என் மலர்
கேரளா
- மீண்டும் ஒரு பத்திரிகையாளர் என்னிடம், பிரதமர் மோடிக்கு மாற்று தனிநபர் யார்? என்பதை குறிப்பிடும்படி கேட்டார்.
- பாராளுமன்ற முறையில் இந்த கேள்வி பொருத்தமற்றது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் சசி தரூர். இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மூன்று முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது 4-வது முறையாக களம் இறக்கப்பட்டுள்ளார்.
இந்த மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. இருந்த போதிலும் பிரதமர் மோடிக்கு எதிராக களம் இறங்கும் பிரதமர் வேட்பாளர் யார்? என்பதை எதிர்க்கட்சிகள் தெரிவிக்கவில்லை. தேர்தல் முடிந்த பின், பிரதமர் பதவிக்கு யார் நிறுத்தப்படுவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் சசி தரூரிடம் பிரதமர் மோடிக்கான மாற்று யார்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சசி தரூர் பதில் அளித்துள்ளார்.
சசி தரூர் தனது எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
மீண்டும் ஒரு பத்திரிகையாளர் என்னிடம், பிரதமர் மோடிக்கு மாற்று தனிநபர் யார்? என்பதை குறிப்பிடும்படி கேட்டார். பாராளுமன்ற முறையில் இந்த கேள்வி பொறுத்தமற்றது. பாராளுமன்ற முறையில் நாம் தனி நபரை தேர்வு செய்வதில்லை. இந்தியாவின் பன்முகத்தன்மை, பன்மைத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைப் பாதுகாக்க விலைமதிப்பற்ற கொள்கைகள் மற்றும் நம்பிக்கைகளின் தொகுப்பை பிரதிபலிக்கும் கட்சி அல்லது கூட்டணி கட்சிகளை தேர்ந்தெடுக்கிறோம்.
மோடிக்கு மாற்று அனுபவம் வாய்ந்த, திறமையான, பன்முகத்தன்மை கொண்ட, மக்களின் பிரச்சனைகளுக்கு பதில் அளிக்கக் கூடியவர்கள்.
பிரதமர் தேர்வு என்பது 2-வது கட்டம்தான். எந்த குறிப்பிட்ட நபரை அவர்கள் பிரதமராக தேர்ந்தெடுப்பார்கள் என்பது 2-வது பட்சம்தான். நம்முடைய ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மையை பாதுகாப்பதுதான் முன்னமையானது.
- மத்தியில் ஆளும் பா.ஜனதாவை வீழ்த்த காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், தி.மு.க., ஆம் ஆத்மி மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட பல்வேறு கட்சிகள் தேசிய அளவில் ஒன்றிணைந்துள்ளன.
- வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி மீண்டும் போட்டியிடுகிறார்.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளம், 38,852 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. கிழக்கே மேற்கு தொடர்ச்சி மலைகளும், மேற்கில் அரபிக்கடலும் உள்ளது.
இந்த மாநிலத்தின் தென்கிழக்கில் தமிழ்நாடும், வடகிழக்கில் கர்நாடக மாநிலமும் எல்லைகளாக அமைந்துள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் கேரளத்தை, கடவுளின் தேசம் என்றே அழைக்கின்றனர். கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம் உள்ள மாநிலம் என்ற பெருமையும் இந்த கேரளத்துக்கு உண்டு.
கடந்த ஜனவரியில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட கணக்குப்படி மொத்தம் 2 கோடியே 70 லட்சத்து 99 ஆயிரத்து 326 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 கோடியே 39 லட்சத்து 96 ஆயிரத்து 729 பேர் பெண்கள், 1 கோடியே 31 லட்சத்து 2 ஆயிரத்து 288 பேர் ஆண்கள் மற்றும் திருநங்கைகள் 309 பேரும் உள்ளனர்.
மொத்த மக்கள்தொகையில் 54.7 சதவீதம் பேர் இந்துக்களும், 26.6 சதவீதம் பேர் முஸ்லிம்கள், 18.4 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் மாநில கட்சிகளைவிட தேசிய கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் ஆதிக்கமே நீண்டகாலம் இருந்து வருகிறது. இந்த இரு கட்சிகளுமே மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன.
