என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பன்றிக்காய்ச்சல்"

    • அனைத்து பன்றிகளுக்கும் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டுள்ளது.
    • நீலகிரி மாவட்டத்திலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    கோவை:

    கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம், திருச்சூர் பகுதிகளில் வளர்ப்பு பன்றிகளுக்கு, ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து தமிழக-கேரள எல்லையையொட்டி உள்ள கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கோவை-கேரள மாநில எல்லைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 12 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த 12 சோதனை சாவடிகளிலும் 36 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கோவை-கேரள எல்லையில் உள்ள முள்ளி, கோபனாரி உள்ளிட்ட 12 சோதனை சாவடிகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து பன்றிகளுக்கு தேவையான தீவனம் மற்றும் பன்றி இறைச்சி ஏற்றி வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

    இங்கிருந்து கேரள மாநிலத்திற்கு பன்றிகளுக்கான தீவனம், தீவனப் பொருட்கள், பன்றி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது.

    கேரளாவில் இருந்து வரக்கூடிய இதர வாகனங்களும் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

    சோதனை சாவடிகளில் பன்றிகள், உணவு கழிவுகள், பண்ணை தீவனங்கள் உள்ளிட்டவை ஏற்றி கொண்டு வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதர வாகனங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட் பின்னர் அனுமதிக்கப்படுகிறது.

    கோவை மாவட்டத்தில் உள்ள பன்றி பண்ணைகளில் 2,200 பன்றிகள் பராமரிக்கப்படுகிறது. அனைத்து பன்றிகளுக்கும் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டுள்ளது.

    பண்ணைகளில் உள்ள பன்றிகள் திடீரென தீவனம் கொள்ளாமல், காய்ச்சல், சோர்வு, தோல் அரிப்பு, இறப்பு, இறப்புக்கு பின் ரத்தகசிவு ஏற்பட்டால் உடனடியாக அருகே உள்ள கால்நடை மருத்துவமனைக்கு தெரியப்படுத்த வேண்டும். கோவை மாவட்டத்தில் இதுவரை ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் கண்டறியப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி கூடலூர் நாடுகாணி, தாளூர், பாட்டவயல், தமிழக-கர்நாடக எல்லையான கக்கநல்லா உள்ளிட்ட 8 சோதனை சாவடிகளில் வாகன சோதனை நடத்தப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடங்கி உள்ளது.

    சோதனை சாவடி வழியாக வரக்கூடிய வெளிமாநில சரக்கு வாகனங்களின் டயர்களுக்கு கிருமி நாசினி தெளித்த பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கின்றனர்.

    மேலும் பன்றி, அவற்றின் இறைச்சி ஏற்றி வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.

    • தெருவில் திரியும் அனைத்து பன்றிகளையும் பூங்காவில் இருந்து அகற்றும் வரை இந்த நடவடிக்கை தொடரும்.
    • பன்றிகள் சிக்கியவுடன், நோய் கட்டுப்பாட்டு நெறிமுறைகளின்படி கருணை கொலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    கிண்டி தேசிய பூங்காவிற்குள் கடந்த ஜூன் மாதம் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவுவது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் பூங்கா பகுதியில் தெருக்களில் சுற்றி திரியும் பன்றிகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடந்த ஜூன் மாதத்தில் பூங்காவிற்குள், தெருவில் திரியும் 12 பன்றிகள் இறந்து கிடந்தன. இது வனவிலங்கு ஆர்வலர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. கால்நடை பராமரிப்பு துறையினர், இறந்த பன்றிகளின் உடல்களில் இருந்து சேகரித்த மாதிரிகளை போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையின் முடிவில் வீட்டு மற்றும் காட்டு பன்றிகளை பாதிக்கும் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவி இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து தெருவில் திரியும் 40-க்கும் மேற்பட்ட பன்றிகளை பூங்கா வளாகத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கைகளை வனவிலங்கு அதிகாரிகள் தொடங்கினர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    கிண்டி தேசிய பூங்காவிற்குள் கடந்த ஜூன் மாதம் 12 பன்றிகள் இறந்து கிடந்தன. அதன்பிறகு மேலும் 8 பன்றிகளை நாங்கள் கொன்றுள்ளோம். தெருவில் திரியும் அனைத்து பன்றிகளையும் பூங்காவில் இருந்து அகற்றும் வரை இந்த நடவடிக்கை தொடரும். பூங்காவின் பல்வேறு பகுதிகளில் பன்றிகளை கண்டறிவது சவாலானது. பன்றிகளை கவரும் வகையில் தீவனத்துடன் கூடிய கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பன்றிகள் சிக்கியவுடன், நோய் கட்டுப்பாட்டு நெறிமுறைகளின்படி கருணை கொலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல், பன்றிகளுக்கு ஆபத்தானது என்றாலும், பூங்காவிற்குள் உள்ள மற்ற வனவிலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. இந்த வைரஸ் பன்றிகளை மட்டுமே பாதிக்கிறது. காட்டுப்பன்றிகள் மற்றும் முள்ளம்பன்றிகள் போன்ற விலங்குகளுக்கும் பரவக்கூடும். ஆனால் மற்ற விலங்குகளுக்கு பரவக்கூடியது அல்ல.

