என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கட்சி தொடங்கியது முதல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது விசிக-வின் முழக்கம்.
    • காலம் கனியும்போது ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்போம்.

    விழுப்புரத்தில் நூலக கட்டிடத்தை வி.சி.க. பொதுச் செயலாளரும், மக்களவை எம்.பி.யுமான ரவிக்குமார் திறந்து வைத்தார். அப்போது 2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் வி.சி.க. ஆட்சியில் பங்கு கேட்குமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு ரவிக்குமார் பதில் அளித்ததாவது:-

    * கட்சி தொடங்கியது முதல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது விசிக-வின் முழக்கம்

    * காலம் கனியும்போது ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்போம்.

    * 2026 தேர்தலில் ஆட்சியில் பங்கு என்பதற்கான வாய்ப்பு இல்லை.

    * தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்

    * கடந்த தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றோம்.

    * 2026 தேர்தலில் இரட்டை இலக்கத்தில் விசிக-வுக்கு திமுக இடங்கள் வழங்கும்.

    இவ்வாறு ரவிக்குமார் தெரிவித்தார்.

    • விவசாயிகள் இன்றும் சாலையில் நெல்லை உலர வைக்கும் அவலம் தொடர்கிறது.
    • மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறோம் என ஏமாற்று வேலை நடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

    சென்னை:

    பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    தமிழக நெல் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றாமல், ஒவ்வொரு ஆண்டும், நெல் கொள்முதல் செய்ய வேண்டுமென்றே தாமதத்தை ஏற்படுத்தி, பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிடத் தொடங்கிய நிலையில், தி.மு.க. அரசுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததும், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறோம் என்று ஏமாற்று வேலை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்.

    கடந்த நான்கு ஆண்டு தி.மு.க. ஆட்சியில், சேமிப்புக் கிடங்குகள், உணவுக் கிடங்குகள் அமைக்க, ₹309 கோடி செலவிட்டதாக தி.மு.க. அரசு கூறியிருக்கிறது.

    ஆனால், விவசாயிகள் இன்றும் சாலையில் நெல்லை உலர வைக்கும் அவலம் தொடர்கிறது. எங்கே சென்றது இந்த ₹309 கோடி நிதி?

    நெல் கொள்முதல் வாகனங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய போக்குவரத்து நிதியில், அமைச்சர் சக்கரபாணியின் துறையான உணவுப் பொருள் வழங்கல் துறையில், ₹160 கோடி ஊழல் நடைபெற்றிருந்ததைக் குறித்து சமீபத்தில் கூறியிருந்தோம். இதன் காரணமாக, நெல் கொள்முதலில் ஏற்பட்ட 30 - 40 நாட்கள் தாமதத்திற்கு தி.மு.க. அரசே முழு பொறுப்பு.

    கடந்த ஒரு மாதமாக நெல் கொள்முதல் தாமதத்தைக் குறித்து விவசாயிகள் பல முறை கோரிக்கை வைத்தும், தஞ்சாவூரில், தி.மு.க. அமைச்சர் சக்கரபாணியிடம் விவசாயிகள் நேரடியாக வாக்குவாதம் செய்தும், அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பொழுதுபோக்கிவிட்டு, யாரை ஏமாற்ற இந்தக் கடித நாடகம்?

    தி.மு.க. அரசின் ஊழலாலும், தவறுகளாலும், தமிழக நெல் விவசாயிகள் துன்பப்பட வேண்டுமா? ஒவ்வொரு ஆண்டும், நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்கவும், உலர வைக்கவும் கிடங்குகள் இல்லாமல் அவதிப்படும் விவசாயிகளுக்கு நிரந்தரத் தீர்வு, பாதுகாப்பான கிடங்குகள் மட்டுமே தவிர, தி.மு.க.வின் கடித நாடகம் அல்ல.

    தமிழக விவசாயிகளை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருப்பதை, எப்போதுதான் நிறுத்தும் இந்த கையாலாகாத திமுக அரசு? என பதிவிட்டுள்ளார்.

