என் மலர்tooltip icon

    கேரளா

    • பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக இந்த திருமண விழா நடை பெற்றது.
    • மணமகனும், மணமகளும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து கோவிலுக்கு வந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வெங்கனூரில் பவுர்ண மிகாவு பாலா திரிபுரசுந்தரி தேவி கோவில் உள்ளது. இந்தக் கோவில் வளாகத்தில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 216 பேருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் இந்த திருமணம் நடைபெற்றது. பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக இந்த திருமண விழா நடை பெற்றது.

    இதில் அட்டபாடியை சேர்ந்த 72 பேரும், இடுக்கி யில் உள்ள கோவில்மாலா பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த 52 பேரும், மகராஷ்டிராவில் உள்ள 8 பழங்குடியினர் என 216 பேர் கலந்து கொண்டனர். மணமகனும், மணமகளும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து கோவிலுக்கு வந்தனர். அவர்கள் வழிபாடு செய்த பிறகு திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வு ஆசிய சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றது.

    • தென் மாநிலங்களில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா தற்போது உறுதியாக உள்ளது.
    • வயநாடு தொகுதியில் ராகுல்காந்தியை எதிர்த்து, பா.ஜனதா மாநில தலைவர் சுரேந்திரன் களம் இறக்கப்பட்டுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    தென் மாநிலங்களில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா தற்போது உறுதியாக உள்ளது. இதற்காக வேட்பாளர்களை தேர்வு செய்து தீவிர களப்பணியாற்றியும் வருகிறது.

    பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மோடியும், தமிழகம் மற்றும் கேரளாவிற்கு அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ரோடு ஷோவிலும் பங்கேற்றார். 

    இந்த நிலையில் அவர் மீண்டும் கேரளா வர இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வயநாடு தொகுதியில் ராகுல்காந்தியை எதிர்த்து, பா.ஜனதா மாநில தலைவர் சுரேந்திரன் களம் இறக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரதமர் மோடி விரைவில் கேரளா வர இருப்பதாக கூறப்படுகிறது.

    மேலும் கட்சியின் தேசிய தலைவர் நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ் நாத்சிங் உள்ளிட்டோரும் பிரசாரத்திற்காக கேரளா வர உள்ளதால் பாரதிய ஜனதா தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    • அபித் ஹசன் என்ற முஸ்லிம்தான் 'ஜெய் ஹிந்த்' கோஷத்தை முதலில் எழுப்பினார்
    • நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடியதில் முஸ்லிம்களுக்கும் பெரும் பங்குண்டு

    குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்பட்ட 4-வது கண்டன பொதுக்கூட்டம் மலப்புரத்தில் நடைபெற்றது.

    இதில் கலந்துகொண்டு பேசிய அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், "நாட்டின் வரலாறு மற்றும் சுதந்திர இயக்கத்தில் முஸ்லிம் ஆட்சியாளர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் முக்கிய பங்கை ஆற்றியுள்ளனர்.

    இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சில சங்பரிவார் தலைவர்கள், எதிரில் அமர்ந்திருந்தவர்களிடம், 'பாரத மாதா கி ஜே' கோஷம் எழுப்பும்படி கூறினர். ஆனால், அந்த முழக்கத்தை உருவாக்கியவர் யார்? அவர் பெயர் அஜிமுல்லா கான் என்பது சங் பரிவார்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை.

    இந்த முழக்கத்தை உருவாக்கியவர் ஒரு முஸ்லிம் என்பதால் அவர்கள் அதை பயன்படுத்துவதை நிறுத்துவார்களா என்பது எனக்கு தெரியாது. அதேபோல் அபித் ஹசன் என்ற முஸ்லிம்தான் 'ஜெய் ஹிந்த்' முழக்கத்தை முதலில் எழுப்பினார்.

    முகலாயப் பேரரசர் ஷாஜகானின் மகன் தாரா ஷிகோ என்பவர்தான் 50-க்கும் மேற்பட்ட உபநிஷதங்களை சமஸ்கிருதத்தில் இருந்து பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார். இந்திய படைப்புகள் உலகின் பல பகுதிகளுக்கும் செல்ல உதவியாக அவர் இருந்தவர்.

    இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும் என்று கூறும் சங்பரிவார் தலைவர்கள், இத்தகைய வரலாறுகளை அறிய வேண்டும். நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடியதில் முஸ்லிம்களுக்கும் பெரும் பங்குண்டு" என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.

    • தேடுதல் பத்திர விவரங்கள் மத்திய அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும்
    • நம்மால் எதையும் செய்யமுடியும் என்று சங்பரிவார் தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருகிறது

    தேடுதல் பத்திர விவரங்கள் மத்திய அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று அவர்களுக்கு தெரியும். அதனால் தான் இந்த பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப, டெல்லி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். நம் நாடு எதிர் நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதற்கான உதாரணம் இது. நம்மால் எதையும் செய்யமுடியும் என்று சங்பரிவார் தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.

    தேர்தல் பத்திர முறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. தேர்தல் பத்திர முறை இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் என்று அவர் தெரிவித்தார்.

    உச்ச நீதிமன்ற உத்தரவின் படி தேர்தல் பத்திரங்களின் எண்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கி விட்டதாக உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. வங்கி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது.

    அதன் பின்பு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் பத்திரங்களின் எண்கள் உள்பட அனைத்து விவரங்களையும் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

    • கேரள மாநிலத்தில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தொகுதி வயநாடு மக்களவை தொகுதி.
    • வயநாடு தொகுதியில் இருகட்சிகளும் தனித்தனியாக களம் காணுகின்றன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கிவிட்ட நிலையில், தற்போது அந்த பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ், பாரதிய ஜனதா, கம்யூனிஸ்டு கட்சிகள் அறிவித்துவிட்டன. இதையடுத்து கட்சி வேட்பாளர்கள் தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்ளிட்ட பிரதான கட்சிகளின் தலைவர்கள் ஏப்ரல் மாதம் தொடங்கியதும், கேரள மாநிலத்தில் பிரசாரம் செய்ய உள்ளனர். கேரள மாநிலத்தில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தொகுதி வயநாடு மக்களவை தொகுதி.

    அதற்கு காரணம் அந்த தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக உள்ள ராகுல் காந்தியே, இந்த முறையும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். மேலும் இந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளரான டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜாவும் களம் காணுகிறார்.


    இதன்காரணமாக இந்த தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியிருக்கிறது. காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டுகட்சிகள் இந்திய அளவில் ஒரே கூட்டணியில் இருக்கும் நிலையில், வயநாடு தொகுதியில் இருகட்சிகளும் தனித்தனியாக களம் காணுகின்றன. அவர்களுடன் வயநாடு தேர்தலில் களம் காணப்போகும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் யார்? என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில், அக்கட்சியின் மாநில தலைவரான சுரேந்திரனே அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

    வயநாடு தொகுதியை பொறுத்தவரை 2009-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்த தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போதைய தேர்தலில் ராகுல்காந்தியை, சுரேந்திரன் எதிர்கொள்ள உள்ளார்.

    சுரேந்திரன் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பத்தினம்திட்டாவில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு அடுத்த படியாக மூன்றாவது இடத்தை பிடித்தார். மேலும் அவர் 2016-ம் ஆண்டு நடந்த சட்மன்ற தேர்தலில் மஞ்சேஸ்வரம் தொகுதியில் போட்யிட்டு வெறும் 89 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.


    2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலிலும் சுரேந்திரன் போட்டியிட்டார். அந்த தேர்தலிலும் அவர் தோல்வியடைந்தார். இந்நிலையில் தான் 2020-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். அடுத்தடுத்து பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய சுரேந்திரனுக்கு தற்போது வயநாடு தொகுதியில் போட்டியிட பாரதிய ஜனதா கட்சி வாய்ப்பு வழங்கியிருக்கிறது.

    அவர் வயநாடு தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிடும் ராகுல் காந்தி மற்றும் ஆனி ராஜா ஆகியோருக்கு சவால் விடும் வகையில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருவதாக பாரதிய ஜனதா கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, பாரதிய ஜனதா ஆகிய மூன்று கட்சிகளுமே வயநாடு தொகுதியை கைப்பற்றி விடவேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அங்கு நிலவும் முன்முனைப் போட்டியில் வெற்றி பெறப்போவது யார்? என்பது தேர்தல் முடிவு வந்தபிறகே தெரியவரும்.