பெரும்பாலும் சட்டமன்ற தேர்தலில் ஒரு முறை ஆட்சியை கொடுத்த கட்சிக்கு மறுமுறை ஆட்சி மகுடத்தை கொடுப்பதில்லை கேரள மக்கள். ஆனால் தற்போதைய முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு மட்டும் தொடர்ச்சியாக 2 முறை ஆட்சி பீடத்தை கொடுத்துள்ளனர்.
2016-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடது முன்னணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பினராயி விஜயன் முதல்-மந்திரியானார்.
2016-ல் சட்டசபை தேர்தலில் வெற்றியை கொடுத்த கேரள மக்கள், 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 'கை' கொடுத்தனர்.
மொத்தம் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளை கைப்பற்றியது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியின் சொந்த தொகுதி உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதி ஆகும். அவருடைய தந்தையும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பிரதமரானார். ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார்.
சொந்த தொகுதியான அமேதியில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார் ராகுல் காந்தி. அதே நேரம் வயநாடு தொகுதி அவருக்கு ஆதரவு கரம் நீட்டியது. அங்கு அவர் அமோக வெற்றி பெற்றார்.
2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜனதாவை வீழ்த்த காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், தி.மு.க., ஆம் ஆத்மி மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட பல்வேறு கட்சிகள் தேசிய அளவில் ஒன்றிணைந்துள்ளன.
ஆனால் கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், இடதுசாரி கட்சிகளும் முக்கிய எதிரிகளாக உள்ளதால், இங்கு இந்தியா கூட்டணி அமையவில்லை. இரு கட்சிகளும் எதிர் எதிர் துருவங்களாக பிரிந்து போட்டியிடுகின்றன.
அத்துடன் பா.ஜனதாவும் களத்தில் உள்ளது. இந்த முறை கேரளாவில் தங்கள் கணக்கை எப்படியும் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களும் வரிந்து கட்டி நிற்கிறார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடது முன்னணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் உள்ளது. இந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பலம் வாய்ந்த வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி சைலஜா குறிப்பிடத்தக்கவர்.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் (எம்), புரட்சிகர சோசலிஸ்ட் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
காங்கிரஸ் கட்சியும் இந்த முறை தனது முக்கிய தளகர்த்தர்களை களம் இறக்கியுள்ளது. குறிப்பாக தற்போதைய எம்.பி.யான சசிதரூர், அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் வேணுகோபால், முன்னாள் முதல்-மந்திரி கருணாகரனின் மகன் முரளிதரன் உள்ளிட்டோரை வேட்பாளராக அறிவித்துள்ளது.
வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி மீண்டும் போட்டியிடுகிறார்.
இந்த இருகட்சிகளுக்கு இணையாக பா.ஜனதாவும் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், நடிகர் சுரேஷ் கோபி, மாநில தலைவர் சுரேந்திரன், முன்னாள் முதல்-மந்திரி கருணாகரனின் மகள் பத்மஜா, முன்னாள் முதல்-மந்திரி ஏ,கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணி ஆகியோர் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக வயநாட்டில் ராகுல் காந்தியை எதிர்த்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா, மாநில பா.ஜனதா தலைவர் சுரேந்திரன் ஆகியோர் மோதுகின்றனர். அங்கு பிரசாரம் அனல் பறக்கிறது.
தேசிய அளவில் ஒரே கூட்டணியில் உள்ளவர்கள், இங்கு எதிர் துருவங்களாக போட்டியிடுவது, கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இதுபற்றி டி.ராஜா கூறும்போது, நமது பொது எதிரி பா.ஜனதா. ஆனால் அதை விடுத்து வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுவது சரியில்லை என்றார்.
எது எப்படியோ பசுமையும், குளுமையும் நிறைந்த கேரள மாநிலத்தில், தற்போதைய தேர்தல் களம் தகிக்கிறது.
- மத்திய இணை மந்திரி வி.முரளீதரன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
- இதற்கான டெபாசிட் தொகையை மாணவர்களே திரட்டி பணம் செலுத்தினர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் நிறைவடைகிறது. ஆற்றிங்கல் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மத்திய இணை மந்திரி வி.முரளீதரன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில், பழவங்காடி கணபதி கோயிலில் வழிபட்ட பின், தனது வேட்புமனுவை முரளீதரன் இன்று தாக்கல் செய்தார்.
