என் மலர்
கேரளா
- 3 பேரும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
- சிறுவன் பாதுஷா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கரிம்புழா ஆறு உள்ளது. இந்த ஆற்றில் கூட்டி லக்கடவு என்ற பகுதியில் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது செர்புளச்சேரி குட்டிக்கோடு பகுதியை சேர்ந்த முஸ்தபா என்பவரின் மகள் ரிஸ்வானா(வயது19), கரக்குறிச்சியை சேர்ந்த அபுபக்கர் என்பவரின் மகள் டிமா மெப்பா(20) என்ற 2 இளம்பெண்கள் மற்றும் பாதுஷா என்ற சிறுவன் ஆகிய 3 பேரும் ஆற்றில் மூழ்கினர்.
இதனை அங்கு குளித்துக்கொண்டிருந்தவர்கள் பார்த்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் 3 பேரும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அதனையறிந்த அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரையும் மீட்டு வட்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் ரிஸ்வானா மற்றும் டிமா மெப்பா ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். சிறுவன் பாதுஷா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான். ஆற்றில் குளித்த 2 இளம்பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
- மக்கள் கோடைகாலத்தில் கடைபிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்களை கடைபிடிக்க மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.
- நீதிமன்றங்களில் ஆஜராகும் வக்கீல்கள், கருப்பு நிற கோர்ட் மற்றும் கவுனுக்கு பதிலாக வெள்ளை நிற ஆடைகளை அணியலாம்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கடுமையாக அடித்து வந்தது. இந்நிலையில் தற்போது கோடைகாலம் தொடங்கிய நிலையில், வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கிறது.
பாலக்காடு, புனலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் 104 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வருகிறது. மற்ற மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாகவே இருந்து வருகிறது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும் வகையில் தினமும் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களின் விவரங்களை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது.
மேலும் மக்கள் கோடைகாலத்தில் கடைபிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்களை கடைபிடிக்க மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் கேரள மாநிலத்தில் அம்மை உள்ளிட்ட கோடைகால நோய்கள் வேகமாக பரவி வருகிறது.
அங்கு கடந்த 10 நாட்களில் 900 பேருக்கு மேல் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தினமும் 90 பேருக்கு மேல் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கேரளாவில் வெப்பநிலை நாளுக்குநாள் அதிகரிக்கும் என்றே இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
இந்நிலையில் கோடை வெயிலின் காரணமாக கோர்ட்டுகளில் கருப்பு கோர்ட்டு அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டில் வக்கீல்கள் சங்கம் கோரிக்கை வைத்தது. அது தொடர்பாக ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் நீதிமன்றங்களில் ஆஜராகும் வக்கீல்கள், கருப்பு நிற கோர்ட் மற்றும் கவுனுக்கு பதிலாக வெள்ளை நிற ஆடைகளை அணியலாம் என்று கூறியிருக்கிறது. இந்த சலுகை அடுத்தமாதம் (மே)31-ந்தேதி வரை வக்கீல்களுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை.
- சன்னிதானத்தில் கனி காணல் சடங்குகளும் நடைபெறும்.
சபரிமலை:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் மண்டல மகரவிளக்கு சீசன், பங்குனி உத்திர திருவிழா, விஷு, ஓணம் பண்டிகை உள்பட விசேஷ நாட்களில் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். அதன்படி சித்திரை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது.
மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். பின்னர் வழக்கம்போல் பக்தர்களின் தரிசனத்திற்கு பின் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணி முதல் வழக்கமான பூஜைகளும், 18-ந் தேதி வரை 8 நாட்கள் நெய்யபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜை, புஷ்பாபிஷேகம் நடைபெறும். முன்னதாக 14-ந் தேதி விஷு பண்டிகை நாளில் சிறப்பு பூஜை அதிகாலை 3 மணி முதல் நடைபெறும். அன்றைய தினம் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தந்திரி, மேல் சாந்தி ஆகியோர் நாணயங்களை கை நீட்டமாக வழங்குவார்கள்.
சன்னிதானத்தில் கனி காணல் சடங்குகளும் நடைபெறும். தொடர்ந்து ஆன்லைன் முன்பதிவு, உடனடி முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். உடனடி தரிசன முன்பதிவிற்கு நிலக்கல்லில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனையொட்டி அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக கேரள அரசின் சிறப்பு பஸ்கள் பத்தனம்திட்டா, கோட்டயம், செங்கன்னூர், திருவனந்தபுரம், கொட்டாரக்கரை, எர்ணாகுளம், பாலக்காடு உள்பட முக்கிய பஸ் நிலையங்களில் இருந்து இயக்கப்படும்.
