என் மலர்
இந்தியா
- நாழிக்கிணறு தீர்த்தம் உள்பட 24 தீர்த்த கட்டங்கள் உள்ளன.
- 4 அடி உயரம் கொண்ட கல்வெட்டு ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடல் மற்றும் கடலுக்கு அருகில் நாழிக்கிணறு தீர்த்தம் உள்பட 24 தீர்த்த கட்டங்கள் உள்ளன. தற்போது நாழி கிணறு தீட்டத்த கட்டம் மட்டும் பக்தர்கள் பயன்பாட்டில் உள்ளது.
பொதுவாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்குவதும் வெளியே வருவதும் இயல்பு. இந்த நேரங்களில் கடலில் இருந்து ஏதாவது கல்வெட்டுகள், மற்றும் பாறைகள் வெளியே தெரியும்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடல் கரையில் சுமார் 4 அடி உயரம் கொண்ட கல்வெட்டு ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது.
அதனை அங்கிருந்த பவுர்ணமி சித்தர் என்பவர் அதை கண்டு கல்வெட்டு மீது திருநீறு பூசி அதில் பொறிக்கப் பட்டிருந்த எழுத்துக்களை பார்த்த போது கந்த மாதன தீர்த்தம் என்று எழுதப்பட்டிருந்தது.
இந்த கல்வெட்டு 24 தீர்த்த கட்டங்களில் ஒன்றாகும். இந்த தீர்த்தத்தில் நீராடுபவர்கள் பாவங்களை நீக்கி அவர்களை பரிசுத்தமாக்கும் என்பது ஐதீகம். இதுவும் அந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவில் நிர்வாகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிர்வாகத்தினர் வந்து கல்வெட்டை எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைத்துள்ளனர்.இந்த கல்வெட்டை ஏராளமான பக்தர்கள் பார்த்து வணங்கி சென்றனர்.
- ஏழை இஸ்லாமிய மக்கள் பயனடையப் போகிறார்கள்.
- எங்கள் கடின உழைப்புக்கு கிடைத்த பலன்.
புதுடெல்லி:
வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, 8 மணி நேரம் விவாதம் நடத்த உள்ளதாகவும், தேவைப்படும் பட்சத்தில் விவாத நேரத்தை அதிகரிக்க உள்ளதாகவும் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுத் தலைவர் ஜகதாம்பிகா பால் கூறியதாவது:-
இன்று திருத்தப்பட்ட மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது. இது நிச்சயமாக ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். மசோதா நிறைவேற்றப்படுவதன் மூலம், ஏழை இஸ்லாமிய மக்கள் பயனடையப் போகிறார்கள்.
கடந்த 6 மாதங்களாக நாங்கள் கூட்டுக் குழுவில் ஆலோசித்துள்ளோம். எதிர்க்கட்சிகள் நாள்தோறும் 8 மணிநேரம் பேசியதை நாங்கள் கேட்டிருக்கிறோம். மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பது எங்கள் கடின உழைப்புக்கு கிடைத்த பலன்.
எதிர்க்கட்சிகளும், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமும் ரம்ஜான் தொழுகையின்போது மசூதிகளில் கருப்பு பட்டை அணியுமாறு கூறியது, இந்த பிரச்சனையை அரசியலாக்குகின்றனர் என்றார்.
- ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சென்னை-இலங்கை இடையே 7 விமான சேவைகளை புதிதாக தொடங்குகிறது.
- வாரத்தில் 2 நாட்கள் இயக்கப்பட்ட விமானம், இனிமேல் 3 நாட்களும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
ஆலந்தூர்:
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ள நிலையில் விரைவில் கல்வி நிலையங்களில் தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட உள்ளது. இதையடுத்து கோடை விடுமுறையை ஜாலியாக கழிக்க பெரும்பாலானோர் வெளியூர் மற்றும் வெளி நாடுகள் போன்றவைகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு உள்ளனர். இதனால் வெளி மாநிலங்களில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லும் விமானங்களிலும், வெளிநாடு செல்லும் விமானங்களிலும் டிக்கெட் முன்பதிவு பெரும்பாலும் முடிந்து விட்டது. கட்டணமும் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
வழக்கமாக சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களில் வழக்கமாக வருகை புறப்பாடுகள் பயணிகள் எண்ணிக்கை, நாளொன்றுக்கு சுமார் 50,000 ஆக இருந்தது, தற்போது இது 60 ஆயிரத்தை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. கோடை விடுமுறை நாட்களில் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணையம், சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்து உள்ளது. சென்னை-இலங்கை இடையே ஏர் இந்தியா விமான நிறுவனம் வாரத்தில் 7 விமானங்களை இயக்கி வந்தன. இது வாரம் 10 விமானங்களாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சென்னை-இலங்கை இடையே 7 விமான சேவைகளை புதிதாக தொடங்குகிறது. இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கு, மழைக்காலத்தில் மோசமான வானிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அலையன்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், கோடை சிறப்பாக, சென்னை-யாழ்ப்பாணம் இடையே வாரம் 7 விமான சேவைகளை தொடங்க உள்ளது.