அதற்கான டெபாசிட் தொகையை உக்ரைனில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்கள் செலுத்தியது விசாரணையில் தெரிய வந்தது.
ரஷியா, உக்ரைன் போரின்போது அங்கு சிக்கித் தவித்த இந்திய மாணவர்களை ஆபரேஷன் கங்கா திட்டம் மூலம் மத்திய அரசு மீட்டு தாயகம் திரும்பி வர உதவியது. வெளியுறவுத்துறை இணை மந்திரியாக முக்கிய பங்காற்றிய முரளீதரனுக்கு நன்றி செலுத்தும் வகையில் அவர் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகையை மாணவர்கள் செலுத்தினர்.
- பாரதிய ஜனதாவை எதிர்க்கும் கூட்டணியின் குறிக்கோளை தோற்கடித்து ராகுல்காந்தியை வயநாட்டில் நிறுத்துவது பொருத்தமற்றது.
- காங்கிரஸ் கட்சியை தவிர அனைத்து அரசியல் கட்சிகளையும் மத்திய அரசு வேட்டையாடி வருகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அந்த இரு கட்சிகளும் கேரளாவில் உள்ள அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன.
கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் 16 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அதே வேளையில் இந்தியா கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிடுகிறது. இதனால் காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பமான சூழல் நிலவுகிறது.
வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போதைய எம்.பி.யான ராகுல்காந்தி போட்டியிடுகிறார். அதே வேளையில் அந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார்.
வயநாடு தொகுதியில் ஆனி ராஜா போட்டியிடுவதால், ராகுல்காந்தி போட்டியிடக்கூடாது என்று இந்திய கம்யூனிஸ்டு கேட்டுக்கொண்டது. ஆனால் அதனையும் மீறி ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் அறிவித்தது.
இது கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பாரதிய ஜனதாவுக்கு எதிரான போராட்டத்தை, தான் முன்னெடுப்பதாக கூறும் ராகுல்காந்தி, வயநாடு தொகுதியில் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு எதிராக ஏன் போட்டியிடுகிறார்? என்று டி.ராஜா கேள்வி எழுப்பினார்.
வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவதற்கு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தபடி உள்ளனர். மேலும் தேசிய அளவில் ஒரே கூட்டணியில் உள்ள இரு கட்சிகள் ஒரே தொகுதியில் தனித்தனியாக மல்லுக்கட்டுவது மற்ற கட்சிகளின் மத்தியிலும் பேசும் பொருளாக உருவெடுத்து இருக்கிறது.
இந்நிலையில் வயநாட்டில் ராகுல்காந்தி போட்டியிடுவது பொருத்தமற்றது என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கோழிக்கோட்டில் ஆனி ராஜாவை ஆதரித்து பிரசாரம் செய்த அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாரதிய ஜனதாவை எதிர்க்கும் கூட்டணியின் குறிக்கோளை தோற்கடித்து ராகுல்காந்தியை வயநாட்டில் நிறுத்துவது பொருத்தமற்றது. அவர் கேரளாவில் முக்கிய அரசியல் சக்தியாக இருக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணியை எதிர்த்து போராடுவதற்காக வந்துள்ளார்.
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், இடதுசாரி தலைவர் ஆனி ராஜாவுக்கு எதிராகவும் ராகுல்காந்தி போட்டியிடுவது என்ன நியாயம்? அவர் வயநாட்டில் பாரதிய ஜனதாவை எதிர்த்து போட்டியிடவில்லை. அவர் எங்களுக்கு எதிராகவே போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் கட்சியை தவிர அனைத்து அரசியல் கட்சிகளையும் மத்திய அரசு வேட்டையாடி வருகிறது. கலால் கொள்கை தொடர்பாக டெல்லி அரசுக்கு எதிராக காங்கிரஸ் புகார் அளித்தது. இந்த நடவடிக்கை இறுதியில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையில் முடிந்தது.
