என் மலர்tooltip icon

    கேரளா

    • அடுத்த 2½ ஆண்டுகளுக்கான மந்திரிகளாக நேற்று கடனம்பள்ளி ராமச்சந்திரன் மற்றும் கணேஷ்குமார் ஆகியோர் பதவியேற்றனர்.
    • கவர்னர் மாளிகையில் அவர்களுக்கு கவர்னர் ஆரிப் முகம்மதுகான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் (எல்.டி.எப்.) ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு, ஜனநாயக கேரள காங்கிரஸ், இந்திய தேசிய காங்கிரஸ் (எஸ்), கேரள காங்கிரஸ் (பி) ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த கட்சிகளுக்கு தலா ஒரு எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் 2 பேருக்கு, முதல் 2½ ஆண்டுகளும், மேலும் உள்ள 2 பேருக்கு அடுத்த 2½ ஆண்டுகளும் மந்திரி பதவி வழங்குவது என தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின்போது ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி முதல் 2½ ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் அடுத்த 2½ ஆண்டுகளுக்கான மந்திரிகளாக நேற்று கடனம்பள்ளி ராமச்சந்திரன் மற்றும் கணேஷ்குமார் ஆகியோர் பதவியேற்றனர்.

    திருவனந்தபுரத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் அவர்களுக்கு கவர்னர் ஆரிப் முகம்மதுகான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்பட மந்திரிகள் அனைவரும் கலந்துகொண்டனர். தொடர்ந்து கவர்னர் ஆரிப் முகம்மது கான் தேநீர் விருந்து அளித்தார்.

    இந்த விருந்தை முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் புறக்கணித்தனர். புதிதாக பொறுப்பேற்ற மந்திரிகள் கணேஷ்குமார், கடனம்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோருடன் வனத்துறை மந்திரி சசீந்திரன் மட்டும் தேநீர் விருந்தில் பங்கேற்றனர்.

    முன்னதாக பதவியேற்பு விழாவுக்காக டெல்லியில் இருந்து கவர்னர் ஆரிப் முகம்மது கான் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். விமான நிலையத்தில் இருந்து கவர்னர் மாளிகைக்கு அவர் காரில் புறப்பட்டபோது, இந்திய மாணவர் கூட்டமைப்பினர் கருப்பு கொடி காட்ட முயன்றனர். அவர்களை தடுத்த போலீசார் 4 பேரை கைது செய்தனர்.

    • புகாரின் அடிப்படையில் அவரை விசாரணைக்கு ஆஜராக போலீசார் நோட்டீசு அனுப்பினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி சுரேஷ்கோபி மீது 35 ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சுரேஷ்கோபி. இவர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மேல்சபை எம்.பி.யான இவர் கடந்த அக்டோபர் மாதம் கோழிக்கோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது ஒரு தனியார் டி.வி. பெண் நிருபரின் தோளில் தொட்டு பேசி உள்ளார். அந்த பெண் நிருபர் விலகிய போதும், மீண்டும் அவரை சுரேஷ் கோபி தொட்டதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக அந்த பெண் நிருபர், கோழிக்கோடு நடக்காவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சுரேஷ்கோபி மீது 35 ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தனது செயலுக்கு சுரேஷ் கோபி வருத்தம் தெரிவித்தார்.

    இருப்பினும் புகாரின் அடிப்படையில் அவரை விசாரணைக்கு ஆஜராக போலீசார் நோட்டீசு அனுப்பினர். அதன்பேரில் சுரேஷ்கோபி, நடக்காவு போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். விசாரணைக்கு பிறகு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு சுரேஷ்கோபி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த மனுவில் அரசின் அனுமதியை ஐகோர்ட்டு கேட்டுள்ளது.

    • விஜயகாந்த் தந்தையின் அண்ணன் திருவனந்தபுரம் சாலா மார்க்கெட்டில் அரிசி வியாபாரம் செய்திருக்கிறார்.
    • விஜயகாந்தின் நண்பர்கள் பலர் திருவனந்தபுரத்தில் உள்ளனர்.

    தமிழக திரைப்படத்துறையில் புரட்சிக்கலைஞர் என்று அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்த் நேற்று காலமானார். அவரது மறைவு அவர்களது ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக மக்களையே பெரும் கவலையில் ஆழ்த்தி உள்ளது என்றே கூறலாம்.

    தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் பல தெருக்களில் விஜயகாந்தின் படத்தை வைத்து மக்கள் அஞ்சலி செலுத்துவதே அதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. நடிகர் விஜயகாந்த் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். இதனால் சினிமா துறைக்கு வந்து சம்பாதித்தபோது, ஏழை எளியோருக்கும், கஷ்டப்பட்டு வந்தவர்களுக்கும் ஏராளமான உதவிகளை செய்தார்.

    நடிகர் விஜயகாந்த் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு பல வேலைகளை செய்திருக்கிறார். அவருக்கு மிகவும் பிடித்தமான ஊர் அவர் பிறந்த மதுரையாகும். அதேபோன்று கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரமும் விஜயகாந்துக்கு மிகவும் பிடித்த நகரம் என்று அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

    அதற்கு காரணம் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பாக திருவனந்தபுரத்தில் நடிகர் விஜயகாந்த் வேலை பார்த்திருக்கிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமானோர் பல்வேறு வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விஜயகாந்த் தந்தையின் அண்ணன் திருவனந்தபுரம் சாலா மார்க்கெட்டில் அரிசி வியாபாரம் செய்திருக்கிறார். இதனால் அவருடன் விஜயகாந்த் திருவனந்தபுரத்துக்கு அடிக்கடி சென்றிருக்கிறார். அப்போது அவர் திருவனந்தபுரத்தின் அனைத்து இடங்களுக்கும் சென்றார்.

    இதனால் திருவனந்தபுரத்தில் உள்ள அனைத்து இடங்களையும் விஜயகாந்த் தெரிந்து வைத்திருக்கிறார். அப்போது அவர் 1970-களில் புகழ்பெற்ற ஷாம்பூ நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்தார். அது அவருக்கு திருவனந்தபுரம் நகருடனான தொடர்பை மேலும் அதிகரித்தது.

    விஜயகாந்துக்கு திருவனந்தபுரம் நகரத்துடனான தொடர்பு வலுவானதாக மாற மற்றொரு சம்பவம் அரங்கேறியது. அவரது நெருங்கிய நண்பரான சுந்தர்ராஜின் சகோதரி முத்துலட்சுமியின் திருமணம் 45 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அதற்காக விஜயகாந்த் அங்கு சென்றார்.

    நண்பரின் சகோதரி முத்துலட்சுமிக்கு, கண்ணன் என்பவருடன் திருமணம் நடந்தது. கண்ணன் திருவனந்தபுரத்தில் நகைக்கடை நடத்தி வந்தார். திருமணத்திற்கு பிறகு, விஜயகாந்துக்குக்கு கண்ணணுடன் நட்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கண்ணனை பார்க்க திருவனந்தபுரத்துக்கு விஜயகாந்த் அடிக்கடி செல்லத் தொடங்கினார்.

    அவ்வாறு வரும்போது கண்ணனுடனேயே தங்கி விடுவார். அவரின் மூலமாக நடிகர் விஜயகாந்துக்கு திருவனந்தபுரத்தில் ஏராளமான நண்பர்கள் கிடைத்தனர். அவர்கள் அனைவரும் சந்திக்கும் இடமாக கண்ணனின் நகைக்கடை திகழ்ந்தது.

    இந்த நிலையில் நகைக்கடை நடத்தி வந்த கண்ணன் இறந்துவிட்டார். இதையடுத்து அவர் நடத்தி வந்த நகைக்கடையை நடிகர் விஜயகாந்த் 7 லட்சம் ரூபாய்க்கு வாங்கி சிறிது காலம் நடத்தி வந்தார். பின்பு அந்த கடையை விற்றுவிட்டு மதுரைக்கு சென்ற விஜயகாந்த், தனது தந்தை நடத்திவந்த அரிசி ஆலையை கவனித்து வந்தார்.

    அதன்பிறகு சினிமா துறையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் நடிகர் விஜயகாந்த் சென்னையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இருந்தபோதிலும் தனது நண்பர்களை பார்ப்பதற்காக அடிக்கடி திருவனந்தபுரத்துக்கு சென்று வந்திருக்கிறார்.

    அவ்வாறு செல்லும்போதெல்லாம் அருங்காட்சியகம், மிருகக்காட்சி சாலை, பத்மநாபசுவாமி கோவில், கோவளம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதை நடிகர் விஜயகாந்த் வழக்கமாக வைத்திருந்தார். நடிகர் விஜயகாந்தின் நண்பர்கள் பலர் திருவனந்தபுரத்தில் உள்ளனர்.