    • நள்ளிரவு 12 மணியளவில் தேர் பவனி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர்.
    • பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சாவர வடக்கு பாகம் பரசேரி தேக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேசன். இவரது மனைவி ஜிகி. இவர்களது மகள் சேத்ரா (வயது 5).

    கொல்லம் சாவாராவில் உள்ள பிரசித்தி பெற்ற கொட்டாங்குளங்கரா கோவிலில் சமயவிளக்கு திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ரமேசன் தனது குடும்பத்தினருடன் விழாவுக்குச் சென்றிருந்தார்.

    விழாவை முன்னிட்டு கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்தது. நள்ளிரவு 12 மணியளவில் தேர் பவனி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர்.

    இந்த சம்பவத்தின் போது தந்தையின் கையை பிடித்துக் கொண்டு சென்ற சேத்ரா, எதிர்பாராதவிதமாக தேர் சக்கரத்தின் அடியில் சிக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு உடனடியாக மருத்துவ மனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை சேத்ரா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழாவுக்கு சென்ற சிறுமி தேர் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கேரள மாநில தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் விழிப்புணர்வு தூதராக உள்ளார்.
    • சுனில் குமாரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீசு அனுப்பியது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர் டோவினோ தாமஸ், கேரள மாநில தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் விழிப்புணர்வு தூதராக உள்ளார்.

    இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சூர் பாராளுமன்ற தொகுதியின் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுனில்குமார் சந்தித்துள்ளார். மேலும் அவருடன் போட்டோ எடுத்துக் கொண்ட சுனில்குமார், அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.

    இது தொடர்பாக திருச்சூர் மாவட்ட பாரதிய ஜனதா சார்பில் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து சுனில் குமாரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீசு அனுப்பியது.

    இதற்கு பதில் அளித்த சுனில்குமார், நடிகர் டொவினோ தாமஸ் தேர்தல் ஆணையத்தின் தூதர் என்பது தனக்குத் தெரியாது என்று தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம் இது போன்ற நடவடிக்கைகளில் இனி ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தது.

    • ஜனாதிபதிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வது மிகவும் அரிய நிகழ்வாகும்.
    • மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததை கண்டித்து கேரள அரசு ஏற்கனவே கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாடியிருந்தது.

    புதுடெல்லி:

    மாநில அரசுகள் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட துறைகளின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் பல்வேறு சட்டங்களை இயற்றி வருகின்றன.

    இதற்காக மாநில சட்டசபைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை கவர்னர் மூலமாக ஜனாதிபதிக்கு அனுப்பி ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே அவை சட்டமாக அமலுக்கு வரும்.

    ஆனால் சமீப காலமாக பா.ஜனதா அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் பல மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் கவர்னர்கள் காலதாமதம் செய்து வருகின்றனர். இதனால் அந்த மாநில அரசுக்கும், கவர்னர்களுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. எனவே சில மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டை நாட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

    அந்தவகையில் கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகிய பிறகே சில மசோதாக்களுக்கு அந்தந்த மாநில கவர்னர்கள் ஒப்புதல் அளித்து உள்ளனர். ஆனாலும் சில மசோதாக்களை தொடர்ந்து அவர்கள் கிடப்பில் வைத்து உள்ளனர். இதில் கேரளாவை பொறுத்தவரை மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறும் விவகாரத்தில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசுக்கும், கவர்னர் முகமது ஆரிப் கானுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது.மாநில சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய பல மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு உள்ளார். இதில் சில மசோதாக்களை அவர் ஜனாதிபதிக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்.

    அவற்றின் மீது ஜனாதிபதி தரப்பில் இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் அவை தொடர்ந்து கிடப்பிலேயே இருக்கின்றன.

    அதாவது கேரள அரசின் பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த (எண்.2) மசோதா 2021, கேரள கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா 2022, பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த மசோதா 2022 மற்றும் பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த (எண்.3) மசோதா 2022 ஆகிய 4 மசோதாக்கள் ஜனாதிபதியிடமே நிலுவையில் வைக்கப்பட்டு உள்ளன.

    எனவே ஜனாதிபதிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது.

