என் மலர்tooltip icon

    கேரளா

    • இந்தியா, பிரேசில், கம்போடியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த திருநங்கைகள் கலந்துகொண்டனர்.
    • மிஸ் யுனிவர்ஸ் டிரான்ஸ் பட்டம் வென்ற திருநங்கை தீர்த்தா பல்வேறு சோதனைகளை கடந்து இந்த சாதனையை படைத்திருக்கிறார்.

    திருவனந்தபுரம்:

    திருநங்கைகளுக்கான மிஸ் யுனிவர்ஸ் டிரான்ஸ்-2023 போட்டி டெல்லியில் நடந்தது. இதில் இந்தியா, பிரேசில், கம்போடியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த திருநங்கைகள் கலந்துகொண்டனர்.

    27 வயதான கேரள மாநிலம் எர்ணாகுளம் தெற்கு பரவூரை சேர்ந்த திருநங்கை தீர்த்தா என்பவரும் பங்கேற்றார். போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பொது அறிவு, நடத்தை மற்றும் திட்டங்கள் தயாரிக்கும் திறன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக போட்டிகள் நடத்தப்பட்டது.

    போட்டி மொத்தம் 4 நாட்கள் நடைபெற்றது. இறுதியில் அந்த போட்டியில் கேரள திருநங்கை தீர்த்தா வெற்றி பெற்று கர்வி மிஸ் யுனிவர்ஸ் டிரான்ஸ் பட்டத்தை வென்றார். அவருக்கு சக போட்டியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    மிஸ் யுனிவர்ஸ் டிரான்ஸ் பட்டம் வென்ற திருநங்கை தீர்த்தா பல்வேறு சோதனைகளை கடந்து இந்த சாதனையை படைத்திருக்கிறார். திருநங்கை என்பதால் அவர் பள்ளி நாட்களில் பல்வேறு கேலிகளை சந்தித்துள்ளார். 

    பள்ளி வாழ்க்கையை போன்று கல்லூரியில் என்ஜினீயரிங் படித்த போதும் பல கசப்பான அனுபவங்களை அனுபவித்து இருக்கிறார். அதன் மத்தியில் படித்து என்ஜினீயரிங் பட்டம் பெற்றார். கடைசியாக தனது தோழிகள் சிலருடன் குடியேறினார்.

    அவர்களின் மூலமாகவே மெட்ரோவில் தீர்த்தாவுக்கு வேலை கிடைத்தது. 2020-ல் தான் பாலியல் அறுவை சிகிச்சை அவருக்கு முழுமையான முடிந்திருக்கிறது. தன்னை கேலி பேசியவர்கள் மத்தியில் வெற்றி பெற்றவராக திகழ வேண்டும் என்பதை தீர்த்தா தனது நோக்கமாக கொண்டு அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அதுவே தன்னை திருநங்கைகளுக்கான மிஸ் யுனிவர்ஸ் டிரான்ஸ் போட்டியில் பட்டத்தை வெல்ல செய்திருக்கிறது என்று தீர்த்தா தெரிவித்திருக்கிறார். தனக்கு சினிமாவில் நடிப்பது, தனது வாழ்க்கை அனுபவங்களை ஆங்கிலத்தில் விவரிக்கும் புத்தகம் எழுதுவது என்ற இரு கனவுகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

    • வியாபாரிகள், விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.
    • அனைத்து வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் மூடப்படும்.

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் நிலம் வைத்துள்ளனர். கடந்த 1953, 1959-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலப்பதிவு சட்டத்தினால் அவர்கள் இந்த நிலத்திற்கான பட்டாவை வைத்து வங்கியில் கடன் பெற முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.

    இதனால் நிலப்பதிவு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வியாபாரிகள், விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.

    இதனைத் தொடர்ந்து மாநில அரசு இடுக்கி மாவட்டத்தில் 1953, 1959-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலப்பதிவு சட்டத்தில் திருத்தம் செய்து அந்த மசோதாவை கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கானின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் கவர்னர் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்துள்ளார். கவர்னரின் செயலை கண்டித்து மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு, இந்திய கம்யூனிஸ்ட்டு கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை (9ந் தேதி) இடுக்கி மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    போராட்டத்தின் போது அனைத்து வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் மூடப்படும். வாகன போக்குவரத்தும் நிறுத்தப்படும். ஆனால் ஐயப்பபக்தர்கள் வாகனங்கள், ஆம்புலன்ஸ், பால் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்களுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாரும் உள்ளனர்.
    • தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள், சபரிமலைக்கு செல்வதில் உள்ள சிரமங்களை பார்த்துவிட்டு பாதியிலேயே திரும்புகிறார்கள்.

    கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது சபரிமலை ஐயப்பன் கோவில். பத்தினம்திட்டா மாவட்டத்தில் கடுமையான வனப்பகுதிக்கு நடுவே, கடல் மட்டத்தை ஒப்பிடுகையில் 914 மீட்டர் உயரத்தில் மலைக்கு உச்சியில் இருக்கிறது சபரி மலை ஐயப்பன் கோவில்.

    இந்த கோவிலுக்கு கேரள மாநிலம் மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழகத்திலிருந்து பல லட்சம் பக்தர்கள் ஆண்டுதோறும் மாலை அணிந்து 48 அல்லது 60 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்கிறார்கள்.

    ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். அதேபோல் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதத்தில் தொடர்ச்சியாக பல நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும். இதனால் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருவது வழக்கம்.

    சபரிமலைக்கு ஒவ்வொரு ஆண்டும் கன்னி சாமியாக (முதன்முறை) ஏராளமானோர் வருகிறார்கள். அது மட்டுமின்றி ஒரு முறை இங்கு வருவார்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ச்சியாக வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தபடியே உள்ளது. இதன் காரணமாக மண்டல மற்றும் மகர விளக்கு சீசனில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கும்.

    பக்தர்கள் வருகைக்கு தகுந்தாற்போல் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி அனுப்புவார்கள். இருந்த போதிலும் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் பல மணி நேரம் காத்திருப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இருந்தபோதிலும் அந்த காத்திருப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு வரை பக்தர்களுக்கு பெரிய சிரமமாக தெரிந்ததில்லை.


    ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே சபரி மலைக்கு செல்லும் பக்தர்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியே சாமி தரிசனம் செய்ய முடிகிறது என்ற கருத்து பரவலாக இருந்து வருகிறது. அதிலும் இந்த ஆண்டு நடந்து வரும் மண்டல மற்றும் மகர விளக்கு சீசனில் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

    கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலம் மட்டுமின்றி மாதாந்திர பூஜை நடக்கக்கூடிய நேரத்திலும் இந்த ஆன்லைன் முன்பதிவு முறையே கடந்த சில ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    ஆன்லைன் முன்பதிவின்படி ஒரு நாளைக்கு 80 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் பக்தர்கள் வசதிக்காக உடனடி முன்பதிவு முறையும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆண்டுதோறும் சபரிமலைக்கு வந்து அய்யப்பனை தரிசிக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு ஐயப்ப பக்தரின் விருப்பமாக இருக்கும். இதனால் அய்யப்ப பக்தர்கள் எந்த கட்டுப்பாட்டுக்கும் அஞ்சுவதும் இல்லை, அதனை கடைபிடிக்க தவறுவதும் இல்லை. அதன்படியே ஆன்லைனில் பக்தர்கள் முன்பதிவு செய்து சபரிமலைக்கு வந்தபடி உள்ளனர். இந்நிலையில் தான் நடப்பு ஆண்டு மண்டல பூஜை சீசனில் பக்தர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். ஆன்லைன் முன்பதிவில் ஆயிரக்கணக்கானோர் பதிவு செய்திருந்த நிலையில், உடனடி முன்பதிவு முறையிலும் ஆயிரக்கணக்கானவர்கள் பதிவு செய்து சபரிமலைக்கு வந்தனர். இதனால் பக்தர்கள் வருகை பல மடங்கு அதிகரித்தது. பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பம்பையிலேயே பக்தர்கள் பல மணி நேரம் தடுத்து நிறுத்தி சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    அதுமட்டுமின்றி பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு செல்லக்கூடிய மலைப்பாதையிலும் கூட பக்தர்கள் ஆங்காங்கே பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டார்கள். இதன் காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 15 மணி நேரத்திற்கு மேல் ஆகியது. இந்த காலதாமதம் சபரிமலைக்கு வந்த அனைத்து பக்தர்களையும் சிரமம் அடையச் செய்தது. அதிலும் வயதான பக்தர்கள் மற்றும் சிறுவர்-சிறுமிகள் கூட்ட நெரிசலில் சிக்கி மிகவும் கஷ்டப்பட்டனர்.

    இதனை கண்ட கேரள ஐகோர்ட்டு நேரடியாக தலையிட்டு சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர உத்தரவிட்டது. மேலும் நெரிசலை தவிர்க்க பல்வேறு வழிமுறைகளையும் ஐகோர்ட் கூறியது. அதனை தேவசம்போர்டு மற்றும் காவல்துறை கடைபிடித்த போதிலும் சபரிமலையில் கூட்ட நெரிசலை தடுக்க முடியவில்லை. மண்டல பூஜை காலத்தில் ஏற்பட்டது போன்று மகர விளக்கு பூஜை காலத்தில் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா அரசு தெரிவித்தது. ஆனால் மகர விளக்கு பூஜை காலத்திலும் அதே நிலை தான் நிலவி வருகிறது.