குடியுரிமை திருத்த சட்டம் போன்ற கொள்கைகளால் இந்தியாவில் மதச்சார்பின்மையை பாரதிய ஜனதா அரசு அழித்து வருகிறது. ராகுல்காந்தி இந்தியா முழுவதும் பயணம் செய்தார். ஆனால் அவர் சி.ஏ.ஏ.-வுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டின் முன்பு 2 குட்டி பாம்புகள் ஊர்ந்து சென்றன.
- வனத்துறையினர், பாம்புகள் பிடிக்கும் குழுவினருடன் சென்று பார்த்தனர்.
மூணாறு:
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். விவசாயி. இவரது வீட்டின் அருகில் மாட்டு தொழுவம் ஒன்று உள்ளது. ஆனால் ராதாகிருஷ்ணன் தற்போது மாடுகள் எதுவும் வளர்க்கவில்லை. இதனால் அந்த தொழுவம் காலியாக கிடந்தது.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டின் முன்பு 2 குட்டி பாம்புகள் ஊர்ந்து சென்றன. இதனை பார்த்த ராதாகிருஷ்ணன், அந்த பாம்புகள் செல்லும் இடத்தை நோக்கி பின்தொடர்ந்து சென்றார். அப்போது அவை அவரது மாட்டு தொழுவத்துக்குள் சென்று, மண்ணுக்குள் பதுங்கியது. அங்கு அதிகளவில் குட்டி பாம்புகள் இருந்தன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனத்துறையினர், பாம்புகள் பிடிக்கும் குழுவினருடன் சென்று பார்த்தனர். அப்போது அங்கு பெரிய ராஜநாகம் ஒன்று இருந்தது. மேலும் அங்கு இருந்த குட்டி பாம்புகள், ராஜநாகத்தின் குட்டிகள் என்பது தெரியவந்தது. பெரிய ராஜநாகத்துடன், 52 குட்டிகள் பதுங்கியிருந்தன. அவற்றில் 47 குட்டிகள் உயிருடனும், 5 குட்டிகள் இறந்த நிலையிலும் இருந்தன.
இதைத்தொடர்ந்து பெரிய ராஜநாகத்தை சாக்குப்பையிலும், அவற்றின் குட்டிகளை பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் அடைத்தும் வனத்துறையினர் பிடித்து சென்றனர்.
- அறிகுறிகள் யாருக்கும் இருந்தால் உடனடியாக சிகிச்சை பெறுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- சிறுவன் வீடு உள்ள பகுதியில் கொசு ஒழிப்பு உள்ளிட்ட தூய்மை பணிகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கொடியத்தூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவனுக்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். க்யூலைக்ஸ் இனத்தை சேர்ந்த கொசுக்களால் இந்த காய்ச்சல் பரவுகிறது.
விலங்குகளையே பாதிக்கும் இந்த காய்ச்சல், மனிதர்களை அரிதாக தாக்குகிறது. சிறுவனுக்கு பாதித்திருக்கும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வேறு யாருக்கும் வந்துள்ளதா? என்று சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர். ஆனால் வேறு யாரும் பாதிக்கப்படவில்லை. இந்த நோய்க்கு காய்ச்சல், தலைவலி, சோம்பல் உளிட்டவைகளே அறிகுறிகளாக இருக்கின்றன.
அந்த அறிகுறிகள் வேறு யாருக்கும் இருக்கிறதா? என்று கணக்கிடப்பட்டு வருகிறது. மேலும் மேற்கண்ட அறிகுறிகள் யாருக்கும் இருந்தால் உடனடியாக சிகிச்சை பெறுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி சிறுவன் வீடு உள்ள பகுதியில் கொசு ஒழிப்பு உள்ளிட்ட தூய்மை பணிகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டனர்.
- பா.ஜனதாவுக்கு எதிரான 18 கட்சிகள் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக ஒன்றிணைந்தன.
- பேரணியில இருந்து காங்கிரஸ் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.- பினராயி விஜயன்
டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் இன்று வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இவரது கைது கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மிகப் பிரமாண்ட பேரணி கூட்டம் ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற பெயரில் நடைபெற்றது. இதில் இந்தியா கூட்டணியில் உள்ள முக்கியமான தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் ஆகியோரின் மனைவிகளும் இந்த பேரணி கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஏராளமான மக்கள் இந்த பேரணிக்கு திரண்டு வந்திருந்தனர்.
