search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Makarajyothi"

    • இன்று திருவாபரண ஊர்வலம்.
    • நாளை மறுநாள் மகரஜோதி தரிசனம் நடைபெறும்.

    சபரிமலை:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை காலமான தற்போது தினமும் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதன் சிகர நிகழ்ச்சியாக நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மகரஜோதி தரிசனம் நடக்கிறது. இதற்கிடையே அம்பலப்புழை மற்றும் ஆலங்காடு ஐயப்ப பக்தர் குழுக்கள் சார்பில் சிறப்பு வாய்ந்த பாரம்பரிய பேட்டை துள்ளல் நிகழ்ச்சி எருமேலியில் நேற்று நடந்தது.

    மத ஒற்றுமைக்கு சான்றாக பக்தர்கள் அனைவரும் சமம் என்ற கருப்பொருளை மையமாக வைத்து சிறியவர், பெரியவர், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இன்றி ஐயப்ப பக்தர்கள் உள்பட ஏராளமானோர் தங்கள் முகம், உடல் மீது வண்ண, வண்ண பொடிகளை பூசி, கரும்புள்ளி, செம்புள்ளி குத்திக் கொண்டு இலை தழைகளை கையில் ஏந்தியவாறு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

    அப்போது மேள தாளம் முழங்க, ஐயப்பனின் சரண கோஷமும் எதிரொலித்தது. எருமேலி கொச்சம் பலத்தில் இருந்து வாவர் மசூதியை சுற்றி நெற்றிப்பட்டம் சூட்டிய யானையில், அம்பலப்புழை கிருஷ்ணசாமி கோவிலில் இருந்து பூஜித்து எடுத்து வரப்பட்ட ஐயப்ப விக்ரகத்தை சுமந்து வந்து காணிக்கை செலுத்தினர்.

    இதனைத் தொடர்ந்து வலியம்பலமான தர்ம சாஸ்தா கோவிலில் சாமி தரிசனம் செய்ததும் பக்தர் குழுவினர் சபரிமலைக்கு புனித பயணம் புறப்பட்டனர்.

     பின்னர் ஐயப்பனுக்கு நடத்தப்படும் முக்கிய வழிபாடுகளில் ஒன்றான பம்பை விருந்து, பம்பை விளக்கு ஏற்றுதல் போன்ற சிறப்பு வழிபாடு நடத்தப்படும். தொடர்ந்து பக்தர் குழுவினர் சபரிமலை நோக்கி மலையேறி சென்று அன்றைய தினம் இரவு அங்கு ஓய்வெடுக்கிறார்கள். மகரஜோதி தினத்தில் ஐயப்பனுக்கு பக்தர் குழு சார்பில் சிறப்பு நிவேத்யம், நெய்யபிஷேகம் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

    இன்று திருவாபரண ஊர்வலம்

    இதற்கிடையே இன்று (சனிக்கிழமை) பந்தளத்தில் இருந்து மதியம் 12.30 மணிக்கு திருவாபரண ஊர்வலம் சபரிமலை நோக்கி புறப்படும். இந்த திருவாபரணம் நாளை மறுநாள் மாலையில் மகரவிளக்கு பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

    அதனை தொடர்ந்து சபரிமலை பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவில் ஐயப்பன் காட்சி தருவார். மகரவிளக்கு தினத்தன்று காலை 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் பம்பையில் இருந்து மலையேறி சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் மகரவிளக்கு பூஜை நாளில் 40 ஆயிரம் பக்தர்கள், முந்தைய நாளில் 50 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளனர்.

    • சாமிக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
    • 20-ந்தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள்.

    சபரிமலை:

    2023-2024-ம் ஆண்டுக்கான மண்டல-மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் முதல் வழக்கமான பூஜை வழிபாடு நடைபெற்று வந்த நிலையில் 41 நாட்கள் பூஜையின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. அன்றைய தினம் இரவே நடையும் அடைக்கப்பட்டது. இந்த மண்டல சீசனில் 33 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

    சில நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம் சபரிமலையில் அலைமோதியது. அந்த சமயத்தில் பக்தர்கள் 15 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பி.என்.மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.

