என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • தாய் திட்டியதால் சிறுமி கோபித்துக் கொண்டு 2 மாதத்திற்கு முன்பு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
    • வாலிபர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் 15 வயது சிறுமி சுற்றித்திரிவதாக திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சென்ற போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து குழந்தைகள் நலக்குழு மூலமாக விசாரித்தனர். விசாரணையில் சிறுமிக்கு உடல் நிலை சரியில்லாமல் இருப்பது தெரியவந்தது. சிறுமியை திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    மேலும் விசாரணையில் சிறுமி பல்லடத்தை சேர்ந்தவர் என்பதும், தாய் திட்டியதால் கோபித்துக் கொண்டு 2 மாதத்திற்கு முன்பு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இந்த நிலையில் திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்த மினி பஸ் டிரைவர் முகமது நசீர்(வயது 22) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    வாலிபர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கொங்கு நகர் அனைத்து மகளிர் போலீசார் முகமது நசீரை போக்சோவில் கைது செய்தனர்.

    • மும்பையில் இருந்து தீப்தி ராஜசேகர் என்ற பெயரில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
    • டெலிகிராம் லிங்க்குக்குள் தொழிலதிபர் சென்று குறிப்பிட்ட வங்கிக்கணக்குக்கு 12 தவணைகளாக ரூ.19 லட்சத்து 53 ஆயிரத்தை பரிமாற்றம் செய்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மங்கலம் ரோடு பகுதியை சேர்ந்த 50 வயது தொழிலதிபரின் சமூக வலைதள பக்கத்தில் விளம்பரம் வந்துள்ளது. அதில் பங்குசந்தையில் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதை நம்பிய அவர் சம்பந்தப்பட்ட எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அதற்கு மும்பையில் இருந்து தீப்தி ராஜசேகர் என்ற பெயரில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

    பின்னர் டெலிகிராம் லிங்க்குக்குள் தொழிலதிபர் சென்று குறிப்பிட்ட வங்கிக்கணக்குக்கு 12 தவணைகளாக ரூ.19 லட்சத்து 53 ஆயிரத்தை பரிமாற்றம் செய்தார். அந்த தொகைக்கு அதிக லாபம் வந்ததாக அவருக்கு காட்டியுள்ளது. ஆனால் பணத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை.

    மேலும் கூடுதல் பணத்தை செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்பிறகே, தொழிலதிபர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தங்க நகை கடன் பெறுவது தொடர்பாக அனைத்து தரப்பு மக்களும் பாதிக்காதவாறு எளிய வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
    • வாரந்தோறும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்பதால் பலரும் கடன் பெறுவது வழக்கம்.

    தங்க நகைக்கடன் வழங்குவதில் புதிய நடைமுறைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ள ரிசர்வ் வங்கி, இதற்காக வங்கிகள் மற்றும் தங்க நகைக் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் என அனைத்திற்கும் ஒரே விதமான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக தஞ்சையை சேர்ந்த விவசாயி முகமது இப்ராஹிம் கூறுகையில்,

    தமிழகத்தில் தங்க நகை கடன் பெறுவோர் அதிகளவில் உள்ளனர். குறிப்பாக விவசாயிகள் விவசாய பணிகள் மேற்கொள்ள தங்கத்தை அடமானமாக வைத்து கடன் பெறுகின்றனர் . தற்போது நகை கடனுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

    குறிப்பாக தங்கத்தின் மதிப்பில் 75 சதவீத பணம் மட்டுமே கடனாக வழங்கப்படும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது . மேலும் அடகு வைக்கும் தங்கத்திற்கு உரிமையாளர் என்பதற்கான ஆதாரம் வழங்க வேண்டும் என்பது விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பிற்கும் சிரமத்தையே கொடுக்கும்.

    முழுத்தொகை மற்றும் அதற்கான வட்டியை முழுமையாக கட்டி நகையை பெற்று அதனை மீண்டும் மறுநாள் அடமானம் வைக்கலாம் என கூறும் புதிய நடைமுறையால் நடுத்தர குடும்பத்தினர் பாதிப்பை சந்திப்பர். இது விவசாய மக்களையும் பெருமளவில் பாதிக்கும்.