இந்த நிலையில் இந்தியா கூட்டணி பேரணிக்கு திரண்ட கூட்டம், பா.ஜனதாவுக்கு கடுமையான எச்சரிக்கையை கொடுத்துள்ளது என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மேலும், "பா.ஜனதாவுக்கு எதிரான 18 கட்சிகள் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளன. இந்த பேரணியில இருந்து காங்கிரஸ் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். டெல்லி மாநில மதுபான கொள்கையில் காங்கிரஸ் எடுத்த நடவடிக்கைதான் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணைக்கு வழிவகுத்தது. இந்த வழக்கில் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் புகார் அளித்தது. இருந்தபோதிலும் பேரணியில் கலந்த கொண்டதற்காக காங்கிரஸ் கட்சியை வரவேற்கிறேன்" என்றார்.
இந்த பேரணியின்போது எதிர்க்கட்சிகள், ஜனநாயகத்தை, அரசியலமைப்பை காப்பாற்ற பா.ஜனதாவை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், அரசின் சர்வாதிகார நடவடிக்கைகள் மூலம் பாராளுமன்ற மக்களவை தேர்தலில் சமநிலை பறிக்கப்படுகிறது என பா.ஜனதா மீது குற்றம் சாட்டினர்.
- ஆண்கள் மோகினியாட்டம் ஆட வேண்டும் என்றால் அதற்கு அவர்கள் அழகாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து
- ஒருவர் காகத்தின் நிறத்தில் இருக்கிறார். அழகானவர்கள் ஆடும் மோகினியாட்டத்தை ஆடுவதற்க்கு அவர் தகுதியற்றவர்.
பிரபல மோகினியாட்டக் கலைஞர் ராமகிருஷ்ணனை தரக்குறைவாக விமர்சித்த பரத நாட்டியக் கலைஞர் கலமண்டலம் சத்யபாமா மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவனந்தபுரத்தில் நாட்டியப் பள்ளி நடத்தி வரும் மூத்த மோகினியாட்டக் கலைஞரான சத்யபாமா சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்தார்.
அதில், "மோகினியாட்டம் ஆடும் கலைஞர்கள் தங்களின் கால்களைச் சற்று அகலமாக விரித்து வைத்து ஆட வேண்டியதிருக்கும். ஒரு ஆண் இவ்வாறு கால்களை விரித்து வைத்துக் கொண்டு மோகினியாட்டம் ஆடினால் அது பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கும்.
ஆண்கள் மோகினியாட்டம் ஆட வேண்டும் என்றால் அதற்கு அவர்கள் அழகாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. ஒருவர் காகத்தின் நிறத்தில் இருக்கிறார். அழகானவர்கள் ஆடும் மோகினியாட்டத்தை ஆடுவதற்க்கு அவர் தகுதியற்றவர். அவர் அருவருப்பான மோகினியாட்டத்தைத்தான் ஆடி வருகிறார்" என்று சத்யபாமா அந்த நேர்காணலில் கடுமையான கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.
மோகினியாட்டக் கலைஞரான சத்யபாமா தனது நேர்காணலில் குறிப்பிட்ட அடையாளங்கள், ஆர்.எல்.வி ராமகிருஷ்ணனை தான் என கேரளாவைச் சேர்ந்த பலரும் தெரிவித்தனர்.
இவரது இந்த பேச்சு கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது கருத்துக்கு கேரள அமைச்சர்கள் சஜி செரியன், ஆர்.பிந்து, வீணா ஜார்ஜ், கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மோகினியாட்ட கலைஞரான ஆர்.எல்.வி ராமகிருஷ்ணன் மோகினியாட்டம் தொடர்பாக முனைவர் பட்டம் பெற்றுள்ளார். கேரளாவில் மறைந்த நடிகர் கலாபவன் மணியின் சகோதரர் ஆர்.எல்.வி.ராமகிரஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
- இருவரும் ஒருவர் மற்றவரின் தவறுகளை மறைக்க வேலை செய்கிறார்கள்.
- கேரளாவில் பா.ஜனதா தொண்டர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள், அவர்களது ஆர்வம் ஒப்பிடமுடியாதவை.
