என் மலர்
கேரளா
- பேரணியில் பங்கேற்றவர்கள், போலீசார் மீது கற்களையும், கொடிக்கம்பங்களையும் வீசியதாக கூறப்படுகிறது.
- முதல்-மந்திரி பினராய் விஜயனின் பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் முதல்-மந்திரி பினராய்விஜயன் தலைமையில் மந்திரிகள் மக்களை நேரில் சென்று சந்திக்கும் நவ கேரள சதஸ் பயணம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த யாத்திரைக்கு கேரள மாநில காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அவர்கள் மாநிலத்தின் பல பகுதிகளிலும் பேரணி நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள தலைமை செயலகம் நோக்கி, இளைஞர் காங்கிரசாரும், மாணவர் அமைப்பினரும் நடத்திய பேரணி வன்முறையாக வெடித்தது. இதனை கட்டுப்படுத்த போலீசார் தடியடி, தண்ணீர் புகைவீச்சு போன்றவற்றில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நவ கேரள சதசின் நிறைவு நாள் விழா நேற்று நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநில காங்கிரஸ் சார்பில், போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் நோக்கி பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த பேரணியில் மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், எதிர்க்கட்சி தலைவர் சதீசன், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பேரணி அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடை அருகே சென்ற போது திடீரென வன்முறை வெடித்தது. பேரணியில் பங்கேற்றவர்கள், போலீசார் மீது கற்களையும், கொடிக்கம்பங்களையும் வீசியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர். மேலும் போராட்டக்காரர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி யடித்தனர். அப்படியும் வன்முறை கட்டுக்குள் வராததால், கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.
இதன் காரணமாக காங்கிரஸ் தலைவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அவர்களை தொண்டர்கள் பத்திரமாக மீட்டு சென்றனர். பின்னர் எதிர்கட்சி தலைவர் சுதாகரன், ரமேஷ் சென்னிதலா எம்.எல்.ஏ. ஆகியோர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து கலவரம், சாலைமறியல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் எம்.பி.க்கள் சசிதரூர், கொடிக்குன்றில் சுரேஷ், அடூர் பிரகாஷ், கே.முரளீதரன், ஜெபி மாதர் மற்றும் ரமேஷ் சென்னிதலா எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் மீது அருங்காட்சியகம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில் காங்கிரஸ் நிர்வாகிகளை தாக்கியது தொடர்பான புகாரில், முதல்-மந்திரி பினராய் விஜயனின் பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 16-ந்தேதி நவ கேரள சதஸ் பயணம், ஆலப்புழாவில் இருந்து அம்பழப்புழா தொகுதிக்கு சென்றபோது பொது மருத்துவமனை சந்திப்பில் நின்ற இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் அஜய் ஜூவல், மாணவர் காங்கிரஸ் மாவட்டத்தலைவர் ஏ.டி.தாமஸ் ஆகியோர் முதல்-மந்திரி பினராய் விஜயனுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அவர்களை போலீசார் பிடித்து அங்கிருந்து அகற்றி உள்ளனர். அப்போது முதல்-மந்திரியின் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அதிகாரி அனில்குமார், மற்றொரு பாதுகாப்பு அதிகாரி சந்தீப் ஆகியோர் வேனில் இருந்து வந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் 2 பேரும், ஆலப்புழா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதன்பேரில் ஆலப்புழா தெற்கு போலீசார், விசாரணை நடத்தி பாதுகாப்பு அதிகாரிகள் அனில்குமார் மற்றும் சந்தீப் மீது இந்திய தண்டனை சட்டம் 294 பி, 326, 324 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
- தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வரும் நிலையில் நேற்று 20 லாரிகளே வந்துள்ளன.