இவை தவிர சென்னை-குவைத் இடையே வாரத்தில் 5 விமானங்கள் இயக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், இனிமேல் வாரத்தில் 7 விமானங்களும், சென்னை-மஸ்கட் இடையே வாரத்தில் ஒரு நாள் இயக்கப்பட்ட விமானம், இனிமேல் வாரத்தில் இரண்டு நாட்களும், சென்னை- தமாம் இடையே, வாரத்தில் 2 நாட்கள் இயக்கப்பட்ட விமானம், இனிமேல் 3 நாட்களும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் வாரத்தில் 7 நாட்கள், சென்னை-குவைத் இடையே விமான சேவையை புதிதாக தொடங்குகிறது. மேலும் ஓமன் ஏர்வேஸ் நிறுவனம், சென்னை-மஸ்கட் இடையே வாரத்தில் 11 விமானங்களை இயக்கியது, இனிமேல் 14 விமானங்களாகவும், சென்னை-பக்ரைன் இடையே கல்ப் ஏர்வேஸ் நிறுவனம் வாரம் 7 விமானங்களை இயக்கியது, இனிமேல் 10 விமானங்களாகவும், சென்னை-டாக்கா இடையே யூ எஸ் பங்களா ஏர்லைன்ஸ் நிறுவனம் வாரம் 3 விமானங்களை இயக்கியது. இனிமேல் 11 விமானங்களை இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கோடை காலத்தில் சம்மர் ஸ்பெஷல் விமானங்களாக, மொத்தம் 42 புதிய சர்வதேச விமானங்கள் இயக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதைப்போல் உள்நாட்டு விமானங்களில், ஏர் இந்தியா விமான நிறுவனம் சென்னை-பெங்களூரு இடையே தற்போது வாரத்தில் 12 விமானங்கள் இயக்கி வரும் நிலையில், இனிமேல் அது 23 ஆகவும், டெல்லிக்கு 70 விமானங்கள் இயக்கி வரும் நிலையில் இனிமேல் 77 விமானங்க ளாகவும், மதுரைக்கு 7 விமானங்கள் இயக்கி வரும் நிலையில், இனிமேல் 14 விமானங்களாகவும், மும்பைக்கு இயக்கப்படும் 42 விமானங்கள் 49 விமானங்களாகவும் ஏர் இந்தியா அதிகரித்துள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் கொச்சிக்கு இயக்கும் 2 விமானங்களை, 14 ஆகவும், கவுகாத்திக்கு இயக்கும் 7 விமானங்களை, 21 விமானங்களாகவும், ஐதராபாத்துக்கு இயக்கும் 7 விமானங்களை, 21 விமானங்களாகவும் வாரணாசி, நொய்டாவுக்கு 7 விமானங்களும் புதிதாக இயக்குகின்றன.
இதைப்போல் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தூத்துக்குடிக்கு இயக்கும் 28 விமானங்களை 35 ஆகவும், திருச்சிக்கு இயக்கும் 46 விமானங்களை 49 ஆகவும், கொச்சிக்கு இயக்கும் 40 விமானங்களை 47 ஆகவும், அகமதாபாத்துக்கு இயக்கும் 27 விமானங்களை 28 ஆகவும் அதிகரித்து இயக்க முடிவு செய்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம், அயோத்தி, கொச்சி, ஐதராபாத் மதுரை, தூத்துக்குடி, புனே சீரடி, சிவமுகா ஆகிய விமான நிலையங்களுக்கு கூடுதலாக, விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது.