திருவனந்தபுரம்:
தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் கணிசமான வெற்றியை பெற வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா உறுதியாக உள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் மற்றம் கேரளத்தில் ரோடு ஷோ, பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று நமோ ஆப் மூலம் கேரளாவில் உள்ள பா.ஜனதா பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் பேசினார். அப்போது மோடி கூறியதாவது:-
இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரசும், கம்யூனிஸ்டு கட்சிகளும் கேரளாவில் ஒருவரையொருவர் எதிர்த்து போராடினாலும் மற்ற மாநிலங்களில் பா.ஜனதாவை தோற்கடிக்க முயற்சிக்கின்றனர். இதனை நீங்கள் மக்களிடம் கொண்டு சென்று அவர்களது இரட்டை வேஷத்தை அம்பலப்படுத்த வேண்டும்.
இருவரும் ஒருவர் மற்றவரின் தவறுகளை மறைக்க வேலை செய்கிறார்கள். இது கேரளாவில் விளையாடும் ஆட்டம். கேரள மக்கள் படித்தவர்கள், இதுபற்றி அவர்களுக்குத் தேர்தல் பிரசாரத்தில் நீங்கள் தெரிவிக்க வேண்டும். அவர்களது ஊழலை மறைக்க தான் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை கொள்ளையடிக்கும் மோசடிகளில் ஈடுபடுவர்கள் தப்பிக்க முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நான் உறுதி அளிக்கிறேன்.
கேரளாவில் கருவண்ணூர் வங்கி மோசடி வழக்கில் கம்யூனிஸ்டு உயர் தலைவர்கள் சம்பந்தப் பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் யாரும் விடுவிக்கப்பட மாட்டார்கள். அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்ட பணம் டெபாசிட்தாரர்களுக்கு திருப்பித் தரப்படும்.
சாவடி மட்டத்தில் வெற்றி என்பதை தாரக மந்திரமாக கொண்டு தொண்டர்கள் செயல்பட வேண்டும். கேரளாவில் பா.ஜனதா தொண்டர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள், அவர்களது ஆர்வம் ஒப்பிடமுடியாதவை. கேரள பயணத்தின் போது நான் பார்த்த ஆற்றலும் உற்சாகமும் மாநிலம் புதிய சாதனையை படைக்கும் என்பதை நம்ப வைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியாவின் நற்பெயருக்கு உலக நாடுகள் மத்தியில் களங்கம் ஏற்பட்டுள்ளது.
- ஐ.நா. சபை, மற்றும் அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் இந்தியாவின் நடவடிக்கைகளை விமர்சித்துள்ளன.
திருவனந்தபுரம்:
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இடது சாரி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். திருவனந்தபுரம், நெய்யாற்றின் கரை பகுதிகளில் அவர் பேசியதாவது:-
மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளால் நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். நாட்டின் மதச் சார்பின்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் உள்ளன. இதனால் மக்களாட்சி கொண்ட மதச்சார்பற்ற நாடு என்று கருதப்படும் இந்தியாவின் நற்பெயருக்கு உலக நாடுகள் மத்தியில் களங்கம் ஏற்பட்டுள்ளது.
ஐ.நா. சபை, மற்றும் அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் இந்தியாவின் நடவடிக்கைகளை விமர்சித்துள்ளன. இப்படி ஒரு நிலைமை இதற்கு முன்பு இந்தியாவுக்கு ஏற்பட்டதில்லை. இது மாற்றப்பட வேண்டும். அதற்கு பாரதிய ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்ற கருத்து அனைத்து மாநிலத்திலும் எழுந்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒற்றுமை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- நீண்ட நாட்களாக இந்த தொல்லையில் இருந்த சிறுமி, ஒரு நாள் இதுபற்றி புகார் செய்தார்.
- வழக்கு விசாரணை சாவக்காடு முதலாவது சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் சாவக்காடு திருவத்திரை பகுதியைச் சேர்ந்தவர் மொய்து (வயது 70). இவர் 14 வயது சிறுமியை கடந்த சில ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுபற்றி வெளியில் யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார்.
