என் மலர்
டெல்லி
- 100 மீட்டருக்கும் குறைவான உயரமுள்ள மலைகளில் சுரங்கத்தை அனுமதிப்பது சுரங்க மாஃபியாவுக்கு திறந்த அழைப்பாகும்.
- நரேந்திர மோடி அரசு அவற்றுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
ஆரவல்லி மலைத்தொடரில் நூறு மீட்டருக்கும் குறைவான உயரமுள்ள மலைகளில் சுரங்க நடவடிக்கைகளை அனுமதிக்க மத்திய சுற்றுலா அமைச்சகம் கொள்கைகளில் திருத்தம் செய்துள்ளது.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆங்கில நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார்.
அதில், குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பரவியுள்ள இந்த மலைகள், நாட்டின் வரலாறு மற்றும் புவியியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.
சட்டவிரோத சுரங்கத்தால் அவற்றின் இயற்கை வளம் ஏற்கனவே குறைந்து வரும் நிலையில், நரேந்திர மோடி அரசு அவற்றுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
100 மீட்டருக்கும் குறைவான உயரமுள்ள மலைகளில் சுரங்கத்தை அனுமதிப்பது சுரங்க மாஃபியாவுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் திறந்த அழைப்பாகும்.
இது சுற்றுச்சூழல் மீதான அரசாங்கத்தின் அலட்சியத்திற்கு சான்றாகும். இது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை மீறுவதாகும். மத்திய அரசு கொண்டு வந்த இந்தப் புதிய கொள்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளார்.
- 12 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு 10 மையங்களில் தொடங்கியது.
- பாஜக வேட்பாளர்கள் சுமன்குமார் குப்தா, தனிகா ஜெயின் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
டெல்லி சட்டசபைக்கு கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆம்ஆத்மியிடம் இருந்து ஆட்சியை கைப் பற்றியது.
டெல்லி மாநகராட்சியில் உள்ள 12 வார்டுகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 3-ந்தேதி நடைபெற்றது. இதில் 9 வார்டு பாஜக வசமும், எஞ்சிய 3 வார்டுகள் ஆம்ஆத்மி வசமும் இருந்தன.
12 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு 10 மையங்களில் தொடங்கியது.
இதில் பா.ஜனதா, ஆம் ஆத்மி ஆகியவை தலா 2 வார்டுகளில் வெற்றி பெற்றன. காங்கிரஸ், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிகள் தலா 1 வார்டுகளை கைப் பற்றியது. மற்ற சில வார்டு களில் பா.ஜனதா முன்னி லையில் உள்ளன.
பாஜக வேட்பாளர்கள் சுமன்குமார் குப்தா, தனிகா ஜெயின் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
- பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நேற்று முன்தினம் (டிசம்பர் 1) தொடங்கியது.
- எதிர்க்கட்சிகள் SIR குறித்து விவாதிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டனர்.
பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நேற்று முன்தினம் (டிசம்பர் 1) தொடங்கியது.
எதிர்க்கட்சிகள் SIR குறித்து விவாதிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டதால் 2 நாட்களாக இரு அவைகளும் முடங்கியது.
இந்நிலையில், பாராளுமன்றத்தில் தோள்பட்டை வலியால் தவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ராகுல் காந்தி தோள்பட்டை பிடித்து விட்டார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
- வெள்ளத்தால் பாதித்த இலங்கைக்கு இந்தியா நிவாரண பொருட்களை அனுப்பியது.
- மீட்புப்பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையும் அனுப்பப்பட்டது.
இலங்கையில் பெய்த கனமழையால் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரிடருக்கு 465 பேர் பலியாகி உள்ளனர். 366 பேர் மாயமாகி இருக்கிறார்கள்.
