என் மலர்
ஆசிரியர் தேர்வு
- ஆன்லைன் சூதாட்ட செயலி தொடர்பாக 36 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
- ராணா டகுபதி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.
சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கு தொடர்பாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா ஆகியோருக்கு அமலாக்கதுறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.
சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்துவதன் மூலம் பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதா மற்றும் அது பணமோசடியுடன் தொடர்புடையதா என கோணத்தில் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் இன்று ஆஜராகுமாறு இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இன்று நடைபெறும் விசாரணையில் ரெய்னாவிடம் வாக்குமூலம் பெற அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.
- சில வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத்தொகையாக ரூ.10,000 ஆக நிர்ணயித்திருந்துள்ளது.
- சில வங்கிகள் ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்குகளை அனுமதிக்கின்றன.
இந்தியாவின் வங்கி ஒழுங்குமுறை அமைப்பான இந்திய ரிசர்வ் வங்கி (RBI), சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத்தொகையை நிர்ணயிக்காது என்று தெளிவுபடுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 11 அன்று குஜராத்தில் நடந்த ஒரு நிதி நிகழ்வின் போது பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, "சேமிப்பு கணக்குகளின் குறைந்தபட்ச இருப்புத் தேவையையும், அதைப் பூர்த்தி செய்யாததற்கான அபராதங்களையும் சம்பத்தப்பட்ட வங்கிகள் தான் தீர்மானிக்கும். குறைந்தபட்ச இருப்புத் தொகை கொள்கை ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறைக்கு கீழ் வராது. சில வங்கிகள் அதை ரூ.10,000 ஆக நிர்ணயித்திருந்தாலும், சில வங்கிகள் ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்குகளை அனுமதிக்கின்றன. இது சம்பத்தப்பட்ட வங்கியின் விருப்பம்" என்று தெரிவித்தார்.
சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காததற்காக எஸ்.பி.ஐ., கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் இந்தியன் வங்கி போன்ற வங்கிகள் எந்த அபராதத்தையும் வசூலிப்பதில்லை.
அதே சமயம் சில தனியார் வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காததற்காக அபராதம் வசூலிக்கின்றன.
அண்மையில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் புதிய கணக்கு தொடங்குபவர்களின் குறைந்தபட்ச சராசரி மாதாந்திர மினிமம் பேலன்ஸ் உயர்த்தப்பட்டது. அந்த வகையில், நகர்ப்புற, மெட்ரோ பகுதிகளுக்கு ரூ.50 ஆயிரமாகவும், இதுவே சிறு நகரங்களுக்கு ரூ.25 ஆயிரம், கிராமப்புற பகுதிகளுக்கு ரூ.10 ஆயிரமாகவும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டது இணையத்தில் பேசுபொருளானது.
- திருமணம் செய்துகொண்ட உடனேயே கிரிஸ்ல்டா 6 மாதம் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியை வெளியிட்டார்.
மாதம்பட்டி ரங்கராஜ் பிரபல சமையல் துறை நிபுணர் ஆவார். தமிழ் திரையுலகில் நடக்கும் பிரபலங்களில் திருமண பண்டிகைகளுக்கு கேட்ரிங் சேவையை செய்வது மாதம்பட்டி ரங்கராஜின் நிறுவனம் தான்.
அது மட்டுமல்லாமல் தமிழ் திரைப்பட உலகில் வளர்ந்து வரும் நடிகராகவும் இருக்கிறார். அவருடைய முதல் படம் 'மெஹந்தி சர்கஸ்'. ஆனால் அவரை மக்கள் அதிகமாக அறிந்தது 'Cook with Comali' நிகழ்ச்சியின் மூலமாக. இந்த நிகழ்ச்சியின் 5வது சீசனில், வெங்கடேஷ் பட்டின் இடத்தை மாற்றி அவர் நீதிபதியாக இணைந்தார். தற்போது 6வது சீசனிலும் அவர் நடுவராக பணியாற்றுகிறார்.
மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்
இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார். அவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. இவர் ஃபேஷன் டிசைனரான ஜாய் கிரிஸ்ல்டாவை திருமணம் செய்துக் கொண்டார். ஜாய் தமிழ் திரையுலகில் புகழ் பெற்ற ஆடை வடிவமைப்பாளர் ஆவார்.
மேலும் திருமணம் செய்துகொண்ட உடனேயே கிரிஸ்ல்டா 6 மாதம் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியை வெளியிட்டார். திருமணம் செய்துகொண்ட உடனே 6 மாத கால கர்ப்பமா? என்று இந்த விவகாரம் நெட்டிசன்களிடையே பேசுபொருளானது.
இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவி ஸ்ருதியுடன் பங்கேற்றது பேசுபொருளாகியுள்ளது.
ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்துகொண்டதாக புகைப்படம் வெளியிட்ட நிலையில், தற்போது அவர் மனைவி ஸ்ருதியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்
- வியட்நாமில் நிலம் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இழப்பீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகளுக்கு உரிமை இல்லை.
- 990 ஹெக்டேர் நிலம் வாழைப்பழங்கள், லாங்கன்கள் மற்றும் பல பயிர்களால் நிறைந்துள்ளது. இங்குள்ள அனைத்து விவசாயிகளும் தலைமுறை தலைமுறையாக இங்கு வசித்து வருகின்றனர்.
வியட்நாமில் அமெரிக்க அதிபர் டிரம்ப் குடும்பத்தின் மூலம் அமைக்கப்படவுள்ள கோல்ஃப் கிளப் மைதானத்திற்காக 990 ஹெக்டேர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதனால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு சொற்ப பணம் மற்றும் சில மாதங்களுக்கான அரிசி ரேஷனாக வழங்கப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இந்த கோல்ஃப் மைதான திட்டத்தை Kinhbac City என்ற வியட்நாம் நிறுவனம், டிரம்ப் நிறுவனத்திற்கு $5 மில்லியன் உரிம கட்டணம் செலுத்தி செயல்படுத்த உள்ளது.
டிரம்பின் இந்த ஒப்பந்தம் வியட்நாம் மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது
அதிகாரிகள், ஒரு சதுர மீட்டருக்கு $12 முதல் $30 வரை இழப்பீடு தருவதாக தெரிவித்துள்ளனர்.
வியட்நாமில் நிலம் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இழப்பீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகளுக்கு உரிமை இல்லை.
ஹங் யென் மாகாணத்தில் உள்ள ஒரு விவசாயிக்கு, 200 சதுர மீட்டர் நிலத்திற்கு $3,200 மற்றும் சில மாதங்களுக்கு அரிசி மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இது வியட்நாமில் ஒரு வருட சராசரி சம்பளத்தை விடக் குறைவு.
990 ஹெக்டேர் நிலம் வாழைப்பழங்கள், லாங்கன்கள் மற்றும் பல பயிர்களால் நிறைந்துள்ளது. இங்குள்ள அனைத்து விவசாயிகளும் தலைமுறை தலைமுறையாக இங்கு வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆடம்பர விளையாட்டுக்காக அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டங்கள் எழுந்துள்ளன.
- ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் நாளை மறுதினம் ரிலீசாக உள்ளது.
- கூலி திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
கூலி திரைப்படம் நாளை மறுதினம் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், கூலி படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.
அதன்படி, ரிலீஸ் நாளில் முதல் காட்சி 9 மணிக்கு தொடங்கி இறுதிக் காட்சி நள்ளிரவு 2 மணிக்கு முடியும் வகையில் 5 காட்சிகளைத் திரையிடலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
- இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவுகோலாகப் பதிவானது.
ஜகார்த்தா:
இந்தோனேசியா அமைந்துள்ள நிலப்பரப்பு காரணமாக, அங்கு பல இடங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், அந்நாட்டின் மேற்கு பப்புவா பகுதியில் இன்று மதியம் 1:54 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.
