என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • புதிய மசோதா பழைய சிக்கலான வரி அமைப்பை சுமார் 50% எளிதாக்குகிறது.
    • TDS திருத்த அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் 6 ஆண்டுகளில் இருந்து 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

    புதிய வருமான வரி மசோதா 2025 எந்த எதிர்க்கட்சி விவாதமும் இல்லாமல் மக்களவையில் நேற்று நிறைவேறியது.

    இந்த மசோதா ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும்.

    வருமான வரிச் சட்டம், 1961-க்குப் பதிலாக இந்தப் புதிய மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய மசோதா பழைய சிக்கலான வரி அமைப்பை சுமார் 50% எளிதாக்குகிறது.

    வருமான வரி மசோதா 2025 எந்த புதிய வரிகளையும் விதிக்காது. இது தற்போதுள்ள வரி அடுக்குகள் மற்றும் விகிதங்களை மாற்றாது.

    மேலும், ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான நிலுவைத் தேதிகள், வருமான வரி அடுக்குகள் மற்றும் மூலதன ஆதாயங்களில் எந்த மாற்றங்களும் இருக்காது.

    இந்த மசோதாவில் பிரிவு 80M, குறைந்தபட்ச வரி (MAT & AMT), மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் தொடர்பான வரி விதிகள் உள்ளிட்டவற்றில் முக்கிய மாற்றங்கள் உள்ளன.

    புதிய வரி முறையை தேர்வு செய்கின்ற நிறுவனங்கள் தற்போது 1961 சட்டத்தின் முந்தையப் பிரிவு 80 M இன் கீழ் விலக்குகளை பெற உரிமை பெறுவார்கள்.

    குறைந்தப்பட்ச மாற்று வரி (MAT) மற்றும் மாற்று குறைந்தபட்ச வரி (AMT) விதிகளை தனித்தனி பகுதிகளாக பிரிப்பதன் மூலம் புதிய மசோதா தெளிவுப்படுத்துகிறது.

    எளிமையான புரிதலுக்காக 'முந்தைய ஆண்டு' மற்றும் 'மதிப்பீட்டு ஆண்டு' என்பதற்குப் பதிலாக 'வரி ஆண்டு' என்ற ஒருங்கிணைந்த கருத்து இப்போது இருக்கும்.

    TDS திருத்த அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் 6 ஆண்டுகளில் இருந்து 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

    நிறுவனங்களுக்கு இடையேயான ஈவுத்தொகையில் ரூ.80 லட்சம் வரை விலக்கு அளிக்கப்படும்.

    பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள், புதிய சொத்துகளில் மூலதன ஆதாயங்களை மீண்டும் முதலீடு செய்வது வருமானத்திற்கான பயன்பாடாக கருதப்படும்.

    மத மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பெயர் குறிப்பிடப்படாத நன்கொடைகளுக்கு தொடர்ந்து வரி விலக்கு அளிக்கப்படும் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 

    • காசாவில் ஒரு ஹோலோகாஸ்ட் (இனப்படுகொலை) நடக்கிறது. குழந்தைகள் பசியால் இறக்கின்றனர்.
    • 193 ஐ.நா. உறுப்பு நாடுகளில் 147 நாடுகள் ஏற்கனவே பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன.

    பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் அறிவித்தார்.

    செப்டம்பர் மாதம் நடைபெறும் 80 வது கூட்டத்தொடரில் ஐ.நா. பொதுச் சபையில் நடைமுறைகளின்படி அங்கீகரிப்போம் என்று அவர் கூறினார்.

    அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'காசாவில் ஒரு ஹோலோகாஸ்ட் (இனப்படுகொலை) நடக்கிறது. குழந்தைகள் பசியால் இறக்கின்றனர்.

    மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து காசா மக்களின் பசி மற்றும் துன்பத்தைப் போக்க இரு நாடுகள் தீர்வுதான் சிறந்த வழி" என்று கூறினார்.

    ஆஸ்திரேலியாவின் இந்த முடிவை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமர்சித்துள்ளார்.

    193 ஐ.நா. உறுப்பு நாடுகளில் 147 நாடுகள் ஏற்கனவே பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன.

    ஜி20 நாடுகளைப் பொறுத்தவரை அர்ஜென்டினா, சீனா, இந்தோனேசியா, ரஷியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன.

    அமெரிக்காவும் சில மேற்கத்திய நாடுகளும் மட்டுமே அங்கீகரிக்கவில்லை. சமீபத்தில், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் கனடா போன்ற நாடுகள் செப்டம்பரில் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாகக் கூறியுள்ளன. 