இதைப்போல் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் சம்மர் ஸ்பெஷலாக, 164 விமானங்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. இதில் பல விமான சேவைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. மற்ற விமான சேவைகள் படிப்படியாக, பயணிகள் கூட்டம் மற்றும் பயணிகளின் வரவேற்பை பொறுத்து கூடுதலாக இயக்கப்படும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் கோடை விடுமுறை பயணிகள் கூட்டத்தை சமாளிக்க, கோடை காலம் முழுமைக்கும் 42 சர்வதேச விமானங்கள், 164 உள்நாட்டு விமானங்கள் என மொத்தம் 206 கோடை சிறப்பு விமானங்கள் இயக்கப்படுவதாக சென்னை விமான நிலையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- ராஜகோபாலன் மீது வெண்ணையை வீசி அன்பை பொழிந்தனர்.
- நாளை காலை தேரோட்டம்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற ராஜகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. வைணவ தலங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலில் பெருமாள் சன்னதியில் மூலவராக பரவாசுதேவ பெருமாள் அருள்பாலிக்கிறார்.
உற்சவராக ராஜகோபால சுவாமி, ருக்மணி, சத்தியபாமா சமேதராக மாடு மேய்க்கும் கண்ணன் திருக்கோலத்திலும், செங்கமலத் தாயார் தனி சன்னதியிலும் அருள்பாலித்து வருகின்றனர்.
பெருமாளுக்கு ஆண்டு முழுவதும் உற்சவம் நடக்கும் கோவில்களில் இக்கோவிலும் ஒன்றாகும். மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் ஒரு மாத திருவிழா இக்கோவிலின் முக்கியமான விழாவாகும். அப்போது 18 நாட்கள் உற்சவமும், 12 நாட்கள் விடையாற்றியும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த மாதம் (மார்ச்) 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பெருமாள் சன்னதிக்கு எதிரே உள்ள பெரிய கொடிமரத்திற்கு பூஜைகள் நடைபெற்று, கருட பகவான் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.
தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் ராஜகோபால சுவாமி எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெறுகிறது. இதனை காண தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான வெண்ணைத் தாழி உற்சவம் இன்று (புதன்கிழமை) காலை விமரிசையாக நடந்தது. இதையொட்டி காலை நவநீத சேவையில் ராஜகோபாலன் பல்லக்கில் கோவிலில் இருந்து புறப்பட்டு 4 வீதிகளையும் வலம் வந்து, பெரிய கடைத்தெரு வழியாக சென்று காந்தி ரோட்டில் உள்ள வெண்ணெய் தாழி மண்டபத்தில் எழுந்தருளினார்.
வீதிஉலா சென்ற வழியெங்கும் பக்தர்கள் அலைகடலென திரண்டு தவழும் கண்ணனாக வரும் ராஜகோபாலன் மீது வெண்ணையை வீசி அன்பை பொழிந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வெண்ணையை வீசி வழிபட்டதால் மன்னார்குடி நகரமே விழாக்கோலம் பூண்டது.
அதனைத் தொடர்ந்து, இரவு தங்க குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் காட்சி தருகிறார். தொடர்ந்து, நாளை (வியாழக்கிழமை) காலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
- குஷ்புவுக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.
- ஆந்திர மாநிலத்தில் சமந்தாவுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ் திரை உலகில் பிரபல கதாநாயகிகளான குஷ்பு, ஹன்சிகா, நமீதா ஆகியோருக்கு ரசிகர்கள் கோவில் கட்டி யுள்ள சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி யது. திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள குண்டூர் பர்மா காலனியில் குஷ்புவுக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் தமிழ் திரை உலகில் அறிமுகமாகி தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து தற்போது இந்திய திரை உலகில் பிரபல நடிகையாக சமந்தா உருவெடுத்து உள்ளார். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு திரை உலகிலும் சமந்தாவுக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.

பிரபல நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் சமந்தாவுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-
ஆந்திர மாநிலம் தெனாலி என்ற பகுதியில் இளைஞர் ஒருவர் சமந்தாவின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். இதைத்தொடர்ந்து அவர் வசித்து வரும் பகுதியில் சமந்தாவுக்கு கோவில் கட்டி உள்ளார். அவருக்கு கோவில் அமைத்து கோவிலினுள் சமந்தாவின் மார்பளவு சிலை அமைத்து தினமும் பூஜை செய்து வருகிறார்.
