என் மலர்
கேரளா
- 86 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
- வேட்பு மனுக்கள் வாபஸ் பெற வருகிற 8-ந்தேதி கடைசி நாளாகும்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு வருகிற 26-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
திருவனந்தபுரம் தொகுதியில் 22 பேர், அட்டிக்கல் தொகுதியில் 14 பேர், கொல்லம் தொகுதியில் 15 பேர், பத்தினம்திட்டா தொகுதியில் 10 பேர், மாவேலிக்கரை தொகுதியில் 14 பேர், ஆழப்புழா தொகுதியில் 14 பேர், கோட்டயம் தொகுதியில் 17 பேர், இடுக்கி தொகுதியில் 12 பேர், எர்ணாகுளம் தொகுதியில் 14 பேர், சாலக்குடி தொகுதியில் 13 பேர், திருச்சூர் தொகுதியில் 15 பேர், ஆலத்தூர் தொகுதியில் 8 பேர், பாலக்காடு தொகுதியில் 16 பேர், பொன்னானி தொகுதியில் 20 பேர், மலப்புரம் தொகுதியில் 14 பேர், கோழிக்கோடு தொகுதியில் 15 பேர், வயநாடு தொகுதியில் 12 பேர், வடகரா தொகுதியில் 14 பேர், கண்ணூர் தொகுதியில் 18 பேர், காசர்கோடு தொகுதியில் 18 பேர் என 20 தொகுதிகளில் மொத்தம் 290 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. அதில் திருவனந்தபுரம் தொகுதியில் 9 பேர், அட்டிக்கல் தொகுதியில் 7பேர், கொல்லம் தொகுதியில் 3பேர், பத்தினம்திட்டா தொகுதியில் 2பேர், மாவேலிக்கரை தொகுதியில் 4பேர், ஆழப்புழா தொகுதியில் 3பேர், கோட்டயம் தொகுதியில் 3பேர், இடுக்கி தொகுதியில் 4 பேர், எர்ணாகுளம் தொகுதியில் 4பேர், சாலக்குடி தொகுதியில் ஒருவர், திருச்சூர் தொகுதியில் 5பேர், ஆலத்தூர் தொகுதியில் 3 பேர், பாலக்காடு தொகுதியில் 5 பேர், பொன்னானி தொகுதியில் 12 பேர், மலப்புரம் தொகுதியில் 4 பேர், கோழிக்கோடு தொகுதியில் 2 பேர், வயநாடு தொகுதியில் 2பேர், வடகரா தொகுதியில் 3பேர், கண்ணூர் தொகுதியில் 6பேர், காசர்கோடு தொகுதியில் 4பேர் என 20 தொகுதிகளில் மொத்தம் 86 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ராகுல்காந்தி, ஆனி ராஜா, சுரேந்திரன், நடிகர் சுரேஷ் கோபி, மத்திய மந்திரி முரளிதரன், முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர், முன்னாள் மந்திரி சைலஜா, முன்னாள் முதல்-மந்திரி கருணாகரணின் மகன் முரளிதரன், காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் உள்ளிட்ட 204 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
வேட்பு மனுக்கள் வாபஸ் பெற வருகிற 8-ந்தேதி கடைசி நாளாகும். அதன் பிறகு வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியாகும். சுயேட்சை வேட்பாளர்ளுக்கு சின்னங்களும் அன்றைய தினம் ஒதுக்கப்படும்.
- திருவனந்தபுரத்தில் பா.ஜ.க. சார்பில் மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார்.
- ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரத்தில் தனது வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சசி தரூர் வேட்பாளராக போட்டியிடுகிறார். பா.ஜ.க. சார்பில் மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். இதனால் அங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
இதற்கிடையே, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரத்தில் தனது வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார். அதில், 2021-22-ம் ஆண்டிற்கான தனது வரிக்குட்பட்ட வருமானமாக வெறும் ரூ.680 மட்டுமே என குறிப்பிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் அவரது வருமானம் தொடர்ந்து குறைந்து வருவதாக கணக்கு காட்டியுள்ளார்.
அப்போது அவர் மாநிலங்களவை உறுப்பினராக சம்பளம் வாங்கி கொண்டிருந்தார்.
இந்நிலையில், ராஜீவ் சந்திர சேகர் தனது வேட்பு மனுவில் உண்மையான சொத்து மதிப்பை காட்டாமல் பல மடங்கு குறைத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பா.ஜ.க. மந்திரிகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் செல்லாது. அவை எதிர்க்கட்சிகளுக்கு மட்டும் தான். பாஜகவிற்காகவும், மோடிக்காகவும் இப்படித்தான் இந்திய ஏஜென்சிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் கோகலே எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
Amazing!