    தங்களது கஷ்டங்களை போக்கி அருள் புரிய வேண்டும் என்று ஐயப்பனை வேண்டுவதற்காக வரக்கூடிய பக்தர்கள், சாமியை தரிசிக்கவே கடுமையான கஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். பம்பை, சன்னிதானம் மற்றும் பதினெட்டாம்படி என அனைத்து இடங்களிலும் நெரிசலில் சிக்கியே பக்தர்கள் சாமியை தரிசிக்க முடிகிறது. இதன் காரணமாக குழந்தைகளுடன் வந்த ஐயப்ப பக்தர்கள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுவிட்டனர்.

    பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாரும் உள்ளனர். இதன் காரணமாக பதினெட்டாம் படி மற்றும் சன்னிதானத்தில் பக்தர்களை வேகவேகமாக இழுத்து அனுப்புகிறார்கள். அப்படிப்பட்ட நேரத்தில் சில பக்தரக்ள் கீழே விழுந்து காயமடைகிறார்கள். அந்த நேரத்தில் எதிர்ப்பு தெரிவித்த ஐயப்ப பக்தர்கள் சிலரை போலீசார் தாக்கிய சம்பவங்களும் கடந்த சில நாட்களாக அரங்கேறி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பக்தர்கள் சிலர் பதினெட்டாம்படி பகுதியில் போலீசாரால் தாக்கப்பட்ட நிலையில், பெங்களூருவை சேர்ந்த பக்தர் ஒருவர் நேற்று தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


    பக்தர்கள் என்று கூட சிந்திக்காமல் போலீசார் அத்துமீறி வருவதாக குற்றம் சாட்டுகின்றனர். இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் ஐயப்ப பக்தர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பம்பை வரை வந்துவிட்டு, சபரிமலைக்கு செல்லாமல் தங்களது ஊருக்கே திரும்பி செல்கிறார்கள்.

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள், சபரிமலைக்கு செல்வதில் உள்ள சிரமங்களை பார்த்துவிட்டு பாதியிலேயே திரும்புகிறார்கள். அவர்கள் பம்பையில் இரு ந்தே மன துக்குள் ஐயப்பனை நினைத்து வணங்கி விட்டு, தங்களது ஊருக்கு கண்ணீருடன் திரும்புவதை காண முடிகிறது. அவ்வாறு சபரிமலைக்கு செல்லாமல் திரும்பக்கூடிய தமிழக பக்தர்கள், வேறு இடங்களில் உள்ள ஐயப்பன் கோவில்களுக்கு சென்று நெய்யபிஷேகம் செய்கிறார்கள்.

    48 மற்றும் 60 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பனை காண வந்தால், அது அது நடக்கவில்லை என்று அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். தேனி மாவட்டம் போடியில் இருந்து வந்திருந்த ஐயப்ப பக்தர் ஒருவர் கூறும்போது, நான் 40 ஆண்டுகளாக சபரிமலைக்கு வருகிறேன். ஆனால் இதுவரை இதுபோன்ற சிரமத்தை நான் சந்திக்கவில்லை. எந்த ஒரு ஐயப்ப பக்தனும் இதுபோன்ற சிரமத்தை சந்திக்கக் கூடாது என்று கூறிவிட்டு கண்ணீர் விட்டு அழுதார்.

    சபரிமலையில் சந்தித்த சிரமங்கள் குறித்து தமிழகத்தை சேர்ந்த சில ஐயப்ப பக்தர்கள் கூறியதாவது:- ஒரு மண்டலம் விரதம் இருந்து சபரிமலைக்கு வரக்கூடிய ஐயப்ப பக்தர்கள் பல இன்னல்களை சந்திக்க வேண்டி உள்ளது. குழந்தைகளுடன் வருபவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படுவதை பார்த்தால் கண்ணீர் வருகிறது. போலீசாரிடம் அத்துமீறல் குறித்து கேட்டால் ஏன் இங்கு வருகிறீர்கள் என்று கேட்டு தாக்குகிறார்கள். சபரிமலையில் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமங்களை போக்க மத்திய அரசு நேரடியாக தலையிட வேண்டும். வரும் காலங்களில் இது போன்று நடப்பதை தடுக்க கட்டாயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பது தெரிந்தும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை கேரள அரசு, தேவசம்போர்டு மற்றும் போலீசார் எடுக்காததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சீசன் தொடங்குவதற்கு முன்பு ஆலோசனை கூட்டங்கள் நடத்தியும், அதனை நிறை வேற்ற முடியாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசனில் பக்தர்கள் வருகை மூலம் கேரளா அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் வருமானமாக கிடைக்கிறது. ஆனால் பக்தர்கள் சிரமப்படாமல் வந்து செல்லவும், கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்யவும் எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்பதை சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. 