கோவிலின் நுழைவு வாயிலில் சமந்தா கோவில் என பெயர் வைத்துள்ளார். சமந்தாவுக்கு கோவில் கட்டி இருப்பதை அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் தினமும் குடும்பத்துடன் கோவிலுக்கு திரண்டு வருகின்றனர்.
கோவிலில் உள்ள சமந்தா சிலை முன்பு குடும்பத்தோடு நின்று ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். சமந்தாவுக்கு கோவில் கட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- பிரதமர் மோடி பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்கிறார்.
- இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் மோடி அங்கிருந்து 6-ந் தேதி ஹெலிகாப்டர் மூலம் நேரடியாக மண்டபத்தில் வந்து இறங்குகிறார்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தையும் மண்டபத்தையும் இணைக்கும் வகையில் புதிய ரெயில் மேம்பாலம் ரூ.545 கோடியில் கட்டப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. பிரதமர் மோடி பங்கேற்று புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்கிறார்.
முன்னதாக ஏப்ரல் 4, 5-ந் தேதிகளில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் மோடி அங்கிருந்து 6-ந் தேதி ஹெலிகாப்டர் மூலம் நேரடியாக மண்டபத்தில் வந்து இறங்குகிறார். அதனை தொடர்ந்து திறப்பு விழா நிகழ்ச்சிகளில் பிரதமர் கலந்து கொள்கிறார்.
இலங்கையில் இருந்து பிரதமர் மோடியை அழைத்து வருவதற்காக கோவை மாவட்டம் சூலூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்திற்கு சொந்தமான எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டர்கள் செல்ல உள்ளன. இதற்காக நேற்று உச்சிப்புளிக்கு வந்த 4 எம். ஐ.17 ஹெலிகாப்டர்கள் இங்கிருந்து இலங்கை காட்டுநாயக்க விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது.
திறப்பு விழா நடைபெறும் ஏப்ரல் 6-ந்தேதி அன்று காட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இலங்கை அனுராதபுரத்தில் உள்ள விமானப்படை தளத்திற்கு செல்லும். அங்கு காலை 10.40 மணிக்கு பிரதமர் மோடியை அழைத்துக் கொண்டு 11.40 மணிக்கு மண்டபம் முகாம் ஹெலிபேடில் வந்து இறங்கும். இவற்றில் மூன்று ஹெலிகாப்டர் மண்டபத்திற்கும், ஒரு ஹெலிகாப்டர் உச்சிப்புளி கடற்படை தளத்திற்கும் இயக்கப்பட உள்ளன. இதன் ஏற்பாடுகளை பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் செய்து வருகின்றனர்.
- கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
- சிறையில் வாடும் நமது மீனவர்களையும், அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டு கொண்டுவர வேண்டுமென்றும் இந்த பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.
சென்னை:
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை பல வருடங்களாக முன் வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கச்சத்தீவை மீண்டும் திரும்ப பெறுவதற்கான அரசின் தனித் தீர்மானத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டசபையில் கொண்டு வந்தார்.
அவர் முன்மொழிந்துள்ள தீர்மானத்தில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களை போக்கிடவும் கச்சத் தீவை மீண்டும் பெறுவதே நிரந்தர தீர்வாக அமையும்.
இதனை கருத்தில் கொண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
அரசு முறைப் பயணமாக இலங்கை செல்லும் பிரதமர் மோடி இலங்கை அரசுடன் பேசி, அந்நாட்டு சிறையில் வாடும் நமது மீனவர்களையும், அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டு கொண்டுவர வேண்டுமென்றும் இந்த பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிமன் பாசு செங்கொடியை ஏற்றி வைத்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.
- . வருகிற 6-ந்தேதி மதுரை பாண்டி கோவில் எல்காட் அருகில் இருந்து சுமார் 25 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்கும் அணிவகுப்பு நடக்கிறது.