    இந்த பன்றிக்காய்ச்சல் வைரஸ் மனிதர்களுக்கு தொற்றுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என்றாலும், வைரஸ் பிறழ்வுகளுக்கான சாத்தியக்கூறுகள் பற்றி உலக அளவில் சுகாதார அதிகாரிகள் விழிப்புடன் உள்ளனர். கிண்டி தேசிய பூங்காவை பொறுத்தவரை, பூங்காவின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும், சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் வீடுகளில் உள்ள பன்றிகளுக்கு இந்த நோய் பரவாமல் தடுக்கவும், கிண்டி தேசிய பூங்காவில் தெருக்களில் திரியும் பன்றிகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • நோய் பாதித்த பகுதிகளில் இருந்த 2 பண்ணைகளில் இருக்கும் பன்றிகளை கொல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • தொற்று பாதித்த பன்றி பண்ணையை சுற்றி ஒரு கிலோமீட்டர் பரப்பளவுக்கு பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள தண்ணீர்முக்கம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் ஒரு பன்றிப்பண்ணையில் 2 பன்றிகள் திடீரென இறந்தன. அவை வினோத நோய் பாதிப்பால் இறந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த பன்றிகளின் உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, போபாலில் உள்ள விலங்குகள் நோய் ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு பரிசோதனை நடத்தியதில், இறந்த 2 பன்றிகளுக்கும் கொடிய வைரஸ் நோயான ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து கொடிய வைரஸ் நோய் பாதித்த பகுதிகளில் இருந்த 2 பண்ணைகளில் இருக்கும் பன்றிகளை கொல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதன்படி 2 பண்ணைகளில் இருந்த 9 பெரிய பன்றிகள் மற்றும் 9 குட்டி பன்றிகள் கொல்லப்பட்டு, நெறிமுறைகளின்படி தனி இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக புதைக்கப்பட்டன. தொற்று பாதித்த பன்றி பண்ணையை சுற்றி ஒரு கிலோமீட்டர் பரப்பளவுக்கு பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

    அந்த இடங்களுக்கு பன்றி உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை கொண்டுசெல்லக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமின்றி அந்த பகுதிகளில் சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் தொற்று பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் பன்றி இறைச்சி வினியோகம் மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அந்த பகுதிகளில் இருந்து மற்ற இடங்களுக்கு இறைச்சியை கொண்டுசெல்லவும் தடை செய்யப்பட்டு இருக்கிறது.

    • காய்ச்சல் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது.
    • டெங்கு காய்ச்சலுக்கு 225 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்குவதற்கு முன்னதாகவே டெங்கு, மலேரியா, பன்றி மற்றும் எலிக்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவத்தொடங்கின.

    தற்போது பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் காய்ச்சல் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது.

    தினமும் ஆயிரக்கணக்கானோர் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். நேற்று ஒரே நாளில் காய்ச்சல் பாதித்த 13 ஆயிரத்து 756 பேர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்று கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. டெங்கு காய்ச்சலுக்கு மாநிலம் முழுவதும் 225 பேர் பாதிக்கப் பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கேரளாவில் வழக்கமான காய்ச்சல்கள் மட்டுமின்றி மேற்கு நைல் உள்ளிட்ட அரியவகை காய்ச்சல்களும் பரவியுள்ளது. மேலும் மூளையை திண்ணும் அமீபா தொற்று நோயான அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்பும் அங்கு இருந்து வருகிறது.

    தேங்கிக்கிடக்கும் அசுத்தமான தண்ணீரில் குளிப்பதன் மூலமாக அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்று மூக்கு மற்றும் காதுமடல் வழியாக பாதிக்கிறது.

    அமீபிக் மூளைக்காய்ச்ச லுக்கு கோழிக்கோட்டை சேர்ந்த 12 வயது சிறுவன், மலப்புரத்தை சேர்ந்த 5 வயது சிறுவன், கண்ணூரை சேர்ந்த 13 வயது சிறுமி என 3 சிறுவர்கள் பலியாகி விட்டதால் மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

    மாநிலத்தில் 3 பேருக்கு மட்டுமே அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் மேலும் ஒரு சிறுவன் பாதிக்கப்பட்டான்.

    அவன் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்ற வரும் நிலையில், மேலும் ஒரு சிறுவனுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. திருச்சூர் மாவட்டம் படூர் பகுதியை சேர்ந்த அந்த சிறுவனுக்கு 12 வயது ஆகிறது.