    • ஹமாஸ் இயக்கத்தை ஒழித்துக்கட்டி, வேலையை முடிப்பதை தவிர வேறு வழியில்லை.
    • இஸ்ரேலுக்கு உள்ளேயும், வெளியேயும் சர்வதேச அளவில் பொய் பிரசாரம் நடந்து வருகிறது.

    இஸ்ரேல் ராணுவத்துக்கும், காசாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே பல மாதங்களாக சண்டை நடந்து வருகிறது. காசா மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது. அதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

    இந்நிலையில், நேற்று பேட்டி அளித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தாக்குதல் திட்டத்தை நியாயப்படுத்தினார். அவர் கூறியதாவது:-

    காசா பகுதியில் பொதுமக்கள் கொல்லப்படுதல், சேதம், உதவிப்பொருட்கள் கிடைக்காதது என அனைத்துக்கும் ஹமாஸ் இயக்கம்தான் காரணம். காசாவில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை குறுகிய காலத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். ஹமாஸ் இயக்கத்தை ஒழித்துக்கட்டி, வேலையை முடிப்பதை தவிர வேறு வழியில்லை.

    காசாவை ஆக்கிரமிப்பது எங்கள் நோக்கமல்ல. அதை விடுவிப்பதுதான் இலக்கு. ஆனால், இஸ்ரேலுக்கு உள்ளேயும், வெளியேயும் சர்வதேச அளவில் பொய் பிரசாரம் நடந்து வருகிறது.

    காசாவை ராணுவமயத்தில் இருந்து விடுவித்தல், இஸ்ரேல் ராணுவம் பாதுகாப்பை மேற்கொள்ளுதல், இஸ்ரேல் அல்லாத சிவில் நிர்வாகம் பொறுப்பேற்றல் ஆகியவைதான் எங்கள் இலக்குகள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரதமர் மோடியால் இந்த நாடு வளர்ச்சி அடைந்துள்ளது.
    • இந்தியாவுக்கு அமெரிக்கா வரி விதிப்பதாக மிரட்டினாலும், பிரதமர் மோடி பயப்படவில்லை.

    பெங்களூரு:

    பெங்களூருவில் 3 ரெயில்வே திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார். இந்த நிலையில் அவரை வழிநெடுகிலும் நின்று ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்ததுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடியை பார்க்க சாளுக்கியா சர்க்கிளில் சிவாஜிநகரை சேர்ந்த முதியவரான முகமது கவுஸ், பிரதமர் மோடியின் புகைப்படத்தை கையில் பிடித்தபடி காத்து நின்றார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடியை பார்க்க வந்துள்ளேன். இதற்கு முன்பு 3 முறை அவரை பார்த்துள்ளேன். ஒருமுறை விதானசவுதா முன்பாக கை கொடுக்கும் தூரத்தில் பிரதமர் மோடியை பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அதனை மறக்கவே முடியாது. நான் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டன். நான் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர்.

    பிரதமர் மோடியால் இந்த நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நாட்டுக்காக அவர் கடுமையாக உழைத்து வருகிறார். இந்தியாவுக்கு அமெரிக்கா வரி விதிப்பதாக மிரட்டினாலும், பிரதமர் மோடி பயப்படவில்லை. அவா் சக்தி மான் போன்றவர். அல்லா கொடுத்த பரிசு பிரதமர் மோடி ஆவார். இதனை தைரியமாக சொல்வேன். பிரதமர் மோடியை பார்க்க வேண்டும் என்று ஆர்வத்தில் இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை என்றார். 

    • செப்டம்பர் 9-ந்தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் விளையாட உள்ளனர்.
    • ஆசிய கோப்பையை வெல்வதற்கு இந்தியாவுக்கே வாய்ப்பு அதிகம் என்பது எனது கருத்து.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கொல்கத்தாவில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், 'டெஸ்ட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட இந்திய வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரே கடைசி சர்வதேச போட்டியாக இருக்கக்கூடும்' என தகவல்கள் வெளியாகி உள்ளதே என்று கேட்ட போது, 'அது பற்றி எனக்கு தெரியாது. அதனால் அது குறித்து கருத்து தெரிவிக்கமாட்டேன். யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்கள் விளையாடுவார்கள். கோலியும், ரோகித்தும் நன்றாக ஆடி ரன்குவிக்கும் பட்சத்தில், அவர்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். விராட் கோலியின் ஒரு நாள் போட்டி சாதனை தனித்துவமானது. ரோகித் சர்மாவும் வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் நிறைய சாதித்து இருக்கிறார்' என்றார்.