மதுரை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று தொடங்கி வருகிற 6-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
அகில இந்திய மாநாட்டின் முதல் நாள் நிகழ்வாக இன்று காலை மதுரை தமுங்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள திடலில் மத்திய குழு உறுப்பினர் வாசுகி, வெண்மணி தியாகிகள் நினைவு செங்கொடியை வழங்க, மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் பத்மநாபன் செங் கொடியை பெற்றுக்கொண் டார். பின்னர் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிமன் பாசு செங்கொடியை ஏற்றி வைத்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து கொடியேறி பாலகிருஷ்ணன் நினைவு அரங்கில் கட்சியின் பொது மாநாடு தொடங்கியது. மாநாட்டிற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினரும், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக்க சர்க்கார் தலைமை தாங்கினார். வரவேற்பு குழு தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா, சி.பி.ஐ. எம்.எல். விடுதலை பொதுச் செயலாளர் திபாங்கர் பட்டாச்சார்யா, ஆர்.எஸ்.பி. பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் தேவராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையில் பொது மாநாடு தொடங்கி நடைபெற்றது.
முன்னதாக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் இருந்து சாலை மார்க்கமாக நேற்று மாலை மதுரை வந்தார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக தமுக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மாநாட்டு அரங்கினை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், மாநில செயலாளர் சண்முகம், முன்னாள் மாநில செயலாளர் பால கிருஷ்ணன், வெங்கடேசன் எம்.பி. ஆகியோர் பார்வையிட்டனர்.
மாநாட்டின் முக்கிய நிகழ்வாக நாளை மாலை 5 மணிக்கு கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை என்னும் தலைப்பில் மாநில உரிமைகள் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. கருத்தரங்கிற்கு மத்திய குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார்.
மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கணேசன் வரவேற்கிறார். கருத்தரங்கின் நோக்கம் குறித்து ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் உரையாற்றுகிறார். கருத்தரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளா முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக மாநில வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா, சி.பி.ஐ.எம். ஒருங்கிணைப் பாளர் பிரகாஷ் காரத் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
மாநாட்டில் விஜய் சேதுபதி, சமுத்திரகனி, வெற்றிமாறன், பிரகாஷ் ராஜ், மாரி செல்வராஜ், ஞானவேல், சசிக்குமார், பிரகாஷ்ராஜ், ராஜூமுருகன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்கின்றனர். பொது மாநாட்டை தொடர்ந்து இன்று பிற்பகல் தொடங்கி வரும் 6-ந்தேதி வரை 5 நாட்களுக்கு பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்தியா முழுவதும் இருந்து சுமார் 1,000 பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
மாநாடு நடைபெறும் 6 நாட்களும் மாலை நேரங்களில் தோழர் ஜானகி அம்மாள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள திறந்த வெளி மேடையில் கலை நிகழ்ச்சிகள் கருத்தரங்கள் நடைபெறுகின்றன. வருகிற 6-ந்தேதி மதுரை பாண்டி கோவில் எல்காட் அருகில் இருந்து சுமார் 25 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்கும் அணிவகுப்பு நடக்கிறது. இதனை வாச்சாத்தி போராளிகள் தொடங்கி வைக்கின்றனர். அன்று மாலை 4 மணிக்கு வண்டியூர் ரிங் ரோடு சுங்கச்சாவடி அருகே பிரம்மாண்ட பொதுக்கூட்டம் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்கின்றனர்.
அந்நிகழ்வில் கட்சியின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத், கேரளா முதல்வர் பினராய் விஜயன், அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், ராமகி ருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், வாசுகி, சம்பத் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் ரெயில், வாகனங்கள் மூலம் நேற்று காலை முதலே மதுரைக்கு வந்த வண்ணம் உள்ளனர். மேலும் மதுரை மாநகர் முழுவதும் செங்கொடிகள் பறக்க விடப்பட்டு ஆங்காங்கே வரவேற்பு பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மாநாடு என்பதால் அகில இந்திய அளவில் கட்சியின் பிரதிநிதிகள் முக்கிய தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
- வருகிற 4-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
- 1-ந்தேதி முதல் 4 நாட்கள் மரகத நடராஜர் சன்னதி திறந்திருக்கும்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை என்ற ஸ்தலத்தில் மங்கள நாதர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 4-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானம், தமிழக அரசு மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் வழங்கப்பட்ட பல கோடி ரூபாய் நிதி மூலம் திருப்பணிகள் முடி வடைந்துள்ளன. 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியில் இருந்து 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு கோவிலில் அமைந்துள்ள அபூர்வ மரகத நடராஜர் சன்னதியானது நேற்று நள்ளிரவு திறக்கப்பட்டு மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்ட சந்தனம் களையப்பட்டது. அப்போது திரளான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர்.
