என் மலர்tooltip icon

    இந்தியா

    • மதுரையைப் பொறுத்தவரை அங்கு மக்கள்தொகை குறைவாக உள்ளது.
    • 20 லட்சம் மக்கள்தொகைக்கு மேற்பட்ட நகரங்களிலேயே மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடலாம்.

    புதுடெல்லி:

    தமிழகத்தில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் திறம்பட செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் இந்த திட்டங்களை மத்திய அரசு நிராகரித்து விட்டதாக நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாகின. இதற்கு தமிழகத்தில் அதிருப்தி கிளம்பியது.

    இந்தநிலையில் மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் இந்த நிராகரிப்புக்கான காரணங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசுக்கு அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கான தமிழக அரசின் பரிந்துரையை தெரிவித்து வந்த கடிதங்கள் சரிபார்க்கப்பட்டன. இந்தத் திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக தெரிகிறது.

    அந்த ஆய்வில் சில விஷயங்கள் கவனிக்கப்பட்டன.

    கோவையில் 34 கி.மீ. நீளத்துக்கு மெட்ரோ ரெயில் இயக்க திட்டமிடப்பட்ட நிலையில் அங்கு ஏற்கனவே உள்ள சாலைப்போக்குவரத்தின் பயண நேரம் மெட்ரோ ரெயிலின் பயண நேரத்தை விட குறைவாக உள்ளது. மேலும் மக்கள்தொகையை கணக்கிடும்போது சென்னை 1- ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தை விட 4 லட்சம் பேர் மட்டுமே அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. பயண நேரத்தின் அடிப்படையில் மக்கள் மெட்ரோவுக்கு மாற வாய்ப்பில்லை என தெரிய வருகிறது.

    மதுரையைப் பொறுத்தவரை அங்கு மக்கள்தொகை குறைவாக உள்ளது. மெட்ரோ ரெயில் இயக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 20 லட்சம் மக்கள் இருக்க வேண்டும் என திட்டமிடப்பட்டு இருக்கிறது. ஆனால் 2011- ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மதுரையின் மக்கள்தொகை 15 லட்சம் மட்டுமே.

    இந்த காரணங்கள் தவிர மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக பல கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டும். பல கட்டிடங்கள் மிக விலை உயர்ந்ததாக இருக்கலாம். இதனால் பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்படலாம். கோவையின் மக்கள்தொகை 15.84 லட்சம் உள்ளது. எனவே 20 லட்சம் மக்கள்தொகைக்கு மேற்பட்ட நகரங்களிலேயே மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடலாம்.

    இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
    • புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மழைக்கு வாய்ப்பு.

    சென்னை:

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வருகின்ற 22-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • திமுக அரசைக் கண்டித்து 17ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தது.
    • மழை எச்சரிக்கையால் இந்த ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    காஞ்சீபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய சட்டசபை தொகுதிகளில் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வரும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களை மிரட்டி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை கண்டும் காணாமலும் இருந்து வரும் தி.மு.க. அரசைக் கண்டித்து, காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 20-ம் தேதி (இன்று) நடைபெற உள்ளது.

    ஆர்ப்பாட்டம் காலை 10 மணியளவில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் (காவலான் கேட்) நடைபெறும். முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

    • கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது.
    • இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி தோல்வி அடைந்தார்.

    பனாஜி:

    கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. அதன் ஐந்தாவது சுற்றுப் போட்டிகள் நடந்தன. முதல் சுற்றில் அர்ஜூன் ஏரிகைசி, அமெரிக்காவின் லெவான் அரோனியன் உடனான ஆட்டம் டிரா ஆனது. 2-வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி, லெவான் அரோனியனை வீழ்த்தி காலிறுதிக்கு சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

    இந்நிலையில், காலிறுதியில் சீனாவின் வெய் யீ, இந்தியாவின் அர்ஜூன் எரிகைசியை 2.5 -1.5 என்ற புள்ளியில் வென்றார். இதன்மூலம் இந்தியாவின் எரிகைசி தொடரில் இருந்து வெளியேறினார்.

    • தென் ஆப்பிரிக்காவில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
    • இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா செல்கிறார்.