- வரத்து குறைவு மற்றும் திருமண சீசன் காலம் ஆகியவற்றால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
திருவனந்தபுரம்:
தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாதிப்பு அண்டை மாநிலமான கேரளாவிலும் எதிரொலித்துள்ளது. அங்கு அத்தியாவசிய தேவை பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதில் குறிப்பாக காய்கறிகள் கடும் ஏற்றத்தை சந்தித்துள்ளது. தமிழகத்தில் இருந்து காய்கறிகள் கேரளாவுக்கு செல்வது குறைந்துள்ளதால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் இருந்து செல்லும் முருங்கைக்காய் வரத்து குறைவு காரணமாக கேரளாவில் ஒரு கிலோ ரூ.170-க்கு விற்கப்படுகிறது. கடந்த வாரம் இதன் விலை ரூ.90 ஆக இருந்தது.
பச்சை மிளகாய் விலையும் உயர்வை சந்தித்துள்ளது. கடந்த வாரம் ரூ.40-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.80 ஆக உயர்ந்து உள்ளது. அதே நேரம் இஞ்சியின் விலை ரூ.240-ல் இருந்து கிலோ ரூ.140 ஆக குறைந்துள்ளது. வயநாட்டில் இருந்து இஞ்சியின் வரத்து அதிகமாக உள்ளதே இந்த விலை வீழ்ச்சிக்கு காரணமாக உள்ளது.
ஆலப்புழா மார்க்கெட்டுகளுக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வரும் நிலையில் நேற்று 20 லாரிகளே வந்துள்ளன. வரத்து குறைவு மற்றும் திருமண சீசன் காலம் ஆகியவற்றால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- 141 அடியை எட்டிய முல்லைப் பெரியாறு அணை.
- 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளா பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று 7 மணி நிலவரப்படி 141 அடியை முல்லைப் பெரியாறு அணை எட்டியது.
இதனால், கேரளா பகுதிக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- ஆலப்புழா மாவட்டம் களவூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
- பள்ளி மாணவ-மாணவிகள் தங்களின் படைப்பாற்றல் மற்றும் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் தாங்களாகவோ வாழ்த்து அட்டைகளை உருவாக்கினர்.
திருவனந்தபுரம்:
2024 ஆங்கில புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் 6 நாட்களே உள்ளன. புதிதாக பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்க வேண்டுமென்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.
புத்தாண்டு வாழ்த்துக்களை பெரும்பாலானோர் பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாகவே ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வது சமீபகால வழக்கமாக இருந்து வருகிறது. இதற்காக பலரும் தற்போதே தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ-மாணவிகள், அம்மாநில கல்வித்துறை மந்திரி சிவன்குட்டிக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை தாங்களே தயாரித்து அனுப்பி வைத்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
ஆலப்புழா மாவட்டம் களவூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு களவூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். அந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் கேரள மாநில கல்வித்துறை மந்திரி சிவன்குட்டிக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்பி புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க முடிவு செய்தனர்.
அதன்படி அந்த பள்ளி மாணவ-மாணவிகள் தங்களின் படைப்பாற்றல் மற்றும் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் தாங்களாகவோ வாழ்த்து அட்டைகளை உருவாக்கினர். மாணவ-மாணவிகளின் அந்த படைப்புகள் கைவி னைப் பொருட்கள், ஓவியங்கள் என பல விதங்களில் இருந்தன.
மாணவ-மாணவிகள் தங்களின் படைப்புகளை தபால் சேவை மூலம் கல்வித்துறை மந்திரியின் அலுவலகத்திற்கு அனுப்பி அவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
- சபரிமலையில் மண்டல பூஜை வருகிற 27-ந்தேதி நடக்கிறது.
- மண்டல பூஜைக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
திருவனந்தபுரம்:
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. மறுநாள் (கார்த்திகை 1-ந்தேதி) முதல், மாலை அணிந்து விரதமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
மண்டல பூஜை தொடங்கிய சில நாட்கள் பக்தர்கள் வருகை குறைந்து காணப்பட்ட நிலையில், அடுத்தடுத்த நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரித்தது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர்.
இதனால் அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சபரிமலை சன்னிதானம், பம்பை, பக்தர்கள் நடைபயணம் மேற்கொள்ளும் மலை பாதைகள், மரக்கூட்டம் உள்ளிட்ட இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.
