என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு தடை - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- சென்னை ஐகோர்ட், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு கடந்த மாதம் 24-ந்தேதி மாற்றி உத்தரவிட்டது.
- ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ந்தேதி அவருடைய வீட்டிற்கு அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்பட 27 பேரை கைது செய்தனர். அதில் ரவுடி திருவேங்கடம் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ரவுடி நாகேந்திரன் உடல்நல பிரச்சனையால் காலமானார். மேலும் இருவர் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதால் அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த வழக்கில் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு உள்ளதால் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு கடந்த மாதம் 24-ந்தேதி மாற்றி உத்தரவிட்டது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு வழக்கறிஞர் சபரீஷ் சுப்ரமணியன் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்து இருந்தார்.
அந்த மனு மீது நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி அஞ்சரியா ஆகியோர் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு வாதம் முன்வைத்தது . இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றிய ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதித்தது.
மேலும், ஒவ்வொரு வழக்கிலும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிடக் கோருவதை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.