    புதுடெல்லி:

    தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நவம்பர் 21 முதல் 23ம் தேதி வரை ஜி20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

    இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார், அதற்காக அவர் ஜோகன்னஸ்பர்க் செல்கிறார் என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநாட்டில் 3 முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி பேசுகிறார்.

    இந்த அமர்வில் காலநிலை மாற்றம், எரிசக்தி மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் உரையாற்ற உள்ளார்.

    உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பல உலக நாடுகளின் தலைவர்களுடனும் பிரதமர் மோடி சந்தித்துப் பேச உள்ளார்.

    இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

    • 1986-ம் ஆண்டு முதல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரால் இந்த விருது வழங்கப்படுகிறது.
    • ரூ.25 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டது இந்த விருது.

    புதுடெல்லி:

    சிலியின் முன்னாள் அதிபரும், மனித உரிமைகளுக்கான உலகளாவிய வழக்கறிஞருமான மிச்செல் பச்லெட்டுக்கு அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான 2024-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டார் என டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை அறிவித்திருந்தது.

    மனித உரிமை, அமைதி, சமத்துவம் ஆகிய துறைகளில் முன்னாள் சிலி அதிபர் மைக்கேல் பேச்லெட் ஆற்றிய பங்களிப்புக்காக இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐ.நா. சபையின் முதல் பெண் இயக்குநர், மனித உரிமைகளுக்கான ஐ.நா.சபையின் உயர் தூதர், சிலி நாட்டின் அதிபராக 2 முறை பணியாற்றியது போன்ற பணிகளுக்காகவும் அவர் இந்த விருதைப் பெறுகிறார்.

    ரூ.25 லட்சம் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டது இந்த விருது. 1986-ம் ஆண்டு முதல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரால் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள ஜவஹர் பவனில் நடந்த நிகழ்ச்சியில் மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் தலைவரான சோனியா காந்தி இந்திரா காந்தி விருதை மிச்செல் பச்லெட்டுக்கு வழங்கினார். இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    வெரோனிகா மைக்கேல் பேச்லெட் ஜெரியா என்ற முழு பெயர் கொண்ட பேச்லெட் அமைதி, சமத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்கான உறுதியான அர்ப்பணிப்பிற்காக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறார். அவரது புகழ்பெற்ற வாழ்க்கையில், அவர் ஐ.நா.பெண்களின் நிறுவன இயக்குநராக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர், மற்றும் சிலியின் முதல் பெண் அதிபராக இரு முறை பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிறுமி கோமா நிலையிலேயே மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
    • மோட்டார் விபத்து உரிமை கோரல் தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது.

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகராவில் உள்ள சோரோட் பகுதியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பேபி(வயது68) மற்றும் அவரது பேத்தியான 9 வயது சிறுமி த்ரிஷானா ஆகிய இருவரின் மீதும் அந்த வழியாக அதிவேகமாக சென்ற கார் மோதியது.

    இதில் மூதாட்டி பேபி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர்கள் மீது மோதிய கார் நிற்காமல் சென்றுவிட்டது. அந்த கார் 10 மாதங்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த விபத்து தொடர்பான வழக்கில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு எந்த காப்பீட்டு தொகையும் கிடைக்கவில்லை.

    கார் மோதியதில் காயமடைந்த சிறுமி தற்போது வரை கோமா நிலையிலேயே மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஆகவே இந்த வழக்கை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் மோட்டார் விபத்து உரிமை கோரல் தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது.

    அந்த தீர்ப்பாயம், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தேசிய காப்பீட்டு நிறுவனம் ரூ1.15கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. அந்த தொகையை சிறுமியின் வங்கி கணக்கில் செலுத்தவும், அதில் ரூ.25 லட்சத்தை அவளது மருத்துவ சிகிச்சைக்கு உடனடியாக எடுக்கலாம் எனவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

    • தமிழக அரசு தொழில்துறை சார்பில் தமிழ்நாடு வளர்கிறது தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி வருகிறது.
    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 25-ந் தேதி கோவை வருகிறார்.

    தமிழ்நாடு அரசு மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சியை பரவலாக்குவதில் மிக தீவிரமாக இருந்து வருகிறது.