இந்த விவகாரத்தில் கேரள ஐகோர்ட்டு தலையிட்டு பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் சபரிமலைக்கு செல்ல நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. மேலும் அதற்கான சில நெறிமுறைகளையும் வெளியிட்டது. அதனை அமல்படுத்தியதன் மூலம் சபரிமலையில் நிலவிய கூட்ட நெரிசல் கட்டுக்குள் வந்தது.
இந்த நிலையில் சபரிமலையில் மண்டல பூஜை வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா 1973-ம் ஆண்டு சபரிமலைக்கு வழங்கிய 450 பவுன் எடையுள்ள தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும்.
ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் பத்தினம்திட்டா மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து இன்று காலை புறப்பட்டது. தங்க அங்கி ஊர்வலம் வரக்கூடிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஊர்வலம் வந்த இடங்களில் ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று தங்க அங்கியை தரிசனம் செய்தனர். ஐயப்பனின் தங்க அங்கி ஊர்வலம் பல்வேறு கோவில்களுக்கு சென்று, இறுதியில் சபரிமலைக்கு வந்து சேருகிறது.
நாளை மறுநாள் (26-ந்தேதி) தங்க அங்கி ஊர்வலம் பம்பைக்கு வந்து சேரும். அங்கு பம்பை கணபதி கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்படும். பின்பு அங்கிருந்து நீலிமலை வழியாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தங்க அங்கி எடுத்துச் செல்லப்பட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.
26-ந்தேதி மாலையில் இருந்து மறுநாள் (27-ந்தேதி) வரை ஐயப்ப சுவாமி தங்க அங்கியில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள். பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகளவில் இருக்கும் என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
மண்டல பூஜைக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது.
மண்டல பூஜை நடைபெறும் 27-ந்தேதி ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய 40 ஆயிரம் பக்தர்களே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜை முடிந்து அன்றைய தினம் இரவு 11.30 மணிக்கு கோவில் நடைசாத்தப்படுகிறது.
பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 30-ந்தேதி மாலை மீண்டும் திறக்கப்படுகிறது.
- சூர்யா மற்றும் சரத் ஆகிய இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியிருக்கிறது.
- அதிர்ச்சியடைந்த உறவினர்கள் எடத்துவா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பாலக்காடு மன்னார்காடு பகுதியை சேர்ந்தவர் சூர்யா(வயது33). இவர் கோவளத்தில் உள்ள தனியார் ஆயுர்வேத மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
அதே மருத்துவமனையில் மலப்புரம் பகுதியை சேர்ந்த வாலிபர் சரத்(28) என்பவர் சிகிச்சை நிபுணராக பணியாற்றுகிறார். ஒரே மருத்துவமனையில் பணிபுரிந்ததால் சூர்யா மற்றும் சரத் ஆகிய இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியிருக்கிறது.
சம்பவத்தன்று சூர்யா, கொச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலுக்கு அழைத்து வந்துள்ளார். அந்த பெண்ணை கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்க வைத்திருந்தார்.
இந்நிலையில் அந்த அறைக்கு காதலன் சரத்தை, சூர்யா வரவழைத்துள்ளார். அப்போது அவர், சூர்யா அழைத்து வந்த பெண்ணுக்கு மது கலந்த குளிர்பானத்தை குடிக்க கொடுத்துள்ளார். அதனை இளம்பெண் குடிக்க மறுத்திருக்கிறார். இருந்தபோதிலும் அவரை வலுக்கட்டாயமாக மது கலந்த குளிர்பானத்தை குடிக்கச் செய்திருக்கின்றனர்.
இதனால் அந்த இளம் பெண், சிறிது நேரத்தில் மயங்கினார். இதையடுத்து அந்த இளம்பெண்ணை மயக்க நிலையிலேயே சரத் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இளம்பெண்ணை சரத் பாலியல் பலாத்காரம் செய்ததை சூர்யா தனது செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார்.
