என் மலர்
இந்தியா
- கூட்ரோடு பகுதியில் அமைந்துள்ள புதிய மேம்பாலத்தில் வேகமாக வந்த கார் பைக் மீது மோதியது.
- விபத்தில் காயமடைந்தவர்கள் இளைஞர்கள் வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை காரைகாட்டன் பஜார் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மகன் தினேஷ் (வயது 20). வேலூர் ரங்காபுரம் ஏகாம்பர தெருவை சேர்ந்த அல்லாபக்சா மகன் ஷாஜகான் (26). ஆற்காடு காந்திநகரை சேர்ந்த தமிழரசன் மகன் பாலமுருகன் (19).
நண்பர்களான இவர்கள் 3 பேரும் இன்று அதிகாலை 3 மணியளவில் வாலாஜாவில் இருந்து ராணிப்பேட்டை நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தனர். ராணிப்பேட்டை நாவல்பூர் புதிய ரெயில்வே மேம்பாலத்தில் சென்றபோது எதிரே சிப்காட் பகுதியிலிருந்து ராணிப்பேட்டை நோக்கி வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கார் பைக் மீது மோதியது.
இதில் பைக்கில் வந்த தினேஷ், ஷாஜகான், பாலமுருகன் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த ஷாஜகான், பாலமுருகன் ஆகியோரை சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஷாஜகான் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்ட பாலமுருகனும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் 3 வாலிபர்களின் உடல் களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களான 3 வாலிபர்கள் விபத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- நம் தாய் அமைப்பான நீதிக்கட்சி தலைதூக்கிய நாள் இன்று.
- நீதிக்கட்சியின் நீட்சியே நம் திராவிட மாடல் ஆட்சி எனத் தொடர்ந்து மெய்ப்பிப்போம்!
சென்னை:
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நம் உரிமைக்குரலின் உதயம்!
இந்த மண்ணின் மைந்தர்களுக்குக் கல்வி - வேலைவாய்ப்பு - அதிகாரத்தில் உரிய பங்கைப் பெற்றுத் தந்து, சமூகநீதியை நிலைநாட்டியே தீருவது என்ற #NonBrahminManifesto-வைச் செயல்படுத்திக் காட்ட, நம் தாய் அமைப்பான நீதிக்கட்சி தலைதூக்கிய நாள் இன்று.
நீதிக்கட்சியின் நீட்சியே நம் திராவிட மாடல் ஆட்சி எனத் தொடர்ந்து மெய்ப்பிப்போம்! சூழும் ஆரிய சூழ்ச்சிகளை எல்லாம் சுக்குநூறாக உடைத்தெறிவோம்! என்று பதிவிட்டுள்ளார்.
- தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும்.
சென்னை:
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இம்மாதம் தொடக்கத்தில் இருந்து சற்று தொய்வு ஏற்பட்டாலும், கடந்த 3 நாட்களாக மீண்டும் பரவலாக பெய்யத் தொடங்கி உள்ளது. அதிலும் டெல்டா, தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இதன் தொடர்ச்சியாக 22-ந்தேதி (நாளை மறுநாள்) இலங்கையையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 24-ந்தேதி (திங்கட்கிழமை) வரையிலான 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
இதனையடுத்து, மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி 24-ந்தேதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 22-ந்தேதி உருவாகக்கூடிய தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து புயலாக மாறுமா? அல்லது அந்தமான் கடல் பகுதியில் புதிதாக உருவாகி வரக்கூடிய தாழ்வுப் பகுதி புயலாக மாறுமா? என்பது 26-ந்தேதிக்கு பிறகு தான் சொல்ல முடியும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறினார்.
- நிதிஷ்குமார், மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஓய்வின்றி உழைக்குமாறு எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.சி.க்களை கேட்டுக்கொண்டார்.
- பாட்னாவில் நடைபெறும் விழாவில் கவர்னர் ஆரிப் முகமது கான், நிதிஷ் குமாருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
பாட்னா:
243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்டசபையில் 202 இடங்களைப்பெற்று ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதில் முக்கியமாக, பா.ஜ.க. 89, ஐக்கிய ஜனதாதளம் 85 தொகுதிகளில் வெற்றி பெற்றன.