வெள்ளத்தால் பாதித்த இலங்கைக்கு இந்தியா நிவாரண பொருட்களை அனுப்பியது. மேலும், மீட்புப்பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையும் அனுப்பப்பட்டது. அவர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் மனிதாபிமான உதவியின் ஒரு பகுதியாக பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர சுகாதார உதவிகளை வழங்குவதற்காக இந்தியா ஒரு நடமாடும் மருத்துவமனையையும், 70-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களையும் இலங்கைக்கு அனுப்பி உள்ளது.
இந்திய விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் ஆக்ராவிலிருந்து 73 மருத்துவப் பணியாளர்கள் மற்றும் உபகரணங்களுடன் புறப்பட்டு கொழும்பில் தரை இறங்கியது.
- இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.89.96 ஆக இருந்தது.
- இந்தியா- அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தாமதம்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் முதல் முறையாக ரூ.90-யை இன்று கடந்துள்ளது. நேற்று வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு ரூ.89.92 வரை சென்றது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.89.96 ஆக இருந்தது.
காலை 10 மணியளவில் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ.90.16-க்கு சரிந்தது. வர்த்தகப் பற்றாக் குறை, இந்தியா- அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தாமதம் ஆகியவை ரூபாய் வீழ்ச்சிக்கு காரணமாக கருதப்படுகிறது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்யும்போது, நமது அன்னிய செலாவணி அதிகரிக்கும். அதேநேரம் இப்போது உலகின் மற்ற நாடுகளை விட இந்திய பங்குச்சந்தை உச்சத்தில் இருப்பதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை வெளியே எடுக்கிறார்கள்.
இதனால் அன்னிய செலாவணி குறைகிறது. இதுவும் ரூபாய் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
- மாநிலங்களவையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
- மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பிரதாப் எழுத்துப்பூர்வ பதில் அளித்தார்.
பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்ந்து நேற்று முன்தினம் (டிச.1ம் தேதி) தொடங்கி இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மாநிலங்களவையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறித்து எம்.பி. நீரஜ் கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பிரதாப் எழுத்துப்பூர்வ பதில் அளித்தார்.
அதில் அவர்," நாடு முழுவதும் 2022-ல் புற்றுநோயால் 14.61 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2023ம் ஆண்டில் 15.33 லட்சமாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுக்கு 2500 பேர் வரை புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்" என்றார்.
- இந்தத் திட்டத்தின் கீழ் இன்னும் 0.79 கோடி பயனாளிகள் அடையாளம் காணப்படவில்லை.
- எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
2020 முதல் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் 2.49 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் நிமுபன் ஜெயந்திபாய் பம்பானியா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதில், இந்தியாவில் தற்போது சுமார் 20 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருக்கிறது. தற்போது, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ரேஷன் கடைகள் மூலம் சுமார் 80 கோடி மக்களுக்கு மத்திய அரசு இலவச உணவு தானியங்களை வழங்கி வருகிறது
இருப்பினும், இந்தத் திட்டத்தின் கீழ் இன்னும் 0.79 கோடி பயனாளிகள் அடையாளம் காணப்படவில்லை.
டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளின் விளைவாக, 2020 மற்றும் 2025 க்கு இடையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தோராயமாக 2.49 கோடி ரேஷன் கார்டுகளை அகற்ற முடிந்துள்ளது.
போலி கார்டுகள், தகுதியற்ற பயனாளிகள், e-KYC முரண்பாடுகள், பயனாளிகளின் இறப்பு மற்றும் நிரந்தர இடம்பெயர்வு ஆகிய காரணங்களின் அடிப்படையில் அவை நீக்கப்பட்டுள்ளன.
ரேஷன் கார்டுகளை தவறாக ரத்து செய்ததாக பயனாளிகளிடம் இருந்து அரசாங்கத்திற்கு எந்த குறிப்பிட்ட புகார்களும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கேள்விக்கு பதிலளிக்கப்பட்டது.
- மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி கணக்கெடுப்பும் முடிக்கப்படும்.
மத்திய அரசு 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பை இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிட்டுள்ளது.
