search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் 67 ஆயுள் தண்டனை கைதிகள் தலைமறைவு- பல ஆண்டுகள் ஆகியும் சிக்கவில்லை
    X

    கோப்புப்படம் 

    கேரளாவில் 67 ஆயுள் தண்டனை கைதிகள் தலைமறைவு- பல ஆண்டுகள் ஆகியும் சிக்கவில்லை

    • விதிமுறைகளின் அடிப்படையில் அனைத்து சிறைகளிலும் தண்டனை கைதிகளுக்கு பரோல் வழங்கப்பட்டு வருகிறது.
    • தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 1000-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    சிறை தண்டனை பெற்று ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அவர் தனது குடும்பத்தினரை பார்க்க பரோலில் செல்ல சட்டப்படி அனுமதி உள்ளது. அவசர விடுப்பு மற்றும் சாதாரண விடுப்பு என இரண்டு வகை பரோல்களில் கைதிகள் சிறையில் இருந்து குறிப்பிட்ட நாட்கள் வீட்டிற்கு சென்று வரலாம்.

    குடும்ப உறுப்பினர் நோய்வாய்ப்பட்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ மருத்துவ சான்றிதழ் மற்றும் காவல்துறை அறிக்கையின் அடிப்படையில் கைதிகளுக்கு அவசர விடுப்பு வழங்கப்படும். இரண்டு வருட சிறை தண்டனையை முடித்த கைதிகளுக்கு பரோல் வழங்கப்படும்.

    ஒரு நபர் ஒரு வருடத்தில் மொத்தம் 60 நாட்கள் பரோலில் செல்லலாம். அதனை வருடத்திற்கு இரண்டு முதல் நான்கு முறை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விதிமுறைகளின் அடிப்படையில் அனைத்து சிறைகளிலும் தண்டனை கைதிகளுக்கு பரோல் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கேரள சிறைச்சாலைகளில் பரோலில் வெளியே சென்ற 67 ஆயுள் தண்டனை கைதிகள் திரும்பி வரவில்லை. அவர்கள் அப்படியே தலைமறைவாகி விட்டனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், திருச்சூர், மலப்புரம், கண்ணூர் ஆகிய 4 மத்திய சிறைச்சாலைகள் மட்டுமின்றி, 3 திறந்தநிலை சிறைச்சாலைகள், 3 பெண்கள் சிறைச்சாலைகள், 13 மாவட்ட சிறைச்சாலைகள், 15 சிறப்பு நிலை சிறைச்சாலைகள், 16 துணை சிறைச்சாலைகள் மற்றும் சிறுவர் சீர்திருத்த பள்ளிகள் இருக்கின்றன.

    இங்கு தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 1000-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைகளில் கடந்த 1990-ம் ஆண்டில் இருந்து 2022-ம் ஆண்டு வரை பரோலில் சென்ற ஆயுள் தண்டனை கைதிகள் 67பேர் சிறைக்கு திரும்பி வரவில்லை. அவர்கள் பரோல் முடிந்து திரும்பி வராமல் தலைமறைவாகிவிட்டனர்.

    இவர்கள் அனைவருமே கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் ஆவர். மற்ற குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற 3 கைதிகளும் இதே போல் மாயமாகி இருக்கிறார்கள். அவர்களையும் சேர்த்து கேரள சிறைகளில் இருந்து பரோலில் சென்ற 70 கைதிகள் மாயமாகி இருக்கிறார்கள். அவர்கள் 70 பேரும் மாயமாகி பல ஆண்டுகள் ஆகியும் அவர்களை பற்றி எந்த தகவலும் இல்லை.

    நெட்டுக்கல்தேரி திறந்தவெளி சிறையில் இருந்து கடந்த 1990-ம் ஆண்டு ராமன் என்ற கைதி பரோலில் சென்ற நிலையில் மாயமானார். அவர் மாயமாகி 34 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அவரைப் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    அதேபோன்று கடைசியாக 2022-ம் ஆண்டு அனில்குமார் என்ற ஆயுள் தண்டனை கைதி பரோலில் சென்ற நிலையில் மாயமாகி விட்டார். அவரும் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. பரோலில் சென்று மாயமான கைதிகள் அனைவரும் தொடர்ந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கருப்படுகிறது.

    ஆனால் அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? தலைமறைவாக வாழ்ந்து குற்ற செயல்களில் எதுவும் ஈடுபடுகிறார்களா? என்பதை சிறைத்துறை மற்றும் காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது கேரளாவில் வேதனைக்குரிய விஷயமாக உள்ளது.

    Next Story
    ×