ஏற்கனவே இந்தோனேசியாவில் கடந்த 7-ம் தேதி 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.
- கூட்டணியில் இருப்பதால் தவறுகளை கம்யூனிஸ்டுகள் சுட்டுகாட்டாமலும் இல்லை. இதை நான் ஏற்க மறுப்பதும் இல்லை.
- நமக்குள் இருப்பது தேர்தலுக்கான நட்பு அல்ல. கொள்கை நட்பு.
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறும் ஃபிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
* ஃபிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பது எனக்கு கிடைத்த பெருமை.
* ஏகாதிபத்திய சதியை முறியடிக்க வேண்டிய தேவை தற்போது உருவாகியுள்ளது.
* அமெரிக்கா விதித்த பொருளாதார தடையை மீறி கியூபாவில் ஆட்சி நடத்தினார் ஃபிடல் காஸ்ட்ரோ.
* இந்தியா மீது 50 சதவீதம் வரியை அமெரிக்கா விதித்திருப்பதற்கு மத்திய அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும்.
* இந்தியா- பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என டிரம்ப் கூறுகிறார். இதுகுறித்து பிரதமர் பதில் கூறவில்லை.
* அடிமைத் தனத்தை பற்றி பழனிசாமி பேசலாமா?. இங்கு யாருக்கும் யாரும் அடிமையில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு தீக்கதிர் படிக்கும் பழக்கம் இருக்காது. நான் தினந்தோறும் தீக்கதிர் படிக்கிறேன்.
* கூட்டணியில் இருப்பதால் தவறுகளை கம்யூனிஸ்டுகள் சுட்டுகாட்டாமலும் இல்லை. இதை நான் ஏற்க மறுப்பதும் இல்லை.
* கம்யூனிஸ்டுகள் என்னில் பாதி, ஏனெனில் என்னுடைய பெயரே ஸ்டாலின்.
* எடப்பாடி பழனிசாமிக்கு அண்மையில் கம்யூனிஸ்டுகள் மேல் பாசம் பொத்துக்கொண்டு வருகிறது.
* நமக்குள் இருப்பது தேர்தலுக்கான நட்பு அல்ல. கொள்கை நட்பு.
இவ்வாறு முலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
- அங்கிருந்த ஒருவர் ஜெயா பச்சனுடன் செல்ஃபி எடுக்க முயன்றார்.
- நிதானத்தை இழந்த ஜெயா பச்சன் அவரை தள்ளிவிட்டார்.
புதுடெல்லி:
மூத்த நடிகையும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான ஜெயா பச்சன் டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்புக்கு வந்தார். அப்போது அங்கிருந்த ஒருவர் ஜெயா பச்சனுடன் செல்ஃபி எடுக்க முயன்றார்.
இதைக் கண்டதும் தனது நிதானத்தை இழந்த ஜெயா பச்சன் அவரை தள்ளிவிட்டுள்ளார். செல்ஃபி எடுப்பது தொடர்பாக சத்தம் போட்டுள்ளார்.
ஜெயா பச்சன் செல்ஃபி எடுக்க முயன்ற ஒருவரை தள்ளிவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இணையத்தில் இந்த வீடியோ வேகமாகப் பரவி வரும் நிலையில், அவரது செய்கையை பலரும் எதிர்த்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- டெவால்டு பிரேவிஸ் 41 பந்தில் சதம் விளாசி அசத்தினார்.
- மிக இளைய வயதில் சதம் விளாசிய தென் ஆப்பிரிக்கா பேட்டர் என்ற வரலாற்று சாதனையை ப்ரெவிஸ் (22 வயது) படைத்துள்ளார்.
தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையிலான 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டி டார்வினில் நடைபெற்று வருகிறது. முதலில் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா 218 ரன்கள் குவித்தது. 4-வது வீரராக களம் இறங்கிய டெவால்டு ப்ரீவிஸ் அதிரடியாக விளையாடினார். இதனால் டி20 அவர் தனது முதல் சதத்தை (41 பந்தில்) பதிவு செய்து அசத்தினார். அவர் 56 பந்தில் 125 ரன்கள் விளாசி அவுட் ஆனார்.