    எனவே புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே திரும்ப பெற வேண்டும். தங்க நகை கடன் பெறுவது தொடர்பாக அனைத்து தரப்பு மக்களும் பாதிக்காதவாறு எளிய வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் - விவசாயி முகமது இப்ராஹிம்

     

    திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:-

    திருப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் மூலம் தினமும் கோடிக்கணக்கில் ஆடை உற்பத்தி செய்யப்பட்டு உள்நாடுகள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வர்த்தகம் கோடிக்கணக்கில் நடைபெற்றாலும், தொழில்துறையினர் பலரும் தங்களது நிறுவனத் தேவைக்காக வங்கிகளில் நகைகளை அடகு வைத்து கடன் வாங்கியும் வருகிறார்கள். குறிப்பாக வாரந்தோறும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்பதால் பலரும் கடன் பெறுவது வழக்கம்.

    இதன் பின்னர் ஆடைகளுக்கான பணம் கிடைத்தவுடன் அடகு வைத்த நகைகள் மற்றும் உள்ளிட்ட ஆவணங்களை திரும்ப பெறுவது வழக்கம். ஆனால் தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்த 9 கட்டுப்பாடுகள் எங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அதில் 75 சதவீதம் தான் கடன் தொகை வழங்கப்படும் என்பது உள்பட கட்டுப்பாடுகள் திருப்பூர் தொழில்துறையினருக்கு கடும் சவாலாக உள்ளது.

    சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வங்கியில் அடகு வைத்த நகைகளுக்கு ஆண்டுதோறும் வட்டியை கட்டி அதனை மீண்டும் திருப்பி வைத்து வைப்பது வழக்கம். ஆனால் இந்த புதிய கட்டுப்பாட்டால் பணத்தை முழுமையாக செலுத்தி நகையை திருப்ப வேண்டும் என்பது முடியாத காரியம்.

    எனவே இந்த கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாயக்கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
    • 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, சாயக்கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். தொட்டிக்குள் இறங்கிய 5 பேர் விஷவாயு தாக்கி மயக்கடைந்தனர்.

    5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க சாயா ஆலை நிறுவனம் ஒப்புதல் கொடுத்துள்ளது.

    ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க ஆலை நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.

    • போலீஸ்காரர்கள் சின்னச்சாமி, மந்திரம் ஆகிய 2 பேரையும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்.
    • குற்றவாளி மனைவி ஒருவரிடம் தகாத வார்த்தைகளால் பேசியதாக புகார் எழுந்தது.

    ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக பிரதமர் மோடி, ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து திருப்பூரில் பா.ஜ.க., சார்பில் தேசிய கொடி ஊர்வலம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    இந்தநிலையில் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் போலீஸ்காரர் சின்னச்சாமி, அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் மந்திரம் ஆகியோர், நயினார்நாகேந்திரனை நேரில் சந்தித்து பேசியதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து போலீஸ்காரர்கள் சின்னச்சாமி, மந்திரம் ஆகிய 2 பேரையும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

    இதேப்போல் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் பணியாற்றி வந்த போலீஸ்காரர் நல்லசாமி என்பவர், குற்றவாளி மனைவி ஒருவரிடம் தகாத வார்த்தைகளால் பேசியதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து அவரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கமிஷனர் நடவடிக்கை மேற்கொண்டார். பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்ததாக போலீஸ்காரர்கள் 2பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் விதவிதமான டி-சர்ட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
    • ஆபரேசன் சிந்தூர் டிசைன்கள் அச்சிடப்பட்ட பனியன்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

    திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் விதவிதமான டி-சர்ட்டுகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் விழாக்கள், விளையாட்டுகள், தேர்தல் பிரசாரம் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தேவைப்படும் டி-சர்ட் பனியன்கள் ஆர்டரின் பேரில் லோகா மற்றும் டிசைன்கள் அச்சிட்டு தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது.