— Saket Gokhale (@SaketGokhale) April 6, 2024
Union Minister Rajeev Chandrasekhar declared income of ONLY ₹680 for FY 2021-22.
He was a Rajya Sabha MP in that period earning a salary.
But Income Tax (IT) notices aren't meant for BJP Ministers.
Only for the Opposition.
THIS is how agencies work for BJP & Modi. pic.twitter.com/bcjXZ0vdkS
- நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் வினீஷ், ஷெரின் இருவரும் படுகாயமடைந்தனர்.
- நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது வெடி விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் பானூர் புளியந்தோடு பகுதியை சேர்ந்தவர் வினீஷ்(வயது25), புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஷெரின்(25). இவர்கள் இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொண்டர்கள் ஆவர்.
இந்நிலையில் இவர்களின் ஒருவரது வீட்டின் மாடியில் இன்று அதிகாலை நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில் வினீஷ், ஷெரின் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். ஒருவரின் கைகள் துண்டிக்கப்பட்டன. மற்றொருவருக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று படுகாயமடைந்து கிடந்த இருவரையும் மீட்டு கண்ணூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்பு அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது வெடி விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். நாட்டு வெடிகுண்டு வெடித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்கள் இருவர் படுகாயமடைந்த சம்பவம் கண்ணூர் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தனக்கு திருமணம் நடந்துவிட்டது குறித்தும், தனது படிப்பை தொடர உதவ வேண்டும் என்றும் வார்டு கவுன்சிலர் சத்திய பாமாவிடம் சிறுமி கேட்டுள்ளார்.
- பாதிக்கப்பட்ட சிறுமியை போலீசார் வெள்ளிமடு குன்று பகுதியில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.
திருவனந்தபுரம்:
மதுரையை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமி கேரள மாநிலம் கோழிக்கோடு கிழக்குமலை பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அந்த சிறுமி அங்குள்ள ஒரு பள்ளயில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் அந்த சிறுமிக்கும், மாங்காவு பகுதியை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். பள்ளிக்கு சென்று படிக்கவேண்டும் என்ற சிறுமியின் விருப்பத்திற்கு மாறாக, வலுக்கட்டாயமாக அவருக்கு திருமணம் செய்து வைத்ததாக தெரிகிறது.
அவர் தனக்கு திருமணம் நடந்துவிட்டது குறித்தும், தனது படிப்பை தொடர உதவ வேண்டும் என்றும் வார்டு கவுன்சிலர் சத்திய பாமாவிடம் கேட்டுள்ளார். பள்ளி படிக்கும் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்திருப்பதை அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.
அவர் சட்ட சேவைகள் ஆணைய தன்னார்வ தொண்டர் ஒருவரின் உதவியை நாடினார். அவர் மூலம் போலீசாரிடம் பாதிக்கப்பட்ட சிறுமியை புகார் அளிக்க செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்தபோது சிறுமிக்கு அவரது பெற்றோர் உள்ளிட்டோர் சேர்ந்து கட்டாய திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர், சிறுமியை திருமணம் செய்த வாலிபர், வாலிபரின் பெற்றோர் ஆகிய 5 பேர் மீது இலத்தூர் போலீசார் வழக்கு பதிந்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியை போலீசார் வெள்ளிமடு குன்று பகுதியில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.
மேலும் அந்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும், கவுன்சிலிங் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவை முடிந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சிறுமிக்கு கேரளாவில் கட்டாய திருமணம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- 'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளில் வெளியாகியது.
- 'தி கேரளா ஸ்டோரி' படத்தை ஒளிபரப்ப தூர்தர்ஷன் நேஷனல் எடுத்த முடிவு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
திருவனந்தபுரம்:
'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு (2023) மே மாதம் மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளில் வெளியாகியது. அந்த படத்தின் கதை சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததால் படம் வெளியாவதற்கு முன்பும், வெளியான பிறகும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இந்த படம் வெளியானபோது, அந்த படம் ஓடிய தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தூர்தர்ஷன் டெலிவிஷனில் இன்று (5-ந்தேதி) இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு கேரள மாநில முதல்-மந்திரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருக்கும் பதிவில், 'தி கேரளா ஸ்டோரி' படத்தை ஒளிபரப்ப தூர்தர்ஷன் நேஷனல் எடுத்த முடிவு வன்மையாக கண்டிக்கத்தக்கது. பொதுத்தேர்தலுக்கு முன்னதாக வகுப்புவாத பதட்டங்களை அதிகப்படுத்த மட்டுமே முயல்கிற திரைப்படத்தை ஒளிபரப்புவதை தூர்தர்தன் கைவிடவேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
- சசிதரூர் ரூ.49.3 கோடி அசையும் சொத்துகளும், ரூ.6.75 கோடி அசையா சொத்துகளும் இருப்பதாக கூறியுள்ளார்.