இதைத்தொடர்ந்து மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான புதிய அரசு பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடந்தது. இதில் 22 எம்.எல்.சி.க்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், சட்டசபை கட்சித்தலைவராக நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பெயரை விஜய் சவுத்ரி மற்றும் உமேஷ் குஷ்வாகா ஆகியோர் முன் மொழிந்தனர். பிஜேந்திர யாதவ் உள்ளிட்டோர் வழிமொழிந்தனர்.
பின்னர் பேசிய நிதிஷ்குமார், மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஓய்வின்றி உழைக்குமாறு எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.சி.க்களை கேட்டுக்கொண்டார்.
ஐக்கிய ஜனதாதளத்தின் சட்டசபைக்குழு தலைவராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டசபைக்குழு தலைவராக (முதல்-மந்திரி) நிதிஷ் குமார் தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.
மாநிலத்தின் முதல்-மந்திரியாக 10-வது முறையாக நிதிஷ் குமார் இன்று பதவியேற்கிறார். தலைநகர் பாட்னாவில் நடைபெறும் விழாவில் கவர்னர் ஆரிப் முகமது கான், நிதிஷ் குமாருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
இதற்கிடையே பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டமும் நேற்று நடந்தது.
இதில் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவராக சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவராக விஜய் குமார் சின்கா தேர்வானார்.
பா.ஜ.க. சட்டசபைக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலுக்கான மேலிட பார்வையாளராக உத்தரபிரதேச துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா நியமிக்கப்பட்டு இருந்தார்.
மேலும் மத்திய மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால், முன்னாள் மத்திய மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதி ஆகியோர் இணை பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். மேலும் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத்தும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பா.ஜ.க. சட்டசபைக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட சாம்ராட் சவுத்ரி, முந்தைய ஆட்சியில் துணை முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒரு பெட்டியில் சுமார் 23 டன் பார்சல்கள் ஏற்றி செல்ல முடியும்.
- ரெயில்வே அனுமதித்த பொருட்கள் மட்டுமே எடுத்துசெல்ல முடியும்.
சென்னை:
தெற்கு ரெயில்வேயில் முதன் முறையாக பார்சல்களை அனுப்புவதற்கான 12 பெட்டிகள் கொண்ட தனி ரெயில் அடுத்த மாதம் 12-ந்தேதி முதல் இயக்கப்படவுள்ளன. கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து சென்னை ராயபுரம் வரை இயக்கப்பட உள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு குறிப்பிட்ட ரெயில் நிலையங்களுக்கான பார்சல்களை ஏற்றுவதற்கு ஒதுக்கப்படும்.
ஒரு பெட்டியில் சுமார் 23 டன் பார்சல்கள் ஏற்றி செல்ல முடியும். வாரத்தில் ஒரு நாள் இயக்கப்படும் இந்த ரெயில் மங்களூருவில் இருந்து டிசம்பர் 12-ந் தேதி புறப்பட்டு 13-ந் தேதி மதியம் 1.30 மணிக்கு சென்னை ராயபுரம் வந்தடையும். பின்னர், 16-ந்தேதி மாலை 3.45 மணிக்கு ராயபுரத்தில் இருந்து புறப்பட்டு மங்களூரு சென்றடையும்.
இதில் ரெயில்வே அனுமதித்த பொருட்கள் மட்டுமே எடுத்துசெல்ல முடியும். ரெயிலில் அனுப்பப்படும் பார்சல்களுக்கு 3 பிரிவில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து செல்லும் இந்த ரெயிலானது சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, கோழிக்கோடு, கன்னூர் உள்ளிட்ட 12 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். அடுத்தக்கட்டமாக சென்னையிலிருந்து திருச்சி, மதுரை வழியாக திருவனந்தபுரத்துக்கு இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தம்பதியினர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
- வழக்கில் இறுதி தீர்வுக்காக அவர் மனைவிக்கு ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டும்.
மும்பை:
குடும்ப நலக்கோர்ட்டில் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்ட ஒருவரின் மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், "நான் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டேன். ஆனால் கருத்து முரண்பாடு காரணமாக 2012-ம் ஆண்டு முதல் நானும், எனது மனைவியும் பிரிந்து வாழ்கிறோம். எனது மனைவி தற்கொலை செய்து கொள்வதாக அடிக்கடி மிரட்டல் விடுத்தார். எனவே மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நலக்கோர்ட்டில் மனு செய்தேன். ஆனால் எனது மனுவை குடும்ப நலக்கோர்ட்டு நிராகரித்து விட்டது.