    • தேவையை பொறுத்து மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறக்கப்பட்டு வருகிறது.
    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.09 அடியாக உள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேவையை பொறுத்து அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டு வரும் தண்ணீர் இன்று காலை வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதே நேரம் அணைக்கு நீர்வரத்து நேற்று 5714 கனஅடியாக இருந்த நிலையில் அது இன்று 6 ஆயிரத்து 72 அடியாக அதிகரித்து காணப்படுகிறது. மேலும் அணையின் நீர்மட்டம் 112.09 அடியாக உள்ளது. அணையில் தற்போது 81.43 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆலங்காயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • தாய் மற்றும் சகோதரிகள் கண்முன்னே பஸ் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த காவலூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி திலகவதி. தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 1½ வயது மகன் துர்சாந்த்.

    2 பெண் பிள்ளைகளும் சத்திரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். தினமும் காலை அவர்களை ஏற்றி செல்வதற்காக பள்ளி பஸ் வீட்டின் அருகே வந்து நிற்கும். அதேபோல் இன்று காலை மாணவிகளை ஏற்றிச் செல்ல பஸ் வந்தது.

    அப்போது, திலகவதி துர்சாந்த்தை அழைத்துக் கொண்டு 2 மகள்களையும் பஸ்சில் ஏற்ற சென்றார். துர்சாந்த் பஸ்சின் முன்பக்கமாக விளையாடி கொண்டிருந்தான்.

    இதை கவனிக்காத பஸ் டிரைவர் பஸ்சை ஓட்டியபோது அதன் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழந்தது.

    இதுகுறித்து தகவலறிந்த காவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆலங்காயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாய் மற்றும் சகோதரிகள் கண்முன்னே பஸ் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    • வட இந்திய குழல் இசைக்கருவியான ஷெனாய் போன்ற தோற்றத்தில் இருக்கிறது.
    • கடுமையான பயிற்சி இருந்தால் மட்டுமே இதை வாசிக்க முடியும் என்று கோவில் முன்னாள் நாதஸ்வர வித்வான் சுவாமிநாதன் கூறினார்.

    தஞ்சை மண்ணின் மைந்தன் ராஜராஜசோழனின் கலை நயமிக்க ஆட்சியில் மிளிர்ந்த கோவில் நகரம், கும்பகோணம்.

    அங்கு அமைந்துள்ள மகாமக தீர்த்தவாரியின் முதன்மை தலமான ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் உள்ள பெட்டகத்தில், வரலாற்றுக்கு சாட்சியாக பழங்கால கல் நாதஸ்வரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அது வடிவமைக்கப்பட்டு பல நூற்றாண்டுகள் இருக்கும் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.

    இந்த கோவிலில் இருந்து கல் நாதஸ்வரங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் இன்னொன்று சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. சாதாரண மர நாதஸ்வரம் 600 கிராம் எடைகொண்டது. இது அதைவிட 6 மடங்கு (3.600 கிலோ கிராம்) எடை கொண்டதாகவும், சுமார் 2 அடி நீளத்துடனும் காட்சியளிக்கிறது. வட இந்திய குழல் இசைக்கருவியான ஷெனாய் போன்ற தோற்றத்தில் இருக்கிறது. ஆதி இசைக்கருவியான நாதஸ்வரம், ஆச்சா என்ற மரத்தில் உருவாக்கப்படுகிறது. வைரம் பாய்ந்த பாறை போன்ற மரத்தையே இதற்காக பயன்படுத்துவார்கள். கல்நாதஸ்வரம் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து ஆதிகாலத்தில் இக்கருவியை கருங்கல்லில் செதுக்கிவாசித்திருக்கலாம் என்பது இசை ஆராய்ச்சியாளர்களின் கணிப்பாக இருக்கிறது.

