என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரும், நடிகருமான கே.எஸ். ரவிக்குமார்,
    • எங்கள் சினிமாவின் நித்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார்,

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரும், நடிகருமான கே.எஸ். ரவிக்குமார்,

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள சிறப்பான தருணத்தை நினைவுகூர்ந்து அவர் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய, முத்து மற்றும் படையப்பா படத்தில் இருந்து சில புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தனது X பக்கத்தில், அவர் "எங்கள் சினிமாவின் நித்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார்,

    திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததற்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். இன்று கூலி திரைப்படம் வெளியாகியுள்ளது, இது வெறும் திரைப்படமல்ல, இது உங்கள் சாம்ராஜ்யத்தின் கொண்டாட்டம்" என்று பதிவிட்டார்.

    அத்துடன், 'படையப்பா' மற்றும் 'முத்து' படங்களில் படப்பிடிப்பு நேரத்தில் எடுக்கப்பட்ட சில அரிய புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

    அவற்றில், ரஜினிகாந்த், கே.எஸ். ரவிக்குமார், மற்றும் புகழ்பெற்ற இயக்குனர் கே. பாலச்சந்தர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

    ரஜினிகாந்த் – கே.எஸ். ரவிக்குமார் கூட்டணி தமிழ் சினிமாவில் அளித்த வெற்றிகள் ரசிகர்களிடையே இன்னமும் மறக்க முடியாதவையாகும்.

    • இன்று உலகம் முழுவதும் கூலி திரைப்படம் இன்று வெளியானது.
    • தமிழகத்தில் கூலி படத்தின் சிறப்பு காட்சி 9 மணிக்கு தொடங்கியது.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் கூலி திரைப்படம் இன்று வெளியானது. கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் காலை 6 மணிக்கு சிறப்பு காட்சிகள் தொடங்கியது. திரையரங்கை ரசிகர்கள் அதிரவிட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    தமிழகத்தில் சிறப்பு காட்சி 9 மணிக்கு தொடங்கியது. இதனையடுத்து பல்வேறு திரை பிரபலங்கள் திரையரங்குகளில் கூலி படத்தை கண்டு வருகின்றனர்.

    அவ்வகையில், சென்னை ரோகிணி திரையரங்கிற்கு வந்த நடிகர் தனுஷ் கூலி படத்தை கண்டு ரசித்து வருகிறார். 

    • கொடுத்த வாக்குறுதியை உங்களால் நிறைவேற்ற முடியாது எனில், ஏன் வாக்குறுதிகளைக் கொடுக்கிறீர்கள்?
    • அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

    தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

    தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த பாசிசத் திமுக அரசுக்குக் கண்டனம்!

    குண்டுக்கட்டாக இழுத்துச் சென்று கைது செய்தபோது பெண் தூய்மைப் பணியாளர்கள் மயக்கம் அடைந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. நள்ளிரவில் நடைபெற்ற இந்தக் கைது நடவடிக்கையைப் பார்க்கும்போது மனசாட்சியுள்ள எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்குப் பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது தெரிகிறது. காயம் அடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவியையும் சிகிச்சையையும் உடனடியாக வழங்கி, அவர்களின் உடல்நலத்தைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

    கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வெவ்வேறு இடங்களில் தங்களின் குடும்பத்தினரோடு கூடத் தொடர்புகொள்ள முடியாத வகையிலும் எவ்வித உதவிகளும் கிடைக்காத வகையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    குடும்பத்தினரோடு கூடத் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு அடைத்து வைக்க, தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா? ஆளும் அரசுக்கு மனசாட்சி சிறிதளவேனும் இருக்கிறதா? இந்தக் கொடூரமான நடவடிக்கையைப் பார்த்தால் தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியல்ல, கொடுங்கோலாட்சிதான் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

    எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்றச் சொல்லித் தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகிறார்கள்.

    அதை ஏன் இன்னும் நீங்கள் நிறைவேற்றவில்லை?

    அப்படிக் கொடுத்த வாக்குறுதியை உங்களால் நிறைவேற்ற முடியாது எனில், ஏன் வாக்குறுதிகளைக் கொடுக்கிறீர்கள்?

    அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்னிறுத்திப் போராடுவதற்கு மாற்று இடம் வழங்கப்பட வேண்டும்.

    இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.

    • அர்ஜுன் டெண்டுல்கருக்கும் மும்பையின் பிரபல தொழிலதிபரின் பேத்தியான சானியா சந்தோக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
    • இருவரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே நிச்சயதார்த்ததில் கலந்துகொண்டனர்.