    மேலும் கங்குலி கூறுகையில், 'ஐ.பி.எல். முடிந்த உடனே இந்திய அணியினர் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்டில் விளையாடினார்கள். இப்போது சில வாரங்கள் ஓய்வு கிடைத்திருக்கிறது. அடுத்ததாக செப்டம்பர் 9-ந்தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் விளையாட உள்ளனர்.

    இந்தியா மிகவும் பலம் வாய்ந்த அணி. சிவப்புநிற பந்து கிரிக்கெட்டில் வலுவாக இருக்கிறது என்றால், வெள்ளை நிற பந்து போட்டியில் அதை விட வலுவாக திகழ்கிறது. எனவே ஆசிய கோப்பையை வெல்வதற்கு இந்தியாவுக்கே வாய்ப்பு அதிகம் என்பது எனது கருத்து. அதுவும் துபாய் போன்ற ஆடுகளத்தில் இந்தியாவை வீழ்த்துவது கடினம்' என்றார்.

    பெங்கால் கிரிக்கெட் சங்க நிர்வாகத்தில் மீண்டும் அடியெடுத்து வைப்பது குறித்து கேட்ட போது, 'உறுப்பினர்கள் விரும்பினால் பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வேன்' என்றார்.

    • 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று தங்கச்சிமடத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டம்.
    • 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன் பிடிக்கச் செல்லாமல், கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைதான 7 மீனவர்களும் நேற்று மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    அப்போது மீனவர்கள் 7 பேரையும் வருகிற 21-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் 7 மீனவர்களும் இலங்கை வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று துறைமுக பகுதியில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விசைப்படகு மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் சேசுராஜா தலைமை தாங்கினார். இதில் மீனவ சங்க பிரதிநிதிகள் எமரிட், சகாயம், கிளாட்வின் ஆல்வின் உள்பட பலர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    தடைகாலம் முடிந்து மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் கைதான அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்டு கொண்டுவர மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு, நாட்டுப்படகுகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைதாவதற்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில் பாரம்பரிய கடல் பகுதியில் எந்த பிரச்சினையும் இன்றி மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருவதால் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த எம்.பி.க்களும் மீனவர்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் (புதன்கிழமை) தங்கச்சிமடத்தில் மீனவர்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று தங்கச்சிமடத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. மேலும் 19-ந்தேதி தங்கச்சிமடத்தில் மதியம் 3 மணியளவில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் மீனவர்கள் சார்பில் முடிவெடுக்கப்பட்டது.

    இதையடுத்து விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சேசுராஜா தலைமையில், இலங்கை கடற்படையால் கைதான மீனவர்களின் குடும்பத்தினர் நேற்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்போது மீனவர்களின் குடும்பத்தினர், கலெக்டரிடம் சிறையில் உள்ள மீனவர்களை மீட்டு கொண்டுவர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

    இந்த நிலையில், இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேசுவரம் மீனவர்ளை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன் பிடிக்கச் செல்லாமல், கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர். வேலை நிறுத்தம் காரணமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 10,000-க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு வேலை இழப்பும், நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. 

    • அஜய் தேவ்கானுடன், தனுசுக்கு நல்ல நட்பு உள்ளது.
    • ‘சன் ஆப் சர்தார்-2' படத்தின் நிகழ்வில், எனக்காக தனுஷ் கலந்து கொள்ளவில்லை

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுசும், பாலிவுட் நடிகை மிருணாள் தாகூரும் காதலிப்பதாக 'கிசுகிசு'க்கப்படுகிறது.

    அஜய் தேவ்கானுடன், மிருணாள் தாகூர் நடித்துள்ள 'சன் ஆப் சர்தார்-2' பட விழாவில் தனுஷ் கலந்துகொண்டதும், மிருணாள் தாகூருடன் கைகோர்த்துக்கொண்டு சுற்றியதும் இதற்கு தூபம் போடுவதுபோல அமைந்தது.

    இதுகுறித்து மிருணாள் தாகூர் கூறும்போது, 'நடிகர் தனுஷ் எனக்கு நல்ல நண்பர் மட்டுமே. எங்கள் இருவரை பற்றியும் வதந்திகள் பரவி வருவதை அறிகிறோம். இதுபோன்ற வதந்திகளை பார்க்கும்போது, எனக்கு சிரிப்புதான் வந்தது.