    கல் நாதஸ்வரத்தின் உலவுப்பகுதியானது 3 உறுதியான தனித்தனி பாகங்களாக செய்யப்பட்டு வெண்கலப்பூண் மூலம் இணைக்கப்பட்டு வெண்கல அனசுடன் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மரத்தால் செய்யப்படும் நாதஸ்வரங்களில் 7 ஸ்வரங்கள் இருக்கும். கல் நாதஸ்வரத்தில் 6 ஸ்வரங்களே உண்டு. அதனால் சண்முகப்ரியா, கல்யாணி போன்ற பிரதிமத்திம ராகங்களை மட்டுமே வாசிக்க முடியும். இதனை 3 முதல் 3½ கட்டை சுதியில் வாசிக்க இயலும்.

    சங்கராபரணம், கரகரப்பிரியா, தோடி போன்ற சுத்த மத்திம ராகங்களை இந்த நாதஸ்வரத்தால் வாசிக்க முடியாது. முழுமையாகவும் அடர்த்தியாகவும் மூச்சை உள்ளே செலுத்தினால் மட்டுமே இதில் நல்இசை கிடைக்கும். கடுமையான பயிற்சி இருந்தால் மட்டுமே இதை வாசிக்க முடியும் என்று கோவில் முன்னாள் நாதஸ்வர வித்வான் சுவாமிநாதன் கூறினார்.

    மறைந்த நாதஸ்வர மேதை மன்னார்குடி பக்கிரியா பிள்ளை 60 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் இந்த கல் நாதஸ்வரத்தை வாசித்துள்ளார். அவருக்கு பின் கோவில் நாதஸ்வர வித்வானான குஞ்சுதபாதம் பிள்ளை 30 ஆண்டுகளுக்கு மேல் வாசித்து வந்துள்ளார். அவருக்கு பின் சுவாமிநாதன் கல் நாதஸ்வரத்தை வாசித்தார்.

    இவர், சிக்கல் சிங்கார வேலன் திருத்தல தேவஸ்தான இசைப் பள்ளியில் பணியாற்றி வந்த புகழ் பெற்ற நாதஸ்வர வித்வான் கலைமாமணி கோட்டூர் என்.ராஜரத்தினம் பிள்ளையின் சீடர். நாதஸ்வரம் மங்கள வாத்தியமாகும். இதனை நாகூர், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் வசித்து, நாகபாம்புகளை தெய்வமாக பூஜித்த நாகர் என்ற இனத்தவரால் முற்காலத்தில் வாசிக்கப்பட்டு வந்திருக்கிறது.

    நாகத்தினை போன்று நீண்டிருந்ததன் காரணமாக "நாகசுரம்" என்னும் பெயர் ஏற்பட்டது. இதில் இருந்து இனிமையான நாதம் கிடைப்பதால் பிற்காலத்தில் நாதஸ்வரம் என அழைக்கப்பட்டிருக்கிறது. 17-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "பாத சங்கிரகம்" என்ற இசை நூல், துளைக்கருவிகளின் வரிசையில் இதனை "நாகசுரம்" என்றே குறிப்பிடுகிறது.

    நாதஸ்வரத்தின் மேல் பகுதியில் சீவாளி பொருத்தப்படும். ஜீவ வளி என்பதுதான் சீவாளியாகி இருக்கிறது. ஜீவன் என்றால் உயிர். வளி என்றால் காற்று. உடலாகிய நாதஸ்வரத்திற்கு காற்றின் மூலம் சீவாளி உயிர் கொடுக்கிறது. 4 வகை வேதங்களில், சாம வேதமே இசையின் அடிப்படை என்று வேத விற்பன்னர்கள் கூறுவர்.

    ச,ரி,க,ம,ப,த,நி ஆகிய 7 ஸ்வரங்களும் ஆகாயத்தில் இருந்து ஒலிக்க கேட்டு பூமியில் இசையின் ஆதாரமாக வடிவெடுத்தது என்று மகாபாரதம் கூறுகிறது. ஒவ்வொரு ராகத்திற்குள்ளும் ஒரு தேவதை இருப்பதாக நமது பண்டைய இசை நூல்கள் கூறுகின்றன. ஒலியை கூர்ந்து நுட்பமாக கேட்டு அனுபவித்தவர்கள் தமிழர்கள். அவர்கள் கேட்ட ஒலியே கட்டமைக்கப்பட்டு இசையானது. முறைப்படுத்தப்பட்ட இசையை, நாதஸ்வரம் போன்ற பல்வேறு கருவிகள் நமக்கு வழங்குகின்றன.

