என் மலர்
கேரளா
- ஹாசிம் மாற்றுப்பாதையில் அதிவேகமாக காரை ஓட்டிவந்து மோதியதே விபத்துக்கு காரணம் என்பது தெரிந்தது.
- காரை லாரியில் மோதச்செய்து இருவரும் தற்கொலை செய்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியானது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் அடூர் அருகே காயங்குளம்-புனலூர் சாலையில் ஏழம்குளம் பட்டாசி முக்கு பகுதியில் சம்பவத்தன்று இரவு ஒரு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக எதிரே ஒரு கார் வந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் கண்டெய்னர் லாரியும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் கார் பலத்த சேதமடைந்தது. அந்த காரின் முன்பக்க இருக்கையில் இருந்த பெண் மற்றும் காரை ஓட்டிய நபர் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர்.
அவர்கள் இடுபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இந்த பயங்கர விபத்து பற்றி தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கிடந்த இருவரையும் மீட்டனர். ஆனால் அவர்களின் அந்த பெண் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
உயிருக்கு போராடியபடி இருந்த காரை ஓட்டிவந்த நபரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அந்த நபர் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டார். விபத்தில் சிக்கி பலியான இருவரும் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் சாரும்மூடு பகுதியை சேர்ந்த ஹாசிம்(வயது31), ஆலப்புழா மட்டப்பள்ளியை சேர்ந்த அனுஜா ரவீந்திரன் (37) என்றும், இருவர்கள் நண்பர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் ஹாசிம் மாற்றுப்பாதையில் அதிவேகமாக காரை ஓட்டிவந்து மோதியதே விபத்துக்கு காரணம் என்பது தெரிந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தியதில் காரை லாரியில் மோதச்செய்து இருவரும் தற்கொலை செய்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியானது.
அனுஜா பந்தளம் அருகே உள்ள தும்ப மண் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்திருக்கிறார். ஹாசிம் தனியார் பஸ் டிரைவராக பணியாற்றியுள்ளார். இருவரும் நட்பாக பழகி வந்தது இருவரது குடும்பத்தினருக்கிடையே பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று அனுஜா தன்னுடன் பணிபுரியும் பள்ளி ஆசிரியர்களுடன் திருவனந்தபுரத்துக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பி வந்திருக்கிறார். அப்போது அவர்களது வாகனத்தை ஒரு இடத்தில் ஹாசிம் வழிமறித்து நிறுத்தியிருக்றிார்.
பின்பு தனது காரில் ஆசிரியை அனுஜாவை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். அப்போது அவர் ஆசிரியையை வலுக்கட்டாயமாக தனது காரில் ஹாசிம் அழைத்துச் சென்றுள்ளார். இதனால் சக ஆசிரியர்கள், சிறிறு நேரம் கழித்து அனுஜாவுக்கு செல்போனில் பேசியுள்ளனர்.
அப்போது அவர், நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ளப்போகிறோம் என்று அழுதபடி கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இருவரையும் தேடிச் சென்றனர். மேலும் அதுபற்றி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
இந்நிலையில் அவர்களது கார் லாரி மீது மோதி இருவரும் பலியான தகவலறிந்து அதிர்ச்சியடைந்தனர். அனுஜாவுடன் பணி புரியும் சக ஆசிரியர்கள் உள்ளிட்டவர்கள் கூறிய தகவலில், தாங்கள் போனில் பேசியபோது அனுஜா தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்ததாக கூறினர்.
இதனால் அனுஜா மற்றும் ஹாசிம் ஆகிய இருவரும் காரை லாரியில் மோதச்செய்து தற்கொலை செய்திருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் அவர்கள் ஏன் தற்கொலை செய்தார்கள்? என்பது தெரியவில்லை. அது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் தனது மகன் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு இல்லை என்று ஹாசிமின் தந்தை ஹக்கீம் கூறியிருக்கிறார். அதனடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஆனி ராஜா இடது சாரி ஜனநாயக முன்னணி சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
- இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் அவ்வப்போது தங்களது எதிர்ப்பு கருத்தை தெரிவித்தபடி உள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 29-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேசிய அளவில் இருக்கும் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றிருந்தாலும், கேரள மாநிலத்தில் அந்த கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன.
வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜாவும் போட்டியிடுகிறார்கள். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே வயநாடு தொகுதியில் ஆனி ராஜா போட்டியிடப் போவதாகவும், ஆகவே அந்த தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடக்கூடாது எனவும் இந்திய கம்யூனிஸ்டு கோரிககை வைத்தது.
ஆனால் காங்கிரஸ் கட்சி சார்பில் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் இந்த நடவடிக்கை கம்யூனிஸ்டு கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் அவ்வப்போது தங்களது எதிர்ப்பு கருத்தை தெரிவித்தபடி உள்ளனர்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கேரள மாநில செயலாளர் கோவிந்தனும் வயநாடு தொகுதி வேட்பாளராக ராகுல்காந்தியை காங்கிரஸ் நிறுத்தியிருப்பதற்கு தனது கண்டன கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஆனி ராஜா இடது சாரி ஜனநாயக முன்னணி சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். ஆனால் காங்கிரஸ் கட்சி இந்திய கூட்டணியின் ஆதரவுடன் ராகுல்காந்தியை வேட்பாளராக முன்னிறுத்துவது வெட்கக் கேடானது.
அவர் இந்திய கூட்டணி வேட்பாளராக ஏன் முன்னிறுத்தப்படுகிறார்? இந்தியா என்ற முத்திரையை பயன்படுத்தி கேரளாவில் போட்டியிட வேண்டிய அவசியமில்லை. கேரளாவில் பரதிய ஜனதா கட்சி எந்த இடத்திலும் வெற்றி பெறாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் மத்திய அரசிடம் இருந்து நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
- கொரோனா பாதிப்பு மற்றும் நிபா வைரஸ் பரவியபோது, சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தவர் கே.கே.சைலஜா.
கோழிக்கோடு:
கேரள மாநிலம் வடகரா பாராளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடது முன்னணி சார்பில் முன்னாள் மந்திரி கே.கே.சைலஜா போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் காணொலி காட்சி மூலம் மலையாளத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இதுவரை நடைபெற்ற தேர்தல்களுக்கும், இந்த முறை நடைபெற உள்ள தேர்தலுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் மத்திய அரசிடம் இருந்து நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்த சமயத்தில் கே.கே.சைலஜா போன்றவர்கள் பாராளுமன்றத்திற்கு சென்று நமது குரலை எதிரொலிப்பது அவசியம்.
கொரோனா பாதிப்பு மற்றும் நிபா வைரஸ் பரவியபோது, சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தவர் கே.கே.சைலஜா. மனம் தளராமல் நிவாரண பணிகளை ஒருங்கிணைத்து மக்களை காப்பாற்றினார். தேர்தலில் கே.கே.சைலஜா வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் நிபந்தனை ஜாமீனில் இருந்து வந்தார்.
- எர்ணாகுளம் மருத்துவமனையில் கடந்த ஒரு மாத திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் செயல்படும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி. கோவை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். அவர் மீது கூறப்பட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந் தும் விடுவிக்கப்பட்டார்.
இதனால் பல ஆண்டுகள் விசாரணை கைதியாக கோவை மத்திய ஜெயிலில் அகை்கப்பட்டிருந்த அவர், விடுதலை ஆனார். ஆனால் 2008 பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மதானி கைது செய்யப்பட்டு, அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் நிபந்தனை ஜாமீனில் இருந்து வந்தார்.
தனது உடல்நல பாதிப்புக்கு தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியிருப்பதால் தனது ஜாமீனில் மேலும் தளர்வுகள் வழங்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில் அவருக்கான ஜாமீன் நிபந்தனைகளை சுப்ரீம் கோர்ட்டு தளர்த்தியது.