- ரூ.2 கோடி மதிப்பிலான அமெரிக்க முதலீடுகள், ரூ.1.1 கோடிக்கான அமெரிக்க கடன்களையும் குறிப்பிட்டு இருந்தார்.
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது சொத்து விவரங்களையும் வெளியிட்டு இருந்தார். அதில் ரூ.49.3 கோடி அசையும் சொத்துகளும், ரூ.6.75 கோடி அசையா சொத்துகளும் இருப்பதாக கூறியுள்ளார். இதில் முக்கியமாக ரூ.5,11,314 மதிப்பிலான பிட்காயின் இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் ரூ.2 கோடி மதிப்பிலான அமெரிக்க முதலீடுகள், ரூ.1.1 கோடிக்கான அமெரிக்க கடன்களையும் குறிப்பிட்டு இருந்தார். இவற்றை தவிர ரூ.9.33 கோடி பங்கு முதலீடுகள், ரூ.3.46 கோடி கார்பரேட் பத்திரங்கள், ரூ.91.7 லட்சம் டெபாசிட் ஆவணங்கள், ரூ.36 ஆயிரம் கையிருப்பு போன்றவையும் இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
- வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
- கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அதன் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜாவும் போட்டியிடுகின்றனர்.
தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் உள்ள இரு கட்சிகளும் வயநாடு தொகுதியில் தனித்தனியாக போட்டியிடுவது அந்தக் கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைவர்கள் தங்களது எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்து வருவதால் இந்தியா கூட்டணியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வயநாடு தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் ஆனி ராஜா அங்கு வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வயநாடு தொகுதி எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தி தொகுதியைப் புறக்கணித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் வயநாடு தொகுதிக்கு அவர் என்ன செய்தார்? அவர் ஒருமுறை கூட பாராளுமன்றத்தில் வயநாடு தொகுதியின் பெயரை உயர்த்தவில்லை.
ராகுல் காந்தி இந்தத் தொகுதிக்கு எதுவும் செய்யாததால் வயநாடு மக்களுக்கு நான் ஒரு சிறிய காரியத்தை செய்தாலும், அது பெரிய விஷயமாக இருக்கும். தொகுதி மக்கள் மொழிபெயர்ப்பாளர் இல்லாமல் அணுகக்கூடிய ஒருவர் தேவை என கூறுகிறார்கள்.
வயநாடு தொகுதியில் போக்குவரத்து பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. ரெயில்வே துறையில் பல புதிய திட்டங்கள் இருந்தும், இங்கு ரெயில் பாதையை கொண்டுவர எந்த முயற்சியும் இல்லை.
அதேபோல் மனித-விலங்கு மோதலுக்கு தீர்வு காணவும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய சட்டத்தில் திருத்தம் தேவை. இந்த விஷயம் பற்றி பாராளுமன்றத்தில் பேசப்பட வேண்டும் என தெரிவித்தார்.
- அசையும் சொத்துக்களின் மதிப்பு 9.24 கோடி ரூபாய் ஆகும்.
- அசையா சொத்துக்களின் மதிப்பு 11.15 கோடி ரூபாய் ஆகும்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் வாகன பேரணி மேற்கொண்டு பின்னர் மனு தாக்கல் செய்தார்.
மனு தாக்கல் செய்தபோது சொத்து மதிப்பு தொடர்பான பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.
பிரமாண பத்திரத்தில் அவர் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து மதிப்பு குறித்த தகவல் பின் வருமாறு:-
1. அசையும் சொத்துக்களின் மதிப்பு 9.24 கோடி ரூபாய் ஆகும்.
2. அசையா சொத்துக்களின் மதிப்பு 11.15 கோடி ரூபாய் ஆகும்.
3. சொந்த வாகனம் கிடையாது.
4. அடுக்குமாடி குடியிருப்பு கிடையாது.