- 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கடும் எதிர்ப்புகளை மீறி கடந்த வாரம் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது
- கேரளாவின் அங்கமாலியில் உள்ள சஞ்ஜோபுரம் தேவாலயத்தில் ‘மணிப்பூர் கலவரம்’ தொடர்பான ஆவணப்படம் திரையிடப்பட்டது
'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு (2023) மே மாதம் மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளில் வெளியாகியது. அந்த படத்தின் கதை சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததால் படம் வெளியாவதற்கு முன்பும், வெளியான பிறகும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இந்த படம் வெளியானபோது, அந்த படம் ஓடிய தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தூர்தர்ஷன் டெலிவிஷனில் மார்ச் 5-ம் தேதி) இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கு கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருக்கும் பதிவில், 'தி கேரளா ஸ்டோரி' படத்தை ஒளிபரப்ப தூர்தர்ஷன் நேஷனல் எடுத்த முடிவு வன்மையாக கண்டிக்கத்தக்கது. பொதுத்தேர்தலுக்கு முன்னதாக வகுப்புவாத பதட்டங்களை அதிகப்படுத்த மட்டுமே முயல்கிற திரைப்படத்தை ஒளிபரப்புவதை தூர்தர்ஷன் கைவிடவேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.
சர்ச்சைக்கு உள்ளான 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கடும் எதிர்ப்புகளை மீறி கடந்த வாரம் தூர்தர்ஷன் தொலைக்காட்சி வெளியிட்ட நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மணிப்பூர் ஸ்டோரி ஆவணப்படத்தை கேரளாவில் உள்ள தேவாலயங்களில் திரையிட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கேரளாவின் அங்கமாலியில் உள்ள சஞ்ஜோபுரம் தேவாலயத்தில் 'மணிப்பூர் கலவரம்' தொடர்பான ஆவணப்படம் திரையிடப்பட்டது இந்த சர்ச்சையை அதிகப்படுத்தியுள்ளது.
கற்பனையான 'தி கேரளா ஸ்டோரி' படத்தை திரையிடும்போது, ஏன் உண்மை சம்பவமான 'மணிப்பூர் கலவர ஸ்டோரியை மக்களுக்கு காண்பிக்க கூடாது? மக்கள் மணிப்பூரில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று தேவாலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கேரளாவில் கிறிஸ்தவர்கள் 18% உள்ளனர். அங்கு அண்மை காலமாக குறிப்பிடத்தக்க கிறிஸ்தவர்கள் பாஜகவிற்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். ஆகையால் மணிப்பூர் கலவர ஆவணப்படம் கேரளாவில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
- கோடைகாலத்தில் வீட்டில் இருக்க முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் காணப்பட்டது.
- வீடு எப்போதும் குளுமையாக இருப்பதால், அவரது வீட்டிற்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் அடிக்கடி வந்து இளைப்பாறி விட்டு செல்கிறார்கள்.
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே கேரள மாநிலத்தில் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. தற்போது கோடைகாலம் தொடங்கிய நிலையில் பகல் நேரத்தில் வெயில் கடுமையாக அடித்து வருகிறது.
பாலக்காடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் தினமும் வெயில் அடிக்கிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்றே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பதற்காக தினமும் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களின் விவரங்களை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து வருகிறது.
இதனால் கோடைகால தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பகலில் இருக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் நீடிக்கிறது. மின்விசிறிகளை இயக்கினாலும் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் இரவில் மக்கள் தூக்கமின்றி தவிக்கும் நிலை அங்கு உள்ளது.
கேரளாவில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஒருவருடைய வீட்டில் மட்டும் தினமும் மழை பெய்கிறது. செயற்கை மழை பெய்வதற்கான அமைப்பை தனது வீட்டில் ஏற்படுத்தி தினமும் மழை பெய்ய செய்வதே அதற்கு காரணமாகும்.
