search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வானிலை ஆய்வு மையம்"

    • குறிப்பாக வயதானவர்கள், நோய் பாதிப்பு உள்ளவர்கள் வெயிலால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் பகலில் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் தான் வழக்கமாக வெப்ப நிலை அதிகரிக்கும்.

    ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே சுட்டெரிக்கும் வெயில் தாக்கி வருகிறது. கால நிலை மாற்றத்தால் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த மாதத்தில் படிப்படியாக அதிகரித்த வெப்ப நிலை ஒரு சில மாவட்டங்களில் 109 டிகிரி செல்சியஸ் வரை எகிறியது. வட தமிழக உள் மாவட்டங்களில்தான் வெயில் வறுத்தெடுத்து வருகிறது.

    மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர். வீடுகளிலும் புழுக்கம் இருந்து வருவதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தமிழகத்தில் 14 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கி வருவதால் வெளியே மக்கள் செல்லவே பயப்படுகிறார்கள்.

    குறிப்பாக வயதானவர்கள், நோய் பாதிப்பு உள்ளவர்கள் வெயிலால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் பகலில் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் பல மாவட்டங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் பகல் வேளையில் மக்களின் நடமாட்டம் குறைந்து உள்ளது.

    ஈரோடு, சேலம், கரூர், வேலூர், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வெயிலின் உக்கிரம் கடுமையாக இருந்து வருகிறது. தமிழக கடலோர மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் தாக்கக் கூடும் என்று எச்சரித்துள்ளது. இதற்காக மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலை கடந்த சில நாட்களாக தாக்கி வருகிறது. இன்றும் 110 டிகிரி வரை வெப்பம் தாக்கியது.

    சுட்டெரிக்கும் கோடை வெயில் பெரும்பாலான மாவட்டங்களில் நீடித்து வருவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். வெப்ப அலை தாக்கம் மேலும் 4 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் அனல் காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் அடுத்து வரும் ஒவ்வொரு நாட்களும் வெப்பம் அதிகமாக இருக்கும். கடலோர மாவட்டங்கள் தவிர ஏனைய பிற மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இன்று முதல் 27-ந்தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழகத்தில் அடுத்த 2 வாரங்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும். வானிலையை பொறுத்தவரை 5 நாட்களுக்கு மட்டும் முன் எச்சரிக்கை அறிவிப்பாக வெளியிடப்படும். அந்த வகையில் வருகிற நாட்கள் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும். இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும், அதாவது 110 டிகிரி வரை வெயிலின் உக்கிரம் இருக்கும்.

    காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30 முதல் 50 சதவீதம் ஆகவும், மற்ற நேரங்களில் 40 முதல் 75 சதவீதம் ஆகவும் மற்றும் கடலோரப் பகுதிகளில் 50 முதல் 85 சதவீதம் ஆகவும் இருக்கக் கூடும்.

    அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் இருக்கும் போது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.

    இயல்பை விட 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் தாக்கினால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படும். அந்த வகையில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

    தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும். கன்னியாகுமரி, வால்பாறை பகுதியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
    • குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்கலாம். ஈரமான ஆடைகளை பயன்படுத்தலாம்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் இயல்பைவிட 5 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து, வாட்டி வதைக்கிறது. இனி வரக்கூடிய நாட்களிலும் வெயிலின் கோரத் தாண்டவத்தை பார்க்க முடியும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    அதன்படி, தமிழ்நாட்டில் சில இடங்களில் இயல்பைவிட 2 முதல் 5 டிகிரி வரை வெப்ப அலை அதிகரித்து வெயில் உக்கிரமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    'எவ்வளவு வெயில் அடித்தாலும் தாங்கிவிடலாம், ஆனால் ஒரு மழைக்கு நம்மால் தாங்க முடியாது' என்ற பேச்சு இருந்து வருகிறது. ஆனால் எவ்வளவு மழையை தாங்கிவிடலாம் போல, ஆனால் இப்போது அடிக்கும் வெயிலை தாங்க முடியவில்லை என்று சொல்லும் நிலை வந்துவிட்டது. அந்தளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது.

