என் மலர்tooltip icon

    இந்தியா

    பேராசிரியையிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி
    X

    பேராசிரியையிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி

    • பல்வேறு வியூகங்களை வகுத்து பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது.
    • தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே தமிழகம் மற்றும் கேரளாவுக்கு வந்து தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டார்.

    திருவனந்தபுரம்:

    மத்தியில் பாரதிய ஜனதா அரசின் ஐந்து ஆண்டுகால ஆட்சிக்காலம் வருகிற மே மாதத்துடன் முடிவடையும் நிலையில், 18-வது மக்களவைக்கான பொதுத்தேர்தல் இந்த மாதம் தொடங்குகிறது. மக்களவை தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

    பல்வேறு மாநிலங்களில் கால் பதித்துள்ள பாரதிய ஜனதா கட்சி இந்த மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் கேரளாவில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி, அந்த மாநிலங்களில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி பல்வேறு வியூகங்களை வகுத்து பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது.

    இந்த விஷயத்தில் பிரதமர் மோடியும் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். இதனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே கேரளா மற்றும் தமிழகத்திற்கு பலமுறை சுற்றுப்பயணம் வந்தார். மேலும் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே தமிழகம் மற்றும் கேரளாவுக்கு வந்து தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டார்.

    தற்போது ஒவ்வொரு மாநிலத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். அதுமட்டுமின்றி பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் தொலைபேசியில் பேசி அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.

    அந்த வகையில் அவர் கேரள மாநிலம் ஆலத்தூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் பேராசிரியை சரசுவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அப்போது பேராசிரியையிடம் உங்களது எதிர்கால திட்டம் என்ன? என்று கேட்டார். மேலும் கேரளாவில் நிலவும் பிரச்சனை குறித்து பேராசிரியை கூறிய விஷயத்தை கவனமாக கேட்டு பதில் அளித்தார்.


    ஒரு வேட்பாளராக மக்கள் பிரச்சனையை நீங்கள் எடுத்துக் கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்து பேராசிரியையை ஊக்கப்படுத்தினார். மேலும் பிரதமர் பேச தொடங்கியபோது, ''சரசு ஜி... நமஸ்காரம்... சுகம் தானே...'' என்று மலையாளத்தில் கேட்டார். அதற்கு, ''சுகம் தான்...'' என்று பேராசிரியை மகிழ்ச்சி பொங்க அவரிடம் தெரிவித்தார்.

    மேலும் பிரதமர் மோடி பேச தொடங்கியதில் இருந்து, பேசி முடிக்கும் வரை பேராசிரியையிடம், ''பேராசிரியை சரசு ஜி... என்று அடிக்கடி குறிப்பிட்டு பணிவுடன் பேசினார். பிரதமர் மோடி, பேராசிரியை சரசுவிடம் பேசிய உரையாடல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவர்களுக்கிடையே நடந்த உரையாடல் விவரம் வருமாறு:-

    பிரதமர் மோடி: பேராசிரியை சரஸ்வதி ஜி... நமஸ்காரம்... சுகம் தானே...

    பேராசிரியை சரஸ்வதி: சுகம் தான்...

    பிரதமர்: உங்களுடைய தேர்தல் வேலை எப்படி சென்று கொண்டிருக்கிறது?

    பேராசிரியை: நன்றாக செல்கிறது. பிரதமர் மோடியின் அனைவரையும் உள்ளடக்கிய அனைவருக்குமான வளர்ச்சிக்காக நான் உழைக்கிறேன் என்று ஆலத்தூர் மக்களிடம் நான் கூறினேன். மேலும் என்னிடம் மோடி ஜி-யின் உத்திரவாதம் உள்ளது. எனவே இந்த ஆலத்தூர் தொகுதிக்காக என்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்வேன் என்று அவர்களிடம் கூறினேன். ஐயா உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கலாமா...?

    பேராசிரியை: கேரளாவில் ஒரு பிரச்சனை உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்களால் ஆளப்படும் அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் தான் அந்த பிரச்சனை. ஏழை மக்கள் வங்கியில் டெபாசிட் செய்த பணத்தை எல்லாம் கொள்ளையடித்து விடுகிறார்கள். மக்கள் தங்கள் பணத்தை திரும்ப பெறுவதில்லை. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் சிலர் இறந்துவிட்டனர். தயவு செய்து அதற்கு ஏதாவது செய்ய முடியுமா...?