    மேலும் இதுகுறித்து ஆதிகும்பேஸ்வரர் கோவில் முன்னாள் நாதஸ்வர வித்வான் சுவாமிநாதன் கூறுகையில், இது 6 துளைகளை கொண்ட திமிரி வகை நாதஸ்வரம். ஆதி கும்பேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு வருகிற 28-ந் தேதி இந்த கல் நாதஸ்வரம் கோவிலில் வாசிக்கப்பட உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆயுத பூஜை நன்நாளில் இந்த கல் நாதஸ்வரத்தை நான் சுமார் 1 மணி நேரம் வாசித்தேன். அதைத்தொடர்ந்து தற்போது வருகிற 28-ந் தேதி எனது மகன் தமிழரசனுடன் சேர்ந்து, கோவிலின் தற்போதைய நாதஸ்வர வித்வானுடன் இந்த கல் நாதஸ்வரத்தை வாசிக்க உள்ளேன் என்றார்.

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
    • அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தை தண்ணீர் சூழ்ந்தது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை சுற்றுலா மற்றும் ஆன்மிக மையமாக உள்ளது. மலையடிவாரத்தில் தோணியாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் மலைமேல் பஞ்சலிங்க அருவி உள்ளது.

    இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரித்ததுடன், வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழ்நிலை நிலவியது.

    அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தை தண்ணீர் சூழ்ந்தது. இதையடுத்து அருவி மற்றும் கோவிலுக்கு செல்ல பக்தர்கள்- சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பழனி மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடும் குளிர் நிலவி வருகிறது.
    • சுக்கு காபி தீர்ந்தால் உடனே தயார் செய்து தொடர்ந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு கார்த்திகை மாதம் தொடங்கியதை முன்னிட்டு ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக ஆந்திர மாநில பக்தர்களின் வருகை அதிகரித்து வந்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் கேரள பக்தர்களின் வருகை அதிகமாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சாரல் மழை தொடங்கியுள்ள நிலையில் பழனி மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடும் குளிர் நிலவி வருகிறது.

    இதனைத் தொடர்ந்து பழனி மலைக்கோவிலுக்கு படிப்பாதை வழியாக நடந்து செல்லும் பக்தர்களின் களைப்பை போக்கும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் அதிகாலை 4.30 மணி முதல் சுடச்சுட சுக்கு காபி வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே படிப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு மோர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கடும் குளிருடன் அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருவதால் சுக்கு காபி வழங்கப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிகாலை 4.30 மணி முதல் பகல் 1 மணி வரை சுக்கு காபி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அதே இடத்தில் அடுப்பு வைத்து வெல்லம், மல்லி, சுக்கு சேர்த்து சுக்கு காபி தயாரிக்கப்படுகிறது.

    சுக்கு காபி தீர்ந்தால் உடனே தயார் செய்து தொடர்ந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    • முதலமைச்சர், கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் ஒரு ஆட்சியில், மக்கள் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்?
    • தமிழ்நாட்டில் இதுவரை நடந்திடாத "ஸ்டாலின் அரசின் சாதனை" என்று இந்த பொம்மை முதலமைச்சர் விளம்பரம் செய்துக் கொள்ளலாம்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை பாரிமுனை பகுதியில், கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம் அருகே இரு ரவுடிக் கும்பல் கத்திகளுடன் விரட்டிச் சென்று மோதிக் கொண்டதால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதாகவும், சென்ட்ரல் அருகே பல்லவன் சாலையில் இருவர் கத்தியுடன் மோதிக் கொண்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது.

    திமுக ஆட்சியில் தமிழகம், குறிப்பாக தலைநகர் சென்னை, ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது.

    காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர், கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் ஒரு ஆட்சியில், மக்கள் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்?

    தலைநகரின் பிரதான சாலைகளில் ரவுடிகள் கத்தியோடு வலம் வந்து சண்டை போடுவது என்பது, இந்த நொடி, இந்த இடம் என எங்கும், எப்போதும் பாதுகாப்பு மக்களுக்கு இல்லை என்பதையே வெட்ட வெளிச்சமாக்குகிறது.

    ரவுடியிசத்தைக் கண்டு மக்கள் அலறி ஓடியதை வேண்டுமானால், தமிழ்நாட்டில் இதுவரை நடந்திடாத "ஸ்டாலின் அரசின் சாதனை" என்று இந்த பொம்மை முதலமைச்சர் விளம்பரம் செய்துக் கொள்ளலாம்.

    தலைநகரில் தலை விரித்தாடும் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என

    மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும்.

    வருகின்ற 22-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும்.

    தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் நாளை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் நாளை மறுநாள் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 21-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், நாகபட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 22-ந்தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னையில் சேப்பாக்கம் எழிலகம் வளாகத்திலும் மற்ற மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகம் அருகிலும் இப்போராட்டம் நடைபெற்றது.
    • சேப்பாக்கம் அரசு அலுவலக பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    சென்னை:

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ ஜியோ) சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    திருச்சியில் நடைபெற்ற உயர்மட்டக்குழு கூட்டத்தில் நவம்பர் 18-ந்தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கும் மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பினை 5 சதவீதமாக குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக வழங்கிட வேண்டும். 21 மாத ஊதியமற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப்பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை வழங்க வேண்டும்.

    2002-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களின் பணிக் காலத்தை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன் முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.

    1.4.2003-க்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.

    சென்னையில் சேப்பாக்கம் எழிலகம் வளாகத்திலும் மற்ற மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகம் அருகிலும் இப்போராட்டம் நடைபெற்றது. வேலைநிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்கக்கூடாது, அது அங்கீகரிக்கப்படாத விடுப்பாக கருதப்படும் என்றும் வேலை செய்யாத நாளுக்கு ஊதியம் இல்லை எனவும் போராட்ட விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்து உள்ளது.

    ஆனாலும் அதனை மீறி சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களி லும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் இப்போராட் டம் நடந்தது.

    சென்னையில் தலைமை செயலகம், எழிலகம், குறளகம், வணிக வரி அலுவலகம், சைதாப்பேட்டை பனகல் மாளிகை, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு துறை அலுவலகங்களில் ஊழியர்கள் குறைவாகவே பணிக்கு வந்தனர். இதனால் அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டன. இதேபோல ஆசிரியர்களும் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்செயல் விடுப்பு கடிதம் கொடுக்காமல் பெரும்பாலானவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை எழிலகத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், சுரேஷ், காந்திராஜன் ஆகியோர் தலைமையில் அரசு ஊழியர்கள் திரண்டு கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் சேப்பாக்கம் அரசு அலுவலக பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மெரினா காமராஜர் சாலை நுழைவு பகுதியில் முன் எச்சரிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளரும் தலைமை செயலக சங்க தலைவருமான வெங்கடேசன் கூறியதாவது:-

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. பல்வேறு கட்ட போராட்டங்கள், பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரையில் எந்த பயனும் இல்லை. இன்றைய போராட்டத்தில் சுமார் 6 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள்.

    இதனால் அரசு அலுவலக பணிகள், பள்ளிகளில் கற்றல் பணி பாதிக்கக்கூடும். எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் தீவிரமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூட்டணியால் மட்டுமே ஆட்சியை பிடித்து விட முடியாது.
    • தி.மு.க ஆட்சியில் சொத்து வரி உயர்ந்திருக்கிறது. சட்டம்-ஒழுங்கு சரியில்லை.

    நெல்லை:

    வ.உ.சிதம்பரனாரின் 89-வது நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை டவுனில் உள்ள மணி மண்டபத்தில் அமைந்துள்ள வ.உ.சி. சிலைக்கு பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுதந்திர போராட்ட தியாகிகளை போற்றுவதில் பிரதமர் மோடி முதல் நபராக இருக்கிறார். அறிவு திருவிழா என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தி விட்டு அதற்கு எதிராகவே தி.மு.க.வினர் பேசியிருக்கிறார்கள்.

    தி.மு.க.வினர் நாட்டு மக்கள் நலனுக்காக ஒரு போதும் உச்ச நீதிமன்றம் செல்வதில்லை. கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசுக்கு எதிராகவே தமிழக அரசு போராடி வருகிறது. தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது.

    எஸ்.ஐ.ஆருக்கு எதிராக வருவாய்த்துறை அலுவலர்களை தி.மு.க அரசு தான் தூண்டிவிட்டுள்ளது. துப்புரவு பணியாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திய பிறகு இப்போது அவர்களுக்கு 3 வேளை உணவு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

    தி.மு.க.வுக்காக வேலை பார்த்த பிரசாந்த் கிஷோரின் கட்சி, பீகார் தேர்தலில் 2 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. அவர்களை வைத்து வேலை பார்த்தால் என்னவாகும். விஜய், பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இணைவார் என சபாநாயகர் அப்பாவு பேசியிருக்கிறார். அவர்களுடைய ஆசை நிறைவேறும். கூட்டணி தொடர்பாக ஜனவரியில் பேசி முடிவெடுக்கப்படும்.

    கூட்டணியால் மட்டுமே ஆட்சியை பிடித்து விட முடியாது. இதற்கு முந்தைய காலங்களில் வலுவான கூட்டணி அமைத்த கட்சிகள் கூட தோல்வியை சந்தித்து இருக்கின்றன.

    தி.மு.க ஆட்சியில் சொத்து வரி உயர்ந்திருக்கிறது. சட்டம்-ஒழுங்கு சரியில்லை. பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்று வருகிறது. கிராமங்கள் தோறும் கஞ்சா புழக்கத்தில் உள்ளது. தி.மு.க அரசு அதை கண்டும் காணாமல் உள்ளது. மக்கள் நலனில் தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லை. துணை முதலமைச்சர் உதயநிதியை முதலமைச்சர் ஆக்குவதற்காக தி.மு.க முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கர்நாடகா அரசால் நந்தினி பால், நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • ரூ. 57 லட்சம் மதிப்புள்ள 8 ஆயிரம் லிட்டர் கலப்பட நெய் பறிமுதல்

    கர்நாடக கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பினரால் நந்தினி பால், நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தென்னிந்தியாவின் மதிப்புமிக்க பால் பொருட்களின் பிராண்டாக மாறியுள்ள நந்தினி பெயரில் கலப்பட நெய் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கர்நாடக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில், சாமராஜ்பேட்டை நஞ்சம்பா அக்ரஹாராவில் உள்ள கிருஷ்ணா எண்டர்பிரைசஸ் என்ற கிடங்கில் போலீஸ் மற்றும் உணவுப் பொருள் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அங்கு கலப்பட நெய் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    இது தொடர்பாக கிடங்கின் உரிமையாளர் மகேந்திரா மற்றும் மகன் தீபக், முனிராஜு, மற்றும் அபிஅரசு ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1.26 கோடி ரொக்கமும், ரூ. 57 லட்சம் மதிப்புள்ள 8 ஆயிரம் லிட்டர் கலப்பட நெய், டால்டா, பாமாயில், தேங்காய் எண்ணெய் மற்றும் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 4 சரக்கு வாகனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கலப்பட நெய் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு கர்நாடகாவில் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.

    இதுதொடர்பாக, கர்நாடக போலீசார் தமிழ்நாட்டு போலீசுடன் இணைந்து விசாரணை நடத்தியதில் திருப்பூரில் உள்ள ஆலையில் கலப்பட நெய் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. பின்னர் அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×