    • மாணவர் ரவுல் ஜானை அமெரிக்க மாணவர்கள் தொடர்பு கொள்கிறார்கள்.
    • மாணவர் ரவுல்ஜானின் இந்த படைப்பு அவர் தொடங்கிய யூ-டியூப் சேனலின் மூலமாக தெரிய தொடங்கியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சியில் உள்ள எடப்பள்ளி அமர்தநகரை சேர்ந்த தம்பதி அஜூ ஜோசப்-ஷெபா ஆன். இவர்களது மகன் ரவுல் ஜான். எடப்பள்ளியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    படிப்பில் சிறந்து விளங்கிய மாணவர் ரவுல் ஜான், எதிர்கால தொழில்நுட்பம் தொடர்பான விஷயங்களில் ஆர்வமாக இருந்தார். இதன் காரணமாக அவர் மீபோட் என்ற பெயரில் ரோபோ ஒன்றையும் தயாரித்து வைத்துள்ளார்.

    பல மரங்களை பயன்படுத்தி தனது வகுப்பு தோழன் சையத் உதவியுடன் அதனை உருவாக்கி இருக்கிறார். பல மாதங்களுக்கு பிறகு உருவாகியிருக்கும் அந்த ரோபோ, தொடக்கத்தில் கம்ப்யூட்டர் கேம் போன்றே வடிவமைக்கப்பட்டிருந்தது. பின்பு அதில் பல தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நாம் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் மாணவர் ரவுல்ஜான் உருவாக்கியிருக்கிறார்.

    மாணவர் ரவுல் ஜான் தயாரித்துள்ள அந்த ரோபோ, நாம் கேட்கும் கேள்வியின் தன்மைக்கு தகுந்தாற்போல் பதிலளிக்கும் வகையில் உள்ளது. அதாவது ஆத்திர மூட்டும் கேள்வியாக இருந்தால் அதே தொணியிலும், சந்தேகத்தின் அடிப்படையில் பணிவாக இருந்தால் அந்த தொணியிலும் பதில் கொடுக்கும்.

    மாணவர் ரவுல்ஜானின் இந்த படைப்பு அவர் தொடங்கிய யூ-டியூப் சேனலின் மூலமாக தெரிய தொடங்கியது. வெளி நாட்டில் உள்ள படிப்பு தளங்கள் கலந்துரையாடலின் போது ராவல் ஜானின் திறமையை அங்கீகரித்தது. இதன்மூலம் மாணவர் ரவுல் ஜானை அமெரிக்க மாணவர்கள் பலர் கூகுள் மீட் மூலம் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள்.

    அதன் மூலமாக அமெரிக்க மாணவர்களுக்கு அவர் வகுப்பு எடுத்து வருகிறார். ஒவ்வொரு வகுப்பிலும் 40 மாணவர்கள் வரை பங்கேற்று ரவுல் ஜானிடம் பல்வேறு கேள்விகளை கேட்கின்றனர். பெரும்பாலும் 2 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்கள் அவரிடம் யோசனைகளை கேட்கிறார்கள்.

    சில நேரங்களில் இரவு நேரத்திலும் மாணவர் ரவுல் ஜானை அமெரிக்க மாணவர்கள் தொடர்பு கொள்கிறார்கள். அப்போது அவர் தூங்கிவிட்டால் அவருக்கு பதிலாக அவர் தயாரித்துள்ள ரோபோ பதிலளிக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஆளில்லா விமானம் தயாரிப்பதே தனது அடுத்த இலக்கு என்று மாணவர் ரவுல் ஜான் தெரிவித்திருக்கிறார்.

    • சுரேஷ் படுத்த படுக்கையாகி விட்டதால், அவரது மனைவி அவருடனேயே ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டியநிலை ஏற்பட்டது.
    • சுரேசின் மருத்துவ செலவுக்கே அவரது குடும்பத்தினர் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது44). இவரது மனைவி சுனிதா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இளைய மகள் அக்ஷரா அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தாள்.

    சுரேஷ் சுமை தூக்கம் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுரேசுக்கு தொண்டை புற்றுநோய் பாதித்தது.

    அவருக்கு புற்றுநோய் பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்ததால் உடனடியாக பாம்பாடியில் உள்ள தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 ஆண்டுகளாக அங்கேயே உள்நோயாளியாக சிகச்சை பெற்று வருகிறார். சுரேசை அவரது மனைவி சுனிதா உடனிருந்து கவனித்து வருகிறார்.

