search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வயநாடு தொகுதியைப் புறக்கணித்தவர் ராகுல் காந்தி: ஆனி ராஜா சாடல்
    X

    வயநாடு தொகுதியைப் புறக்கணித்தவர் ராகுல் காந்தி: ஆனி ராஜா சாடல்

    • வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
    • கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அதன் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜாவும் போட்டியிடுகின்றனர்.

    தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் உள்ள இரு கட்சிகளும் வயநாடு தொகுதியில் தனித்தனியாக போட்டியிடுவது அந்தக் கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைவர்கள் தங்களது எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்து வருவதால் இந்தியா கூட்டணியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், வயநாடு தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் ஆனி ராஜா அங்கு வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    வயநாடு தொகுதி எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தி தொகுதியைப் புறக்கணித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் வயநாடு தொகுதிக்கு அவர் என்ன செய்தார்? அவர் ஒருமுறை கூட பாராளுமன்றத்தில் வயநாடு தொகுதியின் பெயரை உயர்த்தவில்லை.

    ராகுல் காந்தி இந்தத் தொகுதிக்கு எதுவும் செய்யாததால் வயநாடு மக்களுக்கு நான் ஒரு சிறிய காரியத்தை செய்தாலும், அது பெரிய விஷயமாக இருக்கும். தொகுதி மக்கள் மொழிபெயர்ப்பாளர் இல்லாமல் அணுகக்கூடிய ஒருவர் தேவை என கூறுகிறார்கள்.

    வயநாடு தொகுதியில் போக்குவரத்து பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. ரெயில்வே துறையில் பல புதிய திட்டங்கள் இருந்தும், இங்கு ரெயில் பாதையை கொண்டுவர எந்த முயற்சியும் இல்லை.

    அதேபோல் மனித-விலங்கு மோதலுக்கு தீர்வு காணவும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய சட்டத்தில் திருத்தம் தேவை. இந்த விஷயம் பற்றி பாராளுமன்றத்தில் பேசப்பட வேண்டும் என தெரிவித்தார்.

    Next Story
    ×