    'சன் ஆப் சர்தார்-2' படத்தின் நிகழ்வில், எனக்காக தனுஷ் கலந்து கொள்ளவில்லை. என்னுடன் நடித்த அஜய் தேவ்கானுடன், தனுசுக்கு நல்ல நட்பு உள்ளது. அவர் தான் விழாவுக்கு தனுசை அழைத்தார். மற்றபடி எங்களை இணைத்து பேசும் அளவுக்கு எதுவும் நடக்கவில்லை'' என்றார்.

    அப்படி என்றால் எதுவுமே இல்லையா... என ரசிகர்கள் 'உச்' கொட்டுகிறார்கள்.

    • பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளன என்றார்.
    • இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

    பெங்களூரு:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், கர்நாடகாவில் உள்ள ஒரு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற முறைகேடுகளை வெளியிட்டு, அதற்கான ஆதாரங்களையும் குறிப்பிட்டார்.

    பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து இதுபோன்ற பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளன என தெரிவித்தார். இதையடுத்து, டெல்லியில் கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கர்நாடகத்தில் ஒரு பெண் வாக்காளர் 2 முறை வாக்கு செலுத்தியிருப்பதாக ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இதுதொடர்பாக, கர்நாடக மாநில தேர்தல் ஆணையர் கூறியதாவது:

    வாக்குச்சாவடி அதிகாரி வெளியிட்ட தரவுகளின்படி, ஒரு குறிப்பிட்ட பெண் வாக்காளர் இருமுறை தேர்தலில் வாக்குப்பதிவு செய்திருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். ஆனால் விசாரணையில், அந்த வாக்காளர் தான் ஒரேயொரு முறையே வாக்குப் பதிவு செய்ததாக கூறியுள்ளார்.

    ராகுல் காந்தி காட்டிய ஆவணங்கள் மேற்கண்ட தேர்தல் அதிகாரியால் வெளியிடப்பட்டதல்ல என்பது தேர்தல் ஆணைய விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆகவே, மேற்கண்ட ஆவணங்கள் எங்களுக்கு கிடைத்தால் இவ்விவகாரத்தில் விரிவான விசாரணை மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

    • நடிகர் கிங்காங்கின் மகள் கீர்த்தனாவின் திருமணம் சென்னையில் நடைபெற்றது.
    • சிவகார்த்திகேயன் நேரடியாக கிங்காங் வீட்டுக்கே சென்று சர்ப்ரைஸ் கொடுத்தார்.

    நடிகர் கிங்காங் பல்வேறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர். கிங்காங் என்ற கதாப்பத்திரத்தில் சினிமாவில் அறிமுகமானதால், அதே பெயரிலேயே அழைக்கப்டுகிறார்.

    கலா என்ற பெண்ணை திருமனம் செய்த கிங்காங்கிற்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், இவரின் மகள் கீர்த்தனாவின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

    இதனையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் நேரடியாக கிங்காங் வீட்டுக்கே சென்று சர்ப்ரைஸ் கொடுத்து மணமக்களை வாழ்த்தினார்.

    இந்நிலையில், நடிகர் கிங்காங் மற்றும் அவரது மகள், மருமகன் ஆகியோர் விஜய் சேதுபதியின் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அங்கு மணமக்களை நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்தி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது தொடர்பான வீடியோவை கிங்காங் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.


    • மகளிர் மாநாட்டிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார்
    • 10.5% உள்ஒதுக்கீட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெறும் மகளிர் பெருவிழா மாநாடு பறை, தவில் இசையுடன் தொடங்கியது

    இந்த மாநாட்டிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். பெண்களுக்கு பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, பூரண மதுவிலக்கு என பாமக மகளிர் மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. மாநாட்டில் ராமதாஸின் மகள் காந்திமதி முதல் தீர்மானத்தை வாசித்தார்.

    இந்த மாநாட்டில் பேசிய ராமதாஸ், "என்னுடைய அருமை நண்பர் கலைஞர் 20% இடஒதுக்கீடு அளித்தார். 10.5% உள்ஒதுக்கீட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் முதல்வருக்கு ஏன் தயக்கம்? 10.5% உள்ஒதுக்கீடு விவகாரத்தில் நாங்கள் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு தாங்காது

    2026 பேரவைத் தேர்தலில் வெற்றி கூட்டணி அமைப்பேன். யார் என்ன சொன்னாலும் காதில் வாங்காதீர்கள். நான் சொல்வதுதான் நடக்கும்" என்று தெரிவித்தார்.