இதன்மூலம் மிக இளைய வயதில் சதம் விளாசிய தென் ஆப்பிரிக்கா பேட்டர் என்ற வரலாற்று சாதனையை ப்ரீவிஸ் (22 வயது) படைத்துள்ளார்.
மேலும் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்காக 2-வது வேகமான சதத்தை ப்ரீவிஸ் அடித்தார். இதற்குமுன் 2017-ம் ஆண்டில் டேவிட் மில்லரின் 35 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.
இதனை தவிர்த்து தென் ஆப்பிரிக்கா அணி வீரர்களில் தனிநபரில் அதிக ரன்கள் எடுத்த டூபிளிசிஸ் சாதனையையும் ப்ரெவிஸ் முறியடித்துள்ளார். டூபிளசிஸ் 119 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்த நிலையில் ப்ரெவிஸ் 125 ரன்கள் குவித்து வரலாறு படைத்தார்.
- திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செயல்படுத்தி கொண்டு இருக்கிறோம்.
- ஒரு திட்டத்தை அறிவிக்கிறதோட கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறது இல்லை.
தமிழ்நாட்டில் அரிசி, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன. இதில், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ரேசன் பொருட்களை நேரில் சென்று வாங்க சிரமப்படுவதால் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்துப் பொருட்களையும் அவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வழங்க 'தாயுமானவர்' திட்டம் அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கு மாதந்தோறும் இரண்டாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களின் வீடுகளுக்கு சென்று ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன.
அதனை தொடர்ந்து, வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் "முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
சென்னை தண்டையார்பேட்டை, கோபால் நகரில் இத்திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின்படி, ஏறக்குறைய 35 ஆயிரம் நியாய விலைக் கடைகள் மூலம் 70 வயதிற்கும் மேற்பட்ட 20 லட்சம் முதியோர், 1 லட்சத்து 27 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் பயனடைவர்.

இந்த நிலையில், 'தாயுமானவர்' திட்டத்தை இன்று தொடங்கி வைப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-
வணக்கம். திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செயல்படுத்தி கொண்டு இருக்கிறோம். அந்த வரிசையில் எனது மனதிற்கு பிடித்த திட்டமாக உருவாகியிருக்கிற திட்டம் தான் 'தாயுமானவர் திட்டம்'. இத்திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்படி அரசின் செயல்களை மக்களுடைய வீடுகளுக்கே சென்று கொடுப்பது இந்தியாவிற்கே முன்மாதிரி முயற்சி. ஒரு திட்டத்தை அறிவிக்கிறதோட கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறது இல்லை. அந்த திட்டத்தின் பயன், பலன் கடைக்கோடி மனிதர்களையும் சென்று சேர்கிறதா என்பதை கண்காணிக்கிறதும் கடமையா நினைக்கிறேன்.
அப்படி உருவாக்குன இத்திட்டத்தை 34,809 நியாய விலைக்கடைகளில் செயல்படுத்த போறோம். 70 வயதிற்கு மேற்பட்ட 20,42,657 மூத்த குடிமக்கள், 1,27,797 மாற்றுத்திறனாளிகள் என 21,70,454 பேர் இந்த திட்டத்தால் பயன் அடையபோகிறார்கள். ஒவ்வொரு மாதம் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ரேசன் பொருட்கள் உங்கள் வீடு தேடி வரும். இதற்காக ரூ.30 கோடியே 16 லட்சம் ஆகிற செலவை கூடுதல் செலவாக கருதாமல் மக்களுக்கு செய்கிற உயிர் காக்கும் கடமையா நாங்கள் நினைக்கிறோம். இது கூட்டுறவுத்துறையின் மிகப்பெரிய சேவை. அந்த துறை அதிகாரிகள், அலுவலர்கள், கடை விற்பனையாளர்கள் செய்யப்போகிற மிகப்பெரிய கடமை. இந்த நேரத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு நான் வைக்கிற வேண்டுகோள் என்பது இந்த திட்டத்தின் நோக்கம் 100 விழுக்காடு நிறைவேறுகிற வகையில் உங்கள் பணி அமையணும். உங்களை எதிர்பார்த்து காத்து இருக்கும் முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளுக்கும் மனம் குளிர்கிற வகையில் நீங்கள் கனிவா நடந்துக்கணும். நீங்கள் வாங்குகிற நல்ல பெயர் தான் ஆட்சிக்கு கிடைக்கிற பாராட்டு என்றார்.
