search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chennai fort"

    சுதந்திர தினத்தன்று சென்னை கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதான காவலாளி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    கோவை:

    சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று ஒரு மிரட்டல் அழைப்பு வந்தது.

    சென்னை கோட்டையில் வெடிகுண்டு வைத்துள்ளேன். அது 9 மணிக்கு வெடிக்கும். முதல்-அமைச்சர் கொடி ஏற்ற முடியாது. முடிந்தால் தடுத்து பாருங்கள் என கூறி விட்டு இணைப்பை துண்டித்தார்.

    இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மிரட்டல் வந்த செல்போன் எண் மூலம் நடத்திய விசாரணையில் கோவையில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டது தெரிய வந்தது. உடனடியாக சென்னை போலீசார் கோவை மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவரது முகவரியில் அந்த செல்போன் எண் பெறப்பட்டிருந்தது. உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை பிடித்து விசாரித்தனர். அவர் அந்த எண்ணை 6 மாதங்களுக்கு முன்பே ஒப்படைத்து விட்டதாக கூறினார்.

    இதையடுத்து மிரட்டல் வந்த நம்பரில் இருந்து யார்- யாருக்கெல்லாம் பேசுகிறார்கள்? எங்கிருந்து பேசுகிறார்? என விசாரணை நடந்தது. இதில் கோவை ஒசூர் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்க்கும் மகாராஜன் என்ற மாரிராஜா (வயது 38) என்பவர் சிக்கினார். அவரை பிடித்து விசாரித்த போது கோட்டைக்கு மிரட்டல் விடுத்ததை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    மாரிராஜாவின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி ஆகும். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 3 வருடங்களாக கோவையில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

    தற்போது பணியாற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்துள்ளார். அவர் போலீசாரிடம் கூறுகையில், நான் வேலை செய்த இடத்தில் நிற்கும் போது அந்த வழியாக காரில் செல்லும் அதிகாரிகள் என்னை கண்காணிக்கிறார்கள். இதனால் தான் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டினேன் என்றார். மேலும் சொன்ன பதிலையே திரும்ப, திரும்ப சொல்கிறார். அவர் கூறியதை வாக்குமூலமாக பதிவு செய்தனர்.

    பின்னர் மாரிராஜா மீது தகாத வார்த்தைகள் பேசுதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    மாரிராஜாவை வருகிற 29-ந் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து மாரிராஜா கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

    சுதந்திரத்தன்று கோட்டையில் உள்ள கொடிக்கம்பத்தில் பறக்க விடுவதற்காக மகாராஷ்டிராவில் இருந்து தயாரிக்கப்பட்ட புத்தம் புதிய தேசிய கொடி சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. #IndependenceDay2018
    சென்னை:

    ஆகஸ்டு 15-ந் தேதி நாட்டின் 71-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

    சென்னையில் தலைமை செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.

    இதையொட்டி கோட்டை கொத்தளத்தில் உள்ள கொடிக்கம்பம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்தன்று கொடிக் கம்பத்தில் பறக்க விடுவதற்காக மகாராஷ்டிராவில் உள்ள காதிபவன் மூலம் தயாரிக்கப்பட்ட புத்தம் புதிய தேசிய கொடி சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 8 அடி, அகலம் 12 அடி.

    இது குறித்து காதிபவன் அதிகாரிகள் கூறியதாவது:-

    மத்திய-மாநில அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் காதியில் தயாரிக்கப்பட்ட ஐ.எஸ்.ஐ. சான்று பெற்ற தேசிய கொடிகளை தான் ஏற்ற வேண்டும்.

    தேசிய கொடிகள் மகாராஷ்டிரா மாநிலம்  நான்டெக், மும்பை போர்விலி பகுதிகளில் உள்ள மத்திய அரசின் காதி நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படுகிறது.

    தேசிய கொடி, 4 இழைகளால் தயாரிக்கப்பட்டு உள்ளது. இது மழை வெயில் காலத்திலும் கிழியாது.

    தேசிய கொடிக்கு தனி அளவுகள் உள்ளன. ஐ.எஸ்.ஐ. சான்றிதழும் பெற வேண்டும். அந்த வகையில் சென்னையில் உள்ள காதிபவன் மூலம் தேசியக் கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #IndependenceDay2018
    சுதந்திர தின விழா கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள், புனித ஜார்ஜ் கோட்டைக்கு எதிர்புறம் உள்ள பூங்காவில் தீவிரமாக நடந்து வருகிறது. #IndependenceDay
    சென்னை:

    தமிழக அரசு சார்பில், வருகிற 15-ந்தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. விழாவையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியேற்றி உரையாற்றுகிறார். சுதந்திர தின விழா கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள், புனித ஜார்ஜ் கோட்டைக்கு எதிர்புறம் உள்ள பூங்காவில் தீவிரமாக நடந்து வருகிறது.

    மேலும், சுதந்திர தின விழாவில் பங்கேற்கும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்வையிடுவதற்காக தனித்தனி மேடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இரவு பகலாக இந்தப்பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தலைமைச் செயலக பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. சுதந்திர தினத்தன்று வழங்கப்படும் விருதுகளுக்கான நபர்களையும் அரசு தேர்வு செய்து வருகிறது. 
    ×