    சென்னையில் மட்டுமே வளர்ச்சி, தொழில் மேம்பாடு, பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவை நின்று விடக்கூடாது அனைத்து மாவட்டங்களுக்கும் இது பகிரப்பட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு தொழில்துறை சார்பில் தமிழ்நாடு வளர்கிறது (டி.என்.ரைசிங்) தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி வருகிறது.

    முதல் மாநாடு கடந்த ஆகஸ்டு மாதம் தூத்துக்குடியிலும், 2-வது மாநாடு கடந்த செப்டம்பர் மாதம் ஓசூரிலும் நடைபெற்றது.

    தூத்துக்குடியில் நடந்த முதல் மாநாட்டில் ரூ.32 ஆயிரத்து 554 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், ஓசூரில் நடந்த 2-வது மாநாட்டில் ரூ.24 ஆயிரத்து 307 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தமானது.

    இந்த நிலையில் தூத்துக்குடி, ஓசூரை தொடர்ந்து 3-வது தமிழ்நாடு வளர்கிறது(டி.என்.ரைசிங்) தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு கோவையில் நடக்க உள்ளது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 25-ந் தேதி கோவை வருகிறார்.

    கோவையில் நடைபெறும் 3-வது தமிழ்நாடு வளர்கிறது(டி.என்.ரைசிங்) தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் பல்வேறு புதிய முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.

    கோவையில் நடைபெறும் இந்த மாநாடானது மின்னணுவியல், பொது உற்பத்தி, ஜவுளி, விண்வெளி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் கவனம் செலுத்தும் விதமாக நடக்க உள்ளது.

    இதுதொடர்பாக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறும்போது,"தொழில் நகரமாக கோவை மாறி உள்ளது. உலகளாவிய திறன் மையமாக இருப்பதால் புதிதாக தொழில் தொடங்க ஏராளமானோர் கோவைக்கு வருகிறார்கள்.

    இதன்மூலம் உள்ளூர் திறமையாளர்கள், உள்கட்டமைப்பு மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளை உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளுடன் இணைப்பதற்காக உதவி வருகிறோம். அந்த வகையில் கோவையில் 3-வது தமிழ்நாடு வளர்கிறது தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது" என்றார்.

    இந்த மாநாடு முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை காந்திபுரத்தில் உள்ள சிறைச்சாலை பகுதிக்கு செல்கிறார். அங்கு ரூ.214.25 கோடி மதிப்பில் 45 ஏக்கரில் உருவாகியுள்ள செம்மொழி பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார்.

    முதலமைச்சர் வருகையையொட்டி அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் செம்மொழி பூங்கா திறப்பு விழாவில் பங்கேற்ற கோவை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோவை ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.கவினர் சிறப்பான வரவேற்பு அளிக்க தயாராகி வருகின்றனர்.

    • அந்த கும்பல் பணத்தை தங்களது காருக்கு வலுக்கட்டாயமாக மாற்றியுள்ளனர்.
    • ஊழியர்களை வேறு ஒரு இடத்தில இறக்கிவிட்டு பணத்துடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

    பெங்களூருவில் பட்டப்பகலில் ஏடிஎம் வாகனத்தை கடத்தி ரூ.7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெங்களூரு சவுத் எண்ட் சர்க்கிள் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு பணம் நிரப்ப HDFC வங்கி கிளையில் இருந்து ஒரு வேன் பணத்தை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு டொயோட்டா இன்னோவா கார் இவர்களை திடீரென வழிமறித்து நிறுத்தியது.

    இன்னோவாவில் இருந்த 7 பேர் வங்கி ஊழியர்களை அணுகி, தாங்கள் ரிசர்வ் வங்கியை சேர்ந்தவர்கள் எனக்கூறி ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அப்போது அந்த கும்பல் பணத்தை தங்களது காருக்கு வலுக்கட்டாயமாக மாற்றியுள்ளனர். பின்னர் ஊழியர்களை வேறு ஒரு இடத்தில இறக்கிவிட்டு பணத்துடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

    இதனையடுத்து, காவல்துறையினர் சிறப்பு குழுக்களை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • கோவைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமரிடம் இபிஎஸ் விரிவான கோரிக்கை ஒன்றை சமர்ப்பித்தார்.
    • ஜிஎஸ்டி 2.0 மற்றும் ஜிஎஸ்டி குறைப்புக்கான கோரிக்கைகள் வைத்தார்.

