என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தாயுமானவர் திட்டம்: வீடு தேடி ரேஷன் பொருட்கள் - வீடியோ வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செயல்படுத்தி கொண்டு இருக்கிறோம்.
- ஒரு திட்டத்தை அறிவிக்கிறதோட கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறது இல்லை.
தமிழ்நாட்டில் அரிசி, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன. இதில், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ரேசன் பொருட்களை நேரில் சென்று வாங்க சிரமப்படுவதால் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்துப் பொருட்களையும் அவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வழங்க 'தாயுமானவர்' திட்டம் அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கு மாதந்தோறும் இரண்டாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களின் வீடுகளுக்கு சென்று ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன.
அதனை தொடர்ந்து, வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் "முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
சென்னை தண்டையார்பேட்டை, கோபால் நகரில் இத்திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின்படி, ஏறக்குறைய 35 ஆயிரம் நியாய விலைக் கடைகள் மூலம் 70 வயதிற்கும் மேற்பட்ட 20 லட்சம் முதியோர், 1 லட்சத்து 27 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் பயனடைவர்.
இந்த நிலையில், 'தாயுமானவர்' திட்டத்தை இன்று தொடங்கி வைப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-
வணக்கம். திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செயல்படுத்தி கொண்டு இருக்கிறோம். அந்த வரிசையில் எனது மனதிற்கு பிடித்த திட்டமாக உருவாகியிருக்கிற திட்டம் தான் 'தாயுமானவர் திட்டம்'. இத்திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்படி அரசின் செயல்களை மக்களுடைய வீடுகளுக்கே சென்று கொடுப்பது இந்தியாவிற்கே முன்மாதிரி முயற்சி. ஒரு திட்டத்தை அறிவிக்கிறதோட கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறது இல்லை. அந்த திட்டத்தின் பயன், பலன் கடைக்கோடி மனிதர்களையும் சென்று சேர்கிறதா என்பதை கண்காணிக்கிறதும் கடமையா நினைக்கிறேன்.
அப்படி உருவாக்குன இத்திட்டத்தை 34,809 நியாய விலைக்கடைகளில் செயல்படுத்த போறோம். 70 வயதிற்கு மேற்பட்ட 20,42,657 மூத்த குடிமக்கள், 1,27,797 மாற்றுத்திறனாளிகள் என 21,70,454 பேர் இந்த திட்டத்தால் பயன் அடையபோகிறார்கள். ஒவ்வொரு மாதம் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ரேசன் பொருட்கள் உங்கள் வீடு தேடி வரும். இதற்காக ரூ.30 கோடியே 16 லட்சம் ஆகிற செலவை கூடுதல் செலவாக கருதாமல் மக்களுக்கு செய்கிற உயிர் காக்கும் கடமையா நாங்கள் நினைக்கிறோம். இது கூட்டுறவுத்துறையின் மிகப்பெரிய சேவை. அந்த துறை அதிகாரிகள், அலுவலர்கள், கடை விற்பனையாளர்கள் செய்யப்போகிற மிகப்பெரிய கடமை. இந்த நேரத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு நான் வைக்கிற வேண்டுகோள் என்பது இந்த திட்டத்தின் நோக்கம் 100 விழுக்காடு நிறைவேறுகிற வகையில் உங்கள் பணி அமையணும். உங்களை எதிர்பார்த்து காத்து இருக்கும் முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளுக்கும் மனம் குளிர்கிற வகையில் நீங்கள் கனிவா நடந்துக்கணும். நீங்கள் வாங்குகிற நல்ல பெயர் தான் ஆட்சிக்கு கிடைக்கிற பாராட்டு என்றார்.