    நடை திறப்பையொட்டி நேற்று பிற்பகல் 2 மணிக்கு பின்னரே பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். பிறகு வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகம் நடைபெறும். மதியம் 12.30 மணிக்கு உச்ச பூஜைக்கு பிறகு 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    பின்னர் மாலை 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும், அதனைத்தொடர்ந்து இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

    வருகிற 15-ந்தேதி அதிகாலை 2.46 மணிக்கு மகர சங்கிரம பூஜை நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு ஐயப்ப சாமிக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனையும், தொடர்ந்து மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது.

    அதேபோல் 15-ந்தேதி முதல் 18-ந் தேதி வரை மாளிகப்புரத்தம்மன் கோவிலில் இருந்து 18-ம் படி வரை இரவில் அய்யப்ப சாமி ஊர்வலமும், 19-ந் தேதி அன்று சரம் குத்தி வரை சாமி ஊர்வலமும் நடக்கும். இந்த சீசனில் 20-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள்.

    ஏற்கனவே 15-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனத்திற்கான முன்பதிவு முடிவடைந்து விட்டது. அந்த வகையில் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அதே சமயத்தில் உடனடி பதிவு மூலம் தினமும் 15 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட உள்ளனர்.

    • மண்டல பூஜையின் போது சபரிமலையில் ஐயப்ப சுவாமிக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும்.
    • மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 30-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்தமாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து மாலையணிந்து விரதமிருக்கும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் தினமும் சபரிமலைக்கு சென்று வருகின்றனர்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டனர். இதனால் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகினர். இந்த விவகாரத்தில் கேரள ஐகோர்ட்டு தலையிட்டது. சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்யவும், கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு ஐகோர்ட் உத்தரவிட்டது.

    ஐகோர்ட்டு வழங்கிய ஆலோசனைகளை அமல்படுத்தியதால் சபரிமலையில் ஏற்பட்டிருந்த நெரிசலுக்கு தீர்வு காணப்பட்டது. அதனைத்தொடர்ந்து பக்தர்களின் வருகை சற்று குறைந்து காணப்பட்டது.

    மண்டல பூஜைக்கு சில நாட்களே இருப்பதால், பக்தர்கள் வருகை மீண்டும் அதிகரித்திருக்கிறது. மண்டல பூஜையின் போது சபரிமலையில் ஐயப்ப சுவாமிக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும்.

    ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அந்த அங்கி மண்டல பூஜையன்று ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகிறது. இதற்காக தங்க அங்கி ஊர்வலமாக கொண்டுவரப்படுகிறது.

    தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து நாளை (23-ந்தேதி) காலை 7 மணிக்கு தொடங்குகிறது. தங்க அங்கி ஊர்வலம் வரக்கூடிய இடங்களில் பல்வேறு கோவில்களுக்கு செல்கிறது. அப்போது தங்க அங்கியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.

    தங்க அங்கி ஊர்வலம் வருகிற 26-ந்தேதி பம்பைக்கு வருகிறது. பம்பை கணபதி கோவிலில் பக்தர்கள் தங்க அங்கியை தரிசனம் செய்யலாம். அதன்பிறகு தங்க அங்கி ஊர்வலம் நீலிமலை, அப்பாச்சிமேடு, சபரிபீடம் வழியாக சன்னிதானத்தை நோக்கி செல்கிறது.

    மாலை 5 மணிக்கு சரங்குத்திக்கு ஊர்வலம் வந்தடையும். அங்கிருந்து சன்னிதானத்துக்கு ஊர்வலம் புறப்பட்டு செல்லும். சன்னிதானத்தில் தங்க அங்கியை தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் பெற்றுக்கொண்டு கோவிலுக்குள் எடுத்துச் செல்வார்கள்.

    அதன்பிறகு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். மறுநாள்(27-ந்தேதி) வரை அய்யப்பன் தங்க அங்கியில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சபரிமலையில் 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது.