    கடந்த மாதம் காய்ச்சலுக்கு ஆரம்ப சுகாதார நிலையததில் சிகச்சை பெற்ற வந்த அந்த சிறுவன், தற்போது திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான்.

    புதுச்சேரியில் உள்ள ஆய்வு மையத்தில் செய்யப்பட்ட பரிசோதனையில் அமீபிக் மூளைக் காய்ச்சல் தொற்று பாதிப்பு அந்த சிறுவனுக்கு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சிறு வனையும் சேர்த்து கேரளா மாநிலத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்று பாதிப்பு 5 ஆக உயர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பருவமழை காலங்களில் காய்ச்சல், சளி வழக்கமானது தான்.
    • மூளைக்காயச்சலை ஆரம்ப நிலையில் கண்டு பிடித்தால் குணமாக்கி விடலாம்.

    சென்னை:

    சென்னையில் பருவமழை அவ்வப்போது பெய்வதால் காய்ச்சல் அறிகுறியுடன் ஏராளமான குழந்தைகள் ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து செல்லப்படு கிறார்கள்.

    அவ்வாறு அழைத்து செல்லபபடும் குழந்தைகளில் பல குழந்தைகள் வாந்தி, கழுத்து வலி, மாறுபட்ட மன நிலைகளுடன் காணப்பட்டன.

    இந்த அறிகுறியுடன் காணப்பட்ட குழந்தைகள் சாப்பிட மறுக்கிறார்கள். தொடர்ந்து அழுகிறார்கள். இந்த மாதிரி குழந்தைகள் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.

    இதுபற்றி சூரியா மருத்துவமனையின் குழந்தைகள் நல மூத்த மருத்துவர் டாக்டர் தீபாஸ்ஹரிகரன் கூறியதாவது:-

    பருவமழை காலங்களில் காய்ச்சல், சளி வழக்கமானது தான். ஆனால் காய்ச்சல் வந்ததும் மருந்து கொடுத்தும் 48 மணி நேரத்துக்கும் மேலாக காய்ச்சல் நீடித்தாலோ, குழந்தைகள் சோர்ந்து போனாலோ உடனே மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும்.

    காய்ச்சல் வந்தாலும் அது 103 டிகிரி அளவுக்கு நெருப்பாக கொதிப்பது, சமாதானப்படுத்த முடியாமல் அழுது கொண்டிருப்பது, கொஞ்சம் கூட பால் குடிக்க முடியாமல் சோர்ந்து இருப்பது, 6 முறைக்கு மேல் வாந்தி, பேதி ஏற்படுவது, இருமும்போது முச்சு வாங்குவது போன்ற அறிகுறிகள் இருந்தாலும உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

    மூளைக்காயச்சலை ஆரம்ப நிலையில் கண்டு பிடித்தால் குணமாக்கி விடலாம். பள்ளிகள் திறந்ததும் யாராவது ஓரு குழந்தைக்கு காய்ச்சல் காணப்பட்டாலும் மற்றவர்களுக்கு எளிதாக பரவிவிடும்.

    குழந்தைகளுக்கு அனைத்து தடுப்பூசிகளையும் பொதுவாக குழந்தைகள் 4 வயதாகும் போது 4-வது பூஸ்டர் ஊசியை பலர் போடாமல் இருந்து விடுகிறார்கள். அது தவறு.

    அதிமாக சளி பிடிக்கும் குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் பன்றி காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

    முக்கியமாக காய்ச்சல், சளி இருக்கும் குழந்தைகள் கை, குட்டையை வைத்து இருமுவதற்கு பழக்கி கொடுக்க வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவவும் சொல்லித்தர வேண்டும் என்றார்.

    பழனி அருகே, பன்றிக் காய்ச்சலுக்கு ரேஷன் கடை ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
    கீரனூர்:

    பழனியை அடுத்த புளியம்பட்டி அருகே உள்ள வில்வாதம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 46). இவருடைய மனைவி சிவசெல்வி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மணிகண்டன் அதே பகுதியில் செயல்படும் ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 8 நாட்களுக்கு முன்பு மணிகண்டனுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார். அதையடுத்து மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பல்வேறு பரிசோதனையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு (எச்1 என் 1) இருப்பது தெரியவந்தது.

    அதையடுத்து தனிப்பிரிவுக்கு மாற்றப்பட்ட மணிகண்டனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக மாறியது. இதனால் பதற்றமடைந்த அவரின் உறவினர்கள் மணிகண்டனை பழனி அரசு மருத்துவமனைக்கு நேற்று மாலை 4 மணிக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பழனி அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் விஜயசேகர் கூறுகையில், மணிகண்டன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது சுய நினைவு இன்றியே இருந்தார். அவருடைய உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகவே இருந்தது. இருந்த போதிலும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார், என்றார்.

    பன்றிக்காய்ச்சலுக்கு ரேஷன் கடை விற்பனையாளர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
    ×