    மும்பை:

    கிரிக்கெட் உலகின் கடவுள் என்று வர்ணிக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். அவரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு, மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் பேத்தியுடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

    அர்ஜுன் டெண்டுல்கருக்கும் மும்பையின் பிரபல தொழிலதிபரும், ஹாஸ்பிடாலிட்டி துறையில் கொடிகட்டிப் பறப்பவருமான ரவி காய் என்பவரின் பேத்தியான சானியா சந்தோக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

    ரவி காய், புகழ்பெற்ற இன்டர்காண்டினென்டல் ஹோட்டல் மற்றும் புரூக்ளின் கிரீமரி ஐஸ்கிரீம் பிராண்ட் ஆகியவற்றின் உரிமையாளர்.

    சானியா சந்தோக், மும்பையில் செல்லப் பிராணிகளுக்கான 'மிஸ்டர் பாவ்ஸ்' (Mr Paws) என்ற சலூனை நிறுவி நடத்தி வருகிறார்.

    அர்ஜுன் மற்றும் சானியாவின் நிச்சயதார்த்த விழா, இருவரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

    இந்த நிகழ்வு குறித்த புகைப்படங்களோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்போ டெண்டுல்கர் குடும்பத்தின் சார்பில் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • அலாஸ்காவில் டிரம்ப்- புதின் சந்திப்பு நாளை நடைபெறுகிறது.
    • உக்ரைன்- ரஷியா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு.

    உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் இரு நாடுகளுக்கு இடையிலான போர் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறார்.

    இதன்தொடர்ச்சியாக நாளை இருவரும் சந்தித்து பேச இருக்கிறார்கள். அப்போது ரஷியா- உக்ரைன் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    இந்த நிலையில், வெள்ளிக்கிழமை சந்திப்புக்குப்பின் உக்ரைன் போரை புதின் தொடர்ந்து நடத்தினால், அங்கோ (ரஷியாவுக்கு) மிகக் கடுமையான விளைவுகள் இருக்கும் என டெனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    ஐரோப்பிய நாட்டு தலைவர்களுடன் டொனால்டு டிரம்ப் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, அலாஸ்காவில் நடைபெறும் அமெரிக்கா- ரஷியா மாநாட்டின்போது, போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற அமெரிக்க விரும்புகிறது என்பதை தெளிவாக டிரம்ப் கூறியதாக பிரான் அதிபர் மெக்ரான் தெரிவித்துள்ளார்.

    • தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.
    • இண்டியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் பங்கேற்க இருக்கிறார்கள்.

    தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபபட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

    கடந்த திங்கள்கிழமை, பாராளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி நடத்திய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட சுமார் 250 எம்பிக்கள் பாதி வழியில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் 'வாக்கு திருட்டு' தொடர்பாக வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வரும் 17-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு பீகாரில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.

    காங்கிரஸ் மூத்த தலைவரும் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வருமான பூபேஷ் பெகல் இதை உறுதிப்படுத்தி உள்ளார். பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் வரும் செப்டம்பர் 1-ம் தேதி வரை பேரணி நடைபெற உள்ளது. இதில், இண்டியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் பங்கேற்க இருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

    சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் பீகாரின் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டு 65 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் வரைவு பட்டியலில் இருந்து நீக்கியுள்ள நிலையில் இந்த நடைபயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

    • வாழ்க்கையில் பல சுவாரஸ்யமான அனுபவங்கள் இருந்திருக்கின்றன.
    • இந்தத் தனித்துவ அனுபவத்தைத் தந்ததற்கு தேர்தல் ஆணையத்திற்கு நன்றி என்றார்.

    புதுடெல்லி:

    பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அப்போது 65 லட்சம் வாக்காளர்களை அதிரடியாக நீக்கியது. இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரு இடங்களில் பதிவு இருந்ததைக் கண்டறிந்து அவற்றை நீக்கியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்தப் பிரச்சினையை கையில் எடுத்து பரபரப்பு புகார் தெரிவித்தார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகா மாநிலம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்குப்பதிவில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளதாகவும், வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருந்ததாகவும் புகார் கூறியிருந்தார்.

    ஆனால் இந்தப் புகாரை தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது,

    இதற்கிடையே, பீகாரில் ஆர்ஜேடி கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவின் ரகோபூர் தொகுதியைச் சேர்ந்த ரமிக்பால் ரே, ஹரேந்திர ரே, லால்முனி தேவி, வச்சியா தேவி, லால்வதி தேவி, பூனம் குமாரி, முன்னா குமார் ஆகியோர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான ஆவணங்களை பூர்த்தி செய்து அளித்திருந்தும் அவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தகவல் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தேர்தல் ஆணையத்தால் உயிரிழந்தவர்கள் எனக்கூறி பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி சந்தித்துப் பேசி உள்ளார் .

