என் மலர்
இந்தியா

இறந்தவர்களுடன் தேநீர் அருந்தியது தனி அனுபவம்: தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி
- வாழ்க்கையில் பல சுவாரஸ்யமான அனுபவங்கள் இருந்திருக்கின்றன.
- இந்தத் தனித்துவ அனுபவத்தைத் தந்ததற்கு தேர்தல் ஆணையத்திற்கு நன்றி என்றார்.
புதுடெல்லி:
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அப்போது 65 லட்சம் வாக்காளர்களை அதிரடியாக நீக்கியது. இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரு இடங்களில் பதிவு இருந்ததைக் கண்டறிந்து அவற்றை நீக்கியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்தப் பிரச்சினையை கையில் எடுத்து பரபரப்பு புகார் தெரிவித்தார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகா மாநிலம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்குப்பதிவில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளதாகவும், வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருந்ததாகவும் புகார் கூறியிருந்தார்.
ஆனால் இந்தப் புகாரை தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது,
இதற்கிடையே, பீகாரில் ஆர்ஜேடி கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவின் ரகோபூர் தொகுதியைச் சேர்ந்த ரமிக்பால் ரே, ஹரேந்திர ரே, லால்முனி தேவி, வச்சியா தேவி, லால்வதி தேவி, பூனம் குமாரி, முன்னா குமார் ஆகியோர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான ஆவணங்களை பூர்த்தி செய்து அளித்திருந்தும் அவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தால் உயிரிழந்தவர்கள் எனக்கூறி பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி சந்தித்துப் பேசி உள்ளார் .
இதுதொடர்பாக, ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
வாழ்க்கையில் பல சுவாரஸ்யமான அனுபவங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் 'இறந்தவர்களுடன்' தேநீர் அருந்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில்லை. இந்தத் தனித்துவமான அனுபவத்தைத் தந்ததற்கு தேர்தல் ஆணையத்திற்கு நன்றி! என கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.