பின்பு சிறிது நேரத்தில் அந்த இளம்பெண் மயக்கம் தெளிந்து எழுந்திருக்கிறார். அதன் பிறகே, தனக்கு நேர்ந்த கொடுமை அவருக்கு தெரியவந்தது. மேலும், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை சூர்யா வீடியோ எடுத்ததையறிந்து அதிர்ச்சியடைந்தார்.
பின்பு அந்த இளம்பெண், அங்கிருந்து தனது வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டார். தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி தனது உறவினர்களிடம் தெரிவித்தார். அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், அதுபற்றி எடத்துவா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
சம்பவம் நடந்தது கோவளம் என்பதால், அங்குள்ள போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் கோவளம் போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர். பின்பு அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்தனர்.
மது கலந்த குளிர்பானத்தை கொடுத்து மயங்கச் செய்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் சரத் கைது செய்யப்பட்டார். காதலனுக்கு இளம்பெண்ணை விருந்தாக்கிய சூர்யாவும் கைது செய்யப்பட்டார். பலாத்காரம் செய்ததை வீடியோ படம் எடுக்க பயன்படுத்திய அவரது செல்போனை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இளம்பெண்ணை காதலனுக்கு விருந்தாக்கிய பெண் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கோவளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மண்டல பூஜையின் போது சபரிமலையில் ஐயப்ப சுவாமிக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும்.
- மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 30-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது.
திருவனந்தபுரம்:
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்தமாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து மாலையணிந்து விரதமிருக்கும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் தினமும் சபரிமலைக்கு சென்று வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டனர். இதனால் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகினர். இந்த விவகாரத்தில் கேரள ஐகோர்ட்டு தலையிட்டது. சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்யவும், கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு ஐகோர்ட் உத்தரவிட்டது.
ஐகோர்ட்டு வழங்கிய ஆலோசனைகளை அமல்படுத்தியதால் சபரிமலையில் ஏற்பட்டிருந்த நெரிசலுக்கு தீர்வு காணப்பட்டது. அதனைத்தொடர்ந்து பக்தர்களின் வருகை சற்று குறைந்து காணப்பட்டது.
மண்டல பூஜைக்கு சில நாட்களே இருப்பதால், பக்தர்கள் வருகை மீண்டும் அதிகரித்திருக்கிறது. மண்டல பூஜையின் போது சபரிமலையில் ஐயப்ப சுவாமிக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும்.
ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அந்த அங்கி மண்டல பூஜையன்று ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகிறது. இதற்காக தங்க அங்கி ஊர்வலமாக கொண்டுவரப்படுகிறது.

தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து நாளை (23-ந்தேதி) காலை 7 மணிக்கு தொடங்குகிறது. தங்க அங்கி ஊர்வலம் வரக்கூடிய இடங்களில் பல்வேறு கோவில்களுக்கு செல்கிறது. அப்போது தங்க அங்கியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.
தங்க அங்கி ஊர்வலம் வருகிற 26-ந்தேதி பம்பைக்கு வருகிறது. பம்பை கணபதி கோவிலில் பக்தர்கள் தங்க அங்கியை தரிசனம் செய்யலாம். அதன்பிறகு தங்க அங்கி ஊர்வலம் நீலிமலை, அப்பாச்சிமேடு, சபரிபீடம் வழியாக சன்னிதானத்தை நோக்கி செல்கிறது.

மாலை 5 மணிக்கு சரங்குத்திக்கு ஊர்வலம் வந்தடையும். அங்கிருந்து சன்னிதானத்துக்கு ஊர்வலம் புறப்பட்டு செல்லும். சன்னிதானத்தில் தங்க அங்கியை தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் பெற்றுக்கொண்டு கோவிலுக்குள் எடுத்துச் செல்வார்கள்.
அதன்பிறகு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். மறுநாள்(27-ந்தேதி) வரை அய்யப்பன் தங்க அங்கியில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சபரிமலையில் 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது.
மண்டல பூஜை விழா முடிந்து அன்று இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. பின்பு மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 30-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது. ஜனவரி 15-ந்தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும்.
- மாநில தலைமைச் செயலகம் மற்றும் 564 போலீஸ் நிலையங்களை நோக்கி பேரணியும் நடத்தப்பட்டது.