    வழக்கமான உள்ளாடைகளை தயாரிக்கும் திருப்பூர் தொழில்துறையினர், புதிய பாணி நவீன ஆடை ரகங்களை நேரத்திற்கு தகுந்தாற்போல் டிசைன் செய்து சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றனர்.

    தற்போது பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலையொட்டி இந்தியா மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ திட்டத்தை மையப்படுத்தி, விதவிதமான டி-சர்ட்டுகளை தயாரித்து சந்தைப்படுத்த தொடங்கியுள்ளனர். தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் இந்த வகை ஆடைகளை வாங்க ஆன்லைன் மற்றும் நேரடி தொடர்பு மூலம் நிறைய ஆர்டர்களை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:- ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தை பாராட்டியும், அதை வரவேற்றும், அதை போற்றியும் புதிய வகை டிசைன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இளைஞர்களிடையே அமோக வரவேற்பால் ஆபரேசன் சிந்தூர் டிசைன்கள் அச்சிடப்பட்ட பனியன்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

    தமிழகத்தை காட்டிலும் வடமாநிலங்கள், வெளிநாடுகளில் இந்த வகை டி-சர்ட்டுகளுக்கு ஏராளமான ஆர்டர்கள் கிடைத்து வருகின்றன. ராணுவத்தை போற்றும் வகையில் பல்வேறு நினைவுகளில் இதுவும் ஒன்றுதான். காலத்திற்கேற்ற வகையில் திருப்பூர் பனியன் தொழில் மாறிக்கொண்டே இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியும் நல்ல முறையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
    • கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கு ஏற்றுமதியாகியுள்ளது.

    திருப்பூர்:

    இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் மாதந்தோறும் கணக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். கடந்த ஏப்ரல் மாதத்துக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது ரூபாய் மதிப்பில் 17.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. அதாவது கடந்த 2024-25-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.9 ஆயிரத்து 995 கோடியே 40 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்துள்ளது. நடப்பு ஆண்டில் ஏப்ரல் மாதம் ரூ.11 ஆயிரத்து 733 கோடியே 40 லட்சத்துக்கு ஆயத்த ஆடை வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

    திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியும் நல்ல முறையில் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கு ஏற்றுமதியாகியுள்ளது. பின்னலாடை வர்த்தகம் அதிகரிக்க தொடங்கியுள்ளது திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

    இது குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.) துணை தலைவர் சக்திவேல் கூறியதாவது:-

    அமெரிக்காவின் வரி உயர்வு கொள்கை மற்றும் வங்கதேச உள்நாட்டு குழப்பங்கள் போன்ற பிரச்சனைகளுக்கு இடையிலும், நமது பின்னலாடை ஏற்றுமதியாளர்களின் சிறந்த செயல்திறனால் பின்னலாடைத்துறை புதிய நிதியாண்டிலும் வலுவான வளர்ச்சிப்பாதையில் தொடர்கிறது. அதாவது கடந்த ஏப்ரல் மாதம் 1.37 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு 1.20 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது 15 சதவீத வளர்ச்சியை காட்டுகிறது. இந்த சீரான, நிலையான மாதாமாத வளர்ச்சி தொடரும்போது, திருப்பூர் பின்னலாடை வர்த்தக இலக்கான ரூ.50 ஆயிரம் கோடியை இந்த நிதியாண்டில் எட்டுவதில் எந்தவித தடையும் இருக்காது. நடப்பு ஆண்டின் தொடக்க மாதமே வளர்ச்சியோடு தொடங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • பாகிஸ்தானுக்கான தண்ணீரை நிறுத்திவிட்டோம்.
    • எங்கு ரத்தம் ஓடுகிறதோ அங்கு தண்ணீர் ஓடாது.

    திருப்பூரில் பா.ஜ.க. சார்பில் ஆபரேசன் சிந்தூர் வெற்றிப் பேரணி நடைபெற்றது. பேரணியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    இந்நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, " பாகிஸ்தானுக்கான தண்ணீரை நிறுத்திவிட்டோம். எங்கு ரத்தம் ஓடுகிறதோ அங்கு தண்ணீர் ஓடாது.

