என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடு புகுந்து நகை, பணம் திருடிய வடமாநில தொழிலாளி கைது
    X

    வீடு புகுந்து நகை, பணம் திருடிய வடமாநில தொழிலாளி கைது

    • போலீசார் பிடிபட்ட வாலிபரை கைது செய்து அவருடன் வந்தவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கொள்ளை போன பொருட்களின் மதிப்பு குறித்தும் சோதனை நடத்தி வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வேல்வார்கோட்டை பிரிவு அருகே தனியார் நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலையின் எதிரில் குளத்துக்கரை பிரிவில் ஏராளமான மில் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது24) என்பவரது வீட்டில் மர்மநபர்கள் சிலர் உள்ளே புகுந்தனர். அவர்கள் ஜன்னல் கம்பியை அறுத்து வீட்டுக்குள் நுழைந்து பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் நகைகளை திருடினர். சத்தம் கேட்டு கார்த்திக் எழுந்து பார்த்தபோது அதில் சுதாரித்துக்கொண்ட 2 பேர் தப்பி ஓடினர். பின்னர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ஒருவரை பிடித்து அங்கிருந்த மின் கம்பத்தில் கட்டி வைத்தனர்.

    அவரிடம் விசாரித்ததில் அவர் ஒடிசா மாநிலம் ஜோன்பூர் பகுதியை சேர்ந்த அஜய் (19) என தெரிய வந்தது. இவருடன் சேர்ந்து மேலும் 2 பேர் வந்து வீட்டில் கொள்ளையடித்ததும் தெரிய வரவே அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர்கள் சித்திக் மற்றும் கிருஷ்ணவேணி தலைமையிலான போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதுடன் கொள்ளை நடந்த இடத்திலும் ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், தனியார் மில்லில் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு தங்கள் பாதுகாப்பில் இடம் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. இதனால் சாலையோரம் டெண்ட் அமைத்து தங்கி இருக்கும் அவர்கள் இரவு நேரங்களில் வீடுகளை நோட்டமிட்டு இதுபோன்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    எனவே வடமாநில தொழிலாளர்களுக்கு மில் நிர்வாகம் இடம் கொடுக்க நடவடிக்கை எடுப்பதுடன் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    இதனையடுத்து போலீசார் பிடிபட்ட வாலிபரை கைது செய்து அவருடன் வந்தவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளை போன பொருட்களின் மதிப்பு குறித்தும் சோதனை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×