    பிரதமர்: பேராசிரியை சரசு ஜி...

    ஒரு வேட்பாளராக மக்கள் பிரச்சனையையும், சாமானியரின் பிரச்சினையையும் நீங்கள் எடுத்துக் கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆம்... நான் அதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அதனைப் பற்றிய விவரம் என்னிடம் உள்ளது. எங்கள் அரசு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும். ஏழைகளுக்கு நீதி கிடைக்க உறுதி செய்வோம்.

    மேலும் ஒரு விஷயம் சரசு ஜி... நான் சட்ட ஆலோசனை பெறுகிறேன் என்பதை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். எந்த சொத்தை அமலாக்க துறையுடன் இணைத்தாலும், அந்த பணம் சாமானியர்களின் பணத்தில் சம்பந்தப்பட்டிருந்தால், ஒவ்வொரு பைசாவும் சம்பந்தப்பட்ட நபருக்கு திரும்ப வேண்டும் என்று பார்ப்பேன். எனவே என் சார்பாக அமலாக்க துறையில் எந்த சொத்தை இணைத்தாலும், அந்த பணம் வங்கியில் முதலீடு செய்தவர்களுக்கு திருப்பி தரப்படும் என்று நீங்கள் அவர்களுக்கு உறுதி அளிக்கலாம். பேராசிரியை சரசு ஜி... கல்லூரியில் உங்கள் முயற்சி மற்றும் போராட்டம் பற்றி என்னிடம் கூறுங்கள்.

    பேராசிரியை: கல்லூரியில் எனது கடமையை செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தேன். எனது கல்லூரியில் இடதுசாரி ஆசிரியர்கள் உள்ளனர். எஸ்.எப்.ஐ.யும் உள்ளது. அவர்கள் விருப்பப்படி கல்லூரி முதல்வர் செயல்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அப்படி செய்ய நான் தயாராக இல்லை.

    நான் அங்கு 25 ஆண்டுகள் ஆசிரியராக இருந்தேன். மேலும் ஒரு வருடம் முதல்வராக இருந்தேன். அதில் என்னால் முடிந்ததை செய்தேன். நான் அந்த இடதுசாரி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் எந்த முக்கியத்துவமும் கொடுத்ததில்லை.

    பிரதமர்: பேராசிரியை சரசு ஜி... நீங்கள் அனைவருக்கும் ஒரு உத்வேகம். உங்கள் நெறிமுறைகள் மற்றும் மதிப்புகளுக்காக நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டு இருக்கிறீர்கள். உங்களை நினைத்து கேரள மாநிலமே பெருமை கொள்கிறது.

    பிரதமர்: ஆலத்தூர் மக்கள் உங்களை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப் படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன். எனது வாழ்த்துக்கள் உங்களுக்கு உள்ளது. பேசியதற்கு நன்றி...

    இவ்வாராக பிரதமர் மோடி மற்றும் பேராசிரியை சரசுக்கு இடையே உரையாடல் நடந்துள்ளது. பிரதமர் மோடி போனில் தொடர்புகொண்டு கனிவுடன் பேசியது பேராசிரியைக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. அவர் அது பற்றி தனது உறவினர்கள் மற்றும் கட்சியினரிடம் தெரிவித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் பிரதமர் மோடி என்னிடம் பேசியது தனக்கு உற்சாகத்தை தந்துள்ளதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

    பேராசிரியை சரசு, பல்லக்காட்டில் உள்ள அரசு விக்டோரியா கல்லூரியில் முதல்வராக பணியாற்றியபோது, எஸ்.எப்.ஐ. நிர்வாகிகளிடம் இருந்து பல மிரட்டல்களை பெற்றார். தனக்கு எதிராக பல போராட்டங்களை சந்தித்தபடி தனது கல்லூரி பணியை தொடர்ந்தபடி இருந்தார்.

    இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் சரசு இணைந்தார். தற்போது ஆலத்தூர் மக்களவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

    அவர் அந்த தொகுதியில் தற்போது எம்.பி.யாக உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரம்யா ஹரிதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவரும், கேரள மாநில தேவசம்போர்டு மந்திரியுமான ராதா கிருஷ்ணன் ஆகியோரை எதிர்த்து போட்டியிடுகிறார்.

    Next Story
    ×