    இதுதொடர்பாக, ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    வாழ்க்கையில் பல சுவாரஸ்யமான அனுபவங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் 'இறந்தவர்களுடன்' தேநீர் அருந்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில்லை. இந்தத் தனித்துவமான அனுபவத்தைத் தந்ததற்கு தேர்தல் ஆணையத்திற்கு நன்றி! என கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

    • மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்துள்ளார்.
    • இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்

    சென்னை:

    மாதம்பட்டி ரங்கராஜ் பிரபல சமையல்துறை நிபுணர் ஆவார். தமிழ் திரையுலகில் நடக்கும் பிரபலங்களின் திருமண நிகழ்ச்சிகளுக்கு கேட்டரிங் சேவையை செய்வது மாதம்பட்டி ரங்கராஜின் நிறுவனம்தான். தமிழ் திரைப்பட உலகில் வளர்ந்து வரும் நடிகராகவும் உள்ளார். அவரது முதல் படம் 'மெஹந்தி சர்க்கஸ்'.

    மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்

    இதற்கிடையே, மாதம்பட்டி ரங்கராஜ் பேஷன் டிசைனரான ஜாய் கிரிஸ்ல்டாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. ஜாய் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் ஆவார். திருமணம் செய்துகொண்ட உடனேயே கிரிஸ்ல்டா 6 மாதம் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியை வெளியிட்டார்.

    ஆனால், கோவையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதியுடன் பங்கேற்றது பேசுபொருளானது.

    இந்நிலையில், ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராமில், குழந்தையின் பெயரை ராஹா ரங்கராஜ் என அறிவித்து பதிவிட்டுள்ளார்.

    கோவையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ், மனைவி ஸ்ருதியுடன் பங்கேற்ற நிலையில் ஜாஸ் கிரிசில்டாவின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பணியில் சேர்ந்த பின்னர் தூய்மை பணியாளர்களின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும்.
    • தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்பதற்கு சென்னை மாநகராட்சி தயாராக உள்ளது.

    பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையொட்டி தூய்மை பணியாளர்கள், போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். இந்த நிலையில் மேயர் பிரியா போராட்டம் குறித்து கூறியதாவது:-

    * சென்னை ரிப்பன் மாளிகை போராட்டம் நடத்தும் இடம் அல்ல. போராடுவதற்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் போராடலாம்.

    * அனுமதிக்கப்பட்ட இடங்களில் போலீசாரிடம் அனுமதி பெற்ற பின்னர், தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தலாம். தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்பதற்கு சென்னை மாநகராட்சி தயாராக உள்ளது.

    * பணியில் சேர்ந்த பின்னர் தூய்மை பணியாளர்களின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும்.

    * கோர்ட் உத்தரவின் அடிப்படையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் போராடுவோரை கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாநகராட்சி ஊழியர்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    * 31ஆம் தேதிக்குள் தூய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்புமாறு வேண்டுகோள்

    • வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பாபர் அசாம் 3 போட்டிகளில் 56 ரன்கள் மட்டுமே அடித்தார்.
    • இதன் காரணமாக 2ஆவது இடத்தில் இருந்து 3ஆவது இடத்திற்கு சரிந்துள்ளார்.

    ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் பேட்டர்களுக்கான தரவரிசையில் ரோகித் சர்மா 3ஆவது இடத்தில் இருந்து 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ்- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரையடுத்து ஐசிசி தரவரிசையை வெளியிட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பாபர் அசாம் 3 போட்டிகளில் 56 ரன்கள் மட்டுமே அடித்தார்.

    இதனால் 751 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திற்கு சரிந்துள்ளார். ரோகித் சர்மா 756 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சுப்மன் கில் 784 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார். விராட் கோலி 4ஆவது இடத்தில் உள்ளார்.

    ஷ்ரேயாஸ் அய்யர் 8ஆவது இடத்தையும், கே.எல். ராகுல் 15ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    • இந்தியா- பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் உறவு மாறாமல் உள்ளது.
    • இந்தியா- பாகிஸ்தான் மோதலை தடுக்க அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டது.

    பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் சமீபத்தில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் சிந்து நதி குறுக்கே இந்தியா அணை கட்டினால் ஏவுகணைகளை வீசி அழிப்போம் என்று மிரட்டல் விடுத்தார்.

    இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூசிடம், பாகிஸ்தான் ராணுவ தளபதியின் அமெரிக்க பயணம் மற்றும் இந்தியாவுக்கு அவர் விடுத்த மிரட்டல் ஆகியவை பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்த டாமி புரூஸ், "இந்தியா- பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் உறவு மாறாமல் உள்ளது. பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுடன் எங்களுக்கு ஒரு அனுபவம் இருந்தது. இரு நாடுகள் இடையேயான மோதல் பயங்கரமாக வளர்ந்திருக்கலாம். இதை தடுக்க அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டது" என்றார்.

    • 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார்.
    • சகோதரர் ரஜினிகாந்துக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    திரையுலகில் தனக்கே உரிய ஸ்டைலாலும் தனித்துவமான நடிப்பாலும், 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார், சகோதரர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், இப்பொன்விழா ஆண்டில் #Superstar நடிப்பில் நாளை வெளியாகவுள்ள #Coolie திரைப்படம் வெற்றியடையவும் என்னுடைய வாழ்த்துகள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×