- 2016-ல் இருந்து ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் என்பவருடன் ரொனால்டோ பழக தொடங்கினார்
- தற்போது வரை ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் உடன் தான் ரொனால்டோ வாழ்ந்து வருகிறார்.
கால்பந்து விளையாட்டில் இந்த தலைமுறையின் சிறந்த வீரராக கிறிஸ்டியோனோ ரொனால்டோ கருதப்படுகிறார்.
ரொனால்டோ கால்பந்து மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் நிலையில், விளம்பரம் மூலமும் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
இவர் 2015-ம் ஆண்டு வரை இரினா ஷாய்க் என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். இரினாவுடனான ஐந்து வருட தொடர்பை முறித்துக் கொண்ட பின் அதன்பின், 2016-ல் இருந்து ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் என்பவருடன் பழக தொடங்கினார். தற்போது வரை ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் உடன் தான் ரொனால்டோ வாழ்ந்து வருகிறார்.
திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் ரொனால்டோ - ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், தனது நீண்டநாள் காதலி ஜார்ஜினாவை கிறிஸ்டியானோ ரொனால்டோ திருமணம் செய்துகொள்ளவுள்ளார்.
- யானை குட்டி பிறந்து சுமார் 2 மணி நேரத்திலேயே நடக்க ஆரம்பித்து விடும்.
- ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டும் மதம் வெளிப்படும்.
யானைகள்...
குழந்தைகள் முதல் அனைவருக்கும் பிடித்தமான விலங்கினம்.
உருவத்தில் மிகப்பெரியதாக இருந்தாலும், பொதுவாக அவைகள் மிகவும் சாதுவான குணம் கொண்டவை. ஆனால் அதனிடம் வம்பிழுத்தால்... அது மிரண்டால்.... தாங்காது. துவம்சம் செய்துவிடும்.
யானைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், அவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி உலக யானைகள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் யானைகள் பற்றி சிறிது அறிந்து கொள்வோம்.
உலக அளவில் 2 வகையான யானைகள் உள்ளன. ஒன்று ஆப்பிரிக்க யானை மற்றொன்று ஆசிய யானை. இந்த 2 வகையான யானைகளுக்கும் சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன.
குறிப்பாக ஆப்பிரிக்க யானைகளில் ஆண் மற்றும் பெண் இரண்டுக்குமே தந்தங்கள் இருக்கும். ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டுமே தந்தங்கள் உள்ளன. தந்தம் இல்லாத ஆண் யானைகளும் காணப்படுகின்றன அவைகள் 'மக்னா' என்று அழைக்கப்படுகின்றன.
ஆப்பிரிக்க யானைகளுக்கு காதுகள் கழுத்தின் உயரத்திற்கு மேலாக நீண்டு இருக்கும். ஆசிய யானைகளுக்கு காதுகள் கழுத்தின் உயரத்திற்கு கீழே இருக்கும். கால்விரல்களை பொறுத்தவரை ஆப்பிரிக்க யானைகளுக்கு முன்னங்காலில் 4 அல்லது 5 விரல்களும், பின்னங்கால்களில் 3 அல்லது 4 விரல்களும் இருக்கும். ஆசிய யானைகள் முன்னங்கால்களில் 5 விரல்களும், பின்னங்கால்களில் 4 விரல்களும் இருக்கும். முதுகு பகுதியானது ஆப்பிரிக்க யானைகளுக்கு குழிவிழுந்து காணப்படும். ஆசிய யானைகளின் முதுகு பகுதி வளைந்து காணப்படும்.