எச்.பி.மோட்டார், பி.வி.சி.பைப், விவசாயத்தில் தண்ணீரை பீய்ச்சி அடிக்க பயன்படுத்தும் ஸ்ப்ரிங்ளர்கள் உள்ளிட்டவைகளின் மூலம் செயற்கை மழை பெய்வதற்கான ஏற்பாடுகளை தனது வீட்டில் செய்திருக்கிறார்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வாணியம்பலம் பகுதியை சேர்ந்தவர் மன்சூர். ஏ.சி. மெக்கானிக்கான இவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு யாஸ்மி என்ற மனைவியும், ஷமிலா, சாடியா, ஷனிஹா என்ற 3 மகள்களும் உள்ளனர்.
மன்சூர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த நிலையில், அவரது மனைவி மற்றும் மகள்கள் வாணியம்பலத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இந்தநிலையில் மன்சூர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவில் இருந்து தனது சொந்த ஊருக்கு திரும்பினார். அப்போது அவரது வீடு மிகவும் சூடாக இருந்தது.
கோடைகாலத்தில் வீட்டில் இருக்க முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் காணப்பட்டது. இதனால் என்ன செய்வது என்று யோசித்த மன்சூருக்கு, மோட்டார் மற்றும் பைப்புகளை பயன்படுத்தி தனது வீட்டில் செயற்கை மழை பெய்யச்செய்து குளிர்விக்கும் யோசனை வந்தது.
அதன்படி 300 வாட் அரை எச்.பி. மோட்டார், விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் ஐந்து ஸ்பிரிங்ளர்கள், பிளாஸ்டிக் பைப்புகள் உள்ளிட்டவைகளை வாங்கினார். தனது வீட்டின் மேற்கூரை உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் பைப்புகளை அமைத்து அதில் ஸ்பிரிங்ளர்களை பொருத்தினார்.
பின்பு வீட்டின் மொட்டை மாடியில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் இருந்து ஸ்பிரிங்லர்கள் பொருத்தப்பட்டுள்ள குழாய்களுக்கு எச்.பி. மோட்டார் மூலம் தண்ணீர் சப்ளை கொடுத்தார். மோட்டார் ஆன் செய்யப்பட்டதும் ஸ்பிரிங்லர்கள் வீட்டின் மேல் பரப்பில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீரை பீய்ச்சி அடிக்கின்றன.
ஸ்பிரிங்ளர்கள் சுற்றிக்கொண்டே தண்ணீரை பீய்ச்சி அடிப்பதால், வீட்டில் உள்ள அனைத்து பகுதிகளும் ஈரமாகிறது. வீட்டில் உள்ள மரங்களின் கிளைகளில் பட்டு கீழே விழும் போது மழை பெய்ததை போன்ற நிலையை உருவாக்குகிறது. இதனால் மன்சூரின் வீடு உள்ள பகுதி முழுவதுமாக ஈரமாகி விடுகிறது.
அதன் காரணமாக அவரது வீடு மற்றும் வீட்டை சுற்றியுள்ள பகுதியில் வெப்பம் முழுவதுமாக தணிந்து குளிர்ச்சியாகி விடுகிறது. கோடைகாலத்திலும் அவரது வீடு மழைக்காலம் போன்று குளிர்ச்சியாக இருக்கிறது. இதன் காரணமாக அவரது குடும்பத்தினர் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து வருகின்றனர். அவருடைய வீடு எப்போதும் குளுமையாக இருப்பதால், அவரது வீட்டிற்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் அடிக்கடி வந்து இளைப்பாறி விட்டு செல்கிறார்கள். இது பற்றி மன்சூர் கூறியிருப்பதாவது:-
எனது வீட்டில் செயற்கை மழை பெய்யும் அமைப்பை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைத்தேன். மோட்டார், ஸ்பிரிங்ளர்கள், பிளாஸ்டிக் பைப் உள்ளிட்டவைகளை வாங்க 3000 ரூபாயே செலவு ஏற்பட்டது. அவற்றை எனது வீட்டில் நானே நிறுவியதால், அதற்காக எனக்கு தனியாக செலவு ஆகவில்லை. தினமும் காலை 6 மணிக்கும், மாலை 6 மணிக்கும் பத்து நிமிடங்கள் மோட்டார் இயக்கப்பட்டு தண்ணீர் தெளிக்கப்படும்.
ஸ்பிரிங்ளர்களில் இருந்து விழும் தண்ணீர் மரங்களின் இலைகளில் பட்டு கீழே விழும் போது மழையின் உணர்வை நமக்கு தருகிறது. நமது விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் மழையை உருவாக்கலாம். இவ்வாறு தெளிக்கப்படும் தண்ணீர் வீட்டில் வளர்க்கப்படும் சப்போட்டா, கொய்யா, மா, பலா போன்ற மரங்களுக்கும், செடிகளுக்கும் செல்கிறது.