இதையடுத்து மதானி கடந்த ஆண்டு ஜூலை மாதம் கேரளாவுக்கு வந்தார். அவர் கல்லீரல் நோய் பாதித்து அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் எர்ணாகுளம் மருத்துவமனையில் கடந்த ஒரு மாத திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் மதானி யின் உடல்நிலை கவலைக் கிடமான நிலையில் இருப்ப தாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் ஆக்சிஜன் அளவு குறைந்தது. இதனால் அவரை டாக்டர்கள் குழுவினர் வென்டிலேட்டர் சிகிச்சையில் வைத்தனர். மேலும் டயாலிசிஸ் சிகிச்சை யும் நடந்து வருகிறது.
மருத்துவமனையில் மதானியின் மனைவி சுபியா, மகன் சலாவுதீன் மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் உள்ளனர்.
- வயநாடு தொகுதியை பொறுத்தவரை ஆனி ராஜா மற்றும் சுரேந்திரன் ஆகிய இருவருமே தீவிர பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.
- காங்கிரஸ் வேட்பாளரான ராகுல்காந்தி இன்னும் பிரசாரத்துக்கு தொகுதிக்கு வரவில்லை.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளில் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ள தொகுதி வயநாடு. ஏனென்றால் தற்போது அந்த தொகுதியில் எம்.பி.யாக இருக்கும் ராகுல்காந்தி மீண்டும் போட்டியிடுகிறார்.
அவருடன் அந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா, பாரதிய ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவர் சுரேந்திரன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
இதன் காரணமாக அனைவரின் பார்வையும் வயநாடு தொகுதியில் பக்கம் திரும்பியிருக்கிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆனி ராஜா போட்டியிடுவார் என்று அந்த கட்சி அறிவித்து விட்டது. இதனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே தனது பிரசாரத்தை ஆனி ராஜா தொடங்கிவிட்டார்.
அதேபோல் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில தலைவர் சுரேந்திரன் போட்டியிடுவார் என்று சில நாட்களுக்கு முன்பு தான் அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து அவரும் தனது பிரசாரத்தை தொடங்கினார்.
வயநாடு தொகுதியை பொறுத்தவரை ஆனி ராஜா மற்றும் சுரேந்திரன் ஆகிய இருவருமே தீவிர பிரசாரத்தை தொடங்கி விட்டனர். அவர்கள் ராகுல் காந்தியை தோற்கடித்து, வெற்றிவாகை சூடிவிட வேண்டும் என்ற முனைப்பில் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதேவேளையில் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் காங்கிரஸ் வேட்பாளரான ராகுல்காந்தி இன்னும் பிரசாரத்துக்கு தொகுதிக்கு வரவில்லை. அவர் ஏப்ரல் 3-ந்தேதி வயநாட்டுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவரது வருகைக்கு பின் வயநாடு தொகுதி தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்கும். அதே நேரத்தில் ஆனி ராஜா மற்றும் சுரேந்திரன் ஆகிய இருவருமே ராகுல்காந்தியை தாக்கி பேசுவதையும், அவரை தொகுதி மக்கள் விரும்பவில்லை என்று கருத்து கூறியபடியும் தங்களின் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தொகுதி மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் தொகுதியில் இருப்பதையே விரும்புவதாக கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆனி ராஜா கூறியதாவது:-
நான் தொகுதியில் இருப்பேனா அல்லது தற்போதைய எம்.பி. போன்று விருந்தினராக இருப்பேனா? என்பதை இங்குள்ள வாக்காளர்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் நான் அவர்களுடன் தான் இருப்பேன் என்று அவர்களுக்கு உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாரதிய ஜனதா கட்சி சுரேந்திரன் கூறும்போது, 'தேர்தலில் வெற்றி பெற்றால் முழு காலத்துக்கும் வாக்காளர்களுடன் இருப்பேன். தற்போது பதவியில் இருப்பவரை போல் எம்.பி.யாக இருக்க முடியாது. செல்வாக்கு மிக்க அரசியல்வாதியாக இருந்தாலும், பின்தங்கிய பாராளுமன்ற தொகுதிக்கு வளர்ச்சியை ஏற்படுத்துவதில் எம்.பி.யாக ராகுல்காந்தி தோல்வியடைந்தவர் என்பதை நிரூபித்துள்ளார்' என்றார்.
- ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் ரோடு-ஷோ செல்கிறார்.
- ராகுல்காந்தி வருகை அறிவிப்பு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் செய்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடும் ராகுல்காந்தி இன்றும் வரவில்லை. இருந்தபோதிலும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இருந்தபோதிலும் ராகுல் காந்தி எப்போது வருவார்? என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் ராகுல்காந்தி வருகிற ஏப்ரல் 3-ந்தேதி கேரளா வருகிறார். அவர் அன்றைய தினம் மதியம் 12 மணியளவில் கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
அதனைத்தொடர்ந்து ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் ரோடு-ஷோ செல்கிறார். அதன்பிறகு அவர் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். பின்னர் பிரசாரத்துக்காக கேரளாவில் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 26-ந்தேதிக்கு முந்தைய நாட்களில் கேரளாவுக்கு மீண்டும் வருகிறார். அப்போது அவர் வயநாடு தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
ராகுல்காந்தி வருகை அறிவிப்பு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ராகுல்காந்தியை வரவேற்க தயாராகி வரும் காங்கிரஸ் நிர்வாகிகள், அவரது பிரசார பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ராகுல்காந்தியும் பிரசாரத்துக்கு வந்துவிடும் பட்சத்தில், வயநாடு தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- வழக்கு விசாரணை திருச்சூர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
- அரசு தரப்பில் 28 முக்கிய ஆவணங்கள் உள்பட 109 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் பெரிங்கோட்டுக்கரை பகுதியை சேர்ந்தவர் ஆதர்ஷ்(வயது25). இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பின் நிர்வாகி யான இவர், கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் குட்டிக்காடு பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டார்.
காரில் பயங்கர ஆயதங்களுடன் வந்த கும்பல் ஆதர்சை படுகொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிஜில்(வயது27), பிரஜில்(28), மனு(27), ஷனில்(27), ஷிஹாப்(30), பிரஷ்னோவ்(32) ஆகிய 6பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை திருச்சூர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் மொத்தம் 46 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். அரசு தரப்பில் 28 முக்கிய ஆவ ணங்கள் உள்பட 109 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நிஜில், பிரஜில், மனு, ஷனில், ஷிஹாப், பிரஷ்னோவ் ஆகிய 6 பேரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர். அவர்கள் 6 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா 4 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி சாலிஹ் தீர்ப்பு கூறினார்.
அபராத தொகையை கட்டத்தவறும் பட்சத்தில் கூடுதலாக 4 ஆண்டுகள் சிறைதண்டனை அனுப விக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரையும் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- ஏ.டி.எம். மையத்தில் தனியார் ஏஜென்சி மூலமாக பணம் நிரப்பப்படும்.
- பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து மஞ்சேஷ்வர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் காசர்கோடு உப்பளம் பகுதியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் செயல்பட்டு வரும் இந்த ஏ.டி.எம். மையத்தில் தனியார் ஏஜென்சி மூலமாக பணம் நிரப்பப்படும்.
அதன்படி நேற்று மதியம் 2 மணியளவில், அந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்புவதற்காக ஒரு வாகனம் வந்தது. அந்த வாகனத்தில் மொத்தம் ரூ.1 கோடி பணம் கொண்டு சென்றுள்ளனர். ஒரு மூட்டையில் தலா ரூ.50 லட்சம் வீதம் இரு மூட்டைகளில் ரூ.1 கோடி பணம் வைத்திருந்தனர்.
