என் மலர்
கேரளா
- மண்டல பூஜை காலத்தை போன்றே, மகரவிளக்கு பூஜை காலத்திலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவிலேயே இருக்கிறது.
- 10-ந்தேதி முதல் உடனடி முன்பதிவு நிறுத்தப்படுகிறது.
திருவனந்தபுரம்:
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
மண்டல பூஜை காலத்தை போன்றே, மகரவிளக்கு பூஜை காலத்திலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவிலேயே இருக்கிறது. இதனால் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 10 முதல் 15 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது.
பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் இருப்பதற்காக கண்காணிப்பு பணியில் போலீசாரும், தேவசம்போர்டு தன்னார்வ தொண்டர்களும் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மகரவிளக்கு பூஜையன்று பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று திருவிதாங்கோடு தேவசம்போர்டிடம் போலீஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து தேவசம்போர்டு மந்திரி ராதாகிருஷ்ணன் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த், உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதில் மகரவிளக்கு பூஜை நடைபெறும் வருகிற 15-ந்தேதி மற்றும் அதற்கு முந்தைய தினமான 14-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களும் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி 14-ந்தேதி மெய்நிகர் வரிசை ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை 50 ஆயிரமாகவும், 15-ந்தேதி 40 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 10-ந்தேதி முதல் உடனடி முன்பதிவு நிறுத்தப்படுகிறது. அதே நேரத்தில் 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி தரிசன முன்பதிவு வழக்கம் போல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அது மட்டுமின்றி 14 மற்றும் 15 தேதிகளில் சபரிமலைக்கு வருவதை பெண்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும் என்று தேவசம்போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.
- கேரள மாநில பாரதிய ஜனதா கட்சி சார்பில் 2 லட்சம் பெண்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது.
- நிகழ்ச்சியில் 2 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
திருவனந்தபுரம்:
பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனையடுத்து பல மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கேரள மாநில பாரதிய ஜனதா கட்சி சார்பில் 2 லட்சம் பெண்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும், அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார் எனவும் கேரள மாநில பாரதிய ஜனதா தலைவர் சுரேந்திரன் கடந்த மாதம் தெரிவித்தார்.
அதன்படி மகளிர் சங்கமம் நிகழ்ச்சி கேரள மாநிலம் திருச்சூர் தேக்கங்காடு மைதானத்தில் இன்று (புதன்கிழமை) மாலை நடக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளா வருகிறார். அவர் லட்சத்தீவில் இருந்து திருச்சூருக்கு இன்று பிற்பகல் 3 மணிக்கு வருகிறார்.
அங்கு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகே உள்ள குட்டநல்லூரில் பிரதமர் மோடிக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் வரவேற்பு கொடுக்கப்படுகிறது. அதன்பிறகு ஸ்வராஜ் ரவுண்டானாவில் இருந்து தொடங்கும் ரோடு ஷோவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். இந்த ரோடு ஷோ நிகழ்ச்சி ஒரு கிலோமீட்டர் தூரம் நடக்கிறது. அதன்பிறகு திருச்சூர் தேங்கக்காடு மைதானத்தில் நடக்கும் மகிளா சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். அந்த நிகழ்ச்சியில் 2 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
அவர்களின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். பிரதமர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா, கிரிக்கெட் வீராங்கனை மின்னுமணி, சமூக ஆர்வலர் உமா பிரேமன், நடிகை சோபனா, விதவைகள் ஓய்வூதியத்தை போராடி பெற்ற 88 வயது மூதாட்டி மரியக்குட்டி உள்ளிட்ட ஏராளமான பெண் பிரபலங்களும் கலந்து கொள்கிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி வருகையால் கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். பிரதமர் வருகையை முன்னிட்டு கேரள மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- கேரள கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அலைகள் ஆக்ரோஷமாக இருக்கும் என்று தேசிய கடல் சார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- லட்சத்தீவு பகுதியில் வருகிற 5-ந்தேதி வரை பலத்த காற்று வீசும் என்பதால் அந்த பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கடந்த மாதம் மழை பெய்தது. இந்த நிலையில் அங்கு 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் (5-ந்தேதி) மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கேரள கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அலைகள் ஆக்ரோஷமாக இருக்கும் என்று தேசிய கடல் சார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு பகுதியில் வருகிற 5-ந்தேதி வரை பலத்த காற்று வீசும் என்பதால் அந்த பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
- பெண்கள் பங்கேற்கும் பிரமாண்ட கூட்டம் நாளை நடத்தப்படுகிறது.
- இது மாநில அளவில் மட்டுமின்றி, தேசிய அளவிலும் முதல் நிகழ்வாக இருக்கும்.