    இதில் மத்திய அரசு, ஜனாதிபதியின் செயலாளர், கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், அவரது கூடுதல் செயலாளர் ஆகியோரை எதிர் மனுதாரர்களாக இணைத்து உள்ளது.

    இந்த மனுவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ள கேரள அரசு, அவற்றில் முக்கியமாக கூறியிருப்பதாவது:-

    ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள இந்த 4 மசோதாக்கள் உள்பட 7 மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் நிறுத்தி வைத்து உள்ளார். இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும். கவர்னர்கள் நீண்ட காலத்துக்கும், காலவரையறை இன்றியும் மசோதாக்களை நிறுத்தி வைப்பது, பின்னர் அரசியலமைப்புடன் தொடர்புடைய எந்த காரணமும் இல்லாமல் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு மசோதாக்களை ஒதுக்குவது தன்னிச்சையானது மட்டுமின்றி அரசியலமைப்பு சட்டத்தின் 14-வது பிரிவை மீறுவது ஆகும்.

    முற்றிலும் மாநில எல்லைக்குள் இருக்கும் இந்த 4 மசோதாக்களை நிறுத்தி வைக்குமாறு எந்தவித காரணமும் கூறாமல் தன்னிச்சையாக மத்திய அரசு ஜனாதிபதிக்கு வழங்கிய ஆலோசனையும் அரசியல் சட்டப்பிரிவு 14-ஐ மீறுகிறது. மேலும் மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களின் பலன்களை மறுப்பது, அரசியல் சட்டத்தின் 21-வது பிரிவின் கீழ் கேரள மாநில மக்களின் உரிமைகளை மறுக்கும் செயல்களாகும்.

    இவ்வாறு கேரள அரசு தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளது.

    ஜனாதிபதிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வது மிகவும் அரிய நிகழ்வாகும். அதை கேரள அரசு செய்திருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.

    மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததை கண்டித்து கேரள அரசு ஏற்கனவே கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாடியிருந்தது.

    இதில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கவர்னருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து மிகப்பெரிய கருப்பு பெட்டி ஒன்று தனியார் காருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
    • இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது.

    கேரள மாநில காங்கிரஸ் கட்சி எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு குறிப்பிட்டுள்ளதாவது:-

    கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்திற்காக கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா என்ற இடத்திற்கு விமானப்படையின் ஹெலிகாப்டரில் மூன்று பாதுகாப்பு ஹெலிகாப்டருடன் வந்தார்.

    மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து மிகப்பெரிய கருப்பு பெட்டி ஒன்று தனியார் காருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அந்த பெட்டியை எடுத்துச் சென்றது சிறப்பு பாதுகாப்புப்படை வீரர்கள் இல்லை. அப்படி இருக்கும்போது அந்த பெட்டியில் இருந்தது என்ன?

    அது தேர்தலில் பணத்தை வினியோகம் செய்ய பிரதமர் மோடி கொண்டு வந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. ஐந்து வருடங்கள் கழித்தும் கூட தேர்தல் ஆணையம் இதுகுறித்து விசாரணை நடத்தவில்லை. மோடி புனிதர் வேடமணிந்த உண்மையான ஊழல்வாதி.

    ஒடிசா மாநிலத்தின் சாம்பல்புர் மக்களவை தொகுதியின் பொது பார்வையாளராக பணிபுரிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி, நரேந்திர மோடி காருடன் அணிவகுத்து சென்ற காரை சோதனை செய்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பிரதமர் மோடி தேர்தல் பார்வையாளரிடம் எதை மறைக்க வேண்டும்?.

    இவ்வாறு அந்த எக்ஸ் பக்க பதிவில் கேரள மாநில காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

    • பாரதிய ஜனதா வெளியிட்ட நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியலில் அது பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை.
    • வேட்பாளர் படத்துக்கு மட்டும் இடம் விட்டுவிட்டு சுவர் விளம்பரம் செய்திருந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கிவிட்ட நிலையில், தற்போது அந்த பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ், பாரதிய ஜனதா, கம்யூனிஸ்டு கட்சிகள் அறிவித்துவிட்டன. இதையடுத்து கட்சி வேட்பாளர்கள் தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கட்சி தலைவர்கள் ஏப்ரல் மாதம் தொடங்கியதும், கேரள மாநிலத்தில் பிரசாரம் செய்ய உள்ளனர்.