    நடிகர் விஜயகாந்த் திருவனந்தபுரம் நகருடன் வைத்திருந்த தொடர்பு காரணமாக, அவருக்கு அங்குள்ள மக்கள் மத்தியில் அவருக்கு தனி அன்பு கிடைக்க வழிவகை செய்தது. இதனால் நடிகர் விஜயகாந்த்தின் நினைவு திருவனந்தபுரம் நகரில் நீண்டகாலம் இருக்கும்.

    • திருவனந்தபுரம் தொகுதியில் இருந்து தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார்.
    • இளைஞர்களுக்கு இடம் அளிக்க வேண்டியதற்கான நேரம் வந்துவிட்டதாக நம்புகிறேன் எனத் தெரிவித்தார்.

    காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினரும், மக்களவை எம்.பி.யுமான சசி தரூர், அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். திருவனந்தபுரம் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

    திருவனந்தபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் நிகழ்ச்சியின்போது அவர் கூறியதாவது:-

    ஒரு கட்டத்தில் இளைஞர்கள் இடம் அளிக்க வேண்டியதற்கான நேரம் வந்துவிட்டதாக நம்புகிறேன். இது என்னுடைய எண்ணம்தான். அதேவேளையில் அரசியலில் ஒருபோதும் என்பதை ஒருபோதும் சொல்லக்கூடாது என்ற முழக்கம் உள்ளது. இது எனது கடைசி தேர்தலாக இருக்கும் என்று நினைக்கிறேன் என நான் ஒருபோதும் சொல்லவில்லை" என்றார்.

    காங்கிரஸ் தலைவர் திருவனந்தபுரத்தில் தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்றால், அது தனது கடைசித் தேர்தலைப்போல முழு உற்சாகத்துடன் மக்களுக்கு தன்னால் முடிந்ததைச் செய்வேன் என்று கூறினார்.

    காங்கிரஸில் முக்கிய தலைவராக இருக்கும் சசி தரூர் 2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதன்முறையாக பாராளுமன்றத்திற்கு சென்றார். அப்போது சுமார் 95 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன்பின் தொடர்ந்து 2014 மற்றும் 2019-ல் தொடர்ந்து வெற்றி பெற்றார்.

    அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரிந்தார். ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு இந்தியா பிரதிநிதியாக அதிகாரப்பூர்வமாக போட்டியாளராக அறிவிக்கப்பட்டார். ஏழு பேர் போட்டியிட்ட நிலையில், 2-வது இடம் பிடித்தார்.

    • பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் காணப்பட்டது.
    • வருகிற 30-ந்தேதி மாலை மீண்டும் நடை திறக்கப்படும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்தமாதம் (நவம்பர்) 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரி மலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு சபரி மலையில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு முறையே பின்பற்றப்படுகிறது.

    இந்த ஆண்டு மண்டல பூஜை சீசனிலும் அந்த நடைமுறையே கடை பிடிக்கப்பட்டது. மேலும் நிலக்கல்லில் உடனடியாக முன்பதிவு செய்தும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினமும் 80 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், உடனடி முன்பதிவு செய்தும் பல்லாயிரக்கணக்கானோர் சபரிமலைக்கு வந்தனர். இதன் காரணமாக சபரி மலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் காணப்பட்டது.

    இதனால் பம்பை, சன்னிதானம், நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்லக்கூடிய மலைப்பாதையில் கூட, பக்தர்கள் வெகுநேரம் காத்திருந்தனர். சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் 15 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிய நிலை நிலவியது.

    இதன் காரணமாக பக்தர்கள் கடும் சிரமத்துக்குள்ளானார்கள். எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் அவதிக்குள்ளானதாக பக்தர்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்வதில் அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று பல்வேறு கட்சியினரும் கருத்து வெளியிட்டனர்.

    இந்தநிலையில் மண்டல பூஜை விழா முடிந்து சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று இரவு அடைக்கப்பட்டது. மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30-ந்தேதி மாலை மீண்டும் நடை திறக்கப்பட உள்ளது. மகரவிளக்கு தரிசனம் ஜனவரி 15-ந்தேதி நடக்கிறது.

    • மண்டல, மகர விளக்கு பூஜை மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
    • 5 நாட்கள் சிறப்பு பூஜையும் மற்றும் விழா கால பூஜையும் நடைபெறும்.

    சபரிமலை:

    பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மண்டல, மகர விளக்கு பூஜை மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த பூஜையில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை இருமுடி கட்டி வந்து தரிசனம் செய்வார்கள்.

    இதுதவிர ஒவ்வொரு மாதமும் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் சிறப்பு பூஜையும் மற்றும் விழா கால பூஜையும் நடைபெறும். அந்த வகையில் 2023-2024-ம் ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி அன்று திறக்கப்பட்டது.

    இந்த வருடம் ஐயப்பனை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் 16 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.

    கூட்டம் கட்டுக்கடங்காமல் திரள்வதால் சபரிமலையில் பக்தர்கள் சிரமப்படுவதை தவிர்க்க அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என கேரள ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை நடத்தி திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கு உத்தரவிட்டது.

    இந்தநிலையில் 41 நாட்கள் பூஜையின் சிகர நிகழ்ச்சியாக மண்டல பூஜை நேற்று நடந்தது. காலை 10.30 முதல் பகல் 11.30 மணி வரையிலான முகூர்த்த நேரத்தில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மண்டல பூஜை நடைபெற்றது. அப்போது தங்க அங்கி அலங்காரத்தில் ஐயப்பன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    முன்னதாக நெய்யபிஷேகம், கலசாபிஷேகம், களபாபிஷேகம் நடத்தப்பட்டது. மண்டல பூஜைக்கு பிறகு பிற்பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

    பின்னர் தீபாராதனை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகளுடன் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. அத்துடன் மண்டல கால பூஜை நிறைவுக்கு வந்தது. இந்த பூஜையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சரண கோஷத்துடன் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

    மண்டல பூஜை நிறைவடைந்து கோவில் நடை அடைக்கப்பட்டதால் மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30-ந்தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.

    • மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக சுமந்து வந்தனர்.
    • பக்தர்கள் `சாமியே சரணம் ஐயப்பா’ என பக்தி கோஷம் முழங்கினர்.

    சபரிமலை:

    மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி வந்து அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள்.

    சபரிமலையில் இந்த ஆண்டின் மண்டல பூஜை இன்று (புதன்கிழமை) நடக்கிறது. அப்போது திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய 450 பவுன் எடையுள்ள தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிப்பது வழக்கம்.

    இந்த தங்க அங்கி பத்தனம்திட்டா மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இந்த தங்க அங்கி கடந்த 23-ந்தேதி சபரிமலைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக புறப்பட்டது. இந்த ஊர்வலம் நேற்று பம்பை கணபதி கோவிலை வந்தடைந்தது. அங்கிருந்து தங்க அங்கியை மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக சுமந்து வந்தனர். தங்க அங்கி மாலை 5.15 மணிக்கு சரம்குத்தி வந்தடைந்தது.

    அப்போது திருவிதாங்கூர் தேவஸ்தான ஊழியர்கள் சார்பில் மேளதாளம் முழங்க பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாலை 6.15 மணிக்கு சன்னிதானம் வந்தடைந்த தங்க அங்கியை திருவிதாங்கூர் தேவஸ்தான மந்திரி ராதாகிருஷ்ணன் தலைமையில் தலைவர் பிரசாந்த், உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டு தந்திரி மற்றும் மேல்சாந்தியிடம் ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து தங்க அங்கி 18-ம் படி வழியாக கருவறைக்குள் எடுத்து செல்லப்பட்டு அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டது.

    பின்னர் மாலை 6.40 மணியளவில் மண்டல பூஜையின் முன் நிகழ்வாக சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அப்போது சன்னிதானத்தில் கூடி இருந்த திரளான பக்தர்கள் `சாமியே சரணம் ஐயப்பா' என பக்தி கோஷம் முழங்கினர். தொடர்ந்து வழக்கமான பூஜைகள் மற்றும் வழிபாடுகளுக்கு பின்னர் இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது.

    சபரிமலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து நடைபெறும் வழக்கமான பூஜைகளுடன் காலை 9.45 மணி வரை நெய்யபிஷேகம் போன்றவை நடைபெறும்.

    தொடர்ந்து காலை 10.30 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலான முகூர்த்த வேளையில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மண்டல பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும். பின்னர் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டு 41 நாட்கள் நடைபெற்ற மண்டல கால பூஜை நிறைவு பெறுகிறது.

    • ஐயப்பனுக்கு தங்க அங்கி அணி விக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை.
    • நாளை வரை தங்க அங்கியில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    திருவனந்தபுரம்:

    மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்தமாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும், மாலையணிந்து விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    ஒவ்வொரு நாளும் பக்தர்கள் வருகை அதிகரித்ததன் காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு சபரிமலையில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் தலையிட்ட கேரள ஐகோர்ட்டு, பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

    அதன்பேரில் தரிசன நேரம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. ஆனால் பக்தர்கள் வருகை குறையவில்லை. இதனால் பம்பை முதல் சன்னிதானம் வரை பல இடங்களில் பக்தர்கள் நிறுத்தி நிறுத்தியே சன்னிதானத்துக்கு அனுப்பப்படுகின்றனர்.

    பல மணிநேரம் காத்திருந்தே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. நேற்றுமுன்தினம் மொத்தம் ஒரு லட்சத்து 969 பக்தர்கள் படினெட்டாம் படி ஏறி சாமி தரிசனம் செய்தனர். நேற்றும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையிலேயே இருந்தது.

    இந்தநிலையில் சபரிமலையில் மண்டல பூஜை நாளை (27-ந்தேதி) காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறுகிறது.

    ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, இன்று மதியம் பம்பைக்கு வந்து சேரும். பின்பு அங்கிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணியளவில் சன்னிதானத்தை சென்றடைகிறது.

    அதன் பிறகு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணி விக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடத்தப்படும். ஐயப்பன் நாளை வரை தங்க அங்கியில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    சபரிமலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. அதன்படி ஆன்லைன் முன்பதிவு இன்று 64 ஆயிரமாக குறைக்கப் பட்டிருந்தது. மண்டல பூஜை நடைபெறக்கூடிய நாளைய (27-ந்தேதி) 70 ஆயிரம் பேருக்கே முன்பதிவு செய்யப்படும்.

    மண்டல பூஜை விழா முடிந்து, நாளை இரவு 11 மணிக்கு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை சாத்தப்படுகிறது. பின்பு மகரவிளக்கு பூஜைக்காக 30-ந்தேதி மாலை மீண்டும் திறக்கப்பட உள்ளது.

    • பாலத்தை கேரள சுற்றுலாத்துறை மந்திரி முகமது ரியாஸ் நேற்று திறந்துவைத்தார்.
    • பாலம் மொத்தம் 1,400 உயர் ரக பிளாஸ்டிக் தொகுதிகளை இணைத்து கட்டப்பட்டு அமைக்கப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரை பீச்சுகள் உள்ளன. திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலா கடற்கரை நீந்துவதற்கும், சூரிய குளியலுக்கும் ஏற்ற இடமாக இருக்கிறது.

    இதனால் இந்த கடற்கரைக்கு ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும் இந்த கடற்கரையில் மிதக்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் கடற்கரையில் இருந்து கடலுக்குள் 100 மீட்டர் நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.

    மேலும் பாலத்தின் முடிவு பகுதியில் 11 மீட்டர் நீளம் மற்றும் 7 மீட்டர் அகலத்தில் பார்வையாளர்கள் நின்று கடல் அழகு மற்றும் அலையை ரசிக்கும் வகையில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. சாகச சுற்றுலா மேம்பாட்டு சங்கம், மாநில சுற்றுலாத்துறை மற்றும் திருவனந்தபுரம் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில், வர்க்கலா நகராட்சி ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்த பாலத்தை கேரள சுற்றுலாத்துறை மந்திரி முகமது ரியாஸ் நேற்று திறந்துவைத்தார்.

    இந்த மிதக்கும் பாலத்தில் ஒரே நேரத்தில் 300 பேர் செல்ல முடியும். தினமும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் இந்த பாலத்தில் நடந்து சென்று ரசிக்கலாம். இந்த பாலம் மொத்தம் 1,400 உயர் ரக பிளாஸ்டிக் தொகுதிகளை இணைத்து கட்டப்பட்டு அமைக்கப்பட்டு உள்ளது.

    மிதக்கும் பாலத்தின் நுழைவு கட்டணம் ரூ120 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் 20 நிமிடங்கள் பாலத்தில் நேரத்தை செலவிடலாம்.

    சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக லைப் ஜாக்கெட்டுகள், பாதுகாப்பு படகுகள் மட்டுமின்றி உயிர்காக்கும் காவலர்கள், மீனவர்கள் தயார் நிலையில் பணியில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    • கடந்த 2018-ம் ஆண்டு பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லாவில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டார்.
    • பின்பு 2 ஆண்டுகளுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் கோட்டாலி பகுதியை சேர்ந்தவர் சாஜிமோன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் நிர்வாகியாக இருந்து வந்த இவர், கடந்த 2018-ம் ஆண்டு பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லாவில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டார்.

    அந்த வழக்கில் இருந்து தப்பிக்க வேறு ஒரு நபர் ஈடுபட்டது போன்று, வழக்கை திசை திருப்பவும் முயற்சி செய்தார். ஆனால் அது முடியாமல் போனது. சாஜிமோன் மீதான பாலியல் வழக்கு விசாரணை நிலுவையில் இருந்ததால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    பின்பு 2 ஆண்டுகளுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டார். மேலும் கோட்டாலி பிரிவு கிளைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சாஜிமோன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் ஊழியராக இருந்துவரும் பெண் ஒருவரை நிர்வாண படம் எடுத்த வழக்கில் சிக்கினார்.

    இதையடுத்து அவர் கட்சியில் இருந்து மீண்டும் நீக்கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு அறிவுறுத்தலின் அடிப்படையில் அவர் நீக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பம்பை முதல் சன்னிதானம் வரை பல இடங்களில் பக்தர்கள் நிறுத்தி நிறுத்தியே சன்னி தானத்துக்கு அனுப்பப்படுகின்றனர்.
    • பம்பை, நீலிமலை மலைப்பாதை, சபரிபீடம், சன்னிதானம் என அனைத்து இடங்களில் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்தமாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும், மாலையணிந்து விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    ஒவ்வொரு நாளும் பக்தர்கள் வருகை அதிகரித்ததன் காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு சபரிமலையில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து இந்த விவகாரத்தில் தலையிட்ட கேரள ஐகோர்ட்டு, பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

    அதன்பேரில் தரிசன நேரம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. ஆனால் பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருந்தது.

    இதனால் பம்பை முதல் சன்னிதானம் வரை பல இடங்களில் பக்தர்கள் நிறுத்தி நிறுத்தியே சன்னி தானத்துக்கு அனுப்பப்படுகின்றனர். பல மணி நேரம் காத்திருந்தே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிகிறது. பக்தர்கள் சோர்வடையாமல் இருக்க தேவசம்போர்டு சார்பில் குடிநீர், பிஸ்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.

    இந்நிலையில் நடப்பு ஆண்டு மண்டல பூஜை காலத்தில் முதன்முதலாக ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்திருக்கின்றனர். நேற்று மொத்தம் ஒரு லட்சத்து 969 பக்தர்கள் படினெட்டாம் படி ஏறி சாமி தரிசனம் செய்திருக்கின்றனர். இந்த ஆண்டு மண்டல பூஜை காலத்தில் இதுவே அதிகமாகும். இதன் காரணமாக நேற்று சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் 15 மணி நேரம் வரை காத்திருந்தனர்.

    பம்பை, நீலிமலை மலைப்பாதை, சபரிபீடம், சன்னிதானம் என அனைத்து இடங்களில் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது. நீலிமலை, அப்பாச்சிமேடு உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் மலையேற்றத்தில் நிறுத்தப்பட்டனர். அங்கு பக்தர்கள் பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

    சபரிமலையில் மண்டல பூஜை நாளைமறுநாள்(27-ந்தேதி) காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறுகிறது. இதையொட்டி ஆன்லைன் முன்பதிவு நாளை(26-ந்தேதி) 64 ஆயிரமாகவும், நாளை மறுநாள்(27-ந்தேதி) 70 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

    அய்யப்பனுக்கு அணி விக்கப்படும் தங்க அங்கி, நாளை மதியம் பம்பைக்கு வந்து சேரும். பின்பு அங்கிருந்து புறப்பட்டு மாலை 5 மணியளவில் சரங்குத்தி செல்லும் தங்க அங்கி ஊர்வலம், மாலை 6 மணியளவில் சன்னி தானத்தை சென்றடைகிறது.

    அதன்பிறகு அய்யப்ப னுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடத்தப்படும். நாளை மறுநாள் மண்டல பூஜை முடிந்து, இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. பின்பு மகரவிளக்கு பூஜைக்காக 30-ந்தேதி மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.

    • கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தவர்கள், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 296 ஆக உள்ளது.
    • வைரஸ் தொற்றுநோய்களை நிர்வகிக்க மருத்துவமனைகள் போதுமான அளவில் உள்ளன.

    கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் இறந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக இணையதளத்தில் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன..

    இன்று காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பால் 334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 128 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,000 ஆக உயர்ந்து உள்ளது.

    நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்ட கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தவர்கள், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 296 ஆக உள்ளது.

    இதுகுறித்து சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறுகையில், "கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள போதிலும், பயப்பட வேண்டியது இல்லை. வைரஸ் தொற்றுநோய்களை நிர்வகிக்க மருத்துவமனைகள் போதுமான அளவில் உள்ளன" என்றார்.

    ×