    மண்டல பூஜை விழா முடிந்து அன்று இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. பின்பு மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 30-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது. ஜனவரி 15-ந்தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும்.

    • குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது இரண்டாம்படி.
    • பலனை எதிர்ப்பாராமல் கடமையை செய்யும் பக்குவம் மூன்றாவது படி.

    முதல்படி:

    விஷாத யோகம், பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பை விஷாத யோகம். இதுவே முதல்படி.

    இரண்டாம்படி:

    சாங்கிய யோகம். பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது இரண்டாம்படி.

    மூன்றாம்படி:

    கர்மயோகம், உபதேசம் பெற்றால் போதுமா? மனம்பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்ப்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம் மூன்றாவது படி.

    நான்காம் படி:

    ஞான கர்ம சன்னியாச யோகம். பாவம், புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது நான்காம்படி.

    ஐந்தாம்படி:

    சன்னியாச யோகம். நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.

    ஆறாம்படி:

    தியான யோகம். கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது. இதுவே ஆறாவது படி.

    ஏழாம்படி:

    ஞானம். இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்... எல்லாமே கடவுள்தான் என உணர்வது ஏழாவதுபடி.

    எட்டாம்படி:

    அட்சர பிரம்ம யோகம். எந்நேரமும் இறைவனைப் பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது எட்டாவதுபடி.

    ஒன்பதாம் படி:

    ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம், கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத் தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மீகம் என்று உணர்வது ஒன்பதாம்படி.

    பத்தாம்படி:

    விபூதி யோகம். அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தை கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது பத்தாம்படி.

    பதினொன்றாம்படி:

    விஸ்வரூப தரிசன யோகம். ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வது பதினொன்றாம் படி.

    பன்னிரண்டாம்படி:

    பக்தி யோகம். இன்பம்-துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை-பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம்படி.

    பதின்மூன்றாம்படி:

    ஷேத்ரக்ஞ விபாக யோகம். எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல் பதின்மூன்றாம்படி.

    பதினான்காம்படி:

    குணத்ர விபாக யோகம். பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம் படி.

    பதினைந்தாம் படி:

    தெய்வாசுர விபாக யோகம். தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக் கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.

    பதினாறாம் படி:

    சம்பத் விபாக யோகம், இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது பதினாறாம் படி.

    பதினேழாம் படி:

    சிரித்தாத்ரய விபாக யோகம், சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது பதினேழாம் படி.

    பதினெட்டாம் படி:

    மோட்ச சன்யாச யோகம், யாரிடமும் எந்த உயிர்களிடமும் பைதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது பதினெட்டாம் படி.

    சத்தியம் நிறைந்த இந்த பொன்னு பதினெட்டுப் படிகளையும் படிப்படியாய் கடந்து வந்தால், நம் கண் எதிரே அந்த கரிமலை வாசன் மணிகண்ட பிரபு பைரொளியாய் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே ஐயனின் பதினெட்டுப் படிகள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.

    • கடந்த மாதம் 16-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது.
    • தினசரி 1 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    சபரிமலை:

    மண்டலபூஜை சீசனையொட்டி, கடந்த மாதம் 16-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு சபரிமலையில் குவிந்து வருகிறார்கள். ஆன்லைன் முன்பதிவு தவிர நிலக்கல்லில் உடனடி முன்பதிவும் நடைபெற்று வருவதால் சபரிமலையில் தினசரி 1 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    ஆனால், 18-ம் படி வழியாக நிமிடத்திற்கு அதிகபட்சமாக 70 பக்தர்கள் மட்டுமே செல்கிறார்கள். ஒரு மணி நேரத்திற்கு 4,200 பக்தர்கள் மட்டுமே சன்னிதானத்தில் தரிசனம் செய்ய முடியும். தினசரி 17 மணிநேரம் வரை மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்பதால் சபரிமலையில் குவிந்து வரும் பக்தர்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் சாமியை தரிசனம் செய்ய முடிவதில்லை. இதனால் 18 மணி நேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது.