    கோவை வந்த பிரதமரிடம் 8 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசகாமி கோரிக்கை வைத்தார். அப்போது, மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டங்களை விரைவாக செயல்படுத்துமாறு பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிடப்படுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, இன்று (நவ.19) கோவைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமரிடம் விரிவான கோரிக்கை ஒன்றை சமர்ப்பித்தார்.

    தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் மற்றும் ஆர்வலர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு 2025" இல் பங்கேற்க கோவை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள நமது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை அன்புடன் வரவேற்பதில் மிகுந்த பெருமை அடைகிறேன். அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK), விவசாய சமூகம் மற்றும் கோவை மாவட்ட மக்கள் சார்பாக, எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உங்கள் தொலைநோக்குத் தலைமையின் கீழ், மத்திய அரசு தமிழ்நாடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மக்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் பயனளிக்கும் ஏராளமான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி உள்ளது.

    இந்த உணர்வில், பின்வரும் விஷயங்களில் உங்கள் அன்பான பரிசீலனை மற்றும் நடவடிக்கையை நான் மனதாரக் கேட்டுக்கொள்கிறேன்:

    1. இயற்கை விவசாயத்திற்கான ஆதரவு

    இயற்கை விவசாயத்தில், விவசாய உற்பத்தித்திறன் பொதுவாக ரசாயன அடிப்படையிலான முறைகள் மூலம் அடையப்படுவதை விட ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது, அதே நேரத்தில் விளைபொருட்களுக்கான சந்தை விலைகள் மிகக் குறைவாகவோ அல்லது வித்தியாசமாகவோ இல்லை. எனவே, இயற்கை விவசாயத்திற்கான அத்தியாவசிய உள்ளீடுகளை - மண்புழுக்கள், வேப்பம் பிண்ணாக்கு மற்றும் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள் - அதிக மானிய விலையில் வழங்குமாறு மத்திய அரசை நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    2. பயிர் வாரியான இயற்கை வேளாண்மை ஊக்கத்தொகைகள்

    கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேங்காய் மற்றும் தக்காளி, ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மாம்பழம், டெல்டா மாவட்டங்களில் நெல், திருச்சி, தூத்துக்குடி மாவட்டங்களில் வாழை, பல மாவட்டங்களில் கரும்பு போன்ற ஒவ்வொரு முதன்மை பயிரும் தனித்தனியாக பரிசீலிக்கப்பட வேண்டும், மேலும் இந்தப் பயிர்களின் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க தனிப்பயனாக்கப்பட்ட மானியங்கள் நீட்டிக்கப்பட வேண்டும். கூடுதலாக, இயற்கை முறையில் பயிரிடப்பட்ட பயிர்களை நேரடியாக சந்தைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அரசு வழிகள் மூலம் உற்பத்தி, இயற்கை விவசாயத்தை வளர்ப்பதற்கு சிறப்பு ஊக்கத்தொகை மானியங்களை வழங்குதல்.

    3. கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை விரைவுபடுத்துதல்

    கூடுதலாக, மறைந்த முதல்-அமைச்சர் அம்மா அறிவித்து, இந்த பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக நான் மீண்டும் வலியுறுத்திய கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை விரைவாக செயல்படுத்துமாறு தமிழக மக்கள் சார்பாக நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

    4. ஜிஎஸ்டி 2.0 மற்றும் ஜிஎஸ்டி குறைப்புக்கான கோரிக்கைகள்

    பிரதமர் நரேந்திர மோடி, ஜிஎஸ்டி 2.0 என்ற தலைப்பில் ஒரு முக்கிய வரி சீர்திருத்த முயற்சியை அறிவித்துள்ளார், இதன் கீழ் செப்டம்பர் 22, 2025 அன்று திருத்தப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்த சீர்திருத்தம் பரவலான பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், டிராக்டர்கள் மற்றும் விவசாய உபகரணங்களுக்கான ஜிஎஸ்டியை 5 சதவீதம் ஆகக் குறைப்பது இந்தியாவின் விவசாயத் துறையின் நவீனமயமாக்கலில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.