ஆசிய யானைகள் இந்தியா, இலங்கை, பூட்டான், நேபாளம், பங்களாதேஷ், மியான்மர், சீனா, தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, மலேசியா, வியட்நாம், இந்தோனேசியா உள்ளிட்ட 13 நாடுகளில் காணப்படுகின்றன.
ஆண் யானை 14 முதல் 15 வருடத்திலும், பெண் யானை 12 முதல் 13 வருடத்திலும் பருவமடையும். யானையின் கர்ப்பகாலம் 21 முதல் 22 மாதங்கள் ஆகும். யானைகளுக்கு கண்பார்வை மனிதனைவிட சற்று குறைவாக காணப்பட்டாலும் நுகரும் தன்மை அதிகம். யானைகளுக்கு ஞாபக சக்தி மிகவும் அதிகம்.

யானைகள் பல கிலோ மீட்டருக்கு அப்பால் ஏற்படும் நில அதிர்வு மற்றும் சுனாமி போன்றவற்றை எளிதில் கண்டறியும் திறன் கொண்டவையாகும். யானை குட்டி பிறந்து சுமார் 2 மணி நேரத்திலேயே நடக்க ஆரம்பித்து விடும். ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டும் மதம் வெளிப்படும். யானைகள் அதன் வழித்தடங்களை நன்கு அறிந்து வைத்திருக்கும். ஓராண்டில் சுமார் 500 முதல் 750 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் இடப்பெயர்ச்சி செய்யும்.
யானைகளின் சானத்தின் மூலம் 50-க்கும் மேற்பட்ட தாவர விதைகளை காடுகளில் பரப்புகின்றன. சானத்தில் உள்ள பலவகை பூச்சியினங்கள் பறவைகளுக்கு உணவாகின்றன. கரையான்களுக்கு உகந்த உணவாக யானை சானம் உள்ளது. யானைகள் செல்லும் பாதைகளை பயன்படுத்திதான் புலி, சிறுத்தைப்புலி, கரடி, செந்நாய் போன்ற விலங்குகள் இரவு நேரத்தில் ஓர் இடம் விட்டு இடம் நகருகின்றன.
யானைகள் ஒரு நாளைக்கு 16 மணிநேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன. இவற்றின் செரிமானத்திறன் மிகவும் மந்தமானது. எனவே, யானைகள் உண்ணும் உணவில் 40 சதவீதமே செரிமானம் ஆகும். நன்கு வளர்ந்த யானைகள், நாள் ஒன்றுக்கு சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன. நாள் ஒன்றுக்கு 200 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். யானைகளின் சராசரி ஆயுட்காலம் 80 முதல் 90 ஆண்டுகள் என கூறப்படுகிறது. ஆனால் தற்போது அத்தனை ஆண்டுகள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் யானைகள் வாழ்வது மிகக் கடினமாக உள்ளது.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் யானைகள் வாழ்வதற்கு உகந்த இடமாக உள்ளது. எனவே இந்த மலையில் உள்ள முதுமலை, சத்தியமங்கலம், ஆனைமலை, மேகமலை, களக்காடு-முண்டந்துறை பகுதிகளில் யானைகள் அதிகம் வாழ்கின்றன.
எந்த ஒரு வனப்பகுதியில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதோ அந்த வனப்பகுதி வளமான வனப்பகுதியாக இருக்கும் என்று வன ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதன்படி தமிழ்நாட்டில் மிக வளமான வனப்பகுதிகளான முதுமலை, சத்தியமங்கலம், ஆனைமலை ஆகிய இடங்களில் யானைகள் அதிகமாக வசிக்கின்றன.