    அதைத்தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) முதல் தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரித்து 18 மணி நேரமாக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது. அதன்படி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 4 மணிக்கு பதிலாக பிற்பகல் 3 மணிக்கு அதாவது ஒரு மணி நேரம் முன்னதாக நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை சாத்தப்படும்.

    இந்த நிலையில் பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் ஐ.ஜி. ஸ்பர்ஜன் குமார் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் சபரிமலையில் முகாமிட்டு உள்ளனர்.

    இந்த நிலையில், 'சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வசதியாக, தரிசனம் முடிந்த பக்தர்கள் சன்னிதானத்தில் தங்காமல் உடனுக்குடன் மலையிறங்க வேண்டும்' என்று ஐ.ஜி ஸ்பர்ஜன் குமார் பக்தர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

    மேலும் சீசனையொட்டி பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால், நிலக்கல்லில் நடந்து வரும் உடனடி தரிசன முன்பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தேவஸ்தானத்தையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • ஐயப்பனை நம்பி வழிபடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
    • 80 ஆண்டுகளுக்கு முன் கேரள மக்களுக்கு மட்டும்தான் தெரிந்திருந்தது.

    ஐயப்பனை கண்கண்ட தெய்வமாக நம்பி வழிபடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இத்தகைய சக்தி வாய்ந்த தெய்வத்தைப் பற்றி 80 ஆண்டுகளுக்கு முன் கேரள மக்களுக்கு மட்டும்தான் தெரிந்திருந்தது.

    ஐயப்பன் புகழை பாமர மக்களும் உணரும்படி செய்த பெருமை `ஐயப்பன்' நாடகம் நடத்திய நவாப் டி.எஸ்.ராஜமாணிக்கத்தையே சேரும்.

    இந்நாடகம் மூலம் மக்களை அவர் பக்தி பரவசத்தில் மூழ்கச் செய்தார். இவர் 1400 தடவை ஐயப்பன் நாடகங்கள் நடத்தி இருக்கிறார்.

    1942 முதல் 1946 வரை நவாபின் நாடகக் கம்பெனியான மதுரை தேவி பால வினோத சங்கீத சபையினர் கேரளாவில் நாடகங்கள் நடத்தி வந்தனர். அப்போது கார்த்திகை பிறந்து விட்டால் `சாமியே சரணம் ஐயப்பா' கோஷம் காதைத் துளைக்கும் செண்டை வாத்தியங்களில் ஒலி காது செவிடுபடும். இது என்னக் கத்தல், இது என்ன வாத்தியம் என்றே நவாபும் அவரைச் சேர்ந்தவர்களும் நினைத்து வந்தார்களாம்.

    நாடகக் கம்பெனி கோட்டயத்தில் முகாமிட்டபோது ஐயப்ப சாமி என்ற பெரியவர் நவாபிடம் வந்து `ஐயா! நான் நாகர்கோவிலில் இருந்து வருகின்றேன். நீங்கள் நடத்தும் நாடகம் ஒவ்வொன்றும் தெய்வ காவியமாக இருக்கிறது. உங்களுக்கு தெய்வ ஆதரவு இருக்கிறது.

    ஆகவே கலியுக வரதனாக விளங்கும் ஐயப்பன் சரித்திரத்தையும், நாடகமாக நடத்த வேண்டும். இது மலையாளத்தில் நடந்த உண்மைக் கதை என்றார்.

    நவாப், `புதிய நாடகம் என்றால் அதிக பொருட் செலவாகும். மேலும் இது மலையாளக் கதை. தமிழ்நாட்டில் எடுபடுமா என்பதையும் பார்க்க வேண்டும்' என்று கூறி விட்டார்.

    அப்பெரியவர், `நீங்கள் நாடகம் நடத்தாவிட்டால் பரவாயில்லை. நான் ஐயப்பன் கதையை கதாகாலட்சேபமாக நடத்தி வருகிறேன். அதை நீங்கள் வந்து கேட்க வேண்டும்' என்று வற்புறுத்தினார்.