இதனால் அவையும் செழித்து வளர்கின்றன. செயற்கை மழை பெய்யச் செய்ய தினமும் காலையும், மாலையும் சராசரியாக 250 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படும். தண்ணீரை தெளிக்க மோட்டார் பயன்படுத்துவதால் மின்சார கட்டணமும் அதிகமாக வருவது இல்லை. மின்சார கட்டணம் 2000 ரூபாய்க்கு குறைவாகவே உள்ளது.
ஆனால் முன்பு ஏ.சி-க்கு 4 ஆயிரம் ரூபாய் கட்டணம் வந்தது. இந்த செயற்கை மழை அமைப்பை எனது வீட்டில் அமைத்த பிறகு ஏ.சி. பயன்படுத்துவதில்லை. இதனால் மின் கட்டணம் குறைந்துவிட்டது. செடிகளுக்கு என்று தனியாக தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இல்லை.
செயற்கை மழை எளிமையானது மற்றும் சக்தி வாய்ந்தது. அதற்கான கட்டமைப்பை அமைப்பதற்கான செலவும் மிகமிக குறைவு. சுற்றுலா தளங்களிலும், அணைகளுக்கு அருகிலும் இதனை அரசு திட்டமாக செயல்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கேரள மாநிலத்தை பொறுத்தவரை தற்போது 19 மக்களவை தொகுதிகள் காங்கிரஸ் கூட்டணியின் வசம் இருக்கிறது.
- தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே பிரதமர் மோடி கேரளாவுக்கு வந்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற 26-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில், 20 தொகுதிகளிலும் 169 ஆண்கள், 25 பெண்கள் என மொத்தம் 194 பேர் போட்டியிடுகின்றனர்.
பெரும்பாலான தொகுதிகளில் மும்முனைப்போட்டி நிலவிவரும் நிலையில், அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் களத்தில் இருப்பதால் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.
கேரள மாநிலத்தை பொறுத்தவரை தற்போது 19 மக்களவை தொகுதிகள் காங்கிரஸ் கூட்டணியின் வசம் இருக்கிறது. அதேபோன்று தற்போதைய தேர்தலிலும் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியும் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றி கேரளாவில் கால் பதிந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் தேர்தல் பணியாற்றி வருகிறது. இதனால் பாரதிய ஜனதா சார்பில் பிரபலங்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டு இருக்கின்றனர்.
காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட பல்வேறு கட்சி தலைவர்களும் கேரளாவுக்கு வர தொடங்கி இருக்கின்றனர்.
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே பிரதமர் மோடி கேரளாவுக்கு வந்து பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட மீண்டும் கேரளாவுக்கு வருகிறார். வருகிற 15-ந்தேதி அட்டிங்கல், ஆலத்தூர், திருச்சூர் தொகுதிகளில் பிரதமர் மோடி பிரசாரம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதே தினத்தில் ராகுல் காந்தியும் கேரளாவில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அவர் 15-ந்தேதி மாலை கோழிக்கோட்டில் நடைபெறும் அரசியலமைப்பு பாதுகாப்பு பேரணியில் பங்கேற்று தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.
பிரதமர் மோடி மற்றும் ராகுல்காந்தி ஆகிய இருவரும் ஒரே நாளில் கேரளாவில் போட்டி பிரசாரம் செய்கின்றனர். இதனால் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மேலும் கேரள மாநிலத்தில் போட்டியிடும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் வர இருக்கின்றனர். கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் வருகிற 16-ந்தேதி கண்ணூரில் பிரசாரம் செய்கிறார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, சச்சின் பைலட் உள்ளிட்டோரும் பிரசாரம் செய்ய உள்ளனர்.
பாரதிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய மகாராஷ்டிர மாநில துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், பிரமோத் சாவந்த், அனுராக் சிங் தாகூர் ஆகியோர் கோழிக்கோட்டிலும், புருஷோத்தம் ரூபாலா, சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் ஆலப்புழாவிலும், மீனாட்சி லேகி வயநாடு, இடுக்கி மற்றும் எர்ணாகுளத்திலும், தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை திருவனந்தபுரம் மற்றும் கொல்லத்திலும் பிரசாரம் செய்கிறார்கள்.