நாட்டின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பான இது 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு என்று அழைக்கப்படுகிறது. இது சுதந்திரம் பிறகு நடத்தப்படும்எட்டாவது மக்கள் தொகை கணக்கெடுப்பாகும்.
முதல் கட்டம் 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலும், இரண்டாம் கட்டம் 2027 பிப்ரவரியிலும் நடைபெறும் என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை மக்களவையில் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி.யும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களைக் கொண்டிருக்கும் என்று கூறினார்.
முதல் கட்டத்தில், வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு நடத்தப்படும். இரண்டாம் கட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.
முதல் கட்டம் 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடத்தப்படும். இரண்டாம் கட்டம் பிப்ரவரி 2027 இல் தொடங்கி மார்ச் 1 இல் முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி கணக்கெடுப்பும் முடிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு பயனர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு கேள்வி படிவங்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் தரவு சேகரிக்கப்பட்டு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
- சஞ்சய் சிங் அனிதா ஷியோரானாவை தோற்கடித்தார்.
- தேர்தல்கள் நியாயமானதாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்படவில்லை
தேசிய மல்யுத்த கூட்டமைப்பு (WFI) 2023 டிசம்பரில் நடத்திய தேர்தல்களை எதிர்த்து மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் மற்றும் சத்யவ்ரித் காடியன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அப்போதைய WFI தேர்தலில், சஞ்சய் சிங் அனிதா ஷியோரானாவை தோற்கடித்தார். அனிதா ஷியோரானாவை பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் ஆதரித்தனர்.
எனவே, WFI தேர்தல்கள் நியாயமானதாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்படவில்லை என்றும் முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றம் சாட்டி மல்யுத்த வீரர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தனர்.
இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்கள் யாரும் ஆஜராகவில்லை, முந்தைய இரண்டு விசாரணைகளிலும் அவர்கள் ஆஜராகவில்லை. மனுதாரர்கள் தற்போதைய வழக்குகளைத் தொடர்வதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
- பிரதமர் அலுவலகத்துடன் அமைச்சரவை செயலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அலுவலகம் ஆகியவை செயல்படும்.
ஆளுநர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ரவி வைத்த கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாணிகைகளின் ராஜ் பவன் என்ற பெயர் லோக் பவன் என்று மாற்றப்பட்டது.
ஆளுநர்கள் ராஜாக்கள் அல்ல என்பதாலும் ஆளுநர் மாளிகை மக்களுக்கான தளம் என்பதாலும் லோக் (மக்கள்) பவன் என பெயர் மாற்றம் பெற்றுள்ளது.
இந்த சூழலில் டெல்லியில் பிரதமர் அலுவலகம் (PMO) செயல்பட உள்ள புதிய கட்டிட வளாகத்திற்கு 'சேவா தீர்த்' என்று பெயரிடப்பட உள்ளது. 'சேவா தீர்த்' என்பது புனிதமான சேவைத்தலம் என்று பொருள்படும்.
கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த வளாகத்தில், பிரதமர் அலுவலகத்துடன் அமைச்சரவை செயலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அலுவலகம் ஆகியவை செயல்படும்.
உலகத் தலைவர்களுடனான உயர் மட்ட சந்திப்புகளுக்கான 'இந்தியா ஹவுஸ்' கூட இதில் ஒரு பகுதியாக இருக்கும்.
பிரதமர் மோடியின் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, பிரதமரின் இல்லம் அமைந்துள்ள ரேஸ்கோர்ஸ் சாலை 'லோக் கல்யாண் மார்க்' என்றும், வரலாற்று சிறப்புமிக்க ராஜ பாதையை 'கர்தவ்ய பாதை' என்றும், மத்திய செயலகம் 'கர்தவ்ய பவன்' என்றும் பெயர் மாற்றப்பட்டது.
