search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    சபரிமலையில் கட்டுக்கடங்காமல் காணப்படும் பக்தர்கள் கூட்டம்
    X

    சபரிமலையில் கட்டுக்கடங்காமல் காணப்படும் பக்தர்கள் கூட்டம்

    • கூட்ட நெரிசலில் சிக்கும் சிறுவர்களை பாதுகாப்பு படையினரும், தன்னார்வ தொண்டர்களும் மீட்டு எளிதாக சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கின்றனர்.
    • மகரவிளக்கு பூஜை நெருங்குவதால் மலை ஏறுபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த படியே இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்தமாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட நாளில் இருந்தே, சபரிமலைக்கு தினமும் ஆயிரக்கணக்காக பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

    மண்டல பூஜை காலத்தில் இருந்ததைப்போன்றே, தற்போதும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கிறது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருப்பதற்காக கேரள ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகளை தேவசம்போர்டு செய்திருக்கிறது.

    இருந்தபோதிலும் பக்தர்கள் அதிகளவில் வருவதால் சாமி தரிசனத்துக்கு 10மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருக்கிறது. பம்பை, மரக்கூட்டம், பதினெட்டாம்படி, நடைப்பந்தல், சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

    இதனால் வயதான பக்தர்களும், சிறுவர்-சிறுமிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கூட்ட நெரிசலில் சிக்கும் சிறுவர்களை பாதுகாப்பு படையினரும், தன்னார்வ தொண்டர்களும் மீட்டு எளிதாக சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கின்றனர்.

    பூஜைக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதாலும், 10-ந்தேதிக்கு பிறகு உடனடி முன்பதிவு நிறுத்தம் மற்றும் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வர இருப்பதால் சபரிமலைக்கு தற்போது அதிகளவில் பக்தர்கள் வருகிறார்கள்.


    இதனால் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை பக்தர்கள் பல இடங்களில் வெகுநேரம் காத்து நிற்க வேண்டியிருக்கிறது. வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் பிஸ்கெட்டுகளை தேவசம்போர்டு ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வழங்குகின்றனர்.

    மகரவிளக்கு பூஜை நெருங்குவதால் மலை ஏறுபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த படியே இருக்கிறது. பம்பையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சபரிமலைக்கு நடைபயணத்தை மேற்கொள்ளும் நிலையில், பெருவழிப்பாதை வழியாகவும் அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர்.

    இதன் காரணமாக பம்பையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.சாமி தரிசனம் முடிந்து பக்தர்கள் அதிகளவில் மலையிறங்கிய போதிலும், சன்னிதான பகுதியில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையிலேயே இருக்கிறது.

    சன்னிதான பகுதியில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்படுகிறது. அரவணை உள்ளிட்ட பிரசாதம் வழங்கும் கவுண்டர்களில் எப்போது பார்த்தாலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று வாங்கிச் செல்கிறார்கள். எங்கும் கூட்ட நெரிசல ஏற்படாமல் இருக்க அனைத்து இடங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மண்டல பூஜை காலத்தின் போது நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டதுகூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கு ஒரு காரணமாக கூறப்பட்டது. இதனால் சபரிமலைக்கு பக்தர்கள் சிரமமின்றி வருவதற்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    மகரவிளக்கு பூஜைக்காக மாநிலம் முழுவதும் 800 பஸ்கள் இயக்கப்படும் என்று கேரள மாநில போக்குவரத்து துறை மந்திரி கணேஷ்குமார் தெரிவித்துள்ளார். அவர் நிலக்கல் மற்றும் பம்பை உள்ளிட்ட இடங்களுககு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    பக்தர்கள் வருகைக்கு தகுந்தாற்போல் பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×