மேலும் பாரதிய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் பிரசாரம் செய்ய கேரளா வருகிறார்கள்.
இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி 16-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை பிரசாரம் செய்கிறார். அவர் காசர்கோடு, கண்ணூர், வடகரா, கோழிக்கோடு, பாலக்காடு, ஆலத்தூர், சாலக்குடி, பத்தினம்திட்டா, ஆலப்புழா, கொல்லம் அட்டிங்கல் மற்றும் திருவனந்தபுரத்தில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பேசு கிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், சுபாசினி அலி ஆகியோர் 15-ந்தேதி முதல் 22-ந்தேதி வரையிலும், பிருந்தா காரத் வருகிற 15-ந்தேதி முதல் 22-ந்தேதி வரையிலும் பிரசாரம் செய்கின்றனர். இதேபோன்று பல்வேறு தலைவர்களும் கேரளாவில் பிரசாரம் செய்ய உள்ளனர்.
- கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார்
- ராஜீவ் சந்திரசேகர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், 2021-22-ம் ஆண்டு வருமானமாக வெறும் ரூ.680 மட்டுமே என குறிப்பிட்டுள்ளார்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சசி தரூர் வேட்பாளராக போட்டியிடுகிறார். பா.ஜ.க. சார்பில் மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். இதனால் அங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில், ராஜீவ் சந்திரசேகர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், 2021-22-ம் ஆண்டிற்கான தனது வரிக்குட்பட்ட வருமானமாக வெறும் ரூ.680 மட்டுமே என குறிப்பிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் அவரது வருமானம் தொடர்ந்து குறைந்து வருவதாக கணக்கு காட்டியுள்ளார்.
அப்போது அவர் மாநிலங்களவை உறுப்பினராக சம்பளம் வாங்கி கொண்டிருந்தார்.
இந்நிலையில், ராஜீவ் சந்திர சேகர் தனது வேட்பு மனுவில் உண்மையான சொத்து மதிப்பை காட்டாமல் பல மடங்கு குறைத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாஜக வேட்பாளருமான ராஜீவ் சந்திரசேகர் சமர்ப்பித்த சொத்து விவரங்களை சரிபார்க்குமாறு மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்கு (CBDT) தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- தனது மகன் பா.ஜனதா கட்சியில் இணைந்தது தவறானது.
- காங்கிரஸ் என்னுடைய மதம் என்றார் ஏ.கே. அந்தோணி.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஏ.கே. அந்தோணி. கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது மகன் அனில் கே. அந்தோணி பா.ஜனதா கட்சியில் இணைந்தார். அவருக்கு பா.ஜனதா மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது.
அனில் கே. அந்தோணியை பா.ஜனதா பத்தனாம்திட்டா தொகுதியில் நிறுத்தியுள்ளது. அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி ஆன்டோ அந்தோணியை நிறுத்தியுள்ளது.
இந்த நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது ஏ.கே. அந்தோணி கூறும்போது "தனது மகன் அனில் கே. அந்தோணி தோல்விடைய வேண்டும் என வாழ்த்துகிறேன். எனது மகனை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஆன்டோ அந்தோணி வெற்றி பெற வேண்டும்.
என்னுடைய மகன் அனில் கே. அந்தோணி பா.ஜனதா கட்சியில் இணைந்தது தவறு. காங்கிரஸ் என்னுடைய மதம்.
இவ்வாறு ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.
மகனின் அரசியல் பிரவேசம் மற்றும் பா.ஜனதா கட்சியில் இணைந்தது தொடர்பாக தொடர்ந்து கேள்வி எழுப்பிய நிலையில் ஏ.கே. அந்தோணி இவ்வாறு அதில் அளித்துள்ளார்.
- கோவில் நடையை நாளை மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி திறந்து வைக்கிறார்.
- தினமும் நெய் அபிஷேகம், படிபூஜை, உதயாஸ்த மன பூஜை, சகஸ்ர கலச பூஜை, புஷ்பாபிஷேம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு மாதமும் மாதாந்திர பூஜைக்காக கோவில் நடை திறக்கப்படும். தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும். அப்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.
அதன்படி சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை(10-ந்தேதி) திறக்கப்படுகிறது. கோவில் நடையை நாளை மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி திறந்து வைக்கிறார்.