    இதேபோல், விவசாய மற்றும் வீட்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் மோட்டார் பம்ப் செட்களுக்கான ஜிஎஸ்டி விகிதத்தை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் ஆகக் குறைக்க வேண்டும், விவசாய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் பட்டியலில் பம்ப் செட்களைச் சேர்ப்பதன் மூலம். இந்த நடவடிக்கை கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பெரிதும் பயனளிக்கும், ஏனெனில் அங்கு பம்ப் செட் உற்பத்தி ஒரு முக்கிய தொழிலாகும், இதன் மூலம் தொழில்துறை வளர்ச்சி மற்றும் பிராந்திய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

    பொறியியல் வேலைகளுக்கான ஜிஎஸ்டி விகிதம் சமீபத்தில் 18 சதவீதம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது, இது தொழில்துறை பங்குதாரர்களிடையே கணிசமான கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SMEs) பணி மூலதனத் தேவைகள் கணிசமாக உயர்ந்து, அவற்றை நிதி நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளன. எனவே, நீண்டகால கோரிக்கைகளுக்கு ஏற்ப, ஜிஎஸ்டி விகிதத்தை 5 சதவீதம் ஆகக் குறைக்க வேண்டும் என்று நான் மனதார கேட்டுக்கொள்கிறேன். இத்தகைய குறைப்பு MSME துறைக்கு முக்கிய நிவாரணத்தையும் ஆதரவையும் வழங்கும்.

    5. மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மீதான ஜிஎஸ்டியைக் குறைத்தல்

    மேலும், மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளுக்கான ஜிஎஸ்டி தற்போது 18 சதவீதம் ஆக உள்ளது. இந்த விகிதத்தை 5 சதவீதம் ஆகக் குறைக்க வேண்டும். அதேபோல், மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் ஆகக் குறைக்க வேண்டும்.

    சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்த, சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகள் மற்றும் கவர்கள் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களுக்கான 18 சதவீதம் ஜிஎஸ்டி விகிதத்தையும் 5 சதவீதம் ஆகக் குறைக்க வேண்டும், மேலும் இந்த மூலப்பொருட்களிலிருந்து பெறப்பட்ட முடிக்கப்பட்ட காகித அடிப்படையிலான பொருட்கள் அதே குறைந்த விகிதத்தில் ஈர்க்கப்பட வேண்டும்.

    6. கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலைய விரிவாக்கம்

    உள்கட்டமைப்பு மேம்பாட்டைப் பொறுத்தவரை, கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்திற்கான நிலம் கையகப்படுத்தும் செயல்முறை நிறைவடைந்துள்ளது, மேலும் கையகப்படுத்தப்பட்ட நிலம் ஏற்கனவே இந்திய விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை விரைவாக நிறைவேற்றுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரை அதிமுக சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

    7. கோயம்புத்தூர்-ராமேஸ்வரம் ரெயில் பாதையை மீட்டமைக்கவும்

    கோயம்புத்தூர் சந்திப்பிலிருந்து போத்தனூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி மற்றும் திண்டுக்கல் வழியாக ராமேஸ்வரம் செல்லும் ரெயில் பாதை முன்பு மீட்டர்-கேஜ் பாதையாக இயங்கி வந்தது. ஏனெனில் அகலப்பாதை மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன, இந்த வழித்தடத்தில் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன, இன்னும் இயக்கப்படவில்லை. இந்த முக்கியமான பாதையில் ரெயில் செயல்பாடுகளை விரைவில் மீட்டெடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கோவை மக்கள் சார்பாக, அகலப்பாதை மாற்றம் முடிந்தவுடன், இந்த வழித்தடத்தில் ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

    8. கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு இடையே இரவு நேர ரெயில்கள்

    தமிழ்நாட்டின் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான கோவை, ஜவுளித் தொழில், பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களுக்கான மையமாக உள்ளது. கூடுதலாக, திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் போன்ற அண்டை மாவட்டங்களிலிருந்து தொழில்முனைவோர், மாணவர்கள், ஐடி வல்லுநர்கள் மற்றும் தொழில்துறை தொழிலாளர்கள் வணிகம், கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக கர்நாடகாவின் பெங்களூருக்கு அடிக்கடி பயணம் செய்கிறார்கள். வார இறுதி நாட்களில் பெங்களூருக்கும் கோவைக்கும் இடையே பயணிகள் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

