search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சபரிமலையில் 16 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
    X

    சபரிமலையில் 16 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

    • பம்பை மற்றும் சன்னிதான பகுதியில் நிலவிய கூட்டத்துக்கு தகுந்தாற்போல், மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
    • வருகிற நாட்களில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    திருவனந்தபுரம்:

    மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து மாலையணிந்து விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டனர். இதனால் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகினர்.

    இந்த விவகாரத்தில் கேரள ஐகோர்ட்டு தலையிட்டது. சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்யவும், கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு ஐகோர்ட் உத்தரவிட்டது.

    மேலும் நெரிசலை தவிர்க்கும் விதமாக கடைபிடிக்க வேண்டியதற்கான அறிவுரைகளையும் வழங்கியது. அதன்பேரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. மேலும் ஐகோர்ட்டு அறிவுறுத்தல்களை பின்பற்றியதன் அடிப்படையில் சபரிமலையில் ஏற்பட்டிருந்த நெரிசலுக்கு தீர்வு காணப்பட்டது.

    கடந்த சில நாட்களாக பக்தர்களின் வருகை குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மண்டல பூஜைக்கு சில நாட்களே இருப்பதால், பக்தர்கள் அதிகளவில் வருவதாக கூறப்படுகிறது. நேற்று பம்பை மற்றும் சன்னிதான பகுதிகள் மட்டுமன்றி மலைப்பாதையிலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

    இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நேற்று சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 16 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்தனர். இருந்தபோதிலும் பக்தர்கள் நெரிசலில் சிக்காத வகையில், போலீசார் ஒழுங்குபடுத்தி அனுப்பினர்.

    பம்பை மற்றும் சன்னிதான பகுதியில் நிலவிய கூட்டத்துக்கு தகுந்தாற்போல், மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பம்பையில் இருந்து பக்தர்கள் மலையேறிச் செல்வதற்கே வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை நிலவியது.

    சன்னிதானத்தில் உள்ள நடைப்பந்தல் பகுதியில் பக்தர்கள் வெகுநேரம் நீண்ட வரிசையில் காத்து நின்றார்கள். வருகிற நாட்களில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    Next Story
    ×