    கேரள மாநிலத்தில் ராகுல்காந்தி எம்.பி.யாக உள்ள வயநாடு தொகுதியே முக்கியமான தொகுதியாகும். அந்த தொகுதியில் இந்த முறையும் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தியே போட்டியிடுகிறார். மேலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளரான டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜாவும் வயநாடு தொகுதியில் களமிறங்குகிறார்.

    காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டுகட்சிகள் இந்திய அளவில் ஒரே கூட்டணியில் இருக்கும் நிலையில், வயநாடு தொகுதியில் இருகட்சிகளும் தனித்தனியாக களம் காணுகின்றன. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? என்று தெரிந்துவிட்டநிலையில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடப்போவது யார்? என்பது இதுவரை தெரியவில்லை.

    பாரதிய ஜனதா வெளியிட்ட நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியலில் அது பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை. வயநாடு தொகுதி மட்டுமின்றி, கேரளாவில் உள்ள கொல்லம், எர்ணா குளம், ஆலத்தூர் ஆகிய தொகுதிகளின் வேட்பாளர் விவரங்களை பாரதிய ஜனதா வெளியிடவில்லை.

    இதனால் இந்த தொகுதிகளில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் யார்? என்ற விவரம் தெரியாமல் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளனர். வேட்பாளர்கள் எப்படியும் அறிவிக்கப்பட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கையில், அந்த தொகுதிகளில் பல இடங்க ளில் பாரதிய ஜனதா கட்சியினர், வேட்பாளர் படத்துக்கு மட்டும் இடம் விட்டுவிட்டு சுவர் விளம்பரம் செய்திருந்தனர்.

    அந்த விளம்பரங்கள் தற்போது வரை வேட்பாளர்களின் படம் இன்றியே காணப்படுகின்றன. பாரதிய ஜனதா வெளியிடும் ஐந்தாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் கேரள மாநிலத்தில் அறிவிக்கப்படாமல் உள்ள தொகுதிகளின் வேட்பாளர் விவரங்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • விதிமுறைகளின் அடிப்படையில் அனைத்து சிறைகளிலும் தண்டனை கைதிகளுக்கு பரோல் வழங்கப்பட்டு வருகிறது.
    • தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 1000-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    சிறை தண்டனை பெற்று ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அவர் தனது குடும்பத்தினரை பார்க்க பரோலில் செல்ல சட்டப்படி அனுமதி உள்ளது. அவசர விடுப்பு மற்றும் சாதாரண விடுப்பு என இரண்டு வகை பரோல்களில் கைதிகள் சிறையில் இருந்து குறிப்பிட்ட நாட்கள் வீட்டிற்கு சென்று வரலாம்.

    குடும்ப உறுப்பினர் நோய்வாய்ப்பட்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ மருத்துவ சான்றிதழ் மற்றும் காவல்துறை அறிக்கையின் அடிப்படையில் கைதிகளுக்கு அவசர விடுப்பு வழங்கப்படும். இரண்டு வருட சிறை தண்டனையை முடித்த கைதிகளுக்கு பரோல் வழங்கப்படும்.

    ஒரு நபர் ஒரு வருடத்தில் மொத்தம் 60 நாட்கள் பரோலில் செல்லலாம். அதனை வருடத்திற்கு இரண்டு முதல் நான்கு முறை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விதிமுறைகளின் அடிப்படையில் அனைத்து சிறைகளிலும் தண்டனை கைதிகளுக்கு பரோல் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கேரள சிறைச்சாலைகளில் பரோலில் வெளியே சென்ற 67 ஆயுள் தண்டனை கைதிகள் திரும்பி வரவில்லை. அவர்கள் அப்படியே தலைமறைவாகி விட்டனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், திருச்சூர், மலப்புரம், கண்ணூர் ஆகிய 4 மத்திய சிறைச்சாலைகள் மட்டுமின்றி, 3 திறந்தநிலை சிறைச்சாலைகள், 3 பெண்கள் சிறைச்சாலைகள், 13 மாவட்ட சிறைச்சாலைகள், 15 சிறப்பு நிலை சிறைச்சாலைகள், 16 துணை சிறைச்சாலைகள் மற்றும் சிறுவர் சீர்திருத்த பள்ளிகள் இருக்கின்றன.