- காங்கிரஸ் மாநில துணை தலைவர் அரிதாபாபு உள்ளிட்ட பெண் தலைவர்களின் உடைகள் மற்றும் தலைமுடியை பிடித்து இழுத்தனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள் மக்களை சந்தித்து குறைகளை கேட்கும் நவகேரள சதஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் போது முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு எதிராக சில இடங்களில் இளைஞர் காங்கிரசார் மற்றும் கேரள மாணவர் சங்கத்தினர் கருப்புக் கொடி காட்டினர்.
அப்போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றது. மாநில தலைமைச் செயலகம் மற்றும் 564 போலீஸ் நிலையங்களை நோக்கி பேரணியும் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தலைமை செயலகம் நோக்கி சென்ற பேரணியின் போது வன்முறை ஏற்பட்டது. போலீசாரை நோக்கி கற்கள் மற்றும் செருப்புகள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பேரணியை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றதால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. பேரணியில் சென்றவர்கள் தடையை மீறி முன்னேறி செல்ல முயன்றனர்.

இதனால் போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர். கூட்டத்தை கலைக்க பேரணியில் பங்கேற்றவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. இதனால் பேரணியில் பங்கேற்றவர்கள் சிதறி ஓடினர். அந்த பகுதி கலவர பகுதி போல் காணப்பட பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி பேரணியில் பங்கேற்றவர்கள் கூறுகையில், போலீசார் அத்துமீறி செயல்பட்டுள்ளனர். காங்கிரஸ் மாநில துணை தலைவர் அரிதாபாபு உள்ளிட்ட பெண் தலைவர்களின் உடைகள் மற்றும் தலைமுடியை பிடித்து இழுத்தனர். இதனால் தான் அங்கு பிரச்சினை உருவானது என்றனர். மேலும் போலீசாரின் தாக்குதலால், கட்சியினர் சிலர் மயக்கம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து இளைஞர் காங்கிரசார், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் அமைப்பினர் சிலரை போலீசார் பிடித்து வைத்துள்ளதாகவும், அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் மறியலில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர்.
தொடர்ந்து கட்சியினரிடையே பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் சதீசன், நவகேரள சதஸ் நிகழ்ச்சியின் போது மாவட்டம் தோறும் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களை தாக்கியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் பதிலடி கொடுக்கப்படும் என்றார்.

அவரது பேச்சுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசுக்கும், அதன் வெளிப்படை திட்டத்துக்கும் எதிராக சதீசன், வன்முறையை தூண்டி விட்டு அமைதியை குலைக்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
இந்த நிலையில் பேரணியின் போது, போலீசாரை தாக்கியதற்காகவும், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதற்காகவும் சதீசன் மீது, ஜாமீனில் வெளிவர முடியாக சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ள சதீசன், தன் மீதான குற்றச்சாட்டுகளால் பயந்து விட்டேன் என முதல்-மந்திரியிடம் சொல்லுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
- திருச்சூர் மாவட்டம் வரந்தரப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
- மாணவர்கள் ரூ.100 முதல் ரூ.7ஆயிரம் வரை தங்களின் பங்களிப்பை கொடுத்தனர்.
திருவனந்தபுரம்:
பள்ளி நட்பு என்பது அனைவரின் வாழ்விலும் மறக்க முடியாததாக இருக்கும். அந்த காலக்கட்டத்தில் ஒருவருக்கொருவர் சிறிய உதவிகளை செய்து கொள்வது சகஜமான ஒன்று. ஆனால் மாணவியின் பெற்றோர் வாங்கிய கடனை, அவருடன் படிக்கும் சக மாணவர்கள் அடைத்திருக்கிறார்கள்.
இதன் மூலம் அவர்களது வீடு ஏலம் போவதை தடுத்துள்ளனர். கேரளாவில் நடந்த அந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வரந்தரப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவியின் பெற்றோர் வங்கி ஒன்றில், வீட்டுக்கடன் வாங்கியிருக்கின்றனர். ஆனால் அவர்களால் கடன் தொகையை திருப்பி செலுத்த முடியவில்லை.