அதில் ரூ.20 லட்சம் பணத்தை ஏ.டி.எம்.-ல் நிரப்புவதற்காக ஒரு மூட்டையை மட்டும் தனியார் ஏஜென்சி ஊழியர்கள் எடுத்துச்சென்றுள்ளனர். வாகனத்தில் பின்பக்க கதவு பூட்டப்பட்டிருந்ததால், வாகனத்தின் அருகில் யாரும் நிறுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர், பணம் வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் பக்கவாட்டு பகுதி கண்ணாடியை உடைத்து, வாகனத்துக்குள் இருந்த பண மூட்டையை எடுத்து விட்டு தப்பியது. இதனை ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்பிப் கொண்டிருந்த தனியார் ஏஜென்சி ஊழியர்கள் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை நிரப்பிவிட்டு திரும்பி வந்தபோது தான், வாகன கண்ணாடி உடைந்து கிடந்ததை பார்த்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், வாகனத்தை சோதனை செய்தபோது, ஒரு மூட்டையில் வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து மஞ்சேஷ்வர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.
வாகனத்தில் லட்சக்கணக்கில் பணம் இருக்கும்போது, பாதுகாப்புக்கு ஊழியர்கள் நிற்காமல் சென்றிருப்பது ஏன் என்பது தெரியவில்லை. மேலும் வாகனத்தின் கண்ணாடியை கொள்ளையர்கள் உடைக்கும்போது சத்தம் யாருக்கும் கேட்காதது எப்படி? என்பதும் மர்மமாக உள்ளது.
இதனால் கொள்ளை நடந்தபோது சம்பவ இடத்தில் இருந்த வாகன டிரைவர், பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்ட தனியார் ஏஜென்சி ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களில் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் வேன் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதில் இருந்த பணம் பாதுகாப்பாக மாற்று வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. பட்டப்பகலில் வாகன கண்ணாடியை தைரியமாக உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவத்தில் ஒரு நபரோ அல்லது இரண்டு நபர்கள் மட்டுமே ஈடுபட்டு இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர்.
ஆகவே கொள்ளையர்களை கண்டுபிடிக்க சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்கின்றனர். ஆனால் சாலை பணி நடப்பதன் காரணமாக சம்பவ இடத்தில் இருக்கும் பல சி.சி.டி.வி. கேமராக்கள் செயல்படாமல் இருந்துள்ளது.
இதனால் கொள்ளையில் ஈடுபட்டவர்களை அடை யாளம் காணுவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த சம்பவத்திற்கு முழுக்க முழுக்க தனியார் ஏஜென்சி ஊழியர்களின் பாதுகாப்பு குறைபாடே காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் காசர்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 26-ந்தேதியன்று பொதுவிடுமுறையாக மாநில அரசு அறிவித்துள்ளது.
- வேட்பு மனுக்கள் தாக்கல் நடந்த அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
திருவனந்தபுரம்:
பாராளுமன்ற தேர்தல் மாநிலங்களில் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக நடக்கும் ஏப்ரல் 26-ந்தேதி, கேரள மாநிலத்தில் தேர்தல் நடைபெறுகிறது. அங்குள்ள 20 மக்களவை தொகுதி களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி ஏப்ரல் 4-ந்தேதி வரை நடைபெறும் எனவும், வருகிற 29, 31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய பொது விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேர்தல் அதிகாரிகளிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி கேரள மாநிலத்தில் உள்ள மக்களவை தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு வேட்பு மனுக்கள் தாக்கல் நடந்த அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முதல் நாளான இன்று ஒரு சிலர் வேட்பு மனுக்களை வாங்கிச் சென்றனர்.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 5-ந்தேதி நடைபெறுகிறது. அங்கு வேட்பு மனுக்களை வாபஸ் பெற 8-ந்தேதி கடைசி நாளாகும். அதன்பிறகு ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் வெளியிடப்படும்.
வேட்பு மனு தாக்கல் செய்ய வருபவர்கள் தேர்தல் நடத்தை வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படியே வேட்புமனு பெற வந்தவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 26-ந்தேதியன்று பொதுவிடுமுறையாக மாநில அரசு அறிவித்துள்ளது. அன்றைய தினம் அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி, கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கும்.
வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை ஊதியம் பொருந்தும் என்று அறிவித்துள்ள மாநில அரசு, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வரும் தனியார் நிறுவ னங்கள் மற்றும்வணிக மையங்களுக்கு விடுமுறை அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தொழிலாளர் ஆணையருக்கு அறிவுறுத்தி உள்ளது.
- தனியார் நிறுவனம் 1.75 கோடி ரூபாயை வீணா விஜயன் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக வழங்கியதாக குற்றச்சாட்டு.
- வீணா விஜயன் நிறுவனம் தனியார் நிறுவனத்திற்கும் எந்த சேவையும் வழங்காத நிலையில் இந்த பணம் பரிமாற்றம்.
கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. பினராயி விஜயன் முதல் மந்திரியாக இருந்து வருகிறார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக எதிர்க்கும் மாநில அரசாக இருந்து வருகிறது.
இந்த நிலையில்தான் பினராயி விஜய் மகளாக வீணா விஜய் மீது அமலாக்கத்துறை பணமோசடி புகாரில் வழக்குப்பதிவு செய்துள்ளது. விரைவில் சம்மன் அனுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பினராயி விஜயன் மகள் வீணா விஜயன் ஐ.டி. நிறுவனம் நடத்தி வருகிறார். வீணா விஜயனும், அவரது ஐ.டி. நிறுவனமும் தனியார் மினரல் நிறுவனத்திற்கும் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் எம்.பி. கோவிந்தன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எம்.பி. கோவிந்தன் கூறியதாவது:-
நாட்டின் முக்கியமான அமைப்புகளில் ஒன்று அமலாக்கத்துறை. இது நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இந்த வழக்கை உரிய முறையில் எதிர்கொள்வோம். நீங்கள் அரசியலில் யாரையும் குறி வைக்கலாம். ஆனால் யார் குறி வைக்கிறது என்பதுதான் கேள்வி. அமலாக்கத்துறை பா.ஜனதாவுக்கு தினசரி கூலி போன்றதாகிவிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் தொண்டர்களும் இதுபோன்ற தந்திரங்கள் மற்றும் வழக்குகளுக்கு சரண் அடைபவர்கள் அல்ல.
இவ்வாறு கோவிந்தன் தெரிவித்துள்ளார்.
கொச்சின் மினரல்ஸ் அண்டு ரூடைல் லிமிடெட் என்ற நிறுவனம் வீணாவின் Exalogic Solutions நிறுவனத்திற்கு முறைகேடாக 1.72 கோடி ரூபாய் பணம் செலுத்தியுள்ளது. ஆனால் ஐ.டி. நிறுவனமான Exalogic Solutions அந்த தனியார் நிறுவனத்திற்கு ஒரு சேவையும் செய்யவில்லை.
எஸ்.எஃப்.ஐ.ஓ. (Serious Fraud Investigation Office) வழக்கு விசாரணையை தொடங்கியதற்கு எதிராக வீணா விஜயன் நிறுவனம் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்தது.
எஸ்.எஃப்.ஐ.ஓ. வழக்குப்பதிவு செய்ததை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
- சீசன் காலங்களில் விமான கட்டணம் திடீரென அதிகரிக்கப்படுவது அவர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
- இது தொடர்பாக விருப்பம் உள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தது.
திருவனந்தபுரம்:
கேரளாவைச் சேர்ந்த மலையாள மக்கள் வளைகுடா நாடுகளில் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சொந்த ஊருக்கு வருவதற்கு விமான சேவையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சீசன் காலங்களில் விமான கட்டணம் திடீரென அதிகரிக்கப்படுவது அவர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு கப்பல் சேவையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து கேரள கடல்சார் வாரியம் விழிஞ்சம், கொல்லம், பேப்பூர் மற்றும் அழிக்கால் துறை முகங்களில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு கப்பல் சேவைகளை இயக்க முடிவு செய்தது. இது தொடர்பாக விருப்பம் உள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தது.