    இந்த கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்வதுதான் ஒரே வழி. அதற்கு பல தரப்பில் இருந்து அறிவுரைகள், பாதுகாப்பு வழிமுறைகள் தெரிவிக்கப்படுகின்றன. அந்த வரிசையில் வானிலை ஆய்வு மையமும் கொளுத்தும் வெயிலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? எதை செய்ய வேண்டும்? எதனை செய்யக் கூடாது? என்ற வழிமுறைகளை தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

    * தாகம் இல்லாவிட்டாலும் போதுமான அளவு தண்ணீரை முடிந்தளவு அடிக்கடி குடிக்க வேண்டும்.

    * லேசான, வெளிர் நிறம் மற்றும் தளர்வான பருத்தி ஆடைகளை அணியலாம். வெயிலில் செல்லும் போது குடை, தொப்பி எடுத்துச் செல்வது அவசியம்.

    * பயணத்தின் போது தண்ணீர் பாட்டில்களை அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும்.

    * மயக்கம் மற்றும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.


     

    * சர்க்கரை-உப்பு கரைசல், வீட்டில் தயாரிக்கப்பட்ட லஸ்சி, வடிகஞ்சி, எலுமிச்சை தண்ணீர், மோர் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். இவைகள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளும்.

    * வெளியில் நிறுத்தப்பட்ட வாகனங்களில் குழந்தைகளையோ, செல்லப் பிராணிகளையோ விட்டுவிடக்கூடாது.

    * வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைக்கலாம்.

    * குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்கலாம். ஈரமான ஆடைகளை பயன்படுத்தலாம்.

    இதுமட்டுமல்லாமல், வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நபருக்கு வெப்பத்தால் பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருக்கிறது. ஆகவே அதுபோன்ற நபருக்கு முதலுதவி சிகிச்சை எவ்வாறு அளிக்க வேண்டும் என்பது பற்றியும் ஆய்வு மையம் விளக்கியுள்ளது.

    அதன்படி, வெப்பத்தின் தாக்கத்தால் சோர்வடையும் நபரை நிழலின் கீழ் படுக்க வைக்கவேண்டும். ஈரத்துணியால் அவரை துடைத்து கழுவ வேண்டும். சாதாரண வெப்பநிலையில் இருக்கும் தண்ணீரை தலையில் ஊற்றலாம். அவருடைய உடல் வெப்பநிலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் சர்க்கரை - உப்பு கரைசல், எலுமிச்சை சர்பத் ஆகியவற்றை வழங்கலாம். அதன் பின்னர் அருகில் உள்ள சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

    • வருகிற 28-ந்தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும் எனவும், இயல்பைவிட சில இடங்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும்.
    • தென் மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    கோடை காலம் தமிழ்நாட்டில் தொடங்கி வாட்டி வதைத்து வருகிறது. ஈரோடு, சேலம், கரூர், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருத்தணி உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பூமத்தியரேகையை ஒட்டியுள்ள கடல் பகுதிகளின் மேற்பரப்பில் நிலவும் வெப்பம் காரணமாகவும், காலநிலை மாற்றத்தின் விளைவாகவும் வெயிலின் கொடுமை நாளுக்குநாள் அதிகரிக்கிறது.

    அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பே 110 டிகிரியை தொடும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    அந்தவகையில் நேற்று முன்தினம் சேலத்தில் 108 டிகிரியும், அதற்கு முந்தைய நாள் ஈரோட்டில் 109 டிகிரியும் என வெயில் தன்னுடைய கோர முகத்தை காட்ட ஆரம்பித்துவிட்டது. இது மேலும் வரக்கூடிய நாட்களிலும் அதிகரித்தே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை எச்சரிக்கும் விதமாக இயல்பைவிட 5 டிகிரி வரை அதிகரித்தால் விடுக்கப்படக்கூடிய 'மஞ்சள் எச்சரிக்கை' தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி, வருகிற 28-ந்தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும் எனவும், இயல்பைவிட சில இடங்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் எனவும் எச்சரித்து இருக்கின்றனர்.