இதனால் அவர்களது வீடு ஏலத்துக்கு வந்தது. கடன் தொகை கட்ட முடியாததால் மாணவியின் வீடு ஏலத்துக்கு வருவதை, மாணவியின் உடன்படிக்கும் மற்ற மாணவர்கள் அறிந்தனர். அவர்கள் அந்த மாணவிக்கு உதவ முடிவு செய்தனர்.
மாணவியின் பெற்றோர் வங்கிக்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 59 ஆயிரத்து 728 செலுத்த வேண்டும். அதனை நன்கொடை மூலம் வசூலிக்க மாணவர்கள் முடிவு செய்தனர். அது பற்றி தங்களது பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவித்தனர். இதனால் அந்த மாணவியின் குடும்பத்துக்கு உதவ அனைவரும் முன் வந்தனர்.
இதற்காக மாணவி படிக்கும் பள்ளியில் பொது இடத்தில் ஒரு பெட்டி வைக்கப்பட்டது. அதில் மாணவர்கள் தங்களின் பங்குக்கு பணம் செலுத்தினார்கள். மாணவர்கள் ரூ.100 முதல் ரூ.7ஆயிரம் வரை தங்களின் பங்களிப்பை கொடுத்தனர்.
மாணவர்கள் மொத்தம் ரூ.1.70 லட்சம் கொடுத்தார்கள். அது மட்டுமின்றி ஆசிரியர்கள் ரூ.1.28 லட்சம் நிதி திரட்டினார்கள். மொத்தத்தில் ரூ.2 லட்சத்து 98 ஆயிரம் நிதி வசூலிக்கப்பட்டது. மாணவியின் பெற்றோர் வங்கிக்கு செலுத்த வேண்டிய 2 லட்சத்து 59 ஆயிரத்து 728 ரூபாயை, வீடு ஏலத்துக்கு வரும் 2 நாட்களுக்கு முன்னதாகவே கொடுக்கப்பட்டது.
இதன்மூலம் மாணவியின் வீடு ஏலத்துக்கு வரவில்லை. மேலும் வங்கிக்கு செலுத்தியது போக மீதியிருந்த பணம், மாணவியின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. உடன் படிக்கும் மாணவர்களின் இந்த செயல், மாணவியின் பெற்றோரை நெகிழ்ச்சியடைய செய்தது. அவர்கள் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
மாணவர்களின் இந்த செயலுக்கு, அவர்கள் படித்த பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள் என பலரும் உறுதுணையாக இருந்தனர் .
- நாடு முழுவதும் பதிவான 358 பாதிப்பில், 300 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
- கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 211ஆக உள்ளது.
நாட்டிலேயே அதிக அளவிளாக கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் இந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது இரண்டு ஆயிரத்தை தாண்டிவிட்டது.
இந்நிலையில், மாநிலத்தில் இதுவரை 2,341 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 300 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் இறந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 8 மணி வரை நாடு முழுவதும் பதிவான 358 பாதிப்பில், 300 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இதனால், கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,341 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் பதிவான மூன்று இறப்புகளுடன், கடந்த கால கொரோனா தொற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 72,059 ஐ எட்டியுள்ளது.
நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்ட கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 211ஆக உள்ளது.
கொரோனா தொற்று குறித்து, மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறுகையில், "கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள போதிலும், தொற்றை கையாள மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதால் யாரும் அச்சப்பட வேண்டாம்" என தெரிவித்துள்ளார்.
- பம்பை மற்றும் சன்னிதான பகுதியில் நிலவிய கூட்டத்துக்கு தகுந்தாற்போல், மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
- வருகிற நாட்களில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
திருவனந்தபுரம்:
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து மாலையணிந்து விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டனர். இதனால் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகினர்.
இந்த விவகாரத்தில் கேரள ஐகோர்ட்டு தலையிட்டது. சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்யவும், கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு ஐகோர்ட் உத்தரவிட்டது.