- நாய்தான் இன்றைய முக்கிய தலைப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
- கடிப்பவர்கள் உள்ளேதான் இருக்கிறார்கள்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று காங்கிரஸ் எம்பி ரேணுகா சவுத்ரி, நாய்க்குட்டி ஒன்றுடன் நாடாளுமன்ற வளாகத்திற்குள் வருகை புரிந்தார். இதற்கு பாஜக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரேணுகா சவுத்ரி, "இது ஒரு பிரச்சனையா? அது ஒரு சின்ன உயிரினம். யாரையும் கடிக்காது. கடிப்பவர்கள் உள்ளேதான் இருக்கிறார்கள்" என தெரிவித்தார்.
கடிப்பவர்கள் உள்ளேதான் இருக்கிறார்கள் என மறைமுகமாக எதிர்க்கட்சியினரை விமர்சித்ததற்கு ரேணுகா சவுத்ரி மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் பாஜக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ராகுல் காந்தியும் அதே பொருள்படும் கருத்தை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி,
"நாய்தான் இன்றைய முக்கிய தலைப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அந்த நாய் என்ன செய்தது? அது இங்கே வந்ததா? அதற்கு அனுமதி இல்லையா? என கேள்வி எழுப்பியவர், ஆனால் அவை உள்ளே அனுமதிக்கப்படுகின்றன என எதிர்க்கட்சிகளை குறிப்பிடுமாறு கிண்டலாக கூறினார். இதற்கு பாஜகவினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- சஞ்சார் சாத்தி செயலி என்பது அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மொபைல் பாதுகாப்பு செயலி ஆகும்
- சஞ்சார் சாத்தி செயலியால் மக்களின் தனிப்பட்ட தகவல்களை மத்திய அரசு கண்காணிக்க வாய்ப்புள்ளது
இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து மொபைல் போன்களிலும் 'சஞ்சார் சாத்தி' செயலி கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த செயலி அனைத்து புதிய தொலைபேசிகளிலும் இருக்க வேண்டும் எனவும் பழைய மொபைல் போன்களிலும் சாப்டவேர் அப்டேட் மூலமாக இந்த செயலி இடம் பெற வேண்டும் எனவும் அடுத்த 120 நாட்களுக்குள் இந்த பணிகளை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து மொபைல் போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
சஞ்சார் சாத்தி செயலி என்பது அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மொபைல் பாதுகாப்பு செயலி ஆகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த செயலி தொடங்கப்பட்டது.
தொலைந்துபோன அல்லது திருடுபோன மொபைல் போன்களை கண்டுப் பிடிக்கவும், ஐஎம்இஐ மோசடி, ஒருவர் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சஞ்சார் சாத்தி செயலி மூலம் பெறலாம்.
அதே சமயம் சஞ்சார் சாத்தி செயலி நமது தொலைபேசியிலிருந்து நிறைய தரவை கோரக்கூடும். இதில் அழைப்பு பதிவுகள், மெசேஜ்கள், கேமரா மூலம் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைப் பதிவு செய்வதற்கான அணுகல் ஆகியவை அடங்கும் என்பதால் மக்களின் தனிப்பட்ட தகவல்களை மத்திய அரசு கண்காணிக்க வாய்ப்புள்ளதாக விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில், சஞ்சார் சாத்தி செயலியை கட்டாயமாக்கும் முடிவிற்கு வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், சஞ்சார் சாத்தி செயலி மொபைல் போன்களில் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற உத்தரவில் இருந்து மத்திய அரசு பின்வாங்கியுள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, "இந்த செயலி அனைவரையும் சென்றடையச் செய்வது நமது பொறுப்பு. நீங்கள் அதை நீக்க விரும்பினால், அதை நீக்குங்கள். நீங்கள் அதைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றால், அதை பதிவு செய்யாதீர்கள். நீங்கள் செயலியில் பதிவு செய்தால், அது செயலில் இருக்கும். நீங்கள் அதைப் பதிவு செய்யாவிட்டால், அது செயலற்றதாகவே இருக்கும்" என்று தெரிவித்தார்.