    நாம் போரை விரும்பவில்லை என்றாலும் போருக்கு தயாராக இருக்கிறோம். பாகிஸ்தானை அந்த நாட்டு மக்களுக்காக பிரதமர் இந்த முறை மன்னித்திருக்கிறார். அமைதியா? போரா? எதை விரும்புகிறது என்பது பாகிஸ்தான் கையில்தான் உள்ளது."

    இவ்வாறு அவர் பேசினார்.

    மேலும், பேரணி குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    இன்றைய மாலை திருப்பூரில், பெகல்காம் தாக்குதலுக்கு எதிரொலியாக, நமது ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் பெருவெற்றி பெற்றதைப் பாராட்டும் விதமாகவும், நாட்டைக் காக்கும் பணியில், தங்கள் உயிரைத் தியாகம் செய்த நமது ஐந்து ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும்,

    தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தலைமையில், திருப்பூர் குமரன் சிலை முதல் மகாத்மா காந்தி சிலை வரை, தேசியக் கொடி ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது.

    நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், நமது மக்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் எங்கிருந்தாலும், அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளித்திருந்தார்.

    அதன்படியே, நமது வீரம் மிகுந்த ராணுவம், விமானப்படை மூலம், பாகிஸ்தான் நாட்டிற்குள்ளே இருந்த தீவிரவாதிகளின் பதுங்குமிடங்களை எல்லாம் தாக்கி அழித்திருக்கிறது.

    இந்த ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாட, கட்சி வேறுபாடின்றி, பெருமளவில் பொதுமக்கள் கூடி, நமது ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சம்பவத்தன்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேல் இருந்து 4 பேர் கீழே இறங்கி வந்தனர்.
    • தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி 6-வது வார்டு கவுண்ட நாயக்கன்பாளையம் பகுதியில் 17.50 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதன் மூலம் அந்த பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    சம்பவத்தன்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேல் இருந்து 4 பேர் கீழே இறங்கி வந்தனர். மதுபோதையில் இருந்த அவர்கள் பொதுமக்களை பார்த்ததும் தப்பியோட முயன்றனர். இதையடுத்து பொதுமக்கள் 4 பேரையும் மடக்கி பிடிக்க முயன்றனர். இதில் 2 பேர் சிக்கினர்.

    அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அந்த பகுதியை சேர்ந்த நிஷாந்த் (வயது 19), சஞ்சய் (22) என்பது தெரியவந்தது. அவர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி மது அருந்தியதுடன், தண்ணீர் தொட்டியில் இறங்கி குளித்ததாகவும், மலம் கழித்துள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து 2 பேரையும் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், மேல்நிலை நீர்தேக்க தொட்டி மீது சமூக விரோதிகள் சிலர் ஏறி மது அருந்தி தண்ணீரில் குளித்து அசுத்தப்படுத்தி வருகின்றனர். எனவே அங்கு யாரும் செல்லாமல் இருக்க காவலாளி நியமிக்க வேண்டும் என்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கவுண்ட நாயக்கன்பாளையம் பகுதியில் இன்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார்-மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வேங்கைவயல் சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருப்பூரில் நடந்துள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கிருஷ்ணமூர்த்தி என்பவர் வீடு கட்டுவதற்கு அனுமதி வாங்குவதற்காக திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
    • அனுமதி வழங்க மாநகராட்சி உதவியாளர் ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் சித்தம்பலம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு சொந்தமாக திருப்பூர் மங்கலம் ரோடு ஜான்ஜோதி கார்டன் பகுதியில் 5½ சென்ட் நிலம் உள்ளது.

    அதில் வீடு கட்டுவதற்கு அனுமதி வாங்குவதற்காக திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார். விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட மாநகராட்சி தொழில்நுட்ப உதவியாளர் நாகலிங்கம் (வயது 35) அனுமதி வழங்க ரூ.6ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

    லஞ்சம் கொடுக்க மறுத்த கிருஷ்ணமூர்த்தி இது குறித்து திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலைய த்தில் புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை கிருஷ்ண மூர்த்தியிடம் கொடுத்து அனுப்பினர்.