நாளை மறுநாள்(11-ந்தேதி முதல் நெய் அபிஷேகம் உள்ளிட்ட அனைத்து பூஜைகளும் நடைபெறும். இதற்காக அன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. சித்திரை விஷூ பண்டிகையை முன்னிட்டு கோவில் நடை வருகிற 18-ந்தேதி வரை திறந்திருக்கும்.
தினமும் நெய் அபிஷேகம், படிபூஜை, உதயாஸ்த மன பூஜை, சகஸ்ர கலச பூஜை, புஷ்பாபிஷேம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். நாளை மறுநாள் முதல் 18-ந்தேதி வரை 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். வருகிற 14-ந்தேதி விஷூ பண்டிகை சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறுகிறது.
பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் உடனடி முன்பதிவு செய்தும் சாமி தரிசனம் செய்யலாம். இதற்காக பம்பையில் உடனடி முன்பதிவு மையம் அமைக்கப்படுகின்றன.
சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பத்தினம்திட்டா, கோட்டயம், திருவனந்தபுரம், கொட்டாரக்கரை, எர்ணாகுளம், பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
- பல்வேறு வியூகங்களை வகுத்து பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது.
- தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே தமிழகம் மற்றும் கேரளாவுக்கு வந்து தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டார்.
திருவனந்தபுரம்:
மத்தியில் பாரதிய ஜனதா அரசின் ஐந்து ஆண்டுகால ஆட்சிக்காலம் வருகிற மே மாதத்துடன் முடிவடையும் நிலையில், 18-வது மக்களவைக்கான பொதுத்தேர்தல் இந்த மாதம் தொடங்குகிறது. மக்களவை தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது.
பல்வேறு மாநிலங்களில் கால் பதித்துள்ள பாரதிய ஜனதா கட்சி இந்த மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் கேரளாவில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி, அந்த மாநிலங்களில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி பல்வேறு வியூகங்களை வகுத்து பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது.
இந்த விஷயத்தில் பிரதமர் மோடியும் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். இதனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே கேரளா மற்றும் தமிழகத்திற்கு பலமுறை சுற்றுப்பயணம் வந்தார். மேலும் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே தமிழகம் மற்றும் கேரளாவுக்கு வந்து தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டார்.
தற்போது ஒவ்வொரு மாநிலத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். அதுமட்டுமின்றி பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் தொலைபேசியில் பேசி அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் அவர் கேரள மாநிலம் ஆலத்தூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் பேராசிரியை சரசுவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அப்போது பேராசிரியையிடம் உங்களது எதிர்கால திட்டம் என்ன? என்று கேட்டார். மேலும் கேரளாவில் நிலவும் பிரச்சனை குறித்து பேராசிரியை கூறிய விஷயத்தை கவனமாக கேட்டு பதில் அளித்தார்.

ஒரு வேட்பாளராக மக்கள் பிரச்சனையை நீங்கள் எடுத்துக் கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்து பேராசிரியையை ஊக்கப்படுத்தினார். மேலும் பிரதமர் பேச தொடங்கியபோது, ''சரசு ஜி... நமஸ்காரம்... சுகம் தானே...'' என்று மலையாளத்தில் கேட்டார். அதற்கு, ''சுகம் தான்...'' என்று பேராசிரியை மகிழ்ச்சி பொங்க அவரிடம் தெரிவித்தார்.
மேலும் பிரதமர் மோடி பேச தொடங்கியதில் இருந்து, பேசி முடிக்கும் வரை பேராசிரியையிடம், ''பேராசிரியை சரசு ஜி... என்று அடிக்கடி குறிப்பிட்டு பணிவுடன் பேசினார். பிரதமர் மோடி, பேராசிரியை சரசுவிடம் பேசிய உரையாடல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவர்களுக்கிடையே நடந்த உரையாடல் விவரம் வருமாறு:-
பிரதமர் மோடி: பேராசிரியை சரஸ்வதி ஜி... நமஸ்காரம்... சுகம் தானே...
பேராசிரியை சரஸ்வதி: சுகம் தான்...
பிரதமர்: உங்களுடைய தேர்தல் வேலை எப்படி சென்று கொண்டிருக்கிறது?
பேராசிரியை: நன்றாக செல்கிறது. பிரதமர் மோடியின் அனைவரையும் உள்ளடக்கிய அனைவருக்குமான வளர்ச்சிக்காக நான் உழைக்கிறேன் என்று ஆலத்தூர் மக்களிடம் நான் கூறினேன். மேலும் என்னிடம் மோடி ஜி-யின் உத்திரவாதம் உள்ளது. எனவே இந்த ஆலத்தூர் தொகுதிக்காக என்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்வேன் என்று அவர்களிடம் கூறினேன். ஐயா உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கலாமா...?