    இருப்பினும், தற்போதைய ரெயில் சேவைகள் பகல் நேரங்களில் மட்டுமே இயங்குகின்றன, மேலும் இந்த தேவையை பூர்த்தி செய்யும் இரவு நேர ரெயில்கள் இல்லை. கேரளாவிலிருந்து சில இரவு நேர ரெயில்கள் பெங்களூருக்கு செல்லும் வழியில் கோவை வழியாக சென்றாலும், அவற்றில் அரிதாகவே போதுமான இருக்கைகள் உள்ளன.

    எனவே, அதிகரித்து வரும் இந்த தேவையை பூர்த்தி செய்யவும், பிராந்தியத்தின் தொடர்ச்சியான தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கவும், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு இடையே புதிய இரவு நேர ரயில் சேவைகளை அறிமுகப்படுத்துவதை நான் கடுமையாக பரிந்துரைக்கிறேன். முன்மொழியப்பட்ட அட்டவணையில், கோயம்புத்தூர் நிலையத்திலிருந்து 22:00 மணி முதல் 22:30 மணி வரை புறப்படும் ரெயில், அதிகாலை 5:30 மணிக்கு பெங்களூருவை வந்தடையும், இதனால் பயணிகள் காலையில் தங்கள் அலுவலகங்களை சரியான நேரத்தில் அடைய முடியும்.

    சமர்ப்பிப்பில் சேர்க்கப்பட்டுள்ள கூடுதல் பிரதிநிதித்துவம்: ஜவுளி மற்றும் பின்னல் துறைக்கான நிவாரண நடவடிக்கைகள்

    அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதியில், குறிப்பாக அதிக உழைப்பு மற்றும் மூலதனம் தேவைப்படும் ஜவுளி மற்றும் ஆடைத் துறைக்கு ஏற்படும் எதிர்பாராத சவால்களைச் சமாளிக்க ஒரு நிவாரணப் பொதியை சமீபத்தில் அறிவித்ததற்காக இந்தியப் பிரதமருக்கு நான் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன், நன்றி கூறுகிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தனது நண்பரை வீடியோ எடுக்கக் கூறி, பின்னர் எடிட் செய்து ரீல்ஸ் பதிவிட்டுள்ளார்.
    • இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவியது.

    சென்னையில் நீதிமன்றம் உள்ளே குற்றவாளிக் கூண்டில் நிற்பதை வீடியோ பதிவு செய்து பின்னணி இசையுடன் பரத் என்ற நபர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலானது.

    வழக்கு விசாரணைக்கு ஆஜரான அவர், தனது நண்பரை வீடியோ எடுக்கக் கூறி, பின்னர் எடிட் செய்து ரீல்ஸ் பதிவிட்டுள்ளார்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவிய நிலையில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்ட பரத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், வீடியோ எடுத்த 17 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்துள்ளனர்

    கைதான பரத் (24) மீது ஏற்கனவே வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

    • சென்னை ஐகோர்ட், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு கடந்த மாதம் 24-ந்தேதி மாற்றி உத்தரவிட்டது.
    • ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ந்தேதி அவருடைய வீட்டிற்கு அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்பட 27 பேரை கைது செய்தனர். அதில் ரவுடி திருவேங்கடம் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    ரவுடி நாகேந்திரன் உடல்நல பிரச்சனையால் காலமானார். மேலும் இருவர் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதால் அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இந்த வழக்கில் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு உள்ளதால் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு கடந்த மாதம் 24-ந்தேதி மாற்றி உத்தரவிட்டது.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு வழக்கறிஞர் சபரீஷ் சுப்ரமணியன் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்து இருந்தார்.

    அந்த மனு மீது நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி அஞ்சரியா ஆகியோர் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு வாதம் முன்வைத்தது . இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றிய ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதித்தது.

    மேலும், ஒவ்வொரு வழக்கிலும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிடக் கோருவதை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. 

    ×