இந்து திருமண சட்டத்தின்படி பிரிந்து செல்வது, சந்தேகம், மிரட்டல், தற்கொலைக்கு முயற்சிப்பது போன்ற காரணங்களுக்காக விவாகரத்து பெற முடியும். அதன் அடிப்படையில் எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், நீதிபதி கவுதம் அன்காட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது. அதில் மனைவியிடம் இருந்து கணவருக்கு அதிரடியாக விவாகரத்து வழங்கியது. நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
தம்பதியினர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனித்தனியாக வசித்து வருகின்றனர். எனவே அவர்களுக்கு இடையே ஒரு இணக்கமான தீர்வு அல்லது சமரசம் ஏற்பட எந்த சாத்தியமும் இல்லை.
மனுதாரர் தனக்கு நேர்ந்த பல கொடுமையான சம்பவங்களை குறிப்பிட்டுள்ளார். ஆனால் குடும்நல கோர்ட்டு அவற்றை கருத்தில் கொள்ளவில்லை.
குடும்ப உறவில் ஒரு துணைவரின் தற்கொலை மிரட்டல் என்பது மற்றொருவரை சித்ரவதை செய்வதற்கு சமமாகும். இதை சுப்ரீம் கோர்ட்டே ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
வார்த்தைகள், சைகைகள் அல்லது அசைவுகள் மூலம் இதுபோன்ற மிரட்டல் மீண்டும் மீண்டும் விடுக்கப்படும்போது, துணைவரால் அமைதியான சூழலில் திருமண உறவில் தொடர முடியாது. அத்தகைய திருமண உறவை தொடர வலியுறுத்துவது, இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கொடுமையை அனுபவிக்க கூறுவதுபோல் ஆகிவிடும். எனவே இந்த வழக்கில் கணவருக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது. மேலும் வழக்கில் இறுதி தீர்வுக்காக அவர் மனைவிக்கு ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டும். மேலும் 2 வீடுகளின் உரிமையை அந்த பெண்ணுக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
- மதுரையைப் பொறுத்தவரை அங்கு மக்கள்தொகை குறைவாக உள்ளது.
- 20 லட்சம் மக்கள்தொகைக்கு மேற்பட்ட நகரங்களிலேயே மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடலாம்.
புதுடெல்லி:
தமிழகத்தில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் திறம்பட செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த திட்டங்களை மத்திய அரசு நிராகரித்து விட்டதாக நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாகின. இதற்கு தமிழகத்தில் அதிருப்தி கிளம்பியது.
இந்தநிலையில் மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் இந்த நிராகரிப்புக்கான காரணங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசுக்கு அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கான தமிழக அரசின் பரிந்துரையை தெரிவித்து வந்த கடிதங்கள் சரிபார்க்கப்பட்டன. இந்தத் திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக தெரிகிறது.
அந்த ஆய்வில் சில விஷயங்கள் கவனிக்கப்பட்டன.
கோவையில் 34 கி.மீ. நீளத்துக்கு மெட்ரோ ரெயில் இயக்க திட்டமிடப்பட்ட நிலையில் அங்கு ஏற்கனவே உள்ள சாலைப்போக்குவரத்தின் பயண நேரம் மெட்ரோ ரெயிலின் பயண நேரத்தை விட குறைவாக உள்ளது. மேலும் மக்கள்தொகையை கணக்கிடும்போது சென்னை 1- ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தை விட 4 லட்சம் பேர் மட்டுமே அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. பயண நேரத்தின் அடிப்படையில் மக்கள் மெட்ரோவுக்கு மாற வாய்ப்பில்லை என தெரிய வருகிறது.
மதுரையைப் பொறுத்தவரை அங்கு மக்கள்தொகை குறைவாக உள்ளது. மெட்ரோ ரெயில் இயக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 20 லட்சம் மக்கள் இருக்க வேண்டும் என திட்டமிடப்பட்டு இருக்கிறது. ஆனால் 2011- ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மதுரையின் மக்கள்தொகை 15 லட்சம் மட்டுமே.
