search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வயநாடு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி
    X

    வயநாடு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி

    • ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடக்கூடாது என்று கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
    • கல்பெட்டா பகுதியில் நடந்த ரோடு-ஷோவில் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டினார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற 29-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இருந்தபோதிலும் கேரளாவில் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ள தொகுதி வயநாடு. ஏனென்றால் தற்போது அந்த தொகுதியில் எம்.பி.யாக இருக்கும் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார்.

    அவருடன் அந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா, பாரதிய ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவர் சுரேந்திரன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

    தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் இருந்தபோதிலும் கேரள மாநிலத்தில் அவை தனித்தனியாக போட்டியிடுகின்றன. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆனி ராஜா போட்டியிடுவார் என்று அந்த கட்சி அறிவித்துவிட்டது.

    இதனால் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடக்கூடாது என்று கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. ஆனால் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் அறிவித்தது.

    இந்த விவகாரம் இரு கட்சியினரின் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒருவர் மீது ஒருவர் எதிர் கேள்விகளை கேட்டு வருகின்றனர். இதனால் இந்தியா கூட்டணியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆனி ராஜா பிரசாரத்தை தொடங்கிவிட்டார். அதேபோல் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் அந்த கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரனும் பிரசாரத்தில் குதித்தார்.

    காங்கிரஸ் வேட்பாளரான ராகுல் காந்தி எப்போது பிரசாரத்துக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் இருந்து வந்தது. இந்நிலையில் வயநாடு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ராகுல் காந்தி இன்று கேரளாவுக்கு வந்தார்.

    டெல்லியில் இருந்து விமானத்தில் வந்த அவர், விமான நிலையத்தில் இருந்து மூப்பைநாட்டில் உள்ள தலக்கால் மைதானத்திற்கு ஹெலிகாப்டரில் வந்தார். அங்கு அவரை காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். பின்பு ராகுல் காந்தி அங்கிருந்து கல்பெட்டா சென்றார்.

    கல்பெட்டா பகுதியில் நடந்த ரோடு-ஷோவில் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டினார். ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தியும் ரோடு-ஷோ சென்றார். அவர்களை சாலையின் இருபுறமும் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்பு கொடுத்தனர்.

    ராகுல் காந்தியின் ரோடு-ஷோ கல்பெட்டா பகுதியில் இருந்து வயநாடு மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை நடைபெற்றது. ரோடு-ஷோவை முடித்துக்கொண்டு ராகுல் காந்தி, வேட்புமனு தாக்கல் செய்ய கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றார்.

    அங்கு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ரேணுராஜிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். வேட்புமனு தாக்கலை முடித்துக்கொண்டு ராகுல் காந்தி மீண்டும் டெல்லி திரும்புகிறார்.

    அவர் தேர்தல் பிரசாரத்துக்காக சில நாட்களில் மீண்டும் கேரளாவுக்கு வர உள்ளார். ராகுல் காந்தி கடந்த பாராளுமன்ற தேர்தலில் வயநாடு தொகுதியில 4.37லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.






    Next Story
    ×