அதன்பேரில் கப்பல் சேவைகளை தொடங்க 4 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக கேரள கடல்சார் வாரியத் தலைவர் என்.எஸ்.பிள்ளை தலைமையில் கொச்சியில் நாளை (27-ந் தேதி) முதல் கட்ட விவாதம் நடைபெற உள்ளது. இந்த கப்பல் சேவை தொடங்கப்பட்டால், பயண நேரம் அதிகரித்தாலும், அதிக சரக்குகளை கொண்டு செல்லமுடியும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
- ராகுல்காந்தியை எதிர்த்து இடதுசாரி கூட்டணி சார்பில் கம்யூனிஸ்டு வேட்பாளராக ஆனிராஜா களமிறக்கப்பட்டுள்ளார்.
- யாரும் எதிர்பார்க்காத வகையில் கேரள மாநில பா.ஜனதா தலைவர் சுரேந்திரன் களம் இறக்கப்பட்டு உள்ளார்.
திருவனந்தபுரம்:
பாராளுமன்ற தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தொகுதிகளில் ஒன்று கேரள மாநிலம் வயநாடு. இங்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீண்டும் களம் இறங்குகிறார். கடந்த முறை அமேதி மற்றும் வயநாட்டில் போட்டியிட்ட அவர், அமேதியில் தோல்வியடைந்தார். அதே நேரம் வயநாட்டில் வெற்றி பெற்றார். எனவே வருகிற தேர்தலிலும் அவர் வயநாட்டில் போட்டியிடுவதாக காங்கிரஸ் அறிவித்தது.
இதனை தொடர்ந்து அவரது வெற்றிக்காக காங்கிரஸ் கட்சியினர் தற்போதே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ராகுல்காந்தி பாரத் ஜோடா யாத்திரை முடிந்ததும் வயநாடு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இதுவரை வரவில்லை. இருப்பினும் வேட்பு மனு தாக்கலுக்காக அவர் விரைவில் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது வருகையை பெரிய நிகழ்வாக மாற்ற காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கேரளாவில் 2-ம் கட்ட தேர்தலான ஏப்ரல் 26-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
ராகுல்காந்தியை எதிர்த்து இடதுசாரி கூட்டணி சார்பில் கம்யூனிஸ்டு வேட்பாளராக ஆனிராஜா களமிறக்கப்பட்டுள்ளார். இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும் கேரளாவில் காங்கிரசும் கம்யூனிஸ்டும் தனித்தனியாக எதிர்த்து களமிறங்குகின்றன. ஆனிராஜா ஏற்கனவே தொகுதி முழுவதும் பிரசாரத்தை தீவிரப்படுத்தி மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்த தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் களம் இறங்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கேரள மாநில பா.ஜனதா தலைவர் சுரேந்திரன் களம் இறக்கப்பட்டு உள்ளார்.
அவர் இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஆரம்பத்திலேயே கூறி வந்த நிலையில் திடீரென வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், வயநாட்டில் ராகுலை வீழ்த்த வலுவான வேட்பாளரை களமிறக்க கட்சி திட்டமிட்டதால், தன்னை போட்டியிட வலியுறுத்தியதாகவும் அதனை ஏற்று களம் இறங்குவதாகவும் தெரிவித்தார். கடந்த தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு என்ன முடிவு கிடைத்ததோ, அது இந்த தேர்தலில் வயநாட்டிலும் கிடைக்கும். இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்கள் ஏன் ஒரே தொகுதியில் போட்டியிடுகிறார்கள் என்று மக்கள் தற்போதே கேள்வி எழுப்ப தொடங்கி விட்டனர். இது வாக்குப்பதிவின் போது நிச்சயம் வெளிப்படும். இன்று மாலை வயநாட்டில் ரோடு ஷோ மூலம் மக்களை சந்திக்க உள்ளேன் என்றும் அவர் கூறினார்.
கேரளாவில் 3 முக்கிய தலைவர்கள் களம் இறங்கி உள்ளதால் வயநாடு தொகுதி எதிர்பார்க்கப்படும் முக்கிய வி.ஐ.பி. தொகுதியாக மாறி உள்ளது.