ஆருத்ரா தரிசன விழாவின் போது ஆண்டுக்கு ஒரு நாள் மட்டுமே மரகத நடராஜர் சன்னதி திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஜனவரி 12-ந் தேதி அன்று திருஉத்திரகோச மங்கை கோவிலில் மரகத நடராஜர் சன்னதி திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தற்போது கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு 1-ந்தேதி முதல் 4 நாட்கள் மரகத நடராஜர் சன்னதி திறந்திருக்கும் என்பதால் தமிழ கத்தின் பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கும்பாபிஷேக விழா விற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் உத்தரவின் பேரில் கீழக்கரை உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையிலான போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து திவான் பழனிவேல் பாண்டியன் "மாலைமலர்" நிருபரிடம் கூறியதாவது:-
கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று நள்ளிரவு மரகத நடராஜர் சன்னதி திறக்கப் பட்டு சந்தன காப்பு களை யப்பட்டது. 4-ந்தேதி வரை 3 நாட்கள் மரகத நடராஜர் சன்னதி பக்தர்கள் தரிசனம் செய்ய திறந்திருக்கும்.
4-ந் தேதி கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் மாலையில் சந்தனம் சாத்தப்பட்டு மீண்டும் நடராஜர் சன்னதி சாத்தப்படுகிறது. கும்பாபி ஷேகம் நடைபெறும் நாளன்று மேல்பகுதி தளத் தில் மட்டும் சுமார் 1500 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கும்பாபிஷேகத் திற்கு தேவையான அனைத்து விதமான முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் நடை பெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த 30-ந் தேதி வித்யா என்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
- தங்கையை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்று நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பருவாய் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகள் வித்யா (வயது 22). இவர் கோவையில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 30-ந்தேதி வீட்டில் உள்ள பீரோ சரிந்து விழுந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் வித்யா பிணமாக கிடந்தார். இதையடுத்து உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை அப்பகுதியில் உள்ள மயானத்தில் புதைத்தனர்.
இந்த நிலையில் வித்யாவின் காதலன் திருப்பூரை சேர்ந்த வெண்மணி (22), காதலி மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காம நாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வித்யாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். இதில் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. வேறு சமூகத்தை சேர்ந்த கல்லூரி மாணவரான வெண்மணியை, வித்யா காதலித்து வந்ததால் அவரது சகோதரர் சரவணகுமார்(24) தங்கையை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்று நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து சரவணகுமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
எனது தங்கை வித்யா கோவையில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வந்தார். அப்போது அந்த கல்லூரியில் படிக்கும் திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி என்பவரை காதலித்து வந்துள்ளார். இது எங்களுக்கு தெரியவரவே நாங்கள் வித்யாவை கண்டித்தோம். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினோம்.
இருப்பினும் காதலை கைவிடாமல் வெண்மணியுடன் பேசி வந்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே வெண்மணியின் வீட்டினர் எனது தங்கையை பெண் கேட்டு எங்களது வீட்டிற்கு வந்தனர். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்வது பற்றி பேசிக்கொள்வோம் என்று எச்சரித்து அனுப்பினோம். இந்த சம்பவத்திற்கு பிறகு வித்யாவை கடுமையாக எச்சரித்தேன். ஒழுங்காக படிக்க வேண்டுமென்றால் கல்லூரிக்கு செல்... இல்லையென்றால் வீட்டிலேயே இருக்குமாறு மிகவும் கண்டிப்புடன் கூறினேன்.
இதனால் கடந்த 2 மாதங்களாக என்னிடம் எனது தங்கை பேசாமல் இருந்து வந்தார். கடந்த 30-ந்தேதி எனது பெற்றோர் கோவிலுக்கு சென்று விட்டனர். வித்யா மட்டும் தனியாக இருந்தார். அவருடன் பேச முயற்சித்த போது அவள் பேசமறுத்து விட்டாள். இது எனக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து வித்யாவின் தலையில் சரமாரியாக தாக்கினேன். இதில் அவள் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தாள். சிறிது நேரத்தில் இறந்து விட்டாள். இதனால் என்னசெய்தென்று தெரியாமல் தவித்தேன்.