நீண்ட நாட்களாக இந்த தொல்லையில் இருந்த சிறுமி, ஒரு நாள் இதுபற்றி புகார் செய்தார். அதன்பேரில் சாவக்காடு போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து மொய்துவை கைது செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பான வழக்கு விசாரணை சாவக்காடு முதலாவது சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் மொய்துவுக்கு ஆயுள் தண்டனையும், 64 ஆண்டுகள் கூடுதல் கடுங்காவல் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
- ஹாசிம் மாற்றுப்பாதையில் அதிவேகமாக காரை ஓட்டிவந்து மோதியதே விபத்துக்கு காரணம் என்பது தெரிந்தது.
- காரை லாரியில் மோதச்செய்து இருவரும் தற்கொலை செய்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியானது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் அடூர் அருகே காயங்குளம்-புனலூர் சாலையில் ஏழம்குளம் பட்டாசி முக்கு பகுதியில் சம்பவத்தன்று இரவு ஒரு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக எதிரே ஒரு கார் வந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் கண்டெய்னர் லாரியும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் கார் பலத்த சேதமடைந்தது. அந்த காரின் முன்பக்க இருக்கையில் இருந்த பெண் மற்றும் காரை ஓட்டிய நபர் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர்.
அவர்கள் இடுபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இந்த பயங்கர விபத்து பற்றி தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கிடந்த இருவரையும் மீட்டனர். ஆனால் அவர்களின் அந்த பெண் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
உயிருக்கு போராடியபடி இருந்த காரை ஓட்டிவந்த நபரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அந்த நபர் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டார். விபத்தில் சிக்கி பலியான இருவரும் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் சாரும்மூடு பகுதியை சேர்ந்த ஹாசிம்(வயது31), ஆலப்புழா மட்டப்பள்ளியை சேர்ந்த அனுஜா ரவீந்திரன் (37) என்றும், இருவர்கள் நண்பர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் ஹாசிம் மாற்றுப்பாதையில் அதிவேகமாக காரை ஓட்டிவந்து மோதியதே விபத்துக்கு காரணம் என்பது தெரிந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தியதில் காரை லாரியில் மோதச்செய்து இருவரும் தற்கொலை செய்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியானது.
அனுஜா பந்தளம் அருகே உள்ள தும்ப மண் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்திருக்கிறார். ஹாசிம் தனியார் பஸ் டிரைவராக பணியாற்றியுள்ளார். இருவரும் நட்பாக பழகி வந்தது இருவரது குடும்பத்தினருக்கிடையே பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று அனுஜா தன்னுடன் பணிபுரியும் பள்ளி ஆசிரியர்களுடன் திருவனந்தபுரத்துக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பி வந்திருக்கிறார். அப்போது அவர்களது வாகனத்தை ஒரு இடத்தில் ஹாசிம் வழிமறித்து நிறுத்தியிருக்றிார்.
பின்பு தனது காரில் ஆசிரியை அனுஜாவை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். அப்போது அவர் ஆசிரியையை வலுக்கட்டாயமாக தனது காரில் ஹாசிம் அழைத்துச் சென்றுள்ளார். இதனால் சக ஆசிரியர்கள், சிறிறு நேரம் கழித்து அனுஜாவுக்கு செல்போனில் பேசியுள்ளனர்.
அப்போது அவர், நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ளப்போகிறோம் என்று அழுதபடி கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இருவரையும் தேடிச் சென்றனர். மேலும் அதுபற்றி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
இந்நிலையில் அவர்களது கார் லாரி மீது மோதி இருவரும் பலியான தகவலறிந்து அதிர்ச்சியடைந்தனர். அனுஜாவுடன் பணி புரியும் சக ஆசிரியர்கள் உள்ளிட்டவர்கள் கூறிய தகவலில், தாங்கள் போனில் பேசியபோது அனுஜா தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்ததாக கூறினர்.
இதனால் அனுஜா மற்றும் ஹாசிம் ஆகிய இருவரும் காரை லாரியில் மோதச்செய்து தற்கொலை செய்திருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் அவர்கள் ஏன் தற்கொலை செய்தார்கள்? என்பது தெரியவில்லை. அது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் தனது மகன் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு இல்லை என்று ஹாசிமின் தந்தை ஹக்கீம் கூறியிருக்கிறார். அதனடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






