என் மலர்
இந்தியா

திருச்சூரில் இன்று 2 லட்சம் பெண்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி
- கேரள மாநில பாரதிய ஜனதா கட்சி சார்பில் 2 லட்சம் பெண்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது.
- நிகழ்ச்சியில் 2 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
திருவனந்தபுரம்:
பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனையடுத்து பல மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கேரள மாநில பாரதிய ஜனதா கட்சி சார்பில் 2 லட்சம் பெண்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும், அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார் எனவும் கேரள மாநில பாரதிய ஜனதா தலைவர் சுரேந்திரன் கடந்த மாதம் தெரிவித்தார்.
அதன்படி மகளிர் சங்கமம் நிகழ்ச்சி கேரள மாநிலம் திருச்சூர் தேக்கங்காடு மைதானத்தில் இன்று (புதன்கிழமை) மாலை நடக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளா வருகிறார். அவர் லட்சத்தீவில் இருந்து திருச்சூருக்கு இன்று பிற்பகல் 3 மணிக்கு வருகிறார்.
அங்கு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகே உள்ள குட்டநல்லூரில் பிரதமர் மோடிக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் வரவேற்பு கொடுக்கப்படுகிறது. அதன்பிறகு ஸ்வராஜ் ரவுண்டானாவில் இருந்து தொடங்கும் ரோடு ஷோவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். இந்த ரோடு ஷோ நிகழ்ச்சி ஒரு கிலோமீட்டர் தூரம் நடக்கிறது. அதன்பிறகு திருச்சூர் தேங்கக்காடு மைதானத்தில் நடக்கும் மகிளா சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். அந்த நிகழ்ச்சியில் 2 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
அவர்களின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். பிரதமர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா, கிரிக்கெட் வீராங்கனை மின்னுமணி, சமூக ஆர்வலர் உமா பிரேமன், நடிகை சோபனா, விதவைகள் ஓய்வூதியத்தை போராடி பெற்ற 88 வயது மூதாட்டி மரியக்குட்டி உள்ளிட்ட ஏராளமான பெண் பிரபலங்களும் கலந்து கொள்கிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி வருகையால் கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். பிரதமர் வருகையை முன்னிட்டு கேரள மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.