    இங்கு தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 1000-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைகளில் கடந்த 1990-ம் ஆண்டில் இருந்து 2022-ம் ஆண்டு வரை பரோலில் சென்ற ஆயுள் தண்டனை கைதிகள் 67பேர் சிறைக்கு திரும்பி வரவில்லை. அவர்கள் பரோல் முடிந்து திரும்பி வராமல் தலைமறைவாகிவிட்டனர்.

    இவர்கள் அனைவருமே கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் ஆவர். மற்ற குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற 3 கைதிகளும் இதே போல் மாயமாகி இருக்கிறார்கள். அவர்களையும் சேர்த்து கேரள சிறைகளில் இருந்து பரோலில் சென்ற 70 கைதிகள் மாயமாகி இருக்கிறார்கள். அவர்கள் 70 பேரும் மாயமாகி பல ஆண்டுகள் ஆகியும் அவர்களை பற்றி எந்த தகவலும் இல்லை.

    நெட்டுக்கல்தேரி திறந்தவெளி சிறையில் இருந்து கடந்த 1990-ம் ஆண்டு ராமன் என்ற கைதி பரோலில் சென்ற நிலையில் மாயமானார். அவர் மாயமாகி 34 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அவரைப் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    அதேபோன்று கடைசியாக 2022-ம் ஆண்டு அனில்குமார் என்ற ஆயுள் தண்டனை கைதி பரோலில் சென்ற நிலையில் மாயமாகி விட்டார். அவரும் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. பரோலில் சென்று மாயமான கைதிகள் அனைவரும் தொடர்ந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கருப்படுகிறது.

    ஆனால் அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? தலைமறைவாக வாழ்ந்து குற்ற செயல்களில் எதுவும் ஈடுபடுகிறார்களா? என்பதை சிறைத்துறை மற்றும் காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது கேரளாவில் வேதனைக்குரிய விஷயமாக உள்ளது.

    • மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை உபகரணங்கள் வழங்குவதை மருந்து நிறுவனங்கள் நிறுத்தியது.
    • மற்ற அரசு மருத்துவமனைகளும் கொடுக்க வேண்டிய பணம் கோடிக்கணக்கில் பாக்கியாக உள்ளது.

    கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கோட்டயம், கோழிக்கோடு உள்ளிட்ட இடங்களில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் செயல்படுகின்றன. மேலும் எர்ணாகுளம், கோழிக்கோடு உள்ளிட்ட பல இடங்களில் அரசு மருத்துவமனைகள் இருக்கின்றன. பிரசித்தி பெற்ற தனியார் மருத்துவ மனைகளும் இங்கு ஏராளம். இருந்த போதிலும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கும் நோயாளிகள் அதிக அளவில் வருகிறார்கள். திருவனந்தபுரம் உள்ளிட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தனியார் ஆஸ்பத்திரிகளை போன்று நவீன மருத்துவ வசதிகள் இருக்கின்றன. இதனால் வசதி படைத்த வர்கள் கூட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற விரும்பு கின்றனர்.

    இப்படிப்பட்ட சூழலில் கேரள மாநில அரசு ஆஸ்பத்திரிகளில் ஒரு சிக்கலான நிலை உருவாகி இருக்கிறது. கேரள மாநில அரசு கடந்த சில மாதங்களாக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இது இந்த மாத தொடக்கத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் எதிரொலித்தது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் முதல் இரண்டு நாட்களுக்குள் அரசு ஊழியர்களுக்கு அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த மாதம் அது மிகவும் தாமதமாக வழங்கப்பட்டது. பல துறைகளை சேர்ந்த ஊழியர்களுக்கு முழுமையான சம்பளம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

    இந்த நிதி நெருக்கடி மருத்துவத் துறையையும் பாதித்துள்ளதாக தெரிகிறது. கேரள மாநிலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் தனியார் நிறுவனங்களிடமிருந்து பெறப்படுகிறது. அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான மருந்து விநியோகத்தில் ஏராளமான வினியோகஸ்தர்கள் ஈடுபடுகின்றனர்.

    அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை அரசு ஒரு குறிப்பிட்ட கால அளவில் வழங்கி வந்தபடி இருந்தது. இந்நிலையில் அறுவை சிகிச்சை உபகரணங்கள் நிறுவன விநியோகஸ்தர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை பல மாதங்களாக மாநில அரசு வழங்காமல் உள்ளது.

    2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை கோடிக்கணக்கான ரூபாய் பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் ரூ.143கோடி தொகையை விநியோகஸ்தர்களுக்கு மாநில அரசு வழங்காமல் பாக்கி வைத்துள்ளது. மாநிலத்தில் அதிகபட்சமாக திருவ னந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ.50கோடி வரை பாக்கி வைத்துள்ளது.

    அதேபோல் கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரூ17.55 கோடியும், கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரூ23.14 கோடியும், எர்ணாகுளம் பொது மருத்துவமனை ரூ10.97 கோடியும், கோழிக்கோடு பொது மருத்துவமனை ரூ3.21 கோடியும் பாக்கி வைத்துள்ளது. இதே போல் மற்ற அரசு மருத்துவமனைகளும் கொடுக்க வேண்டிய பணம் கோடிக்கணக்கில் பாக்கியாக உள்ளது.

    தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குமாறு அறுவை சிகிச்சை நிறுவன விநியோகஸ்தர்கள் மாநில அரசை பலமுறை வலியுறுத்தி உள்ளனர். ஆனால் அவர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை கொடுக்க அரசு நடவ டிக்கை எடுக்காமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

    இதனால் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அறுவை சிகிச்சை உபகரணங்கள் வழங்குவதை ஏப்ரல் மாதம் முதல் நிறுத்த அறுவை சிகிச்சை உபகரண நிறுவனங்களின் விநியோகஸ்தர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அந்த சங்கம் அந்தந்த மருத்துவமனை கண்காணிப்பாளர் களுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

    அந்த கடிதத்தில் எங்களுக்கு வழங்க வேண்டிய பாக்கிதொகையை வருகிற 31-ந்தேதிக்குள் கட்ட தவறி னால், உபகரணங்கள் சப்ளை நிறுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்று கடந்த ஆகஸ்ட் மாதம் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை உபகரணங்கள் வழங்குவதை மருந்து நிறுவனங்கள் நிறுத்தியது. அதன் எதிரொலியாக அறுவை சிகிச்சை உபகரணங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    அங்கு இருதய அறுவை சிகிச்சைகள் ஒரு வாரம் நிறுத்தப்பட்டது. பின்பு இரண்டு மாத நிலுவை தொகையான 6 கோடி ரூபாயை அரசு செலுத்தியபிறகே விநியோ கஸ்தர்கள் மீண்டும் அறுவை சிகிச்சை உபகரணங்களை சப்ளை செய்தனர். பின்பு தான் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அறுவை சிகிச்சைகள் வழக்கம் போல் நடைபெற தொடங்கின.

    இந்தநிலையில் தற்போது அறுவை சிகிச்சை உபகரணங்கள் நிறுவன விநியோகஸ்தர்கள் சப்ளையை நிறுத்துவோம் என்று கூறி இருப்பதால் தற்போது மீண்டும் பிரச்சினை உருவாகி இருக்கிறது.

    அவர்கள் கூறியிருப்பது போல் அறுவை சிகிச்சை உபகரணங்கள் சப்ளையை நிறுத்தினால் மாநிலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரி களில் ஏப்ரல் மாதம் முதல் அறுவை சிகிச்சைக்கான அனைத்து உபகரணங்களும் தட்டுப் பாடு ஏற்படும்.

    இருதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்ய முடியாத நிலை ஏற்படும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நோயா ளிகள் பெரிதும் பாதிக்கப் படுவார்கள்.

    தற்போது அரசு ஆஸ்பத்திரிகளில் ஒவ்வொரு நோயாளிக்கும் தேதி குறிப்பிடப்பட்டே அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பெரும்பாலான நோயாளிகள் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு வெகுநாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையே நிலவி வருகிறது.

    இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்வது முற்றிலும் தடைபடும் பட்சத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. இதில் அரசு உடனடியாக தலையிட்டு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

    அறுவை சிகிச்சை நிறுவனங்களின் விநியோகஸ்தர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை முற்றிலுமாக வழங்கி, பிரச்சனைக்கு தீர்வு காண அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

    ×