    • சத்தீஸ்கர் மாநிலத்தில் மணீஷ் என்பவர் புதிய சிம் கார்ட் ஒன்றை வாங்கியுள்ளார்.
    • மணீஷ் அதிகாரிகளுடன் ஒத்துழைத்து சிம் கார்டை திருப்பி அனுப்பினார்.

    2025 ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ஆர்.சி.பி. அணி கோப்பையை வென்றது. பெங்களூரு அணிக்கு கோப்பை வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமையை ரஜத் படிதார் பெற்றார்.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் மணீஷ் என்பவர் புதிய சிம் கார்ட் ஒன்றை வாங்கியுள்ளார். அவருக்கு கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாரின் பழைய ஃபோன் நம்பர் ஒதுக்கப்பட்டுள்ளது.

    கிரிக்கெட் வீரர் ரஜத் படிதார் முந்தைய மொபைல் எண் 90 நாட்களுக்கும் மேலாக செயல்படாமல் இருந்ததால், அந்த நம்பர் செயல் இழந்து புதிய நபருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து, விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் ரஜத் படிதாரின் பழைய ஃபோன் நம்பருக்கு கால் செய்துள்ளனர்.

    இதனை தெரிந்து கொண்ட ரஜத் படிதார் அந்த நபருக்கு போன் செய்து 'நான் ரஜத் படிதார் பேசுகிறேன்.. அந்த நம்பரை திருப்பி கொடுத்துவிடு' என கேட்டுள்ளார். இதனை நம்பாத அந்த நபர் 'அப்படியா நான் தோனி பேசுகிறேன்' என கிண்டலாக பேசியுள்ளார்.

    இதனையடுத்து சில நிமிடங்களில் அவரது வீட்டுக்கு போலீசார் வந்து விசாரித்தபோதுதான் இது உண்மை என அவருக்கு தெரிய வந்துள்ளது. பின்னர் மணீஷ் அதிகாரிகளுடன் ஒத்துழைத்து சிம் கார்டை திருப்பி அனுப்பினார்.

    • உக்ரைன் தரப்பில் முத்தரப்பு பேச்சு நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
    • உக்ரைன் இல்லாமல் எடுக்கப்படும் எந்த முடிவுகளும் அமைதிக்கு எதிரானவை.

    ரஷியா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதில் ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் டிரம்ப் தொலைபேசியில் பேசி இருந்தார்.

    இவ்விவகாரத்தில் சமீபத்தில் அமெரிக்கா-ரஷியா இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதற்கிடையே போர் நிறுத்த முயற்சியின் ஒரு பகுதியாக வருகிற 15-ந்தேதி அமெரிக்காவின் அலாஸ்காவில் டிரம்ப்-புதின் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் போர் நிறுத்தம் தொடர்பாக இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்கள். இதுதொடர்பாக டிரம்ப் கூறும்போது, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சில பகுதிகளை உக்ரைன் வழங்க வேண்டியிருக்கும். உக்ரைனுக்கு சில பகுதிகள் கிடைக்கும் என்றார்.

    இதற்கிடையே உக்ரைன் தரப்பில் முத்தரப்பு பேச்சு நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. உக்ரைன் இடம்பெறாமல் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, போர் நிறுத்த பேச்சு எங்கோ தொலைவில் நடக்க உள்ளது.

    இந்தப் போரை எங்களைத் தவிர வேறு யாராலும் முடிவுக்கு கொண்டுவர முடியாது. உக்ரைன் இல்லாமல் எடுக்கப்படும் எந்த முடிவுகளும் அமைதிக்கு எதிரானவை. அதேபோல் எங்கள் நிலத்தை விட்டுதர மாட்டோம் என்றார்.

    இந்த நிலையில் அலாஸ்காவில் நடைபெற உள்ள டிரம்ப்-புதின் பேச்சுவார்த்தையில் ஜெலன்ஸ்கி இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அலாஸ்காவில் அதிபர் டிரம்பை சந்திக்க உக்ரைன் அதிபர்ஜெலென்ஸ்கிக்கு அழைப்பு விடுப்பது குறித்து வெள்ளை மாளிகை பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அழைப்பு விடுக்கும்பட்சத்தில் அதை ஏற்று ஜெலன்ஸ்கி சென்றால் அவருடன் டிரம்ப் தனியாக பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன் என்று புதின் கூறிஉள்ளார். இதனால் அவர்கள் இடையே சந்திப்பு நடைபெற வாய்ப்பு இல்லை.

    ×