இந்த காரணங்கள் தவிர மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக பல கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டும். பல கட்டிடங்கள் மிக விலை உயர்ந்ததாக இருக்கலாம். இதனால் பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்படலாம். கோவையின் மக்கள்தொகை 15.84 லட்சம் உள்ளது. எனவே 20 லட்சம் மக்கள்தொகைக்கு மேற்பட்ட நகரங்களிலேயே மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
- புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மழைக்கு வாய்ப்பு.
சென்னை:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வருகின்ற 22-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திமுக அரசைக் கண்டித்து 17ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தது.
- மழை எச்சரிக்கையால் இந்த ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை:
அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காஞ்சீபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய சட்டசபை தொகுதிகளில் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வரும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களை மிரட்டி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை கண்டும் காணாமலும் இருந்து வரும் தி.மு.க. அரசைக் கண்டித்து, காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 20-ம் தேதி (இன்று) நடைபெற உள்ளது.
ஆர்ப்பாட்டம் காலை 10 மணியளவில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் (காவலான் கேட்) நடைபெறும். முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
- கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது.
- இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி தோல்வி அடைந்தார்.
பனாஜி:
கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. அதன் ஐந்தாவது சுற்றுப் போட்டிகள் நடந்தன. முதல் சுற்றில் அர்ஜூன் ஏரிகைசி, அமெரிக்காவின் லெவான் அரோனியன் உடனான ஆட்டம் டிரா ஆனது. 2-வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி, லெவான் அரோனியனை வீழ்த்தி காலிறுதிக்கு சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.
இந்நிலையில், காலிறுதியில் சீனாவின் வெய் யீ, இந்தியாவின் அர்ஜூன் எரிகைசியை 2.5 -1.5 என்ற புள்ளியில் வென்றார். இதன்மூலம் இந்தியாவின் எரிகைசி தொடரில் இருந்து வெளியேறினார்.
- தென் ஆப்பிரிக்காவில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
- இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா செல்கிறார்.
புதுடெல்லி:
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நவம்பர் 21 முதல் 23ம் தேதி வரை ஜி20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார், அதற்காக அவர் ஜோகன்னஸ்பர்க் செல்கிறார் என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநாட்டில் 3 முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி பேசுகிறார்.
இந்த அமர்வில் காலநிலை மாற்றம், எரிசக்தி மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் உரையாற்ற உள்ளார்.
உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பல உலக நாடுகளின் தலைவர்களுடனும் பிரதமர் மோடி சந்தித்துப் பேச உள்ளார்.
இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
- 1986-ம் ஆண்டு முதல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரால் இந்த விருது வழங்கப்படுகிறது.
- ரூ.25 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டது இந்த விருது.
புதுடெல்லி:
சிலியின் முன்னாள் அதிபரும், மனித உரிமைகளுக்கான உலகளாவிய வழக்கறிஞருமான மிச்செல் பச்லெட்டுக்கு அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான 2024-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டார் என டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை அறிவித்திருந்தது.
மனித உரிமை, அமைதி, சமத்துவம் ஆகிய துறைகளில் முன்னாள் சிலி அதிபர் மைக்கேல் பேச்லெட் ஆற்றிய பங்களிப்புக்காக இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐ.நா. சபையின் முதல் பெண் இயக்குநர், மனித உரிமைகளுக்கான ஐ.நா.சபையின் உயர் தூதர், சிலி நாட்டின் அதிபராக 2 முறை பணியாற்றியது போன்ற பணிகளுக்காகவும் அவர் இந்த விருதைப் பெறுகிறார்.
ரூ.25 லட்சம் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டது இந்த விருது. 1986-ம் ஆண்டு முதல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரால் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள ஜவஹர் பவனில் நடந்த நிகழ்ச்சியில் மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் தலைவரான சோனியா காந்தி இந்திரா காந்தி விருதை மிச்செல் பச்லெட்டுக்கு வழங்கினார். இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வெரோனிகா மைக்கேல் பேச்லெட் ஜெரியா என்ற முழு பெயர் கொண்ட பேச்லெட் அமைதி, சமத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்கான உறுதியான அர்ப்பணிப்பிற்காக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறார். அவரது புகழ்பெற்ற வாழ்க்கையில், அவர் ஐ.நா.பெண்களின் நிறுவன இயக்குநராக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர், மற்றும் சிலியின் முதல் பெண் அதிபராக இரு முறை பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