    சுரேஷ் புற்றுநோய் பாதித்து படுத்த படுக்கையாகி விட்டதால், அவரது குடும்பத்திற்கு வருமானம் இல்லாமல் போனது. இதனால் அவரது மூத்த மகன் பிளஸ்-2 படித்து முடித்தவுடன் வெல்டிங் வேலைக்கு சென்றுவிட்டார். அவர் சம்பாதிக்கும் பணத்தின் மூலமாகவே சுரேசின் குடும்பம் பிழைத்து வருகிறது.

    சுரேஷ் படுத்த படுக்கையாகி விட்டதால், அவரது மனைவி அவருடனேயே ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டியநிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்களது இளைய மகள் அக்ஷரா பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

    தந்தையின் மீது மிகவும் பாசம் வைத்திருக்கும் அவர், சுரேஷ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அங்கேயே இருந்து வருகிறார். தந்தைக்கு வழங்க வேண்டிய மாத்திரைகளை நேரம் தவறாமல் அவரே வழங்கி வருகிறார். தொண்டை புற்றுநோய் பாதிப்பு காரணமாக சுரேசால் பேச முடியாது.

    இதனால் அவர் கூற நினைப்பதை பேப்பரில் எழுதி காண்பிப்பார். அதனை சிறுமி பார்த்து தந்தை கூறுவதை செய்தபடி இருக்கிறார். சிறுமி ஒருவர் தந்தையை பொறுப்பாக கவனித்து வருவதை அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மற்றவர்கள் வியந்து பார்க்கிறார்கள்.

    தந்தையை உடனிருந்து கவனித்தாலும் படிப்பையும் சிறுமியால் மறக்க முடியவில்லை. இதனால் தந்தை சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனையில் உள்ள நூலகத்துக்கு சென்று வந்தார். மேலும் அங்கிருந்து புத்தகங்களை எடுத்துவந்து தந்தையுடன் உள்ள தனது தாய்க்கு கொடுத்து படிக்க செய்திருக்கிறார்.

    பள்ளி படிக்க வேண்டிய ஒரு சிறுமி, பள்ளிக்கு செல்ல முடியாமல் தந்தைக்கு சேவை செய்து வருவது பற்றிய தகவல் சில சிறுவர்கள் மூலமாக மருத்துவமனையில் நூலகம் அமைத்திருந்த பள்ளியின் நல்லபாடம் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு தெரியவந்தது.

    அவர்களின் மூலமாக சிறுமி அக்ஷரா பற்றிய விவரம் தற்போது வெளியுலகுக்கு தெரியவந்திருக்கிறது. சுரேசின் மருத்துவ செலவுக்கே அவரது குடும்பத்தினர் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். மூத்த மகன் மற்றும் தினக் கூலிகளாக பணிபுரியும் தனது தோழிகள் கொடுக்கும் பணத்தை வைத்தே கணவரின் மருத்துவ செலவுகளை சுனிதா செய்து வருகிறார்.

    இந்நிலையில் படிப்பில் ஆர்வமாக உள்ள மகளை எவ்வாறு பள்ளிக்கு அனுப்பி படிக்க வைப்பது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

    • சிறுமி தாய் கூறியதை கவனிக்காமல் தங்க வளையலை அங்கேயே வைத்துவிட்டார்.
    • 10 நாட்களுக்கு பிறகு உறவினரின் வீட்டுக்கு செல்ல நசீரின் குடும்பத்தினர் புறப்பட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு காப்பட் பகுதியை சேர்ந்த தம்பதி நசீர்-ஷரீபா. சம்பவத்தன்று இவர்கள் தங்களின் உறவினர் ஒருவரது திருமணத்துக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது நசீரின் மகளான ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி பாத்திமா ஹைபா தங்க நகைகள் அணிந்திருந்தார்.

    திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்ததும் அணிந்திருந்த நகைகளை சிறுமி கழற்றினார். அவற்றில் 6 கிராம் எடையுள்ள தங்க வளையலை பேப்பரில் சுற்றி ஒரு பையின் மீது வைத்துள்ளார். நகையை பத்திரமாக வைக்குமாறு சிறுமியிடம் அவரது தாய் கூறியிருக்கிறார்.

    ஆனால் சிறுமி தாய் கூறியதை கவனிக்காமல் தங்க வளையலை அங்கேயே வைத்துவிட்டார். இந்த நிலையில் 10 நாட்களுக்கு பிறகு உறவினரின் வீட்டுக்கு செல்ல நசீரின் குடும்பத்தினர் புறப்பட்டனர். அப்போது சிறுமியின் தங்க வளையல் இல்லாதததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    சிறுமியிடம் கேட்டபோது பேப்பரில் சுற்றி பையின் மீது வைத்ததாக கூறியிருக்கிறார். ஆனால் சிறுமி கூறிய இடத்தில் தங்க வளையல் இல்லை. தங்க வளையல் மாயமானதால் சிறுமியின் குடும்பத்தினர் வேதனையடைந்தனர்.

