆகிய நேரங்களில் புறப்படும் ரெயிலும் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும்.
* மதியம் 1 மணிக்கு மேல் மின்சார ரெயில்கள் வழக்கமாக கால அட்டவணைப்படி அனைத்து ரெயில் நிலையங்களுக்கும் இயக்கப்படும்.
பல்லாவரம்-தாம்பரம்...
குறிப்பாக, வரும் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், இரவு 9.50 மணி முதல் 11.59 மணி வரையும் புறப்படும் ரெயில்கள் பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கமாக, பல்லாவரத்தில் இருந்து காலை 10.20 மணி முதல் மதியம் 2.20 மணி வரை புறப்படும் ரெயில் சென்னை கடற்கரை வரை இயக்கப்படும். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் பல்லாவரம்-தாம்பரம் இடையே மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
- துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த தாமல், முசரவாக்கம் துணை மின் நிலையங்களில் இன்று (செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தாமல், முசரவாக்கம், துணை மின் நிலையங்களை சுற்றி உள்ள தாமல், பாலுசெட்டிசத்திரம், வதியூர், ஒழக்கோல்பட்டு, கிளார், களத்தூர், அவளூர், பெரும்பாக்கம், கூத்திரமேடு, திருப்புட்குழி, சிறுணை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின் தடை ஏற்படும் என காஞ்சிபுரம் தெற்கு செயற்பொறியாளர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மறைமலைநகர் என்.எச்.1, பேரமனூர் சாமியார் கேட், பாவேந்தர் சாலை, என்.எச்.2, விரிவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.