பேராசிரியை: கேரளாவில் ஒரு பிரச்சனை உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்களால் ஆளப்படும் அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் தான் அந்த பிரச்சனை. ஏழை மக்கள் வங்கியில் டெபாசிட் செய்த பணத்தை எல்லாம் கொள்ளையடித்து விடுகிறார்கள். மக்கள் தங்கள் பணத்தை திரும்ப பெறுவதில்லை. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் சிலர் இறந்துவிட்டனர். தயவு செய்து அதற்கு ஏதாவது செய்ய முடியுமா...?
பிரதமர்: பேராசிரியை சரசு ஜி...
ஒரு வேட்பாளராக மக்கள் பிரச்சனையையும், சாமானியரின் பிரச்சினையையும் நீங்கள் எடுத்துக் கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆம்... நான் அதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அதனைப் பற்றிய விவரம் என்னிடம் உள்ளது. எங்கள் அரசு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும். ஏழைகளுக்கு நீதி கிடைக்க உறுதி செய்வோம்.
மேலும் ஒரு விஷயம் சரசு ஜி... நான் சட்ட ஆலோசனை பெறுகிறேன் என்பதை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். எந்த சொத்தை அமலாக்க துறையுடன் இணைத்தாலும், அந்த பணம் சாமானியர்களின் பணத்தில் சம்பந்தப்பட்டிருந்தால், ஒவ்வொரு பைசாவும் சம்பந்தப்பட்ட நபருக்கு திரும்ப வேண்டும் என்று பார்ப்பேன். எனவே என் சார்பாக அமலாக்க துறையில் எந்த சொத்தை இணைத்தாலும், அந்த பணம் வங்கியில் முதலீடு செய்தவர்களுக்கு திருப்பி தரப்படும் என்று நீங்கள் அவர்களுக்கு உறுதி அளிக்கலாம். பேராசிரியை சரசு ஜி... கல்லூரியில் உங்கள் முயற்சி மற்றும் போராட்டம் பற்றி என்னிடம் கூறுங்கள்.
பேராசிரியை: கல்லூரியில் எனது கடமையை செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தேன். எனது கல்லூரியில் இடதுசாரி ஆசிரியர்கள் உள்ளனர். எஸ்.எப்.ஐ.யும் உள்ளது. அவர்கள் விருப்பப்படி கல்லூரி முதல்வர் செயல்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அப்படி செய்ய நான் தயாராக இல்லை.
நான் அங்கு 25 ஆண்டுகள் ஆசிரியராக இருந்தேன். மேலும் ஒரு வருடம் முதல்வராக இருந்தேன். அதில் என்னால் முடிந்ததை செய்தேன். நான் அந்த இடதுசாரி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் எந்த முக்கியத்துவமும் கொடுத்ததில்லை.
பிரதமர்: பேராசிரியை சரசு ஜி... நீங்கள் அனைவருக்கும் ஒரு உத்வேகம். உங்கள் நெறிமுறைகள் மற்றும் மதிப்புகளுக்காக நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டு இருக்கிறீர்கள். உங்களை நினைத்து கேரள மாநிலமே பெருமை கொள்கிறது.
பிரதமர்: ஆலத்தூர் மக்கள் உங்களை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப் படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன். எனது வாழ்த்துக்கள் உங்களுக்கு உள்ளது. பேசியதற்கு நன்றி...
இவ்வாராக பிரதமர் மோடி மற்றும் பேராசிரியை சரசுக்கு இடையே உரையாடல் நடந்துள்ளது. பிரதமர் மோடி போனில் தொடர்புகொண்டு கனிவுடன் பேசியது பேராசிரியைக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. அவர் அது பற்றி தனது உறவினர்கள் மற்றும் கட்சியினரிடம் தெரிவித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் பிரதமர் மோடி என்னிடம் பேசியது தனக்கு உற்சாகத்தை தந்துள்ளதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
பேராசிரியை சரசு, பல்லக்காட்டில் உள்ள அரசு விக்டோரியா கல்லூரியில் முதல்வராக பணியாற்றியபோது, எஸ்.எப்.ஐ. நிர்வாகிகளிடம் இருந்து பல மிரட்டல்களை பெற்றார். தனக்கு எதிராக பல போராட்டங்களை சந்தித்தபடி தனது கல்லூரி பணியை தொடர்ந்தபடி இருந்தார்.
இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் சரசு இணைந்தார். தற்போது ஆலத்தூர் மக்களவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
அவர் அந்த தொகுதியில் தற்போது எம்.பி.யாக உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரம்யா ஹரிதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவரும், கேரள மாநில தேவசம்போர்டு மந்திரியுமான ராதா கிருஷ்ணன் ஆகியோரை எதிர்த்து போட்டியிடுகிறார்.
- வரும் நாட்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- திருச்சூர், கண்ணூர் மாவட்டங்களில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் என அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம்:
தமிழகம் மற்றும் கேரளாவில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் வரும் நாட்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கேரளாவில் 10-ந் தேதி வரை கடுமையான வெப்ப நிலை இருக்கும் என தெரிவித்துள்ளது.
கொல்லம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியசும், திருச்சூர், கண்ணூர் மாவட்டங்களில் 38 டிகிரி செல்சியசும் வெப்பநிலை இருக்கும் என அறிவித்துள்ளது.
இதேபோல் ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் 37 டிகிரி செல்சியசும், திருவனந்தபுரம், மலப்புரம் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் வெப்ப நிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக வருகிற 10-ந் தேதி வரை மலைப்பாங்கான பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் வெப்பமான நிலை நிலவும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு பிரியங்காவுடன் ரோடு-ஷோ சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார் ராகுல்காந்தி.
- ராகுலுக்கு எதிராக கம்யூனிஸ்டு வேட்பாளரை நிறுத்தியதற்கு காங்கிரசும் கண்டனம் தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டன.
திருவனந்தபுரம்:
நாடு முழுவதும் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள தொகுதிகளில் ஒன்று கேரள மாநிலம் வயநாடு.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த தேர்தலில் இங்கு வெற்றி பெற்றார். அவர் மீண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இடது சாரி கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஆனி ராஜா களம் இறக்கப்பட்டு உள்ளார்.
பாரதிய ஜனதா சார்பில் கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரன் போட்டியிடுகிறார். இதனால் இந்த தொகுதி பெரும் எதிர்பார்ப்புக்கு உரிய தொகுதியாக விளங்கி வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு பிரியங்காவுடன் ரோடு-ஷோ சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி னார் ராகுல்காந்தி.
நாடு முழுவதும் இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரசுடன் கை கோர்த்து உள்ள கம்யூனிஸ்டுகள், கேரளாவில் மட்டும் எதிர்த்து போட்டியிடுகின்றன. இதனை பாரதிய ஜனதா கூட்டணி கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இதற்கிடையில் ராகுல் காந்தி வயநாட்டில் களம் இறங்கியதற்கு இடது சாரி கட்சியும், ராகுலுக்கு எதிராக கம்யூனிஸ்டு வேட்பாளரை நிறுத்தியதற்கு காங்கிரசும் கண்டனம் தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டன.
இந்நிலையில் ராகுலுக்கு எதிராக வயநாடு பிரசாரத்தில் இடதுசாரி கூட்டணியினர் பெரும் அளவில் ஆர்வம் காட்டாத நிலை உள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆனி ராஜா போட்டியிடும் நிலையிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வயநாட்டில் பிரசாரத்தை பெரிதுபடுத்தவில்லை. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் பொலிட் பீரோ உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், தபன் சென், சுபாஷினி அலி ஆகியோர் கேரள மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள நிலையில், அவர்கள் வயநாடு தொகுதிக்கு செல்லும் வகையில் பிரசார நிகழ்வு இல்லை. மத்தியக் குழு உறுப்பினர் விஜூ கிருஷ்ணா மட்டுமே, வயநாட்டில் பிரசாரம் செய்ய உள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மண்டல பொதுச் செயலாளர் டி.ராஜா, மத்திய செயலக உறுப்பினரும் ஏ.ஐ.டி.யூ.சி அகில இந்திய பொதுச் செயலாளருமான அமர்ஜித் கவுர் ஆகியோரும் வயநாட்டில் பிரசாரம் செய்ய உள்ளனர்.
ராகுலுக்கு எதிராக இடது சாரி கூட்டணியினர் பிரசாரத்தில் ஈடுபடாமல் ஒதுங்கி இருப்பது வயநாடு தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