    இந்நிலையில் ஷரீபாவின் உறவினரான சுலைகா மற்றும் பக்கத்து வீட்டு பெண் சாந்தா ஆகியோர் காகம் ஒன்று பிளாஸ்டிக் வளையலை தூக்கிச் சென்றதை பார்த்தனர். அது குறித்து ஷரிபாவிடம் தெரிவித்தனர். ஆகவே தங்களது தங்க வளையலையும் காகம் தூக்கிச் சென்றிருக்கக்கூடும் என்ற சந்தேகம் அவருக்கு எழுந்தது.

    இதையடுத்து அவரது உறவினர் அகமது கோயா என்பவர், காகம் கூடு கட்டியிருந்த தென்னை மரத்தில் ஏறி பார்த்தார். அப்போது காக்கை கூட்டுக்குள் சிறுமியின் தங்க வளையல் இருந்தது. அதனை அவர் எடுத்து வந்து சிறுமியின் தாயிடம் கொடுத்தார்.

    காணாமல் போன தங்க வளையல் கிடைத்ததால் சிறுமியின் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.

    • கூட்ட நெரிசலில் சிக்கும் சிறுவர்களை பாதுகாப்பு படையினரும், தன்னார்வ தொண்டர்களும் மீட்டு எளிதாக சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கின்றனர்.
    • மகரவிளக்கு பூஜை நெருங்குவதால் மலை ஏறுபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த படியே இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்தமாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட நாளில் இருந்தே, சபரிமலைக்கு தினமும் ஆயிரக்கணக்காக பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

    மண்டல பூஜை காலத்தில் இருந்ததைப்போன்றே, தற்போதும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கிறது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருப்பதற்காக கேரள ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகளை தேவசம்போர்டு செய்திருக்கிறது.

    இருந்தபோதிலும் பக்தர்கள் அதிகளவில் வருவதால் சாமி தரிசனத்துக்கு 10மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருக்கிறது. பம்பை, மரக்கூட்டம், பதினெட்டாம்படி, நடைப்பந்தல், சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

    இதனால் வயதான பக்தர்களும், சிறுவர்-சிறுமிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கூட்ட நெரிசலில் சிக்கும் சிறுவர்களை பாதுகாப்பு படையினரும், தன்னார்வ தொண்டர்களும் மீட்டு எளிதாக சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கின்றனர்.

    பூஜைக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதாலும், 10-ந்தேதிக்கு பிறகு உடனடி முன்பதிவு நிறுத்தம் மற்றும் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வர இருப்பதால் சபரிமலைக்கு தற்போது அதிகளவில் பக்தர்கள் வருகிறார்கள்.


    இதனால் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை பக்தர்கள் பல இடங்களில் வெகுநேரம் காத்து நிற்க வேண்டியிருக்கிறது. வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் பிஸ்கெட்டுகளை தேவசம்போர்டு ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வழங்குகின்றனர்.

    மகரவிளக்கு பூஜை நெருங்குவதால் மலை ஏறுபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த படியே இருக்கிறது. பம்பையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சபரிமலைக்கு நடைபயணத்தை மேற்கொள்ளும் நிலையில், பெருவழிப்பாதை வழியாகவும் அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர்.

    இதன் காரணமாக பம்பையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.சாமி தரிசனம் முடிந்து பக்தர்கள் அதிகளவில் மலையிறங்கிய போதிலும், சன்னிதான பகுதியில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையிலேயே இருக்கிறது.

    சன்னிதான பகுதியில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்படுகிறது. அரவணை உள்ளிட்ட பிரசாதம் வழங்கும் கவுண்டர்களில் எப்போது பார்த்தாலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று வாங்கிச் செல்கிறார்கள். எங்கும் கூட்ட நெரிசல ஏற்படாமல் இருக்க அனைத்து இடங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மண்டல பூஜை காலத்தின் போது நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டதுகூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கு ஒரு காரணமாக கூறப்பட்டது. இதனால் சபரிமலைக்கு பக்தர்கள் சிரமமின்றி வருவதற்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    மகரவிளக்கு பூஜைக்காக மாநிலம் முழுவதும் 800 பஸ்கள் இயக்கப்படும் என்று கேரள மாநில போக்குவரத்து துறை மந்திரி கணேஷ்குமார் தெரிவித்துள்ளார். அவர் நிலக்கல் மற்றும் பம்பை உள்ளிட்ட இடங்களுககு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    பக்தர்கள் வருகைக்கு தகுந்தாற்போல் பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

    • குழந்தை அனந்துவை அங்குள்ள அங்கன்வாடி மையத்தின் அருகில் இருந்த கிணற்றுக்குள் வீசியுள்ளார்.
    • தகவலறிந்த குழந்தையின் தாய் சிந்து மற்றும் குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கொன்னியூர் பகுதியை சேர்ந்த தம்பதி ஸ்ரீகண்டன்-சிந்து. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மூன்றாவது குழந்தை அனந்து (வயது 1½).