திருவனந்தபுரம்:
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து பா.ஜ.க. சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கேரளாவில் அம்மாநில பா.ஜ.க. சார்பில் 2 லட்சம் பெண்கள் பங்கேற்கும் பிரமாண்ட கூட்டம் நாளை நடத்தப்படுகிறது. திருச்சூர் தேக்கிங்காடு மைதானத்தில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.
'ஸ்ரீ சக்தி சங்கமம்' என்ற தலைப்பில் நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார்.
இதுதொடர்பாக கேரள மாநில பா.ஜ.க. தலைவர் சுரேந்திரன் கூறுகையில், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காக பிரதமர் மோடியை வாழ்த்துவதற்காக ஸ்ரீ சக்தி சங்கமம் என்ற கூட்டம் திருச்சூரில் ஜனவரி 3-ம் தேதி நடத்தப்படுகிறது. இதில் 2 லட்சம் பெண்கள் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார். தென்மாநிலத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும் இவ்வளவு பெரிய பெண்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்ததில்லை. இந்த நிகழ்ச்சி தேசிய அளவில் முதல் நிகழ்வாக இருக்கும் என தெரிவித்தார்.
- மேத்யூ வளர்த்து வந்த மாடுகள் எப்படி இறந்தன? என்பதை கண்டறிய, இறந்து போன மாடுகள் அனைத்தும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.
- மாடுகள் இறந்ததால் மாணவர் மேத்யுவுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் இடுக்கி வெள்ளியமட்டம் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவர் மேத்யூ பென்னி. இவரது தந்தை பென்னி ஏராளமான மாடுகளை வளர்த்து வந்தார். அதனை வைத்து பால் பண்ணை நடத்தி வந்தார்.
இந்நிலையில் பென்னி திடீரென இறந்துவிட்டார். இதனால் தனது தந்தை வளர்த்துவந்த மாடுகளை, மாணவன் மேத்யூ பராமரிக்க வேண்டிய நிலை உருவானது. இதையடுத்து அவர் தனது தந்தையின் பண்ணையில் இருந்த மாடுகள் அனைத்தையும் பராமரித்து பால் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
சிறு வயதில் மாடுகளை சிறப்பாக வளர்த்து வந்ததன் காரணமாக பிரபலமானார். இதன் காரணமாக மாணவன் மேத்யூவுக்கு விருதும் கிடைத்துள்ளது. இந்நிலையில் அவர் வளர்த்து வந்த 22 மாடுகளில் பல மாடுகள் அடுத்தடுத்து சுருண்டுவிழுந்தன. இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்தனர்.
இருந்தபோதிலும் பண்ணையில் இருந்த 13 மாடுகள் அடுத்தடுத்து இறந்தன. இதனைப்பார்த்து மாணவன் மேத்யூ அதிர்ச்சியடைந்தார். தான் வளர்த்து வந்த மாடுகள் இறந்துகிடப்பதை பார்த்த அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மூலமட்டம் அருகே உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
மேத்யூ வளர்த்து வந்த மாடுகள் எப்படி இறந்தன? என்பதை கண்டறிய, இறந்து போன மாடுகள் அனைத்தும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. அப்போது மரவள்ளி கிழங்கு தோல் சாப்பிட்டதே மாடுகள் இறந்ததற்கு காரணம் என்பது தெரியவந்தது.

மாடுகள் சாப்பிட்ட மரவள்ளி கிழங்கு தோலில் ஹைட்ரோசியானிக் அமிலம் கலந்திருந்ததால் அவை இறந்திருக்கின்றன. இறந்தவற்றில் 5 மாடுகள் கறவை மாடுகள் ஆகும். 13 மாடுகள் இறந்ததால் மாணவர் மேத்யுவுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
அவர் மாடுகளுக்கு காப்பீடு எதுவும் செய்யவில்லை என தெரிகிறது. இதனால் அவருக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தான் வளர்த்து வந்த மாடுகள் இறந்தது மாணவரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. இறந்த மாடுகள் அனைத்தும் அங்குள்ள தோட்டத்தில் குழி தோண்டி புகைக்கப்பட்டன.
மற்ற மாடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
- கடந்த 2011-ம் ஆண்டு கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்தது.
- புதிய அணை கட்டுவதற்கான அனுமதியை விரைவு படுத்தக்கோரி கேரள அரசு வலியுறுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லை பெரியாறு அணை. இந்த அணையை தமிழக பொதுப்பணித்துறை பராமரித்து வருகிறது.
126 ஆண்டுகள் பழமையான இந்த அணையின் அதிகபட்ச நீர்மட்ட விவகாரம் தொடர்பாக தமிழகம் மற்றும் கேரள மாநிலத்திற்கு இடையே பிரச்சினை இருந்து வருகிறது. அணையின் கட்டமைப்பு உறுதித்தன்மை மற்றும் அது தொடர்பாக அம்சங்கள் தொடர்பாக இரு மாநிலங்களும் சட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
பாதுகாப்பு காரணங்களுக்காக தற்போதுள்ள அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளாவில் பிரசாரம் செய்யப்பட்டது. இதையடுத்து முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதற்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை தயாராகி வருகிறது. மத்திய நீர் ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை தயாராகிறது. இந்த அறிக்கை மார்ச் மாதத்துக்குள் தயாராகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள அணையில் இருந்து 366 மீட்டர் தொலைவில் புதிய அணையை கட்டுவதற்காக வடிவமைப்பை பொறியியல் வல்லுனர்கள் சமீபத்தில் நிறைவு செய்துள்ளனர். கடந்த 2011-ம் ஆண்டு கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்தது.
அதன்பிறகு மத்திய நீர் ஆணையம் புதிய அணை கட்டுவதற்கான தொடர் வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியது. கடந்த திட்ட அறிக்கையில் குறிப்பிட்டதை விட அனைத்தின் விலைகளும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் புதிய அணை கட்டுவதற்கான அனுமதியை விரைவு படுத்தக்கோரி கேரள அரசு வலியுறுத்தி உள்ளது. இதற்காக மத்திய நீர் ஆணையத்தை கேரள மாநில அரசு கடந்த வாரம் அணுகியது. அப்போது புதிய அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க விரும்புவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
- ஓட்டல்கள், ரிசார்ட்டுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டின.
- கவர்னர் மற்றும் மாநில அரசுக்கு இடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.
திருவனந்தபுரம்:
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் அனைத்து மாநிலங்களிலும் நேற்று இரவு களை கட்டியது. கேரள மாநிலத்திலும் பல இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலா கலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
கேரளாவில் கோவளம் மற்றும் கோழிக்கோடு கடற்கரைகளில் நள்ளிரவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆயரக்கணக்கானோர் திரண்டனர். அவர்கள் ஆடிப்பாடி புத்தாண்டை வரவேற்றனர். இதேபோன்று ஏராளமான ஓட்டல்கள், ரிசார்ட்டுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டின.
கண்ணூரில் உள்ள பையம்பலம் கடற்கரையிலும் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அந்த கடற்கரையில் இநதிய மாணவர் கூட்டமைப்பு சார்பில் கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமதுகானின் 30 அடி உயர உருவபொம்மை வைக்கப்பட்டிருந்தது.
மிகவும் பிரம்மாண்டமாக இருந்த அந்த உருவ பொம்மையை, புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இந்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் தீவைத்து எரித்தனர். கேரளாவில் கவர்னர் மற்றும் மாநில அரசுக்கு இடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதனால் கவர்னருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் இந்திய மாணவர் கூட்டமைப்பினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கவர்னரின் பிரம்மாண்ட உருவபொம்மை எரிக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு பணிக்காக கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
- பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தேவசம்போர்டு செய்திருக்கிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஒவ்வெரு ஆண்டும் மண்டல மறறும் மகரவிளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டு மண்டல பூஜை கடந்த 27-ந்தேதி முடிவடைந்து கோவில் நடை சாத்தப்பட்டது.
மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 30-ந்தேதி அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்காக பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மண்டல பூஜை காலத்தில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்ததால் பல நாட்கள் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அதே போன்று மகரவிளக்கு பூஜை காலத்தில் நெரிசல் ஏற்படாமல் இருக்க பல்வேறு முன்னேற்பாடுகளை தேவசம்போர்டு செய்திருக்கிறது. அதன்படி பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
நிலக்கல், பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு பணிக்காக கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்கள் பக்தர்களை சன்னிதானத்துக்கு செல்ல ஒழுங்குபடுத்தி அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் திரண்டனர். இதற்காக நேற்று முதலே பக்தர்கள் அதிகளவில் வரத் தொடங்கினர். இதனால் இன்று பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும்ம பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.
பலமணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி சரிதனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தேவசம்போர்டு செய்திருக்கிறது.
- மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலையில் நடைதிறப்பு.
- நேற்று களபாபிஷேக ஊர்வலம் நடைபெற்றது.
மகரவிளக்கு பூஜையையொட்டி நேற்று முன்தினம் சபரிமலையில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.நேற்று சன்னிதானம் பகுதியில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் களபாபிஷேக ஊர்வலம் நடைபெற்றது.
- மம்முட்டியின் ரசிகர்கள் உள்பட பலரும் சனோஜூக்கு கண்டனம் தெரிவித்தனர்.