5. கையில் 55 ஆயிரம் ரூபாய் உள்ளது.
6. வங்கியில் 26.25 லட்சம் ரூபாய் டெபாசிஸ்ட் செய்யப்பட்டுள்ளது.
7. 4.33 கோடி ரூபாய் மதிப்பில் பத்திரங்கள் மற்றும் பங்குகள் உள்ளன.
8. 3.81 கோடி ரூபாய் மதிப்பில் மியூட்சுவல் நிதி உள்ளது.
9. 15.21 லட்சம் ரூபாய் மதிப்பில் கோல்டு பத்திரம் உள்ளது.
10. 4.20 லட்சம் ரூபாய் அளவில் நகைகள் உள்ளன.
11. 9 கோடி ரூபாய் மதிப்பில் குருகிராமில் சொந்த அலுவலகம் உள்ளது.
12. தனது சகோதரியுடன் இணைந்து விவசாய நிலம் உள்ளது.
இவ்வாறு ராகுல் காந்தி அதில் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியை எதிர்த்து சிபிஐ தலைவர் ஆனி ராஜா களம் இறங்கியுள்ளார். பா.ஜனதா அம்மாநில தலைவர் கே, சுரேந்திரனை களம் இறக்கியுள்ளது. வயநாடு தொகுதிக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 26-ந்தேி நடக்கிறது.
- வேட்புமனு தாக்கல் முடிந்ததும் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
- அப்போது, வயநாடு மக்களின் ஆதரவிற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
திருவனந்தபுரம்:
வயநாடு பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். வயநாடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் தனது வேட்புமனுவை ராகுல்காந்தி தாக்கல் செய்தார். அப்போது காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் பலர் உடனிருந்தனர்.
இந்நிலையில், வேட்புமனு தாக்கல் முடிந்ததும் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பாராளுமன்ற தேர்தல் ஜனநாயகத்துக்காகவும், இந்திய அரசியல் சாசனத்துக்காகவும் நடக்கும் போராட்டம்.
இந்த நாட்டின் ஜனநாயகத்தையும், இந்த நாட்டின் அரசியல் சாசனத்தையும் அழிக்க நினைக்கும் சக்திகள் ஒரு பக்கம்.
இன்னொரு பக்கம் காக்கும் சக்தி. யார் எந்தப் பக்கம் இருக்கிறார்கள் என்பது உங்கள் அனைவருக்கும் தெளிவாகத் தெரியும்.
அரசியலமைப்பை யார் தாக்குகிறார்கள், யார் இந்த நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைத் தாக்குகிறார்கள் என்பது தெளிவாகத் தெரியும்.
வயநாடு தனது வீடு என்றும், மக்களே தனது குடும்பம், அதன் அழகிய வரலாறு மற்றும் பாரம்பரியங்கள் தனது வழிபாட்டு ஒளி என்று கூறிய அவர், வயநாடு மக்களின் அசைக்க முடியாத ஆதரவிற்காக நான் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நியாயத்தின் புதிய சகாப்தத்தில் நாம் அடியெடுத்து வைக்கும்போது, உங்கள் ஒவ்வொருவருக்கும் சேவை செய்வதில் நான் கடமைப்பட்டிருக்கிறேன் என தெரிவித்தார்.
- சிறுவயதிலேயே மோட்டார் சைக்கிள்களை பழுது நீக்குவதை தந்தையிடமிருந்து தியா கற்றுக்கொண்டார்.
- தியா எங்களது பட்டறையில் இருப்பது மகிழ்ச்சியை தருகிறது.
திருவனந்தபுரம்:
மோட்டார்சைக்கிளை கையாள்வது ஆண்களை விட பெண்களுக்கு சற்று கடினமாகத்தான் இருக்கும். இதனால் பெண்கள் அதிகமாக ஸ்கூட்டர்களையே ஓட்டுகிறார்கள். அதே வேளையில் பல பெண்கள் மோட்டார்சைக்கிளையும் ஓட்டத்தான் செய்கிறார்கள்.
இருசக்கர வாகனத்திலேயே அதிக எடை கொண்டதாக புல்லட் உள்ளிட்ட சில வாகனங்கள் திகழ்கின்றன. அவற்றை கையாளுவது ஆண்களுக்கே சற்று சிரமம் தான். இந்நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் இளைய தொழில்முறை மெக்கானிக் என்று புகழப்படுகிறார்.