    சம்பவத்தன்று சிந்து தனது வீட்டுக்கு வெளியே துணி துவைத்துக் கொண்டிருந்தார். அவரது குழந்தை அனந்து வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த குழந்தையை, சிந்துவின் சகோதரியான பிந்து வீட்டுக்குள் இருந்து வெளியே தூக்கிச் சென்றிருக்கிறார்.

    பின்பு குழந்தை அனந்துவை அங்குள்ள அங்கன்வாடி மையத்தின் அருகில் இருந்த கிணற்றுக்குள் வீசியுள்ளார். குழந்தையை கிணற்றில் வீசியது குறித்து அந்த பகுதியில் இருந்த தொழிலாளர்களிடம் பிந்து தெரிவித்திருக்கிறார்.

    அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், கிணற்றுக்குள் பார்ததனர். அப்போது கிணற்றுக்குள் குழந்தை அனந்து பிணமாக கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த குழந்தையின் தாய் சிந்து மற்றும் குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    குழந்தையின் பிணத்தை பார்த்து தாய் சிந்து கதறினார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்குஅனுப்பி வைத்தனர். குழந்தையை கிணற்றில வீசி கொன்ற பிந்துவை கைது செய்தனர்.

    அவர் எதற்காக குழந்தையை கொன்றார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பிந்து மனநலம் பாதித்தவர் என்ப தும், மனநல பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. 1½ வயது குழந்தையை தாயின் சகோதரியே கிணற்றில வீசி கொன்ற சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • சபரிமலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பிரசாதத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டது.
    • தற்போது சர்க்கரை வரத்து சீரானதை தொடர்ந்து அரவணை உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    சபரிமலை:

    சபரிமலையில் தினமும் தற்போது 90 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பிரசாதத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    மும்பையில் இருந்து சர்க்கரை வரத்து தாமதமானதால் அரவணை உற்பத்தி பாதிக்கப்பட்டதால் அரவணை தட்டுப்பாடு ஏற்பட்டதாக திருவிதாங்கூர் தேவஸ்தானத்தினர் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தற்போது சர்க்கரை வரத்து சீரானதை தொடர்ந்து அரவணை உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அய்யப்ப பக்தர்களுக்கு அரவணை பிரசாத வினியோகம் சீராக நடைபெற்று வருவதாக சபரிமலை செயல் அதிகாரி கிருஷ்ணதாஸ் தெரிவித்தார்.

    • சபரிமலைக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறுவர்-சிறுமிகள் அதிகளவில் வருகிறார்கள்.
    • இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான குழந்தைகளை பக்தர்கள் அழைத்து வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலைக்கு ஒருவர் விரதமிருந்து ஒருமுறை வந்துவிட்டால் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக செல்ல வேண்டும் என்ற தூண்டுதல் அவருக்குள் ஏற்பட்டு விடுகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் விரதமிருந்து சபரிமலைக்கு வருவதை வாடிக்கையாக வைத்துக் கொள்கிறார்கள்.

    அது மட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் புதிய பக்தர்களும் அதிகளவில் வருகிறார்கள். இதன் காரணமாகவே ஐயப்ப பக்தர்கள் வருகை ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகி வருகிறது. சபரிமலைக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறுவர்-சிறுமிகள் அதிகளவில் வருகிறார்கள். இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான குழந்தைகளை பக்தர்கள் அழைத்து வருகின்றனர்.


    இந்நிலையில் ஒரு சிறுமி 50-வது முறையாக இந்த ஆண்டு சபரிமலைக்கு யாத்திரை வந்திருக்கிறார். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் எழுகோன் பகுதியை சேர்ந்த அந்த சிறுமியின் பெயர் அத்ரிதி. தன்னுடைய 10-வது பிறந்த நாளுக்கு ஒருநாள் இருக்கும் நிலையில், அவர் தனது தந்தை அபிலாஷூடன் சபரிமலைக்கு இருமுடி கட்டி 50-வது முறையாக யாத்திரை வந்தார்.