மேலும் நெரிசலை தவிர்க்கும் விதமாக கடைபிடிக்க வேண்டியதற்கான அறிவுரைகளையும் வழங்கியது. அதன்பேரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. மேலும் ஐகோர்ட்டு அறிவுறுத்தல்களை பின்பற்றியதன் அடிப்படையில் சபரிமலையில் ஏற்பட்டிருந்த நெரிசலுக்கு தீர்வு காணப்பட்டது.
கடந்த சில நாட்களாக பக்தர்களின் வருகை குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மண்டல பூஜைக்கு சில நாட்களே இருப்பதால், பக்தர்கள் அதிகளவில் வருவதாக கூறப்படுகிறது. நேற்று பம்பை மற்றும் சன்னிதான பகுதிகள் மட்டுமன்றி மலைப்பாதையிலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.
இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நேற்று சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 16 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்தனர். இருந்தபோதிலும் பக்தர்கள் நெரிசலில் சிக்காத வகையில், போலீசார் ஒழுங்குபடுத்தி அனுப்பினர்.
பம்பை மற்றும் சன்னிதான பகுதியில் நிலவிய கூட்டத்துக்கு தகுந்தாற்போல், மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பம்பையில் இருந்து பக்தர்கள் மலையேறிச் செல்வதற்கே வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை நிலவியது.
சன்னிதானத்தில் உள்ள நடைப்பந்தல் பகுதியில் பக்தர்கள் வெகுநேரம் நீண்ட வரிசையில் காத்து நின்றார்கள். வருகிற நாட்களில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
- கேரள கலாச்சாரத்தின் பல கொண்டாட்டங்களில் பம்பை நதிக்கு தனிச்சிறப்பு உண்டு
- வீடியோவில் தனியார் ஓட்டலின் கழிவு நீர் நேரடியாக பம்பையில் கலப்பது தெரிகிறது
கேரள மாநிலத்தின் நதிகளில் ஒன்று 176 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் பம்பை.
பீருமேடு பீடபூமியின் (Peerumedu plateau) புலச்சிமலை (Pulachimalai) பகுதியில் தோன்றும் பம்பை நதி பல பிரிவுகளாக ஓடுகிறது.
இந்துக்களின் புனிதத்தலமான சபரிமலை இந்த நதிக்கரையில்தான் உள்ளது. இத்திருக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், அங்கிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரம் உள்ள பம்பை நதியில் குளிப்பதை, புனிதமான செயலாக கொள்வது வழக்கம். கங்கை நதிநீருக்கு ஒப்பான புனித நீராக பம்பையை இந்துக்கள் கருதுகின்றனர்.
"கேரளத்தின் நெற்களஞ்சியம்" (rice bowl of Kerala) என அழைக்கப்படும் குட்டநாடு பகுதியில் பம்பை ஆற்று நீரினால் நெல் விவசாயம் சிறப்பாக தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
கேரள கலாச்சார கொண்டாட்டங்களில் ஒரு முக்கிய அம்சமாகவும் பம்பை நதி விளங்குகிறது.
ஆனால், சமீப சில வருடங்களாக பம்பை நதிநீர் அசுத்தமாக்கப்படுவதாகவும் நதி ஓடி வரும் கரைகளில் சில இடங்களில் இருந்து கழிவு நீரும் அதில் கலப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இது மட்டுமின்றி கரையில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் நீரில் கலப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
கடந்த 2018 நவம்பர் மாதம், உச்ச நீதிமன்றம் பம்பையின் தூய்மையை காக்கும் வகையிலும், சபரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு கேரள அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், ஒரு தனியார் ஓட்டலில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பம்பை ஆற்றில் தொடர்ந்து கலக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.
குளியலுக்கும், குடிப்பதற்கும் நதிநீரை பயன்படுத்துபவர்களின் ஆரோக்கியத்திற்கு இச்செயல் நீண்டகால உடல் உபாதைகளை ஏற்படுத்தும் என்பதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பம்பையில் நீராடும் சபரிமலை பக்தர்களும், இச்செயலை உடனடியாக கேரள அரசு தலையிட்டு நிறுத்தி, சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.