    இதில் இன்று (வியாழக்கிழமை) திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 18 வடக்கு உள் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.

    பொதுவாக வானிலை ஆய்வு மையம் வெயிலின் அளவை செல்சியஸ் என்ற அளவிலேயே குறிப்பிடுகிறது. அதனை 'பாரன்ஹீட் டிகிரி' என்ற அளவில் மாற்றுகிறோம். அந்த வகையில் மேற்சொன்ன செல்சியஸ் அளவின் படி பார்க்கும் போது, இயல்பைவிட 5 டிகிரி முதல் 9 டிகிரி வரை வெப்பம் அதிகரித்திருக்கும்.

    அதனைத்தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி ஆகிய 24 வட மாவட்டங்களில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை, அதாவது 4 முதல் 7 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் என ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    மற்ற இடங்களில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரை, அதாவது 100.4 டிகிரி வரை வெயில் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, தென் மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.

    • தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.
    • அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களில் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கோவை :

    தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு கடுமையாக உள்ளது. இயல்பை விட 4, 5 டிகிரி செல்சியஸ் வெயில் அதிகமாக இருப்பதால் மக்கள் அவதிப்படுகிறார்கள். வட உள் மாவட்டங்களில் வெப்ப அலை தாக்கி வருகிறது.

    ஈரோடு, சேலம், தர்மபுரி, வேலூர், திருச்சி, கரூர், மதுரை, திருப்பத்தூர், கோவை, நாமக்கல் மாவட் டங்களில் 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெயில் சுட்டெரித்தது.

    அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களில் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் தமிழக உள் மாவட்டங்களில் 39 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தனது 23.4.2024 நாளிட்ட அறிவிக்கையில், தமிழ்நாட்டின் வட உள் மாவட்டமான கோயம்புத்தூர் மாவட்டத்தில் வரும் நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறும், வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    • வேலூர், காஞ்சிபுரத்தில் நாளை பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை
    • தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது

    தமிழகம் முழுவதும் இன்று 15 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக சேலத்தில் ௧௦௮ டிகிரி வெயில் கொளுத்தியது. சென்னையில் 100 டிகிரி வெப்பமும், கோவையில் 102 டிகிரி வெப்பமும் பதிவானது

    வேலூர், காஞ்சிபுரத்தில் நாளை பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்

    இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

    வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    ஒவ்வொரு ஊரிலும் பதிவான வெயிலின் அளவு வருமாறு:-

    தஞ்சாவூர் 102.2, திருப்பத்தூர் 106.88, திருச்சி 104.18, திருத்தணி 103.64, வேலூர் 106.7, பாளையங்கோட்டை 102.2 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

    • சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
    • வரும் 25-ந்தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    வட தமிழக உள் மாவட்டங்களில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும்.

    தமிழக உள் மாவட்டங்களில் 27-ந்தேதி வரை வெப்பநிலை இயல்பைவிட 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 43 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

    23, 24-ந்தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    வரும் 25-ந்தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இயல்பைவிட 5,6 செல்சியசுக்கு மேல் அதிகமாக வெப்பம் தாக்கினால் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்படும்.
    • வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு வெப்ப பக்கவாதம் (ஸ்டோக்) ஏற்படக்கூடும்.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மார்ச் மாதத்திலேயே தொடங்கிவிட்டது. வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் வெயில் தாக்கம் தொடங்கி மே மாதத்தில் அக்னி நட்சத்திரத்தின் போது வெயிலின் உக்கிரம் உச்சத்தை அடையும்.