    சிறுமி அத்ரிதி ஒன்பது மாத குழந்தையாக இருந்த போது முதன்முதலாக சபரிமலைக்கு தனது தந்தையுடன் வந்திருக்கிறார். அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் மாதாந்திர பூஜை மற்றும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் வந்தபடி இருந்துள்ளார்.

    இதன்காரணமாக 10 வயதுக்குள்ளேயே 50முறை சபரிமலைக்கு வந்த பெறுமையை சிறுமி அத்ரிதி பெற்றிருக்கிறார். சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களில் பெரும்பாலானவர்கள் தொடர்ந்து 18 ஆண்டுகள் வருவார்கள்.

    அதன்பிறகு ஒரு சிலரே தொடர்ந்து தொடர்ச்சியாக சபரிமலைக்கு செல்லும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். ஆனால் சிறுமி அத்ரிதியோ, 10 வயதுக்குள் 50 முறை வந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுமி அத்ரிதி எழுகோனில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    • பதினெட்டாம்படி மற்றும் நடைப்பந்தல் பகுதிகளில் பக்தர்கள் கூட்ட நெரிசலை தாண்டியே சாமி தரிசனம் செய்ய முடிகிறது.
    • சபரிமலையில் உடனடி முன்பதிவு வருகிற 10-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம்:

    மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

    மண்டல பூஜை காலத்தில் இருந்ததுபோன்றே, தற்போதும் பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காத வகையிலேயே இருந்து வருகிறது. இதன் காரணமாக சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது.

    கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும், சன்னிதானம், பதினெட்டாம்படி மற்றும் நடைப்பந்தல் பகுதிகளில் பக்தர்கள் கூட்ட நெரிசலை தாண்டியே சாமி தரிசனம் செய்ய முடிகிறது. இதனால் வயது முதிர்ந்த பக்தர்கள், குழந்தைகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மகரவிளக்கு பூஜை தினத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை வருகிற 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கணிசமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. உடனடி முன்பதிவு வருகிற 10-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சபரிமலையில் கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் அவதிப்படுவதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே பல்வேறு யோசனைகளை தெரிவித்திருக்கும் கேரள மாநில ஐகோர்ட், தற்போது மேலும் ஒரு அறிவுரையை கூறியிருக்கிறது.

    சபரிமலையில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக செயல்பட்டு வரும் நிலக்கல் பகுதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் அனில் நரேந்திரன், கிரீஷ் ஆகியோர் கூறியுள்ளனர்.

    நிலக்கல் வாகன நிறுத்தம் தொடர்பாக தேவசம்போர்டு மற்றும் பத்தினம்திட்டா போலீஸ் சூப்பிரண்டுகளிடம் இருந்து பிரமாண பத்திரங்களை நீதிமன்றம் கேட்டிருந்தது. அதனை அவர்கள் தாக்கல் செய்ததன் அடிப்படையில் இந்த அறிவுறுத்தலை கேரள ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

    • கேரளாவில் பா.ஜ.க. சார்பில் 2 லட்சம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மகளிர் சக்தி பற்றி உரையாடினார்.

    திருவனந்தபுரம்:

    பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பல மாநிலங்களில் பா.ஜ.க. சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், கேரளாவில் மகளிர் சங்கமம் நிகழ்ச்சி திருச்சூர் தேக்கங்காடு மைதானத்தில் இன்று நடைபெற்றது. சுமார் 2 லட்சம் பெண்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். திருச்சூர் வந்த பிரதமர் மோடிக்கு பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


    இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா, கிரிக்கெட் வீராங்கனை மின்னுமணி, சமூக ஆர்வலர் உமா பிரேமன், நடிகை சோபனா, முதியோர் ஓய்வூதியத்தைப் போராடி பெற்ற 88 வயது மூதாட்டி மரியக்குட்டி உள்ளிட்ட ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

    மகளிர் சங்கமம் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி பேசியதாவது:

    சுதந்திரத்திற்குப் பிறகு, எல்.டி.எஃப் மற்றும் யூ.டி.எஃப் அரசுகள் மகளிர் சக்தியை பலவீனமாகக் கருதின. இதனால் மக்களவை மற்றும் விதான சபாவிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை கிடப்பில் போட்டன. அதை நிறைவேற்றியது பா.ஜ.க. நாட்டில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணி அரசு இருக்கும் வரை முத்தலாக் காரணமாக முஸ்லிம் சகோதரிகள் அவதிப்பட்டு வந்தனர். ஆனால் அதிலிருந்து விடுதலை அளிப்பதாக உத்தரவாதம் அளித்து அதை உண்மையாக நிறைவேற்றினோம் என தெரிவித்தார்.

    ×