    அவர் திருப்பூர் ராயர்புரம் வாட்டர்டேங்க் கீழ் பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த நாகலிங்கத்திடம் பணத்தை கொடுத்தார்.

    அதனை வாங்கிய போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நாகலிங்கத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். கைதான அவர் மாநகராட்சியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருவது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • நேற்று முன்தினம் அருவியின் நீர்பிடிப்பு பகுதியில் திடீரென மழை பெய்தது.
    • பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் குழந்தைகளுடன் பெற்றோர்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கிருந்து சுமார் 750 மீட்டர் உயரத்தில் உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது.

    அருவிக்கு வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சிற்றோடைகள் நீர்வரத்தை அளித்து வருகிறது. இதில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் அருவியின் நீர்பிடிப்பு பகுதியில் திடீரென மழை பெய்தது. இதன் காரணமாக அருவியில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டது. நேற்று காலை அருவி இயல்பு நிலைக்கு திரும்பியது.

    அதைத்தொடர்ந்து சுற்றுலாப்பயணிகள் அதில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். தற்போது அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்து வருகின்றனர். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் குழந்தைகளுடன் பெற்றோர்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

    • வடமாநிலங்களில் உள்ள வர்த்தகர்கள் ஒரு சில தினங்களுக்கு சரக்குகளை அனுப்பி வைக்க வேண்டாம் என்று கூறிவிட்டனர்.
    • சகஜநிலை திரும்பியவுடன் வழக்கமான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    நல்லூர்:

    திருப்பூரில் இருந்து லாரி, ரெயில் மூலம் பனியன் சரக்குகள் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. ஆண்டுக்கு சுமார் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்புள்ள சரக்குகள் வர்த்தகத்திற்காக வெளியிடங்களுக்கு செல்கின்றன. பெரிய விற்பனை கடைகள், மையங்கள், ஏஜெண்டுகள், சந்தைகள், சிறு, குறு, நடுத்தர வியாபாரிகள் என பல்வேறு தரப்பிலும் சரக்குகள் மொத்த, சில்லறை விற்பனைக்காக விநியோகம் செய்யப்படுகின்றன.

    கடந்த 7-ந்தேதி முதல் இந்தியா-பாகிஸ்தான் போர்ச்சூழல் நடவடிக்கை காரணமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் உள்நாட்டு பனியன் சரக்குகள் 40சதவீதம் நிறுத்தி வைக்கப்பட்டதாக பனியன் வர்த்தக ஏஜெண்டுகள் தெரிவித்தனர்.

    பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாலும், சோதனை நடவடிக்கைகள் காரணமாக வாகனங்கள் செல்வதில் காலதாமதம் ஏற்படும் என்பதாலும் பனியன் சரக்குகளை வடமாநிலங்களுக்கு கொண்டு செல்வதில் நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூரில் இருந்து வெளி மாநிலங்களுக்கு பனியன் சரக்குகளை அனுப்பி வைக்கும் ஏஜெண்டுகள் கூறியதாவது:-

    'இந்தியா-பாகிஸ்தான் போர் அறிவிப்பு குறித்த தகவல் வெளியானபோதே வடமாநிலங்களில் உள்ள வர்த்தகர்கள் ஒரு சில தினங்களுக்கு சரக்குகளை அனுப்பி வைக்க வேண்டாம் என்று கூறிவிட்டனர். இதனால் பல மாநிலங்களுக்கு சரக்குகளை அனுப்ப முடியவில்லை. தற்போது போர் நிறுத்தம் என்ற அறிவிப்பு வந்துள்ளது. இருந்தாலும் ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, ஐதராபாத், உத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீர் பகுதிகளுக்கு செல்லும் பனியன் சரக்குகள் திருப்பூரில் முடங்கியுள்ளன. இந்த இக்கட்டான சூழ்நிலையால் சுமார் 30முதல் 40சதவீத பனியன் சரக்குகளை வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க முடியவில்லை. சகஜநிலை திரும்பியவுடன் வழக்கமான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×