    ஆனால் இந்த வருடம் கோடை வெயில் முன் கூட்டியே தாக்கி வருவதால் பொதுமக்கள் வாடி வதங்கி வருகின்றனர். பருவகால மாற்றத்தால் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருகிறது.

    தமிழகத்தின் வட உள்மாவட்டங்களில் இயல்பைவிட 3,4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்து உள்ளது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியவில்லை.

    தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 109 டிகிரி வெயில் தாக்கி உள்ளது. சேலத்தில் 107, தர்மபுரி 106 டிகிரி வெயில் கொளுத்தியது.

    ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே வெப்ப அலை வீசி வருவதால் மக்கள் பகலில் மட்டுமின்றி இரவு நேரத்திலும் உஷ்ணத்தில் அவதிப்படுகிறார்கள்.

    14 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கி வருகிறது. வெயில் தாக்கத்தால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். சிறுவர்கள், முதியவர்கள் வெயிலில் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

    வெயிலின் தாக்கம் ஜூன் மாதம் வரை இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். தமிழகம் மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும் வெயில் அதிகமாக இருப்பதால் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பகலில் வெளியே வரவேண்டாம் என அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன. வெயிலின் கோர தாண்டவத்தை தாங்க முடியாமல் உயிர் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பொது மக்கள் கோடை வெயில் தாக்கத்தால் பாதிக்கக்கூடாது என்பதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெப்ப ஸ்டோக், மயக்கம், சோர்வு ஏற்படுவோருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    தமிழகத்தில் வழக்கத்திற்கு மாறாக வெப்பதாக்குதல் அதிகரித்து வருவதால் சென்னை வானிலை மையமும் பொதுமக்களுக்கு அவ்வப்போது முன்னெச்சரிக்கை செய்து பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி வருகின்றது.


    இதுகுறித்து வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:-

    வெப்ப அலை என்பது புதிதல்ல. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் ஏற்படக் கூடியவைதான். சராசரி வெப்ப அளவைவிட கூடுதலாக 4,5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் போது வெப்ப அலை என்கிறோம். காற்றின் ஈரப்பதம் அதிகரிப்பதால் அதாவது 50 சதவீதத்திற்கு மேல் அதிகரித்தால் உடலில் இருந்து வியர்வை ஆவியாக மாறாது. ஆவியாக மாறாமல் போகும் போது உடலில் சூடு ஏற்படும். பல பிரச்சினைகள் வரும்.

    தலைவலி, மயக்கம், சோர்வு போன்றவை ஏற்படக் கூடும். வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு வெப்ப பக்கவாதம் (ஸ்டோக்) ஏற்படக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர பகுதிகளை ஒட் டிய மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதம் அதிகரிப்பதால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    அதே நேரத்தில் கடல் காற்று உள்ளே வரும் போது வெப்ப நிலை குறையும். பொதுமக்கள் காலை 11 மணி முதல் பகல் 3 மணி வரை வெயிலில் செல்லாமல் தவிர்ப்பது நல்லது. இதனால் வயல் வெளியில் வேலை செய்பவர்கள் கூலித் தொழிலாளர்கள், மூட்டைத் தூக்குபவர்கள் பாதிக்கக்கூடும். ஓட்டப் பயிற்சி, உடல் பயிற்சி செய்பவர்கள் கூட கவனமாக அதில் ஈடுபட வேண்டும்.

    வெப்ப அலையை மஞ்சள் அலர்ட் மூலம் எச்சரிக்கப்படுகிறது. இயல்பைவிட 5,6 செல்சியசுக்கு மேல் அதிகமாக வெப்பம் தாக்கினால் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்படும். தமிழகத்தில் அது போன்ற நிலை இல்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • ஏப்.24-ந்தேதி வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆக இருக்கக்கூடும்.
    • தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஏப்.23 வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. பகல் நேரங்களில் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.

    மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் வியர்வை மழையில் நனைந்தபடியே கொளுத்தும் வெயிலில் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்படி பகலில் அதிகரித்து காணப்படும் வெயிலால் இரவு நேரத்திலும் புழுக்கம் அதிகரித்து அனல் காற்றே வீசுகிறது.

    இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வட தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில், அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை 3-5 செல்சியஸ் வரை இயல்பை விட அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    ஏப்.21-ந்தேதி முதல் ஏப்.24-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

    ஏப்.24-ந்தேதி வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆக இருக்கக்கூடும்.

    மற்ற நேரங்களில் 40-75% ஆகவும், கடலோரப் பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும்பொழுது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.

    தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஏப்.23 வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    நாளை தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    20.04.2024: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    21.04.2024 மற்றும் 22.04.2024: தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    23.04.2024 மற்றும் 24.04.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    18.04.2024 முதல் 22.04.2024 வரை : அடுத்த இரண்டு தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் படிப்படியாக 2° செல்சியஸ் உயரக்கூடும். அதற்கு அடுத்த மூன்று தினங்களில் 2°- 3° செல்சியஸ் சற்றே குறையக்கூடும்.

    18.04.2024 முதல் 22.04.2024 வரை : காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-85 % ஆகவும் இருக்கக்கூடும்.

    அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

    18.04.2024 மற்றும் 19.04.2024: வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    19.04.2024 மற்றும் 20.04.2024: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    • தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
    • தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வருகிற 21-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    * தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மாலை 4 மணிக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    * நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * வருகிற 17-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    * தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வருகிற 21-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை முதல் வருகிற 21-ந்தேதி வரை சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அடுத்த 3 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்குதலை சமாளிக்க காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது.
    • தமிழகத்தில் தற்போது கோடை மழை ஆங்காங்கே பெய்து வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. ஈரோடு பகுதியில் மிக அதிகமாக வெப்பத்தின் தாக்கம் பதிவாகி வந்தது.

    இந்த நிலையில் கடந்த வாரம் தமிழகம் முழுவதும் வெப்ப நிலை அதிகரித்தது.

    10-க்கும் மேற்பட்ட நகரங்களில் சராசரியாக 106 டிகிரி வரை வெயில் அடித்தது. கடந்த 2 நாட்களாக வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது. நேற்று ஈரோட்டில் அதிகப்பட்சமாக 102.92 டிகிரி வெப்பம் பதிவானது.

    இந்த நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு அதாவது நாளை (செவ்வாய்க்கிழமை), முதல் வியாழக்கிழமை வரை வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு நிறுவனம் கூறி உள்ளது. இந்த 3 நாட்களும் கூடுதலாக 5 டிகிரி வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

    எனவே அடுத்த 3 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்குதலை சமாளிக்க காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக வெயிலில் சென்று விட்டு உடனடியாக குளிர்பானம் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை 24 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ளது. இந்த 24 நாட்களும் அதிகபட்ச வெயில் தாக்கம் இருக்கும். எனவே அதற்கு ஏற்ப வெளியூர் பயணங்களை அமைப்பது நல்லது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கோடை மழையும் ஆங்காங்கே பெய்து வருகிறது. நேற்று தென் மாவட்டங்களில் பல பகுதிகளில் கோடை மழை பெய்தது. வடதமிழகம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் பரவலாக கோடை மழை காணப்பட்டது.

    விருதுநகர் மாவட்டம் கோவிலங்குளம் பகுதியில் நேற்று அதிகபட்சமாக 40 மி.மீ. கோடை மழை பெய்து இருந்தது. வருகிற 20-ந்தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான அளவுக்கு ஆங்காங்கே கோடை மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.
    • புதுச்சேரியின் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு.

    தென் இந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    13-ந் தேதி (இன்று) குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தெற்கு கேரள கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இந்நிலையில், தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, நெல்லை, குமரியில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், புதுச்சேரியின் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ×