என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முல்லை பெரியாறு"

    • பெரியாறு அணையில் 23.6, தேக்கடியில் 25.8 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.
    • மழை பெய்து வருவதால் வறண்டு கிடந்த மூலவைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

    தென்மேற்கு பருவமழை கேரளாவில் முன்கூட்டியே தொடங்கியதால் அணையின் நீர்மட்டம் 136 அடிவரை உயர்ந்தது. அதனை தொடர்ந்து மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டமும் படிப்படியாக குறைந்து இன்று காலை 129.95 அடியாக உள்ளது. இருந்த போதும் அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1867 கனஅடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் முல்லை பெரியாற்றின் கரை பகுதியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 105 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதனால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில், மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    சீரமைப்பு பணிகள் முடிந்த பின்னர் மாலையில் மீண்டும் அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1867 கனஅடி நீர் திறக்கப்பட்டது. அணைக்கு நீர்வரத்து 1858 கனஅடியாக அதிகரித்துள்ளது.

    பெரியாறு அணையில் 23.6, தேக்கடியில் 25.8 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது. கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் லோயர்கேம்ப், பெரியாறு நீர்மின் உற்பத்தி நிலையத்தில் மீண்டும் 4 ஜெனரேட்டர்கள் மூலம் முழு அளவான 168 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.

    தொடர் மழை காரணமாக கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.

    இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் சுருளி அருவிக்கு வந்தனர். ஆனால் தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி மற்றும் வருசநாடு பகுதியில் உள்ள மேகமலை அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் நீர் வரத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    மழை பெய்து வருவதால் வறண்டு கிடந்த மூலவைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    • விவசாய குளங்கள், கண்மாய்கள், நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாய பணிகளும் விறுவிறுப்படைந்துள்ளது.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 89.21 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் முக்கிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    மாவட்டத்தில் கோடை வெயில் தீவிரமாக வறுத்தெடுத்து வந்த நிலையில் நேற்று 4வது நாளாக பல இடங்களில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. பகலில் வெயில் வாட்டி வந்த நிலையில் மாலை தொடங்கி நள்ளிரவு வரை மழை நீடித்ததால் வெப்பத்தின் தாக்கம் அடியோடு குறைந்தது.

    மேலும் விவசாய குளங்கள், கண்மாய்கள், நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாய பணிகளும் விறுவிறுப்படைந்துள்ளது.

    கனமழை காரணமாக 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 56.69 அடியாக உள்ளது. வரத்து 504 கன அடியாக உள்ள நிலையில் மதுரை மாவட்ட குடிநீர் தேவைக்காக 72 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 3000 மி.கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 113.70 அடியாக உள்ளது. கடந்த சில நாட்களாக தண்ணீரே வராத நிலையில் தற்போது அணைக்கு 493 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 105 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1509 மி.கன அடியாக உள்ளது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 89.21 அடியாக உள்ளது. வரத்து 32.74 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 48.33 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 33 அடி. வரத்து 115 கன அடி. சண்முகாநதியின் நீர்மட்டம் 35.30 அடி. வரத்து 14 கன அடி. இருப்பு 33.76 மி.கன அடி.

    போடி மற்றும் சுற்றுப்புற பகுதியில் கனமழை பெய்ததால் கொட்டக்குடி அணைப்பிள்ளையார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாகும். இதே போல் மூல வைகை ஆற்றுப்பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கும்பக்கரை அருவியில் வட்டக்கானல், வெள்ளகவி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கடந்த 3 நாட்களாக அங்கு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை முதல் தண்ணீர் வரத்து சீரானதால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ஆண்டிபட்டி 29.6, அரண்மனைபுதூர் 50.4, வீரபாண்டி 28.2, பெரியகுளம் 50.2, மஞ்சளாறு 13, சோத்துப்பாறை 25.2, வைகை அணை 6.2, போடி 17, உத்தமபாளையம் 46.3, கூடலூர் 21.6, பெரியாறு 3.2, தேக்கடி 15, சண்முகாநதி 57.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 32.05 அடியாக உள்ளது.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 70.39 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மழைப்பொழிவு இல்லாமல் இருந்தது. மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்ததால் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்று விட்டது.

    இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இதேபோல் தேனி மாவட்டத்திலும் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. மேலும் வருசநாடு, பெரியகுளம், முருகமலை, தேவதானப்பட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அடிக்கடி காட்டுத்தீ பற்றி எரிந்து அரிய வகை மூலிகைகள், மரங்கள் எரிந்து நாசமானது.

    காட்டுத்தீயை அணைக்க வனத்துறையினர் போராடினர். இருந்தபோதும் தொடர்ந்து பற்றி எரிந்ததால் விவசாயிகள் அச்சம் அடைந்தனர். இந்த நிலையில் தற்போது பெய்துள்ள மழையால் காட்டுத்தீ முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வனப்பகுதியில் ஈரப்பதம் காணப்படுகிறது. இதனால் வன விலங்குகள் வெளியேறும் அபாயம் நீங்கி உள்ளது.

    நீர் வரத்தின்றி காணப்பட்ட முல்லைப்பெரியாறு அணைக்கு 54 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 322 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 114.10 அடியாக உள்ளது. 1576 மி.கன அடி. நீர் இருப்பு உள்ளது.

    இதேபோல் வைகை அணைக்கும் நீர்வரத்து தொடங்கி உள்ளது. இன்று காலை 177 கன அடி நீர் வந்த நிலையில் மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 422 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3531 மி.கன அடி. நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 32.05 அடியாக உள்ளது. 5 கன அடி நீர் வருகிறது. 45 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 70.39 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 30.70 அடியாக உள்ளது. வரத்து 11 கன அடி. திறப்பு இல்லை.

    ஆண்டிபட்டி 4.8, வீரபாண்டி 4.6, பெரியகுளம் 12, மஞ்சளாறு 7, சோத்துப்பாறை 9, வைைக அணை 8.2, போடி 2.8, உத்தமபாளையம் 5.6, கூடலூர் 2.6, பெரியாறு அணை 1.2, தேக்கடி 11.8, சண்முகாநதி 6.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • கடந்த 2011-ம் ஆண்டு கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்தது.
    • புதிய அணை கட்டுவதற்கான அனுமதியை விரைவு படுத்தக்கோரி கேரள அரசு வலியுறுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லை பெரியாறு அணை. இந்த அணையை தமிழக பொதுப்பணித்துறை பராமரித்து வருகிறது.

    126 ஆண்டுகள் பழமையான இந்த அணையின் அதிகபட்ச நீர்மட்ட விவகாரம் தொடர்பாக தமிழகம் மற்றும் கேரள மாநிலத்திற்கு இடையே பிரச்சினை இருந்து வருகிறது. அணையின் கட்டமைப்பு உறுதித்தன்மை மற்றும் அது தொடர்பாக அம்சங்கள் தொடர்பாக இரு மாநிலங்களும் சட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    பாதுகாப்பு காரணங்களுக்காக தற்போதுள்ள அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளாவில் பிரசாரம் செய்யப்பட்டது. இதையடுத்து முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதற்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை தயாராகி வருகிறது. மத்திய நீர் ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை தயாராகிறது. இந்த அறிக்கை மார்ச் மாதத்துக்குள் தயாராகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போதுள்ள அணையில் இருந்து 366 மீட்டர் தொலைவில் புதிய அணையை கட்டுவதற்காக வடிவமைப்பை பொறியியல் வல்லுனர்கள் சமீபத்தில் நிறைவு செய்துள்ளனர். கடந்த 2011-ம் ஆண்டு கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்தது.

    அதன்பிறகு மத்திய நீர் ஆணையம் புதிய அணை கட்டுவதற்கான தொடர் வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியது. கடந்த திட்ட அறிக்கையில் குறிப்பிட்டதை விட அனைத்தின் விலைகளும் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் புதிய அணை கட்டுவதற்கான அனுமதியை விரைவு படுத்தக்கோரி கேரள அரசு வலியுறுத்தி உள்ளது. இதற்காக மத்திய நீர் ஆணையத்தை கேரள மாநில அரசு கடந்த வாரம் அணுகியது. அப்போது புதிய அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க விரும்புவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

    • முல்லைபெரியாறு விவகாரம் குறித்து நீதிமன்ற உத்தரவுப்படி பேச்சு வார்த்தை நடத்துவோம்.
    • இந்தியா கூட்டணி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

    வேலூர்:

    "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற தமிழ்நாடு அரசின் புதிய திட்டத்தின் கீழ் காட்பாடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இன்று ஆய்வு செய்தார்.

    முல்லைபெரியாறு விவகாரம் குறித்து நீதிமன்ற உத்தரவுப்படி பேச்சு வார்த்தை நடத்துவோம். நாங்களும் கேரளா அரசு உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்.


    மேகதாது அணை விவகாரத்தில் இன்னும் ஆய்வு மேற்கொள்வது குறித்து கேட்டதற்க்கு, அவர்கள் எதை செய்தாலும் சரி, ஆய்வு பண்ணாலும் சரி படம் வரைந்தாலும் சரி, செய்து போட்டோ எடுத்து போட்டாலும் சரி, டி.பி.ஆர் தயாரிக்கும் ரிப்போர்ட்டுக்கு தமிழ்நாடு அரசின் ஒப்புதல் வேண்டும், இரண்டாவது மத்திய அரசு ஒப்புதல் கொடுக்க வேண்டும், நாம் அதை ஒத்துக் கொள்ள வேண்டும் ஒத்துக் கொள்ளும் வரை அது நடக்காது.

    வெள்ள பாதிப்பில் இன்னும் நிதி வரவில்லை கேட்டிருக்கிறோம்.


    "உங்களை தேடி உங்கள் ஊரில்" திட்டத்தை இப்பதான் தொடங்கி கல்யாணம் பண்ணி இருக்கோம் அதுக்குள்ள குழந்தையை பற்றி கேட்டால் எப்படி தெரியும். எங்களிடம் திட்டங்கள் எந்த அளவுக்கு பயன் தந்துள்ளது என்பது மக்களுக்கு தெரியும்.

    இந்தியா கூட்டணியில் நிதிஷ்குமார் விலகியது ஒரு திருவிளையாடல் தான். இது மாதிரி திடீர் திடீர் செய்திகள் வரும் இதெல்லாம் எதிர்பார்த்துதான் கூட்டணி அமைக்கிறோம். எதிர்பார்த்துதான் தேர்தலை சந்திக்கிறோம். இதெல்லாம் எங்களுக்கு புதுசு அல்ல. எங்களுக்கு இது பழசு தான்.

    தி.மு.க கூட்டணி பேச்சு வார்த்தையை நாங்கள் இன்னும் ஆரம்பிக்கவில்லை. தமிழ்நாட்டில் காங்கிரஸ் மட்டும் தான் தற்போதைக்கு பேசிவிட்டு செல்கின்றார்கள்.

    சோசியல் மீடியாவில் தவறாக பரவும் தகவலை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அரசியல் கட்சிகள் நிலைபாடு மாறிக்கொண்டே இருக்கும். என்றைக்கோ பேசியதை இன்றைக்கு பரப்பக்கூடியது என்பது ஆண்மை இல்லாத தனம்.

    இந்தியா கூட்டணி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தற்போதைக்கு வருவார்கள் போவார்கள் கூட்டணி இறுதி ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆய்வுக்கு அனுமதி அளித்ததற்கு ஆட்சேபம் தெரிவித்து பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். #MullaperiyarDam #EdappadiPalaniswami #Modi
    சென்னை:

    முல்லை பெரியாறில் தற்போதுள்ள அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டும் முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. கேரளாவின் கோரிக்கையை ஏற்று புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த கேரளாவுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்து உள்ளது. புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை 7 நிபந்தனைகளுடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

    புதிய அணை கட்ட தமிழ்நாட்டில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதிய அணை கட்ட ஆய்வு மேற்கொள்ளும் முயற்சியை எதிர்த்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.



    இந்நிலையில், முல்லைபெரியாறு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். அதில், முல்லைப்பெரியாறு அருகே புதிய அணை கட்டுவது தொடர்பான ஆய்வறிக்கை தயாரிக்க கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்ததற்கு அதிருப்தி தெரிவித்துள்ளார்.

    சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் இந்த முடிவு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகும். எனவே, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சக அனுமதியை வாபஸ் பெற வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு, கேரள அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.  #MullaperiyarDam #MullaperiyarStudy #EdappadiPalaniswami #Modi
    முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட ஆய்வு மேற்கொள்ளும் கேரள அரசின் முயற்சியை எதிர்த்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. #Mullaperiyardam #TNGovernment
    புதுடெல்லி:

    கேரள மாநிலம் தேக்கடியில் அமைந்துள்ள 123 ஆண்டுகளாக முல்லை பெரியாறு அணையை தமிழக அரசு பராமரித்து வருகிறது.



    கேரள மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக முல்லை பெரியாறில் தற்போதுள்ள அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டும் முயற்சியை அம்மாநில அரசு எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை 7 நிபந்தனைகளுடன் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

    புதிய அணை கட்ட தமிழ்நாட்டில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அதே சமயம் மத்திய அரசு விதித்த நிபந்தனைகளில் முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை தொடங்க தமிழக அரசின் அனுமதி கட்டாயம் என்னும், சுற்றுச்சூழல் அறிக்கையை சமர்ப்பிக்கவும் தெரிவித்து உள்ளது.

    இந்த நிலையில் புதிய அணை கட்ட ஆய்வு மேற்கொள்ளும் முயற்சியை எதிர்த்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2014-ம் ஆண்டு மே 7-ந் தேதி பிறப்பித்த உத்தரவு இத்தகைய புதிய அணை திட்ட ஆய்வுக்கு எதிரானவை. எனவே மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் மீது சுப்ரீம் கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடரப்படும்” என்றார். #Mullaperiyardam #TNGovernment

    ×