- தான் அன்றைய தினம் மது போதையில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் வரும் புத்தாண்டில் நிகழ வேண்டிய மாற்றங்கள் என்ற தலைப்பில் ஒரு யூடியூப் சேனல் நிகழ்ச்சி நடத்தியது. இதில் பங்கேற்ற சனோஜ் என்பவர், நடிகர் மம்முட்டி இறக்க வேண்டும் என்று பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. மம்முட்டியின் ரசிகர்கள் உள்பட பலரும் சனோஜூக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு சனோஜ் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தான் அன்றைய தினம் மது போதையில் இருந்ததாக தெரிவித்துள்ளார். தான் 2 நாட்களாக தூங்கவில்லை என்றும், தனது செயலுக்காக மம்முட்டி, அவரது மகன் மற்றும் குடும்பத்தினர், பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
- சாமிக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
- 20-ந்தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள்.
சபரிமலை:
2023-2024-ம் ஆண்டுக்கான மண்டல-மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் முதல் வழக்கமான பூஜை வழிபாடு நடைபெற்று வந்த நிலையில் 41 நாட்கள் பூஜையின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. அன்றைய தினம் இரவே நடையும் அடைக்கப்பட்டது. இந்த மண்டல சீசனில் 33 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
சில நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம் சபரிமலையில் அலைமோதியது. அந்த சமயத்தில் பக்தர்கள் 15 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பி.என்.மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.
நடை திறப்பையொட்டி நேற்று பிற்பகல் 2 மணிக்கு பின்னரே பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு மலையேற அனுமதிக்கப்பட்டனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். பிறகு வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகம் நடைபெறும். மதியம் 12.30 மணிக்கு உச்ச பூஜைக்கு பிறகு 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.
பின்னர் மாலை 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும், அதனைத்தொடர்ந்து இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
வருகிற 15-ந்தேதி அதிகாலை 2.46 மணிக்கு மகர சங்கிரம பூஜை நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு ஐயப்ப சாமிக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனையும், தொடர்ந்து மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது.
அதேபோல் 15-ந்தேதி முதல் 18-ந் தேதி வரை மாளிகப்புரத்தம்மன் கோவிலில் இருந்து 18-ம் படி வரை இரவில் அய்யப்ப சாமி ஊர்வலமும், 19-ந் தேதி அன்று சரம் குத்தி வரை சாமி ஊர்வலமும் நடக்கும். இந்த சீசனில் 20-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள்.
ஏற்கனவே 15-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனத்திற்கான முன்பதிவு முடிவடைந்து விட்டது. அந்த வகையில் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அதே சமயத்தில் உடனடி பதிவு மூலம் தினமும் 15 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட உள்ளனர்.
- பிளாஸ்டிக் பாட்டில்களில் பெட்ரோல், டீசல் கொடுக்கக்கூடாது என அரசு உத்தரவு உள்ளது.
- இரவு திறக்கமாட்டோம் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் உள்ள பெட்ரோல் பம்புகளில் யாருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களில் பெட்ரோல், டீசல் கொடுக்கக்கூடாது என அரசு உத்தரவு உள்ளது. இதனை செயல்படுத்தும் போது இரவு நேரங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களுடன் எரிபொருள் கேட்டு வருபவர்களுக்கும், பெட்ரோல் பங்க் நிறுவனத்தினருக்கும், ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்த விஷயத்தில் சில நேரம் ஊழியர்கள் தாக்கப்படுவதாகவும் இதற்கு அரசு தீர்வு காண வேண்டும் பெட்ரோலிய வர்த்தகர்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் அரசு இது குறித்து எந்த முடிவும் எடுக்காததை கண்டித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக கூட்டமைப்பு அறிவித்தது.
அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணி முதல் நாளை (1-ந்தேதி) காலை 6 மணி வரை கேரளாவில் உள்ள அனைத்து பெட்ரோல் பம்புகளும் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குண்டர்களால், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தாக்கப்படும் சம்பவத்தில் அரசு அலட்சியம் காட்டி வருவதாகவும், இந்த அவலத்திற்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.
இந்த விஷயம் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக மார்ச் மாதம் 10-ந்தேதி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பெட்ரோல் பம்புகள் செயல்படும். இரவு திறக்கமாட்டோம் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இன்று பெட்ரோல் பங்குகள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், கேரள மாநில சாலை போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 14 யாத்ரா எரிபொருள் விற்பனை நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையங்கள் கிழக்கு கோட்டை, விகாஸ்பவன், கிளமானூர், சடையமங்கலம், பொன்குன்னம், சேர்த்தலா, மாவேலிக்கரா, மூணாறு, மூவாட்டுபுழா, பரவூர், சாலக்குடி, திருச்சூர், குரு வாயூர், கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் செயல்படுகின்றன.