கேரள மாநிலம் கோட்டத்தை சேர்ந்த ஜோசப் டொமினிக் என்பவரின் மகள் தியா ஜோசப். 21 வயது இளம்பெண்ணான இவர் மெல்லிய உடலமைப்பை கொண்டவர். காஞ்சிரப்பள்ளியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
350 சி.சி. திறன் கொண்ட 200 கிலோ எடையுள்ள மோட்டார்சைக்கிளை சர்வசாதாரணமாக ஓட்டி செல்கிறார். சாலையில் அவர் செல்லும்போது, அவர் கடந்து செல்லும் வரை இமைக்காமல் பார்ப்பவர்களே அதிகம். ஒல்லியான தேகம் கொண்ட அவர், எடை அதிகமுள்ள மோட்டார்சைக்கிளை ஓட்டிச்சென்றால் பார்க்கத் தானே செய்வார்கள்.
அவரது திறமை அது மட்டுமல்ல. அதிக திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களை பழுதுநீக்குவதில் தனித்துவத்துடன் திகழ்ந்து வருகிறார். இவரது தந்தை இருசக்கர வாகன ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். தனது தந்தையின் ஒர்க்ஷாப்பிற்கு தியா சிறு வயதில் இருந்தே, வீட்டில் இருக்கும்போது அடிக்கடி சென்று வருவது வழக்கம்.
இதனால் சிறுவயதிலேயே மோட்டார் சைக்கிள்களை பழுது நீக்குவதை தந்தையிடமிருந்து தியா கற்றுக்கொண்டார். அவர் பத்தாம் வகுப்பு படிக்கும் போதே இருசக்கர வாகன பழுதுநீக்கும் பணியை மேற்கொள்ள தொடங்கினார். அது மட்டுமின்றி இருசக்கர வாகன என்ஜினில் ஏற்படும் சிக்கலான பழுதுகளையும் எளிதாக கையாண்டு பழுது நீக்கக்கூடிய வகையில் முன்னேற்றம் கண்டார்.
இதனால் விடுமுறை நாட்களில் பெரும்பாலான நேரத்தை தனது தந்தையின் ஒர்க்ஷாப்பில் கழிக்க தொடங்கினார். மகளின் ஆர்வத்தை பார்த்து பழுது நீக்கும் பணிகளை மகளுக்கு ஜோசப் டொமினிக் கொடுத்தார். அதில் பல புதிய யுக்திகளை கடைபிடித்து வேலையை விரைவாக முடித்தார்.

தந்தை ஜோசப் டொமினிக், தாய் ஷைன், சகோதரி மரியாவுடன் மாணவி தியா.
இதன் காரணமாக இருசக்கர வாகன பழுது நீக்குவதில் இளம் வயதிலேயே திறமையானவராக மாறினார். இதனால் தான் இளைய தொழில்முறை மெக்கானிக் என்று புகழப்படும் அளவுக்கு உருவெடுத்தார். மாணவி தியா குறித்து அவரது தந்தை ஜோசப் டொமினிக் கூறியதாவது:-
புதிய திறன்களை கற்றுக்கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும். தியா எங்களது பட்டறையில் இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. அதிகவேலை இருக்கும்போது அவர் இருப்பது எங்களுக்கு ஓய்வெடுக்க உதவியாக இருக்கிறது. அவர் மிகுந்த நகைச்சுவை உணர்வை கொண்டவர்.
ஒருமுறை புல்லட்டின் என்ஜினை ஏற்றும்போது தியா கையில் பலத்த காயம் ஏற்பட்டுவிட்டது. அதன்பிறகும் அவர் பின்வாங்கவில்லை. காயம் சரியானதும் வேலைக்கு திரும்பினாள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இளைய தொழில்முறை மெக்கானிக் என்று புகழப்படும் மாணவி தியாவுக்கு சென்னையில் உள்ள ராயல் என்பீல்டு தொழிற்சாலை வேலைக்கு அழைத்திருக்கிறது. இது குறித்து தியா கூறியிருப்பதாவது:-
இது ஒரு பெரிய ஆச்சரியம். இப்படியொரு அழைப்பை நான் எதிர்பார்க்கவில்லை. எனது ஆசிரியர்கள் என்னைப்பற்றி பெருமைப்படுவதாக கூறி வகுப்பு குழுக்களில் பகிர்ந்தனர். இதுவே நான் அடையக்கூடிய மதிப்புமிக்க அங்கீகாரம்.
பொதுவாக ஒரு புல்லட்டை சர்வீஸ் செய்ய 2 முதல் 3 நாட்கள் ஆகும். ஆயில் மற்றும் கேபிள்களை மாற்றுவதற்கும், சங்கிலிகளை இறுக்குவதற்கும், மற்ற பாகங்களை இறக்குவதற்கும், ரீலோடு செய்வதற்கும் எனது தந்தைக்கு உதவுகிறேன். என்ஜின் சற்று கனமாக இருக்கும். அதனை தனியாக கையாள்வது சவாலானது.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
- காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி.
- வயநாடு தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தி இன்று கேரளாவில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற 29-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இருந்தபோதிலும் கேரளாவில் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ள தொகுதி வயநாடு. ஏனென்றால் தற்போது அந்த தொகுதியில் எம்.பி.யாக இருக்கும் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார்.
அவருடன் அந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா, பாரதிய ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவர் சுரேந்திரன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆனி ராஜா பிரசாரத்தை தொடங்கிவிட்டார்.
இந்நிலையில், வயநாடு தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தி இன்று கேரளாவில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இவரை தொடர்ந்து, கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆனி ராஜா வேட்புமனு தாக்கல் செய்தார்.
தற்போதைய வயநாடு எம்பி ராகுல்காந்திக்கு எதிராக களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடக்கூடாது என்று கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
- கல்பெட்டா பகுதியில் நடந்த ரோடு-ஷோவில் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டினார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற 29-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இருந்தபோதிலும் கேரளாவில் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ள தொகுதி வயநாடு. ஏனென்றால் தற்போது அந்த தொகுதியில் எம்.பி.யாக இருக்கும் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார்.
அவருடன் அந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா, பாரதிய ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவர் சுரேந்திரன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் இருந்தபோதிலும் கேரள மாநிலத்தில் அவை தனித்தனியாக போட்டியிடுகின்றன. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆனி ராஜா போட்டியிடுவார் என்று அந்த கட்சி அறிவித்துவிட்டது.
இதனால் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடக்கூடாது என்று கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. ஆனால் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் அறிவித்தது.
இந்த விவகாரம் இரு கட்சியினரின் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒருவர் மீது ஒருவர் எதிர் கேள்விகளை கேட்டு வருகின்றனர். இதனால் இந்தியா கூட்டணியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆனி ராஜா பிரசாரத்தை தொடங்கிவிட்டார். அதேபோல் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் அந்த கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரனும் பிரசாரத்தில் குதித்தார்.
காங்கிரஸ் வேட்பாளரான ராகுல் காந்தி எப்போது பிரசாரத்துக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் இருந்து வந்தது. இந்நிலையில் வயநாடு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ராகுல் காந்தி இன்று கேரளாவுக்கு வந்தார்.
டெல்லியில் இருந்து விமானத்தில் வந்த அவர், விமான நிலையத்தில் இருந்து மூப்பைநாட்டில் உள்ள தலக்கால் மைதானத்திற்கு ஹெலிகாப்டரில் வந்தார். அங்கு அவரை காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். பின்பு ராகுல் காந்தி அங்கிருந்து கல்பெட்டா சென்றார்.
கல்பெட்டா பகுதியில் நடந்த ரோடு-ஷோவில் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டினார். ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தியும் ரோடு-ஷோ சென்றார். அவர்களை சாலையின் இருபுறமும் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்பு கொடுத்தனர்.
ராகுல் காந்தியின் ரோடு-ஷோ கல்பெட்டா பகுதியில் இருந்து வயநாடு மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை நடைபெற்றது. ரோடு-ஷோவை முடித்துக்கொண்டு ராகுல் காந்தி, வேட்புமனு தாக்கல் செய்ய கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றார்.
அங்கு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ரேணுராஜிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். வேட்புமனு தாக்கலை முடித்துக்கொண்டு ராகுல் காந்தி மீண்டும் டெல்லி திரும்புகிறார்.
அவர் தேர்தல் பிரசாரத்துக்காக சில நாட்களில் மீண்டும் கேரளாவுக்கு வர உள்ளார். ராகுல் காந்தி கடந்த பாராளுமன்ற தேர்தலில் வயநாடு தொகுதியில 4.37லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Lok Sabha elections 2024 | Kerala: Congress party's sitting MP and candidate Rahul Gandhi files his nomination from Wayanad
— ANI (@ANI) April 3, 2024
His sister and party's general secretary Priyanka Gandhi Vadra is also present with him.
CPI has fielded Annie Raja from this seat and BJP has… pic.twitter.com/NoFpSbcLto