    நவாப் தாங்கள் முகாமிட்டிருந்த கம்பெனி வீட்டிலேயே அவர் கதாகாலட்சேபத்திற்கு ஏற்பாடு செய்தார். கதையைக் கேட்டு ராஜமாணிக்கம் உருகி விட்டார். பந்தள அரசனின் மகனாக வளர்ந்து பனிரெண்டே ஆண்டுகள் மானிட உருவில் வாழ்ந்து பல அற்புதங்களைச் செய்து சபரிமலையில் குடிகொண்ட ஐயப்பன் சரிதம் எல்லோருடைய உள்ளத்தையும் உலுக்கி விட்டது. ராஜமாணிக்கம் அன்று முதல் அயப்பனுக்கு அடிமையானார்.

    `என்ன ஆனாலும் இதை நாடகமாகவே நடத்தியாக வேண்டும். கதை எங்கு நடந்திருந்தாலும் அதிலுள்ள நீதி மனித சமுதாயத்திற்கே இன்றியமையாதது. இப்பேர்ப்பட்ட ஒரு அருள் தெய்வத்தின் கதையை நாடகமாக நடத்தி உலக மக்கள் அறிய செய்கிறேன்' என்று ராஜமாணிக்கம் உறுதி பூண்டார்.

    1944-ம் ஆண்டு ஆலப்புழையில் ஐயப்பன் நாடகம் அரங்கேற்றப்பட்டது. மக்கள் ஏராளமாக வந்து நாடகத்தைப் பார்த்து பரவசமானார்கள்.

    சபரிமலையே பார்த்தறியாத ஏராளமான பேர் நாடகத்தைப் பார்த்தபின் மலைக்குச் சென்று அயப்பனை நேரில் தரிசித்தனர்.

    தமிழ்நாட்டில் முதல் முறையாக ஐயப்பன் நாடகம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்றது.

    மதுரையில் இந்த நாடகம் நடந்த போது அந்த நகரை இந்நாடகம் ஒரு கலக்கு கலக்கி விட்டது. இப்படித்தான் தமிழ்நாட்டில் ஐயப்ப பக்தி மக்களிடம் மெல்ல, மெல்ல பரவியது. இன்று தமிழர்களின் மனதில் ஐயப்பன் இரண்டற கலந்து நீக்கமற நிறைந்துள்ளார்.

    சபரிமலை கேரளாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். மகிஷி என்ற பெயர் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என வழங்கப்படுகிறது.

    பதினெட்டு மலைகளுக்கு இடையே சுவாமி ஐயப்பன் கோவில் இருக்கிறது. கடல் நீர் மட்டத்துடன் ஒப்பிடும் போது 914 மீட்டர் உயரத்தில் கோவில் காணப்படுகிறது. சபரிமலையை சூழ்ந்துள்ள ஒவ்வொரு மலையிலும் கோவில்கள் காணப்படுகின்றன.

    நிலக்கல், காளகெட்டி மற்றும் கரிமலை போன்ற இடங்களில் இன்றும் நாம் பழமையான ஆலயங்களை காணலாம். இதர மலைகளில் பழங்காலத்து கோவில்களின் சிதலம் அடைந்த பகுதிகளை காணலாம்.

    ஆண்டு தோறும் சுமார் 5 கோடி முதல் 7 கோடி பக்தர்கள் சபரிமலைக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் புனிதப் பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியத்தலம் சபரிமலையே ஆகும்.

    10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பல்வேறு காரணங்களால் சபரிமலை கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இதற்கான முக்கிய காரணம் சுவாமி ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்ற அதீகமே. மண்டல பூஜை என அறிவிக்கப்பட்ட நாட்களிலும், மகர விளக்கன்றும் (ஜனவரி 14 `மகா சங்கராந்தி') மற்றும் விஷு (ஏப்ரல் 14), மற்றும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்களில் மட்டும் கோவில் பிரார்த்தனை செய்வதற்காக திறந்து வைக்கப்படுகிறது.

    ×