எஸ்.ஐ.ஆருக்கு எதிராக வருவாய்த்துறை அலுவலர்களை தி.மு.க. அரசு தூண்டி விட்டுள்ளது- நயினார் நாகேந்திரன்

கூட்டணியால் மட்டுமே ஆட்சியை பிடித்து விட முடியாது.தி.மு.க ஆட்சியில் சொத்து வரி உயர்ந்திருக்கிறது. சட்டம்-ஒழுங்கு சரியில்லை.
எஸ்.ஐ.ஆருக்கு எதிராக வருவாய்த்துறை அலுவலர்களை தி.மு.க. அரசு தூண்டி விட்டுள்ளது- நயினார் நாகேந்திரன்
Published on

நெல்லை:

வ.உ.சிதம்பரனாரின் 89-வது நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை டவுனில் உள்ள மணி மண்டபத்தில் அமைந்துள்ள வ.உ.சி. சிலைக்கு பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுதந்திர போராட்ட தியாகிகளை போற்றுவதில் பிரதமர் மோடி முதல் நபராக இருக்கிறார். அறிவு திருவிழா என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தி விட்டு அதற்கு எதிராகவே தி.மு.க.வினர் பேசியிருக்கிறார்கள்.

தி.மு.க.வினர் நாட்டு மக்கள் நலனுக்காக ஒரு போதும் உச்ச நீதிமன்றம் செல்வதில்லை. கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசுக்கு எதிராகவே தமிழக அரசு போராடி வருகிறது. தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது.

எஸ்.ஐ.ஆருக்கு எதிராக வருவாய்த்துறை அலுவலர்களை தி.மு.க அரசு தான் தூண்டிவிட்டுள்ளது. துப்புரவு பணியாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திய பிறகு இப்போது அவர்களுக்கு 3 வேளை உணவு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

தி.மு.க.வுக்காக வேலை பார்த்த பிரசாந்த் கிஷோரின் கட்சி, பீகார் தேர்தலில் 2 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. அவர்களை வைத்து வேலை பார்த்தால் என்னவாகும். விஜய், பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இணைவார் என சபாநாயகர் அப்பாவு பேசியிருக்கிறார். அவர்களுடைய ஆசை நிறைவேறும். கூட்டணி தொடர்பாக ஜனவரியில் பேசி முடிவெடுக்கப்படும்.

கூட்டணியால் மட்டுமே ஆட்சியை பிடித்து விட முடியாது. இதற்கு முந்தைய காலங்களில் வலுவான கூட்டணி அமைத்த கட்சிகள் கூட தோல்வியை சந்தித்து இருக்கின்றன.

தி.மு.க ஆட்சியில் சொத்து வரி உயர்ந்திருக்கிறது. சட்டம்-ஒழுங்கு சரியில்லை. பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்று வருகிறது. கிராமங்கள் தோறும் கஞ்சா புழக்கத்தில் உள்ளது. தி.மு.க அரசு அதை கண்டும் காணாமல் உள்ளது. மக்கள் நலனில் தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லை. துணை முதலமைச்சர் உதயநிதியை முதலமைச்சர் ஆக்குவதற்காக தி.மு.க முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com