search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    விபத்தில் திருப்பம் - கண்டெய்னர் லாரி மீது காரை மோதவிட்டு ஆசிரியையுடன் தற்கொலை செய்த டிரைவர்
    X

    விபத்தில் திருப்பம் - கண்டெய்னர் லாரி மீது காரை மோதவிட்டு ஆசிரியையுடன் தற்கொலை செய்த டிரைவர்

    • ஹாசிம் மாற்றுப்பாதையில் அதிவேகமாக காரை ஓட்டிவந்து மோதியதே விபத்துக்கு காரணம் என்பது தெரிந்தது.
    • காரை லாரியில் மோதச்செய்து இருவரும் தற்கொலை செய்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியானது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் அடூர் அருகே காயங்குளம்-புனலூர் சாலையில் ஏழம்குளம் பட்டாசி முக்கு பகுதியில் சம்பவத்தன்று இரவு ஒரு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக எதிரே ஒரு கார் வந்தது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் கண்டெய்னர் லாரியும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் கார் பலத்த சேதமடைந்தது. அந்த காரின் முன்பக்க இருக்கையில் இருந்த பெண் மற்றும் காரை ஓட்டிய நபர் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர்.

    அவர்கள் இடுபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இந்த பயங்கர விபத்து பற்றி தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கிடந்த இருவரையும் மீட்டனர். ஆனால் அவர்களின் அந்த பெண் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

    உயிருக்கு போராடியபடி இருந்த காரை ஓட்டிவந்த நபரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அந்த நபர் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டார். விபத்தில் சிக்கி பலியான இருவரும் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் சாரும்மூடு பகுதியை சேர்ந்த ஹாசிம்(வயது31), ஆலப்புழா மட்டப்பள்ளியை சேர்ந்த அனுஜா ரவீந்திரன் (37) என்றும், இருவர்கள் நண்பர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் ஹாசிம் மாற்றுப்பாதையில் அதிவேகமாக காரை ஓட்டிவந்து மோதியதே விபத்துக்கு காரணம் என்பது தெரிந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தியதில் காரை லாரியில் மோதச்செய்து இருவரும் தற்கொலை செய்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியானது.

    அனுஜா பந்தளம் அருகே உள்ள தும்ப மண் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்திருக்கிறார். ஹாசிம் தனியார் பஸ் டிரைவராக பணியாற்றியுள்ளார். இருவரும் நட்பாக பழகி வந்தது இருவரது குடும்பத்தினருக்கிடையே பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று அனுஜா தன்னுடன் பணிபுரியும் பள்ளி ஆசிரியர்களுடன் திருவனந்தபுரத்துக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பி வந்திருக்கிறார். அப்போது அவர்களது வாகனத்தை ஒரு இடத்தில் ஹாசிம் வழிமறித்து நிறுத்தியிருக்றிார்.

    பின்பு தனது காரில் ஆசிரியை அனுஜாவை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். அப்போது அவர் ஆசிரியையை வலுக்கட்டாயமாக தனது காரில் ஹாசிம் அழைத்துச் சென்றுள்ளார். இதனால் சக ஆசிரியர்கள், சிறிறு நேரம் கழித்து அனுஜாவுக்கு செல்போனில் பேசியுள்ளனர்.

    அப்போது அவர், நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ளப்போகிறோம் என்று அழுதபடி கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இருவரையும் தேடிச் சென்றனர். மேலும் அதுபற்றி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

    இந்நிலையில் அவர்களது கார் லாரி மீது மோதி இருவரும் பலியான தகவலறிந்து அதிர்ச்சியடைந்தனர். அனுஜாவுடன் பணி புரியும் சக ஆசிரியர்கள் உள்ளிட்டவர்கள் கூறிய தகவலில், தாங்கள் போனில் பேசியபோது அனுஜா தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்ததாக கூறினர்.

    இதனால் அனுஜா மற்றும் ஹாசிம் ஆகிய இருவரும் காரை லாரியில் மோதச்செய்து தற்கொலை செய்திருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் அவர்கள் ஏன் தற்கொலை செய்தார்கள்? என்பது தெரியவில்லை. அது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆனால் தனது மகன் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு இல்லை என்று ஹாசிமின் தந்தை ஹக்கீம் கூறியிருக்கிறார். அதனடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×