கொலையை மறைக்க வீட்டில் இருந்த பீரோவை இறந்து கிடந்த வித்யா உடலின் மீது தள்ளி, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அழைத்தேன்.அவர்களிடம் வித்யா மீது பீரோ சரிந்து விழுந்ததில் இறந்து விட்டாள் என்று நாடகமாடினேன். வெளியில் சென்றிருந்த எனது பெற்றோரும் வந்தனர். அவர்களிடம் நடந்த விவரத்தை கூறினேன்.
பின்னர் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் மயானத்தில் உடலை புதைத்து விட்டோம். இனிமேல் யாருக்கும் சந்தேகம் வராது என்று எண்ணியிருந்தேன். இந்த நிலையில் போலீசார் விசாரணையில் சிக்கிக்கொண்டேன். இவ்வாறு சரவணகுமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தொடர்ந்து வித்யாவின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் பிரச்சினையில் தங்கையை கொன்று சகோதரர் நாடக மாடிய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- புதுப்பட்டினம் கடற்கரைக்கு நாள்தோறும் 2,000 பேர் வருகை தருகின்றனர்.
- இந்த ஆண்டு 11 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கான நிதியை வழங்க நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை :
தமிழக சட்டசபையின் இன்றைய அலுவல்கள் தொடங்கி உள்ளன. அப்போது உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அப்போது அமைச்சர் கே.என்.நேரு பேசகையில், இந்த ஆண்டு 11 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கான நிதியை வழங்க நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் ஒன்றிய அரசும் 'ஜல் ஜீவன் திட்டம்' மூலம் கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கான நிதியை வழங்குகிறது என்றார்.
புதுப்பட்டினம் கடற்கரைக்கு நாள்தோறும் 2,000 பேர் வருகை தருகின்றனர். அதனால் அதனை சுற்றுலாத்தலமாக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திரன், சுற்றுலாத்துறை மூலம் ஆய்வு மேற்கொண்டு நிதி நிலைக்கு ஏற்ப கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார்.
இதனிடையே, பயணிகள் வசதிக்காக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். மழைக்காலங்களில் ஏர்போர்ட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் அனைத்து நாட்களிலும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
- கியாஸ் சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
- விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்பட வில்லை.
விருதுநகர்:
விருதுநகர் சிவன் கோவில் அருகில் பெருமாள் கோவில் தெரு பேட்டை பகுதி உள்ளது. இங்குள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளில் தினக் கூலி தொழிலாளர்கள், கட்டிட வேலைக்கு செல்வோர் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது குடிசை வீட்டில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் திடீர் என தீப்பற்றியது. உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் தூக்கம் கலைந்து அலறி யடித்துக் கொண்டு வெளி யேறினர். ஆனால் அதற்குள் அந்த வீட்டின் பெரும்பாலான பகுதி எரிந்து சேதம் அடைந்தது.
அதிகாலை நேரத்தில் மிதமான காற்றும் வீசியதால் தீயானது மளமளவென பரவி அந்த பகுதியில் அருகிலிருந்த 20-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளிலும் தீப்பற்றியது. அப்போது அந்த வீடுகளில் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. மேலும் அருகில் இருந்த பால் பண்ணையிலும் தீ பரவியது.
உடனடியாக அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை பாதுகாப்பாக வெளியேற்றினர். இதுகுறித்த தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 15-க்கும் மேற்பட்டோர் 3 தீயணைப்பு வாகனங்களில் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
இந்த விபத்தில் வீட்டிலிருந்து உயிர் தப்பி வெளியே ஓடி வந்த கணேஷ் மூர்த்தி என்பவர் பலத்த காயம டைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த தீ விபத்து குறித்து பஜார் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சம்பவ இடத்தை விருதுநகர் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் என்ன என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தீ விபத்து ஏற்பட்ட பகுதியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் நேரில் சென்று பார்வையிட்டார். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்பட வில்லை. ஆனால் பல லட்சம் மதிப்பிலான குடிசை வீடுகளில் இருந்த உடமைகள் மற்றும் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.






